- முகப்பு
- திவ்ய தேசம்
- திரு நறையூர்
திரு நறையூர்
தலபுராணம்:- திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.
அமைவிடம்
முகவரி:-
ஸ்ரீ நறையூர் நம்பி கோவில்,
நாச்சியார்கோயில் -612 602.
தஞ்சாவூர் (மாவட்டம்).
தொலைபேசி : +91- 435 - 246 7017,
94435 - 97388.,
தாயார் : ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
மூலவர் : திருநறையூர் நம்பி
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: வாசுதேவா(அ)ஸ்ரீனிவாசா,வஞ்சுலாவள்ளி
திவ்யதேச பாசுரங்கள்
-
1478.
யௌவன பருவத்தில் இஷ்டப்படி விஷயபோகங்கள் செய்யவேண்டிய தென்றும், அப்படி விஷயபோகஞ் செய்வதற்குச் சக்தியில்லாமல் உடல் தளர்ந்த காலத்திலே பகவத் பக்தி மிக்கு திவ்யதேசங்களிலே போதுபோக்கவேண்டியதென்றும் பலர் கருதியிருப்பதுண்டு; யௌவனபருத்தில் விஷயபோகங்கள் செய்பவர் ஒரு நியதியில்லாமல் கண்டவிடங்களிலும் தட்டித்திரிவர்கள்; சரீரத்திற்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வளவும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு தடியைப் பற்றிக்கொண்டு முதுகு கூனிட்டு நடக்கும் நிலைமை நேர்ந்தவிடத்தும் நப்பாசை கழியாமையாலே பூர்வவாஸ நையேகொண்டு வேசிகளின் வீட்டு வாசலையே பற்றிக் கிடக்கும் படியாகும்; அவர்கள் இவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் அவர்களது முகத்தைப் பார்ப்பதும் முறுவலை யெதிர்பார்ப்பதுமா யிருப்பர்களேயன்றி அவ்வளவிலுங்கூட விரக்தி பிறவாது; திவ்யதேசங்களில் ஈடுபாடும் உண்டாகாது; ஆகையால் விஷயாந்தரங்களில் கைவைப்பதும் ஒருநாளும் க்ஷேமப்படுவதற்கு உறுப்பாகமாட்டாது; இப்போதே திருநறையூரைத் தொழுது நன்று என்கிறார். கிளரொளியிளமை கெடுவதன் முன்னமே இது செய்யத் தக்கதென்கை.
கொங்குண்குழலார் = (வண்டுகள் படிந்து) தேனைப் பருகப்பெற்ற கூந்தலையுடையார் என்னவுமாம். அவர்கள் பரிஹஸித்துத் தள்ளச்செய்தேயும் ‘இப்படியும் ஒரு கூந்தலழகுண்டோவுலகில்!’ என்று வருணிப்பர் காமுகர் என்பது இதில் தோன்றும்.
ஒன்றுக்கும் உதவாதபடி உடல் மெலிந்து தளர்ந்தொழிந்தாலும் நப்பாசையாலே அங்குச் சென்று அவர்களது இயற்கையழகிலே கண்வைப்பதும் ஆபரணதிகளாலுண்டான செயற்கையழகிலே கண்வைப்பதுமாயிருப்பர்களே; அப்போது அவர்கள் *பீளைசோரக் கண்ணிடுங்கிப்பித்தெழ மூத்திருமத்தாள்கள்நோவத் தம்மில் முட்டித் தள்ளிநடக்கு மிப்பருவத்திலே நீர் எங்களுடம்பையும் எங்களழகையும் நோக்குவது ஏதுக்கு?’ என்று ஏசுவர்கள்; அப்படிப்பட்ட நிலைமை நேருவதற்கு முன்னமே திருநறையூரைத் தொழுவது நன்று. செங்கோல் வலவன் தான்பணிந்தேத்தித் திகழுமூர் = திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரு விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரா வி்ண்ணகரத்தில் நந்திவருமன் போலவும் இத்திருப்பதியில் செங்கணான் கோச்சோழன் அபிமாநியாயிருப்பனென்ப. மேல் “அம்பரமும் பெருநிலனும்” என்ற திருமொழியில் ஒவ்வொரு பாசுரத்திலும் இது அருளிச்செய்யப்படுவது காண்க. நாட்டை ஆண்டுகொண்டு அஹங்காரியாய்ப் போதுபோக்க வேண்டியவனும் இத்தலத்திற் பணிந்து உய்வு பெற்றமை விளங்கச் செங்கோல் வலவன்தான் என்றார்.
வெருண்டாற்போல் பார்க்கிறபார்வைக்கு, மான்நோக்கும், பளபளவென்று மிளிர்தற்கும் புடைபரந்து நீண்டிருக்குந் தன்மைக்கும் மீனும், கூர்மையாகப் பாயுந்தன்மைக்கு வேலும் கண்ணுக்கு ஒப்பாகுமாதலால் “விலங்குங்கயலும் வேலுமொண்காவியும் வென்றகண்” எனப்பட்டது. மலங்கு என்பதும் வரால் என்பதும் வாளை என்பதும் மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்
மூன்றாமடியின் பிற்பகுதியை ‘விலங்கெரி’ என்று மெடுக்கலாம், ‘இலங்கெரி’ யென்று மெடுக்கலாம். முந்தினதில், விலங்காலே எரியூட்டினான் – ஹநுமானாகிற சாகாமிருகத்தைக் கொண்டு தீக்கொளுவித்தவன் என்றதாம். பிந்தினதில், இலங்கு – ஜ்வலிக்கின்ற என்றபடி. இதற்கு முன்பு அக்கினியானவன் இலங்கையினுட் புகுவதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தான்; சோறு வேவப்பண்ணுகை முதலிய முக்கிய காரியங்களுக்கு வேண்டுமளவு புகுந்திருந்தான்; இராமபிரானால் நன்றாக ஜ்வலித்துக்கொண்டு எங்கும் புகுந்து உண்டுகளித்தானென்க.
திருநறையூரில் வாழ்பவரெல்லாம் ஸ்ரீமத்வேதமார்க்கப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்பது மூன்றாமடி.
இரண்டாமடியின் முதலில் “கேண்மின்கள்” என்றே எங்கும் பாடம் வழங்கிவருகின்றது; ‘கேளுங்கள், என்ற பாடமு வியாக்யானத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு வகையான பொருளுமருளிச்செய்யப்பட்டுள்ளது; ‘கேளுங்கள்’ என்று முழுச்சொல்லாய் வினைமுற்றாகக்கொண்டு பொருள்பணித்தல் ஒருவகை. ‘கேள் உங்கள்’ என்று பிரித்து, (ஈளையோடு எங்குகிழவன் உங்கள் கேள் என்னாதமுன்) கோழையோடு கூட இருமித்தளர்கின்ற இக்கிழவன் உங்கள் உறவு என்று அந்தவீட்டுப் பெண்களை நோக்கி இந்த வீட்டுப்பெண்கள் சொல்லுவது, இந்த வீட்டுப்பெண்களை நோக்கி அந்த வீட்டுப்பெண்கள் சொல்லுவதாய் இப்படி ஒருவர்க்கொருவர் பரிஹஸிக்கும்படியான நிலைமை நேருவதற்கு முன்னே எனப் பொருள் பணிப்பது மற்றொருவகை. திருநறையூரில், ஸந்நிதியில் உத்ஸவகோஷங்களும் திருமாளிகையில் யஜ்ஞகோஷங்களும் மலிந்திருக்கு மென்கிறது மூன்றாமடி.
நனிசேர்நறையூர் = (எம்பெருமானுக்கு) மிகவும் பொருந்தியிருக்கின்ற திருநறையூர் என்றுமாம்.
கறையார் நெடுவேல் பகவத்பாகவதவிரோதிகளை நிரஸநம் பண்ணின ரத்தக்கறை கழுவுவதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம் திருமங்கையாழ்வாருடைய வேல்.
‘கடல் நம்முடைய படுக்கையாயிற்றே, அதற்கொரு கலக்கம் விளைக்கலாமோ?’ என்றும் நினையாமல், தன்னையடுத்தவர்கட்குக் காரியஞ்செய்வதிற் கண்வைத்துத் தனது பள்ளியான கடலைக் கலக்கியும் கடைந்து அமுதமளிதானென்ற மஹாகுணம் விளங்க ‘முந்நீர் கலங்கக் கடைந்து’ எனப்பட்டது. நல்குசோதிச்சுடராய = தேவர்கட்கு அமுதமளித்ததனால் எம்பெருமானுக்குத் திருமேனியில் புகர்விஞ்சிற்றுப்போலும்; அன்பர்கள் துயர் திருப்பெற்றால் அதுவேயிறே ஸ்வாமிக்குப் பொலிவு. நலங்கொள்வாய்மையந்தணர் = ‘ஸத்யமே சொல்லவேணும்’ என்பது சாஸ்த்ரவிதியாயினும், பிறர்க்கத் துன்பம் விளைவிக்குமதான ஸத்யத்தைச் சொல்லக் கூடாதென்பதும் நூற்கொள்கையாதலால் அப்படி தீமையாகத் தலைக்காட்டாமல் நன்மையாகவே தலைக்காட்டுமதான ஸத்யத்தையே சொல்லுமவர்களாம் திருநறையூர் அந்தணர்கள். “ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூ யாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” என்றது காண்க. இனி “நலங்கொள்வாய்மை” என்று உண்மையுரையான வேதத்தைச் சொன்னபடியாய், வேதம்வல்ல அந்தணர் வாழுமிடம் திருநறையூர் என்றுரைத்தலுமொன்று.
நல்ல குரல்படைத்த ரஸிகர்கள் ஸ்ரீபாகவதம் ஸ்ரீகிஷ்ணுபுராணம் முதலியவற்றில் அவாஹித்து அநுபவித்து அவ்வர்த்தங்களை உபந்யஸிக்கின்றனர் திருநறையூரில் – என்பது பின்னடிகளின் உள்ளுறை.
