பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.
அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.
பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை உள்ளில் ஒடுங்கே.
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும் பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.
எண் பெருக்கு அந் நலத்து* ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்* திண் கழல் சேரே.
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
எளிவரும் இயல்வினன்* நிலை வரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரும் முழு நலம்* முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.
அமைவு உடை அறநெறி* முழுவதும் உயர்வு அற உயர்ந்து*
அமைவு உடை முதல் கெடல்* ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
அமைவு உடை அமரரும்* யாவையும் யாவரும் தான் ஆம்*
அமைவு உடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு அரிய எம் பெருமான்*
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு எளிய எம் பெருமான்*
பேரும் ஓர் ஆயிரம்* பிறபல உடைய எம் பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளது இல்லை இலது இல்லை பிணக்கே.
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர் சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்துஆய் முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன் பெருமை* மாசூணாதோ? மாயோனே!
மா யோனிகளாய் நடை கற்ற* வானோர் பலரும் முனிவரும்*
நீ யோனிகளைப் படை என்று* நிறை நான்முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்* தான் ஓர் உருவனே.
தான் ஓர் உருவே தனிவித்தாய்* தன்னின் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மா மாயன்* வைகுந்தன் எம் பெருமானே.
மானேய் நோக்கி மடவாளை* மார்பில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டை வில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வான் ஆர் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே.
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனை சேர் ஆயர் குல முதலே!* மா மாயனே! மாதவா!*
சினை ஏய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய் இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே.
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடி சேர் தண் அம் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
செடி ஆர் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
உண்டாய் உலகு ஏழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்* உவலை ஆக்கை நிலை எய்தி*
மண் தான் சோர்ந்தது உண்டேலும்* மனிசர்க்கு ஆகும் பீர்* சிறிதும்-
அண்டாவண்ணம் மண் கரைய* நெய் ஊண் மருந்தோ? மாயோனே!
மாயோம் தீய அலவலைப்* பெரு மா வஞ்சப் பேய் வீயத்*
தூய குழவியாய் விடப் பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன் வானோர் தனித் தலைவன்* மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்-
தாயோன் தம்மான் என் அம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து* மாயப் பற்று அறுத்து*
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்* திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி* அகலம் கீழ் மேல் அளவு இறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே!
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மதுவார் தண் அம் துழாயான்* முது வேத முதலவனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆள் செய்யும் ஈடே
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.
அணங்கு என ஆடும் என் அங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே*
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.
அமுதம் அமரர்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர் திரை நீள் கடலானே.
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்* தோள்கள் தலை துணிசெய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள்கள் தலைக்கழிமின்னே.
கழிமின் தொண்டீர்கள் கழித்துத்* தொழுமின் அவனை தொழுதால்*
வழி நின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.
தரும அரும் பயன் ஆய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினை கடிவாரே.
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடு புள் உயர்த்த* வடிவு ஆர் மாதவனாரே.
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
வைப்பாம் மருந்து ஆம்* அடியரை வல்வினைத்*
துப்பாம் புலன் ஐந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்* நலத்தால் உயர்ந்து உயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர் கொழுந்தே.
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப் பிரானை* என் மாணிக்கச் சோதியை,*
தூய அமுதைப்* பருகிப் பருகி,* என்-
மாயப் பிறவி* மயர்வு அறுத்தேனே.
மயர்வு அற என் மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையே தரும்* ஒண் சுடர்க் கற்றையை,*
அயர்வு இல் அமரர்கள்,* ஆதிக் கொழுந்தை,* என்
இசைவினை* என் சொல்லி யான் விடுவேனோ?
விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,*
நடுவே வந்து* உய்யக் கொள்கின்ற நாதனை,*
தொடுவே செய்து* இள ஆய்ச்சியர் கண்ணினுள்,*
விடவே செய்து* விழிக்கும் பிரானையே.
பிரான்* பெரு நிலம் கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரான் எனில்* பின்னை யான் ஒட்டுவேனோ?
யான் ஒட்டி என்னுள்* இருத்துவன் என்றிலன்,*
தான் ஒட்டி வந்து* என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊன் ஒட்டி நின்று* என் உயிரில் கலந்து,* இயல்
வான் ஒட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.
என்னை நெகிழ்க்கிலும்* என்னுடை நன் நெஞ்சம்-
தன்னை,* அகல்விக்கத் தானும்* கில்லான் இனி,*
பின்னை நெடும் பணைத் தோள்* மகிழ் பீடு உடை,*
முன்னை அமரர்* முழுமுதல் தானே.
அமரர் முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுது ஈந்த* ஆயர் கொழுந்தை,*
அமர அழும்பத்* துழாவி என் ஆவி,*
அமரத் தழுவிற்று* இனி அகலும்மோ.
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொரு அல்லன் எம்மான்,*
நிகர் இல் அவன் புகழ்* பாடி இளைப்பு இலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
அம்மானாய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம் மா வாய் கீண்ட,* செம்மா கண்ணனே.
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
கலந்து என் ஆவி,* நலம்கொள்நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம்கொண்டானே.
கொண்டான் ஏழ் விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண் தாமம் செய்து,* என் எண்தானானானே.
ஆனான் ஆன் ஆயன்,* மீனோடேனமும்;*
தான் ஆனான் என்னில்,* தானாயசங்கே.
சங்கு சக்கரம்,* அங்கையில் கொண்டான்,*
எங்கும் தானாய,* நங்கள் நாதனே.
நாதன்ஞாலம்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.
உடன் அமர் காதல் மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மட மகள் என்று இவர் மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடன் அவை ஒக்க விழுங்கி* ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல் மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலையானே.
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச்,
செக்கம் செக அன்று அவள்பால்* உயிர் செக உண்ட பெருமான்,*
நக்க பிரானோடு அயனும்* இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என் நெஞ்சின் உளானே.
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்* சுடர் முடி மேலும்,*
தாள் இணை மேலும் புனைந்த* தண் அம் துழாய் உடை அம்மான்*
கேள் இணை ஒன்றும் இலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாள் அணைந்து ஒன்றும் அகலான்* என்னுடை நாவின் உளானே.
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால் தொழில்,*
எண்ணிலும் வரும்* என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும் நல் வாயுவும்*
விண்ணும் ஆய் விரியும்* எம் பிரானையே.
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே.
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர்கண்டாய்.
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,* ஓர்
எண் தானும் இன்றியே* வந்து இயலுமாறு,*
உண்டானை* உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக்,* கண்டுகொண்டனை நீயுமே.
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்.
நோயும் சார்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும் தந்தையும் ஆய்* இவ் உலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.
எந்தையே என்றும்* எம் பெருமான் என்றும்,*
சிந்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.
செல்வ நாரணன் என்ற* சொல் கேட்டலும்,*
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடு இன்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேண் பட்டயாமங்கள்* சேராது இரங்குதியால்,*
ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,*
தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீ முற்றக் கண்துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே
கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,*
அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,*
உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே.
ஊழிதோறு ஊழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும் போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையில் பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.
நைவாய எம்மேபோல்* நாள் மதியே நீ இந் நாள்,*
மை வான் இருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐ வாய் அரவு அணைமேல்* ஆழிப் பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
தோற்றோம் மட நெஞ்சம்* எம் பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனை ஊழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்து நொந்தாயே.
நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,*
அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே.
வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மா வாய் பிளந்து* மருதிடை போய் மண் அளந்த,*
மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏ பாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈ பாவம் செய்து* அருளால் அளிப்பார் ஆர்,*
மா பாவம் விட* அரற்குப் பிச்சை பெய்,*
கோபால கோளரி* ஏறு அன்றியே.
ஏறனை பூவனை* பூமகள் தன்னை,*
வேறுஇன்றி விண் தொழத்* தன்னுள் வைத்து,*
மேல் தன்னை மீதிட* நிமிர்ந்து மண் கொண்ட.*
மால் தனின் மிக்கும் ஓர்* தேவும் உளதே.
தேவும் எப் பொருளும் படைக்கப்,*
பூவில் நான்முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே.
தகும் சீர்த்* தன் தனி முதலினுள்ளே,*
மிகும் தேவும்* எப் பொருளும் படைக்கத்,*
தகும் கோலத்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
மிகும் சோதி* மேல் அறிவார் எவரே.
எவரும் யாவையும்* எல்லாப் பொருளும்,*
கவர்வு இன்றித்* தன்னுள் ஒடுங்க நின்ற,*
பவர் கொள் ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம் ஆழி* அம் பள்ளியாரே,
பள்ளி ஆல் இலை* ஏழ் உலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள் உள் ஆர் அறிவார்* அவன் தன்,*
கள்ள மாய* மனக்கருத்தே.
