இராமானுஜர் பொன்மொழிகள்
ஸ்ரீமத் ராமானுஜரைப் பற்றிய பொன்மொழிகள்
ஸ்ரீ: பகவத் இராமானுசரின் பொன்மொழிகளில் சில
01. வேதவ்யாஸரின் ‘ப்ரஹ்ம ஸூத்ரங்கள்’ என்ற நூலுக்கு இராமானுசர் எழுதிய விரிவுரையான ஸ்ரீபாஷ்யத்தை ஓதி உணர வேண்டும்; ஓதுவிக்க வேண்டும்.
02. ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய வேதத்துக்கு ஒப்பான திவ்யப்பிரபந்தங்களை ஓதி உணர வேண்டும்; ஓதுவிக்க வேண்டும்.
03. ஸ்ரீமந் நாராயணன் நம் போல்வார் இந்தக் கண்களால் இப்போதே காணலாம்படி கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களில் நம்மால் இயன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்.
04. ஸ்ரீமந் நாராயணனையே சரணடைய வேண்டும். “பெரியபிராட்டியும் பெரியபெருமாளும் சேர்ந்திருக்கும் இருப்பில் அடியேன் கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்னும் பொருள்படும் ‘த்வய’ மந்திரத்தை ஓத வேண்டும்.
05. என்னுடையவன் என்று அபிமானிக்கும் ஒரு பரம பாகவதனின் அபிமானத்தில் ஒதுங்கி இருத்தல் வேண்டும்.
06. ஸ்ரீமந் நாராயணனே ‘பரம்பொருள்’ எனத் தெளிந்து அவன்பால் பக்தி செலுத்த வேண்டும்.
07. பிராட்டியுடன் சேர்ந்த பெருமாளே காப்பாளன்.
08. பிராட்டியுடன் சேர்ந்த பெருமானே பற்றுவதற்கான உயர்ந்த பொருள்.
09. எம்பெருமானின் திருக்கோயில் கோபுரம், விமானங்களைக் கண்டால் நின்ற நிலையிலேயே உடனே கைகூப்ப வேண்டும்.
10. திருக்கோயிலில் உள்ள மூர்த்திகளைக் கல் என்றோ, ஐம்பொன் உலோகத்தால் ஆனது என்றோ, சுதை என்றோ, மரம் என்றோ எண்ணலாகாது. அது தன் தாயினுடைய ஒழுக்கத்தை சந்தேகிப்பதற்கு ஒப்பாகும்.
11. இறைவனுக்கு கண்டருளப்பண்ணப்படாத அல்லது தகாத எந்த உணவைப் பொருள்களையும் உட்கொள்ளலாகாது.
12. அவரவர் குலத்திற்கு ஏற்ப சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மாக்களை மட்டுமே செய்ய வேண்டும்.
13. பலனை எதிர்பார்த்துக் கைங்கர்யங்களைச் செய்யலாகாது, அனைத்தும் இறைவனின் உகப்பிற்காகவே செய்ய வேண்டும்.
14. உலகியலைச் சார்ந்த பற்றினைக் கொள்ளக் கூடாது. இறைவனுடைய கைங்கர்யத்தில் சிறிதளவேனும் ஈடுபட வேண்டும்.
15. ‘சரீரமே ஆத்மா’ என எண்ணக் கூடாது; ‘சரீரம் வேறு. ஆத்மா வேறு’ என்ற தெளிவு பிறக்க வேண்டும்.
16. ஆத்மா ஸ்ரீமந் நாராயணனுடைய சொத்து அவன் தான் தலைவன். ஆத்மா அவனுக்கு அடிமைப்பட்டது என்ற எண்ணத்துடன் எப்போதும் வாழ வேண்டும்.
17. ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு துன்பம் என்பதே இல்லை என்ற உறுதிப்பாடு வேண்டும்.
