திருக்கோஷ்டியூர்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி

அமைவிடம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் மாவட்டம்: சிவகங்கை அமைவு: திருகோஷ்டியூர்,

தாயார் : திருமாமகள் நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ உரகமெல்லணையான்
உட்சவர்: ஸ்ரீ சௌம்யநாராயணன்
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : திருகோஷ்டியூர்
கடவுளர்கள்: ஸ்ரீ உரகமெல்லணையான்,திருமாமகள் நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    13.   
    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*
    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)

        விளக்கம்  


    • உரை:1
       
      அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது. 
       
      உரை:2

      (ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான்) இதியாதி பிரமாணங்களாலே க்ஷீராப்தியிலிருந்து எம்பெருமான் கண்ணனாக அவதரித்தமை விளங்காநிற்க, இங்கே திருக்கோட்டியூரில் நின்றும் அவதரித்ததாகச் சொல்லுகிறது என்னவெனில், முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவதைகள் அவ்வசுரனை முடிப்பதற்கு வேண்டிய உபாயத்தை ஆலோசிப்பதற்குத் தகுதியானதும் அசுரர்களின் உபத்ரவமற்றதுமான இடத்தைத் தேடுமளவில், கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம் க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தஸ்தாகமாய் இருந்தபடியாலும், தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும், தமக்கு மங்களாசாசநத்துக்குக் கூட்டுறவான செல்வநம்பியைப் பற்றிச் சொல்லும்போது ஸ்மரிக்கநேர்ந்த இந்த திவ்ய தேசத்தினிடத்தில் தமக்குள்ள அன்புமிகுதியினாலும் இப்படி ஐக்கியமாக அருளிச்செய்தாரென்று கொள்க. தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்தஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று. அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று.


    14.   
    ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*
    நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*
    பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
    ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே

        விளக்கம்  


    • உரை:1

      திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி. 

      உரை:2

      கோகுலத்திலுள்ளாரெல்லாரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆநந்தமடைந்து தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; சிலர் உரக்க கோஷம் செய்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்; ஆகவிப்படி பஞ்சலக்ஷம் குடியிலுள்ளாரெல்லாரும் சொல்ல முடியாத கோலாஹலமாயிருந்தார்கள். க்ருஷ்ணஜநநத்தால் திருவாப்பாடியில் விகாரமடையாதார் ஒருவருமில்லையென்பார் ஆய்ப்பாடியே ஓடுவாரும். . . . ஆடுவாருமாக ஆயிற்றென்றார். ‘எங்குற்றான்’ என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.


    15.   
    பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*
    காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*
    ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-
    வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே

        விளக்கம்  


    • உரை:1

      எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள். 

      உரை:2

      கண்ணபிரான் அவதரித்த காலத்தில் கோகுலத்தவர்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையிற் புகுந்துகொண்டும், புகுந்து பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்துகொண்டும், அவர்களில் ஸாமுத்ரிக சாஸ்த்ரம் தெரிந்தவர்கள் ‘இவன் எல்லாரைக்காட்டிலும் விலக்ஷண புருஷன் என்னும்படியாக லக்ஷணங்கள் அமைந்திருப்பதனால் இவன் உபய விபூதி நிர்வாவஹனாயிருப்பான்’ என்று சொல்லிக் கொண்டும் இருந்தார்கள். கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடனே தோன்றக்கண்ட தேவகீ வஸுதேவர்கள் ‘இந்த ரூபத்தைக் கம்ஸன் தெரிந்து கொள்ளாதபடி மறைத்துக்கொள்’ என்று பிரார்த்திக்க, அப்படியே தாய் தந்தையருடைய சொல்லைப் பரிபாலித்து, அக்காலத்தில் கம்ஸனால் நேரக்கூடிய ஆபத்தில் நின்றும் தப்பினபடியால், ‘பேணி’ என்றும், ‘சீருடைப்பிள்ளை’ என்றும் அருளிச் செய்தார். சொன்னபடி கேட்கிற பிள்ளையன்றோ சீருடைப்பிள்ளை. பேணி என்பதற்கு - ஆசைப்பட்டுக் கொண்டு என்றும், தன்னை மறைத்துக்கொண்டு என்றும் பொருள் சொல்லலாம்.


    16.   
    உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்* 
    நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*
    செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும் 
    அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே

        விளக்கம்  


    • உரை:1

      பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள். 

      உரை:2

      கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் சிலர்; நெய் பால் தயிர் முதலியவற்றை அபாரமாக தானஞ் செய்தார்கள் சிலர்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள் சிலர் ஆகவிப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும் ஸந்தோஷப் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் உன்மத்தரானார்கள். நன்றாகதூவுவார் என்றவிடத்து நன்று ஆக - (பிள்ளைக்கு) நன்மையுண்டாகும்படி என்று முரைக்கலாம்.


    17.   
    கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*
    தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*
    விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
    அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்

        விளக்கம்  


    • உரை:1
       
      இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள். 
       
      உரை:2

      ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள். நெய்யாடலாவது - ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்; எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம். ‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு - மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற (வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் - இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.


    18.   
    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*
    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே

        விளக்கம்  


    • உரை:1

      கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

      உரை:2

      யசோதைப்பிராட்டி ஒருநாள் ஸ்ரீக்ருஷ்ணசிசுவைக் குளிப்பாட்டும்போது வழக்கப்படியே குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாஸநாத்ரவ்யங்களைச் சேர்த்துக் காய்ச்சின தீர்த்தத்தைக் கொண்டு குளிப்பாட்டி, முடிவில் மஞ்சள் தேய்வைக் கொண்டு நாக்கு வழிக்குமளவில் அந்தக் குழந்தை வாயைத் திறக்க, அந்த வாயிலே ஸகல லோகங்களையுங் கண்டாள். அர்ஜுநனுக்கு திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்துத் தன்னுடைய விச்வரூபத்தைக் காட்டினாப்போலே யசோதைக்கும் தன்னுடைய ஸ்வந்தரமான இச்சையினாலே இப்படி காட்டியருளினனென்க.


    19.   
    வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
    ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*
    பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
    மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே

        விளக்கம்  


    • உரை:1

      கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

      உரை:2

      கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க, அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’ என்று கொண்டாடிக் கூறினார்கள்.


