பிரபந்த தனியன்கள்

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

   பாசுரங்கள்


  முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
  அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*

  படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
  கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   


  கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
  சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*

  ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
  பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!       


  பரஞ்சோதி! நீ பரமாய்*  நின் இகழ்ந்து பின்,*  மற்று ஓர் 
  பரம் சோதி இன்மையின்*  படி ஓவி நிகழ்கின்ற,*

  பரஞ்சோதி நின்னுள்ளே*  படர் உலகம் படைத்த,*  எம் 
  பரஞ்சோதி கோவிந்தா!*  பண்பு உரைக்கமாட்டேனே.


  மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
  மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 

  மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
  மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?


  வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
  வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*

  வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
  ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?


  ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
  சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*

  போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
  மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  


  வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
  மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  

  கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
  சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     


  மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
  மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*

  மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
  மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     


  மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
  தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 

  மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
  தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 


  மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
  முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 

  பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
  இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   


  வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
  சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*

  துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
  உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)


  முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
  அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*

  வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
  எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)


  வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
  பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*

  தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
  நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?


  கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
  எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*

  பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
  சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    


  சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
  ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*

  தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
  வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  


  வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
  சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 

  கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
  எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   


  கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
  அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*

  பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
  நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?


  எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
  மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*

  எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
  மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?


  மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
  ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*

  பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
  கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?


  கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
  பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*

  மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
  தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  


  தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
  அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*

  கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
  நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  


  உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
  குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

  செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
  உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      


  ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
  வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*

  தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
  எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)


  எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
  முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 

  சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
  அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.


  அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
  கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*

  தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
  எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.


  ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
  தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 

  நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
  பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.


  சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
  ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*

  வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
  தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.


  வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
  தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*

  வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
  ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.


  சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
  அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 

  நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
  சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.


  குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
  அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்

  சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
  ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)


  ஓயும் மூப்புப்*  பிறப்பு இறப்பு:பிணி,*
  வீயுமாறு செய்வான்*  திருவேங்கடத்து

  ஆயன்,*  நாள் மலர் ஆம்*  அடித்தாமரை,* 
  வாயுள்ளும்மனத்துள்ளும்*  வைப்பார்கட்கே.


  வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
  எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*

  பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
  மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  


  தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
  நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

  கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
  வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   


  புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
  திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*

  நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
  இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 


  கூவும் ஆறு அறியமாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
  மேவு சீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*

  நா இயல் கலைகள் என்கோ!*  ஞான நல்ஆவி என்கோ,* 
  பாவு சீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே! 


  பங்கயக் கண்ணன் என்கோ!*  பவளச் செவ்வாயன் என்கோ,*
  அம் கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*

  செங்கதிர் முடியன் என்கோ!*  திரு மறு மார்பன் என்கோ,*
  சங்கு சக்கரத்தன் என்கோ!*  சாதி மாணிக்கத்தையே!      


  சாதி மாணிக்கம் என்கோ!*  சவி கொள் பொன் முத்தம் என்கோ*
  சாதி நல் வயிரம் என்கோ,*  தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*

  ஆதி அம் சோதி என்கோ!*  ஆதி அம் புருடன் என்கோ,* 
  ஆதும் இல் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!    


  அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினை கெடுக்கும்,* 
  நச்சும் மா மருந்தம் என்கோ!*  நலங் கடல் அமுதம் என்கோ,*

  அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*
  நெய்ச் சுவைத் தேறல் என்கோ!*  கனி என்கோ! பால் என்கேனோ!


  பால் என்கோ!*  நான்கு வேதப் பயன் என்கோ,*  சமய நீதி 
  நூல் என்கோ!*  நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல

  மேல் என்கோ,*  வினையின் மிக்க பயன் என்கோ,*  கண்ணன் என்கோ!- 
  மால் என்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!    


  வானவர் ஆதி என்கோ!*  வானவர் தெய்வம் என்கோ,*
  வானவர் போகம் என்கோ!*  வானவர் முற்றும் என்கோ,*

  ஊனம் இல் செல்வம் என்கோ!*  ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
  ஊனம் இல் மோக்கம் என்கோ!*  ஒளி மணி வண்ணனையே!


