விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!*  நீஇன்னே* 
    சிறந்தகால் தீநீர்வான்*  மண்பிறவும்ஆய பெருமானே*
    கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுள்எங்கும் கண்டுகொள்* 
    இறந்து நின்ற பெருமாயா!*  உன்னை எங்கே காண்கேனே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே - சிறந்த பஞ்ச பூதங்களையும் அந்த பூதங்களில் நின்று முண்டான பதார்த்தங்களையும் சரீரமாகவுடைய ஸர்வாதிகனாய்
கறந்த பாலுள் நெய்யே போல் - கறந்த பாலினுள்ளே நெய் போலே
கண்டுகொள் இறந்து - கண்டுகொள்ளுதல் இல்லாதபடி.
இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா - மேலே சொன்ன வஸ்துக்க ளெல்லாவற்றிலும் உறைகின்ற ஆச்சர்ய பூதனே!
உன்னை எங்கே காண்கேன் - உன்னை எவ்விடத்திலே காணக்கடவேன்?

விளக்க உரை

உரை:1

நீ அவதாரங்கள் பண்ணி ஸௌலப்யத்தைக் காட்டி நிற்கச் செய்தோம் அக்காலத்திற்குப் பிறபட்டேன், பொருள்தோறும் வியாபித்து நின்றாயாகிலும் அந்தர்யாமியைக் காண அசக்தனாயிராநின்றேன, பின்னை எங்கே காணக் கடவேனென்கிறார். பிறந்தமாயா! –பிறக்கையாகிற மாயத்தைச் செய்தவனே! என்றபடி. பிறவாதவனென்றிருக்கச் செய்தேயும் கர்மவச்யர்களைப் போலேவந்து பிறப்பதும், எல்லாரும் தன்னைக்கண்டு அஞ்சி யொளிக்க வேண்டியிருக்க, தான் கம்ஸாதிகளுக்கு அஞ்சி யொளிக்கையுமாகிற இவை * மாயனென மாயமே * என்று வியக்கத்தக்க மாயமன்றோ. பாரதம் பொருதமாயா – பிறந்த ஆச்சரியம் போலவே பாரத யுத்தம் நடத்தி வைத்ததும் ஒரு ஆச்சரிய மென்கிறார், ஸத்யப்ர்திஜ்ஞனானதான் அஸத்ய ப்ரதிஜ்ஞனான ஆச்சரியம். ஆயுதமெடே னென்று ஆயுத மெடுக்கையும் பகலை இரவாக்குகையும் எதிரிகளின் உயிர் நிலையைக் காட்டிக் கொடுக்கையும் முதலான ஆச்சரியங்களை நினைப்பது. நீ யின்னை என்றது நீ இப்படி ஸுலபனா யிருக்கச் செய்தே என்றபடி. சிறந்தகால் தீ நிர்வான் மண் பிறவுமாய பெருமானே! – பிறந்து கண்ணுக்குப் புலப்படுகிறவனாயிருக்கச் செய்தேயும் பஞசபூதங்கள் முதலியவற்றில் அநுப்ரவேசித்திருந்து கண்ணுக்குப் புலப்படாமலு மிருப்பவனே! என்றபடி. கண்ணுக்குப் புலப்படா திருக்கும்போது அவற்றினுள்ளே யிருக்கிறனென்று எப்படி தெரிந்து கொள்வதென்ன, அதற்கொரு த்ருஷ்டாந்தமருளிச் செய்கிறார் கறந்தபாலுள் நெய்யேபோல் என்று. ப்ரஹ்மவிதுநிஷத்தில் கூறியதையடியொற்றி யருளிச் செய்தபடி. பாலைக்கடைந்து வெண்ணையாக்கி நெய்யாக்குகிறோம். பாலில் இல்லாத வஸ்து அபூர்வமாக உண்டாய்விட மாட்டாதன்றோ, நெய்யும் பாலினுள்ளே யிருக்கச்செய்தே அது கறந்தபாலில் நமக்குத் தெரியாமலன்றோ இருக்கிறது. அதுபோலவென்க. மூன்றாமடியின் முடிவில் “கண்டுகொள்“ என்றல்ல, “கண்டுகொள்“ என்றோத வேணும். “பனிக்கடலிற் பள்ளிகோளை“ என்றவிடத்து “பள்ளிகோள்“ என்றது போன்ற தாமிது கீழே ஐந்தாம்பத்தில் (5-2-7) * நிறுத்தி நும் முள்ளதத்துக் கொள்ளுந் தெய்வங்களும்மை யுய்யக் கோள் * என்றவிடமும் இத்திறத்ததே, கண்டுகொள் இறந்து நின்ற –கண்டு கொள்ளுதல் இல்லாமலிருக்கின்ற என்றபடி. உன்னையெங்கே காண்கேனே –கண்ணாலே காண்கிற பாலினுள்ளே நெய்யுண்டா யிருக்கக் காணவரிதானாப் போலே ஸகல பதார்த்தங்களினுள்ளு மிருந்துவைத்தும் காணவொண்ணாதபடி நிற்கிற ஆச்சரியபூதனே! உன்னை எங்கே காணக்கடவேன்? பரமபதத்தில் காண்பதற்கு இந்த சரீரஸம்பந்தம் குலையவேணும், ஸ்ரீராம க்ருஷ்ணாதியவதாரங்களுக்கோ பிற்பட்டவனானேன், அச்சரவதாரமோ நான் நினைக்கிறபடி பேசவும் தழுவவும் யோக்யதையற்றது, அந்தர்யாமித்வம் கண்ணுக்கு இலக்காகாத்து, இனி இழவோடே முடிந்து போகவேண்டியதோயோ நான்? என்றாராயிற்று.

உரை:2

வியக்க வைக்கும் மாயனே! பாரதப் போரைச் செய்வித்தவனே! காற்று, நெருப்பு, தண்ணீர், விண், மண் ஆகியவற்றை, கறந்த பாலில் மறைந்துள்ள நெய் போல எல்லாவற்றின் உள்ளேயும் மறைந்து அவற்றை இயக்கும் மாயம் செய்பவனே என்கிறார் நம்மாழ்வார். இதைவிட எளிமையாக அந்தர்யாமித்துவத்தை யாரும் விளக்க முடியாது.

English Translation

O Lord who came and fought the great Bharata war! Lord who is Earth, Five, sky, wind, water and all else Lord invisible as the butter in fresh milk! Alas, where can I see you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்