உபதேசரத்தினமாலை
எமது ஸ்வாமியான திருவாய்மொழிப்பிள்ளையின் விசேஷ கடாக்ஷத்தாலே எனக்கு கிடைத்த உபதேச வரலாற்றை சிந்தித்து, எனக்குப் பிற்பட்டவர்களும் அப்யஸிக்கும்படியாய், நிலைபெற்ற சிறப்புடைய வெண்பா என்னும் பாட்டில், இந்த விசேஷார்த்தங்களை உபதேசமாய் அமைத்து சொல்லுகின்றேன்.
கல்வி அறிவுடையோர் இந்த உபதேசங்களை கேட்டு சந்தோஷிப்பார்கள். கல்வி பயிலுவதில் ஆசையுடையவர்கள் இந்த உபதேசங்களை கற்கப் பெற்றோமே என்று சந்தோஷப்பட்டு பின்பு இதை அப்யஸிப்பார்கள். மற்றோர்கள் (அந்நியர்கள்) பொறாமைக் கொண்டு நம்மிடம் தோஷம் சொல்லுவார்களே யானால் நமக்கு என்னக் குறை வந்துவிட போகிறது? அப்பேற்பட்ட அஸுர ப்ரக்ருதிகள் தோஷம் சொல்லுவதில் நமக்கென்ன ஆச்சர்யம்?
ஆழ்வார்கள் வாழ்வார்களாக! அவர்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்கள் வாழ்வனவாக! எந்தத் தாழ்வும் இல்லாத பூர்வாசார்யர்கள் வாழ்வார்களாக! ஏழுலகில் உள்ளவர்க ளெல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக அந்த பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த வியாக்யான ரஹஸ்யங்கள் செவ்வையான (accurate) வேதத்துடனே கூடியிருந்து வாழ்வனவாக!
இந்த பாட்டின் மூலம் பொய்கையாழ்வார் தொடங்கி ஆழ்வார்களின் அவதார க்ரமங்களை மாமுநிகள் அருளிச் செய்கிறார். முதலில், வருத்தும் ஸம்ஸார பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்க அவதரித்த பொய்கையாழ்வார், ஞானச்சுடர் விளக்கை ஏற்றிய பூதத்தாழ்வார் மற்றும் லோக யாத்திரையில் இச்சயில்லாமல் இருந்த பேயாழ்வாரை ஆச்ரயிக்கிறார். அதற்கு பிறகு, கீர்த்தியையுடைய திருமழிசை ஆழ்வார், சேரர் குளத்தில் உதித்த குலசேகர ஆழ்வார், சர்வகாலமும் சர்வேஸ்வரனுக்கு மங்களாசாசனம் செய்தபடி இருக்கும் பெரியாழ்வார், பாகவதர்களின் ஸ்ரீ பாதமே உய்ய வழி என்றிருந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், “அடியார்க்கென்னை ஆட்படுத்தியவன்” என்று நைச்யாநுஸந்தானத்தில் ஊன்றியிருந்த திருப்பாணாழ்வார் மற்றும் ஆழ்வார்களின் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகம் என்றெண்ணி இருந்த திருமங்கை ஆழ்வாரை ஆச்ரயிக்கிறார்
அம் தமிழால் நல்கலைகள், ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள், இந்த உலகில் இருள்நீங்க, வந்து உதி்த்த, மாதங்கள் நாள்கள்தமை, மண்ணுலகோர் தாம் அறிய, ஈது என்று, யாம் சொல்லுவோம்.
இந்த உலகத்தில் உள்ளவர்களே! எந்த உலகத்தளவிலும் போற்றக்கூடிய வைபவத்துடைய பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் தேஜஸுடனே தோன்றிய அவதாரங்களாலே, ஐப்பசி மாதத்து திருவோணம், அவிட்டம் மற்றும் சதயமுமாகிய திருநக்ஷத்திரங்களுக்கு ஈடொன்றும் இல்லை என்று அறிந்துகொள்ளுங்கள்!
மற்றை (ஏழு) ஆழ்வார்களுக்கு முன்னே இந்த பூமியில் வந்து அவதரித்து, நல்ல தமிழ் பாஷையிலே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதி என்னும் திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்து, நாட்டிலுள்ளவரை உஜ்ஜீவிக்கும்படி செய்த பெருமை உடையவர்களான இவர்களுக்கு, "முதலாழ்வார்கள்" என்கிற திருநாமம் வழங்கப்பட்டு நிலைபெற்றது.
