திருக்கோவலூர்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்க, அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் மாவலியின் வரலாறு. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அமைவிடம்

மாநிலம்: தமிழ்நாடு மாவட்டம்: விழுப்புரம் மாவட்டம் அமைவு: திருக்கோவிலூர்,

தாயார் : ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
மூலவர் : த்ரிவிக்ரமன்
உட்சவர்: ஆயனார், கோவலன் (கோபாலன்)
மண்டலம் : நாடு நாடு
இடம் : விழுப்புரம்
கடவுளர்கள்: உலகநாத பெருமாள்,பூங்கோவை நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

  1138.   
  மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
  எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
  துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
  செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   

      விளக்கம்  


  • ஸோமம் என்ற வடசொல் சோமு எனத் திரிந்தது. ஸோமலதையின்ரஸத்தைப் பருகுதலை அங்கமாகவுடையதும் மூன்று வருஷங்களால் ஸாதிக்கத்தக்கதுமாம் ஸோமயாகம். சாலி---- வடசொல்.


  1139.   
  கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*  தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்* 
  சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை*  தாம் இருவர் அடி வருடும் தன்மையானை* 
  வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*  ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்* 
  சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.         

      விளக்கம்    1140.   
  கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்*  குழாம்கொள் பொய்கைக்*  கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி* 
  அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*  அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை* 
  எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*  இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட* 
  செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

      விளக்கம்  


  • இரண்டாமடியில் , ‘அந்தரமேவர” என்பதை ,’அந்தரம் மேவர’ என்றுபிரிக்க. மே----வினைப்பகுதி: ‘வா’ என்பது துணைவினை: மேவ என்றபடி. மேவுதலாவது இடமடையும்படி நிரம்பியிருத்தல். கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய எம்பெருமான் எழுந்தருளினபோது ஆகாசம் இடமடையும்படி யெழுந்தருளினானென்றது. அவனெழுந்தருளின பெருமையைச் சொன்னபடி. பின்னடிகளால் திருக்கோவலூரின் வயல்வாய்ப்பையும் பொழில்வாய்ப்பையும் வருணிக்குமாழ்வார், அவ்வுரை ஒரு பொற்களரியாக உருவகப்படுத்தி வருணிக்கிறார்: (பொற்களரியானது---தட்டானுடைய காரியச்சாலை) அது எப்படியிருக்குமென்றால், அங்கே கரிகள் கொட்டப்பட்டு நிரம்பியிருக்கும்: பொன்களும் முத்துக்களும் நிறைந்திருக்கும்: நெருப்பு ஜ்வலித்துக் கொண்டிருக்கும். இங்கே, கருநீல மலர்கள் கரியாகவும், புன்னைமொக்குகள் முத்தாகவும், புன்னைப்பூக்கள் பொன்னாகவும், தாமரைப்பூக்கள் நெருப்பாகவும் திகழ்வனவாம்;.


  1141.   
  தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*  தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை* 
  ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*  அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
  கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*  குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்* 
  தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

      விளக்கம்  


  • கண்ணீர் சோர்ந்து அன்புகூருமடியவர்களாவர்---பொய்கையார்பூதத்தார் பேயார் என்கிற முதலாழ்வார்கள்.


  1142.   
  கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*  கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்* 
  பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*  பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
  மறை வளர புகழ் வளர மாடம்தோறும்*  மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத* 
  சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

      விளக்கம்  


  • ஒண் தொளியனைத்தும்®வடமொழியில் ‘ ப்ரதோளி ‘ என்றொரு சொல் உண்டு வீதி என்று பொருள். ரத்த்யா ப்ரதோளிர்விசிகா. என்பது அமரகோசம். அச்சொல்லில் ப்ர என்னு முபஸர்க்கம் நீங்கி, ‘தோளி’ என்பது தொளி யென்று குறுக்கல் விகாரம் பெற்றிருக்கிறது இங்கு. (வாரமோத.) வேதமோதுமவர்களின் அத்யயந முறைமைகள் பலவகைப்பட்டிருக்கும்: அவ்வகைகளுள், வாரஞ் சொல்லுவதென்பது ஒன்று: அதாவது அநுவாகத்தின் அடியையோ பஞ்சாதியின் அடியையோ ஒருவர் எடுத்துக் கொடுத்துப் பதபாடம் சொல் என்றால் மயங்காமல் ஏற்றக் குறைவின்றி இருநாற்றைம்பது பதங்கள் சொல்லி நிறுத்தலாம். சிறை என்னுஞ் சொல்லுக்குப் பலபொருள்களுண்டு: ஜலப்ராந்த மென்னும் பொருளை இங்குக் கொள்க.


