பிரபந்த தனியன்கள்
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.
குருகூரன் மாறன் பேர் கூறு.
பாசுரங்கள்
முயற்றி சுமந்துஎழுந்து* முந்துற்ற நெஞ்சே,*
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,* -நயப்புஉடைய-
நாஈன் தொடைக்கிளவி* உள்பொதிவோம்,* நல்பூவைப்-
பூஈன்ற வண்ணன் புகழ் (2)
புகழ்வோம் பழிப்போம்* புகழோம் பழியோம்*
இகழ்வோம் மதிப்போம்* மதியோம் இகழோம்* மற்று-
எங்கள் மால்! செங்கண் மால்!* சீறல்நீ, தீவினையோம்*
எங்கள் மால் கண்டாய் இவை.
இவைஅன்றே நல்ல* இவைஅன்றே தீய,*
இவை என்றுஇவை அறிவனேலும்,* -இவைஎல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு* ஒண்ணாது இறையவனே,*
என்னால் செயற் பாலது என்?
என்னின் மிகுபுகழார் யாவரே,* பின்னையும்மற்று-
எண்இல்* மிகுபுகழேன் யான்அல்லால்,* -என்ன-
கருஞ்சோதிக்* கண்ணன் கடல்புரையும்,* சீலப்-
பெருஞ்சோதிக்கு என்நெஞ்சு ஆட்பெற்று
பெற்றதாய் நீயே* பிறப்பித்த தந்தைநீ*
மற்றை யார்ஆவாரும் நீபேசில்,* எற்றேயோ-
மாய! மாமாயவளை* மாயமுலை வாய்வைத்த*
நீஅம்மா! காட்டும் நெறி.
நெறிகாட்டி நீக்குதியோ,* நின்பால் கருமா-
முறிமேனி காட்டுதியோ,* மேல்நாள் அறியோமை*
என்செய்வான் எண்ணினாய் கண்ணனே,* ஈதுஉரையாய்-
என்செய்தால் என்படோம் யாம்?
யாமே அருவினையோம் சேயோம்,'* என் நெஞ்சினார்-
தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,* -பூமேய-
செம்மாதை* நின் மார்வில் சேர்வித்துப்,* பார்இடந்த-
அம்மா! நின் பாதத்து அருகு.
அருகும் சுவடும் தெரிவுஉணரோம்,* அன்பே-
பெருகும் மிகஇதுஎன்? பேசீர்,* -பருகலாம்-
பண்புடையீர்! பார்அளந்தீர்!* பாவியெம்கண் காண்புஅரிய*
நுண்புஉடையீர்! நும்மை நுமக்கு.
'நுமக்குஅடியோம்' என்றுஎன்று* நொந்துஉரைத்துஎன்,* மாலார்-
தமக்கு அவர்தாம்* சார்வுஅரியர் ஆனால்?* -எமக்குஇனி-
யாதானும்* ஆகிடுகாண் நெஞ்சே,* அவர்திறத்தே-
யாதானும் சிந்தித்து இரு.
இருநால்வர் ஈரைந்தின் மேல்ஒருவர்,* எட்டோடு-
ஒருநால்வர்* ஓர்இருவர் அல்லால்,* திருமாற்கு-
யாம்ஆர் வணக்கம்ஆர்* ஏபாவம் நல்நெஞ்சே*
நாமா மிகஉடையோம் நாழ்?
நாழால் அமர்முயன்ற* வல்அரக்கன், இன்உயிரை,*
வாழாவகை வலிதல்நின் வலியே,* -ஆழாத-
பாரும்நீ வானும்நீ* காலும்நீ தீயும்நீ,*
நீரும் நீஆய் நின்ற நீ.
