திருவேங்கடம்

தலபுராணம்: திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

அமைவிடம்

ஸ்ரீ திருவேங்கடம் உடையான் கோவில்,
அரியக்குடி-630202,
சிவகங்கை(மாவட்டம்),
தொலைபேசி : +91 -4565 - 231 299 ,

தாயார் : அலர்மேல் மங்கை
மூலவர் : ஸ்ரீ திருவேங்கமுடையான்
உட்சவர்: ஸ்ரீநிவாசன்
மண்டலம் : வட நாடு
இடம் : ஆந்திரம்
கடவுளர்கள்: வெங்கடேஷ்வரா,லெட்சுமி,பத்மாவதி


திவ்யதேச பாசுரங்கள்

  56.   
  சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
  எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*
  வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*
  கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா      

      விளக்கம்  


  • உரை:1

   மாமதி! மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள். சந்திரா! நீ இப்போது நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்; களங்கமுடையனாயும் இருக்கின்றாய்; இப்படி இல்லாமல் நீ எப்போதும் க்ஷயமென்பதே இல்லாமல் பூர்ணமண்டலமாகவே இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் என் குழந்தையினுடைய முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய். ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா; வாராவிட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக்குழந்தைக்குக் கைநோவு ஒன்றே மிகும்; இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு. அம்புலி என்று சந்திரனுக்குப் பெயர். வாழ்நின் என்பது “வாணனென”” மருவிற்று.

   உரை:2

   'ஏ வெண்ணிலவே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளியூட்டினாலும்; நீ வளர்வதும் தேய்வதும் போல் மாயங்கள் பல புரிந்தாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஒப்பாகாது. வித்தகர்க்கெல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான வேங்கடமலையில் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடிவந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.


  104.   
  என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
  முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*
  மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
  மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
   வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  

      விளக்கம்  


  • நமுசி திரிவிக்கிரமனோடு வெகுநாழிகை வழக்காடி எம்பெருமான் சொன்ன ஸமாதாநங்களைக்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருக்க எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாசத்திலே கொண்டுபோய் சுழன்று விழும்படி செய்த வரலாறு காண். சுழற்றிய என்ற பெயரெச்சம் முடியனைக் கொண்டு முடியும்.


  180.   
  தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
  மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 
  என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
  மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
  வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

      விளக்கம்  


  • துஷ்டர்களைத் தொலைத்தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக்கோல் கொண்டு வா என்பதாம். கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப்போவன் என்பது தொனிக்கும். தென் - அழகுக்கும் பேர். துணி - முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்; மின் - விளங்கார் காரத்தை உடையவனுக் கென்று பொருள்: மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க. வாணன் - வாழ்நன்; மரூஉ.


  184.   
  மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
  கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 
  நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
  பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.

      விளக்கம்  


  • மேல்மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரைகட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம். கச்சு - ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு துகிலவை = அவை ஸ்ரீ முதல் வேற்றுமைச் சொல்லுருபு. நிச்சல் - ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் - வடசொல்.


  207.   
  போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
  ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 
  கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
  வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே

      விளக்கம்  


  • “அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப்பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள். ‘கோதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது; ‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணைவினையைக் கொள்ளும்போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்: ‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத்தருதல் அறிக. கோதுகலம் - ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம். இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங்களையுடைய)வனே! என்று கருத்தாம். இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள். குடமாடு கூத்தா - குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி: குடக்கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க. வேதப்பொருள் - வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.


  247.   
  கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
  குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
  கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
  அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 

      விளக்கம்  


  • கண்ணபிரானே நீ கன்றுமேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நான் முன்னமே நினத்துக் ‘குடையையுஞ் செருப்பையுங் கொள்’ என்று வேண்டியும் அவற்றை நீ கொள்ளவில்லை. அங்குமிங்குஞ் சிதறியோடுங் கன்றுகளை நீ இருந்தவிடத்திலிருந்துகொண்டே வேய்ங்குழலை யூதியழைத்துக் கிட்டுவித்துக் கொள்வதற்காக அவ்வேய்ங்குழலையுங் கொடுக்கக் கொண்டிலை; நீ சென்றவிடமோ மிகவும் தீக்ஷ்ணமான! காட்டுநிலம்; காலிற்செருப்பில்லாமையாலே செங்கமலவடிகள் வெதும்பிப்போயின; மேல் குடையில்லாமையாலே கண்கள் சிவந்தன; இங்குமங்குந் திரியாமல் இருந்தவிடத்தேயிருந்து கன்றுகளை மேய்க்கக் குழலிலாமல் தட்டித் திரியும்படியால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் நோக்கக் கடவதோயென்று வயிறுபிடிக்கிறாள். தருவிக்க என்பதற்கு கொடுக்க என்று தன் வினைப் பொருள் கொள்க. போனாய் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல், போனவனே! என விளியாகக் கொள்ளலுந் தகுமெனக் கொள்க. கண்கள் சிவந்தாய்- “சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்” என்ற நன்னூற் சூத்திரமுணர்க.


  504.   
  தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்* 
  ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!* 
  உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்* 
  வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)    

      விளக்கம்  


  • உரை:1

   கண்ணபிரானோட்டைக் கலவி யைக் கணிசித்துத் திருபாவையில் நோன்புநோற்ற ஆண்டாள் அவ்வளவிலும் அவன் வந்து கலக்கக்காணாமை யாலே ஆற்றாமை மிகப்பெற்று, ‘இனி நாம் வெறுமனிருந்தாலாகாது’ பிரிந்தாரைச் சேர்ப்பிக்கவல்லவன் மன்மதனென்று கேளாநின்றோம்; அவனது காலில் விழுந்தாவது கண்ணபிரானோடு கூடப்பெறுவோம்’ எனக்கருதி, அங்ஙனமே அந்த மன்மதனைத் தன் காரியஞ்செய்யும்படிக்கு ஈடாக ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து அழகுபெறுவித்து (மண்டல பூஜைக்காக) மண்டலாகாரமான மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது. “உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில், ஸ்வரூபநாசத்தை விளைவிக்கவல்ல தேவதையைப் பற்றினமையால் இப்பற்று உஜ்ஜீவநஹேதுவாமோ? அன்றி, கீழ்விழுகைக்கு ஹேதுவாமோ? என்று நெஞ்சு தளும்புகிறபடி, திங்கள் - சந்திரன்: அமாவசைக்கு அமாவசை ஒருமாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற் காலத்தை வரையறுக்கும் சாந்திரமானரீதிபற்றி, ‘திங்கள்’ என்று மாதத்திற்குப் பெயர்; வழங்கலாயிற்று: மதி என்பதும் இது; இலக்கணை.

   உரை:2

   தைமாதம் முழுதும் நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக குளிர்ந்த மண்டலாகாரத்தை இட்டு மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில் அழகிய சிறிய மணல்களினால் நீ எழுந்தருளும் வீதிகளை அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன். உக்கிரமானதும் நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான ஒப்பற்ற திரு வழியாழ்வானை திருக்கையில் அணிந்துள்ள திருவேங்கட முடையானுக்கு என்னை கைங்கரியம்பண்ணும்படி கல்பிக்கவேணும்.


  506.   
  மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு*  முப்போதும் உன் அடி வணங்கித்* 
  தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து*  வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே* 
  கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு*  கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி* 
  வித்தகன் வேங்கட வாணன் என்னும்*  விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே*  

      விளக்கம்  


  • உரை:1

   மன்மதன் ரஜோகுண ப்ரசுரனாதலால் மதகரமான் மலர்கள் அவனுக்கு இடத்தக்கவையென்று கொண்டு ஊமத்தை மலர்களையும் முருக்க மலர்களையுமிடுகிறபடி. முப்போது - இரண்டு சந்தியும் ஒரு உச்சிப்போதும். இரண்டாமடியின் கருத்து: - நான் உன் அடிபணிவதற்குப் பலனாக என் மநோரதத்தை நீ நிறைவேற்றுதொழியில், எனது நெஞ்சானது மிகவுங் கொதிப்படைந்து, ‘மன்மதன் மெய்யே பலன்தருந் தெய்வமல்லன்’ இவன் பொய்த்தெய்வம்’ என்று நாடெங்குமறியும்படி நான் உன் மஹிமையை அழித்து நிந்திக்க நோpடும்’ அப்படிப்பட்ட பாரிபவத்தை நீ அடையாது தப்பாமல் பேறு பெறுவிக்கப் பாராய் என்கை. தத்துவம் - உண்மை; இலி - இல்லாதவன். வாசகத்து என்றது - நெஞ்சில் நினைக்குமளவே யன்றியே வெளிப்படையாகக் கூறுதலைக் கூறியவாறு. (கோவிந்தனென்பதோர் பேரேழுதி) கீழ்ப்பாட்டில் “கடல்வண்ண னென்பதோர் பேரேழுதி” என்றவிடத்து உரைத்தவையெல்லாம் இங்குக் கொள்ளத்தக்கன. வித்தகன் - ஆச்சாரியப்படத் தகுந்த குணசேஷ்டிதங்களை யுடையவன் என்றபடி. வாணன் என்பது. ‘வாழ்நன்’ என்பதன் மரூஉ. திருவேங்கமுடையானை விளக்கென்றது - அவன் தன்னுடைய குணங்களெல்லாம் திருமலையில் மேயவிளக்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.

   உரை:2

   நறுமணம் கொண்ட ஊமத்த மலர் முருங்கை மலர் கொண்டு (கல்யாண முருங்கைப் பூ ) மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது உண்மை இல்லாதவன் என்றுமனம் வெந்துநீ சொன்ன சொல் காப்பாற்றுபவன் என்ற எண்ணத்தை நெஞ்சத்தில் இருந்து அகற்றிஉன்னை திட்டிவிடுவதற்குள் மலர்க்கொத்து கொண்டுஅம்புகள் தொடுத்து கோவிந்தன் என அதிலே பெயரெழுதி பல வித்தைகள் கற்றவன் வேங்கடவன் என்னும் பெயர் பெற்ற விளக்கினில் (என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் புக என்னை எய்து விடேன்.


  535.   
  காட்டில் வேங்கடம்*  கண்ணபுர நகர்* 
  வாட்டம் இன்றி*  மகிழ்ந்து உறை வாமனன்* 
  ஓட்டரா வந்து*  என் கைப் பற்றித் தன்னொடும்* 
  கூட்டு மாகில்*  நீ கூடிடு கூடலே!* (2)

      விளக்கம்  


  • உரை:1

   எம்பெருமான் என்னோட ஸம்ச்லேஷிக்கவேணுமென்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்துநிற்கிறான்’ எனக்கு இசைவு உண்டோ இல்லையாவென்று சங்கித்துத் தாமஸித்து நிற்கின்றான்போலும்’ அப்பெருமான் என்னுடைய ஆதுரதையை நன்கறிந்து சடக்கென ஓடிவந்து என்னைத்தன்னோட அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்கவேணுமென்று மநோரதிக்கிறாள். காட்டில் வேங்கடம் :- ஸ்ரீதண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்து வநவாஸரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-திருமலையில் வாழ்ச்சி. கண்ணப்புரநகர்-பிரகு திருவயோத்தியிலே அனைவருடனுங் கூடியிருந்து நகாவாஸ்ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்- திருக்கண்ணபுரத்தில் வாழ்ச்சி. திருமலையை விருந்தாவனத்தோ டொத்தாகவும் திருக்கண்ண புரத்தைத் திருவாய்ப் பாடியோடொத்ததாகவும் நிர்வஹிக்கவுமாம். நகாவாஸத்தோடு வநவாஸ்த்தோடு வாசியற இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை இத்தால காட்டிற்றாகிறது.

   உரை:2

   காடுகள் நிறைந்த திருவேங்கடத்திலும் திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே.


  546.   
  வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட*  விமலன் எனக்கு உருக்காட்டான்* 
  உள்ளம் புகுந்து என்னை நைவித்து*  நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்* 
  கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்*  களித்து இசை பாடும் குயிலே* 
  மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது*  என் வேங்கடவன் வரக் கூவாய்*.      

      விளக்கம்  


  • தன்னை எம்பெருமான் நோவு படுத்துகிறபடியை முன்னடிகளில் அருளிச்செய்கிறாள். கார்முகில் போன்ற கரியதிருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போன்ற முழக்கத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை இடத்திருக்கையிலே ஏந்தியிரா நின்றுள்ள எம்பெருமான் தன்னைக் காண்கையிலே மிக்க ஆசையுள்ள எனக்குத் தன் திருவுருவத்தைக் காட்டாதே மறைத்திடாநின்றான். அவன் இப்படி உபேக்ஷிக்கையாலே அவ்வுருவத்தை மறந்து பிழைப்போம் என்று பார்த்தாலோ, அது செய்யுவும் ஒட்டுகிறிலன்’ என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே வந்துபுகுந்து நினைதொறும் சொல்லுந்தோறும் நெஞ்சிடிந்துகும்” என்கிறபடியே சைதில்யத்தையுண்டாக்கி அந்தத் தளர்த்தியாலே உயிர்மாயுமளவான நிலைமை நேர்ந்தவாறே “இவ்வளவோடு இவளை முடிந்து பிழைக்க வொட்டலாமா? இன்னும் நெடுநாளைக்குத் துன்பம் படுத்தவேண்டாவா?” என்றெண்ணி மறுபடியும் உயிரைச் சிறிது தலையெடுக்கச் செய்து பழையபடியே ஹிம்ஸிப்பதாய் இப்படி துடிக்கவிட்டு இதுவே போதுபோக்காயிரா நின்றான்’ ஓ குயிலே! நான் இப்படி நோவுபடா நிற்க, நீ ஆநந்தமயமாக இசைபாடிக்கொண்டு போது போக்குவது நியாயந்தானா? தேன் பெருகா நின்றுள்ள செண்பகப்பூவில் அஸாரமான அம்சத்தைக்கழித்து ஸாரமான பாகத்தை அநுபவித்து அவ்வநுபவத்தாலுண்டான களிப்பு உள்ளடங்காமல் அதற்குப் போக்குவிட்டு இசைபாடிக் கொண்டிருக்கிறாயே, இதுவோ நன்மை? நான்படும் துயரத்தைப் பாரிஹரித்த பின்பன்றோ நீ களிக்கவேணும் உனக்காக நான் செய்யத்தக்கது என்ன?” என்று கேட்கிறாயோ, எப்போதும் என்னருகேயிருந்துகொண்டு அவ்யக்த மதுரமாக மென்சொற்களைச் சொல்லுவதும் விலாஸ சேஷ்டி தங்களைப் பண்ணுவதுமா யிருக்கிறாயே இந்த இருப்பைத் தவிர்ந்து, பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக ஸ்ரீமிதிலையில் புறச்சோலையிலே வந்து தங்கியிருந்தாப்போலே எனக்காகத் திருமலையிலே வந்திராநின்ற பெருமானை இங்ஙனே நாலடி வரும்படியாக நீ கூவவேணும் என்று வேண்டுகிறாள்.


  577.   
  விண் நீல மேலாப்பு*  விரித்தாற்போல் மேகங்காள்* 
  தெண் நீர் பாய் வேங்கடத்து*  என் திருமாலும் போந்தானே?* 
  கண்ணீர்கள் முலைக்குவட்டிற்*  துளி சோரச் சோர்வேனைப்* 
  பெண் நீர்மை ஈடழிக்கும்*  இது தமக்கு ஓர் பெருமையே?*  (2)   

      விளக்கம்  


  • ஆசாசப்பரப்பு முழுவதும் இடமடையம்படி நீலநிறமாயிருப்பதொரு மேற்கட்டி கட்டினாற்போன்ற மேகங்களே! என் திருவேங்கடமுடையானும் உங்களோடு இவ்விட்ட மெழுந்தருளிளானோ? என்று ஆண்டாள் மேகங்களை நோக்கிக்கேட்க, அதற்கு அவைமறுமொழி யொன்றுஞ் சொல்லாதொழியவே, ‘அவன் வராமையாலன்றோ இவை பேசாதிருக்கின்றன‘ என்று கண்ணீர் வெள்ளமிடத்தொடங்க, ‘மேகங்களே! இப்படி நான் கண்ணீர்விட்டு அழும்படி அவன் என்னைப் பரிதாபப்படுத்துவது அவனுடைய பெருமைக்கு ஏற்குமோ? நீங்களே சொல்லுங்கள் என்கிறாள். திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையிற் கிடந்து லீலா ரஸம் அநுபவிக்கும் போதைக்கு ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்ற விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். திருவேங்கடவன் முன்பு இவளோடு புணரவந்தபோது பிராட்டியுந் தானமாக வந்தமை தோன்றுமாம் என்திருமாலும் என்றதனால்.


  578.   
  மா முத்தநிதி சொரியும்*  மா முகில்காள்*  வேங்கடத்துச் 
  சாமத்தின் நிறங்கொண்ட*  தாளாளன் வார்த்தை என்னே* 
  காமத்தீ உள்புகுந்து*  கதுவப்பட்டு இடைக் கங்குல்* 
  ஏமத்து ஓர் தென்றலுக்கு*  இங்கு இலக்காய் நான் இருப்பேனே*     

      விளக்கம்  


  • ஓ காளமேகங்களே! நீங்கள் எனக்காக ஔதாரியத்தில் இன்று புதிதாகப் பரிசயம் பண்ணவேணுமோ? வள்ளல்தனமே இயல்பாக இருப்பவர்களன்றோ நீங்கள், விலையுயர்ந்த முத்துக்களையும் பொன்களையும் ஒருவரும் வேண்டாமலிருக்கத்தானே நீங்களே பொழிகின்றீர்களன்றோ. இப்படிப்பட்ட நீங்கள், அடிவீழ்ந்து வேண்டுகிற எனக்காக ஒருவாய்ச்சொல் நல்கலாகாதோ? திருவேங்கடமுடையானுடைய ஸமாசாரம் உங்களுக்குத் தெரியாமலிராதே ஏதாவது சொல்லலாகாதா? பிறர்க்குப் பொன்னையும் முத்தையும் பொழிகின்ற நீங்கள் எனக்கு ஒருவாய்ச்சொல் பொழிய அருமையோ? என்கிறாள் முன்னடிகளில். இவள் அப்படிக் கேட்டவளவிலும் அம்முகில்கள் இன்னஸமாசாரமுண்டென்று மறுமாற்றம் சொல்லப்பெறாமையாலே தனது ஆற்றமையின் கனத்தைச் சொல்லி வருந்துகின்றாள் பின்னடிகளில் - அவ்வெம்பெருமானிடத்து வைத்த காம்மாகிற தீயானது வெளியிலுள்ள அவயவங்களை நிஸ்ஸேஷமாக தஹித்துவிட்டு இரை காணாமல் உள்ளே புகுந்து தஹிக்க, தென்றற் காற்றானது அதற்குத் துணையாயிருந்துகொண்டு நோயை அதிகப்படுத்த இப்படி இரண்டின்கையிலும் அகப்பட்டுக்கொண்டு எத்தனைநாள் நான் தடுமாறிக்கிடப்பேனென்கிறாள்.


  579.   
  ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
  எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 
  குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
  அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        

      விளக்கம்  


  • எம்பெருமானைப்பிரிந்துவிட்ட துக்கத்தினால் சரீர சோபைமாறி நிறமழிந்து வளைகழன்று நெஞ்சுதளர்ந்து உறக்கமொழிந்து இப்படியெல்லாம் நான் சீர்குலைந்து தடுமாறியிருக்குமிருப்பை என்சொல்லவல்லேனென்கிறாள் முன்னடிகளால். ஒளிவண்ணம் - ஒளிபொருந்தியவர்ணம் என்றுமாம். எம்பெருமானோடு ஸ்பஸ் லேஷிக்கப்பெறுங்காலத்தில் மேனிபுகர்ந்திருப்பதும் பிரிந்துபடுங்காலத்தில் “என் மங்கையிழந்தது மாமைநிறமே“ என்னும்படி வைவர்ணியப்பட்டிருப்பதும் மெய்யன்பர்களின் இலக்கணமாமென்க. மேனி மெலியவே வளைகளும் கழன்றொழியும், நெஞ்சும் உருக்குலையும். ளிமையால் - நான் பிராண நாதனால் உபேக்ஷிக்கப்பட்டுத் தனிமையாயத் தளர்ந்துகிடக்கிறேனென்பது காரணமாக ஒளிவண்ணம் வளைசிந்தையுறக்கங்கள் என்னைவிட்டு நீங்கின என்றபடி எளிபாரை எல்லாரும் கைவிடுவது ஸஹஜமே யன்றோ. ஆகவே, எளிமையால் என்றது - என்னிடத்துள்ள தைந்யம் காரணமாக என்றபடியாயிற்று. அன்றிக்கே, ஒளிவண்ணம் முதலியவை என்னை உபேக்ஷித்து விட்டுநீங்கினதற்கு காரணம் தங்களுடைய புன்மையேயாம், ஆபத்தை யடைந்தவர்களை விட்டுநீங்குமவர்கள் நீசர்களேயிறே - என்றதாகவும் கொள்ளலாம். இப்பக்ஷத்தில், எளிமையால் என்றது - தங்களுடைய நீசத்தன்மையினால் என்றபடியாம்.


  580.   
  மின் ஆகத்து எழுகின்ற*  மேகங்காள்*  வேங்கடத்துத்- 
  தன் ஆகத் திருமங்கை*  தங்கிய சீர் மார்வற்கு* 
  என் ஆகத்து இளங்கொங்கை*  விரும்பித் தாம் நாள்தோறும்* 
  பொன் ஆகம் புல்குதற்கு என்*  புரிவுடைமை செப்புமினே*         

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்ற பிராட்டி விளங்கும்படியை நினைப்பூட்டிக்கொண்டு மின்னயெழுகின்ற பேகங்களை! நீங்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே சென்று ஒருவார்த்தை சொல்லவேணும், அதாவது - எம்மார்பிலுள்ள இளமுலைகளை அவ்வெம்பெருமான் விரும்பி அணைந்துகொண்டே இடைவிடாது கிடக்கவேணுமென்று நான் ஆசைப்பட்டிராநின்றே னென்பதை நீங்கள் போய்ச் சொல்லவேணுமென்கிறாள். ஆகம் என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் முதலடியில் ஆகத்து என்றது - உடம்பிலே என்றபடி, மின்னலாலே பரபாகஸோபை பெற்றிருக்கிற உடம்பையுடைய மேகங்களை! என்றவாறு. மேகங்காள்! என்றவிடத்து “நடுவே பெரியவுடையார் (ஜடாயுபக்ஷி) வந்து தோற்றினாற் போலேயிருந்த தீ! அவனைப் பிரிந்து நோவுபடுகிற ஸமயத்திலே நீங்கள் வந்து தோற்றினபடியும்.“ என்றருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை. இரண்டாமடியில், தன்னாகம் - தன்னிடத்திலே என்றபடி. “சீர்மார்வற்குச் செப்புமினே“ என்று அந்வயம்.


  581.   
  வான் கொண்டு கிளர்ந்து எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்துத்- 
  தேன் கொண்ட மலர் சிதறத்*  திரண்டு ஏறிப் பொழிவீர்காள்* 
  ஊன் கொண்ட வள் உகிரால்*  இரணியனை உடல் இடந்தான்* 
  தான் கொண்ட சரிவளைகள்*  தருமாகிற் சாற்றுமினே*   

      விளக்கம்  


  • முன்னடிகளிரண்டும் மேகவிளி. ஆகாசத்தை விளாக்குலைகொண்டு - எங்குப்பார்த்தாலும் நீங்களேயாய்ப் பரந்து கிடக்கின்ற மேகங்களை! தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு நீங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்? பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ உங்களுக்குப் புருஷார்த்தம், இடர்ப்பட்டாரை இன்பக்கடலில் ஆழ்த்த வேண்டாவோ நீங்கள்? முன்னடிகளில் உட்கருத்து. விஸ்லேஷ காலத்திலே எனக்கு உத்தீபங்களாய்க்கொண்டு தோற்றுகின்ற மலர்களை நீங்கள் சிதறவடிப்பது எனக்குச் சந்தோஷந்தான், ஆகிலும் அவ்வளவு செய்தமாத்திரத்தால் பயனில்லை, திருவேங்கடமுடையானோடே நான் ஸம்ஸிலேஷம்டுபெற்று இம்மலர்களைப் போகோபகரணமாகக் கொண்டு களிக்கும்படியாகச் செய்துவைக்கவேணும் என்பதாகவும் கருத்துக்கொள்வர். அநிஷ்டத்தைத் தவிர்ப்பதோடு இஷ்டத்தைக் கொடுப்பதுஞ செய்யவேண்டியதாதலால், இப்போது எனக்கு அநிஷ்டங்களான மலர்களைச் சிதறவடிப்பது மாத்திரம் போதாது, பகவத் ஸம்ஸ்லேஷமாகிற இஷ்டப்ராப்தியையும் பண்ணித்தரவேஞ மென்கை.


  582.   
  சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த*  தண் முகில்காள்!*  மாவலியை- 
  நிலங் கொண்டான் வேங்கடத்தே*  நிரந்து ஏறிப் பொழிவீர்காள்* 
  உலங்கு உண்ட விளங்கனி போல்*  உள் மெலியப் புகுந்து* 
  என்னை நலங் கொண்ட நாரணற்கு*  என் நடலைநோய் செப்புமினே*       

      விளக்கம்  


  • உரை:1

   இதிலும் முன்னடிகளிரண்டும் மேகவிளி. ‘கடலில்நீரை முகந்துகொண்டு கிளம்பின குளிர்ந்த மேகங்களே! என்றது - உங்களுடைய வடி வழகும் குளிரிச்சியுமெல்லாம் போக்யமாகத்தானிருக்கிறது, அதில் ஒரு குறையில்லை என்றபடி பின்னை எந்த அம்ஸத்தில் குறையுள்ளதென்றால், அதுதோன்றச் சொல்லுகிறாள் “மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!“ என்று. ப்ரயோஜநாந்தரபரரான தேவர்களுக்காத் தன்னை யாசகனாக்கிக் காரியம்செய்த பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்திலே வர்த்திக்கிற நீங்கள் அநந்யப்ரயோஜநையான் எனக்காகக் காரியஞ்செய்ய வேண்டாவா? எம்பெருமான் அஸுரன் பக்கலிலேபோய்க் காரியம் செய்ததுபோல் நீங்களும் ஒரு அஸுரன் பக்கலிலேபோய்க் காரியஞ் செய்ய வேணுமென்று நான் சொல்லுகிறேனோ? உடையவன் பக்கலிலேயன்றோ உங்களைப் போகச்சொல்லுகிறேன். என் காரியத்தைச் செய்யாதது உங்களுக்குக் குறையன்றோ என்கை. “(ஏறிப் பொழிவீர்காள்!) சாய்கரத்தை உயரவைத்துத் தண்ணீர்வார்ப் பாரைப்போலே, காணவே விடாய்கெடுப்படி உயரவேறி வர்ஷிக்கிறிகோளிறே, அவன் வர்த்திக்கிற தேஸித்திலே வர்த்தித்து அவனோடே உங்களுக்கு ஒரு ஸம்பந்தமுண்டானால் அவன் ஸ்வபாமுண்டாக வேண்டாவோ?“ என்பது வியாக்கியன் ஸ்ரீஸூக்தி.