(மீனைத்தழுவி இத்யாதி) அவ்விடத்தில் நிலப்பண்பாலே மலைகள் போலே வளந்நீ திருக்குமாம் மீன்கள்; அவற்றைப் பிடிக்கிற உழவர்கள் இரண்டு கையாலுமாகத் தழுவுவர்கள்; அவை மிக்க வலியுள்ளனமையாதலால், பிடிப்பவர்களை உதறித்தள்ளிவிட்டுப் போய்விடும்; அங்ஙனம் தள்ளப்பட்டு விழுந்த உழவர்கள் மறுபடியும் அவற்றைப்பிடிக்க எழுந்திருப்பர்கள்; அதைக்கண்ட ஆமையானவை அஞ்சி வரப்பிலேநின்ற மஞ்சள் பற்றையிலே புகுந்து மறையும். இப்படிப்பட்ட வயல் வளத்தையுடையதாம் திருநறையூர்.
‘முந்துநூலீந்த’ என்றது – வேதமோதுவித்த என்றபடி. ‘முப்புரிநூலீந்த’ என்றநு உபநயநம் செய்வித்த என்றபடி. உபநயநம் செய்வித்தபிறகே வேதமோதுவித்தல் முறைமை யாதலால் ‘முப்புரிநூலும் முந்துநூலும் முன்னீந்த’ என இயைத்துக்கொள்ளுதல் பொருந்தும். எனபர் வடநூலார். கடலிற்புகுந்து முடிந்த ஸாந்தீபினி புத்திரனைப் பிழைப்பித்து மிடு்டுக்கொணர்ந்து கொடுத்த பெருமானுறையுமிடம் திருநறையூர். மரத்தின் பொதும்பிலேவாழுங் குட்டிக்காக இரைதேடும் பறவைகள் நத்தைகளை வாரிக்கொண்டு வரப்பெற்ற நீர்நிலங்களையுடையதாம் அத்திருப்பதி. வாவி-‘வாவீ’என்னும் வடசொல் விகாரம்.
அர்ஜுநனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து வெற்றிபெறுவித்தவனும் ஸைந்தவனை முடியச்செய்தவனுமான பெருமான் வாழுமிடம் திருநறையூர். அர்ஜுநனுடைய தேர்க்குதிரகைள் வெண்ணிறங்கொண்டவை யென்பது “வெள்ளைப்புரவிக்குரக்கு வெல்கொடித்தேர்மிசை முன்புநின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலாலும் விளங்கும். ‘விஜயன்’ என்பது அர்ஜுநனுடைய நாமங்களுள் ஒன்று. வியூகம் – என்னும் வடசொல் விகாரம்.
*- (தாரையூரும் இத்யாதி) ‘தார்’ என்று பூவுக்கும் பேராதலால், தாரை – புஷ்பத்தை, ஊரும் – தள்ளுகிற (அதாவது) தோற்கடிக்கிற, தளிர்களை யுடைத்தான வேலியாலே சூழப்பட்டும் நாரைகள் உலாவப்பெற்று மிருக்கிற வயல்களாலே சூழப்பட்ட. என்னும் வடசொல் ஐயீறாகத் தாரையெனத் திரிந்ததெனக்கொண்டால், தேனொழுகுகின்ற வேலி என்றதாம். வேலியின் சிறப்பே யிதுவானால் உள்ளுள்ள சிறப்பு வாசாமகோசர மென்கை.
நாமம் – ப்ரஸித்திப் பொருளதான வடசொல் அவ்யயம். காமக்கதிர் ‘காமம்’ என்பது மிகுதிப்பொருளதான வடமொழி அவ்யயம். விரும்பத்தகுந்த ஒளியையுடைய வேல் என்னவுமாம். சேமம் – க்ஷேமம். “மாயன் தாள் நின்ற நாமத்திரள் மாமாளிகை” என்று பாடங்கொண்டு எம்பெருமானுடைய ஸ்ரீபாதசின்னம் பொலிகின்ற திருமண்காப்பு விளங்குகின்ற திருமாளிகையென்பாருமுளர். திருமாளிகைக் கதவுகளிலே இவ்விலச்சினைகாண்க.
(செம்பியன் கோச செங்கணான் சேர்ந்த கோயில்) திருவல்லிக்கேணியின் தொண்டையர் கோன், போலவும், பரமேச்சுர விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும் இத்திருப்பதியில் செம்பியன்கோச் செங்கணான் னென்னுமோரரசன் தொண்டுபூண்டு உய்ந்து போனானென்றுணர்க. இத்திருப்பதிகத்தின் வியாக்யான அவதாரிகையில் பெரியவாச்சான் பிள்ளை – “துர்மானியுமாய் ஸ்நேஹமின்றிக்கே யிருக்கிற ராஜாதான் ஸ்ரீமார்க்கண்டேய பகவானைப்போலே தேவதாந்தர பஜநம்பண்ணி அங்குத் தன்னுடைய அபிமதம் தலைக்கட்டிக்கொள்ளப் பெறாமையாலே இங்கே பக்நாபிமாநனாய்த் திருவடிகளிலே விழுந்து ஆச்ரயித்து ஐஹிகாமுஷ்மிகங்களிரண்டையும் பெற்றப்போனான்” என்றும், “நம்பி ஒரு வாள்கொடுத்தருள அத்தைக்கொண்டு பூமியையடையத் தன காலின்கீழே இட்டுக்கொண்டானென்றொரு பிரஸித்தியுண்டாய்த்து” என்று மருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் அறியத்தக்கன.
“குலவரையின் மீதோடியண்டத்தப்பால் எழுந்தினிது விளையாடும்” என்றது பிரளயப் பெருவெள்ளம் நீங்குமளவும் ஓடத்தை வஹித்துக்கொண்டு விளையாடினமையைச் சொன்னவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானது திருவடிகளை விடாது பணிந்திருக்கவேணுமென்னும் விருப்புடையீர்! திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள் – என்கிறார். “உழுஞ்செறுவின் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ளச் செழும்பொன்னி வளங்கொடுக்கும்” என்ற அடைமொழி திருநறையூரில் அந்வயிக்கவுமாம், சோழனிடத்து அந்வயிக்கவுமாம். பொன்னி பெருகும்படியான நாட்டுக்குத் தலைவன் என்றவாறு. காவிரியாறு பெருகும்பொது வயல்களிலே ரத்னங்களைக் கொணர்ந்து தள்ளுவதும் சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலானவற்றை உலகங்கொள்ளுமாறு அடித்துக்கொண்டு வருவதும் இயல்பு.
எம்பெருமான் ஜகத்ஸ்வரூபியாயிருக்கும் நிலைமையை உருவகத்தாலே அநுபவிக்கிறார் முன்னடிகளில். விபுவான எம்பெருமானுக்குக் கடல் நீரானது அரையிலுடுக்கும் ஆடையாகின்றது; பூமிப்பரப்பெல்லாம் திருவடியாகின்றது; வாயுராசியெல்லாம் திருமேனியாகின்றது; திசைகளெட்டும் திருத்தோள்களாகின்றன; அண்டகடாகமானது திருவபிஷேகமாகின்றது; ஆக இவ்வகைகளாலே ஜகத்ரூபியாயிருக்கின்ற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் கிட்டவேணுமென் றிருப்பீராகில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். அத்திருப்பதி செங்கணான் கோச்சோழன் சேரப்பெற்றதாம்; அவ்வரசன் எப்படிப்பட்டவனென்னில்; மஹாவீரன்; [கவ்வைமாகளிறுந்தி இத்யாதி] ‘விண்ணியேற்ற என்ற பாடம் பெரும்பான்மையாக வழங்கிவரினும் ‘வெண்ணி’ என்றபாடம் மாறுபட்டதென்ப. ‘இது கோயில்வெண்ணி(கோயிலுண்ணி)என வழங்கும் சோணாட்டூர்’ என்பர். படையெடுத்து வந்த மாற்றரசர் போர் செய்த இடம் இது; மேற்பாட்டிலும் இங்ஙனமே. பானைகளைப் படை திரட்டிக் கொண்டு வெண்ணியில் வந்தெதிர்த்த கழல்மன்னர்களைப் பிணமாக்கின சோழன் சேர்ந்த திருநறையூர் என்கை. ‘முடிமேல் காகமேற’ என்றது பிணமாக்கினபடியைச் சொன்னவாறு.பிணங்களைக் காகமேறியுண்ணுமே.
நரஸிம்ஹாவதாரத்தை யநுபவிக்கிறார் முன்னடிகளில். சிங்கத்திற்குக் கண்ணில் பசுமை ஜாதிஸ்வபாவமாதலால் ‘பைங்கண்’ எனப்பட்டது. பார்த்த பார்வையிலேயே இரணியன் குடல் குழம்பிப் போம்படி பார்த்து, அதற்குமேல் நகங்களையுங்கொண்டு அவனுடலைப் பிளந்தொழித்த பெருமானது திருவடிகளைப் பெறவேண்டியிருப்பீராகில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். ‘பருவரைத்தோள்’ என்ற பாடத்திற்கு பருத்த மலை போன்ற தோள்களையுடையனென்றுரைக்க.
தன்னுருவம் தன்னாலே பயந்த தானாய் எம்பெருமான் தவிர மற்றையோருடைய ஸ்வரூபமெல்லாம் எம்பெருமானுயை இச்சைக்கு உட்பட்டதாயிருப்பதுபோல, எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்கள் வேறொருவருடைய இச்சைக்கு உட்பட்டதாயிருக்குமோ வென்னில், இரா; தன்னுடைய ஸ்வரூபஸ்திதி முதலியவை தானிட்ட வழக்காம்படியிருக்கும் அவனென்னவுமாம்; அகர்மவச்யன் என்றவாறு. “தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்” என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும், ‘வானாய்‘ என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும் சொல்லிற்றாம். தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தன்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஸ்வரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக்கொண்டவன்; தானான நிலைமையிலே நின்று ஸம்ரக்ஷித்தும் ப்ரஹ்மருத்ரர்களுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களை நடத்தியும் ஆகவிப்படி மூன்று வடிவுகளை யுடையவனென்றபடி.
