பிரபந்த தனியன்கள்

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் 
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
 
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் 
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
 
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் 
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
 
கிழியறுத்தானென்றுரைத்தோம்,கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து 
 
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று 
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய 
 
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் 
பாதங்கள்யாமுடையபற்று.

   பாசுரங்கள்


    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு*
    பலகோடி நூறாயிரம்*

    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*   உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு (2)


    அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
    விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 

    வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
    படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே 


    வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்*  வந்து மண்ணும் மணமும் கொண்மின்* 
    கூழாட்பட்டு நின்றீர்களை*  எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்*

    ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்*  இராக்கதர் வாழ்*  இலங்கை 
    பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே


    ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து*  எங்கள் குழாம்புகுந்து*
    கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி*  வந்துஒல்லைக் கூடுமினோ*

    நாடும் நகரமும் நன்கறிய*  நமோ நாராய ணாயவென்று*
    பாடு மனமுடைப் பத்தருள்ளீர்*  வ‌ந்து பல்லாண்டு கூறுமினே


    அண்டக் குலத்துக்கு அதிபதி*  ஆகி அசுரர் இராக்கதரை* 
    இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த*  இருடிகேசன் தனக்கு* 

    தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது*  ஆயிர நாமம் சொல்லிப்* 
    பண்டைக் குலத்தைத் தவிர்ந்து*  பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே  


    எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்*  ஏழ்படிகால் தொடங்கி*
    வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்*  திரு வோணத் திருவிழவில் 

    அந்தியம் போதில் அரியுரு ஆகி*  அரியை அழித்தவனைப்* 
    பந்தனை தீரப் பல்லாண்டு*  பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே 


    தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி*  திகழ் திருச்சக்கரத்தின்*
    கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று*   குடிகுடி ஆட்செய்கின்றோம்*

    மாயப் பொருபடை வாணனை*  ஆயிரந் தோளும் பொழி குருதி 
    பாயச்*  சுழற்றிய ஆழி வல்லானுக்குப்*   பல்லாண்டு கூறுதுமே 


    நெய்யிடை நல்லதோர் சோறும்*  நியதமும் அத்தாணிச் சேவகமும்* 
    கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு*  காதுக்குக் குண்டலமும்* 

    மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து*  என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல* 
    பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்*  பல்லாண்டு கூறுவனே    


    உடுத்துக்*  களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு* 
    தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன*  சூடும் இத்தொண்டர்களோம்*

    விடுத்த திசைக் கருமம் திருத்தித்*  திருவோணத் திருவிழவில்* 
    படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே       


    எந்நாள் எம்பெருமான்*  உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
    அந்நாளே*  அடியோங்கள் அடிக்குடில்*  வீடுபெற்று உய்ந்தது காண்* 

    செந்நாள் தோற்றித்*  திரு மதுரையிற் சிலை குனித்து*  ஐந்தலைய 
    பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே*  உன்னைப் பல்லாண்டு கூறுதுமே


    அல்வழக்கு ஒன்றும் இல்லா*  அணி கோட்டியர் கோன்*  அபிமானதுங்கன்
    செல்வனைப் போல*  திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்

    நல் வகையால் நமோ நாராயணா என்று*  நாமம் பல பரவி* 
    பல் வகையாலும் பவித்திரனே*  உன்னைப் பல்லாண்டு கூறுவனே  (2)


    பல்லாண்டு என்று பவித்திரனைப்*  பர மேட்டியைச்*  சார்ங்கம் என்னும்
    வில் ஆண்டான் தன்னை*  வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்*

    நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்*  நமோ நாராயணாய என்று*
    பல்லாண்டும் பரமாத்மனைச்*  சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே  (2)