   உரை:2

   நீரைக் கொண்டு மேலே விளங்குகிற மேகங்களே மஹாபலியிடம் நிலத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டவன் இருக்கும் திருமலையில் மீதேறிப் பறந்து மழை பொழிபவர்களே!. நான் உலங்கு உண்ட விளாம்பழம் போல் உள்மெலியும்படி என்னுள்ளே புகுந்து என் பெண்மையை உண்டு நலியச் செய்தான். விளாம்பழத்திற்கு ஒரு வகை கொசுவால் நோய் வருகிறது என்று கூறுவதை உணர்ந்து, அவரின் நுண்ணிய அறிவை வியப்பதா ? அல்லது அந்த கொசு விளாம்பழத்தில் மொய்த்தவுடன் அப்பழத்தில் சாறெல்லாம் வற்றிவிடுவதை, நாராயணன் இவள் நினைவில் புகுந்து, பெண்மையை உண்டு நலியச் செய்தான் என்ற உவமையை வியப்பதா ?


  583.   
  சங்க மா கடல் கடைந்தான்*  தண் முகில்காள்!* வேங்கடத்துச்- 
  செங்கண் மால் சேவடிக் கீழ்*  அடிவீழ்ச்சி விண்ணப்பம்* 
  கொங்கை மேல் குங்குமத்தின்*  குழம்பு அழியப் புகுந்து* 
  ஒருநாள் தங்குமேல் என் ஆவி*  தங்கும் என்று உரையீரே* (2)       

      விளக்கம்  


  • தன்னை ஸ்ரம்ப்படுத்திப் பிறர் காரியமே கருத்தாகச் செய்து போருகிற எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்தில் வாழ்கிறவுங்களுக்கு அவனுடைய குணம் படிய வேண்டாவா? என்கை ஸம்போதனத்தின் உட்கருத்து நீங்கள் திருவேங்கடமுடையானது திருவடவாரத்திலே அடியேனுடைய ஒரு விண்ணப்பத்தைச் சொல்லவேணும், விண்ணப்பம் செய்யும் பாசுரமென்னென்னில், “கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்கு மேல் என்னாவிதங்கும்“ என்று சொல்லுங்கோள். அவர் என்னோடு கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத்தடங்களிலே குங்குமக்குழம்பு பூசி அலங்கரித்து வைத்திருக்கிறேன், அது ப்ரயோஜநமுடையதாம்படி பண்ணுவாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கோள் என்கிறாள், அணையவமுக்கிக் கட்டுகையாகிற (***) கடாஸ்லேஷத்தில் உள்ள விருப்பத்தை உணர்த்துகிறபடி. குங்குமத்தின் குழம்பு - குங்குமப்பூவை மர்த்தித்துக் குழம்பாக்கிப் பூசின் பூச்சு.


  584.   
  கார் காலத்து எழுகின்ற*  கார்முகில்காள்!*  வேங்கடத்துப்- 
  போர் காலத்து எழுந்தருளிப்*  பொருதவனார் பேர் சொல்லி* 
  நீர் காலத்து எருக்கின்*  அம்பழ இலை போல் வீழ்வேனை* 
  வார் காலத்து ஒருநாள்*  தம் வாசகம் தந்தருளாரே *.     

      விளக்கம்  


  • வர்ஷாகாலத்திலே தவறாமல் வந்துசேருகிறேன் என்று சொல்லிப்போன பெருமான் வாராதொழிந்தாலும் அவனுடைய வடிவுக்குப் போலியான நீங்களாவது வந்துதோன்ற நின்றீர்களே! என்ற உகவைதோன்றக் கார்காலத்தெழுதாலும் நாம் திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டாவது ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்து அடியார்கட்காகக் காரியம் செய்வதையே தொழிலாகக்கொண்டு விரொதிநிரஸநத்தில் உத்ஸாஹங்கொண்டு கிளருமவனான சக்ரவர்த்தி திருமகனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ண ஆரம்பித்தேன்; அதுவே காரணமாக உடனே ஸைதில்யமடைந்தேன்; மழைகாலத்தில் எருக்கம பழுப்புகள் அற்றற்று விழுவதுபோல் ஒசித்து தளர்ந்து தளர்ந்து விழும்படியான நிலைமையில் நின்றேன், இவ்வளவிலும் அப்பெருமான் எனக்கு அருள்செய்ய நினைத்திலன், என் வாழ்நாளெல்லாம் இப்படி துக்கமயமாகவேயோ கழியப்போகிறது? ஒருநாளாகிலும் ஒருவாய்ச்சொல் சொல்லி யனுப்பவும் மாட்டாரோ? என்கிறாள்.


  585.   
  மத யானை போல் எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்தைப்- 
  பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பு அணையான் வார்த்தை என்னே* 
  கதி என்றும் தான் ஆவான்*  கருதாது*  ஓர் பெண்கொடியை-
  வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே* (2)    

      விளக்கம்  


  • மேகங்களைக் கொண்டாடி இருகால் ஸம்போதிக்கிறாள்; திருவேங்கடமுடையானை நீங்கள் இடைவிடாது ஸேவித்துக்கொண்டு அத்தாலே மத்தகஜம் போலச் செருக்கி யிருக்கிறீர்களன்றோ என்பது முதல் விளியின் கருத்து. குக்ராம்மே குடியிருப்பானவர்கள் வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்து விட்டுப் போவதுபோலன்றியே திவ்யதேஸித்திலேயே நித்யவாஸம் பண்ணப் பெற்றீர்களே! என்னபாக்கியம்!! - என்ற கொண்டாட்டம் இரண்டாம் விளியின் கருத்து. பாம்பணையான் வார்த்தை என்னே! - திருவநந்தாழ்வானிடத்து ஸகலவித கைங்கரியங்களையுங் கொள்வதுபோல என்னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன், “நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்“ என்றபடி ஸேஷ் ஸயநத்தை விட்டுத் திருமதுரையிலே வந்துபிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை (சரமஸலோகத்தை) மெய்யென்று நீம்பியிருந்தேன்; பாம்போடே அனைந்து பாம்பின் தன்மையே தனக்குமுண்டாகப் பெற்றான்; அதற்கு நாக்கு இரணடாயிருப்பதுபோல இன்னும் இரண்டுநாக்குப் பெற்றான், - அதாவது பொய்யனாய்விட்டான் - என்ற கருத்துக்காண்க.


  586.   
  நாகத்தின் அணையானை*  நன்னுதலாள் நயந்து உரை செய்* 
  மேகத்தை வேங்கடக்கோன்*  விடு தூதில் விண்ணப்பம்* 
  போகத்தில் வழுவாத*  புதுவையர்கோன் கோதை தமிழ்* 
  ஆகத்து வைத்து உரைப்பார் *  அவர் அடியார் ஆகுவரே* (2)

      விளக்கம்  


  • இத்திருமொழி கற்றார்க்குப் பலன்சொல்லித் தலைக்கட்டுகிறாள் இப்பாட்டில். வேண்டினபடியெல்லாம் பகவதநுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வார்க்குத் திருமகளாகப் பிறக்கப்பெற்றதுவே ஹேதுவாகத் தான் எம்பெருமானை விரும்பப்பெற்றாள் என்னுமிடம் தோற்றப் போகத்தில் வழுவாத புதுவையர்கோன்கோதை என்கிறாள். நன்னுதலாள் - முகத்தைப் பார்க்கும் போதே ‘இவள் பகவதநுபவத்தில் விலக்ஷண‘ என்னத்தக்க வீறுடையவள் என்றபடி. “நயந்து உரைசெய் விண்ணப்பம்“ என்று அந்யம். “மேகத்தை வேங்கடக்கோன் இல் தூதுவிடு விண்ணப்பம்“ என்று அந்வயிக்கலாமென்பர் அழகிய மணவாளச்சீயர் இல் - இடம். ஆகத்துவைத்து உரைக்கையாவது - ‘ஒருத்தி பகவத்விஷயத்திலே ஆசை வைத்து என்ன பாடுபட்டாள்!‘ என்று உருக்கத்தோடே அநுஸந்திக்கையாம் அடியாராகுவரே - ஆண்டாள் மேகத்தைத் தூதுவிட்டு வருந்தினதுபோல அவாகள் வருந்தவேண்டா, இவள் தூதுவிட்டதுவே ஹேதுவாக இவள்பெற்ற பேற்றை அவர்களும் எளிதிற்பெறுவார், தமது திருமொழியில் தாம் விரும்பினபடியெல்லாம் குறையற அநுபவிக்கப் பெற்றாகையில் “போகத்தில் வழுவாத புதுவையர்கோன்“ எனப்பட்டார்.


  601.   
  பாடும் குயில்காள்!*  ஈது என்ன பாடல்?* நல் வேங்கட- 
  நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால்*  வந்து பாடுமின்* 
  ஆடும் கருளக் கொடி உடையார்*  வந்து அருள்செய்து* 
  கூடுவராயிடில்*  கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே*

      விளக்கம்  


  • எந்தப்பக்கம் நோக்கினாலும் ஒவ்வொரு புஷ்பம் கண்ணிலே தோற்றி ஹம்ஸகமாயிருந்தபடியாலே ‘கண்ணைமூடிக் கொண்டோமாகில்‘ சுகப்படலாம் என்று நினைத்துக் கண்ணை மூடிகொண்டாள். உடனே குயில்களின் பாட்டுக்கள் செவிப்பட்டன. அவற்றைக்கேட்டுத் தரிக்கமாட்டாதாளாய் அக்குயில்களே நோக்கி ‘நீங்கள் ஏன் இப்படி கர்ணகடோரமாகக் கத்துகின்றீர்கள்? போரும் போரும்; உங்கள் பாட்டை நிறுத்துங்கள்‘ என்கிறாள். இரண்டருகும் நெருப்புப்பற்றி யெரியா நிற்கச் செய்தே நடுவேயிருந்து சந்தனம் பூசுவாரைப்போலே யிருந்ததீ!, உங்கள் பாட்டைக் கேட்கும்படியாகவோ இப்போது என்னுடைய தஸையிருப்பது; ஐயோ! என்னபாட்டுப் பாடுகிறீர்கள். ஸம்ஸ்லேஷரஸாநுபவம் செல்லும்போது பாடத்தக்க பாட்டுக்களை நீங்கள் விஸ்லேஷத்தில் பாடாநின்றீர்களே!; பாவிகள்! பாடினது போரும்; எம்பெருமான் இங்கேயெழுந்தருளி என்னை வாழ்விக்குங்காலம் வாய்க்குமாகில் அப்போது நீங்கள் இங்குவந்து ஆசைதீரப் பாடுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.


  604.   
  மழையே! மழையே! மண் புறம் பூசி*  உள்ளாய் நின்று* 
  மெழுகு ஊற்றினாற் போல்*  ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற* 
  அழகப்பிரானார் தம்மை*  என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று*
  என்னைத் ததைத்துக்கொண்டு*  ஊற்றவும் வல்லையே?*. 

      விளக்கம்  


  • விண்ணீலமேலாப்பிலேகண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு விகாஸத்தோடும் விலாஸத்தோடும்கூடிக் கிளர்ந்த பதார்த்தங்களை நோக்கி வார்த்தை சொல்லிக்கொண்டு வந்து ஆண்டாள் இப்போது பழையபடியே மேகங்களைவிளித்துக் கூறுகின்றாள் - ; மேகங்களானவை சிலபதார்த்தங்களை உத்தீபங்களாகக் கிளப்பி அவற்றின் வழியாலே நலிந்தது போதாமல் பின்னையும்விடாதேநின்று வர்ஷித்து ஸாக்ஷாத்தாகவும் நலியத் தொடங்கினபடியாலே அவற்றை நோக்கிக் கூறுகின்றன்ளென்க. மழைபொழிதலும் விரஹிகளுக்கு உத்தீபகமிறே. இப்பாட்டில் அந்தபரம்பரையாக மூன்று எழுத்துப்பிழைகள் நெடுநாளாகவே நேர்ந்திருக்கின்றன. முதலடியின் முடிவில் “உள்ளாய்நின்று“ எனவும் இரண்டாமடியின்முடிவில் “வேங்கடத்துள்நின்று“ எனவும் ஈற்றடியின் முதலில் “தழுவிநின்று“ எனவும் பெரும்பாலும் பண்டிதபாமா விபாகமற அளைவராலும் ஓதப்பட்டுவருகின்றது. மூலப்பதிப்புகள் எல்லாவற்றிலும் இப்பிழைகள் உள்ளன. அடைவே, “உள்ளாய்நின்ற“ எனவும், “வேங்கடத்துள் நின்ற“ எனவும்; “தழுவநின்று“ எனவும் திருத்திக்கொள்க. கோயில் பத்தராவிஸ்வாமி இப்பிழைகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.


  677.   
  ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
  ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*
  கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
  கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)

      விளக்கம்  


  • உரை:1

   திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும், அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும். அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற்பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார். அடிமைத் திறமாவது - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்யும் வகை. கோன் ஏரி - ஸ்வாமி புஷ்கரிணி. இப்பெயர் ஸர்வலொக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும். அன்றி, எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம். இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹபுராணம் முதலியவற்றின் பாக்கக் காணத்தக்கது. திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்யதீர்த்தம்.

   உரை:2

   நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.


  678.   
  ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
  வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*
  தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
  மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளும் இவ்வுலகத்து அரசாட்சியுமாகிய இரண்டு ஒருங்கு கிடைத்தாலும் வேண்டா என்று விலக்குகின்றார். அரம்பையர்கள் - ரம்பை முதலியோர். இரண்டாமடியிலுள்ள சொற்போக்கினால், இவை எனக்கு ஏககாலத்திலே கிடைத்தாலும் வேண்டா வென்பதும், இவற்றை யான் வேண்டாமைக்குக் காரணம் இவை கிடையாமையன்று, இவற்றில் எனக்கு விருப்பமில்லாமையே என்பதும் தோன்றும். முக்தியின் ம்ஹாநந்தத்தை நோக்குங்கால், இவ்விரண்டும் சிற்றின்பமேயாதலும், சாச்வதமான அந்தஸ்தாநத்தை நோக்குங்கள் இவை அழிவுள்ளனவேயாதலும், ஆத்மாவைக்கரும பந்தங்களினின்று விடுவிக்கின்ற அவ்வீட்டு நிலை போலவன்றி இவை பந்தங்களை உறுதிப்படுத்துதலில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலத் தம்முள் ஒப்பனவே யாதலும் கருதத்தக்கன. தேன் ஆர் - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம். சுனை - மலையில் நீரூற்றுள்ள குணம்.

   உரை:2

   அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.


  679.   
  பின் இட்ட சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
  துன்னிட்டுப் புகல் அரிய*  வைகுந்த நீள் வாசல்*
  மின் வட்டச் சுடர்-ஆழி*  வேங்கடக்கோன் தான் உமிழும்* 
  பொன்-வட்டில் பிடித்து உடனே*  புகப் பெறுவேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யப் பெறுவதுண்டானால் மனுஷ்ய ஜன்மமேயாகிலும் அமையும் என வேண்டுகின்றார். பிரமன் சிவன் இந்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் திருவேங்கடமுடையானைச் சேவித்தலில் விருப்பத்தால் அங்கு வந்து அக்கருத்தினாலேயே மிகுதியாகக் கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி நெருக்குண்டு உள்ளே புக முடியாமல் தடுமாறப் பெற்ற அத்திருமலையின் ” கோயில்வாயிலில் யான் அப்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரனாய் அவன் வாய்நீருமிழும் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லுமளவில், இவர் அந்தரங்க கைங்கரியபரர் என்று அனைவரும் விலகி, வழிவிட, அர்ச்சக பரிசாரங்களுடனே யானும் தடையின்றி எளிதில் இனிது உள்ளே புக்கு கர்ப்பக்ருஹத்திற் சேர்ந்து அருகில் நின்று கைங்கரியம் பண்ணப் பெறுவேனாகவென்று பிரார்த்திக்கின்றார்.

   உரை:2

   பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.


  681.   
  கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*
  இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*
   
  எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*
  தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   செண்பகமரமாய்ப் பிறந்தால் திருமலைக்கு வருகிற மஹாப்ரபுக்கள் யாராவது இதனை விரும்பித் தம் வீட்டிற்கொண்டு போய் நாட்டக் கருதிப் பெயர்த்துக் கொண்டு போகக்கூடும். அப்படி உண்டோவெனில், ” கற்பகக்காவுகருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில், நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள், உய்த்தவன் ” என்றபடி - ஸத்யபாமைப் பிராட்டியின் விருப்பத்திற்கிணங்கிய கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த கற்பகத்தருவை ஸத்யபாமையின மாளிகைத் திரு முற்றத்திலே கொணர்ந்து நட்டானே. அவ்வாறு யாரேனுமொருவர் சண்பகமரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் வாழ்ச்சி இழந்ததாமே எனக் கருதி, அங்ஙனம் மஹாப்ரபுக்களின் விருப்பத்திற்குக் காரணமாகக் கூடாததொரு தம்பகமாய் நிற்க விரும்புகிறார் இப்பாட்டில். கம்பம் - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை. அன்றி, மதங்கொண்டதாதலால் வெளியே விட வொண்ணாதபடி கம்பத்திலேயே கட்டப்பட்டு நிற்கின்ற யானை யென்றும், அசையுமியல்பையுடைய மதயானை என்றும் பொருளாம்.

   உரை:2

   செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.


  682.   
  மின் அனைய நுண்ணிடையார்*  உருப்பசியும் மேனகையும்*
  அன்னவர்தம் பாடலொடும்*  ஆடல் அவை ஆதரியேன்
  தென்ன என வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துள்*
  அன்னனைய பொற்குவடு ஆம்*  அருந்தவத்தேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   “தம்பகமாய் நிற்குந் தவமுடையேனாவேன்” என்றவர் சிறிது யோசித்த வளவில், அரசாங்கத்தார், மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி சோதிப்பவராதலால் திடீரென்று அவர்கள் தம்பகத்தைக் களைத்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் தீந் தொழியக்கூடுமெனவும் நினைத்து, அங்ஙனன்றி என்றும் ஒரு படியா யிருக்கும்படி அத்திருமலையில் ஒரு பாகமாகக் கடவேனென்று அபேக்ஷிக்கின்றார். முன்னிரண்டடிகளால் தேவலோக போகத்தில் தமக்கு எள்ளளவும் நசை யில்லாமையை வெளியிட்டார்.

   உரை:2

   முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).
   மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.


  683.   
  வான் ஆளும் மா மதி போல்*  வெண் குடைக்கீழ்*  மன்னவர்தம்
  கோன் ஆகி வீற்றிருந்து*  கொண்டாடும் செல்வு அறியேன்*
  தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
  கானாறாய்ப் பாயும்*  கருத்து உடையேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   கீழ்ப்பாட்டில், பொற்குவடாக வேணுமென்று பாரித்தார்; சிறிது யோசித்தவாறே, அதுதன்னிலும் ஓர் அநுபபத்தி தோன்றிற்று: அதாவது - புதிதாகத் தேவாலயங்கள் நாட்டுபவர்கள் சிலாமியமாக மூலவிக்ரகம் ஏறியருளப் பண்ணுவதற்காக மலை முகடுகளினின்று பெரும் பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டு போகிற வழக்கம் உளதாதலால் அதுவும் ஏற்றதல்லவென்று தோன்றிற்று. தோன்றவே, அங்ஙனமின்றி, ஒருவராலும் பெயர்த்துக்கொண்டு போகக் கூடாததான கானாறாகப் பிறக்க வேணுமென்று அபேஷிக்கிறார் இதில்.

   உரை:2

   வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.


  684.   
  பிறை ஏறு சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
  முறையாய பெரு வேள்விக்*  குறை முடிப்பான் மறை ஆனான்*
  வெறியார் தண் சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
  நெறியாய்க் கிடக்கும்*  நிலை உடையேன் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   கீழ்ப்பாட்டில் ” கானாறாய்ப்பாயுங் கருத்துடையேனாவேனே ” என்று பாரித்தவர் சற்று ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறையுணர்ந்தார்; ஆறு எப்போதும் ப்ரலஹிக்கக் கூடியதல்ல. சில காலங்களில் வற்றிப்போம்; அப்போது திருமலை வாழ்ச்சி இழந்ததாம் என நினைத்தார். அங்ஙனமன்றி எப்போதும் ஒரு தன்மையாகத் திருவேங்கட முடையானை ஸேவிக்கவருகின்ற பாகவதர்களின் ஸ்ரீபாததூளி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலைமை தமக்கு வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார் இதில். குறை முடிப்பான்-இது இரட்டுற மொழிதலாய், குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் எனப் பொருள்தரும். அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியும் செய்பவன் என்கை.

   உரை:2

   பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


  685.   
  செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
  நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*
  அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
  படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)

      விளக்கம்  


  • உரை:1

   கீழ்ப்பாட்டில் “ நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே “ என்று திருமலைக்கு வழியாகத் தானாகவேணுமென்று அபேக்ஷித்தவர் சிறிது ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறை கண்டார்; வழியென்பது அவரவர்களுடைய ஸௌகரியத்துக்குத் தக்கபடி மாறுபடும் கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குப் போகும் வழி மிக வருத்தமா யிருக்கிற தென்று யாத்திரிகள் சந்த்ரகிரி வழியாகப் போகக்கூடும்; ஓரிடத்திற்கு ஒன்று தான் வழியென்று சொல்ல முடியாதாகையாலும், வழியானது விலகி நிற்பதாகையாலும், வழியாக வேணுமென்று விரும்புவதிற் காட்டிலும் எம்பெருமானது திருவருள் நோக்கம் பதியுமாறு அவன் கண்முகப்பிலே மெய்யடியாரோடு பிறரோடு வாசியற எல்லாரும் இடைவிடாது ஸஞ்சரிக்கும்படியான ஓர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியானதொரு சைதந்யத்தையும் பெறக்கடவே னென்று தமது விசேஷமான விருப்பத்தை விண்ணப்பஞ் செய்கிறார் இதில். இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களிற் கோயிலினுள் வாசற்படி “ குலசேகரப்படி “ என்று இவர் பெயரையிட்டு வழங்கப்படும் என்பது ஸம்ப்ரதாயம்.

   உரை:2

   உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.


  686.   
  உம்பர் உலகு ஆண்டு*  ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*
  அம்பொற் கலை அல்குல்*  பெற்றாலும் ஆதரியேன்*
  செம் பவள-வாயான்*  திருவேங்கடம் என்னும்*
  எம்பெருமான் பொன்மலைமேல்*  ஏதேனும் ஆவேனே

      விளக்கம்  


  • உரை:1

   கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக; அப்புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்; ஏனெனில்; திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ணகவசத்தால் ஆவரிக்கக் கூடும். அப்போது நாம் அப்பன் திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்; ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார். பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார். கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது. கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் “ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.

   உரை:2

   நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


  687.   
  மன்னிய தண் சாரல்*  வட வேங்கடத்தான்தன்*
  பொன் இயலும் சேவடிகள்*  காண்பான் புரிந்து இறைஞ்சிக்*
  கொல் நவிலும் கூர்வேற்*  குலசேகரன் சொன்ன*
  பன்னிய நூற் தமிழ்-வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)

      விளக்கம்  


  • என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.


  811.   
  செழுங்கொழும் பெரும்பனி பொழிந்திட,*  உயர்ந்தவேய்- 
  விழுந்துஉலர்ந்துஎழுந்து*  விண்புடைக்கும் வேங்கடத்துள்நின்று*
  எழுந்திருந்து தேன்பொருந்து*  பூம்பொழில் தழைக்கொழும்* 
  செழுந்தடங் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?  (2)

      விளக்கம்  


  • “நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும் “கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும் போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது. அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார். உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.


  1018.   
  கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
  சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
  பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
  பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

      விளக்கம்    1020.   
  நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
  என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 
  கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
  சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   

      விளக்கம்    1021.   
  பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
  கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
  ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
  தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   

      விளக்கம்    1023.   
  எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
  பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 
  ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
  திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 

      விளக்கம்    1024.   
  பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
  பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 
  காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
  சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!

      விளக்கம்    1025.   
  அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
  வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 
  கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
  செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

      விளக்கம்    1026.   
  பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
  பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
  வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
  தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)

      விளக்கம்    1027.   
  செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
  மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 
  சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
  வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   

      விளக்கம்    1028.   
  தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
  நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
  வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
  நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 

      விளக்கம்  


  • நாயேன் = நாய் போலே நீசன் என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணுகிறபடி. இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயல் நோக்கத்தக்கது. ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல்விழுந்து விரும்புமாபோலே ராஜாதிராஜனான நீயும் என்னை மேல் விழுந்து விரும்பவேண்டுமென்பது உள்ளுறை


  1029.   
  மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
  நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*
  தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
  என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    

      விளக்கம்  


  • நானே நாநாவித நரகம்புகும் பாவஞ்செய்தேன் = சேதநவர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப் போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்ளுகிறார். நாநாவித நரகம் = வடமொழித் தொடர். என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி. “தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலு மருளிச் செய்வர்.


  1030.   
  கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
  என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*
  குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
  அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்  


  • “இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானித் தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாபம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்.” (உதிரக்கை-கொலை செய்ததனால் ரத்தமயமான கை.)


  1031.   
  குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
  நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 
  நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
  அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்    1032.   
  எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
  துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
  செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
  என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்  


  • அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்!!’ என்று வருத்தத்தால் குன்றிப் போனேன். கைசலியாமல் பாவங்களைச் செய்ததனாலுண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத அசக்தியாயிற்றுக்காண். ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும். துப்பன்-ரக்ஷிப்பதற்குப் பாங்கான சக்தியையுடையவன். செப்பார் திண்வரை சூழ் = ஆபரணம் முதலியவற்றை ரக்ஷிக்கும்படியான ஸம்புடத்திற்குச் செப்பு என்று பேராகையாலே, லக்ஷிதலக்ஷணையாலே, “செப்பு ஆர்-அரணாகப் போரும்படியான” என்றுரைக்கக் குறையில்லை.


  1033.   
  மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
  புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 
  விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
  அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            

      விளக்கம்  


  • சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது. 1. “தீண்டாவழும்பும் செந்நீரும் சீயு நரம்பும் செறிதசையும், வேண்டாநாற்றமிகுமுடல்” என்றபடி புண்கள் நிறைந்து கிடக்குமிது. இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன்; இனி ஒரு சரீரத்தையும் பரிக்ரஹிக்க சக்தியில்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி உன் திருவடிவாரத்திலே வந்துவிழுந்தேன், அடிமை கொண்டருளவேணும்-என்றாராயிற்று.


  1034.   
  தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
  பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
  கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
  அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்  


  • முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன்-சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்க ளறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன்-(சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் என்கை. அரியே! -ஹரி என்ற வடசொல் அரியெனத் திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம்போல் ஒருவராலும் அடர்க்க வொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி—சிங்கம்)


  1035.   
  நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
  ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 
  கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
  ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்  


  • “உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, ‘உன்னை ஸேவிக்க வேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப் போயிற்றே யென்று இடருற்றேன்-என்றும் உரைப்பர்.


  1036.   
  பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
  மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 
  கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
  அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

      விளக்கம்  


  • பாவமே செய்து பாவியானேன் = “பாவமே செய்தேன்” என்றாவது, “பாவியானேன்” என்றாவது இரண்டத்தொன்று சொன்னால் போராதோ? “பாவமே செய்து பாவியானேன்” என்று வேண்டுவதென்? என்னில்; கேளீர்; -பாவஞ்செய்து புண்யாத்மாவாக ஆவதுமுண்டு; புண்யஞ்செய்து பாபிஷ்டனாக ஆவதுமுண்டு; தசரத சக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்னவண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று; பரமபத ப்ராப்திக்கு அநர்ஹனாய் விட்டானிறே. “சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலன் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறுபெற்றனனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்யமாகவே ஆயிற்று. ஆக விப்படி பாவஞ் செய்து புண்யசாலியாவதும், புண்யஞ் செய்து பாபிஷ்டனாவதும் உண்டாயினும், நான் பாவமேசெய்து பாவியானேன்-(அதாவது) தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவனல்லேன், சிசுபாலனைப்போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனுமல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாபிஷ்டனாக—என்கை


  1037.   
  கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
  விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*
  திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
  பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 

      விளக்கம்    1038.   
  கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
  திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 
  விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
  அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   

      விளக்கம்  


  • கண் ஆர்கடல்= வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் படியான (அழகிய) கடல் என்றுமுரைக்கலாம்.