அறிவில்லாத மனமே! இந்த தினத்தின் வைபவத்தை நீ அறியவில்லையோ? இந்த தினத்துக்கு என்ன வைபவம் என்று கேட்பாயானால் உனக்கு சொல்லுகின்றேன். பொருந்திய வைபவத்துடைய திருமங்கையாழ்வார் இந்தப் பெரிய உலகத்தில் அவதாரம் செய்தருளின திருநாள் கார்த்திகை மாசம் கார்த்திகை நக்ஷத்திரம் என்று நீ தெரிந்துகொள்.
நம்மாழ்வார் அருளிச்செய்த த்ராவிட வேதங்களுக்கு (திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம் மற்றும் திருவாய்மொழி) ஆறு அங்கங்களாய் திகழும் ப்ரபந்தங்களை (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்) அருளிச்செய்ய அவதரித்த திருமங்கையாழ்வார் பிறந்த இந்த பெருமையுடைய கார்த்திகை மாத, க்ருத்திக்கா நக்ஷத்திரத்தை விரும்புவர்களுடைய தாமரை போன்ற திருவடிகளை மனமே வாழ்த்துவாயாக!
இந்த பூமியில் உள்ளவர்களே! தகுந்த வைபவத்துடைய திருப்பாணாழ்வார் வந்து அவதரித்ததனாலே, ஆர்த்தியுடையவர்கள் இச்சையுடனே அமலனாதிபிரான் என்ற ப்ரபந்தத்தை அப்யஸித்து, அதன்பின் நன்மையுடன் கொண்டாடக்கூடிய நாளாகிய இன்றையதினம் கார்த்திகை மாசம் ரோகினி நக்ஷத்திரம் என்று கண்டுக்கொள்ளுங்கள்!
இவ்வுலகத்தில் உள்ளவர்களே! இன்றைய தினம், நிலைபெற்ற வைபவத்துடைய மார்கழி மாத கேட்டை நக்ஷத்திரமாகும். இந்த நாளுக்கு என்ன சிறப்பு என்று கேட்பீர்களானால் சொல்லுகின்றேன். பொருந்திய சிறப்புடைய ப்ராஹ்மணோத்தமராண தொண்டரடிப்பொடியாழ்வார் அவதாரத்தாலே இது நான்கு வேதம் அறிந்தவர்கள் கொண்டாடக்கூடிய நாளாகு
இந்த பூமியில் உள்ளவர்களே! இன்றைய தினம் தை மாத, மகம் நக்ஷத்திரமாகும். இந்த தினத்தின் வைபவத்தை உங்களுக்கு சொல்லுகின்றேன், கேளீர்! பரிசுத்தமான ஜ்ஞானமுடைய திருமழிசையாழ்வார் இந்த பூமியில் இந்நாளில் அவதாரம் செய்ததினால் இது நல்ல தவத்தையுடையவர்கள் புகழ்ந்து போற்றும் நாளாகும்.
இந்த பூலோகத்தில் உள்ளவர்களே! இன்றைய தினம் மாசி மாதத்தில் புனர்பூசம் நக்ஷத்திரம் என்று கண்டு கொள்ளுங்கள். இந்த தினத்துக்கு பெரும் மதிப்பு என்னவென்று உங்களுக்கு சொல்லுகின்றேன். அதாவது, கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான குலசேகர ஆழ்வாருடைய அவதாரத்தினாலே, பெரியோர்கள் கொண்டாடக்கூடிய நாளாகும்.
அழகு பொருந்திய வைகாசி மாத, விசாக நக்ஷத்திரத்தின் வைபவத்தை பூமியில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும்படி சொல்லுகின்றேன். இந்த தினம், வைபவம் நிறைந்திருக்கும் வேதங்களை தமிழ் பாஷையில் அருளிச் செய்த மெய்ம்மை உடையவரான, அழகிய திருக்குருகூருக்கு நாயகரான நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருளின நாளாகும்.
வைகாசி மாச விசாக நக்ஷத்திரத்திற்கு சமமாக ஒரு தினமாவது உண்டோ? நம்மாழ்வாருக்கு சமமாக யாதாம் ஒருவர் உண்டோ? திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு சமமான ப்ரபந்தம் ஒன்று இப்புவியில் உண்டோ? இந்த பூமியில், தென் திசையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு சமமாக யாதானும் ஒரு ஊர் உண்டோ? (இல்லையென்றபடி).
