திரு அரிமேய விண்ணகரம்

புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு. அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று

அமைவிடம்

அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்,
சீர்காழி,
Phone Numbers: Ph: +91- 4365-245 350,

தாயார் : ஸ்ரீ அம்ருதகட வல்லி
மூலவர் : குடமாடுகூத்தன்
உட்சவர்: சதுர்புஜங்களுடன் கோபாலன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: குடமூடக்கூத்தன் பெருமாள் ,ஸ்ரீ அம்ருதகட வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  1238.   
  திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
  இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
  பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
  அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)

      விளக்கம்  


  • அருவிடங்கள் உருவமற்ற வஸ்துவானது ‘அரு’ எனப்படும்; எனவே ஆகாசத்தைக் சொன்னதாயிற்று. அரிமேய விண்ணகரம் ஹரித் ஹரதி பாபாநி என்கிறபடியே அடியவர்களின் பாபங்களைப் போக்குவதனாலே ஹரியெனப்படுகிற எம்பெருமான் நித்யவானம் பண்ணப்பெற்ற திவ்விய தலம் என்கை.


  1239.   
  வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்*  விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று* 
  குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்*  குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
  என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*  ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்* 
  அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

      விளக்கம்    1240.   
  உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்*  உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்* 
  கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து*  கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
  மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட*  பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் 
  அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!    

      விளக்கம்  


  • எங்குப் பார்த்தாலும் புன்னைமரங்கள் மொக்கும் மலருமாய்க் காண்கையாலே, மொக்கும் முத்துக்கள் போலவும் மலர்கள் பொன்போலவும் விளங்கப்பெற்று, தேனைச் சொரியா நிற்கும் பலாமரங்கள் நிறைந்திருக்கப் பெற்று, அழகிற் சிறந்த மாதர்கள் மகிழ்ந்து வாழப்பெற்றதான திருநாங்கூரிலுள்ளது இத்தலம் - குஞ்சி - ஆண்மயிர்.


  1241.   
  ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு*  அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி* 
  வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு*  அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
  சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை*  செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே* 
  ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே! 

      விளக்கம்    1242.   
  கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*  களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு* 
  அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்*  அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
  அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்*  அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்* 
  அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

      விளக்கம்    1243.   
  வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*  இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்* 
  தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
  சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை*  செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்* 
  வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

      விளக்கம்  


  • திருநாங்கூர் ஸமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோதமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்துசேரும் அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன வேன்சு ‘செந்லொடு மடுத்தரிய” என்ற விடத்து. செந்நெலொடு மடுத்து என்றும் செந்நெலொடும் அடுத்து என்றும் பிரிப்பர்.


  1244.   
  தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*  தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்* 
  காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்*  கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
  நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*  ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
  அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

      விளக்கம்    1245.   
  கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை*  காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* 
  குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்*  குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
  துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*  தூமறையோர்  தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை* 
  அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

      விளக்கம்    1246.   
  வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு*  வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
  வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை*  கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*
  மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து*  வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி* 
  அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     

      விளக்கம்    1247.   
  சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
  அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
  கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
  ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)    

      விளக்கம்  


  • இப்பாசுரத்தில் “ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடு மொன்று மிவை” என்றது ஸாபிப்ராயம் அதாவது - க்ருஷ்ணவதார சேஷ்டிதங்களைச் சொல்லுகின்ற பாசுதரங்கள் ஐந்தும், நரஸிம்ஹாவதாரம் வாமநாவதாரம், ராமாவதாரம் ஆகிய மூன்றவதாங்களைப் பற்றிப் பேசுகின்ற பாசுரங்கள் மூன்றும் அர்ச்சாவதாரபரமான முதற்பாட்டு ஒன்றும், பயனுரைத்த ஈற்றுப்பாட்டு ஒன்றும் ஆகப் பத்துப்பாட்டு ரங்களென்கை, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாசுதரங்கள் கிருஷ்ணவதார விஷயங்கள் நான்கு ஐந்து ஆறாம் பாசுரங்கள், முறையே, நரஸிம்ஹ வாமந ராமாவதார விஷயங்கள்.