  ஒளி மணி வண்ணன் என்கோ!*  ஒருவன் என்று ஏத்த நின்ற* 
  நளிர் மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*

  அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்*  படைத்து அவை ஏத்த நின்ற,* 
  களி மலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!   


  கண்ணனை மாயன் தன்னை*  கடல் கடைந்து அமுதம் கொண்ட,* 
  அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,* 

  நண்ணி நன்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,* 
  எண்ணும் ஆறு அறியமாட்டேன்,*  யாவையும் எவரும் தானே. 


  யாவையும் எவரும் தானாய்*  அவரவர் சமயம் தோறும்,* 
  தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*

  ஆவி சேர் உயிரின் உள்ளால்*  ஆதும் ஓர் பற்று இலாத,* 
  பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூடலாமே.   


  கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
  மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 

  பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
  வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)   


  மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
  கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 

  எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
  தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)


  தண்கடல் வட்டத்து உள்ளாரைத்*  தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,* 
  திண்கழல்கால் அசுரர்க்குத்*  தீங்கு இழைக்கும் திருமாலைப்,* 

  பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,* 
  மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.    


  மலையை எடுத்து கல்மாரி*  காத்து*  பசுநிரை தன்னைத்,* 
  தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*

  தலையினோடு ஆதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,* 
  அலை கொள் நரகத்து அழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற வம்பரே.


  வம்பு அவிழ் கோதைபொருட்டா*  மால்விடை ஏழும் அடர்த்த,* 
  செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,* 

  கும்பிடு நட்டம் இட்டு ஆடி*  கோகு உகட்டுண்டு உழலாதார்,* 
  தம்பிறப்பால் பயன் என்னே*  சாது சனங்களிடையே? 


  சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,* 
  ஆதி அம் சோதி உருவை*  அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*

  வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,* 
  ஓதி உணர்ந்தவர் முன்னா*  என் சவிப்பார் மனிசரே?       


  மனிசரும் மற்றும் முற்றும் ஆய்*  மாயப் பிறவி பிறந்த,* 
  தனியன் பிறப்பிலி தன்னை*  தடங்கடல் சேர்ந்த பிரானை,* 

  கனியை கரும்பின் இன் சாற்றை*  கட்டியை தேனை அமுதை,* 
  முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்*  முழுது உணர் நீர்மையினார.


  நீர்மை இல் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,* 
  பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந்து ஆடி* 

  நீர்மல்கு கண்ணினர் ஆகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,* 
  ஊன் மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்கட்கு என் செய்வாரே?  


  வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
  பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 

  ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
  ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 


  அமரர் தொழப்படுவானை*  அனைத்து உலகுக்கும் பிரானை,* 
  அமர மனத்தினுள் யோகு புணர்ந்து*  அவன் தன்னோடு ஒன்று ஆக,* 

  அமரத் துணிய வல்லார்கள் ஒழிய*  அல்லாதவர் எல்லாம்,* 
  அமர நினைந்து எழுந்து ஆடி*  அலற்றுவதே கருமமே.      


  கருமமும் கரும பலனும் ஆகிய*  காரணன் தன்னை,* 
  திருமணி வண்ணனை செங்கண் மாலினை*  தேவபிரானை,*

  ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,* 
  பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.


  தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
  ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*

  வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
  நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)


  செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
  வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

  செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
  மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)


  மூவர் ஆகிய மூர்த்தியை*  முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,* 
  சாவம் உள்ளன நீக்குவானை*  தடங் கடல் கிடந்தான் தன்னை,* 

  தேவ தேவனை தென் இலங்கை*  எரி எழச் செற்ற வில்லியை,* 
  பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்*  பரவுமினோ.


  பரவி வானவர் ஏத்த நின்ற*  பரமனை பரஞ்சோதியை,* 
  குரவை கோத்த குழகனை*  மணி வண்ணனை குடக் கூத்தனை,* 

  அரவம் ஏறி அலை கடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,* 
  இரவும் நன் பகலும் விடாது*  என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 


  வைம்மின் நும் மனத்து என்று*  யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை* 
  எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,*  வானவர் 

  தம்மை ஆளும் அவனும்*  நான்முகனும் சடைமுடி அண்ணலும்,* 
  செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தித் திரிவரே.