சிவபிரானுக்கு எழுபது ஆலயங்கள் கட்டிவைத்து முதலில் சிவபக்தனாயிருந்து பிறகு பகவத்பக்தனாகப்பெற்ற சோழன் சேர்ந்த கோயில் இது. (இச்சோழன் முன் பிறவியிற் சிலந்தியாய்ப்பிறந்து திருவானைக்காவிலுள்ள சிவலிங்கத்துக்குத் தன்னூலால் இழைத்துவந்த மேல்விதானத் திருப்பணியை அழித்து வந்த யானை நுழையாவண்ணம் சிவபிரானுக்கு மாடக்கோயில் பலகட்டி வழிபட்டவனென்பது தேவார முதலியவற்றாலும் அறியப்படுமென்ப. சோழமண்டலத்தின் கூறுகளாக அமைந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிவாலயம் இச்செங்கணானாற் கட்டப்பட்டதென்பர் சேக்கிழார்; ‘செங்கணான், அந்தமில்சீர்ச் சோணாட்டி லகனாடு தொறுமணியார், சந்திரசேகரனமருந் தானங்கள் பலசமைத்தான்” என்பது பெரியபுராணம். இங்ஙனம் சிவதொண்டினைச் சிறப்பப்புரிந்த இச்சோழன் முடிவில் திருநறையூர்த் திருமாலுக்கு அடியனாய்ச் சிறப்புற்றானென்க. “வேதத்தில் ஸ்ரீபுருஷஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயையுடையராய் எட்டுத்துாள்களையு முடையராயிருக்கிற தேவர்க்கு, தர்ஸநீயமான மாடங்களெழுபதும் சடைத்துப்பின்னை யும் தன்னுடைய அபிமதம் கிடையாமையாலே அவ்வபிமத ஸித்த்யர்த்தமாக அவன் வந்து ஆச்ரயிக்கிற தேசம்” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான வாக்யம்.
(அடியேனை அருளும் பணியுங் கொண்டான்) ஆட்கொள்ளுகையாவதென்? பணிகொள்ளுகையாவதென்? என்னில்; ‘இவன் நமக்கு உரியவன்’ என்னும்படி சேஷத்வத்திலே நிறுத்துகை ஆட்கொள்ளுகையாம்; சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகை பணிகொள்ளுகையாம்; அடியேனுக்கு சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டையும் தந்தருளினவன் என்றதாயிற்று. ‘நான் எனக்கே உரியவன்; பிறர்காலில் தலையை மடுக்கமாட்டேன்’ என்று மார்பு நெறித்திருந்த நிலைமையைப் போக்கியும் இளையபெருமாளைப் போலே எல்லாவகையான கைங்கரியங்களையும் செய்வேனாம்படிதிருத்தியும் வாழ்வித்தவனென்கை. இப்படிப்பட்ட சேஷத்வ பாரதந்திரியங்களுக்கு இசையாதவர்களிடத்திலே நடத்தும் சிக்ஷையைச் சொல்லுகிறது விண்டநிசாசரரை என்று தொடங்கி. விண்ட பொருந்திவாராமல் எதிரம்புகோத்த என்றபடி. அப்படிப்பட்டநிசாசரரை (அரக்கரை) தோளுந்தலையும் துணிவெய்த்தச்சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான். விசித்ரா தேஹஸம்பத்திரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ரதா ப்ரஹ்மந்! ஹஸ்தபாதாதிஸம்யுதா” என்கிறபடியே நம்மை வழிபடுவதற்கென்றே கொடுத்தகரசரணாதி அவயங்கள் இவர்கட்கு அக்காரியத்தில் உபயோகப்படுகின்றிலவாகில் இவர்கட்கு இவை எதுக்கு? என்று தோள் தலை முதலிய உறுப்புகளை யொழித்தானாயிற்று.
ஈற்றடியின முற்பகுதி “நனிசேர் வயலுள் முத்தலைக்கும்” என்றும் ஓதப்பட்டுவந்ததென்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தினால் வளங்குகின்றது. அப்பாடமே முதன்மையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது
யசோதைப்பிராட்டி தடாக்களிலே சேமித்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியாலே கைப்பற்றி அமுதசெய்த குற்றத்திற்காகத் தாம்பினால் கட்டுண்டு விக்கியழுத பரமஸுலபன் திருநறையூர்நம்பி காண்மின். இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு ஐதிஹ்ய மருளிச் செய்யப்படுகிறது; அதாவது – “வங்கிப்புரத்து நம்பி பலகாலும் ‘திருவாராதன மருளிச்செய்யவேணும்’ என்று போருமாய் அவஸரஹாநியாலே அருளிச்செய்யாதே போந்தாராய், திருமலையிலே யெழுந்தருளியிருக்கச்செய்தே, ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹநுமத்தாஸர்க்கும் அதுதன்னை யருளிச்செய்தாராய்ச் சமைகிற வளவிலே நம்பி தோற்ற, திருவுள்ளம் துணுக்கென்றஞ்சி அப்போதருளிச்செய்த வார்த்தை:– ‘என்றுமுள்ள இஸ்ஸம்ஸயம் தீரப்பெற்றோமாகிறது; நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடியுண்டு அழுது நின்றானென்றால் இது கூடுமோ என்றிருந்தோம்; இன்று இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹ்ருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் என்று”. என்பதாம்.
“பள்ளிகமலத்திடைப்பட்ட பகுவாயலவன் முகம் நோக்கி நள்ளியூடும் வயல்சூழ்ந்த” என்ற பின்னடிகட்குப் பட்டர் அருளிச்செய்யும் அர்த்த விசேஷம் குறிக்கொள்ளத்தக்கது. தாமரைப்பூவில் படுத்துக்கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பெண் நண்டு பார்த்து ஊடல் செய்யப்பெற்ற வயல் சூழ்ந்த நறையூர் என்று மூலத்திலுள்ளது. இதன் ஆழ்பொருளைப் பட்டர் அழகாக வுரைத்தருள்வராம் : எங்ஙனேயென்னில்; - ஒரு ஆம்பல் மலரிலே நண்டு தம்பதிகள் இனிதுவாழ்கையில் கர்ப்பிணியான பேடைக்கு இனியவஸ்துக்களைக் கொணர்ந்து தரவேணுமென்று அலவன (ஆண்நண்டு)க்கு ஆசையுண்டாயிற்று; பிறகு தாமரைப்பூவிலிருந்து நல்ல மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுப்போமென்று விரும்பி மெல்லமெல்ல நகர்ந்து தாமரைப்பூவிலே சென்று சேர்ந்தது; அவ்வளவிலே ஸூர்யன் அஸ்தமிக்கவே அத்தாமரைமலர் மூடிக்கொள்ள அதனுள்ளே அகப்பட்டது அது; தாமரையை மலர்த்திக்கொண்டு எப்படியாவது வெளிக்கிளம்பிவிட வேணுமென்று எவ்வளவோ முயற்சிகள் செய்துபர்த்த வளவிலும் ஸூர்யோதயமானாலல்லது தாமரை மலராதாயிற்று;
ஸ்ரீ வசநபூஷணத்தில் – “பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக. அர்ஜுநனக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.” என்றருளிச்செய்துள்ள ஸூத்ரங்கள் இங்கே அறியத்தக்கன. (த்ரௌபதியைத் துரியோதநாதிகள் மஹாஸபையில் துகிலுரிந்து அவமானப்டுத்தியதைப் பாண்டவர்கள் கண்டிருக்கச் செய்தேயும் சூதிலே தோற்றமையை நினைத்துப் பொறுத்திருந்தாலும் “சங்கசக்ர கதாபாணே! த்வாரகாநிலயாச்யுத! – கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதாம்” என்று அவள் கண்ணபிரானைச் சரணமடைந்த பின்பு பரிபவிக்கிறவளவில் ‘எம்பெருமானடியார்களைப் பிறர் பரிபவப் படுத்தக்ண்டால் சக்தியுள்ளவனாகில விலக்கவேணும்; சக்தியற்றவனாகில் வருத்தத்துடனே கண்மறையப் போகவேணும்’ எனகிற விசேஷசாஸ்த்ரமர்யாதையை நோக்கியாவது, (அல்லது) தங்களிடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்குள்ள ஸ்நேஹபக்ஷபாதங்களை நினைத்து அவனைச் சரணமடைந்தவள் பரிபவப்படுத்தக்கண்டால் சக்தியுள்ளவனாகில் விலக்கவேணும்;
அஸத்துக்களைத் தண்டித்து ஸத்துக்களைக் கைக்கொள்ளுமியல்வினன் என்பது பிரஸித்தமாகும்படி லங்காதிபதியான ராவணனைக் கொன்றொழித்தது ஸ்ரீவிவீஷணாழ்வானைப் பரிக்ரஹித்தருளின பெருமானைத் திருநறையூரில் காணப்பெற்றே னென்கிறார். செல்வவிபீடணற்கு = இலங்கைச் செல்வம் முழுவதையும் உதறிவிட்டு வந்து சேர்ந்த விபீஷணனைச் செல்வவிபீடண னென்றது அழியாச்செல்வமாகிய பகவத்பக்தியுடைமைபற்றியென்க. வால்மீகி முனிவனும், இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற இவ்விபீஷணாழ்வானைப்பற்றிப் பேசும்போது அந்தரிக்ஷகத : ஸ்ரீமாந்” என்றார்; அப்போது விபீஷணனிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைணவ ஸ்ரீயேயாம். இளையபெருமாள் விஷயத்திலும் கஜேந்திராழ்வான் விஷயத்திலும் இங்ஙனமே சொல்லப்பட்டதுண்டு; அயோத்திச் செல்வமனைத்தையும் துறந்து இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் “லக்ஷ்மணோ வக்ஷ்மிஸம்பந்ந :” எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த வக்ஷ்மியாவது கைங்கரியருசியாகிற வக்ஷிமியேயாம்.