கருத்தில் தேவும்* எல்லாப் பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரான் அன்றி,* யாரே
திருத்தித்* திண் நிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக்* காக்கும் இயல்வினரே.
காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,*
சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே.
கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின்
உள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.
ஊனில் வாழ் உயிரே* நல்லை போ உன்னைப் பெற்று,*
வான் உளார் பெருமான்* மதுசூதன் என் அம்மான்,*
தானும் யானும் எல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதும் ஒத்தே.
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,* என்னைப் பெற்ற-
அத் தாய் ஆய் தந்தை ஆய்* அறியாதன அறிவித்து,*
அத்தா, நீ செய்தன* அடியேன் அறியேனே.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மா மாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்* நிலம் மாவலி மூவடி என்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனது ஆவியுள் கலந்தே.
எனது ஆவியுள் கலந்த* பெரு நல் உதவிக் கைம்மாறு,*
எனது ஆவி தந்தொழிந்தேன்,* இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ* பொழில் ஏழும் உண்ட எந்தாய்,*
எனது ஆவி யார்? யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.
இனி யார் ஞானங்களால்* எடுக்கல் எழாத எந்தாய்,*
கனிவார் வீட்டு இன்பமே* என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே* பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,*
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்* நுன பாதம் சேர்ந்தேனே.
சேர்ந்தார் தீவினைகட்கு* அரு நஞ்சை திண் மதியை,*
தீர்ந்தார் தம் மனத்துப்* பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை* அரக்கியை மூக்கு-
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல் முன்னமே.
முன் நல் யாழ் பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பல் நலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார் முகிலே என் கண்ணா,*
நின் அலால் இலேன்காண்* என்னை நீ குறிக்கொள்ளே.
குறிக்கொள் ஞானங்களால்* எனை ஊழி செய் தவமும்,*
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்* ஒளித்து உண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்* பிறவித் துயர் கடிந்தே.
கடி வார் தண் அம் துழாய்க்* கண்ணன் விண்ணவர் பெருமான்,*
படி வானம் இறந்த* பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட* படிந்து குடைந்து ஆடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.
களிப்பும் கவர்வும் அற்று* பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடர் ஆழி சங்கு ஏந்தி,*
அளிக்கின்ற மாயப் பிரான்* அடியார்கள் குழாங்களையே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கம் இலீரே.
இரக்க மனத்தோடு* எரி அணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்கும் இவள்,*
இரக்கம் எழீர்* இதற்கு என் செய்கேன்,*
அரக்கன் இலங்கை* செற்றீருக்கே.
இலங்கை செற்றவனே என்னும்,* பின்னும்
வலம் கொள்* புள் உயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ் உயிர்க்கும்,* கண்ணீர் மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல்* வாய்வெரீ இத்,* தன
குவளை ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண் அம் துழாய் கொடீர்,* என
தவள வண்ணர்* தகவுகளே.
தகவு உடையவனே என்னும்,* பின்னும்
மிக விரும்பும்* பிரான் என்னும்,* எனது
அக உயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உக உருகி* நின்று உள் உளே.
உள் உள் ஆவி* உலர்ந்து உலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ள நீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே.
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிது உயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சம் என்று* இவள் பட்டனவே.
பட்ட போது* எழு போது அறியாள்,* விரை
மட்டு அலர்* தண் துழாய் என்னும்,* சுடர்
வட்ட வாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்ஏழைக்கே.
ஏழை பேதை* இராப்பகல்,* தன
கேழ் இல் ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வை வேவ* இலங்கை செற்றீர்.* இவள்
மாழை நோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
திரு உடம்பு வான் சுடர்* செந்தாமரை கண் கை கமலம்,*
திரு இடமே மார்வம்* அயன் இடமே கொப்பூழ்,*
ஒருவு இடமும்* எந்தை பெருமாற்கு அரனே ஓ,*
ஒருவு இடம் ஒன்று இன்றி* என்னுள் கலந்தானுக்கே.
என்னுள் கலந்தவன்* செங்கனி வாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்குக்* கண் பாதம் கை கமலம்,*
மன்னும் முழு ஏழ் உலகும்* வயிற்றின் உள,*
தன்னுள் கலவாதது* எப் பொருளும் தான் இலையே.
எப் பொருளும் தான் ஆய்* மரகதக் குன்றம் ஒக்கும்.*
அப்பொழுதைத் தாமரைப்பூக்* கண் பாதம் கை கமலம்,*
எப்பொழுதும் நாள் திங்கள்* ஆண்டு ஊழி ஊழிதொறும்,*
அப்பொழுதைக்கு அப்பொழுது* என் ஆரா அமுதமே.
ஆரா அமுதமாய்* அல் ஆவியுள் கலந்த,*
கார் ஆர் கருமுகில் போல்* என் அம்மான் கண்ணனுக்கு,*
நேரா வாய் செம்பவளம்* கண் பாதம் கை கமலம்,*
பேர் ஆரம் நீள் முடி நாண்,* பின்னும் இழை பலவே.
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டு உண்டு* கேட்டு உற்று மோந்து இன்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பு அணை மேலாற்கேயோ.
பாம்பு அணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்* ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
தேம் பணைய சோலை* மராமரம் ஏழ் எய்ததுவும்,*
பூம் பிணைய தண் துழாய்ப்* பொன் முடி அம் போர் ஏறே.
பொன் முடி அம் போர் ஏற்றை* எம்மானை நால் தடம் தோள்,*
தன் முடிவு ஒன்று இல்லாத* தண் துழாய் மாலையனை,*
என் முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல்முடிவு காணேன் நான்* சொல்லுவது என் சொல்லீரே.
சொல்லீர் என் அம்மானை* என் ஆவி ஆவிதனை,*
எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
நல்ல அமுதம்* பெறற்கு அரிய வீடும் ஆய்,*
அல்லி மலர் விரை ஒத்து* ஆண் அல்லன் பெண் அலனே.
ஆண் அல்லன் பெண் அல்லன்* அல்லா அலியும் அல்லன்,*
காணலும் ஆகான்* உளன் அல்லன் இல்லை அல்லன்,*
பேணுங்கால் பேணும்* உரு ஆகும் அல்லனும் ஆம்,*
கோணை பெரிது உடைத்து* எம் பெம்மானைக் கூறுதலே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
சிக்கெனச் சிறிது ஓர் இடமும்* புறப்படாத் தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்* துளக்கு அற்று அமுதம் ஆய்,* எங்கும்
பக்கம் நோக்கு அறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.
தாமரைக் கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய் விரைப்
பூ மருவு கண்ணி* எம் பிரானை பொன்மலையை,*
நாம் மருவி நன்கு ஏத்தி* உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,* நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த* பான்மையே வள்ளலே.
வள்ளலே மதுசூதனா* என் மரகத மலையே,* உனை நினைந்து,
எள்கல் தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி* களித்து உகந்து உகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத* வெம் தீவினைகளை நாசம் செய்து* உனது
அந்தம் இல் அடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்* பாற்கடல் யோக நித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்து செய்தே.
உன்னைச் சிந்தை செய்து செய்து,* உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி* என்
முன்னைத் தீவினைகள்* முழு வேர் அரிந்தனன் யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன் அகல் மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாதது என் எனக்கே.
முடியாதது என் எனக்கேல் இனி?* முழு ஏழ் உலகும் உண்டான்* உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான்* அகல்வானும் அல்லன் இனி,*
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து* எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,*
விடியா வெம் நரகத்து என்றும்* சேர்தல் மாறினரே.
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப் பாறி அசுரர் தம்* பல் குழாங்கள் நீறு எழ,* பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய்* உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ* ஒரு வாளி கோத்த வில்லா,*
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வான் ஏறே* இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்* தாய் தந்தை உயிர்-
ஆகின்றாய்* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண் வேங்கடம்
மேகின்றாய்* தண் துழாய் விரை நாறு கண்ணியனே.
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
நாரணன் முழு ஏழ் உலகுக்கும்* நாதன் வேத மயன்,*
காரணம் கிரிசை கருமம் இவை* முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்* தொழுது ஏத்த நின்று,*
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்* என் மாதவனே.
மாதவன் என்றதே கொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாது அவங்களும் சேர்கொடேன் என்று* என்னுள் புகுந்து இருந்து,*
தீது அவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக் கண் குன்றம்,*
கோது அவம் இல் என் கன்னல் கட்டி* எம்மான் என் கோவிந்தனே.
கோவிந்தன் குடக் கூத்தன்* கோவலன் என்று என்றே குனித்துத்*
தேவும் தன்னையும்* பாடி ஆடத் திருத்தி* என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்* பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மேவும் தன்மையம் ஆக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.
