பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


    இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
    பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை ணையை மேவி*

    திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
    கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)


    வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
    வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*

    காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! 


    எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
    எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-

    அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே


    மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
    ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்

    பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே


    இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
    துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*

    மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே 


    அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
    தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*

    களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
    ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே


    மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
    துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*

    அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


    கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
    கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*

    சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
    மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே


    தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித்*  திருப்புகழ்கள் பலவும் பாடி* 
    ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்*  மழை சோர நினைந்து உருகி ஏத்தி*  நாளும்

    சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
    போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*  பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!


    வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
    துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *

    அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
    இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)


    திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
    கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*

    குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
    நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)


    தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
    வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*

    ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
    ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)


    தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
    நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*

    ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
    ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  


    ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
    மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 

    ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
    சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே


    தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
    ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*

    நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
    ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே


    பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
    செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*

    மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
    மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே


    ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
    பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*

    தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
    காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே 


    கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
    ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*

    சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
    வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே


    மாலை உற்ற கடற் கிடந்தவன்*  வண்டு கிண்டு நறுந்துழாய்*
    மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை*  மலர்க் கண்ணனை*

    மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்*  திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
    மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு*  மாலை உற்றது என் நெஞ்சமே


    மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
    எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்

    அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
    பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  


    அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
    எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 

    கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*
    சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)


    மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
    வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*

    ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)


    நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
    ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*

    ஆலியா அழையா*  அரங்கா என்று* 
    மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே


    மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
    பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*

    ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
    நாரணன்*  நரகாந்தகன் பித்தனே


    உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
    மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*

    அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
    உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே


    தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
    நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*

    ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
    பேதை மா மணவாளன்*  தன் பித்தனே 


    எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
    உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*

    தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
    எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே


    எத் திறத்திலும்*  யாரொடும் கூடும்*  அச்
    சித்தந்தன்னைத்*  தவிர்த்தனன் செங்கண் மால்*

    அத்தனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    பித்தனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே


    பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்
    பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*

    ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே


    அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
    தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*

    கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
    இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)


    ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
    ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*

    கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
    கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)


    ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
    வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*

    தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
    மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே


    பின் இட்ட சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
    துன்னிட்டுப் புகல் அரிய*  வைகுந்த நீள் வாசல்*

    மின் வட்டச் சுடர்-ஆழி*  வேங்கடக்கோன் தான் உமிழும்* 
    பொன்-வட்டில் பிடித்து உடனே*  புகப் பெறுவேன் ஆவேனே


    ஒண் பவள வேலை*  உலவு தன் பாற்கடலுள்*
    கண் துயிலும் மாயோன்*  கழலிணைகள் காண்பதற்கு*

    பண் பகரும் வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துச்*
    செண்பகமாய் நிற்கும்*  திரு உடையேன் ஆவேனே


    கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*
    இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*
     

    எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*
    தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே


    மின் அனைய நுண்ணிடையார்*  உருப்பசியும் மேனகையும்*
    அன்னவர்தம் பாடலொடும்*  ஆடல் அவை ஆதரியேன்

    தென்ன என வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துள்*
    அன்னனைய பொற்குவடு ஆம்*  அருந்தவத்தேன் ஆவேனே


    வான் ஆளும் மா மதி போல்*  வெண் குடைக்கீழ்*  மன்னவர்தம்
    கோன் ஆகி வீற்றிருந்து*  கொண்டாடும் செல்வு அறியேன்*

    தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    கானாறாய்ப் பாயும்*  கருத்து உடையேன் ஆவேனே


    பிறை ஏறு சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
    முறையாய பெரு வேள்விக்*  குறை முடிப்பான் மறை ஆனான்*

    வெறியார் தண் சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    நெறியாய்க் கிடக்கும்*  நிலை உடையேன் ஆவேனே


    செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
    நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*

    அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
    படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)


    உம்பர் உலகு ஆண்டு*  ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*
    அம்பொற் கலை அல்குல்*  பெற்றாலும் ஆதரியேன்*