  1143.   
  உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*  அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* 
  தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*  தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
  வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
  செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

      விளக்கம்  


  • முதலடியில். “ஒளியாச் சென்று” என்றும் “ஒளியால் சென்று” என்றும் பாடபேதமுண்டு. முந்தின பாடத்தில், ஒளியா----‘செய்யா’ என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்: ஒளிந்துகொண்டு என்றபடி. “ஒளியா வெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் , விளியாவார்க்க ஆப்புண்டு விம்மியழுதான்” என்று மேலே ஆறாம்பத்திலு மருளிச்செய்வர். “ஒளியால் “என்ற பிந்தின பாடத்தில், 1.நாளிளந் திங்களைக் கோள்விடுத்து, வேயகம் பால் வெண்ணெய் தொடுவுண்ட” என்கிற பாசுரத்தின்படியே பொருள் கொள்ள வேணும்: அதாவது உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவுகாணப் போனபோது, தன் திருநிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் ஒன்றுந் தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே கையிலே வெண்ணெய்த் தாழிகள் அகப்பட்ட மகிழ்ச்சியினால் சிரிப்பு உண்டாகும்: பூர்ண சந்திரனுடைய கிரணம்போலே திருமுத்துக்களின் ஒளி புறப்படவே , அந்த ஒளியையே கைவிளக்காகக் கொண்டு அமுது செய்வனென்க. ஆகவே இப்பாட்டில் ஒளியால் என்றது. திருமுத்துக்களின் ஒளியினாலே என்றவாறு. இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தை அச்சிடுவித்தவர்கள் அநந்விதமாக அச்சிடுவித்துள்ளார்: அதாவது --- “(ஒளியால் சென்றங்குண்டானை.) கனவாலேயன்றியே ‘நாளினந்திங்கள்’ இத்தியாதிப்படியே.” என்று அச்சிடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் எங்ஙனேயிருக்கவேணுமென்றால் ,”களவாலே:


  1144.   
  இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி*  இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து* 
  வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*  வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
  கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*  காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட* 
  செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

      விளக்கம்    1145.   
  பார் ஏறு பெரும் பாரம் தீரப்*  பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
  பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*  செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை* 
  போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*  புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்* 
  சீர் ஏறு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 

      விளக்கம்    1146.   
  தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு*  சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற* 
  காவடிவின் கற்பகமே போல நின்று*  கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை* 
  சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*  செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
  தீ வடிவின் சிவன் அயனே போல்வார்*  மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

      விளக்கம்  


  • காவடி விற்கற்பகம்=கப்பும் கிளையுமாகப் பணைத்துப் பெரிய சோலைபோலே பரந்து விளங்குகிற கல்பவ்ருக்ஷத்தை எம்பெருமானுக்கு உவமை கூறலாமேயன்றி வெறும் கல்பவ்ருக்ஷத்தை உவமை கூறலாகாதென்க. கா----சோலை. கல்பகம்----வேண்டுவார்வேண்டின வற்றையெல்லாம்; அளிப்பது என்று காரணப்பெயர்ஃ தீவடிவிற்சிவன் ® “ஓருருவம் பொண்ணுவருவம் ஒன்று செந்தி” என்பர் திருநெடுந் தாண்டகத்திலும்.


  1147.   
  வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
  சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 
  வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
  காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)      

      விளக்கம்  


  • “வாரணங்குமலைமடவார்மங்கை” என்று மங்கை நாட்டின் சிறப்பு சொன்னபடி. சோலைவாய்ப்பு. வயலவீறு, மதிப்பொலிவு முதலியவற்றைச் சொல்லும் முகத்தால் நகரத்தின் சிறப்பை வெளியிடுதல்போல, மாதர்களின் மேன்மையைச் சொல்லும் முகத்தாலும் வெளியிடுதலுண்டு ;”ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி” என்னாற்போல.காரணங்களால் ஏத்த = ஐச்வர்யம் வேணுமென்றும் புத்ரஸந்தானம் வேணுமென்றும் இந்திரலோகம் வேணுமென்றும் ;இப்படி பலபல அபேக்ஷிகள் காரணமாக ஏந்துமவர்களுக்கும் பலன்அளிக்க எங்கும் புகுந்து பரந்திருக்கிறானாம் எம்பெருமான்.


  2057.   
  அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*  அம்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்,* 
  சலம் புரிந்துஅங்கு அருள்இல்லாத் தன்மை யாளன்*  தான்உகந்த ஊர்எல்லாம் தன்தாள் பாடி,*
  நிலம்பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*  நெடுவேய்கள் படுமுத்தம் உந்த உந்தி,* 
  புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே! 