விட்டு இலங்கு செஞ்சோதித்* தாமரை பாதம் கைகள் கண்கள,*
விட்டு இலங்கு கருஞ்சுடர்* மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்* சங்கு சக்கரம் பரிதி,*
விட்டு இலங்கு முடி அம்மான்* மதுசூதனன் தனக்கே.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று* எத்தாலும் கருமம் இன்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட* நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்* எம்மான் என் செங்கனி வாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனன் என்று என்று,* உள்ளி
பரவிப் பணிந்து* பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே
வாமனன் என் மரகத வண்ணன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப் பயந்தாய்,* என்று என்று உன் கழல்* பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்* பிறவித் துழதி நீங்க,* என்னைத்
தீ மனம் கெடுத்தாய்* உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்* என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர் மல்கி* வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீஇய தீவினை மாள இன்பம் வளர* வைகல் வைகல்
இரீஇ* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.
இருடீகேசன் எம் பிரான்* இலங்கை அரக்கர் குலம்,*
முருடு தீர்த்த பிரான் எம்மான்* அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல் கண்டாய்* நம்பி பற்பநாபனையே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
தாமோதரனை தனி முதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோ தரம் அறிய* ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோ தரம் அறிய* எம்மானை என் ஆழி வண்ணனையே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
நீந்தும் துயர் இல்லா* வீடு முதல் ஆம்,*
பூந் தண் புனல் பொய்கை* யானை இடர் கடிந்த,*
பூந் தண் துழாய்* என் தனி நாயகன் புணர்ப்பே.
புணர்க்கும் அயன் ஆம்* அழிக்கும் அரன் ஆம்,*
புணர்த்த தன் உந்தியொடு* ஆகத்து மன்னி,*
புணர்த்த திருஆகித்* தன் மார்வில் தான்சேர்,*
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு* எங்கும் புலனே.
புலன் ஐந்து மேயும்* பொறி ஐந்தும் நீங்கி,*
நலம் அந்தம் இல்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலம் முந்து சீரில்* படிமின் ஒவாதே.
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
மூவாத் தனி முதலாய்* மூவுலகும் காவலோன்,*
மா ஆகி ஆமை ஆய்* மீன் ஆகி மானிடம் ஆம்,*
தேவாதி தேவ பெருமான்* என் தீர்த்தனே.
தீர்த்தன் உலகு அளந்த* சேவடிமேல் பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன் முடிமேல் தான் கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக் கிடந்ததே?
கிடந்து இருந்து நின்று அளந்து* கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்* பார் என்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற,* மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண் பேசில் எல்லா* உலகும் ஓர் துற்று ஆற்றா,*
சேணபாலவீடோ* உயிரோ மற்று எப் பொருட்கும்,*
ஏண் பாலும் சோரான்* பரந்து உளன் ஆம் எங்குமே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
சீர்மை கொள் வீடு* சுவர்க்கம் நரகு ஈறா,*
ஈர்மை கொள் தேவர்* நடுவா மற்று எப் பொருட்கும்,*
வேர் முதல் ஆய் வித்து ஆய்* பரந்து தனி நின்ற,*
கார் முகில் போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
ஈதே யான் உன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மை தோய் சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின் கழல்* யான் எய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே.
செய்யேல் தீவினை என்று* அருள் செய்யும்,* என்
கை ஆர் சக்கரக்* கண்ண பிரானே,*
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்* நின் கழல்
எய்யாது ஏத்த,* அருள்செய் எனக்கே.
எனக்கே ஆட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடு இன்றி மன்னி,*
தனக்கே ஆக* எனைக் கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான் கொள் சிறப்பே.
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பு இல்* பல் பிறவிப் பெருமானை,*
மறப்பு ஒன்று இன்றி* என்றும் மகிழ்வனே.
மகிழ் கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ் கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ் கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்க வாராயே.
வாராய்* உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.
எக்காலத்து எந்தையாய்* என்னுள் மன்னில்,* மற்று
எக் காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர் விழுங்கும்,* என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என் தனதே* என்று இருந்தேன்,*
யானே நீ* என் உடைமையும் நீயே,*
வானே ஏத்தும்* எம் வானவர் ஏறே
ஏறேல் ஏழும்* வென்று ஏர் கொள் இலங்கையை,*
நீறே செய்த* நெடுஞ் சுடர்ச் சோதி,*
தேறேல் என்னை* உன் பொன் அடி சேர்த்து* ஒல்லை-
வேறே போக* எஞ்ஞான்றும் விடலே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.
கிளர் ஒளி இளமை* கெடுவதன் முன்னம்,*
வளர் ஒளி மாயோன்* மருவிய கோயில்,*
வளர் இளம் பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர்வு இலர் ஆகிச்* சார்வது சதிரே.
சதிர் இள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர் தம் கோயில்,*
மதி தவழ் குடுமி* மாலிருஞ்சோலைப்,*
பதியது ஏத்தி* எழுவது பயனே.
பயன் அல்ல செய்து* பயன் இல்லை நெஞ்சே,*
புயல் மழை வண்ணர்* புரிந்து உறை கோயில்,*
மயல் மிகு பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
அயல்மலை அடைவது* அது கருமமே.
கரும வன் பாசம்* கழித்து உழன்று உய்யவே,*
பெருமலை எடுத்தான்* பீடு உறை கோயில்,*
வரு மழை தவழும்* மாலிருஞ்சோலைத்,*
திருமலை அதுவே* அடைவது திறமே.
திறம் உடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறம் முயல் ஆழிப்* படையவன் கோயில்,*
மறு இல் வண் சுனை சூழ்* மாலிருஞ்சோலைப்,*
புறமலை சாரப்* போவது கிறியே.
கிறி என நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறி அமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணை சேர்* மாலிருஞ்சோலை,*
நெறி பட அதுவே* நினைவது நலமே.
நலம் என நினைமின்* நரகு அழுந்தாதே,*
நிலம் முனம் இடந்தான்* நீடு உறை கோயில்,*
மலம் அறு மதி சேர்* மாலிருஞ்சோலை,*
வலம் முறை எய்தி,* மருவுதல் வலமே.
வலஞ்செய்து வைகல்* வலம் கழியாதே,*
வலஞ்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலஞ்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்து நாளும்* மருவுதல் வழக்கே.
வழக்கு என நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடி அட்டான்* அமர் பெருங்கோயில்,*
மழக் களிற்று இனம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழக் கருதுவதே* துணிவது சூதே.
சூது என்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதம் முன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாது உறு மயில் சேர்* மாலிருஞ்சோலைப்,*
போது அவிழ் மலையே* புகுவது பொருளே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
கட்டுரைக்கில் தாமரை* நின் கண் பாதம் கை ஒவ்வா,*
சுட்டு உரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்* புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய் புற்கு என்றே* காட்டுமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய்* நின் இகழ்ந்து பின்,* மற்று ஓர்
பரம் சோதி இன்மையின்* படி ஓவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படர் உலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்பு உரைக்கமாட்டேனே.
மாட்டாதே ஆகிலும்* இம் மலர் தலை மாஞாலம்,* நின்
மாட்டு ஆய மலர்புரையும்* திருவுருவம் மனம் வைக்க*
மாட்டாத பலசமய* மதி கொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம் வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அரும்தவத்த* மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,*
வருந்தாத ஞானம் ஆய்* வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
வரும் காலம் நிகழ் காலம்* கழி காலம் ஆய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலர் ஆக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகு எல்லாம்* படை என்று முதல் படைத்தாய்*
கேழ்த்த சீர் அரன் முதலாக்* கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்து அமரர் துதித்தால்* உன் தொல் புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடர் உடம்புஆய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானம் ஆய்* முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
மாசூணா வான் கோலத்து* அமரர் கோன் வழிப்பட்டால்,*
மாசூணா உனபாத* மலர்ச் சோதி மழுங்காதே?
மழுங்காத வைந் நுதிய* சக்கர நல் வலத்தையாய்,*
தொழும் காதல் களிறு அளிப்பான்* புள் ஊர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படை ஆக மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச் சோதி மறையாதே?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
வன் மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பல்மா மாயப்* பல் பிறவியில் படிகின்ற யான்,*
தொல் மா வல்வினைத்* தொடர்களை முதல் அரிந்து,*
நின் மா தாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.
சூழ்ச்சி ஞானச்* சுடர் ஒளி ஆகி,* என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து* நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகை அருளாய் வந்தே.
வந்தாய் போலே* வந்தும் என் மனத்தினை நீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இது ஆகில்,*
கொந்து ஆர் காயாவின்* கொழு மலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்கு வந்து அணுகிற்பனே?
கிற்பன் கில்லேன்* என்று இலன் முனம் நாளால்,*
அற்ப சாரங்கள்* அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
பற்பல் ஆயிரம்* உயிர் செய்த பரமா,* நின்
நற் பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானம் இன்றி* வினை இயல் பிறப்பு அழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவு அற நிறைந்து நின்ற,*
மெய்ஞ் ஞானச் சோதிக்* கண்ணனை மேவுதுமே?
