திருமெய்யம்

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

அமைவிடம்

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் அமைவிடம் ஊர்: திருமயம் மாவட்டம்: புதுக்கோட்டை,

தாயார் : ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ சத்ய கிரிநாதன்
உட்சவர்: ஸ்ரீ மெய்யப்பன்
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : புதுக்கோட்டை
கடவுளர்கள்: சத்யாகிரி நாதன் ,உஜ்ஜீவனா


திவ்யதேச பாசுரங்கள்

    1090.   
    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 
    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

        விளக்கம்  


    • “பிரமன் சிவன் இந்திரன் சந்திரன் முதலிய தெய்வங்களெல்லாம் நாராயணனே” என்று சாஸ்த்ரத்திற் பலவிடங்களிற் சொல்லப்பட்டுள்ளது; அவ்விடங்களை எப்படி நிர்வஹிக்க வேணுமென்றால்; ‘பிரமன் முதலிய தெய்வங்களைச் சரீரமாகக் கொண்ட ஸர்வ சரீரியான ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே’ என்று சொல்லிற்றாக நிர்வஹிக்கவேணும்; தெய்வங்கள் பலபலவுள்ளவனாக எவ்விடங்களிற் சொல்லப்பட்டுள்ளதோ, அவ்விடங்களில், ஸர்வசரீரியான ஸ்ரீமந்நாராயணனிற்காட்டில் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள ஸ்வரூபபேதம் சொல்லப்படுவதாக நிர்வஹிக்கவேணும்- என்கிற இந்த அர்த்தம் இப்பாட்டில் முதலடியாற் காட்டப்பட்டதாகக் கொள்க. பிரமன் சிவன் முதலிய தெய்வங்களைத் தனிப்படவும் நிறுத்தினது ஏதுக்காகவென்னில், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலிய சில லோகயாபாரங்கள் நடை பெறுவதற்காக வென்பார் “உலகுய்ய என்கிறார்.


    1524.   
    கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
    விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*
    மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
    நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.

        விளக்கம்  


    • காண்டவ வனமென்பது தேவேந்திரனுக்கு உரியதாய்ப் பூலோகத்திலிருந்த தொரு காடு. ஒருநாள் அக்நிபகவான் ஒரு அந்தணவேடம் பூண்டு அர்ஜுநனும் கண்ணபிரானும் கூடியிருக்குமிடத்திலே வந்துசேர, அவ்வந்தணனைக் கிருஷ்ணார்ஜுநர்கள் நன்கு உபசரிக்க, அவன் உணவுவேண்ட, ‘வேண்டிய உணவையளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதிமொழிகூற, உடனே அவ்வந்தணன் தான் இன்னானென்று உண்மைதெரிவித்துக் காண்டவ வனத்தைத் தனக்கு இரையாக அளிக்குமாறுவேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்டமிருகங்களும் நிரம்பியிருக்கு மிந்தக்காடு அழிந்தொழிவது மிக நன்றே’ என்று நிச்சயித்து அக்நிபகவானை நோக்கி ‘அங்ஙனமே உண்பாயாக’ என்று அநுமதி தந்ததின்பேரில் அக்நி அக்காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ணத்ருப்தியாக உண்டனன் என்ற கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.


    1660.   
    அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
    வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
    பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
    உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)

        விளக்கம்  


    • இப்பரகாலநாயகியை நோக்கி ஹிதமாக நான் ஏதேனுஞ் சொன்னால் அதை இவள் செவியேற்பதுமில்லை, அதற்கு மறுமொழி கூறுவதுமில்லை; ‘திருவேங்கடம்’ ‘திருநீர்மலை’ என்றே இவள் எப்போதும் வாய்வெருவிக் கொண்டிரா நின்றாள்; சிலஸமயங்களில், ‘திருமெய்யம்’ என்றொரு திவ்யதேச மிருக்கிறதே, அதற்கு ‘மெய்யம்’ என்று ஏன் திருநாமம் வந்தது? அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்தவிடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று?’ என்ற அருகிலுள்ளாரைக் கேட்கிறாள்; இதற்கு மறுமொழி கூறுவார் ஆருமில்லாமையாலே பெருமூச்சுவிட்டு வாளாவிருக்கின்றாள். சிலஸமயங்களில் ‘திருக்கண்ணபுரம்’ என்று வாய்நிறையப் பேசினவாறே அந்த க்ஷணத்திலேயே நீர்ப்பாண்டமாய் உருகுகின்றாள்; நெஞ்சு தளர்கின்றாள் இப்படி இவள் ஆவதற்கு என்பாபம் தவிர வேறு என்ன காரணமோ அறிகின்றிலேன் என்றாளாயிற்று.


    1852.   
    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-
    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.

        விளக்கம்  


    • பிரமனுடைய சிரமொன்றைக் கிள்ளியெறிந்த்தனா லுண்டான கஷ்டம். ‘உடலையுள்’ என்றவிடத்து ஐகாரம் -சாரியை. ‘இப்படிப்பட்ட குணசாலியுண்டோ!’ என்று நெஞ்சு எப்போதும் ஈடுபட்டிருக்கும்படி செய்தலே உடலுள்புகுந்து உள்ளமுருக்கியுண்பதா மென்க. விடலை - இச்சொல்லுக்குப் பலபொருள்களுண்டு, - ஆண்மகன், திண்ணியன், பாலைநிலத்தலைவன், மணவாளன், முப்பதுவயதுக்குட்பட்டவன். இப்பொருள்களுள் ‘பாலைநிலத்தலைவன்’ என்னும்பொருள் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற் கொள்ளப்பட்டது. “இப்பாலையான பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கினபடியாலே பாலைநிலமான ஸம்ஸாரத்துக்குத் தலைவனானவனை.“ என்று விவரணமும் செய்தருளினர். “தம்முடைய ஹ்ருதயத்திற் காட்டில் பாலைநிலமில்லை யென்றிருக்கிறார்“ என்ற ஸ்ரீஸூக்தியுங்காண்க.


    2016.   
    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*
    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.

        விளக்கம்  


    • ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.