விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்திரு மார்பன் தன்னை*  என் மலைமகள் கூறன்தன்னை,* 
    என்றும் என்நாமகளை*  அகம்பால்கொண்ட நான்முகனை,*
    நின்ற சசிபதியை*  நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,* 
    வென்று புலன்துரந்த*  விசும்புஆளியை காணேனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்ற சசீ பதியை - இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும்
நிலம் கீண்ட - (மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும்
மூன்று எயில் எரித்த - த்ரிபுரதஹனம பண்ணினவனும்
புலன் வென்று துரந்த - இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும்
விசும்பு ஆளியை  - சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை

விளக்க உரை

என் என்பது இப்பாட்டில் மூன்றிடங்களில் வருகிறது. முதலிடத்தில் மாத்திரம் விசேஷணத்தில் அந்வயிப்பதென்றும், மற்ற இரண்டிடங்களி;ல் விசேஷ்யத்தில் அந்வயிப்பதென்றும் நம்பிள்ளை திருவள்ளம்பற்றுகிறார். “என் திருமார்பன் தன்னை” என்ற விடத்தில் என் திருவை மார்பிலே யுடையவன் என்று பொருள் கொண்டால், திருமார்பனுக்கு விசேஷணமாகிய திருவிலே என் என்பது அந்வயித்தாயிற்று. ஆழ்வார், பங்கயத்தாள் திருவருளைக் கொண்டவராதலால், எனக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டிமாரென்கிறார். என்னுடைய திருவைத் திருமார்பில் வைத்துக்கொண்டிருக்கிற நீ என் காரியறு; செய்யாதொழியரலாமோ வென்றபடி. என் மலைமகள் கூறன் தன்னை = இவ்விடத்தில் என் என்பது விசேஷணமான மலைமகளிடத்தே அந்வயிப்பதன்று. மலைமகள் கூறன்’ என்னுஞ்சொல் விசேஷயபதம். பாலீவதீபதியான பரமசிவனைச் சொல்லுகிறது. அவனும் இங்கு விசேஷணஸ்தாநீயனே யாவன்; இச்சொல் அந்தர்யாமியளவுஞ் சொல்லி நின்று ‘சிவனுக்கு அந்தர்யாமியான எம்பெருமான்’ என்று சொல்லுமதாகையாலே என் என்பது பரம விசேஷ்யபூதனான் எம்பெருமானிடத்தே அந்வயிப்பது. மேலே ‘என் நான் முகனை’ என்றதிலுமிப்படியே. சிவனை மலைமகளோடே கூட்டிவைத்ததும் எம்பெருமானே; நான்முகனை நாமகளோடே கூட்டிவைத்ததும் எம்பெருமானே. இந்திரனை இந்திராணியோடே கூட்டி வைத்ததும் எம்பெருமானே என்கிற கருத்து இப்பாட்டில் விவக்ஷித மென்று ஆசாரியர்கள் திருவுள்ளம்பற்றுகிறார்கள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “ப்ராப்த யௌவனரான புத்ராதிகளை ஸத்ருசவிஷயங்களிலே விவாஹம் பண்ணுவிக்கும் பித்ராதிகளைப் போலே இவர்களுடைய மஹிக்ஷுலாபமும் தந்தாமாலல்ல; ஸர்வேச்வரனாலே யென்கை.” என்று. எயில் மூன்றெரித்து சிவபிரானுடைய செயல். இதை இங்கு எம்பெருமானுடைய காரியம்போலச் சொன்னது (அதாவது, மஹாவராஹமாய் நிலங்கீண்டதன் செயலோடொக்கச் சேர்த்துச்சொன்னது, எம்பெருமானே நிர்வாஹகனாயிரந்து செய்வித்தமைபற்றி யென்க. விஷணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ: தஸ்மாத்த்தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்சம் ஸ விஷேஹே என்ற ப்ரமாண்வசனமும் நோக்கத்தக்கது. வென்று புலன் துரந்த வென்றது—நான்முகனுடைய செயலைச் சொன்னபடி. ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக இந்த்ரியஜயத்தைப் பண்ணினவாறு கூறிற்றென்க. விசும்பாளி யென்று ஸ்வர்க்கலோகநாதனான இந்திரனைச் சொல்லி, அவனுக்கு நிர்வாஹகனென்கிற முறையாலே எம்பெருமானளவுஞ் சொல்லுகிறது. நிலங்கீண்ட என் திருமார்பன் தன்னை, எயில் மூன்றெரித்த என் மலைமகள் கூறன் தன்னை, வென்றுபுலன்துரந்த நான்முகனை, விசும்பாளியான சசீபதியைக் காணேனோ? என்று அந்வயிப்பது. எயில் மூன்றெரித்த வரலாறு: முற்காலத்தில் தாரகாஸூரனுடைய புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷ்ன், கமலாக்ஷ்ன் என்னும்; மூவரும் மிக்க தவம்செய்து பிரமனிடம் பெருவரம் பெற்று வானத்துப் பறந்துசெல்லந் தன்னைவாய்ந்த மூன்று பட்டணங்களையடைந்து மற்றும்பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்கவிடங்களிற் பறந்து சென்று பலவிடங்களின் மேலும் இருந்து அவ்விடங்களைப் பாழாக்கி வருகையில் அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் சிவபெருமான் பூமியைத் தேராவும் சந்த்ரஸூர்யர்களைத் தேர்ச்சக்கரங்களாவும் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாவும் பிரமனைச் சாரதியாகவும் மஹாமேருவை வில்லாகவும் ஆதிசேஷன் வில்நாணியாகவும், விஷ்ணுவை—வாயுவாகிய சிறகமைந்து அக்நியை முனையாகவுடைய அம்பாகவும் அமைத்துக்கொண்டு யுத்தஸந்நத்தனாய்ச் சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சரிப்பில் நின்று உண்டான நெருப்பினால் அவ்வசுரங்களை அந்நகரங்களுடனே எரித்திட்டனன் என்பது திரிபுர மூன்றெரித்த வரலாறு.

English Translation

My Lord with Lakshmi on his chest, is the Lord with Parvati on his half, and the Lord with Sarasvati on his face, and the Lord of Indrani too. He lifted the Earth, burnt the three cities, subdued his senses and rules the world of the celestials, Alas, I do not see him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்