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதல் இன்றி* உன் கழல் வணங்கிற்றிலேன்,*
பாவு தொல் சீர்க் கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கு எய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பல காலம்* வழி திகைத்து அலமர்கின்றேன்,*
மேவி அன்று ஆ நிரை காத்தவன்* உலகம் எல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம் விட்டால்,*
அலைப்பூண் உண்ணும்* அவ் அல்லல் எல்லாம் அகல,*
கலைப் பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடு உயிரே
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
எந்தை தந்தை தந்தை* தந்தை தந்தைக்கும்
முந்தை,* வானவர் வானவர் கோனொடும்,*
சிந்து பூ மகிழும்* திருவேங்கடத்து,*
அந்தம் இல் புகழ்க்* கார் எழில் அண்ணலே.
அண்ணல் மாயன்* அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி,* வாய்க் கருமாணிக்கம்,*
தெள் நிறை சுனை நீர்த்,* திருவேங்கடத்து,*
எண் இல் தொல் புகழ்* வானவர் ஈசனே.
ஈசன் வானவர்க்கு* என்பன் என்றால்,* அது
தேசமோ* திருவேங்கடத்தானுக்கு?,*
நீசனேன்* நிறைவு ஒன்றும் இலேன்,* என்கண்
பாசம் வைத்த* பரம் சுடர்ச் சோதிக்கே.
சோதி ஆகி* எல்லா உலகும் தொழும்,*
ஆதிமூர்த்தி என்றால்* அளவு ஆகுமோ?,*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை,*
தீது இல் சீர்த்* திருவேங்கடத்தானையே.
வேம் கடங்கள்* மெய்மேல் வினை முற்றவும்,*
தாங்கள் தங்கட்கு* நல்லனவே செய்வார்,*
வேங்கடத்து உறைவார்க்கு* நம என்னல்-
ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.
சுமந்து மாமலர்* நீர் சுடர் தூபம் கொண்டு,*
அமர்ந்து வானவர்* வானவர் கோனொடும்,*
நமன்று எழும்* திருவேங்கடம் நங்கட்குச்,*
சமன் கொள் வீடு தரும்* தடங் குன்றமே.
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
ஓயும் மூப்புப்* பிறப்பு இறப்பு:பிணி,*
வீயுமாறு செய்வான்* திருவேங்கடத்து
ஆயன்,* நாள் மலர் ஆம்* அடித்தாமரை,*
வாயுள்ளும்மனத்துள்ளும்* வைப்பார்கட்கே.
வைத்த நாள் வரை* எல்லை குறுகிச் சென்று,*
எய்த்து இளைப்பதன்* முன்னம் அடைமினோ,*
பைத்த பாம்பு அணையான்* திருவேங்கடம்,*
மொய்த்த சோலை* மொய்பூந்தடந் தாழ்வரே.
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூவும் ஆறு அறியமாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவு சீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நா இயல் கலைகள் என்கோ!* ஞான நல்ஆவி என்கோ,*
பாவு சீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே!
பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச் செவ்வாயன் என்கோ,*
அம் கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திரு மறு மார்பன் என்கோ,*
சங்கு சக்கரத்தன் என்கோ!* சாதி மாணிக்கத்தையே!
சாதி மாணிக்கம் என்கோ!* சவி கொள் பொன் முத்தம் என்கோ*
சாதி நல் வயிரம் என்கோ,* தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
ஆதி அம் சோதி என்கோ!* ஆதி அம் புருடன் என்கோ,*
ஆதும் இல் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே!
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினை கெடுக்கும்,*
நச்சும் மா மருந்தம் என்கோ!* நலங் கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச் சுவைத் தேறல் என்கோ!* கனி என்கோ! பால் என்கேனோ!
பால் என்கோ!* நான்கு வேதப் பயன் என்கோ,* சமய நீதி
நூல் என்கோ!* நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ,* வினையின் மிக்க பயன் என்கோ,* கண்ணன் என்கோ!-
மால் என்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே!
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனம் இல் செல்வம் என்கோ!* ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
ஊனம் இல் மோக்கம் என்கோ!* ஒளி மணி வண்ணனையே!
ஒளி மணி வண்ணன் என்கோ!* ஒருவன் என்று ஏத்த நின்ற*
நளிர் மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்* படைத்து அவை ஏத்த நின்ற,*
களி மலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே!
கண்ணனை மாயன் தன்னை* கடல் கடைந்து அமுதம் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணி நன்கு உறைகின்றானை* ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,*
எண்ணும் ஆறு அறியமாட்டேன்,* யாவையும் எவரும் தானே.
யாவையும் எவரும் தானாய்* அவரவர் சமயம் தோறும்,*
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவி சேர் உயிரின் உள்ளால்* ஆதும் ஓர் பற்று இலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே.
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தண்கடல் வட்டத்து உள்ளாரைத்* தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,*
திண்கழல்கால் அசுரர்க்குத்* தீங்கு இழைக்கும் திருமாலைப்,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே.
மலையை எடுத்து கல்மாரி* காத்து* பசுநிரை தன்னைத்,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடு ஆதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலை கொள் நரகத்து அழுந்திக்* கிடந்து உழைக்கின்ற வம்பரே.
வம்பு அவிழ் கோதைபொருட்டா* மால்விடை ஏழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டம் இட்டு ஆடி* கோகு உகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயன் என்னே* சாது சனங்களிடையே?
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதி அம் சோதி உருவை* அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதி உணர்ந்தவர் முன்னா* என் சவிப்பார் மனிசரே?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னை* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியை கரும்பின் இன் சாற்றை* கட்டியை தேனை அமுதை,*
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்* முழுது உணர் நீர்மையினார.
நீர்மை இல் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந்து ஆடி*
நீர்மல்கு கண்ணினர் ஆகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊன் மல்கி மோடு பருப்பார்* உத்தமர்கட்கு என் செய்வாரே?
வார்புனல் அம் தண் அருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றி* பித்தர் என்றே பிறர்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலோகர் சிரிக்க நின்று ஆடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே.
அமரர் தொழப்படுவானை* அனைத்து உலகுக்கும் பிரானை,*
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்று ஆக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்து எழுந்து ஆடி* அலற்றுவதே கருமமே.
கருமமும் கரும பலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனை செங்கண் மாலினை* தேவபிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
மூவர் ஆகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவம் உள்ளன நீக்குவானை* தடங் கடல் கிடந்தான் தன்னை,*
தேவ தேவனை தென் இலங்கை* எரி எழச் செற்ற வில்லியை,*
பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ.
பரவி வானவர் ஏத்த நின்ற* பரமனை பரஞ்சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனை குடக் கூத்தனை,*
அரவம் ஏறி அலை கடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன் பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.
வைம்மின் நும் மனத்து என்று* யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை ஆளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தித் திரிவரே.
திரியும் காற்றோடு அகல் விசும்பு* திணிந்த மண் கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோர் இறை,*
சுரியும் பல் கருங் குஞ்சி* எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்* புகநின்ற செங்கண்மால்,*
நாற்றம் தோற்றம் சுவை ஒலி* உறல் ஆகி நின்ற,* எம் வானவர்
ஏற்றையே அன்றி* மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
எழுமைக்கும் எனது ஆவிக்கு* இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணிவண்ணனை குடக் கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னல் கனியினை,*
தொழுமின் தூய மனத்தர் ஆய்* இறையும் நில்லா துயரங்களே.
துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்* அவை அல்லன் ஆய்,*
உயர நின்றது ஓர் சோதி ஆய்* உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கும் நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,*
தயரதற்கு மகன் தன்னை அன்றி* மற்று இலேன் தஞ்சமாகவே.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு* தானும் ஆய் அவை அல்லன் ஆய்,*
எஞ்சல் இல் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!* அவன் இவன் என்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் எவன்* அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்*
படஅரவின் அணைக்கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
ஆளும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
தோளும் ஓர் நான்கு உடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக் கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடை நாதரே.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறும் துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து* எந்தை பிரான் தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடையார்களே.
உடை ஆர்ந்த ஆடையன்* கண்டிகையன் உடை நாணினன்*
புடை ஆர் பொன் நூலினன்* பொன் முடியன் மற்றும் பல்கலன்,*
நடையா உடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடை ஆர் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமை ஒழிய* அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே.
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
துளிக்கும் நறும் கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக் கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,*
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்* சன்ம சன்மாந்தரம் காப்பரே.
சன்ம சன்மாந்தரம் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்* கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
நன்மை பெறுத்து எம்மை* நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.
நம்பனை ஞாலம் படைத்தவனை* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்* உணர்வு அரியான் தன்னை,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்* அவர் கண்டீர்,*
எம் பல் பிறப்பிடைதோறு* எம் தொழுகுலம் தாங்களே.