அறிவில்லாத மனமே! இன்றைய தினத்தின் வைபவத்தை நீ அறியவில்லையா? இன்றைய தினத்துக்கு என்ன வைபவம் என்று கேட்பாயானால் உனக்கு சொல்லுகின்றேன்! இன்று நன்மையை கொண்டிருக்கிற திருப்பல்லாண்டை பாடியருளிய பெரியாழ்வார் வந்து அவதரித்த ஆனி மாத சோதி (ஸ்வாதி) நக்ஷத்திரமாகும்
மனமே! இந்த பெரிய பூமியிலே, முன்பொரு காலத்தில், நம்முடைய பெரியாழ்வார் வந்து அவதரித்தருளின ஆனி மாத ஸ்வாதி நக்ஷத்திரத்தின் ஏற்றம் அறிந்த ஞானியர்களுக்கு சமமாக யாருமில்லை என்று எப்பொழுதும் சிந்தை செய்து இருப்பாயாக!
எம்பெருமானிடம் பக்தி அனுஷ்டிப்பதில் மற்றுள்ள ஆழ்வார்களை மிஞ்சும் அளவுக்கு ப்ரீத்தி கொண்டிருந்ததாலே, ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்தவரான பட்டர்பிரான் ஆனவர் "பெரியாழ்வார்" என்கிற திருநாமத்தைப் பெற்றார்.
தோஷமில்லாத ப்ரமாணமாய் திகழும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கெல்லாம் முதன்மையாக இருக்கும் திருப்பல்லாண்டு, வேதங்கள் ஓதும் முன் உச்சரிக்கப்படும் ப்ரணவம் போலே, மற்றுள்ள திவ்ய ப்ரபந்தங்களுக்கெல்லாம் சங்ரஹமாகவும் (சாராம்சமாகவும்) மங்களகரமான தொடக்கமாகவும் திகழ்கிறது.
திருப்பல்லாண்டுக்கு சமமாக ஒரு ப்ரபந்தம்தான் உண்டோ? பெரியாழ்வாருக்கு சமமாக இப்புவியில் ஒருவர் உண்டோ? சிறுபிள்ளைதனமுடைய நெஞ்சே! ஈரத் தமிழாலே ப்ரபந்தங்கள் அருளிச் செய்த ஆழ்வார்களிடத்தில் தனித் தன்மையுடைய பெரியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்களை நீ வாசித்து, விவேகித்து பார்ப்பாயாக!
பெரியாழ்வாருடைய திருமகளாரான சூடிக்கொடுத்த நாச்சியாரும், மதுரகவி ஆழ்வாரும், ஸ்ரீ பாஷ்யகாரரு மாகிய இம்மூவரும், இவ்வுலகத்தில் உள்ளவர்கள் உஜ்ஜீவிப்பதர்க்காக வந்து அவதரித்தருளின மாசங்களையும், திருநக்ஷத்திரங்களையும் அவற்றின் வைபவங்களையும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு நாம் சொல்லக்கடவோம்.
இந்த அழகிய ஆடி மாதத்து பூர நக்ஷத்திரத்தில் ஆண்டாள் அவதரித்தருளியது எங்களுக்காக வன்றோ? சர்வ லோகங்களுக்கும் தாயானவளான பூமிப்பிராட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் கிட்டும் எல்லையில்லா அனுபவத்தை விட்டுவிட்டு, பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நம் உஜ்ஜீவனத்திற்காகவன்றோ அவதரித்தருளினாள்?
பெரியாழ்வாருடைய திருக்குமாரத்தியாக ஆண்டாள் அவதரித்தருளின அழகிய ஆடி மாத பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு உண்டோ? மனமே, நீ விசாரித்து கண்டுக்கொள்! ஆண்டாளின் வைபவ செருக்குக்கு சமமாக ஒருவர் உண்டென்றால் இந்த நாளுக்கும் சமமாக ஒரு நாள் இருக்கக்கூடும். (இல்லையென்றபடி).
ஆழ்வார்களின் பிரபன்ன குலத்திற்கு குலமகளாக அவதரித்த கோதை, தன் இளமை பருவத்திலிருந்தே ஞான-பக்தி-வைராக்யத்தில் விசேஷித்து நிலைபெற்றிருக்கும் ஸ்வாபாவம் உடையவளாய் திகழ்ந்தாள். அவ்வாண்டாளை மனமே பக்தியுடன் என்றும் துதிப்பாயாக!
