விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடியாது - இடம் வலங்கொள்ளாமல்
இன்னே - இன்று காணும் விதமாகவே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் - நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது
அடியார் அல்லம் தவிர்த்த அசவோ - (பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ?
அன்றேல் - அல்லது
இப்படி - இப்பூமியை

விளக்க உரை

* ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார். இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம். * நாகத்தணைக் குடந்தை வெஃகாத்திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும், * அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத்திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம். இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ? திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார். இவ்விடத்தில் * நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலமேனமாய் இடந்த மெய்குலங்கவோ? * இத்தியான திருச்சந்த விருத்தப்பாசுரம் நினைக்கத் தக்கது. கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடிகட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸபயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள். இந்தப்பதிகம் பயம்மிக்கு அருளிச் செய்வதாகாயாலே இங்ஙனே பொருள் பணித்தது இன்சுவை மிக்கதேயாம், “ஆச்ரிதர்க்கு ஆத்மதானம் பண்ணுகைக்குக் கொடிகட்டிக்கொண்டிருக்கிற திருக்கோளூரிலும் என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். மடியாது – உலகில் உறங்குமவர்கள் சற்று இடது பக்கமாயும் சற்று வலது பக்கமாயும் மாறிமாறியசைந்து கிடப்பதுண்டே, அப்படி ஒருபோதும் அசையாமல் என்றபடி. இதற்கு மற்றொரு பொருளும் அருளிச் செய்யப்படுகிறது. திருப்பதிகளிலே எம்பெருமான் இப்படி திருக்கண்வளர்ந்தருள்வதானது நமக்காகவன்றோ வென்று இந்நிலவுலகத்தவர்கள் வரிந்து ஈடுபட வேண்டுமே, அப்படி ஒருவரம் ஈடுபடக்காணாமையாலே எம்பெருமான் இக்கிடையைவிட்டு எழுந்துபோக வேண்டியதன்றோ ப்ரரப்தம், அப்படியெழுந்து போகாமே, என்றேனுமொருநாள் யாரேனு மொருவர் பரியக்கூடுமென்று கிடக்கிறானாகச் சொல்லுகிறபடி. அசவு –அயர்வு.

English Translation

O Lord lying still in beautiful kolur and Pullingudil what makes you sleep so soundly? Are you weary from the battle of Lanka or from taking long strides over the Earth and sky?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்