குலம் தாங்கு சாதிகள்* நாலிலும் கீழ் இழிந்து,* எத்தனை
நலம் தான் இலாத* சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,*
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்* மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம் அடிகளே.
அடி ஆர்ந்த வையம் உண்டு* ஆல் இலை அன்னவசம் செய்யும,*
படி யாதும் இல் குழவிப்படி* எந்தை பிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்* அடியார் அடியோங்களே.
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
நெஞ்சமே! நீள் நகர் ஆக* இருந்த என்
தஞ்சனே,* தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலம் கொள்வான்* குறள் ஆகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்,* என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும்* வானவர் தம்-
நாயகனே,* நாள் இளம் திங்களைக்* கோள் விடுத்து,*
வேய் அகம் பால் வெண்ணெய்* தொடு உண்ட ஆன் ஆயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே.
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடு இன்றி,*
பை கொள் பாம்பு ஏறி* உறை பரனே,* உன்னை
மெய்கொள்ளக் காண( விரும்பும் என் கண்களே.
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண் கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்து செல்,*
பண் கொண்ட புள்ளின்* சிறகு ஒலி பாவித்து,*
திண் கொள்ள ஓர்க்கும்* கிடந்து என் செவிகளே.
செவிகளால் ஆர* நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே* காலப் பண் தேன்* உறைப்பத் துற்று,*
புவியின்மேல்* பொன் நெடும் சக்கரத்து உன்னையே.*
அவிவு இன்றி ஆதரிக்கும்* எனது ஆவியே.
ஆவியே! ஆர் அமுதே!* என்னை ஆளுடைத்,*
தூவி அம் புள் உடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உன கோலமே.
கோலமே! தாமரைக் கண்ணது ஓர்* அஞ்சன
நீலமே,* நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்று செல்லாதன* முன் நிலாம்
காலமே,* உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
கொள்வன் நான் மாவலி* மூவடி தா என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள் வன்மை தீர,* ஓர் ஆயிரம் தோள் துணித்த*
புள் வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மா மருதின் இடை போய* எம்
பெருந்தகாய்,* உன் கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசகமாலை கொண்டு* உன்னையே
இருந்து இருந்து* எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலம்கொள்சீர்* நன் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
ஒழிவு ஒன்று இல்லாத* பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப் போய்,*
கழிய மிக நல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும் பொருள்?,*
மின் ஆர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
கொள்ளும் பயன் இல்லை* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவு இலன்* வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்ல வம்மினோ.
வம்மின் புலவீர்!* நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,*
இம் மன் உலகினில்* செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
நும் இன் கவி கொண்டு* நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,*
செம் மின் சுடர் முடி* என் திருமாலுக்குச் சேருமே.
சேரும் கொடை புகழ்* எல்லை இலானை,* ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்* மற்று யான் கிலேன்,*
மாரி அனைய கை* மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,*
பாரில் ஓர் பற்றையைப்* பச்சைப் பசும் பொய்கள் பேசவே.
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லை இலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே?
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்.*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
சாய் கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீ கண்டுகொள் என்று* வீடும் தரும் நின்றுநின்றே!
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ் உடல் நீங்கிப்போய்,*
சென்று சென்று ஆகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்* கவி ஆயினேற்கு,*
என்றும் என்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டு இலனே.
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்* மூவுலகுக்கு உரிய,*
கட்டியை தேனை அமுதை* நன்பாலை கனியை கரும்பு தன்னை,*
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்ட பின்னை* இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவு இலனே.
',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'* என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர் தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனை பொன் சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப் பற்றி* யான் இறையேனும் இடர் இலனே.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏற திண்தேர்கடவி,*
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயர் இலனே.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றி கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பம் இலனே.
துன்பமும் இன்பமும் ஆகிய* செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,*
இன்பம் இல் வெம் நரகு ஆகி* இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி* பலபல மாய மயக்குக்களால்,*
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று* ஏதும் அல்லல் இலனே.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்* அழகு அமர் சூழ் ஒளியன்,*
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு* எல்லாக் கருமங்களும் செய்,*
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி* யான் ஓர் துக்கம் இலனே.
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று* ஒன்றும் தளர்வு இலனே.
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானம் ஒன்றாய்,*
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்* அருவு ஆகி நிற்கும்,*
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி* யான் என்றும் கேடு இலனே.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உய்ம்மின் திறைகொணர்ந்து* என்று உலகு ஆண்டவர்,* இம்மையே
தம் இன்சுவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம் விட்டு*
வெம் மின் ஒளிவெயில்* கானகம் போய்க் குமைதின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினோ.
அடி சேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம் தொழ,*
இடி சேர் முரசங்கள்* முற்றத்து இயம்ப இருந்தவர்,*
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்* ஆதலில் நொக்கெனக்,*
கடி சேர் துழாய்முடிக்* கண்ணன் கழல்கள் நினைமினோ.
நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண்மணலில் பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கு* அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத் தாள் மத களிறு அட்டவன்* பாதம் பணிமினோ.
பணிமின் திருவருள் என்னும்* அம் சீதப் பைம் பூம் பள்ளி,*
அணி மென் குழலார்* இன்பக் கலவி அமுது உண்டார்,*
துணி முன்பு நால* பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,*
மணி மின்னு மேனி* நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார் என்று அல்லால்* அன்று முதல் இன்று அறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பது இல்லை நிற்குறில்,*
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ.
ஆம் இன் சுவை அவை* ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,*
தூ மென் மொழி மடவார்* இரக்கப் பின்னும் துற்றுவார்,*
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று* இடறுவர் ஆதலின்,*
கோமின் துழாய் முடி* ஆதி அம் சோதி குணங்களே.
குணம் கொள் நிறை புகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்* ஆங்கு அவனை இல்லார்,*
மணம் கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
பணம் கொள் அரவு அணையான்* திருநாமம் படிமினோ.
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து* ஐம்புலன் வென்று,*
செடி மன்னு காயம் செற்றார்களும்* ஆங்கு அவனை இல்லார்,*
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
கொடி மன்னு புள் உடை* அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி* எல்லாம்விட்ட,*
இறுகல் இறப்பு என்னும்* ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,*
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்* பின்னும் வீடு இல்லை,*
மறுகல் இல் ஈசனைப் பற்றி* விடாவிடில் வீடு அஃதே.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
வல்லி சேர் நுண் இடை* ஆய்ச்சியர் தம்மொடும்,*
கொல்லைமை செய்து* குரவை பிணைந்தவர்,*
நல் அடிமேல் அணி* நாறு துழாய் என்றே
சொல்லுமால்,* சூழ் வினையாட்டியேன் பாவையே.
பா இயல் வேத* நல் மாலை பல கொண்டு,*
தேவர்கள் மா முனிவர்* இறைஞ்ச நின்ற*
சேவடிமேல் அணி* செம் பொன் துழாய் என்றே
கூவுமால்,* கோள் வினையாட்டியேன் கோதையே.
கோது இல வண்புகழ்* கொண்டு சமயிகள்,*
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன்,*
பாதங்கள் மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* ஊழ்வினையேன்* தடந் தோளியே.
தோளி சேர் பின்னை பொருட்டு* எருது ஏழ் தழீஇக்
கோளியார்* கோவலனார்* குடக் கூத்தனார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
நாளும்நாள்,* நைகின்றதால்* என்தன் மாதரே
மாதர் மா மண்மடந்தைபொருட்டு* ஏனம் ஆய்,*
ஆதி அம் காலத்து* அகல் இடம் கீண்டவர்,*
பாதங்கள்மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* எய்தினள் என் தன் மடந்தையே.
மடந்தையை* வண் கமலத் திருமாதினை,*
தடம் கொள் தார் மார்பினில்* வைத்தவர் தாளின்மேல்,*
வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே* இவள்
மடங்குமால்* வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே.
கொம்பு போல் சீதைபொருட்டு* இலங்கை நகர்*
அம்பு எரி உய்த்தவர்* தாள் இணைமேல் அணி,*
வம்பு அவிழ் தண் அம் துழாய்* மலர்க்கே இவள்-
நம்புமால்,* நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும்* ஓர் பெண் பெற்று நல்கினீர்,*
எங்ஙனே சொல்லுகேன்* யான் பெற்ற ஏழையை,*
சங்கு என்னும் சக்கரம் என்னும்* துழாய் என்னும்,*
இங்ஙனே சொல்லும்* இராப் பகல் என்செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை* என் கோமளம்,*
என் சொல்லும்* என் வசமும் அல்லள் நங்கைமீர்,*
மின் செய் பூண் மார்பினன்* கண்ணன் கழல் துழாய்,*
பொன் செய்பூண்* மென்முலைக்கு என்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
ஏக மூர்த்தி இரு மூர்த்தி* மூன்று மூர்த்தி பல மூர்த்தி-
ஆகி,* ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,*
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற* நாராயணனே உன்-
ஆகம் முற்றும் அகத்து அடக்கி* ஆவி அல்லல் மாய்த்ததே.