இத்திருமொழியில் பாட்டுத்தோறும் நெஞ்சை விளித்துத் திருநறையூர் நம்பியின் திருவடிகளை வணங்குமாறு உபதேசிக்கிறார். பெடை அடர்த்த மடவன்னம் = பேடைகள் பிரணயகலஹம் செய்யப்பெற்ற மடவன்னம் என்றுமுரைக்கலாம். அடர்த்தல் – நெருங்கியிருத்தலும் சண்டைசெய்தலும். முடையடர்த்த = துர்நாற்றமுடைய என்றபடி. சிரம் – என்னும் வடசொல்லின் விகாரம். பலி- ; பிச்சை.
தீயசெயல்களினால் பழிமிகுந்த இராவணனுடைய பத்துத்தலைகளும் பாறிப்போம்படி அம்புசெலுத்தின பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருநறையூர்; இவ்வூர்த் திருவீதிகளில் பொன்னியாறு பெருகும் போது கொழிக்கப்படும் சங்குகள் வழியெங்கும் முததுக்களைப் பிரஸவித்துச் செல்வம் நிறைந்திருக்கிறது; இப்படிப்பட்ட திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய அடியிணைகளை யடைவதே நெஞ்சுக்குக்காரியமாகவேணும். கனசங்கம் வடமொழித் தொடர்;
உரை:1
வளைகொண்ட வண்ணத்தன் பன்தோன்றல் பலராமனுடைய திருமேனிநிறம் வெளுப்பாதலால் ‘வளைகொண்ட வண்ணத்தன்’ என்று பலராமனைச்சொன்னபடி. “முன்னலோர் வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோடப், பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலுங் காண்க.
உரை:2
பலாச்சுளைகளிலிருந்து தேன்பாயும், வாழை கனிகள் நெருங்கிவிளங்கும் திருநறையூர் சோலையில் இருப்பவன்; மூவுலகங்களையும் உண்ட திருமால், சங்கை ஒத்த வெண்ணிறமுடைய பலராமனுக்குத் தம்பியாக தோன்றி, கடைந்த தயிரையும் வெண்ணையையும் உண்டான்.இவன் பாதங்களை நெஞ்சே நீ பற்றுக.
திருமாளிகைகளில் த்வஜபடங்கள் கட்டியிருப்பதாக வருணித்தல் செல்வமிகுதியை விளக்குமென்க. குரைகழல் இரட்டுற மொழிதலாகக்கொண்டு குரைகழலையுடைய கழல்என்க கழல் – காலிலணியும் ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர். குரைகழல் – வினைத்தொகைப் யுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
அகிற்கட்டைகள் சந்தனக்கட்டைகள் பொன்கள் முத்துக்கள் முதலான சிறந்தபொருள்களை மிகுதியாகக் கொழித்துக்கொண்டு பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில், பண்டு பாரதப்போரில் (அர்ஜுந புத்ரனான) அபிமந்யுவைக்கொன்ற ஜயத்ரதனை அர்ஜுநனால் முடிப்பதற்கு உபாயமாக ஆழியால் இரவியை மறைத்தவனும், மற்றொருகால் பிரளயப் பெருங்கடல் கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான பெருமான் எழுந்தருளியுள்ளான்; அவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே. “பகற்கரந்த சுடராழிப் படையான்” என்றவிடத்து வியாக்கியான வாக்கியம் வருமாறு :– “நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜ : பதார்த்தத்தை மறைத்தானாய்த்து. ஆதித்யனுடைய தேஜஸ்ஸு கண்ணாலே முகக்கலாம்; திருவாழியாழ்வானுடைய தேஜஸ்ஸு கண்கொண்டு முகக்கவொண்ணாதபடி யிருக்கையாலே இருண்டுகாட்டிற்றாய்த்து.” என்று.
சிங்கங்கள் யானைகளோடே பொருது அவற்றின் கும்பஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்தமுத்துக்களையும் மலைகளிலுண்டான பொன்களையும் சிங்கநகங்களையும் யானைக்கொம்புகளையும் நீர்வாக்காலே கொணர்ந்துதள்ளிப் பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில் *அகலகில்லேனிறையுமென் றலர்மேல் மங்கையுறைமார்பன் வாழ்கின்றான்; அன்னவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே.
கரும்புவிளையும் நிலதிலே கருப்பங்கட்டைகளை வெட்டிவிட்டுச் செந்நெலை நடுவர்கள்; செந்நெலுக்குக் களையாக இடையிலே தாமரை விளையும்; முன்பு வெட்டிப் போட்ட கருப்பங்கட்டைகளும் பழைய வாஸநையாலே எழும்; செந்நெற்பயிர் ஒங்கவேணுமென்று க்ருஷிபண்ணினால் அதற்குன்னே கரும்புகள் ஓங்கிப் பயன் விளைவிக்கும்படியான நிலவளம் பொருந்திய திருநறையூரில் எழுந்தருளிக்காளமேகத் திருவுருவனாய் நித்யஸூரிநாதனாய்த் துழாய்முடியனான எம்பெருமானுடைய பாதபல்லவங்களைப் பணி நெஞ்சே!
திருநறையூர்ச் சோலைகளில் இளைய பாக்குமரங்கள் நிரம்பியுள்ளன; அவற்றின் தலைகளிலே நன்றாகப் பழுத்த காய்களும் பழுக்கப்போகிற காய்களும் பாளை முத்துக்களும் குலைகுலையாகக் குவிந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட சோலைவளம் வாய்ந்த திரு நறையூரில் ஒரு மலைபோன்று விளங்காநின்ற மணிமாடக்கோயிலில் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்றருளு மெம்பெருமானுடைய நீள்கழலே யடைநெஞ்சே!. மலையார்ந்த கொலஞ்சேர் மணிமாடம் = “இரும்பொழில்சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலுமாடம்” என்றார் பெரிய திருமடலிலும்.
யஜ்ஞயாகங்களை யநுஷ்டிக்கும் வைதிக ப்ராஹ்மணர்கள் வாழ்கிற விடம் திருநறையூர் என்பது முன்னடிகளின் கருத்து; “மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகை போய்த் திடவிசும்பிலமரர் நாட்டை மறைக்குந்தண் திருப்புலியூர்” (8-9-8) என்ற திருவாய்மொழியை அடியொற்றி யருளிச்செய்கிறபடி. ஹோமரக்நிகளிற் கிளர்ந்த தூமம் ஆகாசமெங்கும் பரவி மறைந்திருக்கப்பெற்ற. திருநறையூரில் பிரமன் சிவன் முதலான தெய்வங்கள் பணிந்து போற்ற ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கு மெம்பிரானுடைய இணையடியே அடை நெஞ்சே!
இப்பாட்டில் அடிதோறும் களகமென்னுஞ்சொல் திரிபாக அமைக்கப்பட்டுள்ளது. திண்களகமதிள் = இங்குக் களகமாவது சுண்ணாம்புச்சாந்து; ஞானசம்பந்தர் பாடிய தேவாரம் முதல் திருமுறை, சீர்காழிப்பதிகத்தில் – “களகப்புரிசை கவினார்சாருங் கலக்காழி” என்றிவிடத்து இப்பொருளில் பிரயோகங்காண்க. வண்களக நிலவெறிக்கும் = இங்குக் களகமாவது ஹம்ஸபக்ஷி; ‘கலஹம்ஸ என்னும் வடசொல்லின் மரூஉ; “வயன் களகத் தேரேறி வேதாவும் வேண்டுவழிச் செல்ல” (பழம் பாட்டு) என்றவிடத்து இப்பொருளிற் பிரயோகங்காண்க. இதற்கு வேறுவகையாகவும் உரைக்கலாம்; - களகம் - நெற்கதிர்; கம் – நீரை, களம் - இடமாகக்கொண்டது; (மருத நிலம்.) அதன் முதன்மைப் பயிர் நெல் ஆகையால், களகம் – நெற்பயிர் என்னும் பொருள் பெறலாம். இப்பொருளும் வியாக்கியானத்திற் கொள்ளப்பட்டதே. என்ற வடசொல் திரிபு என்னலாம்.
மிக்க தாளாளன் = காளியன் தலைமேல் திருவடிகளையிட்ட நர்த்தன மாடியவனென்றவாறு. “பொய்கையிலே போய்ப்புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தையுடையவன்” என்றும் வியாக்யானமிருப்பதால் இப்பொருளுக்குச் சேர “தாடாளன்” என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.
தறுகண்வேழம் = “ஜாதிப்ரயுக்தமான வட்டணித்த கண்ணையுடைத்தாயிருக்கிற குவலயாபீடம்” என்பது வியாக்யான வாக்கியம். ‘தறுகண்மை’ என்று அஞ்சாமைக்குப் பேராதலால் இங்குத் தறுகண் என்று முழுச்சொல்லாய் ‘ஒருவர்க்கும் அஞ்சாதிருந்த யானை’ என்று பொருளாகவுமாம். இரண்டாமடியில் “அமுதங்கொண்ட பெருமான்” என்ற விடத்திற்கு வியாக்யான மருளாநின்ற பெரியவாச்சான் பிள்ளை “கடலைக்கடைந்து அம்ருதத்தை வாங்கி அது புஜித்தார்க்கு வரக்கடவ ப்ரீதி தனக்குண்டாம்படி யிருந்தான்” என்று அருளிச் செய்திருப்பது கொண்டு சிலர் “அமுதங் கொண்டுகந்த பெருமான்” என்று பாடமோதுவர்; அது மறுக்கத்தக்கதே; யாப்பிலக்கணத்திற்கு ஒவ்வாது. பாடமுமன்று. மேல் பதினோராம் பத்தில் (11-7-1.) “நீணாகஞ்சுற்றி நெடுவரைநட்டு ஆழ்கடலைப், பேணான் கடைந்து அமுதங்கொண்டுகந்த பெம்மானை” என்றுள்ள பாடம் இவ்விடத்திற்கு வேண்டா. ஆகில், பெரியவாச்சான்பிள்ளையின் வியாக்கியான வாக்கியம் பொருந்துமாறென்? எனில்; பொருந்தாமை யொன்றுமில்லை. ‘உகந்த’ என்பதற்குப்பொருளாக அருளிச்செய்தாரல்லர்; ‘அமுதம் தந்த’ என்னவேண்டியிருக்க, அங்ஙனருளிச் செய்யாமல் “அமுதங்கெண்ட” என்று தன்பேறாக ஆழ்வார் அருளிச் செய்திருப்பதற்குக் கருத்துரைத்தாரத்தனை. அவ்விடத்து அரும்பதவுரையாலும் இது விளங்கும்.