நீஅன்றே ஆழ்துயரில்* வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?*
போய்ஒன்று சொல்லிஎன்? போநெஞ்சே,* -நீஎன்றும்-
காழ்த்து உபதேசம் தரினும்* கைக்கொள்ளாய்,* கண்ணன் தாள்-
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
வழக்கொடு மாறுகோள் அன்று* அடியார் வேண்ட,*
இழக்கவும் காண்டும் இறைவ!-இழப்புஉண்டே,*
எம்ஆட் கொண்டுஆகிலும்* யான்வேண்ட, என்கண்கள்*
தம்மால் காட்டுஉன் மேனிச் சாய்?
சாயால் கரியானை* உள்அறியாராய் நெஞ்சே,*
பேயார் முலைகொடுத்தார் பேயர்ஆய்,*-நீயார்போய்த்-
தேம்புஊண் சுவைத்து* ஊன்அறிந்துஅறிந்தும்,* தீவினைஆம்-
பாம்பார்வாய்க் கைந்நீட்டல் பார்த்து.
பார்த்துஓர் எதிரிதா நெஞ்சே,* படுதுயரம்-
பேர்த்துஓதப்* பீடுஅழிவுஆம் பேச்சுஇல்லை,* -ஆர்த்துஓதம்-
தம்மேனித்* தாள்தடவ தாம்கிடந்து,* தம்முடைய-
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
சீரால் பிறந்து* சிறப்பால் வளராது,*
பேர் வாமன்ஆகாக்கால் பேராளா,*-மார்புஆரப்-
புல்கி நீ உண்டுஉமிழ்ந்த* பூமி நீர் ஏற்புஅரிதே?*
சொல்லுநீ யாம்அறிய சூழ்ந்து.
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்* தோன்றாது விட்டாலும்*
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,* -சூழ்ந்துஎங்கும்-
வாள்வரைகள் போல்அரக்கன்* வன்தலைகள் தாம்இடிய,*
தாள்வரை வில்ஏந்தினார் தாம்.
தாம்பால் ஆப்புண்டாலும்* அத்தழும்பு தான்இளகப்,*
பாம்பால் ஆப்புண்டு பாடுஉற்றாலும்,* -சோம்பாதுஇப்-
பல்உருவை எல்லாம்* படர்வித்த வித்தா,* உன்-
தொல்உருவை யார்அறிவார் சொல்லு?
சொல்லில் குறைஇல்லை* சூதுஅறியா நெஞ்சமே,*
எல்லி பகல் என்னாது எப்போதும்,*-தொல்லைக் கண்-
மாத்தானைக்கு எல்லாம்* ஓர் ஐவரையே மாறுஆகக்,*
காத்தானைக் காண்டும்நீ காண்.
காணப் புகில்அறிவு* கைக்கொண்ட நல்நெஞ்சம்,*
நாணப் படும்அன்றே நாம்பேசில்?* -மாணி-
உருஆகிக் கொண்டு* உலகம் நீர்ஏற்ற சீரான்,*
திருஆகம் தீண்டிற்றுச் சென்று.
சென்றுஅங்கு வெம்நரகில்* சேராமல் காப்பதற்கு,*
இன்றுஇங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட,*-அன்றுஅங்குப்-
பார்உருவும்* பார்வளைத்த நீர்உருவும்* கண்புதையக்,-
கார்உருவன் தான் நிமிர்த்த கால்.
காலே பொதத்திரிந்து* கத்துவராம் இனநாள்,*
மாலார் குடிபுகுந்தார் என்மனத்தே,* -மேலால்-
தருக்கும்இடம் பாட்டினொடும்* வல்வினையார் தாம்,* வீற்று-
இருக்கும்இடம் காணாது இளைத்து.
இளைப்பாய் இளையாப்பாய்* நெஞ்சமே! சொன்னேன்,*
இளைக்க நமன்தமர்கள் பற்றி- இளைப்புஎய்த*
நாய்தந்து மோதாமல்* நல்குவான் நல்காப்பான்,*
தாய்தந்தை எவ்உயிர்க்கும் தான்.
