திருக்கடித்தானம்

தலபுராணம்: உருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம் (தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் மாற்று கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும் பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது. அதுபோலவே உருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின் பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.ஆனால் ருக்மாங்கதன் வடநாட்டு மன்னன் ஆவான் ஆயின் தென்னாடு பெற்ற மலை நாட்டின் பதிகளுள் திருக்கடித்தானத்திற்கு இக்கதை தொடர்பு படுத்திக் கூறப்படுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.

அமைவிடம்

ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்,
திருக்கோவில்,
கடித்தளம் -686 105,
கோட்டயம் மாவட்டம்,
கேரளா மாநிலம் .,

தாயார் : ஸ்ரீ கற்பக வல்லி
மூலவர் : ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: அமிர்த நாராயனண்,ஸ்ரீ கற்பக வல்லி தாயார்


திவ்யதேச பாசுரங்கள்

    3618.   
    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*
    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)

        விளக்கம்  


    • என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார். ஐயோ! எம்பெருமானுடைய அருளை என்ன சொல்லுவேன்! பகலென்றும் இரவென்றும் பாராமல் எக்காலத்திலும் தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படி செய்து போருமிவ்வருளை என் சொல்லவல்லேனென்வாய் கொண்டே யென்று தணறுகிறார். என்னுடைய குற்றங்களைப் பார்த்தானாகில் அவன் அருளுகைக்கு ப்ரஸக்தியுண்டோ? நான் அகிஞ்சநன் என்று என்னுடைய வெறுமையையே பார்த்துத் தன்பேறாக அருளுமிவ்வருள் என்னோவென்கிறார். கீழே * மாயக்கூத்தன் பதிகத்திலே தாம்பட்ட வ்யஸனத்திற்காக அருள் செய்கிறானென்று நினைக்கின்றிலர், தன்பேறாக அருள் செய்வதாகவே நினைக்கிறார். உண்மையில் இப்படித்தானே நினைக்கவேண்டும். இதுவுமன்றி, இப்படிப்பட்டவருள் வேறொருவருக்குமன்றிக்கே தம்மொருவர்க்கே செய்வதாகவும் காட்டுகிறார் நமக்கே தந்தருள் செய்வான் என்று. தாம் பெற்றபேறு நித்யஸூரிகளும் பெற்றிலர் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளம். கீழ்த் திருவாய்மொழியில் *மொய்பூந்தாமத் தண்டுழாய்க் கடிசேர்கண்ணிப பெருமானே! * என்று இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தருளினதைப் பேசுகிறார் அல்லியந்தண்ணந்துழாய் முடியப்பன் என்று. இப்படிப்பட்ட மஹோபகாரகன் எழுந்தருளியிருக்கு மிடமாகையாலே நமக்கு உத்தேச்ய ஸ்தலம் திருக்கடித்தானம் என்கிறார். செல்வர்கள் வாழும் –தனிகர்கள் வாழுமிடம் என்கிறதன்று, நிரந்தரபகவதநுபவமேயாய்க் காலங் கழிக்கையே செல்வமாம், இளையபெருமானை யொத்தவர்கள் வாழுமிடம் என்றபடி.


    3619.   
    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*
    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 