பாடகம் = பெரிய காஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடும் அகம்’ என்று பிரிக்க. பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க. கண்ணபிரான் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற் பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸநத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப்பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம் பாடு – பெருமை. அகம் – ஸந்நிதி. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதே யிட, அதற்குப் பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்” என்ற (பெரியதிருமொழிப்) பாசுரத்தில் அநுஸந்தி்க்கப்பட்ட திருமேனி வளர்த்தியோடே ஸேவைஸாதிக்குமாறு காண்க.
அவாந்தரபேதங்களோடு கூடின வாநரஸமூஹங்களை ஸேனையாக் கொண்டு புகுந்து ராவணாதி ராக்ஷஸருடைய செருக்கையடக்கி வெற்றிபெற்ற பெருமானுடைய திருநாமம் தேனும் பாலும் அமுதும் போலே பரமபோக்கியமானது; அதனை நான் அநுஸந்தித்து ஆநந்திப்பதுபோல என்னோடு ஸம்பந்தமுடைய நீங்களும் அனுஸந்தித்து ஆநந்தியுங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியை நோக்கி யருளிச்செய்தாராயிற்று. “(நானும் சொன்னேன்;) இதர விஷயங்களினுடைய பேரையே சொல்லிப் போந்த நானுமன்றோ சொன்னேன்; இனியது கண்டால் எல்லார்க்குங் கொள்ளத் தட்டில்லையிறே. என்னோடு ஸம்பந்தமுடையா ரெல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள்..........ஆழ்வார்கள் கோஷ்டியில் இதொழிய வேறொரு திருநாமமுண்டாக நினைத்திருப்பாரில்லை.” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்க.
பூமிக்கு ஆணியடித்தாற்போலே பேராதே நிற்கிற குலபர்வதங்கள், கரையை அதிக்ரமியாமல் கிடந்தவிடத்திலே கிடக்கிற கடல்கள், திசைகள், பரப்புடைத்தான பூமி ஆக இப்படிப்பட்ட பதார்த்தங்கள் ஒன்றும் ஒருகாலும் குறையவொண்ணாதென்று தன்ஸங்கல்பத்தாலே இவற்றை மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டிருக்கும் பெருமைவாய்ந்தவனம், கோவர்த்தனமென்னுங் கொற்றைக்குடை யேந்தினவனுமான ஸர்வேச்வரனுடைய திருநாமமாகிய திருவஷ்டாக்ஷரமு நமக்கு நன்று; தொண்டர்களே! அத்திருநாமத்தையே நான் அது ஸந்தியாநின்றேன். (நீங்களும் அதனையே சொல்லுங்கோ ளென்பது கீழ்ப்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்ளவுரியது
“தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையுமிறே வேண்டுவது ரக்ஷிக்கைக்கு; ஸ்வாபாவிக ஸம்பந்தத்தில் கண்ணழிவில்லையே” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி இங்கு உணரத்தக்கது. அல் – இரவு. ‘சிரமம் – ’ என்னும் வடசொல்விகாரம்.
கிளர்ந்த திரையை யுடைத்தாயிருக்கிற கடலை ஆடையாக வுடையளான பூமிப்பிராட்டி, பெரியபிராட்டியார், பிரமன், சிவன், இந்திரன், மற்றுமுள்ள தேவர்கள் இவர்கட்கெல்லாம் நாதன் என்பதே நாராயண நாமத்தின் அர்த்தமென்பது இப்பாட்டால் வெளியிடப்பட்டவாறு. “துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும்நாமம்” என்று முதல் திருமொழி யிலருளிக்செய்ததை ஸ்மரிப்பியா நின்று கொண்டு ‘நங்கள் வினைகள் தவிரவுரைமின் நமோ நாராயணமே’ என்றார்.
திருநறையூர் ஸந்நிதியருகிலுள்ள திவ்யபுஷ்கரிணிக்கு மணிமுத்தாறென்று திருநாமமென்ப. திருக்கோட்டியூரருகிற் பெருகும் மணிமுத்தாறு வேறு. “காவித்தடங்கண் மடவார் கேள்வன்” என்றது முன்புற்ற நிலைமையைக் கணிசித்தா இவ்விடத்திலே வியாக்கியானவாக்யம காண்மின்; இப்போது எனக்குப் பிறந்த செவ்வியம் கண்டிகோளே; இப்போது மநோவாக்காயங்கள் மூன்றுக்கும் இதுவே விஷயமானரளி கண்டிகோளே.”
திருநறையூர்ப் பெருமானே! உன்னை இடைவிடாது அநுபவிப்பதற்கு அடைவூறான ஸம்ஸார ஸம்பந்தத்தைக் கழித்தருளாய் என்கிறார். கன்றுக்குட்டியானது தனது தாய்ப்பசு பால் சுரவாவிடில் அதனையே நினைத்துக் கதறுமாபோலே பேறு பெறாத அடியேன் ஓயாது உன்னையே சொல்லிக் கதறுகின்றேன்; இன்னமும் எத்தனை காலம் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து அநர்த்தப் படுவேன்? பட்டதெல்லாம் போதாதோ? இனி எனக்குப்பிறவி நேராதபடி கடாக்ஷித்தருளாய் என்றாராயிற்று.
கீழ்ப்பாட்டில் “மறவாதடியே னுன்னையே அழைக்கின்றேன்” என்றதும் மிகையன்றோ; பிரளய காலத்தில் உலகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்துக் காத்தருளினாயே, அப்போது ஆரேனும் கூப்பிட்டோ காத்தருளிற்று? பிரஜைகளின் நோயையறிந்து பரிஹரிக்கும் மாதாவைப்போலே நீயே முற்பட்டன்றோ காத்தது. அப்படி உன்பேறாகக் காத்தருள வேண்டியிருந்தும், நானும் உன்னை நோக்கிக் கூப்பாடு போடுவதைக் கண்டாகிலும் இரங்கியருளலாகாதோ? என்கிறார். துற்று – கபளம். இத்தனை பிரபஞ்சங்களையும் ஒரே கவளமாக உட்கொண்ட னென்கை. “அண்டமெலா முண்டையென்ப ரறியாதார் ஆங்கவை நீ, உண்டருளுங் காலத்தில் ஒரு துற்றுக்கு ஆற்றாவால்” என்றார் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில். உண்ட உலகமெல்லாம் ஒரு கவளத்துக்கும் போதவில்லையாம். தொல்புகழோனே! = இப்படியே பலகாலும் ஆச்ரித ரக்ஷணம் பண்ணிப் பண்ணிப் படைத்த புகழ் எல்லையற்ற தென்கை. அற்றேன் – வேறொருவர்க்கும் உரியேனாகாதபடி உனக்கே அற்றுத் தீர்ந்தவன் என்றபடி.
- ‘விரோதிகளை நிரதஸிப்பதையே விரதமாகக் கொண்டவன் நீ’ என்றுணர்த்தும் திருநாமங்களை நான் வாயாரச் சொல்லவிரும்பிப் ‘புள்வாய் பிளந்தபுனிதா!’ என்றழைத்தேன்; அவ்வளவிலே நீ என்னுள்ளத்தே வந்து புகுந்து ஸ்தாவரப்ரதிஷ்டையாக நிலைத்து ஸகல தாபங்களையும் ஆற்றிக் குளிர்ச்சியை யுண்டாக்கினாய் என்கிறார் முன்னடிகளில். புனிதனென்றது பரிசுத்தனென்றபடி. விரோதிகளைக் களைந்தொழிக்க வேண்டில் அதற்கு வேறு யாரேனையும் ஏவிவிடாமல் தானே கைதொட்டுக் களைந்தமையாகிற பரிசுத்தியை நினைக்கிறது. (கள்வா!.) பிறர் அளியவொண்ணாதபடி காரியம் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டுவாரைப் போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போருமவனாகையாலே கள்வனெனப்படுகிறான். கச்சிமாநகரிலுள்ள பல திவ்யதேசங்களுள் திருக்கள்வனூர் என்பது ஒரு திவ்யதேசம்; அவ்விடத்தெம்பெருமானது திருநாமம் கள்வன்; அவனை விளிக்கிறாராகவுமாம்; “ உலகமேத்துங் காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!” என்பர். திருநெடுந்தாண்டகத்திலும். ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் பேசும் பாசுரங்காண்மின் :– “பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர், புள்வாய் பிறந்த புயலே! உனைக் கச்சிக், கள்வாவென்றோதுவதென்கண்டு.”
ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டியுந் தானுமாகக் கானக முலாவினபடிமையப் பேசுகிறார் முன்னடிகளில். வில்போல் வளைந்த நெற்றியையும் வேல்போற் கூரிய கண்களையும் உடையளாய் உனக்குங் கூட ஆகர்ஷகமான ஸௌகுமார்யத்தை யுடையளான ஸீதா பிராட்டியும், அவள் தானும் துணுக்குத் துணுக்கென்னும்படியான ஸௌகுமார்யத்தையுடைய நீயும் துஷ்ட ஜந்துக்கள் ஸஞ்சார யோக்யமல்லாத காட்டிலே, ஒரு யானை பிடியோடே கூடக் களித்துலாவுமாபோலே உலாவினவனே! என்கை. கீழ்ப்பாட்டில் வள்ளால்! என்ற ஸம்போதனத்தை விவரிக்கிறதுபோலும் இது : நித்யஸூரி ஸேவ்யமான திருமேனியை எல்லாப் பிராணிகளும் கண்டு அநுபவிக்குமாறு ஸர்வஸ்வதாநம் பண்ணினவனே! என்றவாறு. நல்லாய்! = ‘நல்லான்’ என்பதன் ஈறு திரிந்த விளி; ஆச்ரித வத்ஸலனே! என்கை (நர நாரணனே!.) முன்னொருகாலத்தில் குருசிஷ்யக்ரமத்தை உலகத்தில் அனைவர்க்கும விளக்குதற்பொருட்டு ஸ்ரீபதரிகாச்ரமத்தில் நரனென்னும் சிஷ்யனும் நாராயண னென்னும் ஆசாரியனுமாகத் திருமால் தானே திருவவதரித்துத் திருமந்திரத்தை வெளியிட்டருளினமை உணர்க. “நர நாரணனாயுலகத்தறநூல் சிங்காமை விரித்தவ னெம்பெருமான்” என்பர் மேல் பத்தாம்பத்திலும். “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வர கைங்கர்யத்தையு மிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, சர்வேச்வரன் தன்க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான். சிஷ்யனாய் நின்றது சிஷ்யனிருக்கு மிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக.” என்ற முழுக்ஷுப்படி திவ்யஸூக்தியுங் காண்க.