    20.   
    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*
    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே

        விளக்கம்  


    •  உரை:1

      கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள். 

       உரை:2

      எங்கும் வெற்றித் தோரணங்களை நாட்டி அலங்கரித்து ஸ்ரீக்ருஷ்ணனென்று திருநாமமிட்டு அக்குழந்தையைத் தங்கள் தங்கள் கையிலேயெடுத்துக்கொண்டு ஆநந்தம் பொங்கி நின்றார்கள். பிறந்த பத்தாம் நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது வேறு நல்ல நாளிலாவது நாமகரணம் செய்யும்படி மநுஸ்மிருதி கூறுகின்றது. இடையர்களெல்லாரும் வழக்கப்படி தேவேந்திரனை ஆராதிக்கத் தொடங்கினபோது கண்ணபிரான் அதனைத் தடுத்துக் கோவர்த்தன மலைக்கே அந்த ஆராதனங்களை நடத்தி வைக்க, இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடாமழைபெய்வித்துப் பசுக்களையும் இடையர்களையும் துன்பப்படுத்தினபோது அந்த கோவர்த்தன மலையையே யெடுத்துக் குடையாகப் பிடித்துக் கண்ணன் காத்தருளின செய்தி ப்ரஸித்தம். இப்படி கண்ணபிரான் மலையைக் குடையாகப்பிடித்தது நாமகரணஞ்செய்த பின்பு நிகழ்ந்ததாயினும், இவ்வாழ்வார் பிற்காலத்தவராகையாலே இப்போது அதனை அநுஸந்திருக்கக் குறையில்லை. மைந்தன் - ‘மைந்து’ என்று இளமைக்கும் வலிமைக்கும் அழகுக்கும் பெயர்; அதனையுடையவன் மைந்தன். உத்தானம் - வடச்சொல்.


    21.   
    கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்* 
    எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*
    ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்* 
    மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.

        விளக்கம்  


    • உரை:1

      'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார். 

      உரை:2

      யசோதையானவள் தன் ஸமீபத்திலுள்ள பெண்களை நோக்கிக் கண்ணனுடைய பருவத்துக்குத் தகுதியில்லாத செயல்களைச் சொல்லுவதாக இப்பாசுரம் அமைந்தது. நங்காய்! என்று ஏகவசநமான ஸம்போதநம்சாதியொருமையாய், ‘நங்கைமீர்களே!’ என்றபடி. பருவத்திற்குத் தகுந்த செயல்களைச்செய்யும் புத்திரர்களைப் பெற்றிருப்பதனால் நீங்கள் ஒன்றும் குறைவில்லாமலிருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொண்டவாறு என்னுடைய பிள்ளையைத் தொட்டிலில் கிடக்காவிட்டாலோ, இவன் தொட்டில் கிழிந்துபோம்படி காலாலுதைக்கிறான். ‘கால்கள் மெத்தென்றிருப்பதால் நோயுண்டாகுமே’ என்று தொட்டிலினின்றும் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், இடத்தை விட்டு நழுவி இடுப்பை முறித்துவிடுகிறான். ‘எனக்கே இக்குழந்தை செய்யும் சேஷ்டையினால் இடுப்பு முறியும்போது இக்குழந்தைக்கு எவ்வளவு நோவுண்டாகுமோ! இஃது இவனுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்துக்குத் தகாதே! என்று நினைத்து ஒரு தொழிலுஞ் செய்யமுடியாதபடி மார்பிலே வலிய அணைத்துத் தழுவிக்கொண்டால் கால்களினால் வயிற்றை உதைக்கிறான். இப்படி இவன் தன்னுடைய பருவத்திற்குத் தகாத காரியங்களைச் செய்வதை நினைத்து நினைத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன் என்கிறாள். மிடுக்கு இலாமையால் - இதற்கு இருவகையாகப் பொருள்கொள்ளலாம். இப்படி மிகச்சிறிய குழந்தையாகிய இவனுடைய செய்கையைப் பொறுக்கும் வல்லமை எனக்கு இல்லாமையால் என்றும், இந்த செய்கைகளையெல்லாம் தாங்குவதற்கு வேண்டிய சக்தி இந்தக் குழந்தைக்கு இல்லாமலிருப்பதனால் என்றும்.


    22.   
    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*
    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   

        விளக்கம்  


    • உரை:1

      செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும். 

      உரை:2

      நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீமந்நாராயணன் திருவாய்ப்பாடியில் வந்து திருவவதரித்தபடியைப் பட்டர்பிரான் பேசினதும் பக்தர்களுக்கு போக்யமுமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் எம்பெருமானை அநுபவிப்பதற்கு இடையூறான பாவங்களில் நின்றும் நீங்கி வாழ்வர் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. நம்பி பிறந்தமை என்றது - திருவாய்ப்பாடியில் நடந்த கொண்டாட்டங்களுக்கும் உபலக்ஷணம்.


    173.   
    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 
    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

        விளக்கம்  


    • கொங்கு + குடந்தை = கொங்குக் குடந்தை என வரவேண்டுவது செய்யுளின்பம் நோக்கிக் “கொங்குங் குடந்தையும்“ என வந்ததென்க. அரக்கு – செந்நிறமெனினுமாம்.


    360.   
    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*
    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)

        விளக்கம்  


    • பொய் பேசுகை, பிறரை புகழுகை முதலிய துஷ்கர்மங்களில் அந்வயமற்றவரும், உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்களையும் அதிதிகளைப்போல் ஆதரிப்பவரும், பகவதாராதநம, வேதாத்யயநம் முதலிய ஸத்கர்மங்கள் செய்துகொண்டு போது போக்குமவர்களுமான பரமபாகவதர்கள் வாழுமிடமாகிய திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாவியாத பாவிகளைப் பிரமன் படைத்தது என்ன பயனைக் கருதியோ? அறியோம் என்கிறார். வேர் + காரியம், தேவகாரியம்; திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை முதலியனகொள்க. மூவர் காரயிமாவது- மதுகைடபர்கள் கையில் பறிகொடுத்த வேதத்தை மீட்டுக் கொடுத்தருளியது, பிரமனுக்குச் செய்த காரிணம்; குருவும் பிதாவுமான பிரம்மனுடைய தலையைக் கிள்ளினமையால் வந்த பாபத்தைப் பிச்சையிட்டு, போக்கியருளியது, ருத்ரனுக்குச் செய்த காரியம்; மஹாபலி போல்வார் கையிற் பறிகொடுத்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தருளியது, இந்திரனுக்குச் செய்த காரியம். திருத்துகை- ஒழுங்குபடச் செய்கை.