அழகு பொருந்திய மதுரகவியாழ்வார் இந்த உலகத்தில் வந்து அவதரித்தருளின சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரமானது, பூமியில் மற்றவர்களாயுள்ள பதினோரு ஆழ்வார்கள் அவதரித்த திருநக்ஷத்திரங்களை காட்டிலும், நம் ஸ்வரூபத்துக்கு மிகவும் சேர்ந்தது என்று மனமே நீ அறிந்துக்கொள். பின் குறிப்பு: "உற்றதும் உன் அடியார்க்கடிமை என்னும்படி, சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வமே நம்முடைய ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிற ஜ்ஞானத்தை மதுரகவியாரின் நிஷ்டையைக் கொண்டு நிலையாகப் உணரப்பெற்றோம்" என்று தன் மனது அறிந்துக்கொள்ளும்படி உபதேசிக்கிறார் மாமுனிகள். வேதத்தின் உட்பொருள் = பாகவத சேஷத்வம் = அடியார்க்கடிமை
ஸம்ஸார நிவர்த்தகமாக திகழும் திருமந்திரத்தின் மத்திய பதத்தை ஒத்திருக்கும் வைபவத்துடைய கண்ணிநுண் சிறுத்தாம்பின் தாத்பர்யத்தை யறிந்துக் கொண்டு, நம் பூர்வாசார்யர்கள், இந்த ப்ரபந்தத்தை, மற்றை ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களுக்கு மத்தியிலே சேரும்படி செய்தார்கள். பின் குறிப்பு: திருமந்திரத்தின் மத்தியப் பதமாகிய நம: பதம், சப்த பூர்த்தி (completeness) மற்றும் அர்த்த பூர்த்தி (conciseness) யாகிய லக்ஷணங்களை உடையதாக திகழ்கிறது. இந்த நம: பதத்தில், ஜீவாத்மாக்களின் ஸ்வரூபமாகிய பாகவத சேஷத்வம் சொல்லப்பட்டிருப்பதாகவும், இவ்வர்த்தம் முறையே கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தில் பிரதிபாதிக்கப் பட்டிருப்பதாகவும் நம் புர்வாசார்யர்கள் நிர்வஹித்துள்ளார்கள். இப்படி நம் ஸ்வரூபத்திற்கு அநுரூபமாய் (befitting) திகழும் திருமந்திரத்தின் மத்தியப் பதம், நம்முடைய ஸ்வரூப, உபாய, புருஷார்த்தத்தின் விரோதிகளை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது. மேலும், இந்த மத்தியப் பதமானது நமக்கும் எம்பெருமானுக்கும் உள்ள சம்பந்தத்தையும் (பாரதந்த்ரியத்தை) நன்கு உணர்த்துகிறது
இந்த உலகத்தில் உள்ளவர்களே! இன்றைய தினம் சித்திரை மாதத்தில் பொருந்திய திருவாதிரை நக்ஷத்திரமாகும். எந்த தினத்தை காட்டிலும் இந்த தினத்துக்கு என்ன வைபவம் என்று கேட்பவருக்கு சொல்லுகின்றேன் கேளுங்கள்! எம்பெருமானாருடைய திருவவதாரத்தாலே இது நான்கு திக்கில் உள்ளவர்களும் கொண்டாடக்கூடிய நாளாகும்!
இந்த பூமியில் உள்ளவர்களே! ஆழ்வார்கள் திருவவதாரம் செய்த திருநக்ஷத்திரங்களைக் காட்டிலும் நாம் உஜ்ஜீவிக்கும்படியாக பல நற்கலைகள் செய்த எதிராசர் திருவவதாரம் செய்த சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்திரம் செம்மையான திருநாளாகும்.
எமது ஸ்வாமியான எதிராசர் இந்த உலகத்தில் எங்களுக்காக வந்து அவதரித்தருளின திருநக்ஷத்திரம் என்று சொல்லும் ஏற்றத்தினாலே, இந்த திருவாதிரை நக்ஷத்திரத்தின் வைபவத்தை, மனமே! நீ தவறாமல் எக்காலத்திலும் அறிந்துக்கொள். பின் குறிப்பு: இது வரை ஆழ்வார் வைபவம் பேசும் பொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தின் திருநக்ஷத்திர வைபவத்தை மட்டுமே மாமுனிகள் கொண்டாடினார். ஆனால் நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஸ்தாபகர் என்கிற அடிப்படையில், எம்பெருமானாரின் ஜன்ம திருநக்ஷத்திரத்திற்கே ஏற்றம் என்று இவ்விடம் மாமுனிகள் சாதிக்கிறார். எனவே, எதிராசரின் வைபவத்தை கொண்டாட நமக்கு ஆண்டுக்கு பன்னிரண்டு நாட்கள் கிடைப்பதாகக் கொள்ளலாம்.