தானே தனித்தோன்றல்* தன்அளப்பு ஒன்றுஇல்லாதான்*
தானே பிறர்கட்கும் தன்தோன்றல்,*-தானே-
இளைக்கில்பார் கீழ்மேல்ஆம்* மீண்டுஅமைப்பான் ஆனால்,*
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?
ஆரானும் ஆதானும் செய்ய,* அகலிடத்தை-
ஆராய்ந்து* அது திருத்தல் ஆவதே?,* -சீர்ஆர்-
மனத்தலை* வன் துன்பத்தை மாற்றினேன்,* வானோர்-
இனத்தலைவன் கண்ணனால் யான்.
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்,* வல்வினையைக்-
கானும் மலையும் புகக்கடிவான்,*-தான்ஓர்-
இருள்அன்ன மாமேனி* எம்இறையார் தந்த,*
அருள்என்னும் தண்டால் அடித்து.
அடியால்* படிகடந்த முத்தோ,* அதுஅன்றேல்-
முடியால்* விசும்புஅளந்த முத்தோ,* -நெடியாய்!-
செறிகழல்கொள் தாள்நிமிர்த்துச்* சென்று உலகம்எல்லாம்,*
அறிகிலமால் நீஅளந்த அன்று.
அன்றே நம் கண்காணும்* ஆழியான் கார்உருவம்,*
இன்றேநாம் காணாது இருப்பதுவும்,* -என்றேனும்-
கட்கண்ணால்* காணாத அவ்உருவை,* நெஞ்சுஎன்னும்-
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.
உணர ஒருவர்க்கு* எளியேனே? செவ்வே,*
இணரும் துழாய்அலங்கல் எந்தை,* -உணரத்-
தனக்குஎளியர்* எவ்அளவர் அவ்அளவன் ஆனால்,*
எனக்குஎளியன் எம்பெருமான் இங்கு.
இங்குஇல்லை பண்டுபோல்* வீற்றிருத்தல்,* என்னுடைய-
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுஉள்ளம்,* -அங்கே-
மடிஅடக்கி நிற்பதனில்* வல்வினையார் தாம்,* ஈண்டு-
அடிஎடுப்பது அன்றோ அழகு?
அழகும் அறிவோமாய்* வல்வினையைத் தீர்ப்பான்,*
நிழலும் அடிதாறும் ஆனோம்,* -சுழலக்-
குடங்கள்* தலை மீதுஎடுத்துக் கொண்டுஆடி,* அன்றுஅத்-
தடங்கடலை மேயார் தமக்கு.
தமக்குஅடிமை வேண்டுவார்* தாமோதரனார்,-
தமக்கு* அடிமை செய்என்றால் செய்யாது,*-எமக்குஎன்று-
தம்செய்யும் தீவினைக்கே* தாழ்வுறுவர் நெஞ்சினார்,*
யாம்செய்வது இவ்விடத்து இங்குயாது?
யாதானும் ஒன்றுஅறியில்* தன்உகக்கில் என்கொலோ,*
யாதானும் நேர்ந்து அணுகாஆறுதான்?,*-யாதானும்-
தேறுமா* செய்யா அசுரர்களை,* நேமியால்-
பாறுபாறு ஆக்கினான் பால்.
பால்ஆழி நீகிடக்கும் பண்பை,* யாம் கேட்டேயும்-
கால்ஆழும்* நெஞ்சுஅழியும் கண்சுழலும்,*-நீல்ஆழிச்-
சோதியாய்! ஆதியாய்!* தொல்வினைஎம் பால்கடியும்,*
நீதியாய்! நின்சார்ந்து நின்று.
நின்றும் இருந்தும்* கிடந்தும் திரிதந்தும்,*
ஒன்றுமோ ஆவாற்றான் என் நெஞ்சுஅகலான்,*-அன்றுஅம்கை-
வன்புடையால் பொன்பெயரோன்* வாய்தகர்த்து மார்வு இடந்தான்,*
அன்புடையன் அன்றே அவன்?