  1039.   
  இலங்கைப் பதிக்கு*  அன்று இறை ஆய*
  அரக்கர் குலம் கெட்டு அவர் மாள*  கொடிப் புள் திரித்தாய்!* 
  விலங்கல் குடுமித்*  திருவேங்கடம் மேய*  
  அலங்கல் துளப முடியாய்!*  அருளாயே.     

      விளக்கம்  


  • புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உடையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலிமுதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில். உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலிமுதலிய அரக்கர்களை மடித்தவரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது, கண்டுகொள்க. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்திவிட்டானென்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங்கொண்டு அப்பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே யெழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றனன் என்றுமுணர்க. அலங்கல்துளபமுடியாய் அருளாய் = ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்கென்றே தனிமாலையிட்டிருக்கிற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய காரியமன்று; அருள்செய்ய வேண்டுமத்தனை யென்கை.


  1040.   
  நீர் ஆர் கடலும்*  நிலனும் முழுது உண்டு* 
  ஏர் ஆலம் இளந் தளிர்மேல்*  துயில் எந்தாய்!* 
  சீர் ஆர்*  திருவேங்கட மா மலை மேய* 
  ஆரா அமுதே!*  அடியேற்கு அருளாயே.    

      விளக்கம்    1041.   
  உண்டாய் உறிமேல்*  நறு நெய் அமுது ஆக* 
  கொண்டாய் குறள் ஆய்*  நிலம் ஈர் அடியாலே* 
  விண் தோய் சிகரத்*  திருவேங்கடம் மேய, 
  அண்டா!*  அடியேனுக்கு அருள்புரியாயே.    

      விளக்கம்  


  • திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்னவேண்டி. இரண்டுக்கும் ப்ரகாசமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின்மேலே சேமித்துவைத்த நெய் முதலிய கவ்யங்களை அமுது செய்தாயென்று சொன்னமுகத்தால் ஸௌலப்ய குணத்தையும், குறளாகி மாவலி யிடத்துச்சென்று நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகளந்தாயென்று சொன்னமுகத்தாலே பரத்வத்தையும் பேசினாராயிற்று.


  1042.   
  தூண் ஆய் அதனூடு*  அரியாய் வந்து தோன்றி* 
  பேணா அவுணன் உடலம்*  பிளந்திட்டாய்!* 
  சேண் ஆர் திருவேங்கட*  மா மலை மேய,* 
  கோள் நாகணையாய்!*  குறிக்கொள் எனை நீயே.      

      விளக்கம்  


  • பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவை ஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹலாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன்மீதும் அருள் செய்யவேணுமென்கிறார்.


  1043.   
  மன்னா*  இம் மனிசப் பிறவியை நீக்கி* 
  தன் ஆக்கி*  தன் இன் அருள் செய்யும் தலைவன்* 
  மின் ஆர் முகில் சேர்*  திருவேங்கடம் மேய* 
  என் ஆனை என் அப்பன்*  என் நெஞ்சில் உளானே.

      விளக்கம்  


  • “அடியேனிடரைக்களையாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனைநீயே” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் ‘அடியார்களைத் தேடித்திரிகிற நான் இங்ஙனே பிரார்த்திக்கிற உம்மை உபேக்ஷித்திருப்பேனோ?’ என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்;அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அநுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்தவாறே தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகிவிட்டதாகவே நினைத்துப் பேசுகிறார்.


  1044.   
  மான் ஏய் மட நோக்கி*  திறத்து எதிர் வந்த* 
  ஆன் ஏழ் விடை செற்ற*  அணி வரைத் தோளா!*
  தேனே!*  திருவேங்கட மா மலை மேய* 
  கோனே! என் மனம்*  குடிகொண்டு இருந்தாயே.    

      விளக்கம்  


  • எதிர்வந்த ஆனேழ்விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைத் தோளா! என்று அந்வயிப்பது.


  1045.   
  சேயன் அணியன்*  என சிந்தையுள் நின்ற* 
  மாயன் மணி வாள் ஒளி*  வெண் தரளங்கள்* 
  வேய் விண்டு உதிர்*  வேங்கட மா மலை மேய* 
  ஆயன் அடி அல்லது*  மற்று அறியேனே.            

      விளக்கம்  


  • இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப் பிராட்டியோடுங்கூட வந்து புகந்தானான பின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார். எம்பெருமான் சிலர்க்குச் சேயன், சிலர்க்கு அணியன்; சேயனென்றால் தூரத்திலிருப்பவனென்கை; அணியனென்றால் ஸமீபத்திலிருப்பவனென்கை. தன்னை உகவாதார்க்கு அவன்எட்டாதவன்; தன்னை உகந்தார்க்கு அவன் கையாளாயிருப்பவன். துரியோதநாதியர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக் காணலாம். சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை என்னைக் கொண்டறியலா மென்பவர் போல என சிந்தையுள் நின்றமாயன் என்கிறார். என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியனென்பது சொல்லவேணுமா வென்கை. தரளம் = முத்து; வடசொல்.


  1046.   
  வந்தாய் என் மனம் புகுந்தாய்*  மன்னி நின்றாய்* 
  நந்தாத கொழுஞ் சுடரே*  எங்கள் நம்பீ!* 
  சிந்தாமணியே*  திருவேங்கடம் மேய எந்தாய்!*
  இனி யான் உனை*  என்றும் விடேனே.    

      விளக்கம்  


  • தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு “வந்தாய்-என் மனம் புகுந்தாய்-மன்னி நின்றாய்” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார். வந்தாய்-பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய். என்மனம் புகுந்தாய்-வந்தவிடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்களிற் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தாய். மன்னிநின்றாய்- ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டுக் கிடப்பானேன்’ என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கப்பாராமல் ‘இதனில் சிறந்த ஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருந்துவிட்டாய்.


  1047.   
  வில்லார் மலி*  வேங்கட மா மலை மேய* 
  ல்லார் திரள்தோள்*  மணி வண்ணன் அம்மானைக்* 
  ல்லார்  திரள்தோள்*  கலியன் சொன்ன மாலை* 
  வல்லார் அவர்*  வானவர் ஆகுவர் தாமே.  

      விளக்கம்  


  • உரை:1

   இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

   உரை:2

   திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பதாக வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களா சாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி. பரமபதத்திலும் நித்யஸூரிகள் அஸ்தாநே பயத்தைச் சங்கித்துப் பரியும்போது திருமலையிலே ஸ்ரீ குஹப்பெருமாள்போன்ற வேடர்கள் ‘அஸூரராக்ஷஸமயமான இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று அதிசங்கை பண்ணி எப்போதும் ஏறிட்ட வில்லுங்கையுமாய் இருப்பர்களாகையாலே, அதனை உவந்து ஆழ்வார் அருளிச்செய்கிறாரென்க. பெரியாழ்வார் “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்திவிசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும் அதிசங்கையின் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்றாப்போல, இவரும் * மல்லார் திரடோள் மணிவண்ணனென்று அறிந்து வைத்தும் அதிசங்கையினால் மங்களாசாஸநத்திலே நிஷ்டையுடையராயிருப்பர் என்பது இப்பாட்டில் அறியத்தக்கது.


  1048.   
  வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
  மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*
  கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
  மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  

      விளக்கம்  


  • “என் நெஞ்சமே! நீ வானவர்தங்கள் சிந்தைபோல (திருவேங்கமுடை யானுக்கு) இன்று அடிமைத்தொழில் பூண்டாயே!” என்று உகந்து பேசுகிறார். இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும், இந்த மண்ணோருடைய நெஞ்சு எப்படி துர்விஷயங்களையே சிந்தை செய்கிறதோ அப்படி நீ விஷயாந்தரங்ளைச் சிந்தியாமல், ஒரு நாளும் ஸம்ஸார நாற்றமே கண்டறியாத நித்யஸூரிகளின் நெஞ்சு போலே திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழிலை ஏற்றுக்கொண்டாயே, உன்னுடைய பாக்கியமே பாக்கியம்! என்றவாறு. மேவி = இது வினையெச்சமன்று; மேவியவன் என்னும் பொருளதான பெயர்ச்சொல். இ-பெயர்விகுதி. ‘நாடோடி’ ‘பிறைசூடி’ ‘குதிரையோட்டி’ என்பன காண்க. மாண்குறளான அந்தணற்கு = தன்னுடையதான பூமியைப் பெறுவதற்குத் தான் யாசகனாக வந்து நின்ற பெருமானுடைய குறை தீர, நெஞ்சமே! நீ அவனுடைய வஸ்துவாக அமையப்பெற்றாயே! என்றவாறு மாவலிபக்கல் வந்தபோது வாமநப்ராஹ்மணனாக வந்தமையாலே ‘அந்தணற்கு’ எனப்பட்டது; அன்றி, ‘அந்தணரென்போர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டொழுகலான்” (திருக்குறள்-30.) என்றபடி அழகிய தண்மையையுடையவன் அந்தணன் என்றதாய், மஹாதர்மிஷ்டன் என்னவுமாம். முதலடியில் “இனிதுவந்து” என்றவிடத்து “இனிது உவந்து” என்றும் ‘இனிது வந்து’ என்றும் பிரிக்கலாம்.


  1049.   
  உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
  மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 
  குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
  வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*

      விளக்கம்  


  • நெஞ்சமே! திருமலையப்பனுடைய திருக்குணங்களின் வாசியறிந்து நீ அவன் திறத்திலே அடிமைத்தொழில்பூண்டாயே! நாம் பந்துக்களென்றும் தாயாதிகளென்றும் சில ஆபாஸபந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மைசெய்வதும், சிலரை சத்துருக்களென்று கொண்டு அவர்கட்குத் தீமைசெய்வதுமாக இருக்கிறோமே; இப்படியல்ல எம்பெருமானுடைய ஸ்வபாவம். அவன் எப்படிப்பட்டவனென்றால், உறவுசுற்றமென்றொன்றிலாவொருவன்; “ஸூஹ்ருதம் ஸர்வபூதாநாம்” என்றும் “தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யமதிதைவதம்” என்றும் எல்லார் திறத்திலும் வாசியற்ற அன்புடையவனாகச் சொல்லப்படுபவன். இன்னமும் எப்படிப்பட்டவனென்னில்; உகந்தவர் தம்மை மண்மிசைப் பிறவியே கெடுப்பான் = தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களை ஸம்ஸாரத்தில் நின்றும் களைந்தெடுத்து நித்ய ஸூரிகளுடைய திரளிலே நிறுத்துமவன். “அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே” என்று அந்வயம்.


  1050.   
  இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
  வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 
  வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
  மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  

      விளக்கம்  


  • பலவகைப்பட்ட புஷ்பங்களைக் கையிலேந்திக்கொண்டு துதிக்கவருகின்ற தொண்டர்களையும் அவர்களோடு ஸம்பந்தம்பெற்ற மற்றுமுள்ளாரையும் எம்பெருமான் விஷயீகரித்துப் பரமபதத்திலே கொண்டு சேர்க்கிறான் என்கிற இச்சிறந்த குணத்தைக்கண்டு நெஞ்சே! அத்திருவேங்கட முடையானுக்குத் தொண்டு பூண்டாயே! என்று உகக்கிறார். உறவோடும் வானிடைக் கொண்டுபோயிடவுமது கண்டு = தொண்டர்களாய் ஏத்துகிறவர்களுக்கு மாத்திரமேயன்று மோக்ஷம்; அவர்களோடு ஸம்பந்த ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு முண்டென்கிறார்.


  1051.   
  பாவியாது செய்தாய்*  என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
  மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்*  விசும்பு ஏற வைக்கும் எந்தை* 
  கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்*  வேங்கட மலை ஆண்டு*
  வானவர் ஆவியாய் இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*         

      விளக்கம்  


  • எம்பெருமான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்து, பக்தர்களிடத்தில் பல பல கைங்கரியங்களைக் கொண்டருளி அவ்வளவிலும் திருப்திபெறாமல் இன்னமும் இவர்களிடத்தில் நித்ய கைங்கரியங் கொள்ளவேணுமென்று அவர்களைத் திருநாட்டிலே கொண்டு வைக்குமவனாய் கோபால க்ருஷ்ணனான திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே நெஞ்சே! என்று உகக்கிறார். (பாவியாது செய்தாய்.) பாவித்தலாவது ஆராய்தல்; ஆராயாதே செய்தாய் என்றதன் கருத்தாவது-அத்தைச் செய்வோமோ இத்தைச் செய்வோமோ என்று அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டு தொண்டு செய்தாயே! என்கை. ‘ விஷயாந்தரங்களை அநுபவித்து ஸம்ஸாரியாய்க் கிடக்கலாமா, எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டு ஸ்வரூபம் நிறம் பெறலாமா? என்று தடுமாறாமல் சடக்கெனக் கைங்கரியத்தில் அந்வயிக்கப் பெற்றாயே! என்கை. கோவிநாயகன் = (கோபீ) என்ற வடசொல் கோவியெனத் திரியும்; ஆய்ச்சிகட்கு அன்பன் என்றபடி.


  1052.   
  பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
  தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 
  எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
  அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 

      விளக்கம்  


  • உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் ஓங்கினவிடம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்களின் சமயம் வியாபித்தவிடம் மிகப் பரம்பியும் இராநின்றது. இப்படிப்பட்ட வுலகத்திலே விதிவசத்தாலே நாம் புறமதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே ஜனித்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப்பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் வெளியிடுகிறார். பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாகவுடைய தென்றும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக வுடைய தென்றும் ப்ரஸித்தி உண்டாதலால் பொங்குபோதியும் பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர்என்றார். பொங்கு போதியுடையவர் புத்தர்; பிண்டியுடையவர் நோன்பியர் என்று முறை முறையே உணர்க. போதி என்று அரசமரத்திற்குப் பெயர்; அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது. பிண்டி என்று அசோகமரத்திற்குப் பெயர். புத்தர்-புத்ததேவதையைப்பற்றினவர்கள். ஜைநர்கள் அதிகமாக விரதங்கள் கொண்டாடுகிறவர்களாதலால் நோன்பியர் எனப்பட்டனர். ஆக, பொங்கு போதியைப் பிரதானமாகக் கொண்ட புத்தர்களும், பிண்டிமரத்தைப் பிரதானமாகக் கொண்ட ஜைநர்களும் ஆகிய இப்புறமதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்துகிடக்குமிம்மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் புகாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத்தொழில் பூண்டாயே!, நீயன்றோ பாக்யசாலி என்று உகந்தாராயிற்று.


  1053.   
  துவரி ஆடையர் மட்டையர்*  சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்* 
  தமரும் தாங்களுமே தடிக்க*  என் நெஞ்சம் என்பாய்* 
  கவரி மாக் கணம் சேரும்*  வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை* 
  அமர நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 

      விளக்கம்  


  • அரையிலே காஷாயத்தை உடுத்துக்கொண்டு மொட்டைத் தலையராகக் கிடக்கிற அமணர்கள் கண்டபடி மேல்விழுந்து சோறுகளைத் தின்று அவ்வளவோடு திருப்திபெறாமல், தங்களைப் போன்ற மற்றுமுள்ள அமணர்களுடனே பின்னையும் பெருங்கூட்டமாக இருந்து தின்று தின்று தடித்திருக்கக் காணாநின்றோம்; நெஞ்சமே நீயும் அவர்களைப்போலே உண்டியே உகந்து ஊன்மல்கி மோடுபருக்காதே திருவேங்கடமுடையானுக்குத் தொண்டுபூண்டு வாழப்பெற்றாயே! என்று உகந்தாராயிற்று. துவரி-காஷாயம். மட்டையர்- தலைமயிர்களைப் பிடுங்கி யெறிவதையே தொழிலாகக் கொண்டவர்களாதலால் மொட்டைத் தலையராயிருப்பர் சமணர். தலையிலே மயிர் வளர்ந்தால் பூச்சிகளும் புழுக்களும் சேரநேர்ந்து ஜீவஹிம்ஸை ஏற்படுமென்று அவர்கள் க்ஷெளரமும் செய்துகொள்ளாமல் பிறரைக்கொண்டு தலை மயிரைப் பிடிங்கி யெறியச் சொல்லுவார்களாம்; பிடுங்கும்போது நொந்தாலும் நோகிறதென்று வாய்விட்டுச் சொல்லாதே “பரமஸூகம்! பரமஸூகம்!!” என்றே சொல்லிக்கொண்டிருக்கவேணுமாம். இப்படிப்பட்ட ஆசரணையுடையவர்கள் இக்காலத்தில் உளரோ இலரோ அறியோம். -“ஸ்திர சிரஸிஜோல்லுஞ்சநேநைவ தண்ட:” என்றார் வேதாந்த தேசிகனும் ஸங்கல்பஸூர்யோதய நாடகத்தில் இரண்டாம் அங்கத்திலே. வேங்கடங் கோயில்கொண்ட என்பது அமரநாயகனுக்கு விசேஷணம்.


  1054.   
  தருக்கினால் சமண் செய்து*  சோறு தண் தயிரினால் திரளை*
  மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 
  மருள்கள் வண்டுகள் பாடும்*  வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* 
  வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*

      விளக்கம்  


  • தருக்காவது தர்க்கம்; யுக்திவாதம். கேவலம் யுக்திவாதங்களாலே மதஸ்தாபநம் செய்வது கூடாது; சாஸ்த்ரங்களுக்கு இணங்கிய யுக்திவாதங்களே உசிதமானவை; அங்ஙனன்றிக்கே பிரமாணங்களுக்கு விருத்தமான சுஷ்கதர்க்கங்களாலே தங்கள் மதத்தை உரைப்பராம் சமணர்கள்; அதை அருளிச் செய்கிறார் தருக்கினால் சமண் செய்து என்று. (சோறு இத்யாதி.) சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது- பெருஞ்சோறுண்ணுதல். தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி மிடற்றிலேயிட்டு நெருக்குவர்களாம் நோன்புக்குறுப்பாக; அப்போது படும் கஷ்டம் பொறுக்க முடியாததாம். இப்படி அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டுபூண்டு மகிழப்பெற்றாயே நெஞ்சமே! என்று உகக்கிறார்;. “தெருவில் திரி சிறு நோன்பியர்செஞ்சோற்றோடு கஞ்சிமருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று மேல் ஏழாம்பத்திலே அருளிச்செய்யும் பாசுரமும் இங்குக் குறிக்கொள்ளத் தகும்


  1055.   
  சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
  என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 
  வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
  ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 

      விளக்கம்  


  • சேயன், அணியன், சிறியன், பெரியன்” என்கிற வார்த்தைகள் பகவத் விஷயத்தில் இழியமாட்டாத ஸம்ஸாரிகள் சொல்லும் வார்த்தைகளாம்; பரவாஸூதேவன் எட்டாநிலத்திலே உள்ளவனாகையாலே வெகு தூரஸ்தனான அவனை ஆச்ரயிக்கப் போகாது என்பர் சிலர்; அர்ச்சாவதாரங்கள் ஸமீபத்திலுள்ளவை யாகையாலே அலக்ஷியம் தோற்றப் பேசுவர் சிலர்; ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் ஸௌலப்ய குணத்தில் ஈடுபடாதே சிறுமைகளைச் சொல்லி ஏசுவர் சிலர்; வியூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் உபாஸிக்கச் சொன்னால் நெஞ்சுக்கு மெட்டாத அப்பெரிய வுருவை எப்படி உபாஸிப்பதென்று சொல்லி யொழிவர் சிலர்; ஆக விப்படி அவரவர்கள் மனம்போனபடி பேசி பகவத் விஷயத்தில் அவகாஹிக்க மாட்டாதே ஸம்ஸாரிகளாய் உண்டுடுத்துத் திரியாநிற்கக் காண்கிறோம். எம்பெருமானுடைய சேய்மைமையக் சிலர் குற்றமாகக் கூறுவர்; அவனுடைய அண்மையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்; அவனுடைய பெருமையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்; ஆகவே அவனுடைய குணங்களெல்லாம் இகழ்ச்சிக்கு உறுப்பாகிக் கிடக்கும்போது, அப்படி இகழ்வாருடைய திரளில் புகாதே நெஞ்சே! நீ என்னோடும் ஒரு வார்த்தை சொல்லாதே திடீரென்று திருவேங்கமுடையான் விஷயத்தில் அடிமைத் தொழில்பூண்டு நின்றாயே! என்று உகந்து பேசினாராய்த்து.


  1056.   
  கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
  பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 
  ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
  வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  

      விளக்கம்  


  • “கூடியாடி உரைத்ததே உரைத்தாய்” என்றவிது தமது நெஞ்சின் பூர்வாவஸ்தையைச் சொன்னபடி. (தம்முடைய பூர்வாவஸ்தையையே கூறியவாறு.) நெஞ்சே! நீ நேற்றுவரை எப்படி போதுபோக்கித் திரிந்தாய்!; இன்று எப்படியானாய்! என்று ஆச்சரியம் தோற்ற அருளிச் செய்கிறார். விஷயாந்தரங்களிலே மண்டித்திரிகிற ஸம்ஸாரிகளோடே கூடியும், அவர்கள் அநுபவிக்கிற விஷயங்களையே அநுபவித்தும், அவர்கள் பேசுகிற பேச்சுக்களையே பேசியும் போந்தாயன்றோ நீ நேற்று வரையில்; இப்படியிருந்த நீ இன்று திடீரென்று எப்படிப்பட்ட நிலைமைக்கு வந்துவிட்டாய்!; நீ பெற்ற பாக்கியம் நீ அறிகின்றிலையாகையால் நான் எடுத்துச் சொல்லுகிறேன், அன்புடன் கேளாய் நெஞ்சமே!; பக்திக்குப் போக்குவிட்டுப் பாடியுமாடியும் பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காணமுடியாதவனும், பிரமன் சிவனிந்திரன் முதலான மேலாத் தெய்வங்கள் மேவித்தொழப் பெற்றவனுமான திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமைத்தொழில் பூண்டாய்காண் என்கிறார்


  1057.   
  மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
  அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 
  கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
  இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 

      விளக்கம்  


  • “மின்னுமா முகில்மேவு” என்ற விசேஷனம்- பெருமாளும் பிராட்டியும் கூடி வாழ்கிற வாழ்ச்சியை ஸூசிப்பித்ததாகவுமாம். மின்னின் ஸ்தானத்திலே பிராட்டியும், முகிலின் ஸ்தானத்திலே எம்பெருமானும். கன்னி - அழிவில்லாமை,


  1518.   
  மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
  தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*
  தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
  நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     

      விளக்கம்  


  • நான் சென்று நாடி = எம்பெருமான் என்னைப் பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித்திரிந்தான்; அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்; இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே காணவேண்டாமல், விடாய்த்த விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.


  1572.   
  ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
  தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
  வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
  தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.

      விளக்கம்  


  • பலவகைகளாலும் கனக்கப் பாவங்களைப்பண்ணி அவற்றின் பலன்களை யநுபவிக்க கொடிய நரகங்களிலே சென்று நோவுபடுங்கால், ‘தான் பண்ணின பாவங்களின் பலனைத் தான் அநுபவிக்கட்டும்; நமக்கு வந்ததென்ன?’ என்றிராமல் அங்கே யெழுந்தருளி ‘நாம் இருக்க நீ பாபங்களின் பலனை அநுபவிக்க ப்ராப்தியுண்டோ? அஞ்சாதே’ என்று அபயப்ரதானம்பண்ணி ரக்ஷித்ருளு மெம்பிரானையே என்மனம் சிந்திக்கின்ற தென்கிறார். நரகத்திலே அழுந்தும்போது அங்கே வந்து தாங்குவதாகச் சொல்லுகிற விதற்குக் கருத்து என் எனில்;? * தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின் முன்னாக விழப்பதாகிற யமதண்டனைகளை யநுபவித்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் அங்கே வந்து காத்தருள்கின்றா னென்கிறதன்று; ‘ஐயோ! நாம் எல்லை யில்லாத பாவங்களைப் பண்ணிவிட்டோமே; வெவ்விய நரகங்களிலே சென்று கொடிய துன்பங்களை யநுபவிக்க நேருமே, என் செய்வோம்!’ என்று கவலைப்பட்டு வருந்தியிருக்கு மிருப்பிலே வந்து அபயப்ரதானம் பண்ணும்படியைச் சொன்னவாறு.


  1659.   
  நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
  காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*
  பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
  நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 

      விளக்கம்  


  • ‘இப்பரகாலநாயகியை மநுஷ்ய ஸஞ்சாரமில்லாத வோரிடத்திலே கொண்டு போய் வைத்தால் திருக்கண்ணபுரத் தெம்பெருமானிடத்து இவளுக்குண்டான அபிநிவேசம் ஒருவாறு தணியக்கூடும்’ என்றெண்ணித் திருத்தாய் இவளை ஒரு உயர்ந்த மாடமாளிகையிலே கொண்டு வைத்தாள்; அவ்விடமெ நீணிலாமுற்றம் எனப்படுகின்றது; உந்நதமாயும் நிலாவோடு கூடினதாயுமிருக்கிற முற்றம் என்றபடி. அவ்விடத்தில் நின்றுகொண்டு திருக்கண்ணபுரத்தை நோக்கினாள். காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள் = ‘சாண்நீளச் சிறுக்கியான வுனக்கு இப்படிப்பட்ட ப்ராவண்யம் தகாது’ என்று அடிக்கடி சிக்ஷிக்கின்ற தாயாகிய என்னையும் அஞ்சாதே அழைத்து ‘அதோபார், திருக்கண்ணபுரம் தெரிகிறதா?’ என்று விரலாற் சுட்டிக் காட்டுகின்றாளே. (அன்றியே) திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று பன்னியுரைக்கப் புகுந்து விவக்ஷிதங்களைப் பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை ஹஸ்த முத்ரையாலே பூரிக்கின்றாள் என்றுமாம். பாணனார் திண்ணமிருக் இனியிவள் நாணுமோ? = நாயகனால் நாயகிபக்கலில் அனுப்பப்படுகின்ற தூதுவன்போன்ற ஒருவனுக்குப் பாணன் என்று பெயர்; (பாணன் பாடுமவன்.) நாயகியினுடைய ப்ரணய ரோஷங்களைப் போக்கி அவளை நாயகனோடே சேர்ப்பிக்குமவன் பாணன் என்று கொள்க. (திருவரங்கக் கலம்பகத்தில் (81) “விடாது பூமடந்தைமார்......அடாததன்று பாண! ...” என்ற செய்யுள் நோக்குக.) இங்குப் ‘பாணானார் என்றது பூஜோதிக்தி; சேதநனை ஈச்வரனோடே சேரச்செய்கின்ற ஆசாரியரே இங்குப் பாணனா எனப்படுகிறார். திண்ணமிருக்க இனியிவள் நாணுமோ? = “உங்களோடெங்களிடைமில்லையே” என்னும்படி தேஹபந்துக்களோடே உறவையறுத்து பகவத்விஷயத்திலேயே அவகாஹிக்கச் செய்கிற ஆசார்யனுடைய வலிமை இவளுக்கு இருக்கும்போது இனி இவள் அவ்விஷயத்தில் நின்றும் மீளமாட்டாள் போலு மென்கை. (நாணுமோ?) நாணாவது லஜ்ஜை; இலக்கணையால், லஜ்ஜையின் காரியமான மீட்சியை இங்கு விலக்ஷிக்கிறது. நன்று நன்று நறையூரார்க்கே இவளை மீட்கப்பார்க்கிற நமக்கு நல்லகாலமில்லை; முதலிலே இவளைத் தன் வலையிலகப்படுத்திக்கொண்ட திருநறையூர் நம்பியின் எண்ணமே நிறைவேறா நின்றமையால் அவர்க்கே நல்லகாலமாயிருக்கின்ற தென்கை.