18. புலனடக்கம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்; இந்திரியங்களுக்கு வசப்படக் கூடாது.
19. அற்ப விஷயங்களில் ஆசை கொள்வது கூடாது.
20. பொருளை முறையற்ற வழியில் அடைய முயல்வார் மற்றும் காமத்தில் ஆசையுடையோர்களை விட்டுவிட்டு, பகவத்பாகவத பக்தி உள்ளோர்களிடம் மட்டுமே பழக வேண்டும்.
21. எப்போதும் பிறரை நிந்திப்போருடன் சேர்க்கை கூடாது.
22. மற்றவர்களின் நன்மையையே எப்போதும் விரும்ப வேண்டும்.
23. பகவான் மற்றும் ஆசார்யர் பெருமைகளை எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
24. பகவானுக்கும் அவன் அடியார்களுக்கும் கைங்கர்யம் செய்ய வேண்டும்.
25. ஆசார்யர் மூலம் உயர்ந்த ஞானம் பெற்று அதன்படி வாழ வேண்டும்.
26. ‘திருமந்திரம்’, ‘த்வயம்’, ‘சரமச்லோகம்’ இவற்றின் அர்த்தங்களை ஆசார்யர் மூலம் பெற்றுத் தெளிய வேண்டும்.
27. “ஓம் நமோ நாராயணாய” என்ற மூன்று பதங்களைக் கொண்டது திருமந்த்ரம்.
28. “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய நம:” ஆறு பதங்களையும் கொண்டது த்வயம் எனப்படும்.
29. “ஸர்வத4ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:” என்ற 11 பதங்களைக் கொண்டது சரமச்லோகம்.
30. பூர்வாசார்யர்கள் மற்றும் தன் ஆசார்யன் அருளிச் செய்த வார்த்தைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும்.
31. காலையில் துயிலெழும்போதே ‘குருபரம்பரையை’த் தியானிக்க வேண்டும்.
32. ஆசார்யரை நம்மைப் போன்ற சராசரி மனிதராக எண்ணவே கூடாது.
33. ஆசார்யரின் ஞான, குண, வைராக்ய வைபவங்களைத் தினந்தோறும் நினைத்துக் கொண்டாட வேண்டும்.
34. ஞான பக்தி வைராக்யங்களில் முதிர்ந்த பெரியோர்களை கண்டால் உடனே தெண்டனிட வேண்டும்.
35. பகவானை வணங்குவதை விட ஆசார்யரையும், அவன் அடியார்களையும் வணங்குதல் உயர்வுக்கு வழிவகுக்கும்.
36. திருமால் அடியார்களைக் கண்டதும் விழுந்து வணங்க வேண்டும்.
37. திருமால் அடியார்களின் குணப்பெருமைகளை எண்ணி மகிழ வேண்டும்.
38. திருமால் அடியார்கள் பகவத், ஆசார்ய, பாகவத குண கீர்த்தனம் பண்ணினால் பெரும்உவகையோடு அதில் ஈடுபட வேண்டும்.
39. திருமால் அடியார்களின் கல்வி, செல்வம், குலம், வயது பாராது மரியாதை செலுத்த வேண்டும்.
40. திருமால் அடியார்கள் நம்மை வணங்கினால், நாமும் தவறாது அவர்களை வணங்க வேண்டும்.
41. திருமால் அடியார்கள் மத்தியில் நமது பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ளக் கூடாது.
42. நம்மை மற்ற திருமால் அடியார்களுக்கு ஒப்பாக ஒருக்காலும் எண்ணங் கொள்ளக் கூடாது; அவர்களை விடத் தாழ்வாகவே எண்ண வேண்டும்.
43. ‘நாம் திருமால் அடியார்களுக்கு அடிமை’ என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.
44. திருமால் அடியார்களிடம் குறைகள் காணக் கூடாது. அவர்களது குற்றங்களைப் பொருட்படுத்தக் கூடாது.
