அண்ணன் கோயில்

திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள மாமுனிக்கு இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. 108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் - அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும். திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்

அமைவிடம்

பெயர் வேறு பெயர்(கள்): அண்ணன் கோயில் பெயர்: திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் மாவட்டம்: நாகப்பட்டினம்,

தாயார் : ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
மூலவர் : ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: ஸ்ரீனிவாசா,பத்மாவதி


திவ்யதேச பாசுரங்கள்

    1308.   
    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.

        விளக்கம்  


    • திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று. ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.


    1309.   
    கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
    நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*
    செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
    எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.

        விளக்கம்  



    1310.   
    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*
    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 

        விளக்கம்  



    1311.   
    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.

        விளக்கம்  


    • கானார் கரி – கம்ஸனுடைய யானை ராஜதானியில் வளர்ந்ததாயிருக்க, அதனைக் காட்டில் வளர்ந்ததாகச் சொல்லுவதற்குக் கருத்து யாதெனில்; காட்டில் வேண்டினபடி தினறு, வேண்டினபடி திரிந்து கொழுப்படைந்த யானைபோலே கொழுத்துக்கிடந்தது என்பதாம்.


    1312.   
    வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
    நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
    பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.

        விளக்கம்  


    • வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டென்பது ப்ரஸித்தம். அங்கும் இங்கும் பிரார்த்தனைகள் விசேஷமாகச் செலுத்தப்பெறும். இவ்வொற்றுமைநயம் விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என அபேதமாக விளிக்கின்றார். கீழ் முதற்பத்தில் திருவேங்கடமலை விஷயமான திருமொழிகளில் “கண்ணார் கடல் சூழ” என்பது ஒரு திருமொழி; அதன் சாயையாகவே இத்திருமொழியும் அருளிச்செய்யப்படுகிறது. இரண்டு திருமொழிகளின் தொடக்கமும் ஒருவிதமாகவேயிருக்கும்படி அமையவைத்ததும் உய்த்துணரத்தக்கது.


    1313.   
    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.

        விளக்கம்  



    1314.   
    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 

        விளக்கம்  



    1315.   
    வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
    நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*
    சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.

        விளக்கம்  



    1316.   
    பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
    நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*
    தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 

        விளக்கம்  


    • திருவேங்கடமலைக்குத் திருப்பதிகம் பாடின நம்மாழ்வார் “அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கை யுறைமார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டுப் பாசுரம் கேசினதுபோலவே, அத்திருமலைக்குத் தோள்திண்டியான திருவெள்ளககுளத்துக்குத் திருப்பதிகம் பாடுகிற இவ்வாழ்வாரும் “பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டு இப்பாசுரும் பேசுகிறாரென்க. பிராட்டியானவள் உன்னை விட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ? என்ற கருத்தையடக்கிப் ‘பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!’ என விளிக்கின்றார்.


    1317.   
    நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
    செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*
    கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)

        விளக்கம்