எண்ணுவதற்கரிய வைபவத்துடைய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னுமிவர்கள் இந்த உலகத்தில் அவதரித்தருளின நகரங்களானவை வளம் நிறைந்த திருகச்சியும், திருகடல்மல்லையும், சிறந்த திருமயிலையும் ஆகும். வைபவத்துடைய திருமங்கையாழ்வார் அவதரித்தருளின நகரமானது மண்ணி ஆற்றின் நீர் ஜலம் நிறைந்திருக்கும் திருக்குறையலூர். திருப்பாணாழ்வார் அவதரித்தருளின நகரமானது திருவுறையூராகும்.
இந்த பூமியில், தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த நகரமானது, பழமையான வைபவம் கூடியிருக்கும் திருமண்டங்குடி நகரம் என்று பெரியவர் சொல்லுவர். எட்டு திக்கில் உள்ளவர்களும் துதிக்கும் குலசேகர ஆழ்வார் அவதரித்த நகரமானது, ஸ்வரூப அனுரூபமான அழகைக் கொண்ட வஞ்சிக்களம் என்னும் நகரம் என்று பெரியோர் சொல்வார்கள்.
திருமழிசை பிரானும், அழகிய நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும் சேர்ந்து அவதரித்த நகரங்களினுடைய விவரமானது, உலகத்தில் நல்லதான ஆசார்ய அபிமான நிஷ்டையில் இருப்போர் கூடியிருந்துள்ள நிலைபெற்ற திருமழிசையும், மாடங்களுடைய திருக்குருகூரும், பிரகாசிக்கும் வைபவத்துடைய ஸ்ரீவில்லிபுத்தூரும் ஆகும்.
வைபவம் பொருந்திய வில்லிபுத்தூர், செல்வ-ஸம்பத்தையுடைய திருக்கோளூர், அழகு நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் எனப்படும் இந்த தேசங்கள், பூமியில் ஜ்ஞானம் விசேஷித்து இருக்கும் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் எம்பெருமானார் அவதரித்தருளின நகரங்களாகும்.
ஆழ்வார்களுடைய வைபவமும், அவர்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களின் வைபவமும், தாழ்வு யாதொன்றும் இல்லாமல் அந்த திவ்யப் பிரபந்தங்களை வளர்த்த பூர்வாசார்யர்களையும், ஏழுலகும் உஜ்ஜீவிக்கும்படி அந்த பூர்வாசார்யர்கள் செய்த வ்யாக்யானங்களையும், பொருந்தும்படி இந்த பூமியில் உள்ளவர்களுக்கு (நாம்) சொல்லக்கடவோம்.
பதின்மரான ஆழ்வார்களையும், அவர்கள் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களையும், தாழ்வாக எண்ணுபவர்கள் நரகத்தில் விழுபவர்கள் என்றெண்ணி, மனமே, நீ எந்தக் காலத்திலும் அவர்கள் இருக்குமிடத்தில் போவதற்கு வெட்கப்படுவாயாக!
திவ்ய ஜ்ஞானம் கொண்ட ஆழ்வார்களுடைய வைபவத்தை அறியுமவர்கள் யார்? அவர்கள் அருளிச் செய்த திவ்ய ப்ரபந்தங்களின் வைபவத்தை அறியுமவர்கள் யார்? ஆழ்வார்களுடைய திருவருளை பெற்ற ஸ்ரீமன் நாதமுனிகள் முதலான நம்முடைய ஆசார்யர்களை அல்லாமல் ஆழ்வார்களின் வைபவத்தையும், அருளிச்செயல்களின் வைபவத்தையும் அறிந்தவர்கள் வேறு யாரேனும் உண்டோ? அறிவில்லாத மனமே! இதை நீ ஆராய்ந்து சொல்லுவாயாக.