உன்னுடைய திருவருளைத் தவிர்த்து வேறொன்றும் எனக்குப் புகலாவதில்லை; எனக்கு வைத்தமாநிதியும் நீயே; திருநீர்மலை முதலான திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பவனும் நீயே; *விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை, சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட்கச்சியூரகமே பேரகமேயென்றிப்படி திவ்ய தேசங்களே யாத்திரையாகப்போவது போக்கித் திரியும் என்னோடொத்த பத்தர்கட்குக் கதியாயிருக்கும் பெருமானே! உன்னைக் கண்டுகொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேனென்கிறார். கதி – என்னும் வடசொல் விகாரம். நிதி – என்னும் வடசொல் விகாரம் திருநறையூர் நம்பிபக்கல் ஈடுபட்டுப் பேசுகிறவர் திருக்கோட்டியூர் திருமூழிக்களம் திருநீர்மலை முதலிய திருப்பதிகளைப் பேசுவதனால் – அந்தந்தத் திருப்பதிகளி லிருப்பை எம்பெருமான் இவர்க்குக் காட்டித் தந்தருளி ஆச்வஸிப்பிக்கிறானென்பது தோன்றும்.
அடியேன் பிராகிருத ஜனங்களைப்போலே ‘உண்டியே உடையே’ என்று கூப்பிடுமவனல்லேன்; எப்போதும் பகவத் விஷயத்தி லீடுபட்டு ‘அத்தா! அரியே’ என்றிப்படி பகவந் நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவதே எனக்குப் போது போக்காயிருக்கின்றது. திகம்பரஜநே க்ராமே ஹாஸ்ய : கெளபீந வாந் நர:” (கோமணங்கட்டாத வூரில் கோமணங்கட்டுமவன் பைத்தியக்காரன்) என்னும் பழமொழிப்படியே *உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்கட்கு நான் பைத்தியக்காரனாகத் தோற்றுகின்றேன்; உன்னைநான் அத்தா! என்றழைத்தவாறே என்னை அவர்கள் பித்தா! என்றழைக்கின்றனர்; இப்படிப்பட்ட பிராகிருத ஜனங்களின் பரிஹாஸத்திற்கு அஞ்சி உன்னை விட்டு விடலாமென்று பார்த்தாலோ, மாட்டுகின்றிலேனே என் செய்வேனென்கிறார். “பேயரே யெனக்கியாவரும் யானமோர் பேயனே.............அரங்கா வென்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற பெருமாள் திருமொழி இங்கே நினைக்கத்தகும். அத்தா – அத்தன் என்பதன் விளி; ஸ்வாமிந்! என்றபடி. அரி – ஹரி. முளைக்கின்ற வித்தே! ஜகத்காரண பூதனே! என்றவாறு.
தூயாய்! என்று திருவுள்ளத்திலுள்ள பரிசுத்தியைச் சொன்னபடி. அநுகூலர் பிரதிகூலர் என்னும் பாசிபாராதே எல்லார் திறத்திலும் நன்மையையே சிந்திக்கையாகிற திருவுள்ளத் தூய்மையை யுடையவனே! என்றபடி. இப்படியாகில், கம்ஸ சிசுபால ராவணாதிகளைக் கொன்றது ஏனென்னில்; விளக்கிலே விட்டில் பூச்சிகள் விழுந்து முடியுமா போலே அவர்கள் விழுந்து மாண்டு போனவளவால் எம்பெருமானது திருவுள்ளத்தூய்மைக்கு ஒரு குறையுண்டோ? அவர்களும் அடிபணிந்து வாழ்ந்து போகவேணு மென்று இவன்தான் செய்த க்ருஷிகளுக்கு எல்லையில்லையே. (சுடர்மாமதிபோல் இத்யாதி.) பூர்ணசந்திரன் ஸகலதாபங்களையும் தணிக்குமாபோலே ஸகல ப்ராணிகள் விஷயத்திலும் தாய்போன்று குளிர அருள்செய்கின்ற திருக்கண்களையுடையவனே! “திங்களுமாதித்தியனு மெழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண் டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபமிழிந்தேலோ ரெம்பாவாய்” என்றது காண்க.
அடிவரவு – நறவா வற்றா தாரேன் புள் வில் பனி கதி அத்தா தூயாய் வண்டார் புள்ளாய். ஒளிவிடுகின்ற பூர்ண சந்திரன் போலே ஸகலப்ராணிகளுக்கும் தாய்போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!கோபாலனே! அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்முன்னொருகால் அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!இப்படிப்பட்ட வுன்னை நான் எப்படிமறப்பேன்!
எம்பெருமான் ‘பிறப்பிலி’ என்று பேர் பெற்றிருக்கச் செய்தேயும் என்றும் என்றும் “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!” என்றுமு் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட யோநிகளிலும் பிறந்தருளுகிறான்; நாம் கருமத்தாலே பிறக்கிறோம், அவன் கருணையாலே பிறக்கிறான் என்னுமிவ்வளவே வாசி. அப்படி பிறந்தருளிநின்றாலும், சிறந்தவையென்று கொண்டாடப்படுகிற தேவமநுஷ்ய யோநிகளிலே பிறக்குமளவோடு நிற்கலாகாதா? மிக்க இழிவான பசு பக்ஷி யோநிகளிலும் வந்து பிறக்க வேணுமா? இப்படியும் ஒரு நீர்மையுண்டோ? என்று சிந்தித்து நெஞ்சு உருகவும் கண்கள் பனிமல்கவும் பெற்றேன்; ஆச்ரிதர்க்குக் காரியஞ்செய்யவேணுமென்று திருவுள்ளத்தில் தோன்றிவிட்டால் ஜந்ம நிகர்ஷங்களையும் கணிசியாதே எந்தப் பிறவியில் வேணுமானாலும் மனமுவந்து பிறந்தருள்கின்ற உன்னையல்லாது வேறொருவரை நேசிக்க மாட்டேன்; இப்படிப்பட்ட திருக்குணங்களைத் திருநறையூரி லெழுந்தருளியிருக்கு மிருப்பிலே விளங்கக் காட்டிக்கொண்டு என்னை அடிமை கொள்ளப் பெறுவதே! என்று உள்குழைந்து பேசுகிறாராயிற்று.
ஹம்ஸாவதாரத்திலும் வராஹாவதாரத்திலும் தமது நெஞ்சு ஈடுபட்டு உருகினபடியைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்; நரஸிம்ஹாவதாரத்தில் ஈடுபாட்டை இப்பாட்டில் அருளிச்செய்கிறார். உலகத்தில் எங்கும் கண்டறியாத புதியதொரு பிறவி பிறப்பதே! ; மநுஷ்யனாகவாவது சிங்கமாகவாவது அவதரித்தாலாகாதோ? நரங்கலந்த சிங்கமென்று புதிதாகவொரு பிறவியைக் கற்பித்துக்கொண்டு அதிலே பிறந்த நீர்மை என்கொல்! என்று தமது திருவுள்ளம் ஆழ்ந்தமையை முன்னடிகளி லருளிச்செய்கிறார். “தாழ்ந்த ஜந்மத்திலே வேணுமாகில் பிறக்கிறாய்; நாட்டார் பிறக்கும் பிறவிகளைப் பிறக்கலாகாதோ?” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும். அடியேன் மனங்கொள்ளவல்ல மைந்தா! = பண்டு நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றினவன்று ப்ரஹ்லாதாழ்வானுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயென்பது உனக்கு ஒருமிடுக்கு அல்ல; கல்நெஞ்சனான என்னுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுவே உனக்குப் பெருமிடுக்குக் காண் ! என்பது உள்ளுறை.
மாதாபிதாக்களிற் காட்டிலும் பரம உபகாரனான வுன்னை எவ்வகையாலும் மறக்கவல்லேனல்லே னென்கிறார். மாதாபிதாக்கள் காமப்ரேரிதராய்ப் பிரஜைகளை உத்பத்திபண்ணி விடுவர்கள்; பிறகு ‘யௌவநவிரோதி’ என்று உபேக்ஷித்தொழிவர்கள்; அவர்கள் கைவி்ட்ட காலத்திலும் கைவிடாதே உடனிருந்து காத்தருள்பவன் எம்பெருமானே யாதலால் என்றும் “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரேயினி ஆவாரே” என்றும் ஸகலவிதபந்துவுமாக அப்பெருமானே கொள்ளவுரியன் என்கிற உறுதியை வெளியிடுகிறார். “பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக்கு, உற்றானாய் வளாத்து என்னுயிராகி நின்றானை...........எத்தால் யான்மறக்கேன் இது சொல்லென் ஏழைநேஞ்சே!” என்பர் மேல் எட்டாம்பத்திலும். நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளிறந்த ஒள்ளிய சுடரையுடையவனே!, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார் .