  1849.   
  பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
  மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
  என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
  தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)

      விளக்கம்  


  • முதற்பாட்டிலுள்ள ‘நெருநெல்’ ‘இன்று’ என்னுஞ் சொற்கள் பாசுரந்தோறும் அந்வயிக்கவுரியன. நெருநெல் வேங்கடத்துச்சியில் கண்டு இன்று தண்காவில்காண்டும் என்றவாறு. இங்ஙனமே மேற்பாசுரங்களிலும் காண்க. இப்பாசுரங்களில் எம்பெருமானுக்கு இடுகிற விசேஷணங்களை யெல்லாம் ஒருசேர அந்வயித்துக் கொண்டு முடிவில் ‘அத்தலத்தில்கண்டோம், இத்தலத்தில் காண்போம்’ என்பதாக அந்வயித்துக்கொள்க. அன்றி, பாசுரப்போக்கு உள்ளபடியே அந்வயித்துக் கொள்வதும் தகும். திருத்தண்கா - காஞ்சீபுரத்திலுள்ள விளக்கொளியெம்பெருமாள் ஸந்நிதி திருத்தண்கால் வேறு, அது பாண்டிநாட்டிலுள்ளது.


  1946.   
  சொல்லாய் பைங்கிளியே,* 
  சுடர்ஆழி வலன்உயர்த்த,*
  மல்ஆர் தோள்*  வட வேங்கடவனைவர,*
  சொல்லாய் பைங்கிளியே!  (2) 

      விளக்கம்  


  • பைங்கிளியை நோக்கிக் கூறுகின்றாள் - கிளியே! நீ ஏதேனுஞ் சில சொற்களைச் சொல்லிக்கொண்டிருப்பதனால் என்ன பயனுண்டு? எம்பெருமானை இங்கு வரச் சொல்லு என்கிறாள். ப்ராப்திப்ரதிபந்தகங்கள் பல கிடக்கும்போது எளிதாக அப்பெருமான் இங்கு வந்திடுவானோ என்று அக்கிளி நினைக்க, அப்படி நினைக்கலாமோ? விரோதிகளை இரு துண்டமாக்குதற்குப் பாங்கான திருவாழியாழ்வானை வலத்திருக்கையில் ஏந்தியுள்ளான் காண்; அவ்வாயுதந்தானும மிகையாம்படி மிடுக்கில் குறையற்ற திருத்தோள்களையுடையவன்காண்; என்னை அணைவதற்கென்றே பயணமெடுத்துவிட்டுத் திருவேங்கட மலையிலே நிற்கிறான்காண்; அன்னவனை இங்கு வரச்சொல்லாய் என்கிறாள்.


  2001.   
  கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
  வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*
  வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
  உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)

      விளக்கம்  


  • தோழீ! நீ உகக்கும் பெருமான் பிரமாணிகனல்லன்; க்ருத்ரிம வேஷத்தாலே மாவலி பக்கலில் மூவடிமண் வாங்கி மூவுலகுமளந்தவனாகையாலே நயவஞ்சகன்; அது கிடக்கட்டும் ஒருவர்க்கும் சென்று கிட்டவொண்ணாதபடி எங்கேயோ திருப்பாற்கடலிலும் திருவேங்கடமலையிலும் இருப்பவனாகச் செல்லுகிறார்களேயன்றி ஸந்நிஹிதனல்லனேயென்ன தோழீ! இவ்வளவேயோ நீயறிந்தது? திருமங்கையாழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து வஸிப்பதற்கு உபாயாநுஷ்டாநம் செய்கிறபடியாகவன்றோ அவன் திருப்பாற் கடலிலும் திருமலையிலும் வஸித்தது; இப்போது அவ்விடங்களையெல்லாம் விட்டு ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே ஸந்நிஹிதனாயுளன்காண்க என்கிறாள்.


  2067.   
  கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
  மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 
  வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
  துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)  

      விளக்கம்  


  • மென்கிளிபோல் மிகமிழற்று மென்தையே“ என்றது கீழ்ப்பாட்டில்; நாயகன் எதிரே நிற்கிறானாக நினைத்து மென்கிளிபோல் வார்த்தை சொன்னவிடத்தில் அவனும் அப்படியே மேலிட்டுவார்த்தை சொல்லக்கேட்டிலள்; அதனால் நின்ற நிலைகுலைந்து கூப்பாடுபோடத் தொடங்கினாளென்மக ளென்கிறாள் திருத்தாய். அவனுடைய ரக்ஷகத்வமும் லௌலப்ய ளெஸசீல்யாதிகளும் பாவியேனிடத்தில் பலிக்கப் பெற்றிலவே! என்று கண்ணுங் கண்ணீருமாய்க் கதறுகிறபடியைப் பேசுகிறாளாய்ச் செல்லுகிறது. கன்றுமேய்த்து இனிதுகந்தகாளாய் என்றும் = ஸர்வரக்ஷகனான நீ ரக்ஷணத் தொழிலில் நின்றும் கைவாங்கினாயோ என்கிறாள். நித்யஸூரிகளை ரக்ஷிக்குமளவோடே நின்றால் ஆறியிருப்பேன்; ராமகிருஷ்ணாதிரூபத்தாலே வந்தவதரித்து இடக்கையும் வலக்கையுமறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்; அறிவுகேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையுமுட்பட மேய்த்த உன்னைவிட்டு எங்ஙனே ஆறியிருப்பே னென்கிறாள். அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன்வாசியையறிந்து உன்னையொழியச்செல்லாத வென்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப்பெற்றிலேனே! என்கிறாள்போலும். கண்ணபிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும் கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆம் என்பது சொற்போக்கில் தெரியக் கிடக்கிறது; “திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி“ என்றார் நம்மாழ்வார்; “கன்றுமேய்த்து இனிது உகந்த“ என்கிறாரிவ்வாழ்வாழ்வார். காளாய்! = இளம்பருவத்தைச் சொன்னபடி; “காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம். கடிபொழில்சூழ் கணபுரத் தென்கனியே யென்றும் = அவ்வக்காலங்களில் பிற்பட்டாரையும் ரக்ஷிக்கைக்காகவன்றோ திருக்கண்ணபுரத்திலே வந்து இனியகனிபோல் நின்றருளிற்று. “கன்றுமேய்த்தினிதுகந்த காளாய்“ என்றவுடனே “கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே“ என்று சொன்ன அமைதியை நோக்கி இவ்விடத்திற்கு பட்டர் ரஸோக்தியாக அருளிச் செய்வதொன்றுண்டு;- “கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவை கைதவறிப் போகையாலே அவற்றை மடக்கிப் பிடிக்கப்போனவிடத்திலே விடாய்தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு திருவாய்ப்பாடியாக நினைத்துப்புகுந்தான்; அப்பொழில் * மயல்மிகுபொழிலாகையாலே கால்வாங்கமாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக்கண்ணபுரம்“ என்பராம். கடிபொழில்சூழ் கணபுரம் = “ஸர்வகந்த;“ என்கிற சுருதியின்படியே பரிமளமயனாயிருக்கிற எம்பெருமானையும் கால்தாழப் பண்ணுவித்துக் கொள்ளவல்ல பரிமளமுற்ற பொழில்களென்க. (கணபுரத்தென் கனியே!) அச்சோலைபழுத்த பழம்போலும் சௌரிராஜன், “என் கனியே“ என்கையாலே உபாயாந்தர நிஷ்டர்களுக்குக் காயாகவேயிருப்பனென்பது போதரும். அவர்களுக்கு ஸாதநாநுஷ்டானம் தலைக்கட்டின பின்பு அனுபவமாகையாலே அதுவரையில் காயாயிருப்பன்; ப்ரபந்நர்க்கு அத்யவஸாயமுண்டான ஸமயமேபிடித்துப் பரம போக்யனா யிருக்கையாலே பக்குவ பலமாயிருப்பன். அவல்பொதி அவிழ்ப்பாரைப் போலே ஸமுதாய ஸ்தலத்திலே ஸர்வஸ்வதானம் பண்ணினாயல்லையோ என்கிறாள். மன்று - நாற்சந்தி; அஃது அமரக் கூத்தாடுகையாவது கூத்தாடிமுடிந்தபின்பும் அவ்விடம் கூத்தாடுவதுபோலவே காணப்படுகையாம். “பெருமாள் எழுந்தருளிப் புக்க திருவீதிபோலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது“ என்று பட்டர் பணிக்கும்படி. மன்று என்று இடையரெல்லாரும் திரளுமிடத்திற்கும் பெயராதால், இச்சொல் ஆகு பெயரால் இடையர்களை உணர்த்தி இடையரெல்லாரும் ஈடுபடும்படும்படியாகக் கூத்தாடினமை சொல்லுகிறதென்றும் உரைப்ப. மகிழ்ந்தாய் என்றவிடத்திற்குப் பெரியாச்சான்பிள்ளை வியாக்கியானம் காண்மின் ;- “கூத்துக் கண்டவர்கள் உகக்கையன்றியே உகப்பானும், தானாயிருக்கை; அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக்கொள்வானும் தானாய் உகப்பானும் தானாயிரக்கிறபடி. “-ஸஜாதீயர்களை ஈடுபடுத்திக்கொள்ளப் பெற்றோம் என்று உகந்தானாயிற்று. அந்தணர்க்குச் செல்வம் மிக்க பல யாகங்கள் நிகழ்த்துமா போலவும் விஷயபரவணர்க்கு ஐச்வரியம் விஞ்சினால் அடுத்தடுத்து விவாஹம்பண்ணிக் கொள்ளுமாபோலவும் இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் போக்குவீடாக ஆடுவதொரு கூத்து குடக்கூத்து; சாதி மெய்ப்பாட்டுக்காகக் கண்ணபிரான் குடக்கூத்தாடினபடி. ஊர்ப்பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதாபந் தோற்றச் சொல்லும் வார்த்தை மன்றமரக்கூத்தாடி மகிழ்ந்தாய்! என்பது. வடதிவேங்கடம்மேய மைந்தா வென்று = ஒரு ஊரிலே மன்றிலேநின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்தபடியைச் சொல்லுகிறது; “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ – “வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும் “கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்றுஞ் சொல்லுகிறபடியே உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற அனைவரும் கொள்ளை கொள்ளும்வடிவு எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதபித்துச் சொல்லுகிறபடி. வென்றசுரர்குலங்களைந்த வேந்தே யென்றும் = அவன்றான் விரோதி நிவ்ருத்தியைச் செய்வதற்கு அசக்தனென்றும் அது பிறரால் ஆகவேண்டிய தென்றும் இருந்தால் ஒருவாறு ஆறியிருக்கலாம்; அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களைக் கிழங்கெடுத்து வெற்றிபெற்ற பெருவீரனாய் அவன் விளங்கும்போதும் நான் இழக்கிறனே! என்று வருந்திச் சொல்லுகிறபடி. வீரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாயென்றும் = வென்று அசுரர் குலங்களைந்த அவதாரத்திலும் இழந்தவர்களுக்கும் முகங் கொடுப்பதற்காகத் திருநறையூரிலே வந்து நின்றருளுமவனே! என்கிறாள். நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாக்ஷிக்க அக்கடாக்ஷமே விளைநீராக வளருகிற பொழிலாகையாலே விரிபொழிலாயிருக்கும். அசேதநங்களைக் கடாக்ஷித்து வளரச்செய்பவன் என்னைக் கடாக்ஷியாதொழிவதே! என்கிறாள். பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னூரை அவள்பெயராலே ப்ரஸித்தப்படுத்தி * நாச்சியார் கோவிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கைவழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை விஷமாக நினைப்பதே! என்பதும் உள்ளுறை. துன்றுகுழல் கருநிறத்து என்துணையே யென்று – மிகவும் நெருங்கி இருண்டிருக்கின்ற திருக்குழற் கற்றையையும் காளமேகம் போன்ற வடிவையுமுடைய உன் துணைவனே! என்கிறாள். ஆக இப்படியெல்லாம் சொல்லாநின்று கொண்டு தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி காணாமையாலே * கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்ந்தாளாயிற்று. கன்று மேய்த்தினிதுகந்த காளாயென்று சொல்லித் துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாள், கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே யென்று சொல்லித் துணைமுலைமேல் துளி சோரச்சோர்கின்றாள் என்று தனித்தனியே கூட்டியுரைத்துக் கொள்க.


  2107.   
  எழுவார் விடைகொள்வார்*  ஈன்துழாயானை,* 
  வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,*
  வினைச்சுடரை நந்துவிக்கும்*  வேங்கடமே,*  வானோர்- 
  மனச்சுடரைத் தூண்டும் மலை.  

      விளக்கம்  


  • எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன்மேலும் ஆசைப்பெருக்கமுடையவர்களையும் சொல்லும். இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு, ‘எங்களுக்கு ஐச்வர்யத்தைத் தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும் எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றாவது, ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றாவது கொள்க. இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது- ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. விடை கொள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது. அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – ஆத்மாநுபவத்திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து கைவல்யா நுபவத்தை நிறைவேற்றுகை. ஈன்துழாயானை வழுவரவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள் - பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்; அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத் தொலைத்து முத்தியளிக்கை. ஆக, வேண்டுவோர் வேண்டின படியே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று. [வினைச்சுடரை நந்துவிக்கும்]- பாவங்களை நெருப்பாக ரூபித்துக் கூறினமைக்கு இணங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது; நந்துவித்தல்- (நெருப்பை)அணைத்தல். [வானோர்மனச் சுடரைத் தூண்டும்மலை.] – ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்று சமத்காரமாக அருளிசெய்கிறார். வானோர் மனச்சுரடைத் தூண்டுகையாவது- பரமபதத்திலே பரத்வகுணத்தை அநுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸூரிகளை , இங்குவந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உத்ஸாஹமூட்டுதலாம். திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அநுஸந்தித்தாராயிற்று


  2118.   
  வகைஅறு நுண்கேள்வி வாய்வார்கள்,*  நாளும்- 
  புகைவிளக்கும்*  பூம்புனலும் ஏந்தி,*  - திசைதிசையின்-
  வேதியர்கள்*  சென்றுஇறைஞ்சும் வேங்கடமே,*  வெண்சங்கம்- 
  ஊதியவாய்*  மால்உகந்த ஊர்       

      விளக்கம்  


  • மூன்று பாசுரங்களாலே திருமலையை அநுபவிக்கிறார். எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடமலை யென்கிறார். அத்திருமலை எப்படிப்பட்ட தென்னில்; தினந்தோறும் பல பல திசைகளினின்றும் வைதிகர்கள் வந்து தூபதீபம் முதலிய திருவாராதநஸாமக்ரிகளைக்கொண்டு ஆச்ரயிக்கப்பெற்றது – என்கிறார். அந்த வைதிகர்கட்கு விசேஷணமிடுகிறார் வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் என்று ஸூக்ஷ்மமான சாஸ்த்ரார்த்தங்களையும் அலகலகாக நிச்சயித்தறியக் கூடிய கேள்வி வாய்ந்தவர்கள்- பஹூச்ருதர்கள் என்றபடி.


  2119.   
  ஊரும் வரிஅரவம்*  ஒண்குறவர் மால்யானை,* 
  பேர எறிந்த பெருமணியைக்,* - கார்உடைய-
  மின்என்று*  புற்றுஅடையும் வேங்கடமே,*  மேலசுரர்- 
  எம்என்னும் மாலது இடம்.  

      விளக்கம்  


  • திருவேங்கடமலையே நித்யஸூரி நிர்வாஹகனான எம்பெருமான் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமென்கிறார். திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள் முற்றும் மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாயிருக்கும். ஸ்ரீகுலசேகராழ்வார் தம்முடைய பிரபந்தத்திலே * நான்காந்திருமொழியிலே “வேங்கடத்துக்கோனேரிவாழுங் குருகாய்ப்பிறப்பேனே” என்று தொடங்கித் திருமலையிற் பலவகை பிறவிபிறக்கக் குதூஹலித்து, கடைசியாக “ எழில் வேங்கடமென்னு மெம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே” என்று தலைக்கட்டியிருப்பதற்கேற்ப, இக்குலசேகராழ்வாரைப் போன்ற அத்யவஸாயமுடைய மஹான்களே திருமலையில் பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்களாகையாலே அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே உத்தேச்யமாகக்கொண்ட இவ்வாழ்வார் இப்பாசுரத்தாலே தம்முடைய ப்ரதிபத்தியை வெளியிடுகின்றாரென்க. குறவர்களுக்குப் புனங்காப்பது தொழில்; புனங்களிலே யானை முதலிய ஜந்துக்கள் பட்டிமேயப் புகும்; அவற்றைத் துரத்திப் புனத்தைக் காவல்செய்து கொள்ளவேண்டிய குறவர் தாங்கள் பரண்களிலேயிருந்தபடியே தங்கள் கையிலுள்ள பெரிய மாணிக்கக்கட்டியை யானையின்மீது எறிவர்கள் – யானை புனத்தைவிட்டு அப்பால்போவதற்காக. அப்போது அங்குத்திரியாநின்ற மலைப்பாம்புகளானவை யானையின்மேற்பட்ட ரத்னத்தைக்கண்டு, யானையை மேகமாகவும் ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து மேகத்தில் மின்னலுண்டானவுடனே இடி உண்டாகுமாகையாலும் , பாம்புகள் இடிக்கு அஞ்சி ஒளிக்கு மியல்புடையனவாகையாலும் அப்பாம்புகள் புற்றினுள்ளே புகாநிற்கும். இப்படிப்பட்ட தன்மைவாய்ந்த திருமலை எம்பெருமானது திருப்பதியாம் என்றாராயிற்று.


  2120.   
  இடந்தது பூமி*  எடுத்தது குன்றம்,* 
  கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச* - கிடந்ததுவும்-
  நீர்ஓத மாகடலே*  நின்றதுவும் வேங்கடமே,*
  பேர்ஓத வண்ணர் பெரிது.    

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய பல செயல்களை அநுஸந்தித்து இனியராகிறார். முன்பு மஹாப்ரளயத்தில் அண்டபித்தியில் ஒட்டிக்கிடந்த பூமியை மஹாவராஹமாகி உத்தரித்தான்; இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடாமழை பெய்வித்தவன்று திருவாய்ப்பாடியைக் காத்தருள்வதற்காகக் கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்துப் பிடித்தான்; சாதுசனங்களை நலிந்துகொண்டிருந்த கம்சனைக் கொன்றொழித்தான்; அவதாரங்களுக்கு மூலகந்தமாகத் திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளாநின்றான்; வானோர்க்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாகத் திருவேங்கடமலையிலே தன்பெருமையெல்லாம் பொலிய நின்றருள்கின்றான் – என்று இப்பாட்டில் அநுஸந்திப்பதன் கருத்தாவது இப்படி ஓயாமல் பிறர் காரியமே போது போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை வருணிக்க முடியாதது என்றதாம்.


  2121.   
  பெருவில் பகழிக்*  குறவர்கைச் செந்தீ* 
  வெருவிப் புனம்துறந்த வேழம்,* - இருவிசும்பில்-
  மீன்வீழக்*  கண்டுஅஞ்சும் வேங்கடமே,*  மேல்அசுரர்- 
  கோன்வீழக் கண்டுஉகந்தான் குன்று  

      விளக்கம்  


  • “வேங்கடமே அசுரர்கோன் வீழக்கண்டு உகந்தான் குன்று“ – பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரமபாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த ஆச்ரிதபக்ஷபாத மஹாகுணத்தை வெளியிட்டுக்கொண்டு இன்றைக்கும் ஸேவைஸாதிக்குமிடம் திருமலையென்கிறார்.அத்திருவேங்கடம் எப்படிப்பட்டதென்ன அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறாரிதில். திருமலையிற் கொல்லைகளில் (இராக்காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக அம்புதொடுத்தவில்லை ஒரு கையிலே கொண்ட குறவர்கள் மற்றொரு கையிலே தீவட்டியைக்கொளுத்திப் பிடித்துக்கொண்டு அதட்டிச்செல்ல, அத்தீவட்டியையும் அம்புகோத்த வில்லையும் கண்ட அக்களிறு அஞ்சி ஓடிப் போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரம் அவ்யானை பதறிசெல்லும் வழியிடையே வந்து பெருஞ்சோதியுடனே விழ, அதைக்கண்டு இது நக்ஷத்ரமென்ருணராது ‘குறவர்கள் கைத்தீவட்டியையே கீழெறிந்தார்கள்’ என்று ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்லவல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.


  2157.   
  வழிநின்று*  நின்னைத் தொழுவார்,*  வழுவா-
  மொழிநின்ற மூர்த்தியரே ஆவர்,* - பழுதுஒன்றும்-
  வாராத வண்ணமே*  விண்கொடுக்கும்,*  மண்அளந்த-
  சீரான் திருவேங்கடம். 

      விளக்கம்  


  • எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப் பற்றினார்க்கு நற்கதியைத் தரும் வல்லமையுடையதாயிருக்கையில், எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதிபெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்லவேணுமோ? என்கிறார். கைமுதிக நியாயம் தோற்றப் பேசின பாசுரம் இது. மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராதவண்ணம் விண்கொடுக்குமதாயிருக்க, நின்னை வழிநின்று தொழுமவர்கள் வழுவாமொழிநின்ற மூர்த்தியராவரென்பது விசேஷித்துச் சொல்லவேண்டிய விஷயமோ என்றவாறு.


  2163.   
  படைஆரும் வாள்கண்ணார்*  பாரசிநாள்,*  பைம்பூந்-
  தொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-
  மீன்மாய*  மாசூணும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்- 
  மான்மாய*  எய்தான் வரை    

      விளக்கம்  


  • பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்ரயிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிறபடியை அநுஸந்திக்கிறார். திருமலையில் நாள்தோறும் நானாவகையடியவர்கள் வந்து ஆச்ரயியா நிற்க, ‘படையாரும் வாள் கண்ணார்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும் ‘பாரசிநாள்’ என்று த்வாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்னதன் கருத்து யாதெனில்; அறிவொன்று மில்லாத பெண்களுங்கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்ரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப் படையாரும் வாள் கண்ணர்’ என்றார்; சிற்றஞ் சிறுகாலையில் தானே பாரணை செய்யும்படி விடிவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாதசிநாளை யெடுத்தருளிச் செய்தனர். ‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம் - வடசொல். திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்றதென்பது மூன்றாமடியின் கருத்து.


  2180.   
  உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
  உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
  வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
  உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)

      விளக்கம்  


  • தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு வாஸஸ்தலங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வஸிப்பதானது ஸமயம்பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம். ஸ்ரீவாநபூஷனத்தில்— “திருமாலிருஞ்சோலைமலையே என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைத் தேகத்திலே பன்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதாநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்; ‘கல்லுங் கனைகடலும்’ என்கிறபடியே இதுஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸூக்திகள் காண்க. நெஞ்சே! ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரன் திருப்பாற்கடல் திருமலை முதலிய இடங்களில் வந்து தங்கினது விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம்முடைய நெஞ்சில் ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீ அறிந்து உவந்திரு என்கிறார். இதோ, நன்னெஞ்சே! என்று நெஞ்சை விளித்து ‘உள்ளத்தினுள்ளா னென்றோர்’ என்றது எங்ஙனே பொருந்தும்? நெஞ்சமும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பதுபோலச் சொல்லியிருக்கிறதே, இஃது ஏன்? என்னில்; இது மிகச் சிறிய கேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி விளிப்பது அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்துகொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம். நெஞ்சு தவிர உசாத்துணையாவார் வேறொருவரு மில்லாமையால் நெஞ்சை விளித்துச் சொல்லுகிறதித்தனை.


  2206.   
  சென்றது இலங்கைமேல்*  செவ்வே தன் சீற்றத்தால்,*
  கொன்றது இராவணனை கூறுங்கால்,*  -நின்றதுவும்-
  வேய் ஓங்கு தண் சாரல்*  வேங்கடமே,*  விண்ணவர் தம்-
  வாய் ஓங்கு*  தொல் புகழான் வந்து.   

      விளக்கம்  


  • “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது - ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன் தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிச் செய்வராம் திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும் ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால் தானே நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம். படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே; அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும் இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?


  2214.   
  துணிந்தது சிந்தை*  துழாய் அலங்கல்,*  அங்கம்-
  அணிந்தவன்*  பேர் உள்ளத்துப் பல்கால்,*  - பணிந்ததுவும்- 
  வேய் பிறங்கு சாரல்*  விறல் வேங்கடவனையே,* 
  வாய் திறங்கள் சொல்லும் வகை.             

      விளக்கம்  


  • “யத் ஹி மநஸா த்யாயதி தத் வாசா வததி தத் கர்மணா கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசுரத்திற் பேசினர்; இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரீரம் முந்துகிறபடியை இப்பாசுரத்தில் மொழிகின்றார். ‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு. கீழ்ப்பாட்டில் மனமொழி மெய்களை வரிசையாகச்சொல்லி, இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க. “வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை என்பதில் ஏக தேசமான வேங்கடத்தில் அந்வயிக்கும்; ‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அந்வயிக்கும். விறல் - பெருமை, வலி, வீரம், வெற்றி. திறம் - குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன. திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபகுண விபூதிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதிலே வாய்துணிவு கொண்டதென்கை.


  2226.   
  உளது என்று இறுமாவார்*  உண்டு இல்லை என்று,*
  தளர்தல் அதன் அருகும் சாரார்,*  - அளவு அரிய-
  வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடி தோயும்,*
  பாதத்தான் பாதம் பயின்று.        

      விளக்கம்  


  • பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும், அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும், அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று செருக்குக் கொள்ளமாட்டார்கள், இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள் 1. “களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையையுடையராயிருப்பர் 2. “முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்... எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத்பக்தர்களும். உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது, சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார். ‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.


  2234.   
  நெறியார் குழல் கற்றை*  முன்நின்று பின் தாழ்ந்து,*
  அறியாது இளங் கிரி என்று எண்ணி*  - பிரியாது- 
  பூங்கொடிக்கள் வைகும்*  பொரு புனல் குன்று என்னும்*
  வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.         

      விளக்கம்  


  • திருவேங்கடமலையை ஒரு சமத்காரம் பொலிய வருணிக்கிறார். திருமலையாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர் 1. ‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” என்று ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதாம் வைத்து, திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர். அப்போது, மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ் செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே யோகநிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அன்னவர்களது கூந்தல் ‘கற்றையானது முன்னின்று பின்தாழ்ந்திருப்பதைக்கண்ட பூங்கொடிகளானவை சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்‘ என்றும் ‘அவர்களுடைய சூழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது‘ என்றும் தெரிந்து கொள்ளாமல் வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமானவொரு காட்சியாயமைந்தது. இப்படிப் பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம் என்றாராயிற்று கிரி – வடசொல்.


  2253.   
  போது அறிந்து வானரங்கள்*  பூஞ்சுனை புக்கு,*  ஆங்கு அலர்ந்த-
  போது அரிந்துகொண்டு ஏத்தும் போது,*  உள்ளம் போதும்- 
  மணி வேங்கடவன்*  மலர் அடிக்கே செல்ல,* 
  அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.         