    361.   
    குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
    செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*
    துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
    பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.

        விளக்கம்  


    • உலகத்திற் பிறந்த பிள்ளைகள் திருக்கோட்டியூ ரெம்பெருமானை வணங்கினால்தான், அவர்களைப் பெற்ற தாய்மார்பேறு பெற்றவராவார்கள்; அல்லாவிடில், இப்பிள்ளைகளால் அந்தத் தாய்மார்கட்கு ஒருவகைப் பயனுமில்லாமல், பிரஸவகாலத்திற்பட்ட வேதனையே மிகுந்ததாமென்றவாறு.


    362.   
    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*
    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.

        விளக்கம்  


    • உலகத்தில் மனிதர்கட்குக் கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே உபயோகப்படுத்துவதற்காகவேயாம், அதற்கிணங்கக் கை விரல்களால் திருகோட்டியூரெம்பெருமானுடை திருநாமங்களை என்ணுகையும், வாயினால் அவற்றைச் சொல்லுகையி மேயாயிற்றுத் தகுவது!: இப்படியிருக்க சிலபாவிகள் அக்காரியங்களிலே அக்கரணங்களைச் செலுத்தாது, வாயினால் தின்னவேண்டிய தென்றும், கை விரல்களினால் சோற்றுக்கபளங்களை யெடுத்து அவ்வாயினுள் விடவேனுமென்றும் இவ்வளவே தமக்குக் காரியமாக ஏற்படுத்திக் கொண்டன? ஈதென்ன கொடுமை! என்று உள்வெதும்புகின்றனர். ஒரு காலாகிலும் அக்காணரங்களைக் கிரமமான விஷயத்தில் உபயோகித்தால் குறையறும், அதுவுமில்லையென்பார், இறைப்பொழுதும் என்கிறார். கவளம் - ***-“


    363.   
    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*
    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    

        விளக்கம்  


    • நாமம், ரூபம் என்ற இரண்டையுமுடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் அதிஷ்ட்டதனா யிருக்கின்றனென்பதைப் பிரமான பலத்தினாற் கொள்ளவேணும்; தும்பு முதலிவற்றில் உள்ள ஜீவாயிஷா நத்தை நாங்ககாணாதொழிவதற்குக் காரணம் - நமது கருமமடியாகப் பிறந்துள்ள ஞானச்சுருக்கமேயாம்; ஆகையாலே, “பருகு நீரு முடுக்குங் கூறையும் பாவஞ் செய்தனதான் கொலோ” என்பது பொருந்துமென்க. உலகத்தில் ஒருவன் நிஹீக புருஷனுக்கு ஆட்பட்டானாகில், அவன் நன்மையியழந்து தீமையையே பெறுவதும். விலக்ஷண புருஷனுக்கு ஆட்பட்டவன் தீமையைத் தவிர்த்து நன்மையையே பெறுவதும் சாஸ்திரங்களிற் கைகண்ட அர்த்தமாகும்; அப்படி தீமைக்கு ஹேதுமான நிஹீகபுருஷசேஷத்துவம் நேருவதற்குக் காரணம் அவனுடைய பாபமே யென்பதும் சாஸ்திரஸித்தம். ஆனதுபற்றி திருக்கோட்டியூரெம்பெருமானை அநுஸந்திக்கமாட்டாத நிஹீகபுருர்களுக்குச் சேஷப்பட்ட பருகுநீரும் உடுக்குங்கற்றையும் பாவம்செய்தனவோ தான்! என்கிறார்.


    364.   
    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*
    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   

        விளக்கம்  


    • உலகத்தில் அறிவுடையார் சோற்றை உண்ணவேணும், அறிவிலிகள் புல் முதலிவற்றை உட்கொள்ளவேணும் என்பது விவாதமற்ற விஷயம். திருக்கோட்டியூ ரெம்பெருமானை நெஞ்சாலும் நினையாத மனிதர் அறிவற்றவர்கள் ஆதலால் அவர்கள் புல்லைத்தான் தின்னவேணும்; அங்ஙனமன்றி, அவர்கள் முறை தப்பித் தின்னுஞ் சோற்றைப் பிடுங்கி யெறிந்துவிட்டு, அவர்கள் வயிற்றில் புல்லையிட்டு நிறையுங்கள் என்கிறார். முன்னடிகளிற் கூறியது - தன்மை நவிற்சி. குதிகொண்டு = குதி - முதனிலைத் தொழிற்பெயர். சாடுதல் -அலைத்தல். நேமி-வடசொல். பூமிபாரம் திணித்தல் - அடைத்தல், துறுத்தல்.


    365.   
    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*
    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.