  திரியும் காற்றோடு அகல் விசும்பு*  திணிந்த மண் கிடந்த கடல்,* 
  எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

  கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்*  கண்ணன் விண்ணோர் இறை,* 
  சுரியும் பல் கருங் குஞ்சி*  எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே. 


  தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்*  அவன் ஒரு மூர்த்தியாய்,* 
  சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்*  புகநின்ற செங்கண்மால்,* 

  நாற்றம் தோற்றம் சுவை ஒலி*  உறல் ஆகி நின்ற,*  எம் வானவர் 
  ஏற்றையே அன்றி*  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.    


  எழுமைக்கும் எனது ஆவிக்கு*  இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
  கெழுமிய கதிர்ச் சோதியை*  மணிவண்ணனை குடக் கூத்தனை,* 

  விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்*  கன்னல் கனியினை,* 
  தொழுமின் தூய மனத்தர் ஆய்*  இறையும் நில்லா துயரங்களே.


  துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்*  அவை அல்லன் ஆய்,* 
  உயர நின்றது ஓர் சோதி ஆய்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*

  அயர வாங்கும் நமன் தமர்க்கு*  அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,* 
  தயரதற்கு மகன் தன்னை அன்றி*  மற்று இலேன் தஞ்சமாகவே.


  தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு*  தானும் ஆய் அவை அல்லன் ஆய்,* 
  எஞ்சல் இல் அமரர் குலமுதல்*  மூவர் தம்முள்ளும் ஆதியை,* 

  அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!*  அவன் இவன் என்று கூழேன்மின்,* 
  நெஞ்சினால் நினைப்பான் எவன்*  அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.  


  கடல்வண்ணன் கண்ணன்*  விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்* 
  படஅரவின் அணைக்கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,* 

  அடவரும் படை மங்க*  ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,*  அன்றுதேர் 
  கடவிய பெருமான்*  கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?


  கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
  மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 

  பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
  பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)    


  பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
  பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 

  பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
  பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)


  ஆளும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
  தோளும் ஓர் நான்கு உடைத்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை*

  தாளும் தடக் கையும் கூப்பிப்*  பணியும் அவர் கண்டீர்,* 
  நாளும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடை நாதரே.


  நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்*  நறும் துழாய்ப் 
  போதனை*  பொன் நெடும் சக்கரத்து*  எந்தை பிரான் தன்னை*

  பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,* 
  ஓதும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடையார்களே.


  உடை ஆர்ந்த ஆடையன்*  கண்டிகையன் உடை நாணினன்* 
  புடை ஆர் பொன் நூலினன்*  பொன் முடியன் மற்றும் பல்கலன்,* 

  நடையா உடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,* 
  இடை ஆர் பிறப்பிடைதோறு*  எமக்கு எம் பெருமக்களே.


  பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,*  அமரர்கட்கு* 
  அருமை ஒழிய*  அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*

  பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
  வருமையும் இம்மையும்*  நம்மை அளிக்கும் பிராக்களே.


  அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
  துளிக்கும் நறும் கண்ணித்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை,* 

  ஒளிக் கொண்ட சோதியை*  உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,* 
  சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்*  சன்ம சன்மாந்தரம் காப்பரே.


  சன்ம சன்மாந்தரம் காத்து*  அடியார்களைக் கொண்டுபோய்,* 
  தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்*  கொள்ளும் அப்பனை,* 

  தொன்மை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
  நன்மை பெறுத்து எம்மை*  நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.


  நம்பனை ஞாலம் படைத்தவனை*  திரு மார்பனை,* 
  உம்பர் உலகினில் யார்க்கும்*  உணர்வு அரியான் தன்னை,* 

  கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*  அவர் கண்டீர்,* 
  எம் பல் பிறப்பிடைதோறு*  எம் தொழுகுலம் தாங்களே.


  குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
  நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 

  வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
  கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.


  அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்னவசம் செய்யும,* 
  படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 

  அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
  அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.


  அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
  நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 

  அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
  முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2) 


  முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
  அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 

  கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
  நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)


  நெஞ்சமே! நீள் நகர் ஆக*  இருந்த என் 
  தஞ்சனே,*  தண் இலங்கைக்கு இறையைச் செற்ற 

  நஞ்சனே,*  ஞாலம் கொள்வான்*  குறள் ஆகிய 
  வஞ்சனே,*  என்னும் எப்போதும்,*  என் வாசகமே


  வாசகமே ஏத்த அருள் செய்யும்*  வானவர் தம்- 
  நாயகனே,*  நாள் இளம் திங்களைக்*  கோள் விடுத்து,* 

  வேய் அகம் பால் வெண்ணெய்*  தொடு உண்ட ஆன் ஆயர்- 
  தாயவனே,*  என்று தடவும் என் கைகளே.


  கைகளால் ஆரத்*  தொழுது தொழுது உன்னை,* 
  வைகலும் மாத்திரைப்*  போதும் ஓர் வீடு இன்றி,*

  பை கொள் பாம்பு ஏறி*  உறை பரனே,*  உன்னை 
  மெய்கொள்ளக் காண(  விரும்பும் என் கண்களே.


  கண்களால் காண*  வருங்கொல்?  என்று ஆசையால்,* 
  மண் கொண்ட வாமனன்*  ஏற மகிழ்ந்து செல்,* 

  பண் கொண்ட புள்ளின்*   சிறகு ஒலி பாவித்து,* 
  திண் கொள்ள ஓர்க்கும்*  கிடந்து என் செவிகளே.


  செவிகளால் ஆர*  நின் கீர்த்திக் கனி என்னும் 
  கவிகளே*  காலப் பண் தேன்*  உறைப்பத் துற்று,* 

  புவியின்மேல்*  பொன் நெடும் சக்கரத்து உன்னையே.* 
  அவிவு இன்றி ஆதரிக்கும்*  எனது ஆவியே.


  ஆவியே! ஆர் அமுதே!*  என்னை ஆளுடைத்,* 
  தூவி அம் புள் உடையாய்!*  சுடர் நேமியாய்,* 

  பாவியேன் நெஞ்சம்*  புலம்பப் பலகாலும்,* 
  கூவியும் காணப்பெறேன்*  உன கோலமே. 


  கோலமே! தாமரைக் கண்ணது ஓர்*  அஞ்சன 
  நீலமே,*  நின்று எனது ஆவியை* ஈர்கின்ற

  சீலமே,*  சென்று செல்லாதன*  முன் நிலாம் 
  காலமே,*  உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?


  கொள்வன் நான் மாவலி*  மூவடி தா என்ற 
  கள்வனே,*  கஞ்சனை வஞ்சித்து*  வாணனை

  உள் வன்மை தீர,*  ஓர் ஆயிரம் தோள் துணித்த* 
  புள் வல்லாய்,*  உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


  பொருந்திய மா மருதின் இடை போய*  எம் 
  பெருந்தகாய்,*  உன் கழல்*  காணிய பேதுற்று,* 

  வருந்திநான்*  வாசகமாலை கொண்டு*  உன்னையே 
  இருந்து இருந்து*  எத்தனை காலம் புலம்புவனே? 


  புலம்பு சீர்ப்*  பூமி அளந்த பெருமானை,* 
  நலம்கொள்சீர்*  நன் குருகூர்ச் சடகோபன்,*  சொல் 

  வலம் கொண்ட ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்து, 
  இலங்குவான்*  யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)


  சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
  என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

  தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
  என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 


  உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
  வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*

  குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
  உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 


  ஒழிவு ஒன்று இல்லாத*  பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,*  போம் 
  வழியைத் தரும் நங்கள்*  வானவர் ஈசனை நிற்கப் போய்,*

  கழிய மிக நல்லவான்*  கவி கொண்டு புலவீர்காள்,* 
  இழியக் கருதி*  ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.


  என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்*  புலவீர்காள்,* 
  மன்னா மனிசரைப் பாடிப்*  படைக்கும் பெரும் பொருள்?,*

  மின் ஆர் மணிமுடி*  விண்ணவர் தாதையைப் பாடினால்,* 
  தன்னாகவே கொண்டு*  சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.