அவனாம் இவன்ஆம் உவன்ஆம்,* மற்று உம்பர்-
அவனாம்* அவன் என்று இராதே,*-அவனாம்-
அவனே எனத்தெளிந்து,* கண்ணனுக்கே தீர்ந்தால்,*
அவனே எவனேலும் ஆம்.
ஆம்ஆறு அறிவுடையார்* ஆவது அரிதுஅன்றே?*
நாமே அதுஉடையோம் நல்நெஞ்சே,*-பூமேய்-
மதுகரம்மே* தண்துழாய் மாலாரை,* வாழ்த்துஆம்-
அதுகரமே அன்பால் அமை.
அமைக்கும் பொழுதுஉண்டே* ஆராயில் நெஞ்சே,*
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள்*
ஏசியே ஆயினும்* ஈன்துழாய் மாயனையே,*
பேசியே போக்காய் பிழை.
பிழைக்க முயன்றோமோ* நெஞ்சமே! பேசாய்,*
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை,*-அழைத்துஒருகால்-
போய் உபகாரம்* பொலியக் கொள்ளாது,* அவன் புகழே-
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு?
வாய்ப்போ இதுஒப்ப* மற்றுஇல்லை வாநெஞ்சே,*
போய்ப்போஒய்* வெம்நரகில் பூவியேல்,*-தீப்பால-
பேய்த்தாய்* உயிர்கலாய்ப் பால்உண்டு,* அவள்உயிரை-
மாய்த்தானை வாழ்த்தே வலி
'வலியம்' எனநினைந்து* வந்துஎதிர்ந்த மல்லர்*
வலிய முடிஇடிய வாங்கி,*-வலியநின்-
பொன்ஆழிக் கையால்* புடைத்திடுதி கீளாதே,*
பல்நாளும் நிற்கும்இப் பார்.
பார்உண்டான் பார்உமிழ்ந்தான்* பார்இடந்தான் பார்அளந்தான்
பார்இடம் முன்படைத்தான் என்பரால்,* -பார்இடம்-
ஆவானும்* தான்ஆனால் ஆர்இடமே?,* மற்றொருவர்க்கு-
ஆவான் புகாவால் அவை.
அவையம் எனநினைந்து* வந்தசுரர் பாலே,*
நவையை நளிர்விப்பான் தன்னை,* -கவைஇல்-
மனத்துஉயர வைத்திருந்து* வாழ்த்தாதார்க்கு உண்டோ,*
மனத்துயரை மாய்க்கும் வகை?
வகைசேர்ந்த நல்நெஞ்சும்* நாஉடைய வாயும்,*
மிகவாய்ந்து வீழா எனிலும்,* -மிகஆய்ந்து-
மாலைத்தாம்* வாழ்த்தாது இருப்பர் இதுஅன்றே,*
மேலைத்தாம் செய்யும் வினை?
வினையார் தரமுயலும்* வெம்மையை அஞ்சி,*
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது*
வாசகத்தால் ஏத்தினேன்* வானோர் தொழுதுஇறைஞ்சும்,*
நாயகத்தான் பொன்அடிக்கள் நான்.
நான்கூறும்* கூற்றாவது இத்தனையே,* நாள்நாளும்-
தேங்குஓத நீர்உருவன் செங்கண்மால்,* -நீங்காத-
மாகதிஆம்* வெம்நரகில் சேராமல் காப்பதற்கு,*
நீகதிஆம் நெஞ்சே! நினை.
நினைத்துஇறைஞ்சி மானிடவர்* ஒன்றுஇரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,* -நினைத்துஇறைஞ்ச-
எவ்அளவர்* எவ்இடத்தோர் மாலே,* அதுதானும்-
எவ்அளவும் உண்டோ எமக்கு?