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த* மாயப் பேய் உயிர்-
மாய்த்த,* ஆய மாயனே! வாமனனே மாதவா,*
பூத்தண் மாலை கொண்டு* உன்னைப் போதால் வணங்கேனேலும்,* நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்* புனையும் கண்ணி எனது உயிரே.
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,*
எண் இல் பல்கலன்களும்* ஏலும் ஆடையும் அஃதே,*
நண்ணி மூவுலகும்* நவிற்றும் கீர்த்தியும் அஃதே,*
கண்ணன் எம் பிரான் எம்மான்* கால சக்கரத்தானுக்கே.
கால சக்கரத்தொடு* வெண் சங்கம் கை ஏந்தினாய்,*
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாராயணனே என்று என்று,*
ஓலம் இட்டு நான் அழைத்தால்* ஒன்றும் வாராயாகிலும்,*
கோலம் ஆம் என் சென்னிக்கு* உன் கமலம் அன்ன குரைகழலே.
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன்
உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே.
என்னது ஆவி மேலையாய்* ஏர் கொள் ஏழ் உலகமும்,*
துன்னி முற்றும் ஆகி நின்ற* சோதி ஞான மூர்த்தியாய்,*
உன்னது என்னது ஆவியும்,* என்னது உன்னது ஆவியும்*
இன்ன வண்ணமே நின்றாய்* என்று உரைக்க வல்லேனே?
உரைக்க வல்லேன் அல்லேன்* உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்*
கரைக்கண் என்று செல்வன் நான்?* காதல் மையல் ஏறினேன்,*
புரைப்பு இலாத பரம்பரனே!* பொய் இலாத பரஞ்சுடரே,*
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த* யானும் ஏத்தினேன்.
யானும் ஏத்தி* ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,* பின்னையும்
தானும் ஏத்திலும்* தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும் ஆகித் தித்திப்ப,*
யானும் எம் பிரானையே ஏத்தினேன்* யான் உய்வானே
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
பெய்வளைக் கைகளைக் கூப்பி* 'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,*
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,* 'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,*
நையும் கண்ணீர் மல்க நின்று* 'நாரணன்' என்னும் அன்னே,* என்
தெய்வ உருவில் சிறுமான்* செய்கின்றது ஒன்று அறியேனே.
அறியும் செந்தீயைத் தழுவி* 'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தழுவி* 'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
வெறிகொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறிவளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
ஒன்றிய திங்களைக் காட்டி* 'ஒளிமணி வண்ணனே' என்னும்*
நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்* நாரணன் வந்தான் என்று ஆலும்,*
என்று இன மையல்கள் செய்தான்* என்னுடைக் கோமளத்தையே?
கோமள வான் கன்றைப் புல்கி* கோவிந்தன் மேய்த்தன' என்னும்,*
போம் இள நாகத்தின் பின்போய்* அவன் கிடக்கை ஈது என்னும்,*
ஆம் அளவு ஒன்றும் அறியேன்* அருவினையாட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால் செய்து செய்கின்ற கூத்தே.
கூத்தர் குடம் எடுத்து ஆடில்* 'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,*
வாய்த்த குழல் ஓசை கேட்கில்* 'மாயவன்' என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்* அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு* என் பெண்கொடி ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
திரு உடை மன்னரைக் காணில்,* திருமாலைக் கண்டேனே என்னும்,*
உரு உடை வண்ணங்கள் காணில்* 'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்* 'கடல்வண்ணன் கோயிலே' என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகவரைக் காணில்* 'வியல் இடம் உண்டானே!' என்னும்,*
கரும் பெரு மேகங்கள் காணில்* 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
பெரும் புல ஆ நிரை காணில்* 'பிரான் உளன்' என்று பின் செல்லும்,*
அரும் பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றானே!
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி* அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப* வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,*
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,* பெருமானே! வா! என்று கூவும்,*
மயல் பெருங் காதல் என் பேதைக்கு* என்செய்கேன் வல்வினையேனே!
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்* உறை மார்பினன்,*
செய்ய கோலத் தடங் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேன்,*
வெய்ய நோய்கள் முழுதும்* வியன் ஞாலத்து வீயவே.
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,*
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மேவி நின்று தொழுவார்* வினை போக மேவும் பிரான்,*
தூவி அம் புள் உடையான்* அடல் ஆழி அம்மான் தன்னை,
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி* நண்ணப் பெற்றேன்,*
ஆவி என் ஆவியை* யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,* அமரர்தம்-
ஏற்றை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,*
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி* நாளும் மகிழ்வு எய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினை நோய்கள் கரியவே.
கரிய மேனிமிசை* வெளிய நீறு சிறிதே இடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேற்கு,*
அரியது உண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனி என்றுமே?
என்றும் ஒன்று ஆகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு -
இன்றி நின்றானை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதி எய்தினம்* என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தண் தாமரை-
சுமக்கும்* பாதப் பெருமானை* சொல்மாலைகள் சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண் திசையும் தவிராது* நின்றான் தன்னை,*
கூனல் சங்கத் தடக்கையவனை* குடம் ஆடியை
வானக் கோனை,* கவி சொல்ல வல்லேற்கு* இனி மாறுஉண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்* கிடந்தும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்* மணம் கூடியும்,*
கண்ட ஆற்றால் தனதே* உலகு என நின்றான் தன்னை,*
வண் தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்ப மாரியே.
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந் தெய்வம்,*
இசைப்பு இன்றி* நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
திசைப்பு இன்றியே* சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றே இல் பெறும் இது காண்மினே.
இது காண்மின் அன்னைமீர்!* இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மது வார் துழாய்முடி* மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,*
அதுவே இவள் உற்ற நோய்க்கும்* அரு மருந்து ஆகுமே.
மருந்து ஆகும் என்று அங்கு ஓர்* மாய வலவை சொல் கொண்டு,* நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்* களன் இழைத்து என் பயன்?*
ஒருங்காகவே உலகு ஏழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,*
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே.
இவளைப் பெறும்பரிசு* இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,*
குவளைத் தடங் கண்ணும்* கோவைச் செவ்வாயும் பயந்தனள்,*
கவளக் கடாக் களிறு அட்ட பிரான்* திருநாமத்தால்,*
தவளப் பொடிக்கொண்டு* நீர்இட்டிடுமின் தணியுமே.
தணியும் பொழுது இல்லை* நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இது அல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமர் அடி நீறுகொண்டு*
அணிய முயலின்* மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
அணங்குக்கு அரு மருந்து என்று* அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்*
துணங்கை எறிந்து* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
உணங்கல் கெடக்* கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வல்லாரையே.
வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
கீழ்மையினால் அங்கு ஓர்* கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,*
நாழ்மை பல சொல்லி* நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இந் நோய்க்கும் ஈதே மருந்து,*
ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்* அவனை அல்லால்,*
நும் இச்சை சொல்லி* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
மன்னப்படும் மறைவாணனை* வண் துவராபதி-
மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுது ஆடுமே.
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோது இல தந்திடும்,* என்
வள்ளலேயோ! வையம் கொண்ட* வாமனாவோ! என்று என்று,*
நள் இராவும் நன் பகலும்* நான் இருந்து ஓலம் இட்டால்,*
கள்ள மாயா! உன்னை* என் கண் காண வந்து ஈயாயே.
'ஈவு இலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா! என்று என்று*
கூவிக் கூவி நெஞ்சு உருகி* கண்பனி சோர நின்றால்,*
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காண வந்தே.
'காண வந்து என் கண்முகப்பே* தாமரைக்கண் பிறழ,*
ஆணி செம்பொன் மேனி எந்தாய்!* நின்று அருளாய் என்று என்று,*
நாணம் இல்லாச் சிறு தகையேன்* நான் இங்கு அலற்றுவது என்,*
பேணி வானோர் காணமாட்டாப்* பீடு உடை அப்பனையே?
அப்பனே! அடல் ஆழியானே,* ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக்கூடுங்கொல்? என்று*
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு* ஆவி துவர்ந்து துவர்ந்து,*
இப்பொழுதே வந்திடாய் என்று* ஏழையேன் நோக்குவனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்* யான் எனது ஆவியுள்ளே,*
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!* நின்னை அறிந்து அறிந்தே.
அறிந்து அறிந்து தேறித் தேறி* யான் எனது ஆவியுள்ளே,*
நிறைந்த ஞான மூர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்று இடறும்* பேதைமை தீர்ந்தொழிந்தேன்*
நறுந் துழாயின் கண்ணி அம்மா!* நான் உன்னைக் கண்டுகொண்டே!