      விளக்கம்  


  • திருமலையில் திர்ய ஐந்துக்களான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி நெஞ்சே! நீயும் அப்படி செய்ய வேணுமென்கிறார் பஞ்ச பஞ்ச உஷகாலத்திலே ரிஷிகள் நீயும் துயில்விட்டெம்மாபோலே குரங்குகளும் எழுந்து பூத்த கனைகளிலேசென்று ஸ்நாநம்பண்ணி அங்குள்ள செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து பணியா நிற்கும் நெஞ்சே! நீயும் அப்படி செய்யப்புறப்படு திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களும் வாசகமான திருநாமங்களை அநுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாம் கொணர்ந்து அவனது திருவடித் தாமரைகளிர் சாத்துவாயாக. இப்பாட்டில் போது என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளதும் முதுலிலுள்ளதற்குக் காலமென்று பொருள், இரண்டாவதாகவும் நான்கால் முள்ளதற்கு புஷ்பமென்று பொருள், மூன்றாவது வினைமுற்றாய் புறப்படு என்னும் பொருளது. மூன்றாமடியின் முதற்சீர் மோனை யின் பத்திரகிணங்க ‘மணி‘ என்றிருக்க தகுமாதலால் “மணி வேங்கடவன்“ என்றல் சிறக்கும் நான்காம்படியின் முதலினும் அணி என்பதை வினைமுற்றாகக் கொள்ளலாம்.


  2256.   
  பெருகு மத வேழம்*  மாப் பிடிக்கு முன் நின்று,* 
  இரு கண் இள மூங்கில் வாங்கி,*  - அருகு இருந்த-
  தேன் கலந்து நீட்டும்*  திருவேங்கடம் கண்டீர்,* 
  வான் கலந்த வண்ணன் வரை.    

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் ‘பெருந்தமிழன் நல்லேன் பெரிது‘ என்று போரப்பொலியச் சொல்லிக்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறி ஒருகவி சொல்லும், பார்ப்போம்‘ என்ன, அப்போ தருளிச்செய்த கவியாம் இது. வடதிருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம் போனபடி திரிந்துகொண்டிருந்த ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது, அதனைமீறி அப்பாற்செல்லமாட்டாமல் அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை த்ருப்தி செய்விக்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுங்கித் தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம், இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேகநிறத்தனான எம்பெருமான் உவந்து எழுந்தருளி யிருக்குமிடம் என்றாராயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள். பெரிய திருமொழியில் “வரைசெய்யாகளி றிளவெதில் வளர்முறை யளைமிகு தேன்தோய்த்தும், பிரசவசயீதன் இளம்பிடிக்கருள்செயும் பிரதிசென்றடைநெஞசே என்ற (1-2-5) என்ற பாசுரமும் இப்பொருள் கொண்டதே.


  2295.   
  மால்பால் மனம்சுழிப்ப*  மங்கையர்தோள் கைவிட்டு,* 
  நூல்பால் மனம்வைக்க நொய்விதுஆம்,*  நால்பால
  வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடிதோயும்,*
  பாதத்தான் பாதம் பணிந்து. 

      விளக்கம்  


  • “அறிவென்னுந்தான் கொளுவி“ என்கிறபாட்டில் –இந்திரியங்களைப் பட்டிமேய வொண்ணாதபடி அடக்கி நின்று சாஸ்த்ரங்களை அப்யஸித்தால் எம்பெருமான் படிகளைக் காணலாமென்றார். இது எளிதில் கைகூடாத காரியமாயிற்றே! என்று சிலர் நினைக்ககூடுமே, அவர்களுக்குச் சொல்லுகிறார். நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் திருவேங்கடமலையிலே வந்து நின்று தேவர்கள் வணங்க நிற்கிற நிலையிலே ஆச்ரயித்து அப்பெருமானிடத்திலேயே நெஞ்சை ஊன்றவைத்தால், சிற்றின்பங்களிலே விருப்பம் ஒழிந்து, எம்பெருமான்படிகளை யுணர்த்துகின்ற சாஸ்த்ரங்களிலே நெஞ்சைச் செலுத்துவதற்கு அநுகூலமாகும் என்கிறார். “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு“ என்ற விதில் சிலர் சொல்லுவதொன்றுண்டு, அதாவது சிற்றின்பங்களில் பற்று அற்றாலன்றி பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறவாது, பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறந்தாலன்றிச் சிற்றின்பங்களில் பற்று அறாது என்று அந்யோந்யாச்ரய தோஷம் சொல்லலாம்படி யிருக்கையாலே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு‘ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று. இதற்குப் பெரியோர் பணிப்பதாவது – நாம் சிற்றின்பங்களை விரும்பி வேசி முதலானவர்களைக் காண்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பலகாலும் பகவத் ஸந்நிதிகளுக்குச் செல்லுகிறோம், அப்போது யாத்ருச்சிகமாக எம்பெருமான் திருமேனியிலும் கண் செலுத்த நெருகின்றது, இப்படி பலகால் நேர்ந்தால், ஒருகால் ஸுக்ருதவிசேஷத்தினால் அப்பெருமானிடத்திலேயே நம்மனம் லயித்து ‘என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே‘ என்னும்படியாக ஆகி, சிற்றின்பங்களில் வெறுப்புபிறந்து விடுகின்றனது. ஆகவே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கை விட்டு‘ என்றது பொருந்தும், அந்யோந்யாச்ரயதோஷமில்லை. சிற்றின்பங்களில் பற்று அற்றால் தான் பகவத் விஷயத்தில் மனம் சுழிக்கும்மென்று நியதிகூறவேண்டா – என்பர்.


  2307.   
  சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,* 
  நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,
  வேங்கடமும் வெஃகாவும்*  வேளுக்கைப் பாடியுமே* 
  தாம்கடவார் தண் துழாயார்.

      விளக்கம்  


  • தண்டுழாய்மாலை யணிந்துள்ள எம்பெருமான் என் சிந்தையோடு திருவனந்தாழ்வானோடு கச்சிப்பதியோடு திருவேங்கடமலையோடு திருவெஃகாவோடு திருவேளுக்கையோடு வாசியற இவ்விடங்களில் திருவுள்ளமுவந்து வாழ்கிறனென்கிறார். எம்பெருமான் விரும்பி மேல்விழுவதற்கு உறுப்பானதம் சிந்தைக்கு, ‘சிறந்த‘ என்று அடைமொழி கொடுத்தது பொருந்தும். இப்பாசுரத்திற்கு இரண்டு மூன்று வகையாக யோஜநைகள் அருளிச் செய்வதுண்டு, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற் காண்க. வெஃகா – யதோக்தகாரி ஸந்நிதி, வேளுக்கை – ‘காமாஸிகா‘ என்ற திருநாமத்தால் வழக்கப்படுகிற ஆளழகிய சிங்கப்பெருமாள் ஸந்நிதி. இவ்விரண்டு தலங்களும் கச்சிப்பதியிலுள்ளன. ‘வேளுக்கைப்பாடி‘ என்றதை இரண்டாகப்பிரித்து, வேளுக்கையும் திருவாய்ப்பாடியும் என்று பொருள் கொள்ளவும்.


  2320.   
  இறையாய்  நிலன்ஆகி*  எண்திசையும் தான்ஆய்,* 
  மறையாய்  மறைப்பொருள்ஆய் வான்ஆய்* - பிறைவாய்ந்த
  வெள்ளத்து அருவி*  விளங்குஒலிநீர் வேங்கடத்தான்,*
  உள்ளத்தின்உள்ளே உளன்.  

      விளக்கம்  


  • இப்படி ஜகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேபாயிருக்கும் பெருமான் திருமலையிலேவந்து ஸந்திஹிதனாய்ப்பின்பு என்னுடைய ஹ்ருதயத்தைவிட்டுப் போகிறனில்லை யென்கிறார். இதில் முன்னடிகளிரண்டும் ‘கீழ்ப்பாட்டிற் பொருளின் அநுவாதம். பிறைவாய்ந்த –இது வேங்கடத்திற்கு விசேஷணம், அருகி வெள்ளத்திற்கு விசேஷணமாகவுமாம். சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கும்படியைச் சொன்னவாறு. எங்கணும் பேரொலி செய்துகொண்டு பெருகுகின்ற அருவிகள் நிறைந்தும் ஓங்கியுயர்ந்ததுமான திருமலையிலுள்ளவனாய்க்கொண்டு அங்கிருந்து என்னுள்ளத்தில் வந்து சேர்ந்தவனாயின னென்கிறார். “மலைமேல் தான் நின்று என்மனத்துளிருந்தானை“ என்ற திருவாய்மொழியுங்காண்க.


  2321.   
  உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன்என்றும்
  உளன்கண்டாய்,*  உள்ளுவார்உள்ளத்து உளன்கண்டாய்,*
  விண்ஒடுங்கக் கோடுஉயரும்*  வீங்குஅருவி வேங்கடத்தான்,*
  மண்ஒடுங்க தான்அளந்த மன்.    

      விளக்கம்  


  • இப்படி ஸர்வாதிகனான எம்பெருமான் நம்மிடத்து வந்து புகுந்த பின்பு, நெஞ்சே! நமக்கு ஒரு குறையுமில்லைகாண் என்கிறார். நம்முடைய ஸத்தையை நோக்குவதற்காகவே தான் ஸத்தை பெற்றிருக்கின்றான், ‘எம்பெருமானுளன்‘ என்று நாம் இசைந்தாலும் இசையாவிட்டாலும் எப்போதும் நம்முடைய ரக்ஷணத்திலே முயன்று உளனாயிருக்கின்றான், இதற்குறுப்பாகத் திருவேங்கடமலையிலே வந்து தங்குமவன், இக்குணங்களையெல்லாம் த்ரிவிக்ரமாவதாரத்தில் விளங்கக் காட்டினவன்.


  2326.   
  புரிந்து மதவேழம்*  மாப்பிடியோடு ஊடி,* 
  திரிந்து சினத்தால் பொருது,* - விரிந்தசீர்
  வெண்கோட்டு முத்து உதிர்க்கும்*  வேங்கடமே,*  மேல்ஒருநாள் 
  மண்கோட்டுக் கொண்டான் மலை.    

      விளக்கம்  


  • ழுலகும் தனிக்கோ செல்லப் பரமபதத்தில் வீற்றிருக்க கடவனான அவன் நம்போன்றவர்க்கும் ஆச்ரயிக்க எளியனாய்த் திருமலையிலே வந்து நித்யஸந்நிதி பண்ணியிராநின்றானென்கிறார். திருமலையை வருணிக்கிறார். யானை தன் பேடையுடன் கலந்திருந்தபோது பிரணயகலஹம் உண்டாயிற்று அதனால் பேடையை விட்டிட்டு இங்குமங்குந்திரிந்து கோபத்திற்குப் போக்கு வீடாகத் தனது தர்தத்தை மணிப்பாறைகளிலே யிட்டுக் குத்துகின்றதாம், அப்போது அத்தந்தத்தில் நின்று வெண்முத்துக்கள் உதிர்கின்றனவாம், இப்படி இருக்கப்பெற்ற திருமலைமுன்பு வராஹாவதாரஞ் செய்தருளின பெருமானுடைய இருப்பிடம் என்கை. பொருது – திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு எதிர் யானையென்று பிரமித்து அதனோடே போர்செய்கின்றதாகவுங் கொள்ளலாம்.


  2339.   
  தெளிந்த சிலாதலத்தின்*  மேல்இருந்த மந்தி,* 
  அளிந்த கடுவனையே நோக்கி,* - விளங்கிய
  வெண்மதியம் தாஎன்னும்*  வேங்கடமே,*  மேல்ஒருநாள் 
  மண்மதியில்*  கொண்டுஉகந்தான் வாழ்வு.

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் கருடன் மேற்கொண்ட கரியானாய் ஸேவை தந்தருளினவன் ‘என்னைத் திருவேங்கடமலையிலே நித்யமாகக் கண்டுகொண்டிரும்‘ என்று சொல்லி மறைந்திடவே திருமலையிலே மண்டுகிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்றதென்ற அதிசயோக்திக்காக ஒரு வர்ணனை கூறுகின்றார். திருமலையில் கற்பாறையின்மீது பெண்குரங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றது, அதனருகில் ஆண்குரங்கும் ‘நமது பேடை நம்மை ஏவிக் காரியங்கொள்வது எப்போதோ‘ என்று அதன் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இராநின்றது, அதனை நோக்கிப் பெண்குரங்கானது ‘முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘ என்பாரைப்போலே ‘பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்கிறதாம். இங்ஙனே சொல்லும்படியாக ஓங்கியிருந்துள்ள திருமலையே ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் என்றாராயிற்று. சிலாதலம் – வடசொல். மந்தி – பெண்குரங்கு கடுவன் –ஆண் குரங்கு. மண்மதியிற் கொண்டுகந்தான் –கேட்டான் கேட்படியே தானம் பண்ணுவதென்று விரதம்பூண்டு மஹா தார்மிகனாயிருக்கிற மாவலியினிடத்தில் யாசதத் தொழில்கொண்டே காரியம்ஸாதிக்க வேணுமென்ற நினைத்துச்சென்றது புத்தி சாதுரியமென்க.


  2344.   
  தாழ்சடையும் நீள்முடியும்*  ஒண்மழுவும் சக்கரமும்,* 
  சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால்,*- சூழும்
  திரண்டு அருவி பாயும்*  திருமலைமேல் எந்தைக்கு,* 
  இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.

      விளக்கம்  


  • “திருமலைமே லுந்தைக்கு இரண்டுருவு மென்றாயிசைந்து தோன்றும்“ என்று இங்கு ஆழ்வா ரருளிச்செய்திருப்பது கொண்டு இதற்குப் பலர் பொருள்கொள்வ தெங்ஙனேயென்னில், திருவேங்கடமுடையானுக்குச் சடையுமுண்டு கிரீடமுமுண்டு, மழுவுமுண்டு, சக்கரமுமுண்டு, நாகாபரணமுமுண்டு பொன்னுணு முண்டு – என்றிங்ஙனே பொருள்கொள்வர். இது பொருந்தாது, திருவேங்கடமலையில் அரச்சையாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் பக்கல் தாழ்சடையுமில்லை, ஒண் மழுவுமில்லை, சூழரவுமில்லை, நீண்முடியும் சக்கரமும் பொன்னுணுமேயுள்ளன. ஆகில் “திருமலைமேலெந்தைக்கு இரண்டுருவு மொன்றாயிசைந்து தோன்றும்“ என்றது எங்ஙனே சேருமென்னில், நன்கு சேரும், திருவேங்கடமுடையானாக ஸேவைஸாதிக்கும் திருமலையப்பன்றானே ஒரு மையத்தில் இரண்டுருவையும் ஒன்றாயிசைத்துக்கொண்டு தோன்றினவன் – என்ற பொருளே இதிலடங்கியுள்ளதாம். இதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களுங் காட்டுவோம், திருப்பள்ளியெழுச்சியில் – “மாமுனி வேள்வியைக் காத்து அவ்விரதமாட்டிய அடுத்திறலயோத்தி யெம்மரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே“ என்கிறார். இதனால் திருவரங்கத்தில் சேஷசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் அழகிய மணவாளன்றனே விச்வாமித்ர முனிவனுடன் சென்று வேள்வியைக் காத்துவந்தான் என்றதாகுமோ? அந்த ஸ்ரீராமபிரானும் இந்த அழகிய மணவாளனும் ஏகதத்துவம் என்றபடியா மத்தனையன்றோ? இன்னமும், பூதத்தாழ்வார் “அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்“ என்றருளிச் செய்கிறார். இதனால் கச்சி நகர்ப் பேர்ருளானப் பெருமான் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டிருக்கிறார் என்றதாகுமோ? நாகத்தின்மேல் துயில்கொள்ளும் மெம்பெருமானும் அத்தியூரானும் ஏகதத்துவம் என்ற தாகுமத்தனையன்றி வேறில்லை. ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில், பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.


  2349.   
  பார்த்த கடுவன்*  சுனைநீர் நிழல்கண்டு,* 
  பேர்த்துஓர் கடுவன்எனப் பேர்ந்து,* - கார்த்த
  களங்கனிக்குக்*  கைநீட்டும் வேங்கடமே,*  மேல்நாள் 
  விளங்கனிக்குக்*  கன்றுஎறிந்தான் வெற்பு.

      விளக்கம்  


  • திருமலையில் நிகழ்ச்சியைக் கூறுகின்றார். ஒருசுனையின் கரையிலே களாச்செடிகளில் களாப்பழங்களைப் பறித்துத் தின்ன தொடங்கின குரங்கானது அச்சுனை நீரை எட்டிப்பார்த்தவாறே அதில் தன் பிரதிபிம்பத்தைக்கண்டு அங்கே வேறொரு குரங்கு இருப்பதாகவும் அது களாப்பழங்களைப் பறிப்பதாகவும் பிரமித்து ‘எனக்குக் களாப்பழம் தா‘ என்று கை நீட்டுகின்றதாம், இப்படிப்பட்ட திருமலையானது, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரனை முடித்த கண்ணபிரான் திருவுள்ளம் உவந்து வாழும் திவ்யதேசமாம். திருமலையப்பனுடைய சேஷ்டிதங்களைப் பேசுவதோடு அங்குள்ள தீர்யக்ஜந்துக்களின் சேஷ்டிதங்களைப் பேசுவதோடு வாசியில்லை ஆழ்வார்க்கு. திருமலையிலுள்ளது ஏதேனுமாம், எல்லாம் உத்தேச்யமாயிருக்கும். “எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமவனே“ என்றாரே ஸ்ரீ குலசேகரப் பெருமான்.


  2350.   
  வெற்புஎன்று*  வேங்கடம் பாடும்,*  வியன்துழாய் 
  கற்புஎன்று சூடும் கருங்குழல் மேல்,*  மல்பொன்ற
  நீண்டதோள் மால்கிடந்த*  நீள்கடல் நீர்ஆடுவான்,* 
  பூண்டநாள் எல்லாம் புகும்

      விளக்கம்  


  • இப்பிபந்தத்தில் அந்யாபதேசப் பாசுரம் வேறொன்றுமில்லாதிருக்க இஃதொன்றைமாத்திரம் இங்ஙனே தாய்பாசுரமாகக் கொள்ளுதல் சிறவாதென்றும், ‘என்மகள்‘ என்ற எழுவாய் இல்லாமையாலும் இவ்வர்த்தம் உசிதமென்று என்றும் சிலர் நினைக்கக் கூடுமாதலால் இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாகஹமும் பூருவர்கள் அருளிச்செய்துள்ளார். எங்ஙனே யெனின்? பாடும், சூடும், புகும் என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில் வந்தனவாகக் கொண்டு, ‘ஓ உலகத்தவர்களே! நீங்கள் ஏதாவதொரு மலையைப் பாடவேண்டில் திருவேங்கடமலையைப் பாடுங்கள், ஏதேனுமொரு மலரைக் குழலில் சூடவேண்டில் திருத்துழாய்மலரைச் சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச் சூடுங்கள், நீராடுவதற்குத் திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‘ என்பதாக. இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்மின், “இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேச மின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும் இப்படி கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள், திருமலையைப் படுங்கோள், திருத்துழாயைச் சூடுங்கோள், விரோதி நிரஸந சீலனானவன் கிடந்த திருப்பாற்படலிலே முழுகுங்கோள்.“ என்று. நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லாதாகும் செய்யுமென்முற்றே“ என்ற சிறப்புவிதிக்கு மாறாக, பாடும், சூடும், புகும் என்ற செய்யுமென் முற்றுக்களுகு முன்னிலைப்பொருள் கொள்ளலாமோ வென்னில், இதனைப் புதியன புகுதலாகக் கொள்க. “நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் புதியனபுகுதல்“ என்று நன்னூலுரைகாரர்களும் சொல்லிவைத்தார்கள். “பழையன கழிதனும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே“ என்ற நன்னூற் சூத்திரமும் காண்க. மற்பொனற நீண்ட தோள்மால் என்றவிடத்து அறியவேண்டும் வரலாறு வருமாறு – கண்ணபிரான் கம்ஸனது ஸபையிற் செல்லும்போது எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய அவர்களை யெல்லாம் கண்ணபிரான் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனன்.


  2351.   
  புகுமதத்தால்*  வாய்பூசி கீழ்தாழ்ந்து,*  அருவி 
  உகுமதத்தால் கால்கழுவி கையால்,*- மிகுமதத்தேன்
  விண்டமலர் கொண்டு*  விறல் வேங்கடவனையே,* 
  கண்டு வணங்கும் களிறு. 

      விளக்கம்  


  • திருமலையில் மதயானைகள் தாமரைப் பூக்களைப் பறித்து அப்பன் திருவடிகளில் ஸமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார். எம்பெருமான் ஸந்நிதியில் தொண்டுசெய்யப் போமவர்கள் வாயைக் கொப்பளித்துக் கைகால்களை சுத்திசெய்து கொண்டு புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு போவது வழக்கம் இவ்வாசாரம் சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, திருமலையிலுள்ள அஃறிணைப் பொருள் கட்கும் இவ்வாசாரம் கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்கிறார். மத்தகம், கன்னங்கள் ஆகிய இடங்களிலிருந்து பெருகி வாயிலே புகுகின்ற மத ஜலத்தினால் வாய் கொப்பளித்து ஆசமனம் பண்ணினது போலும், அருவிபோலே காலளவும் பெருகுகின்ற மதஜலத்தினால் காலைக் கழுவினது போலும். விறல் வேங்கடவன் – இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக் ஜந்துக்களும் தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக் கொடுக்க சக்தனான திருவேங்கடமுடையான் என்ப.


  2352.   
  களிறு முகில்குத்த*  கைஎடுத்துஓடி,* 
  ஒளிறு மருப்புஒசிகை*  யாளி பிளிறி-
  விழ,*  கொன்று நின்றுஅதிரும்*  வேங்கடமே,*  மேல்நாள் 
  குழக்கன்று*  கொண்டுஎறிந்தான் குன்று.

      விளக்கம்  


  • “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்!“ என்றும், 2. “கரியமாமுகிற் படலங்கள் கிடந்தவை முழங்கிடக்களிறென்று“ என்றும் சொல்லுகிறபடியே யானைக்கும் மேகத்திற்கும் ஒப்புமை ப்ரஸித்தம். ஆகவே, திருமலையிலுள்ள யானையானது மலைமுகட்டில் படிந்திருந்த மேகத்தை எதிரியான தொரு யானையென்று மயங்கிப் பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால் குத்த, இதனை ஒரு யாளி கண்டு ‘இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா‘ என்று சினந்து ஓடிவந்து அவ் யானையின்மேற் பாய்ந்து அதன் கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையுஞ் செய்து, அவ்வளவிலும் சீற்றம் தணியாமையாலே அவ்விடத்திலேயே நின்று மற்றுள்ள மிருகங்களும் மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம் திருமலையில்.


  2353.   
  குன்றுஒன்றின்ஆய*  குறமகளிர் கோல்வளைக்கை,* 
  சென்று விளையாடும் தீம்கழைபோய்,* - வென்று
  விளங்குமதி கோள்விடுக்கும்*  வேங்கடமே,*  மேலை 
  இளங்குமரர் கோமான் இடம்.

      விளக்கம்  


  • திருமலையில் வளர்கின்ற மூங்கில்கள் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன வென்பதை ஒரு அதிசயோக்தியினால் கூறுகின்றார். குன்றொன்றினாய குறமகளிர் – திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுது கீழிழிந்தாலும் குடிப்பழியாம் என்று திருமலையை விடாதே அங்கே நித்தியவாஸம் பண்ணுகின்ற குறத்திகள் அவர்கள் ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக மூங்கில் மரங்களிலே யேறியிருப்ப துண்டாகையாலே “குறமகளிர் கோல்வளைக்கை சென்று விளாயாடுந் தீங்கழை“ எனப்பட்டது. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை கர்ஹிக்கின்ற ராஹுவைக்குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை மகிழ்விக்கின்றனவாம். இங்ஙனே ஒக்கமுடைத்தான திருமலை நித்ய ஸூரிநாதன் வாழுமிடம். இப்பாட்டுக்கு மற்றும் பலவகையாகப் பொருள்கூறுவர், விளையாடுகின்ற குறத்திகளின் கோல்வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, சந்திரன் இங்குப் புகுரப்பெறாமையால் பெற்றிருந்த இடரை நீக்கும் என்றுமாம். அன்றியே குறத்திகளின் வளைகளின் ஒளியானது சந்திரனொளி புகுரப்பெறாத மூங்கிலிருளை அகற்றி வெளியாக்கி, சந்திரன் மறுவையும் போக்கும் என்றுமாம்.


  2354.   
  இடம்வலம் ஏழ்பூண்ட*  இரவித் தேர்ஓட்டி,* 
  வடமுக வேங்கடத்து மன்னும்,* - குடம்நயந்த
  கூத்தனாய் நின்றான்*  குரைகழலே கூறுவதே,* 
  நாத்தன்னால் உள்ள நலம்.

      விளக்கம்  


  • என்றுஞ் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கு ஸூர்யமண்டலமும் ஒரு வாஸஸ்தாநமாதலால் ‘இரவித் தேரோட்டி‘ என்றார். எம்பெருமானுடைய அநுப்ரவேசமின்றி எந்த தேவதையும் எக்காரியமும் செய்ய முடியாதாகையாலே அவன்தானே ஸூர்யனுக்கு அந்தர்யாமியாயிருந்து தேரே நடத்துகின்றானென்க. ஏழ் பூண்ட –ஏழு குதிரைகளைப் பூண்ட என்றபடி. காயத்ரீ ப்ருஹதீ, உ ஷ்ணிக், ஜகதீ. த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி – என்கிற ஏழு சந்தஸ்ஸுக்களும் ஏழு குதிரைகளாயக் கொண்டு வஹிக்குமென்று சாஸத்ரம் சொல்லும். ‘ஓட்டி‘ என்பதை வினையெச்சமாகவுங் கொள்ளலாம், ‘இ‘ விகுதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம். “குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்... பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை“ என்று கண்ணபிரான்தானே திருவேங்கடமலையில் வந்து ஸந்நிதி பண்ணிருப்பதாக அருளிச் செய்கையாலே இங்கும் “குடநயந்த கூத்தனாய் நின்றான்“ என்று கண்ணபிரானோடு ஒற்றுமை நயம்படக் கூறப்பட்டது.


  2356.   
  சார்ந்துஅகடு தேய்ப்பத்*  தடாவிய கோட்டுஉச்சிவாய்* 
  ஊர்ந்துஇயங்கும் வெண்மதியின்*  ஒண்முயலைச்,* - சேர்ந்து
  சினவேங்கை பார்க்கும்*  திருமலையே,*  ஆயன்
  புனவேங்கை நாறும் பொருப்பு.

      விளக்கம்  


  • திருமலையை அநுபவிக்கிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற தென்பதை ஒரு அதிசயோக்தியினால் வெளியிடுகிறார் சந்திரனிடையே கறுப்பாகத் தோன்றுவதைக் கவிகள் பலவிதமாகக் கூறுவதுண்டு. மான் என்பர் சிலர், முயல் என்பர் சிலர் மற்றும் பல்வகையுங் கூறுவர். ‘முயல்‘ என்ற கொள்கையைப் பின்பற்றி இப்பாசுரமருளிச் செய்யப்படுகிறது. ஆகாசத்திலே திரிகின்ற சந்திரன் திருமலையின் சிகாநுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில் ஸம்பந்தப்பட்டுக் கொண்டே செல்லுகின்றன்னாம், அப்போது அவனது மடியிலிருக்கின்ற முயலைத் திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அதனைத் தான் உணவாகக் கொள்ளக்கருதி, பிடித்துக்கொள்ளவும் மாட்டாமல் விட்டுப் போகவும் மாட்டாமல் உறுத்துப் பார்த்தபடியே நிற்கின்றதாம். இப்படிப்பட்ட திருமலை வேங்கைமலர்களின் வாஸனை வீசப்பெற்றதாய்க் கண்ணபிரா னெழுந்தருளியிருக்குமிடமான திருமலையாம்.