        விளக்கம்  


    • என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார். திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒக்க நினைக்கையாவது என்னென்னில், ஸ்ரீவசந பூஷணத்தில் – (171). “அங்குத்தைவாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். * கல்லுங் கனைகடலு மென்கிறபடியே இது வித்தித்தால் அவற்றில் ஆகாம் மட்டமாயிருக்கும். * இளங்கோயில் கைவிடேலென்று இவன் ப்ரார்த்திக்கவேண்டும்படியா யிருக்கும். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்றருளிச் செய்யப்படுகிறது. இந்த ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது திவ்யதேசங்களிற் காட்டிலும் ஞானிகளின் திருமேனியில் எம்பெருமான்பண்ணும் ஆதரம் அளவற்றது, எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளி யிருப்பதானது தக்கவுபாயங்களாலே சேதநரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காகவாகையாலே அந்த திவ்ய தேச வாஸம் ஸாதனம், இந்த சேதநன் திருந்தி இவனுடைய ஹ்ருதஙத்தினுளே தான் வஸிக்கப்பெற்றவது அத்திவ்யதேச வாஸமாகிய க்ருஷியின் பயனாகையாலே ஞானிகளிடத்தில் வாஸமே எம்பெருமானுக்கு பரமப்ரயோஜனம். * மலைமேல் தான்னின்று என்மனத்துளிந்தானை * என்றும், * பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டோடிவந்து என்மனக்கடலில் வாழவல்ல மாய மணாளநம்பி * கல்லுங் கனைகடலும் வகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் எபாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனதுள்ளத்தகம் * என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தினால் விளங்கும். எம்பெருமான் புராதன திவ்ய தேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதாரத்தைக் குலைத்துக்கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும்படியைக் காணும் ஞானியானவன் “பிரானே! என்னுள்ளத்தனுள் புகுருகைக்கு பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்படல் முதலியவற்றில் ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது“ என்று எம்பெருமானை நோக்கி பிரார்த்திக்க வேண்டும்படியாகும். பரமபதம் திருப்பாற்கடல் அர்ச்சாவதாரங்கள் முதலிய ஸ்தானங்களிற் காட்டிலும் ஞானிகளின் ஹ்ருதயமே எம்பெருமானுக்குப் பரமபுருஷார்த்த மாகில், பரமபதம் முதலியவற்றை எம்பெருமான் விட்டுவிட வேண்டாவோ? அப்படி விட்டுவிட்டதாகத் தெரியவில்லையே, அவற்றிலும் உகந்து வர்த்திப்பதாகத் தெரிகிறதே, இதற்கு ஹேதுவென்? என்னிலும், எம்பெருமான் தனக்கு ப்ராப்யபூதரான ஞானிகள் அந்த ஸ்தலங்களிலே போரவுகப்புக் கொண்டிருப்பதனாலே அவர்களுகந்த ஸ்தலம் நமக்கு முத்தேச்யமாகவேணும் என்கிற எண்ணத்தினாலும், இத்தேசங்களில் நாம் வாஸம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் கிடைத்தது“ என்கிற நன்றியுணர்க்கியினாலும் எம்பெருமானுக்கு திவ்யதேசவாஸமும் அபிமதமாகின்றனது – என்பதாம். ஆகவே தமிருக்கடித்தானப் பதியையும் தம்முடைய உள்ளத்தையும் ஓக்கநினைத்துப் பரிமாறுவதாக இங்கு அருளிச் செய்யப்பட்டதென்க.


    3620.   
    ஒருவர் இருவர் ஓர்*  மூவர்என நின்று* 
    உருவுகரந்து*  உள்ளும்தோறும் தித்திப்பான்*
    திருஅமர் மார்வன்*  திருக்கடித்தானத்தை* 
    மருவிஉறைகின்ற*  மாயப்பிரானே.    

        விளக்கம்  


    • ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவு கரந்து – ஸ்ரீ ராமாயண யுத்தகாண்டத்தில் (ஸர்க்கம் -94) மூல பல வதம் சொல்லுமிடத்து இந்த நிலைதெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் காந்தர்வாஸ்த்ர ப்ரயோகம் பண்ணின வளவிலே (ச்லோ-26). ••• தத்ருசிரே ராமம் தஹந்த மரிவாஹிநீம், மோஹிதா பரமாஸ்க்ரேண காந்தர்வேண மஹாத்மநா.) என்று அரக்கர்கள் இராமனை அடியோடு காணவில்லையென்று முதலிலே சொல்லிற்று. இங்கு இருபத்தினாலாயிரப்படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் காண்மின் – “ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று கீழோடே அந்விதமாகக் கடவது. மூல பலம் சாகும்படி. அருளுகிறவன்று முந்துற வொருவனாய்த் தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த் தோற்றி வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூப்க்ரஹணம் அரிதாய் – உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று அந்வயம்.“ (திருவமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரான் உள்ளுந்தோறும் தித்திப்பான்) பெரிய பிராட்டியாரோடு கூடியிருக்கச் செய்தேயும் அவளைவிட்டு அவள் பரிகரமான என்னிடத்தலே ப்ராவண்யங்கொண்ட பெருமான் நானுகந்தவிடமென்று திருக்கடித்தானப் பதியை யுகந்து எனக்குப் பரமபோக்யனாயிரா நின்றானென்கை.