    செம் பவள-வாயான்*  திருவேங்கடம் என்னும்*
    எம்பெருமான் பொன்மலைமேல்*  ஏதேனும் ஆவேனே


    மன்னிய தண் சாரல்*  வட வேங்கடத்தான்தன்*
    பொன் இயலும் சேவடிகள்*  காண்பான் புரிந்து இறைஞ்சிக்*

    கொல் நவிலும் கூர்வேற்*  குலசேகரன் சொன்ன*
    பன்னிய நூற் தமிழ்-வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)


    தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 
    விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*

    அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 
    அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)    


    கண்டார் இகழ்வனவே*  காதலன்தான் செய்திடினும்*
    கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*

    விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
    கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே


    மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்-
    பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*

    தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்
    கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே


    வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*
    மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*

    மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
    ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே


    வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்*  வித்துவக்கோட்டு அம்மானே*
    எங்குப் போய் உய்கேன்?*  உன் இணையடியே அடையல் அல்லால்*

    எங்கும் போய்க் கரை காணாது*  எறிகடல்வாய் மீண்டு ஏயும்*
    வங்கத்தின் கூம்பு ஏறும்*  மாப் பறவை போன்றேனே


    செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்
    அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*

    வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
    அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே


    எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*
    மைத்து எழுந்த மா முகிலே*  பார்த்திருக்கும் மற்று அவை போல்*

    மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்
    சித்தம் மிக உன்பாலே*  வைப்பன் அடியேனே


    தொக்கு இலங்கி யாறெல்லாம்*  பரந்து ஓடித்* தொடுகடலே
    புக்கு அன்றிப் புறம்நிற்க*  மாட்டாத மற்று அவை போல்*

    மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்
    புக்கு இலங்கு சீர் அல்லால்*  புக்கிலன் காண் புண்ணியனே


    நின்னையே தான் வேண்டி*  நீள் செல்வம் வேண்டாதான்*
    தன்னையே தான் வேண்டும்*  செல்வம்போல் மாயத்தால்*

    மின்னையே சேர் திகிரி*  வித்துவக்கோட்டு அம்மானே*
    நின்னையே தான் வேண்டி*  நிற்பன் அடியேனே


    வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்* 
    மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்து*

    கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன* 
    நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2)


    ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்*  எனைப் பலர் உள்ள இவ் ஊரில்*  உன்தன்
    மார்வு தழுவுதற்கு*  ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*

    கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்*  கூசி நடுங்கி யமுனை யாற்றில்* 
    வார் மணற் குன்றிற் புலர நின்றேன்*  வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)


    கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி*  கீழை அகத்துத் தயிர் கடையக்
    கண்டு*  ஒல்லை நானும் கடைவன் என்று*  கள்ள-விழியை விழித்துப் புக்கு*

    வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ*  வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
    தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்*  தாமோதரா மெய் அறிவன் நானே   


    கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் கடைக்கணித்து*  ஆங்கே ஒருத்திதன்பால்
    மருவி மனம் வைத்து*  மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து*

    புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி*  அவளுக்கும் மெய்யன் அல்லை*
    மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே*  வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.


    தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்*  தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று*
    பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு*  பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்*

    ஆய்மிகு காதலோடு யான் இருப்ப*  யான் விட வந்த என் தூதியோடே* 
    நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்*  அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.


    மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு*  வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே* 
    பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்*  போகின்ற போது நான் கண்டு நின்றேன்*

    கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்*  கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்*
    என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?*  இன்னம் அங்கே நட நம்பி நீயே.  