  2370.   
  முடிந்த பொழுதில்*  குறவாணர்,*  ஏனம்
  படிந்துஉழுசால்*  பைந்தினைகள் வித்த,* - தடிந்துஎழுந்த
  வேய்ங்கழைபோய்*  விண்திறக்கும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்
  தீம்குழல்*   வாய் வைத்தான் சிலம்பு.

      விளக்கம்  


  • திருமலையின் நிலவளத்தையும் ஓக்கத்தையும் ஒரு சமத்காரமாகப் பேசுகிறாரிதில். தேன் திரட்டுதல், வேட்டையாடி மிருகங்களைப் பிடித்துவருதல் முதலியன குறவர்களின் தொழிலாகும். இத்தொழில்கள் நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச் செய்ய இயலுமேயன்றி, கிழக்குறவர்கட்குச் செய்ய இயலா. ஆகவே, அவர்கள் கிருஷியினால் ஜீவிக்கப் பார்ப்பார்கள், அது தன்னிலும் தாங்களே உழுது பயிரிடுதலும் அவர்கட்கு இயலாது. கலப்பை பிடித்து உழமாட்டாத முடிந்தபொழுதிற்குறவாண ராதலால். பின்னை அவர்கள் என செய்வார்களென்னில், திருமலையிற் சில வீடாக மூங்கில்கள் வேர் பறியுண்டு விழத்தள்ளி அந்நிலங்களை மூக்காலே உரோசி ஒருகால் உழுதுவைக்கும், அத்தகைய நிலங்களிலே இக்கிழக்குறவர்கள் தினைகளை விதைத்து ஜீவிப்பார்கள். ஏற்கனவே பன்றிகள் தள்ளியிட்டிருந்த மூங்கில்கள் பயிர்க்குக்களையாக வொண்ணாதென்று அவற்றை இக்குறவர்கள் நன்றாகக் களைந்து போட்டுவிட்டுப் போனாலும் அவை நிலப்பண்பினால் பண்டுபோவே வளர்ந்து ஆகாசத்தை அளாவுகின்றனவாம். இப்படிப்பட்டநிலவளம் வாய்ந்த திருமலை முன்பு ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவ்வதரித்து வேணுகாநம் பண்ணின பெருமான் வாழுமிடம் என்றாராயிற்று. குறவர் தங்கள் சாதித்தொழிலை விட்டு க்ருஷியில் இறங்கினதற்குக் காரணங் கூறுவது போலும் ‘முடிந்தபொழுதின்‘ என்ற அடைமொழி. சரமதசையிலே யிருக்கின்ற குறவர் என்கை வாணர் –வாழ்நர் குறவராக வாழ்பவர்கள என்கை. சால் –‘ஒருசால் உழுத்து, இரண்டுசால் உழுத்து‘ என்று உலகவழக்க முள்ளமை உணர்க.


  2421.   
  வெற்புஎன்று*  வேங்கடம் பாடினேன்*  வீடுஆக்கி 
  நிற்கின்றேன்*  நின்று நினைக்கின்றேன்*  கற்கின்ற
  நூல்வலையில் பட்டிருந்த*  நூலாட்டி கேள்வனார்* 
  கால்வலையில் பட்டிருந்தேன் காண்.  

      விளக்கம்  


  • கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம். (பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப் பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி, அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன், (அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால் அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை. மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும், ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார், எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான், நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி. நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.


  2422.   
  காணல்உறுகின்றேன்*  கல்அருவி முத்து உதிர* 
  ஓண விழவில் ஒலிஅதிர*  பேணி
  வருவேங்கடவா!* என்உள்ளம் புகுந்தாய்* 
  திருவேங்கடம் அதனைச் சென்று.  

      விளக்கம்  


  • எம்பெருமானே!, நீ திருவேங்கடமலையைவிட்டு என்னுள்ளத்தே குடி கொண்டாயாயினும், நீ இங்குவந்து சேர்வதற்கு ஸாதநமாயிருந்த அந்தத் திருலை தன்னையும் சென்று ஸேவிக்க வேணுமென்று நான் காதல் கொண்டிருக்கின்றே னென்கிறார். “கல்லருவி முத்துதிர“ என்பதும் “ஓணவிழவி லொலியதிர“ கடத்தில் விசேஷணமாக அந்வயிக்கக்கடவன. ‘உதிர‘ ‘அதிர‘ என்பவை வினையைச் சங்களாயினும் பெயரிலே அந்வயிருக்குமென்க, எப்போதும் பேரொலி செய்துகொண்டு வீழ்கின்ற அருவிகளிலே முத்துக்கள் உதிரப்பெற்றதும் (திருவேங்கட முடையானுடைய திருவ்வதார நக்ஷத்திரமான) திருவோணத் திருவிழவில் மங்களா சாஸந த்வநிகள் மிகப்பெற்றதுமான திருவேங்கடம் என்கை. “பேணி வரு“ என்பதும் திருவேங்கடத்திற்கு விசேஷணம், பல திசைகளில் நின்றும் பலர் விரும்பி வந்து பணியப்பெற்ற தென்கை. இப்படிப்பட்ட திருமலையிலெழுந்தருளி யிருக்கும் பிரானே! நீ அத்திருமலையை விட்டு என்னுள்ளம் புகுந்தாய், இனி நீ திருமலையில் இல்லையாயினும் ‘நீ உகந்து வாழ்ந்தவிடம்‘ என்கிற காரணத்தினால் அத்திருமலைதன்னைச் சென்று காணவே நான் விரும்புகின்றேனென்றவாறு. நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன். நீயோ அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என்செய்வேன்! என்கிறாராகவுமாம்.


  2423.   
  சென்று வணங்குமினோ*  சேண்உயர் வேங்கடத்தை* 
  நின்று வினைகெடுக்கும் நீர்மையால்*  என்றும்
  கடிக்கமல நான்முகனும்*  கண் மூன்றத்தானும்* 
  அடிக்கமலம் இட்டுஏத்தும் அங்கு.

      விளக்கம்  


  • அன்பர்கட்கு உபதேசிக்கிறார், சென்னியோங்கு தண் திருவேங்கடத்தைச் சென்று வணங்குங்கள், அந்தத் திருமலைதானே உங்கள் பாவங்களை யெல்லாம் மாற்றிவிடும், பிரமன் சிவன் முதலான தேவர்களும் தங்கள் தங்கள் அதிகாரம் பெறுவதற்காக அத்திருமலையிலே சென்று அப்பன் திருவடிகளிலே புஷ்பங்களை யிட்டிறைஞ்சித் துதியாநிற்பர். ஆகையாலே நீங்களும் அங்கே சென்று வணங்குங்கோள் என்றாராயிற்று. சேண் உயர் – “சேண்“ என்றாலும் உயர்த்தியே பொருள், மீமிசைச் சொல். மிகவும் உயர்ந்த என்றபடி. நீர்மையால் – பாவங்களைப் போக்குவதே திருமலைக்கு ஸ்வபாவம் என்க. ‘வேங்கடம்‘ என்னும் வடசொல்லின் நிருத்தி காண்க. தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்ற தென்ப. வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க. “வெங்கொடும் பாவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலையான தென்று“ என்ற புராணச் செய்யுளுங் காண்க.


  2424.   
  மங்குல்தோய் சென்னி*  வடவேங்கடத்தானை* 
  கங்குல் புகுந்தார்கள்*  காப்புஅணிவான்*  திங்கள்
  சடைஏற வைத்தானும்*  தாமரை மேலானும்* 
  குடைஏற தாம்குவித்துக் கொண்டு.

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட ப்ரஹ்மருத்ரர்கள் திருமலையில் எதோவொருகால் வந்து ஆச்ரயித்துப் போமவர்களல்லர், அந்திதோறும் புகுந்து திருவந்திக்காப்பிடுவ ரென்கிறார். கங்குல் என்ற சொல் இரவுக்கு வாசகமாயினும் இரவின் முகமான அந்திப்பொழுதைச் சொல்லக்கடவ திங்கு. திங்கள் சடையேற வைத்தாணும் – தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்த சரணமடைந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் சிவன் “நளிர் மதிச் சடையன்“ என்றும் “சந்த்ரமௌலி“ என்றும் பெயர் பெற்றனனென்க. ஈற்றடியில், திருவாராதனத்திற்கு உபகரணமான குடையொன்றைச் சொன்னது – மற்றும் சாமரம் முதலிய உபகரணங்கட்கும் உபலக்ஷணெமென்க. இரண்டாமடியில் ‘புகுந்தார்கள்‘ என்று இறந்தகாலமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘நித்யமாகப் புகுந்துகொண்டிருக்கின்றனர்‘ என்று நிகழ்காலப் பொருள் கொள்ளக் குறையில்லை “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉ முக் காலமுமேற்புழி“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.


  2425.   
  கொண்டு குடங்கால்*  மேல்வைத்த குழவியாய்* 
  தண்ட அரக்கன் தலை*  தாளால் பண்டுஎண்ணிப்*
  போம்குமரன் நிற்கும்*  பொழில்வேங்கட மலைக்கே* 
  போம் குமரருள்ளீர்! புரிந்து.  

      விளக்கம்  


  • இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை முதல் திருவந்தாதியில், “ஆமேயமரக்கறிய“ என்ற நாற்பத்தைந்தாம் பாட்டிலும், முன்றாந்திருவந்தாதியில் “ஆய்ந்தவருமறையோன்“ என்ற எழுபத்தேழாயம் பாட்டிலும் பொய்கையாழ்வாராலும் பேயாழ்வாராலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில் எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து “இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன் காண், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து வரம்வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான். இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்“ என்று தெரிவிப்பவன் போன்று தன் திருவடியால் அவ்விராவண்ணுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை; பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்“ (2-7-8) என்றும், “எல்லியம் போதினி திருத்தலிருந்த தோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மேரடையாளம்“ (3-10-2) என்றும் அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல் ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை யென்று நம் பூருவாசாரியர்கள் நிர்வஹித் திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட தென்று பெரியோர் கூறுவர். இனி இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகா முண்டேல் கண்டு கொள்க விரிவும் வல்லார் வாய்க் கேட்டுணர்க. இப்படிப்பட்ட எம்பெருமான் நின்றருளும் திருவேங்கடமலைக்கே விரும்பிச் சென்று சேருங்கள் என்றாராயிற்று. வயது முதிர்ந்த பின்பு * தண்டுகாலா யூன்றித் தள்ளிநடக்கும் முதுமையில் திருமலையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதாதலால் கிளரொளியிளமை கெடுவதன் முன்ன திருமலைக்குப் போகவேணுமென்கிறார் ‘குமர்ருள்ளீர்!‘ என்ற விளியால்.


  2426.   
  புரிந்து மலர்இட்டுப்*  புண்டரிகப் பாதம்* 
  பரிந்து படுகாடு நிற்ப*  தெரிந்துஎங்கும்
  தான்ஓங்கி நிற்கின்றான்*  தண்அருவி வேங்கடமே* 
  வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.    

      விளக்கம்  


  • திருமலை இந்நிலத்திலுள்ள ஸம்ஸாரிகளுக்கு மாத்திரம் ப்ராப்யமன்று, வானுலகத்துள்ள நிர்யஸூரிகளுக்கும் ப்ராப்யமென்கிறார். ஆதாரத்துடன் திருவடித் தாமரைகளில் புஷ்பங்களைப் பணிமாறி ‘ பல்லாண்டு பல்லாண்டு‘ என்றும் ‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ!‘ என்றும் மங்களாசலாஸநம் பண்ணி, கால்பெயர்ந்து வெளியில் போக மாட்டாமல் அவ்விடத்திலேயே அன்பர் குடிகொண்டிருக்கும்படியாகக் கடாக்ஷித்தருள்கின்ற ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் பண்ணுமிடமாய், குளிர்ந்த அருவிகள் பாய்ந்து போக்யமான திருவேங்கடங்மலை நித்யஸூகனோடு ஸம்ஸாரிகளோடு வாசியற அனைவர்க்கும் புகலிடமாயிருக்கின்றது என்றதாயிற்கு. பரிந்து - பரிவாவது பயசங்கை பண்ணுதற்கு இடமல்லாதவிடத்தில் பயசங்கை பண்ணி அன்பு பாராட்டுதல் காப்பிடுதலைச் சொன்னபடி. படுகாடுநிற்ப – படுகாடுபோல் நிற்கும்படியாக என்றபடி, உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது, வெட்டித்தள்ளப்பட்ட மரங்களைப் படுகாடு என்கிறது. அதுபோல் நிற்கும்படியாக வென்றது. – அம்மரங்கள் ஆடாது அசையாது அவ்விடத்திலேயே கிடப்பதுபோல் கிடக்கும்படியாக என்றவாறு வைப்பு - நிதி பூமிக்குள் புதைத்து வைக்கப்படுவது காரணக்குறி நிதிபோல் விரும்பத்தகுமென்கை.


  2427.   
  வைப்பன் மணிவிளக்கா*  மாமதியை*  மாலுக்குஎன்று 
  எப்பொழுதும்*  கைநீட்டும் யானையை*  எப்பாடும்
  வேடுவளைக்கக்*  குறவர் வில்எடுக்கும் வேங்கடமே* 
  நாடுவளைத்து ஆடுதுமேல் நன்று.

      விளக்கம்  


  • திருமலையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றாரிதில். ஆகாயத்திலே அழகிய விளக்குப்போல் தோன்றும் சந்திரனைக் கண்ட ஒரு யானையானது ‘இதனை நமது துதிக்கையினால் பிடித் தெடுத்து ஸ்ரீநிவாஸன் ஸந்நிதியில் நந்தாவிளக்காக வைத்திட்டால் நன்றாயிருக்கும்‘ என்று கருதி அச்சநதிரனைப் பிடிப்பதற்காக நீட்டின கை நீட்டினபடியே யிருக்கையில் அவ்யானையின் நோக்கமெல்லாம் சந்திரனைப் பிடிப்பதாகிற அக்காரிய மென்றிலேயே ஊன்றியிருந்ததனால் அந்த அந்யபரத்வத்தையே பற்றாசாகக் கொண்டு வேடர்கள் மெல்ல அருகில் வந்து வளைத்துக்கொள்ள குறவர் அம்பு தொடுக்கின்றனராம், ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையை நாமெல்லாரும் வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோமாயின் இதுவே நமக்கு ஸ்வருபம் என்றாராயிற்று. திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கின்றதென்று அதன் ஒக்கம் வெளியிடப்பட்டதாமிதனால், மலைகளில் சந்திரனை மிக்க ஸமீபத்திலிருப்பதாகக் காணும் மலைப்பிராணிகள் அவனைக் கைக்கொள்ள விரும்பிப் பல முயற்சிகள் செய்வது இயல்பு, 1.“நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர்மாமதியைச் செஞ்சுடர் நாவளைக்குந் திருமாலிருஞ்சோலையதே“ என்றதுங்காண்க. மாமதியை மாலுக்கு மணிவிளக்கா வைப்பன் என்று கை நீட்டும் யானையை என்கிறாரே ஆழ்வார், யானை சந்திரனைப்பிடிக்க முயற்சிசெய்வது வெளிக்குத் தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக அதனைப் பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே, திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப் பிடிக்க முயல்கின்றதென்று ஆழ்வார் எங்ஙனே அறிந்தார்? என்று சிலர் கேட்கக் கூடும் திருமலையில் பிறக்கப்பெற்ற பெருமையினால் அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும் என்று திருவுள்ளம் பற்றினரென்க. அன்றியும், 2. “வாயுந்திரையுகளும்“ என்கிற திருவாய்மொழியிற்படியே பிறர் செய்யும் காரியங்களையெல்லாம் தாம் செய்யுங் காரியங்கள்போல் பகவத் விஷய ப்ராவண்யத்தால் செய்வனவாகவே கொள்வதும் மெய்யன்பர்களின் வழக்கமாகும். ஆழ்வார் சந்திரனைப் பார்க்கும்போது “இவன் திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தரும்“ என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும் இருந்த்தாகக் கொண்டு கூறுதல் பொருந்தியதே


  2428.   
  நன்மணி வண்ணன்ஊர்*  ஆளியும் கோளரியும்* 
  பொன்மணியும்*  முத்தமும் பூமரமும்*  பன்மணி நீ
  ரோடு பொருதுஉருளும்*  கானமும் வானரமும்* 
  வேடும்உடை வேங்கடம். 

      விளக்கம்  


  • திருமலையி லெழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையான் தமக்கு எப்படி உத்தேச்யனோ அப்படியே அவ்விடத்துள ஸகல பதார்த்தங்களும் உத்தேச்யம் என்பது வெளிப்பட இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க. யாளிகள், சிங்கங்கள், நவரத்னங்கள், புஷ்பவ்ருக்ஷங்கள், நவமணிகளைக் கொழித்துக்கொண்டு வந்து வீழ்கின்ற அருவிகள் பாயப்பெற்ற காடுகள், குரங்குகள், வேடர்கள் ஆகிய இவையெல்லாவற்றையு முடைத்தான திருமலை மணிவண்ணனுடைய திருப்பதி என்கை.


  2429.   
  வேங்கடமே*  விண்ணோர் தொழுவதுவும்*  மெய்ம்மையால் 
  வேங்கடமே*  மெய்வினைநோய் தீர்ப்பதுவும்*  வேங்கடமே
  தானவரை வீழத்*  தன்ஆழிப் படைதொட்டு* 
  வானவரைக் காப்பான் மலை.   

      விளக்கம்  


  • என்கிறபடியே நித்யஸூரிகள் பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவீக்கப்பெற்றாலும் அங்கே பரத்வத்திற்கு உரிய மேன்மைக்குணங்களை அநுபவிகலாயிருக்குமேயன்றி ஸௌலப்யஸௌசீலயங்களுக் குப்பாங்கான எளிமைக்குணங்களை இந்நிலத்திலே வந்து அநுபவிக்கவேண்டியிருப்பதால் அந்த சீலாதிகுணங்களை யநுபவிப்பதற்காகத் திருமலையில் வந்து தொழும்படியைக் கூறுவது முதலடி. ‘வேங்கடம்‘ என்ற திருநாமத்தின் அவயவார்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இரண்டாமடி அருளிச்செய்யப்பட்டது. வேங்கட பதத்திற்கு ஸம்ஸ்க்ருத ரீதியில் பொருள் விவரிக்குமிடத்து, வேம்பாவம், கடம் – எரித்தல், பாவங்களை எரிப்பதனால் வேங்கடமென்று பெயர் பெற்றது என்று நிருக்தியுள்ளது. “***“ என்றது காண்க. “வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலை யாதென்று“ என்னும் புராணச் செய்யுளுமுணர்க. திருமலையின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் ப்ராஹ்மணோத்தமனது குமாரனாகிய மாதவனென்பவன் தன் மனைவியாகிய சந்தர்ரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில் மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக்கண்டு காமுற்று அவளைக்கூடி மனையாளைத் துறந்து அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து பின்பு வழிபறித்தல் உயிர்கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக் கொடுத்துவந்து முடிவில் தரித்ரனாகிப் பலநோய்களை யுமடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந்தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்தமாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று முன்னைய ப்ரஹ்மதேஜஸ்ஸைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்ததனால் இதற்கு ‘வேங்கடாசலம்‘ என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியில் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க. இங்ஙனே பல இதிஹாஸங்களுண்டு. திருமலை நோய்தீர்க்கும் விஷயம் இப்போதும் பிரத்யக்ஷமாக அனைவருங் காணத்தக்கதாம். தேவஜாதிக்கு அஸுரஜாதியால் நேருந் துன்பங்களைத் திருவாழியால் தொலைத்துக் காத்தருளுமெம்பெருமான் அப்படியே நம்போன்ற ஆச்ரிதர்களினுடையவும் துன்பங்களைத் தொலைத்தருள எழுந்தருளியிருக்குமிடம் திருமலை என்பன பின்னடிகள்.


  2435.   
  தேவராய் நிற்கும் அத்தேவும்*  அத்தேவரில் 
  மூவராய் நிற்கும்*  முதுபுணர்ப்பும்*  யாவராய்
  நிற்கின்றது எல்லாம்*  நெடுமால் என்றுஓராதார்* 
  கற்கின்றது எல்லாம் கடை.

      விளக்கம்  


  • ஸகல தெய்வங்களும் ஸகலபதாரத்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுக்கு சேஷபூதம் என்றறியமாட்டாதவர்கள் எவ்வளவு விரிவாகக் கற்றாலும் அத்தனையும் பயனற்றவை யென்கிறார். தேவராய் நிற்குமுத்தேவும் நெடுமால், அத்தேவரில் மூவராய்நிற்கும் நெடுமால் புணர்ப்பும் நெடுமால், யாவராய்நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று அறியவல்லாருடைய கல்வியே பயன்பெற்றதாம் என்றவாறு. தேவராய் நிற்குமத்தேவும் – வேதத்தில் கருமகாண்டங்களில் அந்தந்த யாகங்களுக்கு ஆராத்யதேவதையாக அக்நி இந்திரன் வருணன் என்றிப்படி சொல்லப்பட்டுள்ள தேவதைகள் யாவும் என்கிற கருதியின்படி எம்பெருமானுக்குச் சரீர பூதங்களாதலால் அத்தேவதைகட்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே அந்தந்த தேவதா நாமங்களினால் கூறப்பட்டுளன் என்று உணர வேண்டுவது கல்விக்குப் பயன். அத்தேவரில் மூவராய் நிற்கும் மதுபுணர்ப்பம் என்கிறபயே த்ரமூர்த்தியவதார மெடுத்த்தும் திருமாலே. இப்படி பிரித்துபிபிரித்துச் சொல்லுவதுன்? யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமால். என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானுடைய நிலைமை வாய்ந்தவர்களே கற்றுணர்ந்தவராவர் என்கை.


  2471.   
  வீற்றிருந்து*  விண்ஆள வேண்டுவார்*  வேங்கடத்தான் 
  பால்திருந்த*  வைத்தாரே பல்மலர்கள்*  மேல்திருந்தி
  வாழ்வார்*  வரும்மதி பார்த்து அன்பினராய்*  மற்றுஅவற்கே 
  தாழ்வாய் இருப்பார் தமர்* 

      விளக்கம்  


  • பாகவதராலே அங்கீகரிக்கப் பெறுமவர்கள் எல்லாரிலும் மேற்பட்டவர்களென்கிறார். எம்பெருமான் திருவடிகளில் மலர்களைத் தூவி அடிமை செய்தவர்களே விண்ணாள்பவர், ஆயினும், எம்பெருமானுக்கு அடிமையாயிருக்கின்ற பாகவதர்களால் ‘இவர்கள் நம்முடையவர்கள்‘ என்று அங்கீகரிக்கப்படுமவர்கள் முன்னடிகளிற் சொல்லப்பட்ட அதிகாரிகளிற் காட்டிலும் சிறந்து வாழ்வர் என்றாராயிற்று. இரண்டாமடியின் முதலிலும் முடிவிலும் ‘திருந்த‘ என்னாதே ‘திருந்து‘ என்றே ஓதிவருமவர்களின் பாடம் மறுக்கத்தக்கது. வரும் மதிபார்த்து அன்பினராய் – எம்பெருமானுடைய திருவுள்ளக்கருத்தைப் பின் சென்று அன்பு கொண்டிருப்பவர்களென்கை.


  2485.   
  காண்கின்றனகளும்*  கேட்கின்றனகளும் காணில்,*  இந் நாள்-
  பாண் குன்ற நாடர் பயில்கின்றன,*  இது எல்லாம் அறிந்தோம்- 
  மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்*
  சேண் குன்றம் சென்று,*  பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே. 

      விளக்கம்  


  • தலைவன் பொருள்வயிற் பிரிதலைக் குறிப்பாலறிந்து தலைவி தோழிக்குக் கூறல் இது. தேசாந்தரஞ் சென்று பொருள் சம்பாதிப்பதற்காக நாயகியைப் பிரிந்து செல்லுதல் பொருள்வயிற் பிரிவாம். (பொருள்வயின் - பொருள் நிமித்தமான என்றபடி.) இங்கே ஒரு சங்கை பிறப்பதுண்டு; - எல்லாவற்றாலும் பரி பூரணனான ஒரு உத்தம புருஷனையே தலைவனாக நாட்டி நூலுரைப்பர் கவிகள்; அத்தலைவன் பொருள் சம்பாதிக்கும் பொருட்டு நாயகியைப் பிரிந்து தேசாந்தரம் செல்லப் பார்க்கிறானெனில், அவன் ஏழை என்று ஏற்படுமே; அவனவன் தலைவனாயிருக்கத்தக்கதே என்று சங்கிக்க இடமுண்டு. இதற்கு கேண்மின்; பொருளில்லாதவனாய்ப் பொருளீட்டுதற்காகப் பிரிகிறானென்பதில்லை; அப்பொருள் கொண்டு, துய்ப்பது ஆண்மைத் தன்மையன்று என்று கருதித் தனது ஸ்வயார்ஜிதமாய்ப் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியும் பிரிவு இது- என்றுணர்க. தேவகாரியமும் பித்ருகாரியமும் ஸ்வயார்ஜிகமான பொருள்கொண்டு செய்தாலன்றிப் பயன்படா; தாயப் பொருளாற் செய்யுமது தேவர்களையும் பித்ருக்களையும் இன்புறுத்தாதாம். ஆதலால் அவர்களையும் இன்புறுத்த வேண்டிப் பிரிவது ஏழைமையைக் காட்டாதென்க.


  2487.   
  மாயோன்*  வட திருவேங்கட நாட,*  வல்லிக்கொடிகாள்!- 
  நோயோ உரைக்கிலும்*  கேட்கின்றிலீர் உறையீர்*  நுமது-
  வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்-
  ஆயோ?*  அடும் தொண்டையோ,*  அறையோ இது அறிவு அரிதே. 

      விளக்கம்  


  • கிளவித்துறையில் இப்பாசுரம் - ‘மதியுடம்படுத்தலுற்ற தலைவன் குறையுறவுரைத்தல்’ எனப்படும். நாயகன் நாயகியோடே ஏதோவொரு விதமாகக் கூடிப்பிரிந்தான்; பிரிந்தபின்பு மறுபடியும் அவளைக்கூட வேண்டி அவளது தோழியினிட் சென்று தனது குறையையறிவித்தும் நிறைவேறப் பெறாதவனாய் இனி என்ன செய்வதென்று ஆலோசித்திருந்தான்; இருக்கையில், நாயகியும் தோழியும் ஒன்றுகூடிப் புனங்காத்திருக்கிற மையம் நேர்பட்டதனால் அவரருகிற் சென்று நின்று புதியவன்போலச் சில வார்த்தைகளைக் கூறித் தன் குறையையறிவித்துத் தோழியை மதியுடம்படுத்துகிறான். மதியுடம்படுத்தல் என்பதும். மதியுடன்படுத்தல் என்பதும் ஒன்றே. அஃதாவது என்னெனில்; நாயகி வேறுபட்டிருப்பதையும் நாயகனாகிய தனது செய்கையையும் தோழியானவள் நோக்கி இவற்றுக்குக் காரணமென்னோவென்று கவலைப்பட்டிருக்கையில், நாயகன் தன்னுடைய கருத்தை அறிவிப்பதனாலே இவற்றின் உண்மைக்காரணம் இன்னதென்று தோழி தெரிந்து கொள்ளும்படி செய்வதேயாம். (மதியை உடன்படுத்தல்- மதியுடம்படுத்தல். மதியாவது கருத்து. தோழியின் கருத்தைத் தனது கருத்தோடு ஒரு வழிப்படச் செய்தல் என்றபடி.)