எமக்கு யாம் விண்நாட்டுக்கு* உச்சமதுஆம் வீட்டை,*
அமைத்திருந்தோம் அஃதுஅன்றே ஆம்ஆறு,*-அமைப்பொலிந்த-
மென்தோளி காரணமா* வெம்கோட்டுஏறு ஏழ்உடனே,*
கொன்றானையே மனத்துக் கொண்டு?
கொண்டல்தான் மால்வரைதான்* மாகடல்தான் கூர்இருள்தான்
வண்டுஅறாப் பூவைதான் மற்றுத்தான்,*-கண்டநாள்-
கார்உருவம்* காண்தோறும் நெஞ்சுஓடும்,* கண்ணனார்-
பேர்உருஎன்று எம்மைப் பிரிந்து.
பிரிந்துஒன்று நோக்காது* தம்முடைய பின்னே,*
திரிந்துஉழலும் சிந்தனையார் தம்மை,* -புரிந்துஒருகால்-
'ஆவா!' என இரங்கார்* அந்தோ! வலிதேகொல்,*
மாவாய் பிளந்தார் மனம்?
மனம்ஆளும் ஓர்ஐவர்* வன்குறும்பர் தம்மைச்,*
சினம்மாள்வித்து ஓர்இடத்தே சேர்த்து,* -புனம்மேய-
தண்துழாயான் அடியைத்* தாம்காணும் அஃதுஅன்றே,*
வண்துழாம் சீரார்க்கு மாண்பு?
மாண்பாவித்து அஞ்ஞான்று* மண்இரந்தான்,* மாயவள்நஞ்சு-
ஊண்பாவித்து உண்டான்* அது ஓர்உருவம்,* -காண்பான்நம்-
கண்அவா* மற்றுஒன்று காண்உறா,* சீர்பரவாது-
உண்ணவாய் தான்உறுமோ ஒன்று?
ஒன்றுஉண்டு செங்கண்மால்!* யான்உரைப்பது,* உன்அடியார்க்கு-
என்செய்வன் என்றே இருத்திநீ,* -நின்புகழில்-
வைகும்* தம் சிந்தையிலும் மற்றுஇனிதோ,* நீஅவர்க்கு-
வைகுந்தம் என்றுஅருளும் வான்?
வானோ மறிகடலோ* மாருதமோ தீயகமோ,*
கானோ ஒருங்கிற்று கண்டிலமால்,* ஆன்ஈன்ற-
கன்றுஉயர தாம்எறிந்து* காய்உதிர்த்தார் தாள்பணிந்தோம்,*
வன்துயரை ஆஆ! மருங்கு.
மருங்குஓதம் மோதும்* மணி நாகணையார்,*
மருங்கே வரஅரியரேலும்,* -ஒருங்கே-
எமக்குஅவரைக் காணலாம்* எப்பொழுதும் உள்ளால்,*
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
வரவுஆறு ஒன்றுஇல்லையால்* வாழ்வுஇனிதால்,* எல்லே!
ஒருஆறு ஒருவன் புகாவாறு,* -உருமாறும்-
ஆயவர்தாம் சேயவர்தாம்* அன்றுஉலகம் தாயவர்தாம்,*
மாயவர்தாம் காட்டும் வழி.
வழித்தங்கு வல்வினையை* மாற்றானோ? நெஞ்சே,*
தழீஇக்கொண்டு போர்அவுணன் தன்னை,* -சுழித்துஎங்கும்-
தாழ்வுஇடங்கள் பற்றி* புலால்வெள்ளம் தான்உகள,*
வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்?
மாலே! படிச்சோதி மாற்றேல்,* இனிஉனத
பாலேபோல்* சீரில் பழுத்தொழிந்தேன்,* -மேலால்-
பிறப்புஇன்மை பெற்று* அடிக்கீழ்க் குற்றேவல் அன்று,*
மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு?
மாடே வரப்பெறுவராம் என்றே,* வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்,* -ஊடேபோய்ப்-
பேர்ஓதம் சிந்து* திரைக் கண்வளரும்,* பேராளன்-
பேர்ஓத சிந்திக்க பேர்ந்து.
