விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
    அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
    எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
    மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இதுவோ பொருத்தம் என்று என்று - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால் - பொருமியழுதால்,
இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக
மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன் - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான்
எதுவே ஆக கருதும் கொல் - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ?

விளக்க உரை

உரை:1

ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

உரை:2

ஒருவர் தப்பாமல் எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்தருளுகைக்காக வடமதுரையிலே வந்து திருவ்வதாரம் பண்ணியருளின ஆச்சர்ய குணசாலியான கண்ணபிரான், தன்னைக் காணவாசைப்பட்டு நோவுபடுகிற வென்திறத்திலே என்ன செய்வதாக நினைத்திருக்கிறானோ வென்று தம்முடைய ஸ்ருதயத்துக்குள்ளே தாம் சிந்திக்கிறபடியை வெளியிடுவது இப்பாட்டு. கீழ்ப்பாட்டில் பஞ்சபாண்டவர்களுக்கு உதவினபடியைச் சொல்லிக் கூப்பிட்டார், அவர்களுக்கு உதவினபடி கிடக்கட்டும், திருவாழியாழ்வான் பெரிய திருவடி முதலானாரோடு கலந்து பழகுகிற பொருத்தமும் இவ்வளவேயோ என்கிறார் என்னவுமாம். இதுவோ பொருத்தம் – இப்படி கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டு மீண்டும் “இதுவோ பொருத்தம்“ என்கிறார். மின்னாழிப்படையாய்! மேகத்திலே மின்னல் மின்னினாப்போலே மின்னாநின்ற திருவாழிப்படையை யுடையவனே யென்றது – அத்திருவாழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்கும்படி. அத் திருவாய் மொழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்குமளவோயோ? என்கிறாராகவுமாம். ஏறுமிருஞ் சிறைப்புள்ளதுவே கொடியாவுமர்த்தானே! – நீ வந்து சேர நினைத்தால் அருமையுண்டோ? ஒரு நொடிப்பொழுதில் கொண்டு சேர்க்கவல்ல பரிகரமில்லையோ என்றவாறு. * தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ் தே விதாநம் வ்யஜநம் * என்று ஸ்தோத்ராத்னத்தி லருளிச் செய்தபடியே பெரிய திருவடிபக்கலில் வல வகையடிமைகளையுங் கொள்வதாகச் சொல்லப்படுவதும் இப்படிதானோ? என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும்? என்று கேட்கிறபடியாகவுமாம். என்றென்றேங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் – இப்படிச் சொல்லிச் சொல்லிப் பொருமியழுதால் இக்கூப்பீட்டுக்கு முகங்காட்ட நினைக்கிறானோ? இப்படியே கூப்பிட்டுக் கொண்டு கிடக்கட்டு மென்றிருக்கிறானோ? (இம்மாஞாலம் இத்யாதி) மண்ணின் பாரம் நீக்குதல் என்றொரு வியாஜமிட்டு இங்கேவந்து பிறந்து ஸாதுபரித்ராணம் பண்ணிப் போருகிறவன் நம்கூப்பீட்டுக்கு என்ன நினைத்திருக்கிறானோ வென்கிறார். மாயனே! என்றவிடத்து ஏகாரம் விளியுருபன்று, ஈற்றகை.

English Translation

I weep and call in despair, O Lord of lightning-discus, O Lord of Garuda-banner! Alas, what indeed does he intend? Did he not appear in the beautiful groves of Mathura and rid the world of its miseries?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்