        விளக்கம்  


    • ஒரு வகைக்குற்றமும் தம்மிடத்து இல்லாத பரமோதாரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழுமிடமான திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்பக்கம் அன்புபூண்ட பாகவதர்கள் பலர் இவ்வுலகத்தில் ஸஞ்சரியா நின்றமையால், அவர்களுடைய ஸ்ரீபாததூளியை வஹிக்கப்பெற்ற இவ்வுலகம் பெருப்பெருத்த பாக்கியம் பண்ணிவைத்ததென்கிறார். நிலம், நீர், தீ. கால், விசும்பு என்கிற பஞ்சபூதமயமாகிய சரீரத்தை பூதமைத்து என்றது. - ஆகுபெயரால். “மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவு மாதர் சமூமாம், புண்ணாராகக்கை” என்ற பெரியதிருமொழி அறிக. வேள்வி ஐந்து தேவயஜ்ஞம், பிரத்ருயஜ்ஞம் பூதயஜ்ஞம், மனுஷயஜ்ஞம், ப்ரஹமயஜ்ஞம் என்பவை புலன்கள்- ஐந்து - சப்தம். கந்தம், ரூபம், ... ஸ்பாசம் என்பதை பொறிகள் ஐந்து செவி, வாய், கண், மூக்கு, உடல், இனி “செவி வாய் கண் மூக்கு உடலென்றைம்புலனும்” என்றருளிச் செய்துள்ளமைக் கிணங்க ஐம் புலன்கள் என்பதற்கு. செவி முதலிய பஞ்ச இந்திரியங்கள் என்று பொருளுரைத்தலும் ஒக்கும். “பொங்கைம்புலனும் பொறிவைத்து, “சருமேந்திரியம்” என்ற திருவாய்மொழியின் வியாக்கியாகங்களைக் காண்க. இனி இவற்றால் ஏதமொன்றுமிலாமையாவது தேஹத்தைக் கணக்கில் சேஷமாக்கிக் கொள்ளுகை சரீரத்திலுண்டாகும் ஏதம். அதை எம்பெருமானுக்குச் சேஷப்படுத்துகை - ஏதுமில்லை; அதை எம்பெருமா னடியார்களுக்குச் சேஷப்படுத்துகை ஏதமொன்றுமில்லாமை பஞ்சமஹாயஜ்ஞங்களை ஸ்வர்க்கம் முதலிய உலகங்களைப் பெறுதற்கு ஸாதகமாக அநுஷ்டித்தல், ஏதமில்லாமை; பகவானுடையவும், பாகவதர்களுடையவும் முகமலர்த்திக்கென்று அநுஷ்டித்தல் ஏதமொன்றுமிலாமை. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பர்சம், சப்தம் ஆகிற விஷயங்களைத் தனக்கு என்றிருக்கை- ஐம்புலன்களால் வரும் ஏதம்; இவற்றைப் பகவத் விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமிலாமை! பாகவத விஷயத்துக்கென்றிருக்கை- ஏதமொன்றுமில்லை. கண் முதலிய இந்திரியங்களை விஷயாந்தரங்களிற் செலுத்துகை- ஐம்பொறிகளால் வரும் ஏதம்; அவற்றை எம்பெருமான் விஷயத்திற் செலுத்துகை- ஏதலமிலாமை; பாகவதவிஷயத்தில் செலுத்துகை- ஏதமொன்றுமிலாமை. எனவே, திருக்கோட்டியூரிலுளள் ஸ்ரீவைஷ்ணவர்கள், தங்கள் தேஹத்தைப் பாகவதவிஷயத்தில் ஆட்படுத்துமவர்கள் என்றும், பகவத் பாகவதர்களின் முகமலர்த்திக்காகப் பஞ்சயஜ்ஞாதுஷ்டாகத்தில் பண்ணுமவர்கள் என்றும், பஞ்சுஜ்ஞாகேந்திரியங்களையும் பாகவதவிஷயத்தில் உபயோகப்படுத்துமவர்கள் என்றும் கூறியவாறு, நாதனை என்று திருக்கோட்டியூரில் கோயில் கொண்டிருக்கும் சொக்க நாராயணரைக் குறிக்கிறதென்றும், நரசிங்கனை என்று தெக்காழ்வாரை குறிக்கிறதென்றும் ஸம்ப்ரதாயம்.


    366.   
    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*
    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  

        விளக்கம்  


    • திருக்கோட்டியூ ரெம்பெருமான் திருவடிகளில் அன்பு பூண்ட பாகவதர்கள் எழுந்தருளியிருக்கிற திவ்யதேசத்தில் வாஸமும், அரிய பெரிய தளங்களினாற் பெறவேண்டிய பேறு என்பதை வெளியிடுகிறது இப்பாட்டென்க. எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமிடத்தில் வாஸம் பெறுவதற்கு ஒரு தபஸ்ஸே அமையும்; பாகவதர்களின் நகரத்தில் வாஸம் பெறுமைக்குப் பல தவங்கள் புரியவேணும் என்பதும் தோன்றும்- எத்தவங்கள் என்று பன்மையினால். கண்ணபிரான், யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு, அதன் கரையிலுள்ள குருந்தமரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும், கம்ஸனால் ஏவப்பட்டவனமான ஒரு அஸுரன், கண்ணனை நலிவதற்காக அக்குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்; அதை அறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்துப் போகட்டானென்ற வரலாறு அறிக. திருந்தம் - ஸௌஷவம். கடைகொண்டு= கடை - தாழ்வு; அதை அனுஸர்தித்துக்கொண்டு என்றபடி : “நீசனேன் நிறையொன்றுமிலேன்” என்றாற் போலச் சொல்லுகை. நான்முகன் திருவந்தாதியில். “குறைகொண்டு நான்முகன்” என்ற பாட்டில் “குறைகொண்டு” என்ற பிரயோகத்தை ஒக்கும், இப்பிரயோகமும்; அதுவும் இப்பொருளதே.


    367.   
    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*
    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.

        விளக்கம்  


    • “அவ்வமுக் கொன்றுமில்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கள், செல்வனைப்போலத் திருமாலே நானுமுனைக்குப்பழவடியேன்” என்ற அருளிச்செயல் இங்கு உணரத்தக்கது. நயாவலன் - வடசொல் தொடர்; நுயெ *** நீதிநெறியில் சலிப்பற்றவன். *** - ஸாத்விகாஹங்காரத்தாற் சிறந்தவன். சிறந்தகுணகணங்க ளமைந்த செல்வநம்பிக்யை அடிமை கொண்டருளின திருக்கோட்டியூ ரெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடும் ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளியிருக்கும் நாட்டில் விளையும் தாக்யங்களைக் கூட ராக்ஷஸர் அபஹரிக்கவல்லரல்லர்; தமக்கும் தம் பந்துக்களுக்குமாகச் சேமித்த தாந்யமாகிலன்றோ ராக்ஷஸர் அபஹரிக்கலாவது என்பது உள்ளுறை. தானியம் - ***ம். தானியமும் என்ற உம்மை - இழிவுசிறப்பும்மை; வருத்தமின்றிக் கொள்ளைகொள்ளுகைக்குப் பாங்காக வயல்களில் விளைந்துள்ள தாந்யத்தையே கொள்ளைகொள்ளமாட்டாத அரக்கர், மற்றவற்றைக் கொள்ளையிட எங்ஙனே வல்லவராவர்? என்பது ஆராயத்தக்கது.