உலகங்களையெல்லாம் பிரளயங் கொள்ளப்புகுந்தவாறே அனைத்தையும் திருவயிற்றடக்கி மிகுஞானச் சிறுகுழவியாய் ஒரு சிற்றாலந்தளிரிலே துயில் கொண்டாய் என்பதைக் கேட்டார்வாய்க் கேட்டிருந்தேன்; அந்தத் திருவுருவத்தோடு இன்று என்னெஞ்சினுள்ளே வந்து உறைகின்றபடியை நன்கு தெரிந்துகொண்டேன்; மற்றையாரைப் போலே நான் நன்றியுணர்வு கெட்டவனல்லேன்; இப்பெருநன்றியைச் சிந்தியாமல் ஒருபொழுதும் நானிருப்பதில்லை என்கிறார். ஆலிலைமேலுறைவாய் என்னெஞ்சினுள்ளே உறைவாய் = ஆலிலைபோலே என்னெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய் என்றாவது, ஆலிலையை இகழ்ந்திட்டு என்னெஞ்சை இடமாகக் கொண்டாய் என்றாவது, கருத்துக்கொள்ளலாம். அணிவண்டு கிண்டும் நறைவாரும் பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ – பரமபோக்யமான திருநறையூர்ப்பதி உனக்கு இருப்பிடமாக அமைந்திருக்கச் செய்தேயும் அதனையும் விட்டு என்னெஞ்சிலே உறைகின்றாயாதலால் உன்விஷயத்திலே அடியேன் சாலவும் க்ருதஜ்ஞனா யிராநின்றேனென்றவாறு.
‘நீண்டாயை’ என்றது – ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இத்யாதிகளில் ஒவ்வொன்றுமே எல்லை காண வொண்ணாதபடி அபரிச்சிந்நனாயிருக்கிற வுன்னை என்றபடி. பிரமன் முதலிய தேவர்கள் ஞானசக்திகளிற் சிறந்தவர்களாயிருந்தாலும் கொக்கு கடலைக் கண்டாற் போலே உன் ஸ்வரூப ரூபகுண விபூதி விஸ்தாரங்களைக் கண்டு வியந்து சிந்திக்கவும் பேசவும் மாட்டாதே திகைத்து நிற்பர்கள்; எல்லைக்கண்டு பேசமுடியாமல் போனாலும் ஸ்வரூபஸத்தைக்காக ஏதேனும் பேசவேணுமே; ‘ஆண்டாய்’ (ஸ்வாமிந்!) என்று பேசுவார்களாம்; இப்படி வானவர்களால் ஆதரித்துப் பேசப்படுகிற வுன்விஷயத்திலே நான் நித்ய கைங்கரியஞ்செய்வதாக ஒருப்பட்டேன்; நீயும் இஃதறிந்து என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்துகொண்டாய்; இனி நீ பெயர்ந்து போகப்பார்த்தாலும் “திருவாணை நின்னாணை கண்டாய்” என்னுமாபோலே ஆணையிட்டாகிலும் தடுப்பனேயன்றி உன்னைவிட்டுக்கொடுக்க ஸம்மதிக்கக் கடவேனல்லேன் என்று சொன்ன ஆழ்வாரை நோக்கித் திருநறையூர் நம்பி, “ஆழ்வீர்! நீர் அடிக்கடி அடியேன் அடியேன் என்கிறீர்; சேஷி செய்தபடி செய்யக் கண்டிருப்பதன்றோ சேஷபூதர்க்கு உரியது; ‘ஒட்டேன்’ என்று நிர்ப்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குச் சேராதே” என்ன நாண்தான் உனக்கொழிந்தேன்’ என்கிறார்.
தாம் அனேக வம்ச பரம்பரையாகப் பகவத் விஷயத்திலே தொண்டு பட்டிருக்கும்படியை முதலடியில் வெளியிடுகிறார். நம்முடையவர்கள் இதையொரு ஏற்றமாகச் சொல்லிக் கொள்வதுண்டு; “ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” “எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பனேழ்படிகால் தொடங்கி வந்து வழிவிழயாட் செய்கின்றோம்” இத்யாதிகள் காண்க. நான், என்னுடைய தகப்பனார், அவருடைய தகப்பனார், அவர்க்கு அப்பால் எழுவர் என்றிப்படி பாரம்பரியமாக அநந்யார்ஹ சேஷத்வத்தில் ஊன்றியிருப்போம் நாம்; இப்படி அடிமைச்சுவடு நன்கறியப் பெற்றிருக்கிற அடியேன் என்னெஞ்சினுள்ளே வந்து சேர்ந்திருக்கிற தேவரீரை இனி வேறிடம் போகவொட்டுவேனோ? என்கிறார்.
“என்னெஞ்சினுள்ளே வந்தாயைப்போக வொட்டேன்” என்று நிர்ப்பந்தித்த ஆழ்வாரை மீறிக்கொண்டு புறப்பட்டுப் போகநினைத்த எம்பெருமான் அதற்குறுப்பான தன்மிடுக்கைக் காட்டினான்; ‘அந்தமிடுக்கில் ஒருகுறையுமில்லை, நானறிவேன் பிரானே!’ என்று தாமறிந்த மிடுக்கொன்றை விரித்துரைக்கின்றார் முதலடியில், ராஜலோகமெல்லாம் அஞ்சும்படி அவர்கட்கு வேர்ப்பற்றான ஸஹஸ்ரபாஹ்வர்ஜுநனுடைய தோள்களாயிரத்தையும் மழுவினால் துணித்த மிடுக்கனே!, நீ செய்ய நினைக்குங் காரியத்திற்கு ஒரு இடையூறு நேருமென்று நினைப்பவனல்லேனடியேன்; உன்னுடைய மிடுக்குக்கு இசையாதவனுமல்லேன்; அந்த மிடுக்கை விதேயனான அடியேனிடத்திலே உபயோகிக்க வேண்டாவென்பதே வேண்டுகோள் என்பது உள்ளுறை. பிறரொருவர் வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் = தம்முடைய நெஞ்சு தவிர மற்றை யோருடைய நெஞ்சு எல்லாம் வல்நெஞ்சு என்றும் தம்முடைய நெஞ்சு ஒன்றே மெல்நெஞ்சு என்றும் நினைத்திருக்கிற ராழ்வார். உண்மையில், பகவத் விஷயத்தில் இத்தனை உருக்கம் மற்றையோர்க்கு இல்லையிறே. வளைத்து வைத்தேன் = ஏழைகளா யிருப்பவர் செல்வர் மாளிகை வாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னைவிட மாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைமத்துக்கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரக்கூடத்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற் போலவும்.
தேவரீரை வணங்கி வாழ்த்தி வழிபாடு செய்யுமவர்கள் பல்லாயிரவர் குறையற்றிருக்கச் செய்தேயும் அவர்கட்குக் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கு மிருப்பிற்காட்டிலும் என்னெஞ்சிலே வந்து புகுந்திருக்குமதுவே சிறப்பு என்று திருவுள்ளம்பற்றி இமையோர்களையும் விட்டு என்னெஞ்சிலே புகுந்தருளிற்று; இனி நான் போகலொட்டேன் – என்கிறார். பொன்மலர் – பொன்போல் விரும்பத்தக்கமலர் என்றபடி. ‘தொழுது இறைஞ்சி, வணங்க’ என்ற ஒருபொருட் பன்மொழிகள் மனமொழி மெய்களாகிற த்ரிகரணங்களினுடையவுமு் வ்ருத்தியைச் சொல்லுகின்றன வென்னலாம். கைபோது கொள்ளுதல் – அஞ்ஜலி செய்தல்.
விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ருதா ப்ரஹமந்! ஹஸ்தபாதாதி ஸம்யுதா” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது; எம்பெருமானுக்கு வழிபாடுகள் செய்தற்காகவே இந்த கரணகளேபரங்கள் தந்தருளப்பட்டன வென்பது அதன் கருத்து; அப்படி பகவத் கைங்கரியத்திற்கே உபகரணமான உடலை நான் பெற்றிருந்தாலும் கீழ்க்கழிந்த காலமெல்லாம் பாழே கழிந்தனவாதலால் அவ்வுடலைக் கொண்டு ஒரு பயனும் பெறா தொழிந்தேன் முன்பெல்லாம்; இவ்வுடலை ச்ரமப்பட்டுப் போஷித்து வந்ததற்குத் தக்கபயன் இன்று பெற்றே னென்கிறார். “ஊனேராக்கை தன்னை உழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப்பெற்றேன்” என்று அந்வயிப்பது. மாம்ஸம் மல்கும்படி சரீரத்தைப் பலபரிச்ரமங்கள் பட்டு வளர்த்து வந்தேனாதலால் அதன்பலனை இன்று ஸம்பாதித்துக்கொண்டே னென்கை. – சரீர மாத்யம் கலுதர்மஸாதநம்” என்கிறபடியே தர்மாநுஷ்டாநத்திற்கு இன்றியமையாத சரீரத்தைப் போஷிக்க வேண்டியது அவசியமே; இதுவரை நான் போஷித்து வந்தது பயன்பெறாதொழிந்தது; இப்போது அங்ஙனன்றியே பயன்பெற்றதாயிற்று என்று மகிழ்ந்து பேசினாராயிற்று.
கல்நீர = ‘நீர’ என்றது நீர்மையை (ஸ்வாபத்தை) யுடைய என்றபடி. ‘நீர்மை’ என்னும் பண்புப் பெயரில் ஈறுபோயிற்று; அ – குறிப்புப் பெயரெச்ச விகுதி. ‘சொல் நீர’ என்பதிலும் இங்ஙனமே கொள்க. சொல் – கொண்டாடிச் சொல்லப்படுவதை, நீர – இயற்கையாகவுடைய என்றபடி. “இத்தை யநுஸந்தித்தார்க்கு ‘இதொரு சப்தமே!’ என்று கொண்டாடு மிதுவே ஸ்வபாவமாம்படியிருக்கிற சொல்தொடையை’ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி.