கண்டுகொண்டு என் கைகள் ஆர* நின் திருப்பாதங்கள்மேல்,*
எண் திசையும் உள்ள பூக்கொண்டு* ஏத்தி உகந்து உகந்து,*
தொண்டரோங்கள் பாடி ஆட* சூழ் கடல் ஞாலத்துள்ளே,*
வண் துழாயின் கண்ணி வேந்தே!* வந்திடகில்லாயே.
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்* ஐம்புலன் வெல்ல கில்லேன்,*
கடவன் ஆகி காலந்தோறும்* பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
மட வல் நெஞ்சம் காதல் கூர* வல்வினையேன் அயர்ப்பாய்த்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே?
சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் நோக்கி நின்று அலந்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான மூர்த்தி ஆய* வேத விளக்கினை* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
மணி மாமை குறைவு இல்லா* மலர்மாதர் உறை மார்பன்,*
அணி மானத் தட வரைத்தோள்* அடல் ஆழித் தடக்கையன்,*
பணி மானம் பிழையாமே* அடியேனைப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மட நெஞ்சால் குறைவு இலமே.
மட நெஞ்சால் குறைவு இல்லா* மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,*
விட நஞ்ச முலை சுவைத்த* மிகு ஞானச் சிறு குழவி,*
பட நாகத்து அணைக் கிடந்த* பரு வரைத் தோள் பரம்புருடன்,*
நெடுமாயன் கவராத* நிறையினால் குறைவு இலமே.
நிறையினால் குறைவு இல்லா* நெடும் பணைத் தோள் மடப் பின்னை,*
பொறையினால் முலை அணைவான்* பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,*
கறையினார் துவர் உடுக்கை* கடை ஆவின் கழி கோல் கைச்,*
சறையினார் கவராத* தளிர் நிறத்தால் குறைவு இலமே
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்* தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
கிளிமொழியாள் காரணமாக்* கிளர் அரக்கன் நகர் எரித்த,*
களி மலர்த் துழாய் அலங்கல்* கமழ் முடியன் கடல் ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத,* அறிவினால் குறைவு இலமே.
அறிவினால் குறைவு இல்லா* அகல் ஞாலத்தவர் அறிய,*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த* நிறை ஞானத்து ஒருமூர்த்தி,*
குறிய மாண் உரு ஆகி* கொடுங் கோளால் நிலம் கொண்ட,*
கிறி அம்மான் கவராத* கிளர் ஒளியால் குறைவு இலமே.
கிளர் ஒளியால் குறைவு இல்லா* அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,*
கிளர் ஒளிய இரணியனது* அகல் மார்பம் கிழித்து உகந்த,*
வளர் ஒளிய கனல் ஆழி* வலம்புரியன் மணி நீல,*
வளர் ஒளியான் கவராத* வரி வளையால் குறைவு இலமே.
வரி வளையால் குறைவு இல்லாப்* பெரு முழக்கால் அடங்காரை,*
எரி அழலம் புக ஊதி* இரு நிலம் முன் துயர் தவிர்த்த,*
தெரிவு அரிய சிவன் பிரமன்* அமரர் கோன் பணிந்து ஏத்தும்,*
விரி புகழான் கவராத* மேகலையால் குறைவு இலமே.
மேகலையால் குறைவு இல்லா* மெலிவு உற்ற அகல் அல்குல்,*
போகமகள் புகழ்த் தந்தை* விறல் வாணன் புயம் துணித்து,*
நாகமிசைத் துயில்வான்போல்* உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,*
யோகு அணைவான் கவராத* உடம்பினால் குறைவு இலமே.
உடம்பினால் குறைவு இல்லா* உயிர் பிரிந்த மலைத்துண்டம்,*
கிடந்தனபோல் துணி பலவா* அசுரர் குழாம் துணித்து உகந்த,*
தடம் புனல சடைமுடியன்* தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,*
உடம்பு உடையான் கவராத* உயிரினால் குறைவு இலமே.
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
சாம் ஆறும் கெடும் ஆறும்* தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடந்து அலற்றும்* இவை என்ன உலகு இயற்கை?,*
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்* அரவு அணையாய்! அம்மானே,*
கூமாறே விரைகண்டாய்* அடியேனை குறிக்கொண்டே.
கொண்டாட்டும் குலம் புனைவும்* தமர் உற்றார் விழு நிதியும்,*
வண்டு ஆர் பூங் குழலாளும்,* மனை ஒழிய உயிர் மாய்தல்,*
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை* கடல்வண்ணா! அடியேனைப்*
பண்டேபோல் கருதாது* உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.
கொள் என்று கிளர்ந்து எழுந்த* பெரும் செல்வம் நெருப்பு ஆக,*
கொள் என்று தமம் மூடும்* இவை என்ன உலகு இயற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேனை* உனது அருளால் வாங்காயே.
வாங்கு நீர் மலர் உலகில்* நிற்பனவும் திரிவனவும்,*
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்* பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கு இதன்மேல் வெம் நரகம்* இவை என்ன உலகு இயற்கை?*
வாங்கு எனை நீ மணிவண்ணா!* அடியேனை மறுக்கேலே.
மறுக்கி வல் வலைப்படுத்தி* குமைத்திட்டு கொன்று உண்பர்,*
அறப்பொருளை அறிந்து ஓரார்* இவை என்ன உலகு இயற்கை?*
வெறித் துளவ முடியானே!* வினையேனை உனக்கு அடிமை-
அறக்கொண்டாய்,* இனி என் ஆர் அமுதே!* கூயருளாயே.
ஆயே! இவ் உலகத்து* நிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்று ஒரு பொருளும்* இன்றி நீ நின்றமையால்,*
நோயே மூப்பு இறப்பு பிறப்பு* பிணியே என்று இவை ஒழிய,*
கூயேகொள் அடியேனை* கொடு உலகம் காட்டேலே.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
கூட்டுதி நின் குரை கழல்கள்* இமையோரும் தொழாவகைசெய்து,*
ஆட்டுதி நீ அரவு அணையாய்!* அடியேனும் அஃது அறிவன்,*
வேட்கை எல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* கூட்டினை நான் கண்டேனே.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்* ஐங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
ஒண் தொடியாள் திருமகளும்* நீயுமே நிலாநிற்ப,*
கண்ட சதிர் கண்டொழிந்தேன்* அடைந்தேன் உன் திருவடியே.
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
நாடி நீர் வணங்கும் தெய்வமும்* உம்மையும் முன்படைத்தான்,*
வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்* அவன் மேவி உறைகோயில்,*
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனைப்*
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்* பல் உலகீர்! பரந்தே.
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து* அன்று உடனே விழுங்கி,*
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது* கண்டும் தெளியகில்லீர்,*
சிரங்களால் அமரர் வணங்கும்* திருக்குருகூர் அதனுள்,*
பரன் திறம் அன்றி பல் உலகீர்!* தெய்வம் மற்று இல்லை பேசுமினே!
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்* பிறர்க்கும்
நாயகன் அவனே,* கபால நல் மோக்கத்துக்* கண்டுகொண்மின்,*
தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனுள்,*
ஈசன்பால் ஓர் அவம் பறைதல்* என் ஆவது இலிங்கியர்க்கே?
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
போற்றி மற்று ஓர் தெய்வம்* பேணப் புறத்திட்டு* உம்மை இன்னே
தேற்றி வைத்தது* எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,*
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு* திருக்குருகூர் அதனுள்,*
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்* அது அறிந்து அறிந்து ஓடுமினே.
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து* மற்று ஓர் தெய்வம்,
பாடி ஆடிப் பணிந்து* பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*
கூடி வானவர் ஏத்த நின்ற* திருக்குருகூர் அதனுள்,*
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு* அடிமைபுகுவதுவே
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட* மார்க்கண்டேயன் அவனை*
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது* நாராயணன் அருளே*
கொக்கு அலர் தடம் தாழை வேலித்* திருக்குருகூர் அதனுள்*
மிக்க ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் விளம்புதிரே
விளம்பும் ஆறு சமயமும்* அவைஆகியும் மற்றும் தன்பால்,*
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய* ஆதிப்பிரான் அமரும்,*
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய* திருக்குருகூர் அதனை,*
உளம் கொள் ஞானத்து வைம்மின்* உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.
உறுவது ஆவது எத்தேவும்* எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,*
மறு இல் மூர்த்தியோடு ஒத்து* இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,*
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு* திருக்குருகூர் அதனுள்*
குறிய மாண் உரு ஆகிய* நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே.
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து*
தானே இன்அருள் செய்து* என்னை முற்றவும் தான் ஆனான்,*
மீன் ஆய் ஆமையும் ஆய்* நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,*
கான் ஆர் ஏனமும் ஆய்* கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக்கு இனியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்று ஆடி* பரந்து திரிகின்றனவே*
திரியும் கலியுகம் நீங்கி* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றி* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*
இடம் கொள் சமயத்தை எல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடம் கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களே ஆய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*.