    368.   
    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 

        விளக்கம்  


    • திருக்கோட்டியூர் எம்பெருமானடியார்களை ஸேவிக்கும்போதே ‘அவ்வெம்பெருமான் ஸாத்விகர்களினால் ஸேவிக்கப்படுமவன்’ என்கிற லக்ஷணம் வெளியாமாதலால் ‘இவர்கள் எம்பெருமானது சிறப்பைத் தெரிவிக்கவல்ல சின்னங்கள்’ என்று அநுஸந்தித்து, யான் நெடுநாளாய்க் கொண்டுள்ள பலவகை ஆசைகளையுந் தீர்வேனென்கிறார். பாகவதர்களின் ஸேவை, பகவத் ஸேவையினும் அரிது என்பார் கண்ணடக்கால் என்கிறார். “மெய்யடியார்கள் தம், ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண் பயனாவதே” என்ற குலசேகராழ்வார் பாசுரமுங்காண்க. எம்பிரான் தன = தன -தன் அ - ; அ- ஆறனுருபு. சின்னம் -***. இவர் இவர் என்ற இரட்டிப்புக்குக் கருத்து - ஒவ்வொரு பாகவதையும் தனித்தனியே அநுஸந்திக்கை. காணவேணுமென்றும், கிட்ட வெணுமென்றும்-, கூடவே இருக்கவேணுமென்றும் இப்படி ஆசைகள் பலவாதல்பற்றி ஆசைகள் எனப் பன்மையாக் கூறினர். இவ்வகை ஆசைகளெல்லாம், காண்கையொன்றினாலேயே தீருமென்றது- பாகவத ஸேவாமாத் ரத்துக்குள்ள அருமையையுஞ் சிறப்பபையுங் கூறியவாறு.


    369.   
    காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
    தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*
    கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
    பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

        விளக்கம்  


    • இப்பாசுரமடியாகப் பிறந்தவையென்றுணர்க:- ஒருகாசுக்கு ஒருபிடிநெல் விற்கும் படியான காலத்தில் தம்வயிற்றைத் தாம் நிறைத்துக்கொள்வதே அரிது; தம்வயிற்றைப்பட்டினிகொண்டு பிறர்வயிற்றை நிறைப்பதென்றால் ஏதேனுமொரு ப்ரத்யுபகாரத்தைக் கணிசித்தாராகவேணும்; இது உலகத்தில் ஸாமந்ய ஜநங்களின் இயல்பு; திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமினோவென்றால், சாகின்வாய்க்காமலிற்குங்காலத்திலும், கைம்மாறுகருதாழ அதிதிகளுக்கு அந்ததாநம்பண்ணி நாடெங்கும் புகழ்பெற்றிருப்பார்களாம். அப்படிப் பட்ட மஹாநுபாவர் வாழுமிடத்துள்ள எம்பெருமானது திருநாமங்களை அநுஸந்திக்குமவர்கள் அடியேனைத் தங்களிஷ்டப்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு யான் உடன்பட்டிருக்கத் தட்டில்லையென்று- தம்முடைய சரமபர்வ நிஷ்ட்டையின் பரமகாஷ்ட்மடையை அருளிச் செய்தவாறு.


    370.   
    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 
    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)

        விளக்கம்  


    • திருக்கோட்டியூரெம்பெருமானுக்கு அடிமை செய்யும் பாகவதர்களைப் புகழ்ந்தும், அடிமை செய்யாது விஷயங்களிலே மண்டித்திரியும் பாவங்களை இழந்தும் அருளிச்செய்த இவற்றை ஓதவல்லபிராக்கள் எம்பெருமானுக்கு நித்யகைங்கரியம் பண்ணப்பெறுவர்களென்று பலஞ்சொல்லிக்கட்டியவாறு. சீதம்- வடசொல்திரிபு. ஆதியன்- முதல்வன். புதுவைக்குக் குளிர்த்தியாவது- ஸம்ஸாரதாபங்களை ஆற்றுக


    1550.   
    தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்* 
    ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*
    கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி* 
    ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.       

        விளக்கம்  


    • அடியேனுடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டி யருளாமல் நீ உபேக்ஷிக்குமளவிலும் உன்னையே தொடர்ந்து நான் கூப்பிடும்படியாக இவ்வளவு அருள் என்மேல் செய்து வைத்திருக்கின்றாய்; இப்படிப்பட்ட அருளுக்கு மற்று ஆரேனும் இலக்காக வல்லாருண்டோ? இவ்வருள் பெற்றவன் நானொருவனே யாவன்; இப்படிப்பட்ட அருளை நீ வேறொருவரிடத்தில் செய்வதாயிருந்தாலும் நான் ஸம்மதிக்கமாட்டேன்; உன்னுடைய கிருபையை அநுபவித்து ஒருகாலும் பர்யாப்தி பெறாதவனாகி மேன்மேலும் அபிநிவேச முடையவனாய் அதையே அநுபவித்துச் செருக்குற்று யமாதிகள் அடியிட்டுத் திரியும்படியானேன் என்கிறார். பின்னடிகட்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தி காண்மின் :– “ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே அநேகம் வடிவுகொண்டு அவ்வோவிடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகில்லையென்னும்படி வர்த்தியா நின்றான்” என்று. முதலடியில், தாரேன் என்றது – தரவொட்டேன் என்றபடி.


    1838.   
    எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-
    தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*
    பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*
    செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,