45. திருமால் அடியார்களை ஒருமையில் அழைக்கக் கூடாது.
46. திருமால் அடியார்களிடம் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது; அவர்களை இகழக் கூடாது.
47. திருமால் அடியார்கள் நம்மை அவமதித்தாலும் நாம் அவர்களிடம் பகை உணர்வு கொள்ளாது, ‘நானேதான் ஆயிடுக!’ என இருத்தல் வேண்டும்.
48. பாகவதபசாரம் (திருமால் அடியார்கள் மனம் வருந்தும்படி செய்தல்) கூடவே கூடாது. அதற்கு கழுவாய் இல்லை; அது பகவதபசாரத்தைக் காட்டிலும் கொடியது.
49. ஸ்ரீவைஷ்ணவர்கள் நமது இருப்பிடம் தேடி வந்தால் அவர்களை இன்முகத்துடன் “எழுந்தருள வேணும்” என்று கூறி வரவேற்க வேண்டும்.
50. ஒருவர் எவ்வளவு உயர்ந்த செல்வந்தராய் இருந்தாலும், கற்றறிந்தவராய் இருந்தாலும், “அடியேன்!” என்று தான் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
51. ஒருவர் உயர்ந்த மாளிகையில் குடியிருந்தாலும் அந்த இடத்தை அடியேனுடைய குடிசை என்றே கூற வேண்டும்.
52. ஸந்நிதியில் கொடுக்கப்படும் ப்ரஸாதங்களை பயபக்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை வேண்டாம் என்று சொல்லக் கூடாது.
53. எம்பெருமான் திருமுன்பு ஒருவரையொருவர் நிந்திக்கக் கூடாது. தகாத வார்த்தைகளைப் பேசக் கூடாது.
54. பிறர் துன்பங்கண்டு, “ஐயோ!” என்று இரங்க வேண்டும்.
55. ஸ்ரீவைஷ்ணவனுக்கு அமைய வேண்டிய முதன்மைக் குணமே இரக்கமாகுமென்று ஆசார்யர்களில் ஒருவரான நஞ்சீயர் என்பார் அடிக்கடி கூறுவார்.
56. ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பிறப்பைப் பற்றி ஆராய்தல் கூடாது. அது கொடிய பாவமாகும்.
57. எம்பெருமானை ஆராதிப்பதைக் காட்டிலும், அவன் அடியார்களை ஆராதிப்பதே உயர்வுடைய செயல்.
58. எம்பெருமான் திருமுன்பு “பல்லாண்டு! பல்லாண்டு!” என்று தான் கூற வேண்டுமேயொழிய “இதைத் தா, அதைத் தா” என்று வேண்டுதல் கூடாது.
59. எம்பெருமான் உறையும் திருக்கோயில்களை திருஅலகிட (பெருக்கித் தூய்மை செய்ய) வேண்டும்.
60. எம்பெருமானுக்கு மெய்வருத்திச் செய்யும் கைங்கர்யமே உகப்புடையதாகும்.
61. “நான் செய்தேன்” என்று ஒரு கைங்கர்யத்தைச் செய்தல் கூடாது. அது வீழ்ச்சிக்கு வித்திடும்.
62. நமக்கு ஏற்படும் துன்பங்களெல்லாம் முந்தைய பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே ஏற்படுகின்றன. அந்தத் துன்பங்கள் விலகுவதற்கு எம்பெருமான் திருவடிகளையும், ஆசார்யன் திருவடிகளையும் உறுதிபடப் பற்றிக் கொள்ள வேண்டும்.
63. எம்பெருமானுக்கு ஆற்றிடும் தொண்டைவிட மிக உயர்ந்தது, அவன் அடியார்களுக்கு ஆற்றிடும் தொண்டு. இந்தச் செயலையே எம்பெருமான் உகப்புடன் ஏற்றுக் கொள்வான்.