பேர்ந்துஒன்று நோக்காது* பின்நிற்பாய் நில்லாப்பாய்*
ஈர்ந்துழாய் மாயனையே என்நெஞ்சே,* -பேர்ந்துஎங்கும்-
தொல்லைமா வெம்நரகில்* சேராமல் காப்பதற்கு*
இல்லைகாண் மற்றோர் இறை.
இறைமுறையான் சேவடிமேல்* மண்அளந்த அந்நாள்,*
மறைமுறையால் வான்நாடர் கூடி,* -முறைமுறையின்-
தாதுஇலகு* பூத்தெளித்தால் ஒவ்வாதே,* தாழ்விசும்பின்-
மீதுஇலகித் தான்கிடக்கும் மீன்.
மீன்என்னும் கம்பில்* வெறிஎன்னும் வெள்ளிவேய்*
வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத்,* -தான்ஓர்-
மணிக்காம்பு போல்* நிமிர்ந்து மண்அளந்தான்,* நங்கள்-
பிணிக்குஆம் பெருமருந்து பின்.
பின்துரக்கும் காற்றுஇழந்த* சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,*
வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே,* -அன்று-
திருச்செய்ய நேமியான்* தீஅரக்கி மூக்கும்,*
பருச்செவியும் ஈர்ந்த பரன்.
பரன்ஆம் அவன்ஆதல்* பாவிப்பர் ஆகில்,*
உரனால் ஒருமூன்று போதும்,* -மரம்ஏழ்அன்று-
எய்தானை* புள்ளின்வாய் கீண்டானையே,* அமரர்-
கைதான் தொழாவே கலந்து?
கலந்து நலியும்* கடுந்துயரை நெஞ்சே,*
மலங்க அடித்து மடிப்பான்,* -விலங்கல்போல்-
தொல்மாலை கேசவனை* நாரணனை மாதவனை,*
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு.
சூட்டாய நேமியான்* தொல்அரக்கன் இன்உயிரை,*
மாட்டே துயர்இழைத்த மாயவனை,* -ஈட்ட-
வெறிகொண்ட* தண்துழாய் வேதியனை,* நெஞ்சே!-
அறிகண்டாய் சொன்னேன் அது.
அதுவோ நன்றுஎன்று* அங்கு அமர்உலகோ வேண்டில்,*
அதுவோ பொருள்இல்லை அன்றே?,* -அதுஒழிந்து-
மண் நின்று* ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே,*
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.
கல்லும் கனைகடலும்* வைகுந்த வான்நாடும்,*
புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,* -வெல்ல-
நெடியான் நிறம்கரியான்* உள்புகுந்து நீங்கான்,*
அடியேனது உள்ளத்து அகம்.
அகம்சிவந்த கண்ணினர்ஆய்* வல்வினையர் ஆவார்,*
முகம்சிதைவராம் அன்றே முக்கி,* -மிகும்திருமால்-
சீர்க்கடலை உள்பொதிந்த* சிந்தனையேன் தன்னை,*
ஆர்க்குஅடல்ஆம் செவ்வே அடர்த்து?
அடர்பொன் முடியானை* ஆயிரம் பேரானை
சுடர்கொள் சுடர்ஆழி யானை,* -இடர்கடியும்-
மாதா பிதாவாக* வைத்தேன் எனதுஉள்ளே*
யாதுஆகில் யாதே இனி?
இனிநின்று நின்பெருமை* யான்உரைப்பது என்னே,*
தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,* -பனிநீர்-
அகத்துஉலவு* செஞ்சடையான் ஆகத்தான்,* நான்கு-
முகத்தான் நின்உந்தி முதல்.
முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,* ஒன்றே-
முதல்ஆகும்* மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-
நிகர்இலகு கார்உருவா!* நின்அகத்தது அன்றே,*
புகர்இலகு தாமரையின் பூ?