    மற் பொரு தோள் உடை வாசுதேவா*  வல்வினையேன் துயில் கொண்டவாறே*
    இற்றை இரவிடை ஏமத்து என்னை*  இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்*

    அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்*  அரிவையரோடும் அணைந்து வந்தாய்* 
    எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?*  எம்பெருமான் நீ எழுந்தருளே


    பையரவின் அணைப் பள்ளியினாய்*  பண்டையோம் அல்லோம் நாம்*  நீ உகக்கும் 
    மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்*  வைகி எம் சேரி வரவு ஒழி நீ*

    செய்ய உடையும் திருமுகமும்*  செங்கனிவாயும் குழலும் கண்டு* 
    பொய் ஒரு நாள் பட்டதே அமையும்*  புள்ளுவம் பேசாதே போகு நம்பீ


    என்னை வருக எனக் குறித்திட்டு*  இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்* 
    மன்னி அவளைப் புணரப் புக்கு*  மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்* 

    பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்*  பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்*
    இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்*  வருதியேல் என் சினம் தீர்வன் நானே    


    மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க*  மயில்-தழைப் பீலி சூடி*
    பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி*  பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து*

    கொங்கு நறுங் குழலார்களோடு*  குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்*
    எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத*  உன் குழலின் இசை போதராதே?


    அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து*  இள ஆய்ச்சிமார்கள்* 
    எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி*  எள்கி உரைத்த உரையதனைக்*

    கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்*  குலசேகரன் இன்னிசையில் மேவிச்* 
    சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்*  சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)


    ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ*  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ* 
    வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ*  வேழப் போதகம் அன்னவன் தாலோ* 

    ஏல வார் குழல் என்மகன் தாலோ*  என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்* 
    தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்*  தாயரிற் கடை ஆயின தாயே (2)  


    வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்*  மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி* 
    முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்*  பொலியும் நீர்-முகிற் குழவியே போல* 

    அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்*  அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த* 
    கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ*  கேசவா கெடுவேன் கெடுவேனே  


    முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்*  முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி* 
    எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே*  எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே* 

    உந்தை யாவன் என்று உரைப்ப*  நின் செங்கேழ்- விரலினும் கடைக்கண்ணினும் காட்ட 
    நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா*  நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே   


    களி நிலா எழில் மதிபுரை முகமும்*  கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும்* 
    தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும்*  தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த* 

    இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால்*  பருகுவேற்கு இவள் தாயென நினைந்த* 
    அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த*  பாவியேன் எனது ஆவி நில்லாதே* 


    மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி*  அசைதர மணிவாயிடை முத்தம் 
    தருதலும் உன்தன் தாதையைப் போலும்*  வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர* 

    விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து*  வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும் 
    திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்*  எல்லாம்- தெய்வ நங்கை யசோதை பெற்றாளே       


    தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா*  தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால் 
    மண்ணிற் செம்பொடி ஆடி வந்து*  என்தன்- மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ* 

    வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்*  வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்* 
    உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்*  என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே*


    குழகனே! என்தன் கோமளப் பிள்ளாய்*  கோவிந்தா என் குடங்கையில் மன்னி* 
    ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல்* ஒரு கையால் ஒரு முலை- முகம் நெருடா* 

    மழலை மென்னகை இடையிடை அருளா*  வாயிலே முலை இருக்க என் முகத்தே* 
    எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந்- தன்னையும் இழந்தேன் இழந்தேனே!   


    முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்*  முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்* 
    எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு- நிலையும்*  வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்* 

    அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்*  அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்* 
    தொழுகையும் இவை கண்ட அசோதை*  தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே   


    குன்றினால் குடை கவித்ததும்*  கோலக்- குரவை கோத்ததுவும் குடமாட்டும்* 
    கன்றினால் விளவு எறிந்ததும் காலால்- காளியன் தலை மிதித்ததும் முதலா* 

    வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்*  அங்கு என் உள்ளம் உள்குளிர 
    ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்*  காணுமாறு இனி உண்டெனில் அருளே.


    வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி*  வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க* 
    நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ*  சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்* 

    கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்*  கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து* 
    தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்*  தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே   


    மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை*  வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து*
    எல்லையில் பிள்ளை செய்வன காணாத்*  தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்* 

    கொல்லி காவலன் மால் அடி முடிமேல்*  கோலமாம் குலசேகரன் சொன்ன 
    நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (2)   


    மன்னு புகழ்க் கௌசலைதன்*  மணிவயிறு வாய்த்தவனே* 
    தென் இலங்கைக் கோன் முடிகள்*  சிந்துவித்தாய் செம்பொன் சேர்* 

    கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் கருமணியே* 
    என்னுடைய இன்னமுதே*  இராகவனே தாலேலோ (2)      


    புண்டரிக மலரதன்மேல்*  புவனி எல்லாம் படைத்தவனே* 
    திண் திறலாள் தாடகைதன்*  உரம் உருவச் சிலை வளைத்தாய்* 

    கண்டவர்தம் மனம் வழங்கும்*  கணபுரத்து என் கருமணியே* 
    எண் திசையும் ஆளுடையாய்*  இராகவனே தாலேலோ  


    கொங்கு மலி கருங்குழலாள்*  கௌசலைதன் குல மதலாய்* 
    தங்கு பெரும் புகழ்ச்சனகன்*  திரு மருகா தாசரதீ* 

    கங்கையிலும் தீர்த்த மலி*  கணபுரத்து என் கருமணியே* 
    எங்கள் குலத்து இன்னமுதே*  இராகவனே தாலேலோ


    தாமரை மேல் அயனவனைப்*  படைத்தவனே*  தயரதன்தன்- 
    மா மதலாய்*  மைதிலிதன் மணவாளா*  வண்டினங்கள்- 

    காமரங்கள் இசைபாடும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஏமருவும் சிலை வலவா*  இராகவனே தாலேலோ


    பார் ஆளும் படர் செல்வம்*  பரத நம்பிக்கே அருளி* 
    ஆரா அன்பு இளையவனோடு*  அருங்கானம் அடைந்தவனே* 

    சீர் ஆளும் வரை மார்பா*  திருக் கண்ணபுரத்து அரசே* 
    தார் ஆரும் நீண் முடி*  என் தாசரதீ தாலேலோ     


    சுற்றம் எல்லாம் பின் தொடரத்*  தொல் கானம் அடைந்தவனே* 
    அற்றவர்கட்கு அருமருந்தே*  அயோத்தி நகர்க்கு அதிபதியே* 

    கற்றவர்கள்தாம் வாழும்*  கணபுரத்து என் கருமணியே* 
    சிற்றவைதன் சொற் கொண்ட*  சீராமா தாலேலோ       


    ஆலின் இலைப் பாலகனாய்*  அன்று உலகம் உண்டவனே* 
    வாலியைக் கொன்று அரசு*  இளைய வானரத்துக்கு அளித்தவனே* 

    காலின் மணி கரை அலைக்கும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஆலி நகர்க்கு அதிபதியே*  அயோத்திமனே தாலேலோ  


    மலையதனால் அணை கட்டி*  மதில்-இலங்கை அழித்தவனே* 
    அலை கடலைக் கடைந்து*  அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே* 

    கலை வலவர்தாம் வாழும்*  கணபுரத்து என் கருமணியே* 
    சிலை வலவா சேவகனே*  சீராமா தாலேலோ


    தளை அவிழும் நறுங் குஞ்சித்*  தயரதன்தன் குல மதலாய்* 
    வளைய ஒரு சிலையதனால்*  மதில்-இலங்கை அழித்தவனே* 

    களை கழுநீர் மருங்கு அலரும்*  கணபுரத்து என் கருமணியே* 
    இளையவர்கட்கு அருள் உடையாய்*  இராகவனே தாலேலோ


    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் படைத்தவனே* 
    யாவரும் வந்து அடி வணங்க*  அரங்கநகர்த் துயின்றவனே* 

    காவிரி நல் நதி பாயும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஏ வரி வெஞ்சிலை வலவா*  இராகவனே தாலேலோ (2)


    கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் காகுத்தன்-
    தன் அடிமேல்*  தாலேலோ என்று உரைத்த*  தமிழ்மாலை* 

    கொல் நவிலும் வேல் வலவன்*  குடைக் குலசேகரன் சொன்ன* 
    பன்னிய நூல் பத்தும் வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)


    வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த*  மன்னன் ஆவான்-
    நின்றாயை*  அரியணை மேல் இருந்தாயை*  நெடுங் கானம் படரப் போகு- 