    3621.   
    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*
    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       

        விளக்கம்  


    • எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தரவாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார். ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய பெருமான் தன்னைப்பிரிந்து நான் பட்ட கிலேசமெல்லாம் தீரும்படி, (அதாவது) கீழ் * மாயக் கூத்தாவென்கிற பதிகத்தில் * காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்துபட்ட விடாயெல்லாம் தொலையும்படி என்னுடைய நெஞ்சமாகிற நாட்டிலே குடிகொண்டான் – நித்யவாஸம் பண்ணாநின்றான், நானுகந்த விடமென்று திருக்கடித்தானத்தையும் கோயில்கொண்டிராநின்றான். திவ்யதேசங்களில் பகலுமிரவும் பூர்த்யாக ஸேவை தந்தருளாமையாலே பகலில் மாத்திரமே அங்கு வாஸமென்னவேண்டியிருந்தது. என்னெஞ்சில் அப்படியன்றிக்கே நிரந்தரவாஸமுள்ளது. நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும். இங்கு ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத்விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“


    3622.   
    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;
    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 

        விளக்கம்  


    • என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார். திருக்கடித்தானத்தைத் தனக்கு அஸாதாரணமான கோயிலாகக் கொண்டவன் ஆழ்வார் நெஞ்சிலுள்ளே வந்து புகவிரும்பினான், அப்போது திருக்கடித்தானத்தை விட்டுத் தான் மாத்திரமே வந்து புகுவதாக முதலில் நினைத்தானாம். அப்படியாகில் செருப்புவைத்துத் திருவடி. தொழுவாரைப் போலேயாகுமென்று தோன்றிற்றாம். அப்படியாக வொண்ணாதென்று அத்திருப்பதியையும் கூட்டிக் கொண்டு வந்து புகுந்தானாம். * அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந்தானும் அகம்படிவந்து புகுந்து, பரவைத் திரைபலமோதப் பள்ளிகொள்கின்ற பிரானை * என்ற பெரியாழ்வார் திருமொழி இங்கே அநுஸந்திக்கத்தக்கது. திருக்கடித்தானத்தோடு மாத்திரமே வந்தானல்லன், ஸ்ரீ வைகுண்டத்து வைபவங்களோடும் க்ருஷ்ணாவதார வைபவங்களோடுங் கூடிவந்து புகுந்தா னென்கிறார் பின்னடிகளில். “தெய்வமெல்லாந் தொழ வைகுந்தங் கோயில்கொண்ட“ என்றதும் “குடக்கூத்தவம்மான்“ என்றதும் ஸாபிப்ராயம். நித்யஸூரிகளோடுகூட வைகுந்தத்தையுங் கூட்டிக் கொண்டுவந்தான், குடக்கூத்து முதலான அவதார


    3623.   
    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*
    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   

        விளக்கம்  


    • திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத்தரிருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும் தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ.


    3624.   
    கொண்டமின் இடர்கெட*  உள்ளத்து கோவிந்தன்* 
    மண்விண் முழுதும்*  அளந்தஒண்தாமரை*
    மண்ணவர் தாம்தொழ*  வானவர் தாம்வந்து* 
    நண்ணு திருக்கடித்தான நகரே

        விளக்கம்  


    • திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில், ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில். கோவிந்தன் மண்விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர்தாம்தொழ வானவர்தாம் வந்து நண்ணுதிருக்கடித்தான நகரை இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்று அந்வயிப்பது. கோவிந்தன் என்பது ஸர்வஸுலபனென்னும் பொருளில் பிரயோகிக்கப்பட்டது. தாமரைபோன்ற திருவடியென்ன வேண்டுமிடத்து, திருவடியைச் சொல்லாதே தாமரையென்றே சொல்லிவைத்தது –உவமவாகுபெயர், * தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே * (6-9-10) என்றார் கீழும். மண்ணவர்தாந் தொழ வானவர்தாம் வந்து நண்ணு –இடக்கை வலக்கையறியாத ஸம்ஸாரிகள் தொழ அவர்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிர்மையைக்காண வாசைப்பட்டு நித்ய ஸூரிகளும் வந்துகிட்டுகிற திருப்பதியாமிது. “பரமபதம் நித்யர்க்கேயா யிருக்குமாபோலே உகந்தருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கேயா யிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு. “இங்குள்ளார் அங்குப்போவது மேன்மையை யநுபவிக்க, அங்குள்ளார் இங்கு வருவது சீல குணாநுபவம் பண்ணுகைக்கு“ என்கிற ஸ்ரீ ஸூக்தியுங் காண்க.