      விளக்கம்  


  • அமரர்வேந்தன் = கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை இங்கு அமரர் என்கிறது. நித்யஸூரிகளை அடிமைகொள்வதாக முடிகவித்திருப்பவன் என்றவாறு. (அஞ்சிறைப்புள்தனிப்பாகன்) கீழ் ‘அமரர் வேந்தன்‘ என்று நித்யஸூரிகளை அடிமை கொள்பவனென்று பொதுவாகச் சொல்லிற்று; அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு திருஷ்டாந்தமாக ஒருவ்யக்தியைச் சிறப்பாக எடுத்துப்பேசுகிறார். அழகிய சிறகையுடையனான பெரியதிருவடிக்கு அத்விதீயனான பாகன், கருடவாஹன்ன் என்றபடி. எம்பெருமான் தன்மீதேசறி உலாவும்போது உண்டாகும் ஆயாஸத்திற்குத் திருவாலவட்டம் பணிமாறினாப் போலே இரண்டு சிறகாலும் ஆச்வாஸம் செய்கிறபடியைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சிறை‘ என்று புள்ளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. அடியார்கள் இருக்குமிடங்களிலே எம்பெருமானைக் கொண்டு சேர்ப்பதற்குச் சிறகுகளே கருவியாதலால் அவற்றைக் சிறப்பித்துக் கூறுகிறபடியுமாம். (அவுணர்க்கென்றும் சலம்புரிந்து அங்கருளில்லாத் தன்மையாளன்) ஸ்ரீராம க்ருஷ்ணாதிரூபேண திருவவதரித்து விரோதிகளைக் களைந்தமை சொல்லுகிறது. ‘அவுணர்‘ என்றது அசுர்ர் என்றபடி. இது அஸுரஜாதியைச் சொல்லுகிறதன்று. அஹங்காரம்மகாரங்களோடு கூடினவர்களாய் பகவத்பக்தியிலே பகையுள்ளவர்கள் ஆஸுரப்க்ருதிகளென்று சொல்லப்படுவார்களாதலால் அவர்களையே இங்கு அவுணரென்கிறது. ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும் “உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான். விபீஷணாழ்வான் ராக்ஷஸ அஸுரயோநியிற் பிறந்திருக்கச் செய்தேயும் “விபணஷஸ் து தர்மாத்மா“ என்னும்படியாயிருந்தான். ஜயந்தன் (காகாஸுரன்) தேவயோநியாயிருக்கச் செய்தேயும் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கானான். ஆன இப்படிகளை ஆராயுமிடத்து அஸுரத்வமும் தேவத்வமும் ஜாதிபரமன்று, ஸ்வபாவபரம். அதாவது. “விஷ்ணுபக்திபரோ தேவோ விபரீதஸ் த்தாஸுர“ என்று ஸ்ரீவிஷ்ணுதர்மத்திலே சொல்லிற்று. “த்வௌ பூதஸர்க்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச-தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா.“ என்று பகவத்கீதை யிலே சொல்லிற்று. எம்பெருமானுடைய ஸ்வரூப குணவிபூதிகளில் அன்புள்ளவர்கள் தேவரெனப்படுவர்கள், அவற்றில் பொறாமையுள்ளவர்கள் அசுரனெப்படுவர்கள். “நண்ணவசுர்ர் நலிவெய்த நல்லவமர்ர் பொலிவெய்த“ (10-7-5) என்பன போன்றவிடங்களிலும் இவ்வகைப் பொருள் அநுஸந்திக்கப்பட்டமை காண்க. ஆக இப்படிப்பட்ட ஆஸுர ப்ரக்ருதிகள் விஷயத்தில் ஒருநாளும் அநுக்ரஹ மின்றி நிக்ரஹமே செய்து போருமியல்வின்ன் என்றதாயிற்று.


  2058.   
  வற்புஉடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள*  வடிவாய மழுஏந்தி உலகம் ஆண்டு,* 
  வெற்புஉடைய நெடுங்கடலுள் தனிவேல்உய்த்த*  வேள்முதலா வென்றான்ஊர் விந்தம் மேய,*
  கற்புஉடைய மடக்கன்னி காவல் பூண்ட*  கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,* 
  பொற்புஉடைய மலைஅரையன் பணிய நின்ற*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!  

      விளக்கம்  


  • வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த வேள்முதலா வென்றானூர் = முற்காலத்தில் மலைகளெல்லாம் இறகுகளுடன் கூடிப்பறந்து ஆங்காங்க வீழ்ந்து நகரங்களையும் கிராமங்களையும் அழித்துக்கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் இறகுகளை அறுத்தொழிக்க, மைநாகமலை அவனுக்குத் தப்பித் தெரியாதபடி கடலினுள்ளே கிடக்க, தேவஸேநாபதியான ஸுப்ரஹ்மண்யன் அதனையறிந்து தனது வேற்படையைச்செலுத்தி அம்மலையை நலிந்த வரலாறு இங்கு அறியத்தக்கது. அப்படிப் பட்ட மஹாவீரனான ஸுப்ரஹ்மண்யன் முதலானாரைப் பாணாஸுரயுத்தத்தினன்று பங்கப்படுத்தினமை சொல்லிற்றாயிற்று. ‘வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர். மன்மதனைப்போல் அழகிற் சிறந்தவனென்க. நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜயவ்ருத்தாந்தத்தைப் பேசும்போது “நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற அருளிச்செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க. ”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.


  2167.   
  நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
  பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-
  கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
  இடைகழியே பற்றி இனி.   

      விளக்கம்  


  • “பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்] மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதிபாடினதலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம். இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு. பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமை கராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில் உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்துசேர, அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார். திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும் காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது] குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்றவக்காலத்து இடையரிடைச்சிகளோடும் பசுக்கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர். வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலகவழக்கில் ‘ரேழி’ என்னப்பட்டும் வருகிறஸ்தானமே இடைகழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே அநந்யப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான் உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.