    என்றாள் எம் இராமாவோ*  உனைப் பயந்த*  கைகேசி தன் சொற் கேட்டு* 
    நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)



    வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு*  இருநிலத்தை வேண்டாதே, விரைந்து*  வென்றி- 
    மைவாய களிறொழிந்து தேரொழிந்து*  மாவொழிந்து வனமே மேவி* 

    நெய்வாய வேல் நெடுங்கண்*  நேரிழையும் இளங்கோவும் பின்பு போக* 
    எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ*  எம்பெருமான் என் செய்கேனே   


    கொல் அணை வேல் வரி நெடுங் கண்*  கௌசலைதன் குல மதலாய் குனி வில் ஏந்தும்* 
    மல் அணைந்த வரைத் தோளா*  வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்* 

    மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்*  வியன் கான மரத்தின் நீழற்*
    கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ*  காகுத்தா கரிய கோவே


    வா போகு வா இன்னம் வந்து*  ஒருகாற் கண்டுபோ மலராள் கூந்தல்* 
    வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா*  விடையோன்தன் வில்லைச் செற்றாய்*

    மா போகு நெடுங் கானம்*  வல்வினையேன் மனம் உருக்கும் மகனே*  இன்று- 
    நீ போக என் நெஞ்சம்*  இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே  


    பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய*  மெல்லடிகள் குருதி சோர* 
    விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப*  வெம் பசிநோய் கூர*  இன்று- 

    பெரும்பாவியேன் மகனே போகின்றாய்*  கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற* 
    அரும்பாவி சொற் கேட்ட*  அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே


    அம்மா என்று உகந்து அழைக்கும்*  ஆர்வச்சொல் கேளாதே அணி சேர் மார்வம்* 
    என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே*  முழுசாதே மோவாது உச்சி* 

    கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்*  கமலம் போல் முகமும் காணாது* 
    எம்மானை என் மகனை இழந்திட்ட*  இழிதகையேன் இருக்கின்றேனே


    பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து*  பூந் துகில் சேர் அல்குற்* 
    காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது*  அங்கங்கள் அழகு மாறி*

    ஏமரு தோள் என் புதல்வன்*  யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல்* 
    தூ மறையீர் இது தகவோ*  சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே             
     


    பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்*  தம்பியையும் பூவை போலும்* 
    மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்*  மருகியையும் வனத்திற் போக்கி* 

    நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு*  என்னையும் நீள் வானில் போக்க* 
    என் பெற்றாய்? கைகேசி*  இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே    


    முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி*  அவன்தவத்தை முற்றும் செற்றாய்* 
    உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும்*  ஒன்றாகக் கொள்ளாது* 

    என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டு*  வனம் புக்க எந்தாய்* 
    நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்*  ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! 


    தேன் நகு மா மலர்க் கூந்தற்*  கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ* 
    கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட*  கொடியவள்தன் சொற்கொண்டு இன்று* 

    கானகமே மிக விரும்பி நீ துறந்த* வளநகரைத் துறந்து*  நானும்- 
    வானகமே மிக விரும்பிப் போகின்றேன்*  மனு-குலத்தார் தங்கள் கோவே 


    ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்*  வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்* 
    தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய* அப் புலம்பல்தன்னை* 

    கூர் ஆர்ந்த வேல் வலவன்*  கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த* 
    சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்*  தீ நெறிக்கண் செல்லார் தாமே (2)


    அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 
    வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்* 


    செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)       



    வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி* 
    மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்* 

    செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* 
    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.  


    செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*  
    வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*

    தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
    எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*


    தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்* 
    பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து* 

    சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே   


    வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
    கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*

    சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
    தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.


    தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
    வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*

    சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே* 


    குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி* 
    எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*

    திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*


    அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்* 
    தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்* 
     

    செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*


    செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த 
    நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் 
     

    திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
    உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே 


    அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
    வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி* 

    சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*  


    தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* 
    எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* 
     

    கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* 
    நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*