  2492.   
  கயலோ நும கண்கள்? என்று*  களிறு வினவி நிற்றீர்,* 
  அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை,*  கடல் கவர்ந்த-
  புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்*
  பயலோ இலீர்,*  கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே. 

      விளக்கம்  


  • புனத்திடைக் களிறு வினவவந்து கண்ணழகைக் கொண்டாடின நாயகனைக் குறித்துத் தோழி கருத்தறிந்து உரைத்த பாசுரமிது. இங்குப் பரம போக்யமான பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் சில அறியாத்தக்கன; -“இயற்கையிலே கலந்து பிரிந்த தலைமகன் இரண்டாங் கூட்டத்துக்காகப் புனத்திலே வந்து கிட்டக்கடவதாகக் குறிவரவிட்டுப் போய்க் கால திக்ரமம் பிறந்து பின்பு அங்கே சென்று கிட்டிவன் இவர்களைக் கண்டு கலங்கி அஸங்கதபாஷணம் பண்ண, அவர்களும் அக்தைக்கொண்டு, இவர் வருவதாகப் போனபடிக்கும் வந்தபடிக்கும் இப்போது ஆற்றாமை தோற்றப் பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமென்று சிரித்துக் கொண்டாடுகிறார்கள். இவன்தான் வீரனாகையாலே என்றும் ஆனை வேட்டைக்குப் போம் பழக்கத்தாலே ஆனை வேட்டையை வினவிக்கொண்டு செல்லக் கடவதாக நினைக்கிறான். பிடியையிழந்ததொரு களிறு தன் ஆற்றாமையாலே அமணானைப்பட்டுத் திரியுமாபோலே இவர்களையிழந்து தான் ஆற்றாமையோடே திரிகிறபடியை அந்யாபதேசத்தாலே ஆவிஷ்சரிக்கிறான்.” என்று.


  2508.   
  இசைமின்கள் தூது என்று*  இசைத்தால் இசையிலம்,*  என் தலைமேல்-
  அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்,*  அம் பொன் மா மணிகள்-
  திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள்*  சிமயம் 
  மிசை*  மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே!

      விளக்கம்  


  • தூதுபோகச் சொன்னவிடத்தும் போகாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்கிப் பேசும் பரசுரம் இது. திருவேங்கடமலையின்மேற் சென்று சேரும்பொருட்டுப் பிரயாணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் ‘என்னைப் பிரிந்து அங்குச் சென்று வஸிக்கின்ற எனது தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லுமாறு நீங்கள் எனக்குத் தூதராக வேணும்’ என்று வேண்ட, அதற்கு அவை உடன்படக் காணாமையால் மீண்டும் அவற்றை நோக்கி’ அவனுள்ளவிடத்தேறச் செல்லும் பாக்கியமுடைய நீங்கள் அங்ஙனஞ் செல்லமாட்டாத எனது தலையின் மேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல்லுங்கள்’ என்று பிரார்த்திக்க திருமலைத்தலைமேற்சென்று தங்குவதற்கு தவ்ரைப்படுகின்ற அவை இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கும் இசைதல் அரிதாயிருந்த தன்மையைக் குறித்துத் தலைவி இரங்குகின்றாளென்னவுமாம்.


  2527.   
  ஒள் நுதல் மாமை*  ஒளி பயவாமை, விரைந்து நம் தேர்*
  நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று,*  தேன் நவின்ற-
  விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்*
  மண் முதல் சேர்வுற்று,*  அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே.

      விளக்கம்  


  • நாயகன் நாயகியினிருப்பிடம் நோக்கி மீண்டு வருகையில் தேர்ப்பாகனோடு கூறுதல் இது. பொருளீட்டிவரப் பிரிந்துசென்ற நாயகன் காரியந் தலைக்கட்டித் தேரில் திரும்பி வருகின்றான்; வரும்போது தான் காலங்கடந்து வருகின்றமை கருதி நாயகி மிகவும் துயரப்படுவளென்றெண்ணித் தேர்ப்பாகனை நோக்கி விரைந்து தேரை நடத்துமாறு கட்டளையிடுதல் இது. தன்னைப் பிரிந்து நந்திக்ராமத்தில் துடித்துக்கொண்டிருக்கின்ற பரதாழ்வானுடைய ஆற்றாமையைக் கருதி ஸ்ரீராமபிரான் பதினான்கு வருஷகாலம் சென்ற வழியைச் சிறிது காலத்தில் கடந்து மீண்டு வந்தாற்போல, நெடுஞ்காலம் பிரிந்த நாயகன் தான் மீண்டும் வரக்கடவதாக முன்பு சொல்லிப்போன காலம் வந்திட்டவளவிலே இவளாற்றாமையைக் கருதி நெடுநாட்போன வழியைச் சிறிதுபொழுதில் கடந்து மீண்டுவர நினைத்துப் பாகனை நோக்கி ‘விரையத்தேரை நடத்து’ என்கிறான்.


  2537.   
  முலையோ முழு முற்றும் போந்தில,*  மொய் பூங் குழல் குறிய- 
  கலையோ அரை இல்லை நாவோ குழறும்,*  கடல் மண் எல்லாம்-
  விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!*  பெருமான்-
  மலையோ*  திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)

      விளக்கம்  


  • உரை:1

   தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு களவொழுக்கத்திற் புணர்ந்த நாயகி அவன் பிரிந்த நிலையில் ஆற்றாது வருந்தி வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து உடலிளைத்து வடிவம் வேறுபட, அவ்வேறுபாடு மாத்திரத்தைக் கண்ட தாய் இதற்கு காணமென்னோ வென்று கவலைப்பட்டு அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் ஒளிக்காமல் உண்மையான காரணத்தைக் கூறியிட, அது கேட்ட தாய், இவளது இளமையைக் கருதி இரங்கிக் கூறிய துறை இது. உண்மையில் நாயகி யௌவன பருத்தை அடைந்திருந்தும் இவள் தாய்மார்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க. “செய்யநூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்” “வாயிற்பல்லு மெழுந்திட மயிரும் முடி கூடிற்றில... மாயன் மாமணி வண்ணன் மேலிவள் மாலுறுகின்றானே” “கொங்கையின்னங் குவிந்தெழுந்தில” என்று பெரியாழ்வார் பாசுரங்களும் “முள்ளெயிறேய்ந்தில கூழை முடி கொடா,தெள்ளியளென்பதோர் தேசிலன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

   உரை:2

   தலைமகள் இளமைக்கு செவிலி இரங்குவதாக உள்ள இந்தப் பாட்டில் இந்தப் பெண்ணுக்கு மார்பே இன்னும் பெரிசாகவில்லை, தலைமயிர் வளரவில்லை. ஆடைகள் இடுப்பில் நில்லாமல் நழுவுகின்றன, பேச்சு சரியில்லை. கண்கள் உலகை விலை பேசும் அளவுக்கு மிளிர்கின்றன. பெருமாள் இருப்பது திருவேங்கடம் என்று மட்டும் கூறுகிறாள் இந்தப் பேதைப் பெண் என்று ஒரு தாய் இன்னும் பருவம் எய்தாத தன் மகள் திருமாலையே எண்ணுவதை நினைத்து மனம் வருந்துவதாக நேரடி அர்த்தம் கொண்ட இந்தப் பாட்டிற்கு ஸ்வாபதேச அர்த்தம் இப்படிச் சொல்வார்கள்.


  2544.   
  காவியும் நீலமும்*  வேலும் கயலும் பலபல வென்று,*
  ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு,*  அசுரைச் செற்ற-
  மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்*
  தூவி அம் பேடை அன்னாள்,*  கண்கள் ஆய துணைமலரே. 

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் தலைமகள் கழற்றெதிர் மறுத்துரைத்து வருந்துவதைக் கண்ட தோழன் ‘ஒருகாலும் கலங்க கடவதல்லாத உனது உள்ளம் இங்ஙனே கலங்குவதற்குக் காரணம் என்னோ?’ என்று தலைவனுக்குக் கூற, அதற்குத் தலைவன் தன் ஆற்றாமையுணர்த்தியதுஇது. யான் திருவேங்கட மலையிற் கண்ட மங்கையின் கண்கள் வருத்தத் தொடங்கிய அளவுக்கு என் உயிர் ஓர் ஈடாகாதென்று தலைமகன் தன் வலியிழந்தமையைப் பாங்கனுக்குக் கூறி வருந்துகிறானாயிற்று. அசுரர்களையழித்த பெரிய ஆச்சரியகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற திருமாலின் திருப்பதியாகிய திருவேங்கட மலையிலே மலர்போன்ற கண்களானவை உத்தம லக்ஷணமாகிய ரேகைகளின் செம்மையால் செங்கழுநீரையும் கருநிறத்தால் நீலோற்பல மலரையும், கூர்மையாலும் ஒளியாலும் வருத்துதலாலும் வேலாயுதத்தையும், குளிர்ச்சியாலும் வடிவத்தாலும், கயல்மீனையும், மற்றும் மருட்சி முதலியவற்றால் மற்றுங் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய மிகப் பல பொருள்களையும் தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து என்றை வருத்துதற்கு அடிகோலிய பரப்பு எனது உயிரின் தன்மைக்கு ஏற்ற அளல்ல; உயிரின் அளவை மீறிக்கிடக்கின்றது: இந்த மெல்லிய உயிரை மாய்ப்பதற்கு இத்தனை பெரிய முயற்சி கொள்ளத் தேவையில்லை என்றவாறு.


  2558.   
  உறுகின்ற கன்மங்கள்*  மேலன ஓர்ப்பிலராய்,*  இவளைப்-
  பெறுகின்ற தாயர்*  மெய்ந் நொந்து பெறார்கொல்*  துழாய் குழல்வாய்த்-
  துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்*  சூழ்கின்றிலர்* 
  இறுகின்றதால் இவள் ஆகம்,*  மெல் ஆவி எரி கொள்ளவே.

      விளக்கம்  


  • -வெறிவிலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக்கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கைநோய் கொண்டு மேனி மெலிந்து வடிவுவேறுபட, அதுநோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறு, செஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன்மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நொயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட முன்னிலைப்படர்க்கையாகக் கூறியதாயிது. இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும் அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும்வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.


  2715.   
  தன்னை முன நாள் அளவிட்ட தாமரைபோல்,*
  மன்னிய சேவடியை வான்இயங்கு தாரகைமீன்,*

  என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த,*   -மழைக்கூந்தல்- 


      விளக்கம்  


  • (பல்பொறிசேர் இத்யாதி) திருமேனி நிறையப் புள்ளிகளை யுடையவனும் ஆயிரம் பைந்தலைகளை யுடையனும் மஹாதேஜஸ்வியுமான திருவனந்தாழ்வானுடைய படங்களிலேயுள்ள மாணிக்கமணிகளின் சிகைகளிலிருந்து கிளம்பி எங்கும் பரவியிராநின்ற ஆச்சரியமான தேஜோராசிகளால் முட்டாக்கிடப்பெற்ற அந்த சேஷசயனத்திலே, திருமகரக்குழைகள் பளபளவென்று ஜவலிக்க, கரிய மால்வரை போலே துயில்கின்றதாம் நாராயண பரஞ்ஜோதி. முத்துக்க ளென்னத்தக்க நக்ஷத்ரங்கள் நிறைந்த ஆகாசமண்டலம் மேற்கட்டியாக அமைந்தது, நிகரின்றி ஜ்வலிக்கின்ற திருவாழி திருச்சங்குகள் திருவிளக்குகளாயின அன்றிவ்வுலகமளந்த திருவடியின் விடாய் தீரப் பாற்கடல் தனது அலைகளையே சாமரமாக வீசிற்று, பூமிப்பிராட்டி, திருவடி வருடாநின்றான்.


  2779.   
  அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,*

  தென்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை,*


      விளக்கம்  


  • அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க. தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.


  2870.   
  கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*
  தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.

      விளக்கம்  


  • நித்தியசூரிகள் தங்கியிருக்கின்ற குளிர்ச்சி பொருந்திய திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், எக்காலத்தும் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண் ஆவான்.


  2965.   
  போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
  ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
  பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
  மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          

      விளக்கம்  


  • ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார். முதலடியில் மூன்று காலங்களையுமெடுத்திருக்கின்றார்; இறந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்பெருமான் செய்யும் நன்மையைத் தெரிந்துகொண்டு பேசமுடியும் எதிர்காலத்தில் இனி அவன் செய்யப்போகிற நன்மையை இவர் எங்ஙனே தெரிந்நு கொண்டாரென்று சிலர் சங்கிக்கக்கூடும் எந்தக்காலத்திலும் எம்பெருமானல்லது வேறெருவன் ரக்ஷகனல்லன் என்கிற சாஸ்த்ரப்ஸித்தியைக் கொண்டு கூறக்குறையில்லையென்க. இறந்தகாலமும் நிகழ் காலமும், ஒருகாலத்திலே எதிர்காலமாக இருந்தவைதானே; ஆதலாலும் சொல்லக் குறையில்லை யென்ப.


  2978.   
  தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
  ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
  தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
  ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       

      விளக்கம்  


  • தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம். அடியவர்கட்குப் பரதந்திரனும், ஸகல ஜகத்துகளுக்கும் முதற்காரணமானவனும், பிரளயாபத்திலே பேருதவி புரிகின்றவனுமானவனை, அளவிட்டறிய ஆராலாவது ஆகுமோவென்று சொல்லிக்கொண்டு தொழுமவர்களாய், அந்த தாமோதரனுக்குச் காரிரபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும்-கடுகிலே கடலையடக்குமா போலே என்பக்கலிலே தன் குணக்கடலைவைத்து என்னை யடிமைகொண்ட ஸ்வாமியை அளவிட்டு அறியப்போமோ? என்றாராயிற்று. உலகப்பொதுவாக அவன் செய்யு முபகாரங்களை ஒருபடியறிந்தாலும், என்பக்கலில் அவன் பண்ணின விசேஷோபகாரம் அறியவாரிது என்றவாறு.


  3035.   
  ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
  வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*
  தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
  எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)

      விளக்கம்  


  • திருவேங்கடமுடையானுக்கு எல்லாவடிமைகளும் செய்யப் பெறவேணுமென்று மநோரதிக்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறக முன்னடிகளை அந்வயித்துக்கொள்வது. “காலமெல்லாம் அடிமை செய்யவேண்டும்” என்றாலே போதுமாயிருக்க ஒழிவில் காலமெல்லாம் என்று விசேஷித்துக் கூறினதற்குத் சில ஆசாரியர்கள் ஒரு விசேஷார்த்தம் கூறுவர்களாம்; அதாவது - இனிமேல்வரும் காலங்களில் மாத்திரம் கைங்கரியம் செய்ய விரும்புகிறாரல்லர்; கீழ்க்கழிந்த காலங்களிலும் கைங்கரியம் செய்யவிரும்புகிறீர் என்று. கழிந்துபோனகாலத்தை மீட்கமுடியாதாதலால் இந்த அர்த்தம் எங்ஙனே பொருந்துமெனில்; கீழ்க்கழிந்த காலத்திலும் கைங்கரியம் செய்ய வேணுமென்று பாரிக்கிறாராகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்; ‘அந்தோ! கீழே வெகுகாலம் வீணாகப் கழிந்துவிட்டதே! என்கிற இழவு நெஞ்சிற்படாதபடி அதனைமறந்து ஆனந்தமயமாகக் கைங்கரியம் பண்ணப் பாரிக்கிறாரென்பதுவேயாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “ஒழிவில் காலமெல்லாமென்று ப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு; அதாகிறது, கீழ்க்கழிந்த காலத்தை மீட்கையென்று ஒரு பொருளில்லையிறே...... கீழ்க்கழிந்த காலத்திலிழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயிறேயுள்ளது” என்று.


  3036.   
  எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
  முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 
  சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
  அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.

      விளக்கம்  


  • திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செல்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான்.


  3037.   
  அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
  கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*
  தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
  எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.

      விளக்கம்  


  • ஆழ்வீர்! திருமலையில் அடிமை செய்யவேணுமென்று நீர் பாரிக்கின்றீர்; இஃது உமக்கு வாய்க்குமோ வென்ன; எண்ணிறாத நித்ய ஸித்தபுருஷர்களெல்லார்க்கும் தன்னை அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறானோரு புரமோபகாரகனல்லானோ அவன்; அன்னவன் நமக்கும் தன்னைத் தந்தருளமென்கிறார். (எம்பெருமான் ஸ்வாநுபத்தை நமக்குத் தந்தருள்வன் என்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டிருக்கவில்லையே என்னவேண்டா; எண்ணில் தொல்புகழ்வானவ ரீசனே என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். நமக்குத் தந்தருளாதொழிந்தனாகில் தொன்புகழுடைமை தேறுமோ என்றவாறு.) அண்ணல் என்றதற்குப் பொருளருளிச் செய்யாநின்ற நம்பிள்ளை “குறிஞ்சி நிலத்தில் தலைமகனென்னுதல், ஸர்வஸ்வாமி யென்னுதல்” என்றருளிச் செய்துள்ளார். அண்ணலென்கிறசொல் பொதுவாக ஸ்வாமியைச் சொல்லக் கடவதென்றும்; சிறப்பாகக் குறிஞ்சிநிலத் தலைமகனைச் சொல்லக்கடவதென்றும், தமிழர் கூறுவர். இரண்டுவகையான பொருளும் அவ்விடத்திற்கு ஒக்கும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமென்க. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் இருபதாவது ஸூத்திரத்தின் உரையில், அண்ணல் என்பதற்கு முல்லை நிலத்தலைவன் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது.


  3038.   
  ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
  தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 
  நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
  பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.

      விளக்கம்  


  • “எண்ணில் தொல்புகழ்வானவரீசன்” என்றார் கீழ்ப்பாட்டில்; அதனால் நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தானென்பதை ஒரேற்றமாக அருளிச் செய்தார்; மிகவும் நீசனான என் பக்கலிலே பாசம் வைத்திருக்குமப் பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறாரிப்பாட்டில். ‘வானவர்க்கு ஈசன்’ என்று சொல்லுகிறது திருவேங்கடத்தானுக்குத் தேசமோவென்கிறார். *கானமும் வானரமும் வேடுமானவிவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறவன் நித்யஸூரிகட்கு முகங்கொடுக்கிறானென்பது எங்ஙனே ஏற்றமாகும்? * அயர்வறு மமரர்களதிபதி யென்கை ஸ்ரீவைகுண்டநாதனுக்கு ஏற்ற மாகுமத்தனையல்லது திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாகாது காணும். அஃது ஏற்றமன்றாகில், பின்னை எதைத் திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைக்கின்றீர்? என்ன; அதற்கு விடையளிக்கின்றார்போலும் பின்னடிகளால், *அமர்யாத க்ஷுத்ரச்சலமதிரஸூயாப்ரஸவபூரடி* இத்யாதிப் புடைகளிலே ஆளவந்தார் போல்வார் அருளிச் செய்கிற கணக்கிலே மிகவும் நிஹீநனான என் நிறத்தில் ஆசாபாசம் வைத்து அதனால் புகர் படைத்திருக்கின்ற எம்பெருமானை வானவரீசனென்பது என்ன பெருமை! என்றாராயிற்று. என்கண்பாசம்வைத்த என்பதற்கு வேறு வகையாகவும் பொருளுரைப்பர்; தன் விஷயமான பாசத்தை என் பக்கலிலே (எனக்கு) உண்டாக்கின என்று.


  3039.   
  சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
  ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*
  வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
  தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.

      விளக்கம்  


  • நீசனான எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு நித்யஸூரி நிர்வாஹகத்வம் ஒரேற்றமோ வென்றார் கீழ்ப்பாட்டில்; என்னினும் தாழ்ந்தவர்களைத் தேடிப் பெற மாட்டாதேயிருக்கிறவனுக்கு, எனக்குத் தன்னைத் தந்தானென்கிற விதுதான் ஓர் ஏற்றமோவென்கிறாரிப்பாட்டில் “எல்லாவுலகுந் தொழும் ஆதிமூர்ததி” என்று இவர் கீழே சொல்லியிருந்தாலன்றோ இப்போது * எல்லாவுலகுந் தொழுமாதிமூர்த்தி யென்றாலளவாகுமோ?* என்று சொல்லலாம்; கீழ்ப்பாட்டில் அப்படியொன்றுஞ் சொல்லியிருக்கவில்லையே; மூன்றாம்பாட்டில் “வானவரீசனே” என்று சொல்லியிருந்ததனால் நான்காம் பாட்டில் “ஈசன்வானவர்க்கென்ப னென்றால் அதுதேசமோ?” என்று சொன்னது பொருந்திற்று; இங்கு அங்ஙனம் பொருத்தமில்லையே! என்கிற சங்கைக்கு நம்பிள்ளை அருளிச்செய்கிற பரிஹாரத்தின் அழகைக் காண்மின்:- “கீழே *நீசனென் நிறைவொன்றுமிலேன் என்றாரே தம்மை:- தாழ்வுக்குத் தம்மை எல்லாரிலுமவ் வருகாகச் சொன்னாரே; தாம் தொழுதபோதே எல்லா லோகங்களும் விழுக்காட்டாலே தொழுததாயிற்று. ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், கீழ்ப்படி அமிழ்ந்தது என்று சொல்லவேண்டாவிறே” என்பவை ஈட்டு ஸ்ரீஸூக்திகள். இதனால் தேறினது என்னவென்றால், “நீசனென் நிறைவொன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே” என்று கீழ்ப்பாட்டில் கூறியதில்* எல்லாவுலகுத் தொழுமென்கிற அர்த்தம் ஸித்தமாகவேயுள்ளது என்று காட்டினபடி. ஒரு காலைசாலையில் மிகவும் மூடனான வொருவன் பரீக்ஷை தேறிவிட்டானென்றால் மற்றையோர்கள் தேறினாரீகளென்பது எப்படி ஸித்தமோ அப்படியே ஆழ்வார்தாம் தொழுதமை சொன்னவளவில் எல்லாவுலகும் தொழுதமை சொன்னபடியே யாகுமென்க. என் கண் பாசம் வைத்தது ஒரேற்றமோ? என்றபடியாயிற்று முன்னடிகளால்.


  3040.   
  வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
  தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*
  வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
  ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.

      விளக்கம்  


  • இப்பதிகத்தில் முதற்பாட்டில் முதற்பாட்டில் கைங்கர்யம் ப்ரஸ்தாவிக்கப்பட்டது; (அதன்மேல் நான்கு பாசுரங்கள் ப்ராஸங்கிகங்கள்.) முதற்பாட்டோடு இப்பாட்டிற்கு ஸங்கரி கொள்ளலாம். பிரதிபந்தகங்களான கருமங்கள் பலகிடக்க அடிமை செய்வது எங்ஙனே ஸாத்யம்? என்று சங்கைபிறக்க, அடிமை செய்வோமென்று இசையவே அவைதானே தொலையுமென்கிறாரிப்பாட்டில். கடம்- கடன்: மகரனகரப்பொலி, கடன்கள் வேம் = பிராமணன் பிறக்கும்போதே மூன்றுவகையான கடன்களோடு பிறக்கிறானென்று வேதம் ஓதுகின்றது. யஜுர்வேதத்தில் ஆறாவது காண்டத்தில் மூன்றாவது ப்ரச்கத்தில்- *ஜாயமாதோஹவை* என்று தொடங்கி, அந்தணன் பிறக்கும்போதே மூன்று கடன்களோடு பிறப்பதாக ஓதியுள்ளது. ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ரஷிகளின் கடனையும் யஜ்ஞங்களால் தேவர்களின் கடனையும், ஸந்தான ஸமுத்பாதநத்தினால் பித்ருக்களின் கடனையும் தீர்ப்பதென்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இம்மூவகைக் கடன்களையும் தீர்க்காமல் மோக்ஷத்தின் ருசிவைத்தால் அது கிடைக்காதென்றும் நரகமே பலிக்குமென்றும் மநு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளது; *ருணாநி த்ரீண்யபாக்குரத்ய மதோ மோக்ஷேநிவேசயேத், அநபாக்ருத்ய, மோக்ஷம் துஸேவமாதோ வ்ரஜத்யதா* என்பது மநு மஹிர்ஷியின் வசனம், இதன் பொருள்:- மூன்று கடன்களையும் தீர்த்துவிட்டு, பிறகு மனத்தை மோக்ஷத்தில் ஊன்றவைக்க வேணும், கடன்களைத் தீர்க்காமல், மோக்ஷத்தை விரும்பினாலோ அதோகதியையே அடைந்திடுவான்- என்பதாம். வேங்கடத்துறைவாற்கு நம என்று சொல்லிவிட்டால் அம்மூன்று கடன்களும் தீர்க்கப்பட்டனவாகவே ஆய்விடும் என்கிறார்.


  3041.   
  சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
  அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 
  நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
  சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.

      விளக்கம்  


  • நமக்கு அபேக்ஷிதமான அடிமைகளெல்லாம் பெறுவதற்குத் திருவேங்கடமுடையானை ஆச்ரயிக்கவேண்டுவதில்லை, திருமலையின் ஆச்ரயணமே போதுமென்கிறார். வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும் - என்று அந்வயக்ரமம். மா என்பது மலர்க்குமாத்திரம் விசேஷணமன்று, நீர் சுடர் தூபங்கட்கும் விசேஷணம். புஷ்பம் தீர்த்தம் தீபம் தூபம் ஆகிய இவை மிகச் சிறந்த வஸ்துக்களாகத்தேடி ஸம்பாதிக்கப்படவேண்டு மென்கிறதன்று; பக்தியின் கனத்தாலேயாகஞ் சிறப்பு விவக்ஷிதம். சுமந்து என்றதும் அதுபற்றியே யென்க. இவ்விடத்தில் ஒரு இதிஹாஸம் அருளிச்செய்கிறார். அதாவது - ஸ்ரீ ஜகந்நாதததில் எம்பெருமான் செண்பகப்பூவை உகந்து சாத்திக் கொள்வது வழக்கமாயிருந்ததனால் சில ராஜகுமாரர்கள் எம்பெருமானுக்குச் செண்பகப்பூ ஸம்பாதித்து ஸமர்ப்பிக்க ஒரே ஒரு பூ மாத்திரம் மிகுந்திரருந்தது. விலை கொடுத்து வாங்கவந்த ராஜகுமாரர்கள் செல்வச்செருக்குடையவர்களாதலால் ஒவ்வொருவரும் இப்பூவை நாமே பெற்றுப் போய் ஸமர்பிக்க வேணுமென்ற ஆவர்கொண்டவராகி மேன்மேலும் விலையை ஏற்றிக்கொண்டவந்தார்கள்; கடைசியாக அளவற்ற விலைகொடுத்து ஒரு ராஜபுத்திரன் அதைவாங்கிப் பெருமாளுக்குச் சாத்த அன்றிரா அவனுடைய கனவிலே எம்பெருமான் காட்சி தந்து ‘ சீ இட்டபூ எனக்குக் கனத்துச் சுமக்க வொண்ணாததாயிருக்கிறது’ என்றருளிச் செய்தான் என்பதாம். இதனால், எம்பெருமானுக்கு அன்புடன் எதையிட்டாலும் அது அவனுக்கு அலப்யலாப மாயிருக்குமென்பது போதரும்.