    3625.   
    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*
    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.

        விளக்கம்  


    • எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும் திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில். எம்பெருமானுக்குப் பரமபோக்யமாக அமைந்த வாஸ ஸ்தானங்களுக்கு ஒரு குறையுண்டோ? கணக்கு வழக்குண்டோ? மேலுலகங்களிலும் இந்நிலவுலகத்திலும் கடலிலும் ஆகக் கண்டவிடங்களிலுமெல்லாம் மிகச் சிறந்த இருப்பிடங்கள் இரக்கச் செய்தேயும் அவற்றில் ஆத்ரமுடையனல்லன் எம்பெருமான், என்னெஞ்சையும் என்னெஞ்சில் வாஸத்திற்கு ஸாதனமாயிருந்த தீருக்கடித்தானப் பதியையுமே தனக்கு தாயப்ரப்தமான ஸ்தானமாக விரும்பியிரா நின்றான் என்றாராயிற்று.


    3626.   
    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*
    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 

        விளக்கம்  


    • திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார். தலைச்சிறந்த தாயப்பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் –திவ்ய தேசங்களில் சிறியது பெரியதென்கிற வாசியின்றிக்கே எந்தத் திருப்பதியானாலும் அது மிகச் சிறந்தது, அவை ஒவ்வொன்றும் தாயப்பதியெ. (அதாவது-அஸாதாரணஸ்தலமே யென்றபடி) அப்படிப்பட்ட எல்லாத் திருப்பதிகளிலுமே பொருந்தி வாழ்பவன்தான் எம்பெருமான், ஆனாலும், திருக்கடித்தானத்திலிருப்பு அத்புதம்! அத்புதம்! என்னவேண்டுமத்தனை.


    3627.   
    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*
    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)

        விளக்கம்  


    • ஆழ்வார்தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர்தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு. அற்புதன் நாராயணன். அரி வாமணன் நிற்பது – (எங்கேயென்றால்) நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகன் சோலை திருக்கடித்தானமே, (அவன்றான்) மேவியிருப்பது (எங்கேயென்றால்) என்னெஞ்சகம் –என்றிங்ஙனே ஒரு அந்வயக்ரமம். நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானத்து அற்புதன். நாராயணன் அரிவாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம் – என்றிங்ஙனே மற்றோரந்வயக்ரமம். மூன்றாவதான வொரு யோஜனையுமுண்டு, அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகத்திலும் திருக்கடித்தானத்திலும் – என்று.


    3628.   
    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)

        விளக்கம்  


    • இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார். இப்பாட்டின் ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி பரம போக்யம், - “சோலைத் திருக்கடித்தானத்துறை திருமால் கவிக்கு ப்ரதி பாத்யன், மதிள் குருகூர்ச்சடகோபன் கவிப்பாடுகிறானானால் இவை எங்ஙனே யிருக்கின்றன!, இவை வல்லாரை எம்பெருமான ஒரு க்ஷணம் பிரியில் தரிக்கமாட்டானென்கிறார்.“ என்று. பாலோடமுதன்ன என்ற விடத்திற்கு ஆளவந்தார் அருளிச் செய்வதொரு இன்சுவைப் பொருள்கேளீர், எம்பெருமான் விஷயமும் ஆழ்வார் ஸ்ரீஸூக்தியுமாகவன்றோ திருவாய் மொழியுள்ளது, இதில் எம்பெருமான் விஷயமானது பால், ஆழ்வார் ஸ்ரீஸூக்தியானது அமுது. இப்படி வாச்யவாசகங்கள் சேர்ந்திருப்பதானது பாலும்முதும் சோந்தாற்போன்றதாம். இப்பத்தும் வியந்து மேலைவைகுந்தத்திருத்தும் – “ஸம்ஸார நிலத்திலே இத்தை அப்யஸிப்பானொருவணுண்டாவதே!“ என்று வியப்பாம். அசேதமாகிய பதிகத்திற்கு வியப்புண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டா, பதிகத்தினால் ப்ரஸன்ன்னாகின்ற எம்பெருமானுடைய செயலே பதிகத்தின் மேலேற்றிக் கூறப்பட்டதென்க.