        விளக்கம்  


    • ‘எங்களிறை’ என்றோ ‘எம்மிறை’ என்றோ அருளிச் செய்தால் போதுமாயிருக்க ‘எங்களெம்மிறை’ என்பானேன்? புநருக்தியன்றோ? என்னில், ‘எங்களுக்கே இறை’ என்று திடமான அவயாரணந் தோற்றச் சொல்லவேண்டுவது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாதலால் இரட்டித்துச் சொல்லப்பட்டதென்க. பிறர்க்கும் ஸ்வாமியாய் எங்களுக்கும் ஸ்வாமியாயிருக்கிறனல்லன், எங்களுக்கே அஸாதாரண ஸ்வாமியா யிருக்கிறானென்கிறார். சரணாகதிகத்யத்தில் எம்பெருமானார் என்றதற்கு மேலும் விசேஷித்து அருளிச்செய்த்தும் இங்கு அநுஸந்திக்கத் தக்கது. ‘பிறர்க்கும் எமக்கும் பொதுவான ஸ்வாமியல்லன், எமக்கே அஸாதாரண ஸ்வாமி’ என்கிற விதற்குக் கருத்து யாதெனில், கேண்மின் பரவாஸுதேவனா யிருக்குமிருப்பு நித்யமுக்தர்களின் அநுபவத்திற்காக, வியூஹநிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்திலிருந்தவர்கட்காயொழிந்தன. அந்தர்யாமியாயிருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் பொல்வார்க்குப் பயனளிக்கும், அர்ச்சாவதார நிலையொன்றே எமக்கு ஜீவநம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காவே யன்றோ இது ஏற்பட்டது. குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழிகண்ணர் புகுரலாமோ? விழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்கு உதவுமோ? ஆகையாலே எமக்கே அஸாதாரண ஸேவ்யமாக வாய்ந்தது திருக்கோட்டியூர் நிலையென்கிறார். பதியே பரவித்தொழும் தொண்டரனைவரையும் ‘எங்கள்’ என்றதில் கூட்டிக்கொள்க. “அடியோமுக்கே யெம்பெருமானால் லீரோ நீர் இந்தளூரீரே!“ என்றருளிய பாசுரமும் இங்கு ஸ்மரிக்கவுரியது. ‘எங்களெம்மிறை’ என்றதிற்காட்டில் ‘எம்பிரான்’ என்றதற்கு வாசி என்னென்னில், ஸொத்தையுடையவன் என்பதுமாத்திரம் அதனால் சொல்லிற்று, ஸொத்துக்கு ஆவனசெய்யும் உபகாரகத்வம் இதனாற் சொல்லுகிறது. “இவன் நமக்கு உரியவன்“ என்னும்படி சேஷ்த்வத்திலே நிறுத்திவைப்பது மாத்திரமான ஸ்வாமித்வம் முதல்விசேஷணத்தின் பொருள். சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகையும், கைங்கரியம் செய்யுமிடத்து நேரும் இடையூறுகளை போக்கிப் பணிகொள்ளுகையும் இரண்டாவது விசேஷணத்தின் பொருளாக விவக்ஷிதம். பிரான் - உபகாரஞ் செய்பவன். அவிச்சிந்ந கைங்கரியங்கொள்ள பெறுவதையே உபகாரமாக நினைப்பர் மாஞானிகள். இப்படி எமக்கு ஸ்வாமியாயிருப்பதும் எமக்கு உபகாரகனாயிருப்பதும் வேறு அடியார்கள் அவனுக்கு இல்லாமையாலன்று, நித்யவிபூதியை ஒரு நாடாகவுடையவனா யிருந்து வைத்தும் “மீனுக்குத் தண்ணீர் வார்ப்பதுபோல அவர்கட்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் நிலைமை ஒரு சிறப்போ!“ என்று இங்கே போந்தருளி எங்களெம்மிறை யெம்பிரானா யிருக்கிறானென்னுங் கருத்துப்பட “இமையோர்க்கு நாயகன்“ என்கிறார்.


    1839.   
    எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்--
    செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*
    மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-
    தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே. 

        விளக்கம்  


    • நம்முடைய துன்பங்களை யெல்லாம் தீர்த்தருள்வதற்காகத் திருமகளும் நிலமகளுமாகிற பிராட்டிமாருடனே திருக்கோட்டியூரிலே ஸந்நிஹிதனென்கிறார். எவ்வநோய் தவிர்ப்பான் - எவ்வமாவது துக்கம், துக்கங்களைத் தருகின்ற நோய் என்ற ஸம்ஸாரமாகிற வியாதியைச் சொல்லுவதாகவுங் கொள்ளலாம். “எருத்துக்கொடியுடையானும் பிரமனு மிந்திரனும், மற்று மொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“ என்கிறபடி ஸம்ஸார நோய்க்கு அத்விதீய வைத்யனிறே எம்பெருமான். எமக்கிறையாகை யாலே எவ்வநோய் தவிர்ப்பான் என்று கார்ய காரணபாவந்தோற்று யோஜிப்பது. இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்விதோயவல்லான் - அடியார்களின் குற்றங்களைக் கணக்கிட்டு எம்பெருமான் தகுந்த சிஷை நடத்துவதாக இருக்கையில், அருகேயிருக்கும் பூமிப்பிராட்டியானவள் அவனுடைய ப்ரபுத்வத்தைப் பரிஹஸிப்பது தோற்றப் புன்சிரிப்பாகச் சிரிப்பள், ‘நீர் செய்ய நினைத்தது மிகவும் நன்றாயிருந்தது. இச்சேதனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படி இவனைப் படுகுழியிலே தள்ளப்பார்த்தால் இவனுக்கு வேறொரு போக்கிட முண்டோ? இவனுக்கும் உமக்குமுள்ள ஸம்பந்தம் ஒழிக்க வொழியாத்தன்றோ? இவனைப் பெறுகை உம்முடையலாபமன்றோ?’ ‘நம் வலையில் ஆர் அகப்படுவார்?“ என்று தேடித்திரிகிற உமக்கு நான் சொல்லவேணுமோ? நீர் ஸர்வஜ்ஞராயிருந்து வைத்து நன்று செய்யப் பார்த்தீர்!’ என்பதான உட்கருத்துத் தோன்றப் புன்சிரிப்புச் செய்வளாம், அதிலேயீடுபட்டு மயங்கிப்போவன் எம்பெருமான் என்க. திருமாமகட்கு இனியான் -நிலமகள் செவ்விதோயவல்லனாகையாலே அதுவே ஹேதுவாகப் பெரியபிராட்டியார்க்கு இனியனா யிருப்பனென்று சுவைமிக்க பொருளருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை. பூமிப்பிராட்டி முதலான தேவிமார்களுக்கு எம்பெருமான் விதேயனாக இருக்குமிருப்பைப் பெரியபிராட்டியார் தம் முலைகளோடும் தோளோடும் அணைந்திருக்குமிருப்பாக உகந்து வர்த்திக்கக் கடவராதலால் நிலமகள் செவ்வியிலே எம்பெருமான் தோய்ந்திருப்பது திருமகட்கு இனிமையாகக் குறையில்லை யென்க.


    1840.   
    வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-
    ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
    துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 
    தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.

