திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.