திருநறையூர் நம்பியைக் கண்டுகளிக்கப் பெற்றேனென்கிறார். சில விசேஷணங்களால் நம்பியை விசேஷிக்கிறார் சினவிற் செங்கணென்று தொடங்கி. ஆச்ரித விரோதிகளை அழியச் செய்து பக்தர்களைப் பாதுகாத்தருள்பவ னென்று கற்றவர்களால் கொண்டாடப் படுகின்றானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து. கண்ட காட்சியிலே மஹாகோபிஷ்டர்களென்று தோன்றும் படியான கண்களை யுடையரான ராவணாதி ராக்ஷஸர்களை யொழித்த வில்லாள னென்று ஒவ்வொரு அன்பரும் தங்கள் தங்கள் நெஞ்சிலே கொண்ட துதிப்பார்களென்க. மாமுனியை என்றது – ஆச்ரிதர்கட்கு எத்தனையோ நன்மைகள் செய்திருந்தும் ஒரு நன்மையும் செய்திலன் போல ‘என்ன செய்வோம்!’ என்றே நெடுகச்சிந்தித்துக் கொண்டிருப்பவனையென்றபடி. “ ஒன்றுண்டு செங்கண்மால் யானுரைப்பது, உன்னடியார்க்கு என்செய்வனென்றே யிருத்தி நீ” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரங்காண்க. முநி - மநநஞ்செய்வன்; (அதாவது) சிந்தித்துக்கொண்டிருப்பவன் தன்னுடைய திறலில் நம்பிக்கை யற்றவர்களுக்கு அரியன செய்தும் நம்பிக்கையுண்டாக்கு மியல்வினன் என்று காட்டுதற்காக ‘மரமேழெய்த மைந்தனை’ என்றார்.
கன்றானது எப்போதும் தன் தாயையே நினைத்துக் கொண்டிருக்குமாபோலே உலகுக்கெல்லாந் தாயாகிய தன்னையே நான் நினைந்திருக்குமாறு செய்தவனென்கிறார் முதலடியில். “பரந்த சிந்தை யொன்றி நின்று நின்னபாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே” என்கிறபடியே எம்பெருமானது அருளின்றியே அவனை நினைத்திருத்தல் அமையாதாதலால் ‘என்னையும் தன்னையே நினைக்கச் செய்து’ என்கிறார். நம்முடைய நினைவு மாறினாலும் தான் நினைவுமாறாதே “அஹம் ஸ்மராமி மதபக்தம நயாமி பரமாம் கதிம்” என்ற படியே நம்மை நினைத்திருந்து அருள் செய்பவ னென்கிறது ‘தானெனக்காய் நினைந் தருள் செய்யு மப்பனை’ என்றதனால். அப்படி எங்கேனுங் கண்டதுண்டோ வென்ன, உலகமெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப் பிழைக்கும்படி தானே அபேக்ஷா நிரபேக்ஷாமாகப் பாதுகாத்தருளின செயல் திருஷ்டாந்தமாகப் போராதோ வென்று அதனை யெடுத்துரைக்கின்றார் அன்றிவ்வையகமுண் டுமிழ்ந்திட்ட வாயனை என்று.
என்னுடைய மனமொழி மெய்கள் அவனையல்லாது அறியா என்கிறார். எம்பெருமானடைய விலக்ஷணமான இனிமைக்கு அபூர்வமான த்ருஷ்டாந்தமொன்று இப்பாட்டில் கூறுகின்றார்; “பண்ணினின்மொழி யாழ் நரம்பிற்பெற்ற பாலையாகி” = பாலை யென்றது ஒரு சிறந்த பண். வீணையின் தந்தியிலே பாலையென்னும் பண்ணை இசைத்தால் எவ்வளவு இனிமையாயிருக்குமோ அவ்வளவு இனிமையாக என்னுள்ளே புகுந்தானென்கை. “யாழ்பயில ரூபியைப் பாலையாகி யென்று விசேஷி்க்கையாலே” என்பது ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி. இரண்டாமடியிலுள்ள ‘கொண்டபின்’ என்பதற்கு ஈற்றடியில் அந்வயம்; என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடங் கொண்டானாதலால் என் வாயானது எம்மண்ணல் வண்ணமேயன்றி மற்றொன்றை யுரையாது என்கை.
பாசுரந் தொடங்கும்போதே “இனி யெப்பாவம் வந்தெய்தும் சொல்வீர்” என்று கம்பீரமாகத் தொடங்குகிற மிடுக்கு நோக்கத்தக்கது. இனிப் பரமபதமென்று வேறொரு ஸ்தாநவிசேஷமுண்டென்றும் அங்குப்போய்ப் பெறவேண்டிய பேறு வேறொன்று இருக்கின்றதென்றும் தாம் கொண்டிலாமையைத் தெரிவிக்கின்றார் ‘இம்மையே அருள் பெற்றமையால்’ என்று. ஸகல பாபங்களும் தொலைந்து பெறவேண்டிய பேறு இப்பிறவிதன்னிலே இவ்வுலகந்தன்னிலே பெறப்பட்டதாதலால் இனி ஒரு பாவமும் என்னை வந்து அணுக ப்ர ஸக்தியில்லை யென்கிறார். அடுந்துனியைத் தீர்த்து = துனி என்று துன்பத்திற்குப் பெயராயினும் துன்பத்திற்கு மூலகாரணமான கருமம் இங்கே பொருளாகக் கடவது; என்ற சரமச்லோகத்தின்படியே ஸகல பாபங்களையுந் தொலைத்தருளி நித்யமான ஆநந்தத்தைத் தந்தருளவல்ல ஸித்தோபாயமான எம்பெருமானைக் கண்டுகொண்டேனென்கிறார். இத்யாதி ச்ருதிகளை உட்கொண்டு எம்பெருமானை ‘நெறி’ என்னுஞ் சொல்லாற் சொல்லுகிறார். தன்னையடைதற்குத் தானே மார்க்கமாயிருப்பனிறே எம்பெருமான்.
எம்பெருமான் செய்தருளின உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் பண்ணாமலிருக்க முடியவில்லை, பண்ணுவோமென்றாலும் அவனுக்கு நாம் பண்ணலாவதொரு உபகாரமில்லை என்று கொண்டு ‘என்செய்கேனடியே னுரையீர்’ என்கிறார். எனக்கென்ன ஒரு கைம் முதலில்லாதபடி ஸ்வரூபமே பிடித்து பரதந்திரனான நான் எதைச் செய்வேன் என்பது தோன்ற இங்கு ‘அடியேன்’ என்றது.
இத் திருமொழிகற்றார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. கீழ் ஆறாம்பத்தில் “கண்ணுஞ்சுழன்று” என்ற திருமொழி தொடங்கி இத் திருமொழியளவாக நூறு பாசுரங்கள் கொண்ட பத்துத் திருமொழிகளால் திருநறையூர்த் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தாராயிற்று. திருநறையூர் நம்பிக்கு அஸாதாரணமாகவுள்ள ஒரு தன்மை இங்குத் தொனி்ககின்றது காண்மின்; - திருநறையூர்க்கு ‘நாச்சியார் கோயில்’ என்னுந் திருநாமமே மிகப்ரஸித்தமாக வழங்கிவருவது.. திருவீதிப் புறப்பாடுகளில் நாச்சியார் முன்னே யெழுந்தருளவும் நம்பி பின்னே யெழுந்தருளவுமான ஒரு ஸம்ப்ரதாயமும் காண்கிறோமங்கு. எம்பெருமான் தன்னுடைய மேன்மையை அடக்கிக்கொண்டு தன்னடியார்க்கு மேன்மையைப் ப்ரகாசப்படுத்துகிற திருப்பதி இதுவாதலால், இத்திருப்பதியின் பாடலைத் தலைக் கட்டுகின்ற இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய அத்தன்மை விளங்க, பாசுரம் தொடங்கும் போதே (மற்ற பலச்ருதிப் பாசுரங்களிற் போலல்லாமல்) ஆழ்வார் தம்முடைய திருப்புகழை முற்கொண்டு பேசுகிறபடி காண்மின். “தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாட்கலியன் திருவாலி நாடன்” என்னுமளவும் ஆழ்வார் தம்முடைய திருநாம ஸங்கீர்த்தநமேயிறே.
விளக்கம்
1479.
விளக்கம்
1480.
விளக்கம்
1481.
விளக்கம்
1482.
விளக்கம்
1483.
விளக்கம்
1484.
விளக்கம்
1485.
விளக்கம்
1486.
விளக்கம்
1487.
விளக்கம்
1488.
விளக்கம்
1489.
விளக்கம்
1490.
விளக்கம்
1491.
விளக்கம்
1492.
விளக்கம்
1493.
விளக்கம்
1494.
விளக்கம்
1495.
விளக்கம்
1496.
விளக்கம்
1497.
விளக்கம்
1498.
விளக்கம்
1499.
விளக்கம்
1500.
விளக்கம்
1501.
விளக்கம்
1503.
விளக்கம்
1505.
விளக்கம்
1507.
விளக்கம்
1508.
விளக்கம்
1509.
விளக்கம்
1510.
விளக்கம்
1511.
விளக்கம்
1513.
விளக்கம்
1514.
விளக்கம்
1515.
விளக்கம்
1516.
விளக்கம்
1517.
விளக்கம்
1519.
விளக்கம்
1522.
விளக்கம்
1523.
விளக்கம்
1525.
விளக்கம்
1528.
விளக்கம்
1529.
விளக்கம்
1530.
விளக்கம்
1531.
விளக்கம்
1532.
விளக்கம்
1533.
விளக்கம்
1534.
விளக்கம்
1535.
விளக்கம்
1536.
விளக்கம்
1537.
விளக்கம்
1539.
விளக்கம்
1540.
விளக்கம்
1541.
விளக்கம்
1542.
விளக்கம்
1543.
விளக்கம்
1544.
விளக்கம்
1545.
விளக்கம்
1546.
விளக்கம்
1547.
விளக்கம்
1548.
விளக்கம்
1549.
விளக்கம்
1551.
விளக்கம்
1552.
விளக்கம்
1554.
விளக்கம்
1555.
விளக்கம்
1556.
விளக்கம்
1557.
விளக்கம்
1558.
விளக்கம்
1559.
விளக்கம்
1560.
விளக்கம்
1561.
விளக்கம்
1562.
விளக்கம்
1563.
விளக்கம்
1564.
விளக்கம்
1565.
விளக்கம்
1566.
விளக்கம்
1567.
விளக்கம்
1568.
விளக்கம்
1569.
விளக்கம்
1574.
விளக்கம்
1575.
விளக்கம்
1576.
விளக்கம்
1577.