  கொள்ளும் பயன் இல்லை*  குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,* 
  வள்ளல் புகழ்ந்து*  நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,* 

  கொள்ளக் குறைவு இலன்*  வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,*  என் 
  வள்ளல் மணிவண்ணன் தன்னைக்*  கவி சொல்ல வம்மினோ.


  வம்மின் புலவீர்!*  நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,* 
  இம் மன் உலகினில்*  செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*

  நும் இன் கவி கொண்டு*  நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,* 
  செம் மின் சுடர் முடி*  என் திருமாலுக்குச் சேருமே.


  சேரும் கொடை புகழ்*  எல்லை இலானை,*  ஓர் ஆயிரம் 
  பேரும் உடைய பிரானை அல்லால்*  மற்று யான் கிலேன்,* 

  மாரி அனைய கை*  மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,* 
  பாரில் ஓர் பற்றையைப்*  பச்சைப் பசும் பொய்கள் பேசவே.


  வேயின் மலிபுரை தோளி*  பின்னைக்கு மணாளனை,* 
  ஆய பெரும்புகழ்*  எல்லை இலாதன பாடிப்போய்,* 

  காயம் கழித்து*  அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,* 
  மாய மனிசரை*  என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? 


  வாய்கொண்டு மானிடம் பாடவந்த*  கவியேன் அல்லேன்.* 
  ஆய்கொண்ட சீர்வள்ளல்*  ஆழிப் பிரான் எனக்கே உளன்,*

  சாய் கொண்ட இம்மையும் சாதித்து*  வானவர் நாட்டையும்,* 
  நீ கண்டுகொள் என்று*  வீடும் தரும் நின்றுநின்றே!


  நின்றுநின்று பல நாள் உய்க்கும்*  இவ் உடல் நீங்கிப்போய்,* 
  சென்று சென்று ஆகிலும் கண்டு*  சன்மம் கழிப்பான் எண்ணி,* 

  ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்*  கவி ஆயினேற்கு,* 
  என்றும் என்றும் இனி*  மற்றொருவர் கவி ஏற்குமே? 


  ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
  ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 

  ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
  ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.


  சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
  ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 

  வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
  நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)


  குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி*  தன் கோலச் செந்தாமரைக்கண்,* 
  உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளி மணி வண்ணன் கண்ணன்,*

  கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,* 
  நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டு இலனே.


  முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்*  மூவுலகுக்கு உரிய,* 
  கட்டியை தேனை அமுதை*  நன்பாலை கனியை கரும்பு தன்னை,*

  மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி*  அவன் திறத்துப் 
  பட்ட பின்னை*  இறையாகிலும்*  யான் என் மனத்துப் பரிவு இலனே. 


  ',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'*  என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த* 
  திரிபுரம் செற்றவனும் மகனும்*  பின்னும் அங்கியும் போர் தொலைய,*

  பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனை பொன் சக்கரத்து
  அரியினை,*  அச்சுதனைப் பற்றி*  யான் இறையேனும் இடர் இலனே.


  இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
  படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*

  சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
  உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.


  துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,* 
  துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றி கண் காணவந்து,*

  துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்*  புக உய்க்கும் அம்மான்,* 
  துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பம் இலனே.


  துன்பமும் இன்பமும் ஆகிய*  செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,* 
  இன்பம் இல் வெம் நரகு ஆகி*  இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்

  மன் பல் உயிர்களும் ஆகி*  பலபல மாய மயக்குக்களால்,* 
  இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று*  ஏதும் அல்லல் இலனே. 


  அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்*  அழகு அமர் சூழ் ஒளியன்,* 
  அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*

  எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு*  எல்லாக் கருமங்களும் செய்,* 
  எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.


  துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,* 
  மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,* 

  நக்க பிரானோடு அயன் முதலாக*  எல்லாரும் எவையும்,*  தன்னுள் 
  ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று*  ஒன்றும் தளர்வு இலனே.


  தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானம் ஒன்றாய்,* 
  அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்*  அருவு ஆகி நிற்கும்,*

  வளர் ஒளி ஈசனை மூர்த்தியை*  பூதங்கள் ஐந்தை இருசுடரை,* 
  கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி*  யான் என்றும் கேடு இலனே.


  கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
  பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 

  நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
  வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)