64. எம்பெருமானே “ஆறும் பேறும் (உபாயமும் உபேயமும்)” ஆவான்.
65. நம் புலன்களே நம்முடைய முதல் விரோதிகளாய் அமைந்துள்ளன என்ற நினைவு நம்மிடம் அமைந்திட வேண்டும்.
66. நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப்படும்போது, அவ்வாறு ஸேவிப்பவர்களை ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளார்கள் என்று எண்ணி அவர்களை தண்டனிட்டு உட்கார வேண்டும்.
67. நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப்படும்போது, இடையிலே எழுந்து செல்லக் கூடாது.
68. திருமால் அடியார்களைக் கண்டால், அவர்களை தண்டனிட்டு இடமிருந்து வலமாகச் செல்ல வேண்டும்.
69. திருமால் அடியார்களின் நிழலை நாம் மிதித்தல் கூடாது.
70. ஒரு திவ்ய தேசத்திற்குச் சென்றால், அங்கு கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானை கண்களாரக் கண்டு தொழ வேண்டும்.
71. திருக்கோயில்களில் வலம்வரும்போது நம் ஹ்ருதயக் கமலத்தில் எழுந்தருளியிருக்கும் அந்தர்யாமியான எம்பெருமானுக்கு நோவு ஏற்படா வண்ணம் மெல்ல நடந்து செல்ல வேண்டும்.
72. ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர் இல்லத்திற்கு வருகை தந்தால், அவர் விடைபெற்றுச் செல்லும்போது சிறிது தூரம் அவரோடு சென்று வழிஅனுப்ப வேண்டும்.
73. எம்பெருமான் புறப்பாடு கண்டருளும்போது முன்னே செல்லும் நாலாயிர திவ்யப்பிரபந்த கோஷ்டியினரை விழுந்து வணங்க வேண்டும்.
74. எம்பெருமானுக்கு தீப ஆர்த்தி கண்டருளப்பண்ணும்போது கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் அறைந்து கொள்ளக் கூடாது. அவனுடைய திருமேனி அழகை அனுபவிக்க வேண்டும்.
75. ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளிலேயே எப்பொழுதும் ஒதுங்கி இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
76. பகவத் பாகவத ஆசார்ய ஸந்நிதியில் கால்களை நீட்டிக் கொண்டு இருக்கக் கூடாது.
77. எம்பெருமான் திருவீதிகளில் எழுந்தருளும்போது அவனையும் அவனது அடியார்களையும் ஸேவியாது இல்லத்தினுள்ளேயே ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது கூடாது.
78. அன்றலர்ந்த மலர்களை நந்தவனங்களில் இருந்து பறித்து மாலையாகத் தொடுத்து எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கைங்கர்யங்களிலேயே மிக உயர்ந்தது நந்தவனக் கைங்கர்யம்.
79. திருமால் அடியார்களின் திருவடிகளில் சேர்க்கப்பட்ட நீரை மிகப் புனிதமாகக் கருத வேண்டும்.
80. எம்பெருமான் திருமஞ்சனத்திற்கும், நித்ய ஆராதனத்திற்கும் உபயோகப்படும் நீர் நிலைகளில் நாம் நீராடுதல் கூடாது.
81. திருமால் அடியார்களுடைய பார்வை நம்மேல் விழக் கூடுமானால் அதுவே நம்மை புனிதமாக்கும்.
82. ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாசிகள் பரமபதித்தால் அவர்களைச் சென்று தண்டனிட வேண்டும். அங்கு சென்று வந்ததால் ஆசௌசம் (தீட்டு) இல்லை.
83. எந்த நீர் நிலையில் நீராடும்போதும் “கங்கையிற் புனிதமாய காவிரி” என்று தொடங்கும் திருமாலை -23ஆம் பாசுரத்தை கூறியவாறு நீராட வேண்டும்.