        விளக்கம்  


    • எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன், கிருதயுதத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற வெண்ணிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு வெள்ளியான் என்று அநுஸந்திக்கப்பட்டது. கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான கரியநிறத்தைக் கொள்வன், அந்தநிறமே இங்கு ‘கரியான்’ என்று அநுஸந்திக்கப்பட்டது. த்வாபரயுகத்தில் பசுமைநிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு மணிநிறவண்ணன் என்று அநுஸந்திக்கப்ட்டது. அயர்வறு ம்மரர்களதிபதியாய் ஸர்வஸ்மாத்பரனாயிருந்துவைத்து எனக்கு வைத்தகண் வாங்கவொண்ணாதபடி தன்வடிவழகைக் காட்டியருள்பவன் உலகங்களை யெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப்பிழைக்கச் செய்தருளியது போலவே நம்மை ஸம்ஸாரப்ரளயத்துக்குத் தப்பவைப்பதற்காகத் திருக்கோட்டியூரிலே வந்து ஸந்திஹிதனாயிராநின்றான். சாமரைக் கற்றை, சந்தநவ்ருக்ஷம் முதலிய சீரிய பொருள்களைக் கொழித்துக் கொண்டு பிரவஹிக்கின்ற மணிமுத்தாறு அருகே விளங்கப்பெற்றதாம் இத்தலம்.


    1841.   
    ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-
    கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*
    நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-
    தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே. 

        விளக்கம்  


    • அன்பே வடிவான பிராட்டியோடு வாசியற அஹங்காரமே வடிவான ருத்ரனுக்கும் திருமேனியிலே இடங்கொடுக்கும் சீலகுணம் வாய்ந்த பெருமான் திருக்கோட்டியூரிலே ஸந்நிஹித னென்கிறார்.


    1842.   
    வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்
    தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*
    மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-
    திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே.  

        விளக்கம்  


    • The Lord deep ocean hue, the Lord of dark gem hue, the Lord of celestials, the Lord of nectored Tulasi garland, the ancient Lord who measured the Earth, resides in Tirukkottiyur amid mansions that the high and touch the clouds, while the white pennons on top play with the Moon in the heavenly sky


    1843.   
    காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-
    ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*
    நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,* 
    தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே. 

        விளக்கம்  


    • “காவலன்“ என்பதை எம்பிரானுக்கு விசேஷணமாக்கவுமாம், இராவணனுக்கு விசேஷணமாக்கவுமாம். காக்க வல்லவன் என்றபடி. எம்பிரானுக்கு விசேஷணமாகக் கொள்ளில் “காக்குமியல்வினன் கண்ண பெருமான்“ என்கிறபடியே அவனுடைய இயற்கைக் குணமாகிய ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது. இராவணனுக்கு விசேஷணமாகக் கொண்டால், ரக்ஷகத்வத்தை ஏறிட்டுக் கொண்டவன் என்றதாகிறது. ஸர்வேச்வரனொருவனுளனென்றும் அவனுக்கு அடிமைப்பட்டு உய்தல் நம்முடைய ஸ்வரூபமென்றும் உணரப்பெறாதேதானே ஸர்வரக்ஷகனாக அஹங்கரித்திருந்த இராவணனானவன் ;இன்றளவும் நாம் அநுபவியாதிருந்த பரிபவம் இன்று அநுபவிக்கலாயிற்றே! இன்னமும் என்னாகுமோ!“ என்று மனந் தளும்பும்படியாக அவன்மீது அம்புகளைப் பொழிந்து அவனுடைய மிடுக்கைத் தவிர்த்தவனும், இப்படிப்பட்ட வீரச்செயலுக்கு என்னை தோற்பித்து அடிமை கொண்டருளினவனுமான பெருமான் திருக்கோட்டியூரான். செல் - செல்ல, ‘மற்றவன்’ என்றதில், மற்று - அசை, ஏவலம் – ‘நாமே அம்பு எய்யவல்லோம், நம்மோடொப்பாரில்லை’ என்னும்மிடுக்கு.


    1844.   
    கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-
    நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*
    குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-
    தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே.  

        விளக்கம்  


    • முதலடியில் ‘அழிவென்று’ என்றபாடத்திற் காட்டிலும் ;அழவன்று; என்றபாடம் சிறக்கும், வியாக்கியானத்திற்கும் நன்கு பொருந்தும், “பசுக்களுக்கு அழிவு வருமன்று“ என்பது வியாக்கியான வாக்கியம். (அழிவன்று - கெடுதல் நேர்ந்த காலத்திலே).


    1845.   
    பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து- 
    ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*
    தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
    தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.

        விளக்கம்  


    • “ஆனைகாய்ந்து“ என்பதில் காய்ந்து என்றது, உபசாரவழக்கு, கொன்று என்றவாறு. அரிமா – ‘ஹரி’ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் குதிரை என்பதும் ஒருபொருள், ‘யா’ என்பது விலங்கின பொதுப் பெயர், குதிரையாகிய விலங்கு என்றபடி.


    1846.   
    கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
    மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,* 
    மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
    தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.    