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே* ஒக்கின்றது இவ் உலகத்து*
வைகுந்தன் பூதங்களே ஆய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்*
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*
கொன்று உயிர் உண்ணும் விசாதி* பகை பசி தீயன எல்லாம்*
நின்று இவ் உலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனோடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா* கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை*
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி* யாயவர்க்கே இறுமினே*.
இறுக்கும் இறை இறுத்து உண்ண* எவ் உலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக* அத் தெய்வ நாயகன் தானே*
மறுத் திரு மார்வன் அவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.
மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞானவிதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*.
மிக்க உலகுகள் தோறும்* மேவி கண்ணன் திருமூர்த்தி*
நக்க பிரானோடு* அயனும் இந்திரனும் முதலாகத்*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழ கிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
என் செய்யும் ஊரவர் கவ்வை* தோழீ இனி நம்மை*
என் செய்ய தாமரைக் கண்ணன்* என்னை நிறை கொண்டான்*
முன் செய்ய மாமை இழந்து* மேனி மெலிவு எய்தி*
என் செய்ய வாயும் கருங்கண்ணும்* பயப்பு ஊர்ந்தவே*.
ஊர்ந்த சகடம்* உதைத்த பாதத்தன்* பேய்முலை-
சார்ந்து சுவைத்த செவ்வாயன்* என்னை நிறை கொண்டான்*
பேர்ந்தும் பெயர்ந்தும்* அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்*
தீர்ந்த என் தோழீ!* என் செய்யும் ஊரவர் கவ்வையே?*
ஊரவர் கவ்வை எரு இட்டு* அன்னை சொல் நீர் படுத்து*
ஈர நெல் வித்தி முளைத்த* நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
பேர் அமர் காதல்* கடல் புரைய விளைவித்த*
கார் அமர் மேனி* நம் கண்ணன் தோழீ! கடியனே*
கடியன் கொடியன்* நெடிய மால் உலகம் கொண்ட-
அடியன்* அறிவு அரு மேனி மாயத்தன்* ஆகிலும்-
கொடிய என் நெஞ்சம்* அவன் என்றே கிடக்கும் எல்லே*
துடி கொள் இடை மடத் தோழீ!* அன்னை என் செய்யுமே?
அன்னை என் செய்யில் என்?* ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*
என்னை இனி உமக்கு ஆசை இல்லை* அகப்பட்டேன்*
முன்னை அமரர் முதல்வன்* வண் துவராபதி-
மன்னன்* மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.
வலையுள் அகப்படுத்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
அலை கடல் பள்ளி அம்மானை* ஆழிப்பிரான் தன்னை*
கலை கொள் அகல் அல்குல் தோழீ!* நம் கண்களால் கண்டு*
தலையில் வணங்கவும் ஆம் கொலோ?* தையலார் முன்பே*.
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து* மருது இடை-
போய் முதல் சாய்த்து* புள் வாய் பிளந்து களிறு அட்ட*
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை* எந் நாள்கொலோ*
யாம் உறுகின்றது தோழீ!* அன்னையர் நாணவே?*
நாணும் நிறையும் கவர்ந்து* என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு*
சேண் உயர் வானத்து இருக்கும்* தேவ பிரான் தன்னை*
ஆணை என் தோழீ!* உலகுதோறு அலர் தூற்றி* ஆம்-
கோணைகள் செய்து* குதிரியாய் மடல் ஊர்துமே*.
யாம் மடல் ஊர்ந்தும்* எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
தூ மடல் தண் அம் துழாய்* மலர் கொண்டு சூடுவோம்*
ஆம் மடம் இன்றி* தெருவுதோறு அயல் தையலார்*
நா மடங்காப் பழி தூற்றி* நாடும் இரைக்கவே*.
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
ஆவி காப்பார் இனி யார்?* ஆழ் கடல் மண் விண் மூடி*
மா விகாரம் ஆய்* ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கு அல்லையே?*.
நீயும் பாங்கு அல்லைகாண்* நெஞ்சமே நீள் இரவும்*
ஓயும் பொழுது இன்றி* ஊழி ஆய் நீண்டதால்*
காயும் கடும் சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல்வினையேன் பெண் பிறந்தே*
பெண் பிறந்தார் எய்தும்* பெரும் துயர் காண்கிலேன் என்று*
ஒண் சுடரோன்* வாராது ஒளித்தான்* இம்மண்அளந்த-
கண் பெரிய செவ்வாய்* எம் கார் ஏறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்*
கார் அன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேர் என்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*.
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
காப்பார் ஆர் இவ் இடத்து?* கங்கு இருளின் நுண் துளி ஆய்*
சேண் பாலது ஊழி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்த்*
தூப் பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப் பால வல்வினையேன்* தெய்வங்காள்! என் செய்கேனோ?*
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்*
மெய் வந்து நின்று* எனது ஆவி மெலிவிக்கும்,*
கைவந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தைவந்த தண் தென்றல்* வெம் சுடரில் தான் அடுமே*
வெம் சுடரில் தான் அடுமால்* வீங்கு இருளின் நுண் துளி ஆய்*
அம் சுடர வெய்யோன்* அணி நெடும் தேர் தோன்றாதால்*
செஞ் சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*
நின்று உருகுகின்றேனே போல* நெடு வானம்*
சென்று உருகி நுண் துளி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்த பிரான் வாரான் என்று*
ஒன்று ஒருகால் சொல்லாது* உலகோ உறங்குமே*
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.
நின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.
மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.
முன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*
கன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்* கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்* கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்* கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்* கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்* காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,* காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்* செய்வான் நின்றனகளும் யானே என்னும்*
செய்து முன் இறந்தவும் யானே என்னும்* செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்* செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்* திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்* திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்* திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்* திறம்பாது என் திருமகள் எய்தினவே?*
இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்* இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்*
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்* இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*
இன ஆயர் தலைவனும் யானே என்னும்* இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?*
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்* இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்* உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்* உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்* உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?*
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?* உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்* உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்* உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்* உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.
கொடிய வினை யாதும் இலனே என்னும்* கொடிய வினை ஆவேனும் யானே என்னும்*
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்* கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்* கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்* கோலம் இல் நரகமும் யானே என்னும்*
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்* கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்*
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்* கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து* நான்
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கலநகர் உறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*.
கருளப் புள் கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமைகொண்டாய்*
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்து அங்கு இருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*
மாறு சேர் படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலம் கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று*
கைதவங்கள் செய்யும்* கரு மேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்* சிரீவரமங்கலநகர்*
கைதொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கு ஓர்-
முந்தைத் தாய் தந்தையே!* முழு ஏழ் உலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
அந்தம் இல் புகழாய்!* அடியேனை அகற்றேலே*.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை* நன்கு அறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்*
பகல் கதிர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கை வாணனே* என்றும்-
புகற்கு அரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*
புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!* எருது ஏழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கருமாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலி தண் சிரீவரமங்கை*
யுள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*.
ஆறு எனக்கு நின் பாதமே* சரண் ஆகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன்* எனது ஆவியும் உனதே*
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்* மலி தண் சிரீவரமங்கை*
நாறு பூந் தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*.
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)
என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*
செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பு ஆய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ் கண்டிருந்தே* தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே!* அறிவின் பயனே! அரிஏறே!*.
அரிஏறே! என் அம் பொன் சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரி ஏய்! பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம்போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே*.
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*.
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
என்று கொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புது மாதவி மீது அணவி*
தென்றல் மணம் கமழும்* திருவல்லவாழ் நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*
சூடு மலர்க்குழலீர்!* துயராட்டியேன் மெலிய*
பாடும் நல் வேத ஒலி* பரவைத் திரை போல் முழங்க*
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்* தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சு அணி மாடங்கள் மீது அணவும்* தண் திருவல்லவாழ்*
நச்சு அரவின் அணைமேல்* நம்பிரானது நல் நலமே*.
நல் நலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப் புகை*
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னல் அம் கட்டி தன்னை* கனியை இன் அமுதம் தன்னை*
என் நலம் கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*
காண்பது எஞ்ஞான்றுகொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண் குரல் வண்டினொடு* பசுந் தென்றலும் ஆகி எங்கும்*
சேண் சினை ஓங்கு மரச்* செழுங் கானல் திருவல்லவாழ்*
மாண் குறள் கோலப் பிரான்* மலர்த் தாமரைப் பாதங்களே?*
பாதங்கள்மேல் அணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந் தடத்துள்* உயர் தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாள் முகமும்* கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ் ஞாலம் உண்ட* நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*
நாள்தொறும் வீடு இன்றியே* தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*
ஆடு உறு தீங் கரும்பும்* விளை செந்நெலும் ஆகி எங்கும்*