  3042.   
  குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
  அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்
  சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
  ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)

      விளக்கம்  


  • எம்பெருமானுக்கும் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்; அது நமக்கு ஒரு பலனையளிக்க வேணுமென்பதில்லை; ஒரு பலனையும் தாரா தொழியினும் அதுவே நமக்கு ப்ராப்பயமாகக்கடவது- என்கிறார். விபவாவதாரத்தோடு அர்ச்சாவதாரத்தோடு வாசியற எஞ்ஞான்றும் மலையே ரக்ஷகமென்ற சாடூக்தியாக இங்கு அருளிச்செய்வர்கள். அன்று ஞாலமளந்தபிரான் - ஒரு ஊர்க்கு உதவினமை கீழே சொல்லிற்று; உலகுக்கெல்லாம் உதவினமை இதனால் சொல்லுகிறது. தாவியன்ணுலகமெல்லாம் தலைவிளாக்கொண்ட த்ரிவக்ரமாவதார சரிதம் ப்ரஸித்தம். இப்படிப்பட்ட பரன் சென்ற சேர் திருவேங்கடமாமலை யொன்றமே தொழ நம் வினை ஓயும். உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானம் வேண்டா, திருமலையாழ்வாரே போதும் என்கை.


  3043.   
  ஓயும் மூப்புப்*  பிறப்பு இறப்பு:பிணி,*
  வீயுமாறு செய்வான்*  திருவேங்கடத்து
  ஆயன்,*  நாள் மலர் ஆம்*  அடித்தாமரை,* 
  வாயுள்ளும்மனத்துள்ளும்*  வைப்பார்கட்கே.

      விளக்கம்  


  • திருமலையொன்றே நம் வினை ஓய்வதற்குப் போதுமென்கிறார் கீழ்; அந்தத் திருமலை தானம் பூர்த்தியாகவேணுமென்பதில்லை, அதில் ஏகதேசமே போதுமென்கிறாரிப்பாட்டில். (இங்க ஏகதேசமென்கிற வார்த்தையினால் நினைக்கிறது திருமலையப்பனை. திருமலையில் ஸம்பந்தத்தைப் பற்றியாயிற்று ஸ்ரீநிவாஸனும் உத்தேச்யனாவது திருமங்கையாழ்வார் “வடமாமலையுச்சியை” என்ற ஸ்ரீநிவாஸனைத் திருமலையின் ஏகதேசமாகவே கூறினார். பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன் நாண்மலரா மடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும் என்றும் அந்வயிப்பது. வியாதி முதலிய கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற பெருமானுடைய, ‘நாட் பூமலர்ந்தது’ என்னலாம்படி ஸுகுமாரமான திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிக்குமவர்களுக்கு ஜன்மஜராமரணாதிகள் ஓயும் என்கை. ஓயும் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் ‘ஓயும் மூப்பு- ஓய்வை விளைவிக்கின்ற மூப்பு’ என்று மூப்புக்கு அடைமொழியாக்கி யுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர். திருவேங்கடத் தாயனானனவன் (தனது) நாண்டலரடித் தாமரையை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு, ஒயுமூப்புப் பிறப்பிறப்புப் பிணிகளை வீயுமாறு செய்வான் - என்கிற அந்வயக்ரமம் இவர்க்க விவக்ஷிதம்.


  3044.   
  வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
  எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*
  பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
  மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  

      விளக்கம்  


  • பரமபோக்யமான திருமலையையே பரமப்ராப்யமாகப் பற்றுங்களென்று பிறர்க்கு உபதேசிக்கிறார். எம்பெருமான் சேதநர்களுக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து ஆயுளையயும் அருளுகிறான்; இவை எதற்காகவென்னில்,திருமலை முதலான திருப்பதிகளிலே சென்று வழிபாடு செய்வதற்காகவேயன்றி வேறொரு காரியத்திற்காகவன்று. ஆயினும், உலகர் உடலில் வலிவுள்ள காலங்களில் விஷயாந்தரங்களிலே மண்டிக்கிடந்து, திவ்யதேச வழிபாடுகளைப் பற்றிப் போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று பதற்றமற்று ஆறியிருந்து விடுகிறார்கள்; பார்த்துக்கொண்டிருக்கும் போதே வல வகைகளிலும் தளர்ச்சிவந்து சேர்கின்றது; அப்போது திவ்யதேச வழிபாட்டை நெஞ்சிலும் நினைக்க ப்ரஸக்தியில்லையாகிறது. அங்ஙனம் ஆகாமே திருமலையைப் பணிமின் என்றாராயிற்று. எம்பெருமானுக்குப் பரமபோக்யமான சயனமாகத் திருவனந்தாழ்வான் இருக்கவும் அவனையும் விட்டுத் திருமலையில் வாஸம் மிகவும் ருசித்தது என்பதை மூன்றாமடி காட்டும். கீழ்முதற்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட கைங்கர்யத்தைச் செய்யுமவர்கள் ஆயாஸமின்றிக்கே மிகவும் இனிதாகச் செய்வதற்குப் பாங்கானவிடம் திருமலை என்பதைக்காட்டும் ஈற்றடி.


  3045.   
  தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
  நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*
  கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
  வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   

      விளக்கம்  


  • இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். இப்பதிகம் திருவேங்கடமுடையானைக் கவிபாடினதாயிருக்க “தாள்பரப்பி மண்தாவிய வீசனை” என்றது என்னென்னில்; எல்லாரையும் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளுகைக்காக நிற்கிறநிலையாலும், * கானமும் வானரமுமானவற்றுக்கம் முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறபடியாலும் திருவேங்கடமுடையானை உலகளந்த பெருமானாகச் சொல்லப் பொருத்தமுண்டென்பர் ஆசிரியர்கள். (வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.) ‘ஞானம்புகழ் வாழ்வர்’ என்றாவது, ‘ஞாலம்புகழ வாழ்வெய்துவர்’ என்றாவது அருளிச்செய்தால் போதுமே; ‘வாழ்வெய்தி வாழ்வர்’ என்றவிது புநருக்தியாவுள்ளதேயென்று சிலர் சங்கிக்ககூடும்: பெறுகிற வாழ்வு இவ்வாத்மாயுள்ளதனைவுமாகும் என்று காட்டுகிறதாகையாலே புநருக்தியில்லை: கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற வாழ்வைப்பெற்று எந்நாளும் அந்த வாழ்வுடனே யிருக்கப் பெறுவர்கள் என்றவாறு. “ஞாலம் வாழ்வெய்திப் புகழ வாழ்வர்” என்று அந்வயித்துப் பொருள்கொள்வதுமுண்டு; அப்போது சங்கைக்கு உதயமேயில்லை.


  3064.   
  வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
  பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 
  ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
  ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 

      விளக்கம்  


  • ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம். “அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாளுபிஸ் தவ ததச் சீலாஜ் ஜடீபூயதே.” (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்கிறபடியே சீலுகுணத்திற்கு எல்லை நிலமான அர்ச்சாவதார நிலைமைகளில் ஈடுபட்டு, பித்தரென்றே பலருமேசும்படியான நிலைமையை யடைந்து ஒவ்வொரு திவ்யதேசத்து எம்பெருமான்களின் திருநாமங்களயும் வாயாரச் சொல்லி ஸம்பிரமித்துக் கூத்தாடுமவர்கள நித்யாநுபவரரான நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்க வுரியவர்கள் என்றதாயிற்று. பேர்பல சொல்லிப்பிதற்றி =புகழுநல் லொருவனென்கிற கீழ்த்திருவாய்மொழியில் எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுணா விபூதிகள் விஷயமாகத் தாம் பேசின பாசுரங்களெல்லாம் வகைவகையாக ஒவ்வொருபக்தர்களின் வாயிலும் வெளிவர வேண்டுமென்பது கருத்து. பித்தரென்றே பிறர்கூற “பேயரேயெனக்கு யாவரும் யானமோர் பேயனே” என்ற குலசேகராழ்வார் பாசுரமும், “அத்தா அரியே யென்றுன்னை யழைக்கப் பித்தாவென்ற பேசுகின்றார் பிறரென்னை” என்ற திருமங்கை யாழ்வார் பாசுரமும் இங்குக் காணத்தக்கன. “பித்தரென்றே பிறர்கூற” என்று இதை ஒரு விஷயமாக அருளிச் செய்யவேணுமோ வென்னில், ஸ்ரீவைஷ்ணவராயிருப்பவர்கள் வசைகூறிக் கைவிடுவதே மிகவும் உத்தேச்யமென்பது பெரியோர்களின் கொள்கை. வைஷ்ணவர்களுடைய விஷயீகாரத்தினும் அவைஷ்ணவர்கள் இகழுகையே புருஷார்த்தமென்று கருத்து” என்றார் நஞ்சியரும் ஒன்பதினாயிரப்படியில். ஸ்ரீவிபீஷணாழ்வான் ஸ்ரீராமகோஷ்டிணில் தனக்கு விஷயீகாரம கிடைக்காமற் போனாலும் அரக்கர் திரளில் தனக்குத் திரஸ்காரம் கிடைத்ததே பரமபாக்யம் என்று நினைக்கும் படியாயிருந்தது.


  3101.   
  சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
  என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
  தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
  என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 

      விளக்கம்  


  • உரை:1

   வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார். தொடங்கும்போதே ‘சொன்னால் விரோதமிது’ என்கிறார்- நீங்கள் சில பிரயோஜனங்களை நினைத்து நரஸ்துதரி செய்யாநிற்க. அதைத் தவிருமாறு நான் உரைக்குமிது உங்களுக்கு விரோதமாகவேயிருக்கும் என்றபடி. மூலத்தில் “சொன்னால் விரோதம்” என்றுள்ளதே யல்லது, இன்னார்க்கு விரோதம் என்று ஸ்பாஷ்டமாக இல்லை; உங்களுக்கு விரோதமாகும்’ என்பது போலவே ‘சொன்னால் எனக்கு விரோதமாகும்’ என்பதாகவும் கொள்ளலாம். இவர்க்கு என்ன விரோதம் என்னில்; நரஸ்துதியைப் பற்றி நெஞ்சினால் நினைப்பதும் வாயினாற் சொல்வதுமே தமக்கு ஸ்வரூப விரோதம் என்று இவர் திருவுள்ளம். ஆகிலும் சொல்லுவன் = சொன்னால் விரோதமேயாகிலும் நீங்கள் படும் அநர்த்தம் பொறுத்திருக்கமாட்டாமையாலே சொல்லாதிருக்கில்லேன் - தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷடனான ராவணனைக் குறித்துப் பிராட்டி ஹிதோபதேசம் பண்ணினாற்போலவும், பாபிகளில் தலவைனான இரணியனைக் குறித்தும் அஸுரபுத்திரர்களைக் குறித்தும் ப்ரஹ்லாதாழ்வான் ஹிதோபதேசம் பண்ணினாப்போலவும், தன்னைத் திரஸ்கரித்த ராவணனைக் குறித்து விபீஷணாழ்வான் ஹிதோபதேசம் பண்ணினாப்போலவும் விமுகரானாரையுங் குறித்து ஆழ்வார் ஹிதோபதேசம் பண்ணுகிறார். அவர்களையும் விடமாட்டாத நகையாலே.

   உரை:2

   சொன்னால் சண்டை வரும்; இருந்தாலும் சொல்வேன் கேளுங்கள். என்னுடைய கவிதைகளை திருவேங்கடத்துப் பெருமான் இருக்கும் வரை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்கிறார் ஆழ்வார்.


  3177.   
  மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
  வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 
  காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
  வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

      விளக்கம்  


  • இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகியதான திருவேங்கடமலையிலே, தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பணித்ததாம் இப்பதிகம்; ஒரு பாசுரத்திலும். திருவேங்கடமுடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லையாயிருக்க இங்ஙனே சொல்லுவானேன்? என்னில்; தர்மியின் ஐக்கியத்தைக் காட்டினபடி. திருவாய்மொழிக்கு அர்ச்சாவதாரத்திலேயே முழுநோக்கு என்று காட்டினபடியுமாம். இப்பதிகத்தில் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே நித்யஸம் ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லிற்றாகையாலே சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினபாயாயிற்றென்ப. “வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்கையாலே பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்குந்திறன் உண்டென்று சிலர்சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகாரக்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் என்றதித்தனை. சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந்நிக மாந்ததேசிகன் “…


  3398.   
  மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
  நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 
  கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
  என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

      விளக்கம்  


  • திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனைபொருந்திய கூந்தலையுடைய மகள் இழந்தது சங்கவளையலேயாம்.


  3399.   
  சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
  செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 
  கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
  மங்கை இழந்தது*  மாமை நிறமே. 

      விளக்கம்  


  • சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களையுடையவனுக்கு, சிவந்த கோவைக்கனி போன்ற திருவதரத்தையும் செந்தாமரைபோன்ற திருக்கண்களையுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.


  3400.   
  நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
  திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 
  கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
  பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.

      விளக்கம்  


  • கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.


  3401.   
  பீடு உடை நான்முகனைப்*  படைத்தானுக்கு,* 
  மாடு உடை வையம் அளந்த*  மணாளற்கு,* 
  நாடு உடை மன்னர்க்குத்*  தூதுசெல் நம்பிக்கு,*  என் 
  பாடு உடை அல்குல்*  இழந்தது பண்பே.

      விளக்கம்  


  • பெருமைபொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம்பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தையுடையவர்களான பாண்டவர்களுக்குத் தூதுசென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலையுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.


  3402.   
  பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
  மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 
  தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
  கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    

      விளக்கம்  


  • பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.


  3403.   
  கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
  பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 
  நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
  வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  

      விளக்கம்  


  • கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.


  3404.   
  மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
  பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 
  கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
  தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.

      விளக்கம்  


  • திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு, படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடையவனுக்கு, திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள்.


  3405.   
  சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
  மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 
  பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
  வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 

      விளக்கம்  


  • குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.


  3406.   
  மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
  சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 
  காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
  பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       

      விளக்கம்  


  • அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய, ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.


  3407.   
  பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
  மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 
  நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
  கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 

      விளக்கம்  


  • (பொற்பமை நீண்முடி) இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள். பொற்பு – அழகு, அது அமைந்த திருவபிஷேகத்தின்மேலே திருத்துழாய் மாலை காத்திருக்குமழலே யீடுபட்டு என்மகள் நைகின்றாள். மற்பொரு தோளுடை மாயப்பிரானுக்கு – கண்ணபிரான் பலராமனுடன் வில்விழவுக்கென்று கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும் போது இடைவழியில் கூனியிடம் சாந்து இரந்து பெற்றுத் திருமேனியில் பூசிக்கொண்டான், உடனே கம்ஸனது அரண்மனை வாயிலில் மல்லர்களோடே போர்புரிய நேர்ந்த்து. மல்லபுத்தமாவது ஆயுதசகாயம் சிறிதுமின்றிக்கே உடம்போடு உடம்பு பொருது செய்யும் சண்டை. அப்படிப்பட்ட சண்டை நிகழ்ந்தவளவிலும் திருமேனியிற்பூசின சாந்து சிறிதும் குறியழியாமேயிருந்த மாயத்திலே யீடுபட்டு கைகின்றாளென்மகள் என்கிறாள். * ஏவிற்றுச் செய்வான் என்றெதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்தணிதோள் சதுரன் * என்றபெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.


  3408.   
  கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
  கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 
  கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
  கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.  

      விளக்கம்  


  • செறிவினையுடைய அழகுபொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய தெற்குத் திக்கிலேயுள்ள திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய சூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.


  3442.   
  உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
  நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 
  திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
  குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.

      விளக்கம்  


  • பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே! எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே! உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! தொன்றுதொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.


  3443.   
  கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
  சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 
  சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
  ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

      விளக்கம்  


  • கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.


  3444.   
  வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
  எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
  தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
  அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   

      விளக்கம்  


  • கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே! மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே! உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.


  3445.   
  ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
  தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-
  தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
  பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  

      விளக்கம்  


  • ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ்நாளின் மேலே, நெருப்பினை வாயிலேயுடைய பாணங்களை மழையைப்போன்று பொழிந்த வில்லையுடையவனே! திருமகள் கேள்வனே! தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! போக்கற்கு அரிய வினைகளையுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்கவேண்டும்.


  3446.   
  புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
  புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*
  திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
  திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   

      விளக்கம்  


  • சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?


  3447.   
  ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
  எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*
  மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
  மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

      விளக்கம்  


  • உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம்கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.


  3448.   
  அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
  கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 
  செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
  நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே

      விளக்கம்  


  • அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே! அழகிய கோவைக்கனிபோன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.


  3449.   
  நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
  நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 
  சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
  மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         

      விளக்கம்  


  • உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும் விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள், சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.


  3450.   
  வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
  செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 
  சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
  அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.

      விளக்கம்  


  • வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும் சிவந்த கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே! சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.


  3451.   
  அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
  நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 
  நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
  புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        

      விளக்கம்  


  • சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே! மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.


  3452.   
  அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
  படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 
  முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
  பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.

      விளக்கம்  


  • உரை:1

   (அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். எம்பெருமானுடைய திருக்கையானது திருவடியை நோக்குமாபோலே யிருப்பதுண்டே, அதற்கொரு கருத்துக்காணலாம். “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்துயில் காட்டியருளுகிறார். பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * கீரிடம் ஸ்ரீரங்கே சயிது என்கிற ச்லோகத்தில் * நிஹீநாநாம் முக்க்யம் சரணமிதி பாஹுஸ் த்திதர ஸ்புடம் பரூதே பாதாம்புஜயுகளம் ஆஜாநுநிஹித என்றருளிச் செய்த்தும் இங்கே அநுஸந்தேயம். படிக் கேழ் இல்லாப் பெருமானை – படியென்று ஒன்பு கேழ் என்று உயர்வு ஒப்புமுயர்வு மில்லாத பெருமான் •••• பிராமாணங்கள் காண்க. அன்றிக்கே “அருள் கொடுக்கும்படிக்கு, கேழ் இல்லாப் பெருமானை“ என்றுங் கொள்ளலாம் “ஆச்ரித விஷயத்தில் அருள்கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பில்லாத ஸர்வேச்சரனை“ என்பது ஈடு. முடிப்பான் சொன்னவாயிரம் – தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள் சில ஆசாரியர்கள், * பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த வாயிரம்“ என்பர் நம்பிள்ளை.

   உரை:2

   அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை, வயல்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச்செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத் தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.


  3574.   
  நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
  நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
  சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
  வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)

      விளக்கம்  


  • “நம்முடையேதலர்“ என்றதற்கு ஆசார்யஹ்ருதயத்தில் விசேஷ ஸவாபதேச மருளிச்செய்யப்படுகிறது. அதில் இரண்டாம் பிரகரணமுடியில் (139) “மகள் நம்முடையேதலர் யாமுடையத்துணையென்னும் ஸித்த ஸாதந ஸாத்யபரரை“ என்றுள்ளது. பஹிரங்கசர்மஜ்ஞாநாதி உபாயாந்தரங்களிலே ஊன்றினவர்களை பஹிரங்க சத்ருக்களென்றும், ஸித்தோபாயபூதனான அவனுடைய உபாயத்வத்திலே ஊன்றி நின்று, “பதறுதல் பராதந்திரியத்திற்குச் சேராது“ என்று நிஷேதிக்கிற ஸித்தோபாய நிஷ்டரை அந்தரங்கசத்ருக்களென்றும் சொல்லுகிறது. இப்பாசுரத்தில் “ஏதலம்“ என்று ஸாமான்யமாகச் சொல்லாமல் “நம்முடையேதலர்“ என்று விசேஷித்துச் சொல்லுகையாலே அந்தரங்க சத்ருக்களே இங்குப் பொருளாக வமையும் வித்தோபாய நிஷ்டைக்கு ப்ரதிகூலரான ஸாத்யோபாய நிஷ்டரைத் தாய்மார் சத்ருக்களான நினைத்திருப்பர், பதற்றத்திலே நின்ற மகளுடைய நினைவுக்கு அது எதிராகையாலே அப்படிப்பட்ட நினைவுடைய தாய்மாரை இவள் அந்தரங்க சத்ருவாக நினைக்கத் தகுதியுள்ளது. ஆகவே, இங்கு “நம்முடையேதலர் முன்பு“ என்றது – தாய்மார்முன்பு என்றே பொருள்பட்டு நிற்குமென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி “இவளுக்குச்சில சத்ருக்கள் இல்லையிறே, ஹிதஞ்சொல்லி மீட்கப்பார்க்கிற தாய்மாரிறே சத்துருக்கன்“ என்பதாம். அவர்கள் முன்பு தொழிந்தாயாகிலும் எங்கட்குச் சொல்லலாகாதோ?“ என்று தோழிகள் கேட்டபடியாலே, அவர்களுக்குச் சொல்லாது மறைத்துவைத்து உங்களுக்குச் சொல்லலாம்வார்த்தை என்னவிருக்கிறது, ஒன்றும் சொல்லத் தெரியவில்லையேயென்றாளாயிற்று. ஆனாலும் சிறிது சொல்லென்னச் சொல்லுகிறாள் சங்கஞ்சரிந்தனவென்று தொடங்கி * என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே * என்று ஆண்டாளருளிச்செய்த்துபோல, என்னுடைய சரிவளையைச் சரிவளையே யாக்கினர் தலைவர் என்கிறாள் போலும் பராங்குசநாயகி. மூன்றாமடி முழுதும் இழவுசொல்லுகிறது. இழந்த விழவுக்கு ஹேது சொல்லுகிறது நான்காமடி. பரமபதத்திலிருப்பை ஆசைப்பட்டேனல்லேன், நமக்குக் காட்சி தருகைக்கு வந்து நின்றவிடத்தே ஆசைப்பட்டடேனித்தனை, அதற்குப் பெற்றதண்டனை இது – என்றாளாயிற்று. (வெங்கட்பறவையின்பாகன்) பறவைக்கு “வெங்கண்“ என்று விசேஷணமிட்டதற்கு – அநுகூலமாகவொரு பொருளும் பிரதிகூலமாக வொருபொருளுமருளிச்செய்வர். கருத்மான் விரோதிகளின்மேலே வெவ்விய கண்களைச் செலுத்தி அவர்களை முடித்துப் பெருமானை இங்குக் கொணரவல்லவன், அவனிடத்துக் குறையில்லை என்பதாக முதற்பொருள். ஸம்ச்லேஷ தலையிலே பிரித்துக் கொண்டுபோமவனான வெவ்வியன் என்பதாக இரண்டாம்பொருள் தசையிலே பிரித்துக் கொண்டுபோமவனான வெவ்வியன் என்பதாக இரண்டாம்பொருள் * அக்ரூர க்ரூரஹ்ருதய* என்ற கோபிகளின் வார்த்தை இதற்குச் சார்பாகும்


  3702.   
  இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
  ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*
  நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
  சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.

      விளக்கம்  


  • மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார். இருவினையும் அன்றிப்போகக் கெடுத்து–புண்ணிய மென்றும் பாவமென்றும் இரு வகைப்பட்ட கருமங்களரனவை வாஸகையோடேபோம்படி பண்ணியென்றபடி பாவம் போலே புண்யமும் கழியவேணும். பாவம் கரகத்திலே கொண்டு சேர்க்கும் புண்யம் ஸ்வர்க்கத்திலே கொண்டு சேர்க்கும். முமுக்ஷுக்களுக்கு ஸ்வர்ககத்தோடு நரகத்தோடு வாசியற்றிருக்கையோலே பாம்போலே புண்யமும் ஹேயுமாகிறது. *** –ததா வித்வாக் புண்யபாபே விதூயக என்று உபநிஷத்தும் ஓதிற்று. அநுபவித்தே அறவேண்டிய இவ்விருவினைகளை எம்பெருமான் க்ருபாவிசேஷத்தாலே அறுத்தொழிப்பது சில அதிகாரி விசேஷங்களிலே யென்க. ஒன்றி ஆக்கை புகாமை = அவ்விருவினைகளில் பின்னையும் ருசி வாஸநைகள் கிடக்குமாகில் யாதாணுமோராக்கையில் புக்கு அங்காப்புண்டு தடுமாற வேண்டிவருமே; அதற்கு ப்ரஸக்தியில்லாத படி செய்து உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் = இப்படியாக உஜ்ஜீவிப்பத்தருளுமெம்பெருமான் அளஸரமெதிர்பார்த்து நிற்குமிடமான திருமலையானது நீணிலத்துள்ளது – சிறந்த இந்நிலவுலகத்தில் தானுள்ளது. இது நாம் அறியாததன்று அறிந்தே யிருக்கிறோம். ஆனாலும் அங்குச் சென்று அநுபவிக்கும் பாக்கியமில்லாமையே பற்றியே கரைய வேண்டிற்றாகிறது. காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி யென்னும்படி யிருப்பார்க்குத் திருமலைகொண்டு காரியமென்? சென்று தேவர்களின் கை தொழுவார்களே = அங்குச் சென்று கை தொழுமலர்கள் மநுஷ்யர்களாக இருக்க முடியாதே; தேவர்களாகவன்றோ இருக்க வேண்டும்.


  3832.   
  மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*
  பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில். எம்பெருமாளுக்கு ரூபமில்லையென்றும் அவன் கண்ணுக்குப் புலப்படானென்றும் சாஸ்த்ரங்களிற் சிலவிடங்களிற் சொல்லியிருப்பதுண்டு; *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ:* என்று அவன் தன்னுடைய ஸங்கல்பத்தினால் பாரிக்ரஹிக்கப்பட்ட பல திருவுருவங்களையுடையவன் என்றும் சொல்லியிருப்பதுண்டு. இவற்றால், அஸ்மதாதிகளுக்குப் போல கர்ம நிபந்தனமான தேஹமில்லாதவனென்றும் பஞ்சோப நிஷந்மயமான திவ்யமங்கள விக்ரஹங்களை யுடையவனென்றும் விளங்கும். அத்திருமேனியைக் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின நிலங்களிலே அடியார்க்குக் காட்டிக்கொடுத்தருளா நின்றான். பண்டு ராமக்ருஷ்ணதிவிபவாவதாரங்களிலும் காட்டிக்கொடுத்தருளினான். அத்திரு மேனியை இப்போது காண இயலாதாயினும் திவ்யதேசத் திருமேனியை நன்கு கண்டு களிக்கலாமேயென்கிறாரிப்பாட்டில். பேயார் முலையுண்ட வாயான் மாதவனான காயாமலர்வண்ணனே வேங்கடம்மேயான்; அவ்விடத்தே நாடீர் நாடோறும் வாடாமலர்கொண்டு, பாடீரவன்னமம் வீடே பெறலாமே - என்று கீழப்பாட்டையுங் கூட்டிக்கொண்டு பொருள்கொள்வது. வேங்கடம் மேயான் - ஸம்ஸாரிகளான வுங்களைத் திருவடி பணிவித்துக் கொள்வதற்காகவே திருமலையிலே பொருந்திவார்த்திக்கிறவன். *அடிக்கீழமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மினென்றென்றருள் கொடுக்கும் பெருமானன்றோ அவன். “காயா மலர்வண்ணன்” என்பதற்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி காண்மின், - ‘துரும்புமெழுந்தாடி அடிமையிலே மூண்டல்லது நிற்கவொண்ணாதபடியான வடிவுபடைத்தவன்” என்று. வடிவழகின் வீறு கண்டால் அசேதநவர்க்கமுங்கூட அடிமைசெய்ய ஆசைப்பட வேண்டும்படியா யிருக்குமென்றதாயிற்று. பேயார் முலையுண்டவாயான் - அவ்வடிவுகண்டால் பின்பு நம்முடைய விரோதிவர்க்கமெல்லாம் பூதனைபட்டது படுமென்றவாறு. “பேய்முலை” “பேய்ச்சிமுலை” என்ன வேண்டுமிடத்துப் பேயார் முலையென்றது சீற்றத்தினாலாயது.