84. காவிரியை பரமபதத்து விரஜாநதிக்கு ஒப்பாக நினைக்க வேண்டும்.
85. ஸ்ரீவைஷ்ணவர்கள் நெற்றியிலே திருமண்காப்பு அணியாமல் எம்பெருமானையும், ஆழ்வார்களையும், அடியார்களையும் ஸேவித்தல் கூடாது.
86. ஸ்ரீவைஷ்ணவர்கள் உரத்த குரலில் பேசுதல், எப்போதும் பிறரை தூற்றுதல் கூடாது.
87. ஆசார்யர் நமக்கு பெருத்த உபகாரம் செய்துள்ளார் என்ற நினைவும், நம்மைக் கடைத் தேற்றுவதற்காக ஸ்ரீமந் நாராயணனால் அனுப்பப்பட்டவர் என்றும் நினைக்க வேண்டும்.
88. வேதமும், ஆழ்வார்களின் அருளிச் செயலும் நம்மை இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க வந்த நூல்கள் என்ற எண்ணத்தை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.
89. ஸம்ஸ்க்ருத மொழியில் அமைந்துள்ள நூல்கள் தான் உயர்ந்தன என்றும், தமிழில் அமைந்துள்ள ஆழ்வார்களின் பாசுரங்கள் தாழ்ந்தவை என்றோ நினைப்பது பெருத்த பாவமாகும்.
90. எம்பெருமானுடைய குணநலன்களை அடிக்கடி பேசி அனுபவிக்க வேண்டும்.
91. ஆசார்யன் எழுந்தருளியிருந்தால் அவருடைய நியமனம் இன்றி எந்தச் செயலையும் மேற்கொள்ளக் கூடாது.
92. உயர்ந்த தத்வார்த்த நூல்களை ஓர் ஆசார்யனை அணுகியே கற்றுக் கொள்ள வேண்டும்.
93. ஒரு திருமால் அடியார்களையோ, எம்பெருமானையோ தண்டனிடும்போது அவையவங்கள் முழுவதும் ஆண்களானால் நிலம்தோயத் தண்டனிட வேண்டும். தரை சுத்தமாக உள்ளதா என்று பார்த்து தண்டனிடக் கூடாது.
94. திருமால் அடியார்களுக்கு உணவிடும்போதும், அருந்த நீர் ஸாதிக்கும்போதும், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தவறுசெய்த கிடாம்பியாச்சானை இராமானுசர் திருத்திப் பணிகொண்ட செய்தி குருபரம்பரை நூல்களில் காணப்படுகிறது.
95. ஆசார்யன் தன் அருகிலே இல்லாவிட்டாலும், அவர் எழுந்தருளி இருக்கும் திக்கை நோக்கித் தண்டனிட வேண்டும்.
96. திருவரங்கத்தில் கர்ப்ப க்ருஹத்துள் நுழைவதற்கு முன்பு வாயிற்காப்போர்களான ஜய விஜயர்களை தண்டனிட்டு அவர்கள் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
97. ஸ்ரீசடகோபன் ஸாதிக்கப்படும்போது தலைவணங்கி, அஞ்சலியோடு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
98. சீடன் தன் குடும்ப ரக்ஷணம் மட்டும் தனது பொறுப்பு என்றில்லாமல் ஆசார்யன் திருமாளிகை ரக்ஷைணமும் தன்னுடையது என்ற நினைவுடன் செயல்பட வேண்டும்.
99. எம்பெருமானுக்கு கண்டருளப் பண்ணப்பட்ட ப்ரஸாதத்தை அங்கேயே சிறிதளவாவது உண்ண வேண்டும்.
100. சீடனுடைய ஆத்மாவாகிய பயிர் வளர்ந்து நற்கதி பெற வேண்டுமானால், ஆசார்யனாகிய சூரியஒளி அவன்மேல் எப்பொழுதும் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதைத்தவிர வேறு உய்வதற்கு வழியில்லை.