விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
    ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
    ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
    காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓலமிட என்னை பண்ணி விட்டு இட்டு - கூப்பிடும்படியாக என்னைப்பண்ணி கைவிட்டு (எம்பெருமானானவன்)
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் - ஒருபடியாலும் தன் வடிவையும் தன்னைக் கிட்டுவ தோரடையாளத்தையும் காட்டுகின்றிலன்,
என் செய்கேன் - இதற்கு நான் என்ன பண்ணுவேன்!
பல காலம் சென்றும் காண்பது ஆணை - காலமுள்ளதனையும் சென்றாகிலும் காணக்கடவே ளென்பது ஸத்யம்
உங்களோடு எங்கள் இடை இல்லை - (இந்த அத்யவஸாயத்தைக் குலைக்கப் பார்க்கிற) உங்களுக்கு மெனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை.

விளக்க உரை

“அப்பெருமானைக் காண்பது அரிது, ஆகவே அவனை விட்டு விடுதலை நன்று என்று உறவு முறையார் அலைக்க, அவனுடைய திருக்குணங்களிலே அகப்பட்ட நான் எத்தனை காலமானாலும் அவனைக் கண்டல்லதுவிடேன், அதற்கு இடையூறான வுங்களோடு ஸம்பந்தம் எனக்கு வேண்டாவென்று உறவறுத்து உரைக்கின்றாளிப்பாட்டில், முதலடியில் சில திருநாமங்களை யடுக்குகின்றாள், ஒவ்வொரு திருநாமமும் ஒவ்வோரபிப்ராயத்தோடு கூடியது, அப்பெருமான் இப்படி உபேக்ஷிக்குமளவில் நாமும் அவனை உபேக்ஷித்திருக்கையன்றோ தகுதி, அப்படி உபேக்ஷித்து விலகியிராமல் அவனையே அவற்றுவதற்கு என்ன காரணமென்னில், மால் – அடியார் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவனாயிற்றே அவன், மாலாய்ப்பிறந்த நம்பியான அவன் நம்மீது அத்தனை வியாமோஹங் கொண்டிருந்தவனன்றோ, நெடுக உபேக்ஷித்து விடமாட்டானே! என்கிற எண்ணத்தோடு மாலென்கிறாள். அரி – நம்மிடத்தில் விரோதி கனத்திருந்தாலும் அதைத் தன்னுடைய ஸங்கல்பலவலேசத்தாலே ஹரித்திடவல்லனல்லனோ? விரோதிவன்மையைப்பற்றி நாம் கவலைப்படவேண்டுமோ? என்கிற எண்ணத்தோடு அரியென்கிறாள். கேசவன் - * மைவண்ண நறுங்குஞ்சிக்குழல் பின்தாழ * என்றும் * களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழலகள் தடந்தோள்மேல் மிளிரநின்று விளையாட * என்றும் சொல்லும்படியான திருக்குழலொழுங்கைக்காட்டி நம்மை அகப்படுத்திக்கொண்ட அவன் “இவ்வழகை நினைத்து நினைத்துப் புலம்புவளே பராங்குச நாயகி“ என்றுணரமாட்டானோ? இதை நினைத்தாகிலும் பதறியோடிவரமாட்டானோ? என்கிற எண்ணத்தோடு கேசவனென்கிறாள். (கேசவனென்பதற்குப் பல பொருள்களுண்டு, சிறந்த மயிர்முடியையுடையவனென்ற பொருள் இங்கு விவக்ஷிதம்.) நராணன் – நாராயணனென்ற சொல்லுக்குப் பலபொருள்களுண்டு, முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் “புருஷகாரபலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலையெடுக்குங்குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம், அவையாவன – வாத்ஸல்யமும் ஸ்வாமித்வமும் ஸௌலன்“ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம், உடனே சீமாதவன் என்கையாலே இப்பொருள் பொருந்தும், இப்படி பெரியபிராட்டியாருடைய ஸம்பந்தத்தினால் கீளப்பப்பட்ட திருக்குணங்களையுடைய பெருமான் நம்மைக் கைவிடாமாட்டானென்னுங் கருத்தினால் “நாராணன் சீமாதவன்“ என்கிறாள். கோவிந்தன் – அண்டினார்க்குக் கையாளாயிருக்குமவன் நம்மைக் கைவிடுவனோ? வைகுந்தன் – கீழ்ச்சொன்ன திருக்குணங்களெல்லாம் திறம்பெறும்படி மேன்மையை யுடையவன். என்றென்று – ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை நிரந்தரமாகச் சொல்லிக் கூப்பிடும்படி என்னைப்பண்ணிவிட்டு, தன்வடிவைக் காட்டுகிறவன், தானிருந்த விடத்துக்கு ஓரடையாளமுங் காட்டுகிறிலன். இங்ஙனே சொன்ன தலைவியை நோக்கித் தோழியர் “துர்லபனான அவனைப்பற்றின பேச்சை விட்டிடுவதே நலம்“ என்று கூற அதற்கு மறுமாற்றமுரைப்பன பின்னடிகள் அரியனான அவனை எளியனாக்கிக் கண்டேதீருவேன், எத்தனை காலமானாலும் சரி, ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இப்படிப்பட்ட எனது துணிவுகண்டும் நீங்கள் ஹிதஞ்சொல்லி என்னை மீட்கப்பார்க்கில், உங்களோடு உறவை அறத்துறப்பன், நீங்கள் கடக்க நில்லுங்கள் என்றாளாயிற்று.

English Translation

O Flower-coiffured Ladies, my fair Sakhis! He has deserted me disappeared without a trace, making me prate, "Mal, Hari, Kesava, Narayana, Sri Madhava, Govinda, Vaikunta" and many such names, what can I do? Though many years may pass, I swear I will see him. You may take it that you and I have nothing in common hence-forth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்