பிரபந்த தனியன்கள்

தமேவமத்வா பரவாஸுதேவம் 
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்- 
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் 
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.
மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த் 
தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு 
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி 
உணர்த்தும் பிரானுதித்த வூர்.

   பாசுரங்கள்


    கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
    மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*

    எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
    அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)


    கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
    எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*

    விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
    அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.   


    சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
    படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*

    மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
    அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  


    மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
    ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*

    வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
    ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.


    புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
    கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*

    அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
    இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.


    இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
    மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி'*

    புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
    அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. 


    அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
    இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*

    சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
    அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   


    வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
    எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*

    தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
    அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.


    ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*

    மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
    ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  


    கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
    துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*

    தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
    அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)