பூவையும் காயாவும்* நீலமும் பூக்கின்ற,*
காவி மலர்என்றும் காண்தோறும்,* -பாவியேன்-
மெல்ஆவி* மெய்மிகவே பூரிக்கும்,* அவ்வவை-
எல்லாம் பிரான்உருவே என்று.
என்றும் ஒருநாள்* ஒழியாமை யான்இரந்தால்,*
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-
குடைஆக* ஆகாத்த கோவலனார்,* நெஞ்சே!-
புடைதான் பெரிதே புவி.
புவியும் இருவிசும்பும் நின்அகத்த,* நீஎன்-
செவியின் வழிபுகுந்து* என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-
யான்பெரியன் நீபெரியை* என்பதனை யார்அறிவார்,*
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
உள்ளிலும் உள்ளம் தடிக்கும்* வினைப்படலம்,*
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,* -உள்ள-
உலகுஅளவும் யானும்* உளன்ஆவன் என்கொல்*
உலகுஅளந்த மூர்த்தி! உரை.
உரைக்கில்ஓர் சுற்றத்தார்* உற்றார் என்றுஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,* -உரைப்புஎல்லாம்-
நின்அன்றி* மற்றுஇலேன் கண்டாய்,* எனதுஉயிர்க்குஓர்-
சொல்நன்றி ஆகும் துணை.
துணைநாள் பெருங்கிளையும்* தொல்குலமும்,* சுற்றத்து-
இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,* கணைநாணில்-
ஓவாத் தொழில்சார்ங்கன்* தொல்சீரை நல்நெஞ்சே,*
ஓவாத ஊணாக உண்.
உள்நாட்டுத் தேசுஅன்றே!* ஊழ்வினையை அஞ்சுமே,*
விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-
ஆர்ஆகி* எவ்இழிவிற்று ஆனாலும்,* ஆழிஅங்கைப்-
பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?
பிறப்பு இறப்பு மூப்புப்* பிணிதுறந்து,* பின்னும்-
இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-
ஏதமே* என்றுஅல்லால் எண்ணுவனே,* மண்அளந்தான்-
பாதமே ஏத்தாப் பகல்?
பகல்இரா என்பதுவும்* பாவியாது,* எம்மை-
இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-
தொழும்பர் இவர் சீர்க்கும்* துணைஇலர் என்றுஓரார்,*
செழும்பரவை மேயார் தெரிந்து.
தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்* தீவினையேன்,* வாளா-
இருந்தொழிந்தேன்* கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-
அம்மானை* அந்நான்று பின்தொடர்ந்த* ஆழிஅங்கை-
அம்மானை ஏத்தாது அயர்த்து.
அயர்ப்பாய் அயராப்பாய்* நெஞ்சமே! சொன்னேன்*
உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-
அல்லவே செய்கிறுதி* நெஞ்சமே! அஞ்சினேன்*
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
வாழ்த்தி அவன்அடியைப்* பூப்புனைந்து,* நின்தலையைத்-
தாழ்த்து* இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*
எங்குஉற்றாய் என்றுஅவனை* ஏத்தாதுஎன் நெஞ்சமே,*
தங்கத்தான்ஆ மேலும் தங்கு.
தங்கா முயற்றியஆய்* தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,*
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-
தண்அம்பால்* வேலைவாய்க் கண்வளரும்,* என்னுடைய-
கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?
கார்கலந்த மேனியான்* கைகலந்த ஆழியான்,*
பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-
சொல்நினைந்து போக்காரேல்* சூழ்வினையின் ஆழ்துயரை,*
என்நினைந்து போக்குவர் இப்போது? (2)
இப்போதும் இன்னும்* இனிச்சிறிது நின்றாலும்*
எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-
கைகழலா நேமியான்* நம்மேல் வினைகடிவான்*
மொய்கழலே ஏத்த முயல் (2)