        விளக்கம்  


    • இப்பாசுரத்தின் முதல் மூன்றடிகளும் திருக்கோட்டியூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சிறப்பைக் கூறுவன. இத்தலத்து ஸ்ரீவைஷ்ணவர்களின் சிறப்பு ஒப்புயர்வற்றது, பெரியாழ்வார் திருமொழியிலும் “நா அகாரியஞ் சொல்லிலாதவர் நாடொறும் விருந்தோம்புவார், தேவகாரியஞ்செய்து வேதம்பயின்று வாழ் திருக்கோட்டியூர்“ என்றும், “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்ச், செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்“ என்றும், “பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால், ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்“ என்றும், “காசின் வாய்க் கரம் விற்கிலுங் கரவாது மாற்றிலி சோறிட்டுத் தேவசார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்“ என்றும் ஸௌம்ய நாராயணனுடைய வைபவத்திற்காட்டிலும் அவ்விடத்துப் பாகவதர்களின் வைபவமே போரப்பொலியக் கொண்டாடி யுரைக்கப்பட்ட தென்பது உணரத்தக்கது. கோவையின் தமிழ் பாடுவார் - “கோவையையுடைத்தாய் இனிய தமிழான இத்திருமொழியைப் பாடுவார்“ என்பது வியாக்கியானம். இத்திருமொழி ஆழ்வார் திருவாக்கில் நின்றும் பூர்த்தியாக அவதரிப்பதற்கு முன்னமே திருக்கோட்டியூர் ஸ்வாமிகள் இதனைப் பாடிக்கொண்டிருப்பதாக இங்கு அருளிச் செய்வது எங்ஙனே பொருந்தும்? என்று சிலர் சங்கிப்பதுண்டு, கேண்மின், நம்மாழ்வார் “தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்“ என்றாப்போலே, பகவத் குணங்களில் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களின் நித்யாநு ஸந்தாநத்திற்காகவே அருளிச்செய்யும் திவ்யப்ரபந்தமாதலால், அவ்விடத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் இத்திருமொழியைக் கேட்டால் விடாதே விரும்பிப் பயின்று பாடுவர்களென்னும் நிச்சயத்தாலே இங்ஙனமருளிச்செய்யக் குறையில்லை யென்றுணர்க. கோவை - ஒழுங்கு. இனி, கோக்கப்பட்ட மாலைக்கும் பேராதலால் அதுபோலப் பரம போக்யமான தமிழ்ப்பாசுர மென்னவுமாம். குடமாடுவார் - “செருக்காலே திருவாய்ப்பாடியிற் படியாகக் குடக்கூத்தை யாடுவாராய்“ என்பது வியாக்கியானம். குடக்கூத்தாடுதலாவது -தலையிலும் இருதோள்களிலும் அடுக்குக்குடங்களை வைத்துக்கொண்டு கைகளிலே சில குடங்களையேந்தி யாடுவதொருகூத்து, இஃது இடையர் சாதிக்கு ஏற்ற கூத்து, இதனைத் திருக்கோட்டியூர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆடுவதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதென்று விமர்சிப்பாருண்டு, இதற்குச் சிலர் சொல்லுவதாவது, பெரியாழ்வார் திருமொழித் தொடக்கத்தில் “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்“ என்றும் “செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை“ என்றும் கிருஷ்ணாவதாரத்திற்குத் திருக்கோட்டியூரை வேர்ப்பற்றாக அருளிச்செய்கையாலே இவ்வூரிலுள்ளார் திருவாய்ப்பாடியாயர்படியை ஏறிட்டுக் கொள்ளுதல் பொருந்து மென்பர், இது பொருத்தமான ஸமர்தான மென்று பெரியோர் கொள்கின்றிலர், பின்னைப் பொருளென்னென்னில், ;குடமாடுவார் என்றது இடையர்களது குடக்கூத்தையே ஆடுகிறவர்களென்றபடியன்று, அதை உபலக்ஷணமாகக் கொள்ளவேணும். இடையர்க்குச் செல்வச் செருக்குவிஞ்சினால் அதற்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவது போல இத்தலத்திலுள்ளாரும் கோவையின் தமிழ் பாடுதலாலும் நிரந்தரபகவத்குணா நுபவத்தாலுமுண்டாகும் ப்ரீதிக்குப் போக்குவீடாக “மொய்ம்மரம் பூம்மொழிற் பொய்கை“ என்னுந் திருவாய் மொழியிற்படியே ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணுவார்களென்பதாகப் பெரியோர் பணிக்கக் கேட்டிருக்கை.


    1847.   
    ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
    சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*
    நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
    நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)

        விளக்கம்  


    • இந்நாலுமாறும் வல்லார்க்கு இடம் வானுலகு ஆகும் -இத்திருமொழியை ஓதுமவர்கள் எவ்விடத்தில் வஸிக்கிறார்களோ அவ்விடமே பரமபதம் என்பதாகவும் கொள்ளலாம். “ஓராயிரத்துளிப்பத்தும் உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்“ என்றாரிறே நம்மாழ்வாரும். “திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும்....புக்கு நிற்குங் குணந் திகழ் கொண்ட லிராமாநுசன்“ என்றாற்போலே, இத்திருமொழியைப் பாடுமவர்களுள்ளவிடத்தே பரமபதநாதனும் நித்யமுக்தர்களும் வந்து படுகாடு கிடப்பர்களென்றவாறு. ஆலும் மா -ஆடல்மா என்றபடி. ஆழ்வார் தனதாகக்கொண்டு ஏறிச் செலத்திய சிறந்த குதிரைக்கு இப்பெயர் வழங்கும். வலவன் -வல்லவன், ஸமர்த்தன், பாகன் என்றபடி. நெடுமாலை நினைந்த இந்நாலுமாறும் -எம்பெருமானது திருக்குணங்களை மணத்தினால் நினைக்க, அவ்வநுபவம் உள்ளடங்காமல் வெளியே பாடல்களாகப் பொசிந்த தென்க.


    1856.   
    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*
    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  

        விளக்கம்  



    2268.   
    இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-
    சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  - அன்று- 
    கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,* 
    திருக்கோட்டி எந்தை திறம்.    

        விளக்கம்  


    • இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார். நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு “ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக – (கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்) என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன், எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனேயன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.


    2343.   
    விண்ணகரம் வெஃகா*  விரிதிரைநீர் வேங்கடம்,* 
    மண்நகரம் மாமாட வேளுக்கை,* - மண்ணகத்த
    தென்குடந்தை*  தேன்ஆர் திருவரங்கம் தென்கோட்டி,* 
    தன்குடங்கை நீர்ஏற்றான் தாழ்வு.

        விளக்கம்  


    • ‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா திருமலை, ஆளழகிய சிங்கர்ஸந்நிதி‘ என்கிற கச்சித்திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில், திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று. ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து – மஹாபலிபக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம். தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.


    2415.   
    குறிப்பு எனக்குக்*  கோட்டியூர் மேயானைஏத்த* 
    குறிப்பு எனக்கு நன்மை பயக்க*  வெறுப்பனோ
    வேங்கடத்து மேயானை*  மெய்வினைநோய் எய்தாமல்* 
    தான்கடத்தும் தன்மையான் தாள். 

        விளக்கம்  


    • திருக்கோட்டியூர் திருவேங்கடம் முதலான பல திருப்பதிகளிலே எனக்காக வந்து ஸந்நிதிபண்ணி ஸுலபனாயிருக்குமெம்பெருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோவெண்கிறார். திருக்கோட்டியூரிலும் திருமலையலும் சென்று எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடவேண்டுமென்றும் அவனை இடைவிடாது அநுபவித்து ஆத்மாவுக்கு நன்மையை விளைத்துக் கொள்ள வேணுமென்றும் ஆசை கொண்டிருக்கிறேன். எவ்விதமான கருமங்களும் துக்கங்களும் எனக்கு வந்து கிட்டாதபடி செய்து என்னைக் காத்தருள்கின்ற அப்பெருமானுடைய திருவடிகளை நான் எப்படி உபேக்ஷித்திருக்கமுடியும் – என்றாராயிற்று.