நம் பூர்வாசார்யர்கள் ஒரு புருஷ க்ரமமாக (ஒருவருக்கு பின் ஒருவராக) அருளிச்செயல்களின் தாத்பர்யமான ப்ரபத்யர்த்தத்தை உபதேசித்துக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு நடந்து வந்த க்ரமத்தை, தன் நிரவதிக க்ருபையாலே, அழகு பொருந்திய எம்பெருமானார் நீக்கி அருளினார். அருளிச்செயல்களின் தாத்பர்ய அர்த்தங்களை விருப்பமுடையவர்களுக்கெல்லாம் கிட்டும்படி 74 முதளிகளை அமைத்து "ஆசாரியர்களே! நீங்கள் ஸர்வர்களுக்கும் உபதேசியுங்கள்" என்று ஓராண் வழியாக உபதேசிக்கும் வரம்பை நீக்கி அருளினார்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை எம்பெருமானார் மொய்ம்பால் வளர்த்து வ்ருத்தி செய்ததை இந்த பூமியில் உள்ளவர்களும் அறிந்துக் கொள்ளும்படியாக இந்த சம்ப்ரதாயத்திற்கு "எம்பெருமானார் தரிசனம்" என்று ஸ்ரீரங்கத்து எம்பெருமானான நம்பெருமாளே திருநாமமிட்டு ஸ்தாபித்து வைத்தார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளானும், நஞ்சீயரும், பெரியவாச்சான் பிள்ளையும், தெளிவையுடைய வடக்குத் திருவீதிப் பிள்ளையும், வாதிகேசரி அழகிய மணவாள ஜீயருமாகிய ஐவர், திருவாய்மொழி ப்ரபந்தத்தை தங்கள் வ்யாக்யானங்களாலே காத்தருளின மஹா குணமுடையவர்கள் என்று மனமே நீ சொல்லுவாயாக!
முற்படும்படியாகவே திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஐவரும் செய்தருளிய அந்த வ்யாக்யானங்கள் இல்லாவிட்டால், (ஐயோ!) திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை தெளிந்து சொல்லவல்லரான ஆசாரியரானோர் இந்தக் காலத்தில் யார் இருப்பார்கள்? மனமே இதை நீ புரிந்துக்கொண்டு சொல்லுவாயாக!
தெளிவு பொருந்திய ஞானத்தையுடைய திருக்குருகைப்பிரான் பிள்ளான், ஸ்ரீ பாஷ்யகாரருடைய விசேஷித்ததான கடாக்ஷத்தாலே, தமது திருவுள்ளத்தில் நிறைந்திருக்கும் பக்தியுடனே, நம்மாழ்வார் அருளிச்செய்த த்ராவிட வேதமான திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அக்காலத்திலேயே அருளிச்செய்தது இனிமை அதிகரிக்கும் ஆறாயிரப்படி வ்யாக்யானமாகும்.
தம்முடைய வைபவத்தை தத்வஞானம் உடையவர்கள் புகழக்கூடிய வேதாந்தியான நஞ்சீயரானவர், ஸ்ரீ பராசர பட்டருடைய நல்லருளாலே, குறையாத பக்தியுடனே, நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை ஆராய்ந்து அருளிச்செய்தது அழகிய ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானமாகும்.
நம்பிள்ளையானவர் தம்முடைய நல்ல க்ருபயாலே நியமநம் இட, அதன் பிற்பாடு பெரியவாச்சான் பிள்ளை, அந்த நியமநத்தாலே, இன்பமாக பகவத் கடாக்ஷத்தாலே வந்த, பக்தியுடைய, திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அருளிச்செய்தது இருபத்து நாலாயிரப்படி ஆகும்.
தெளிவாக நம்பிள்ளை அருளிச்செய்யும் மார்கத்தை, ஔதார்யமுடைய (genorosity) வடக்குத் திருவீதிப்பிள்ளை இந்த உலகத்தில்லுள்ளோர் அறிந்துக் கொள்ளும்படி திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை செவ்வையாக உரைத்தது ஈடு என்னும் முப்பத்து ஆறாயிரப்படி வ்யாக்யானமாகும்.
அன்புடனே வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் தமக்கு பிற்பட்டவர்களும் அப்யஸித்தறிந்து சொல்லுவதற்காக, தம்முடைய விசேஷித்ததான ஞானத்துடன் திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை சொல்லி யருளினது தோஷமில்லாத பன்னீராயிரப்படி வ்யாக்யானமாகும்.
பெரியவாச்சான்பிள்ளை மற்ற மூவாயிரத்துக்கும் (திருவாய்மொழி தவிர மற்றை 23 ப்ரபந்தங்களுக்கும்), யாவரும் தெரிந்துகொள்ளும்படி வ்யாக்யானங்களை செய்ததினாலே, ஆழ்வார்கள் அருளிச்செயல்களின் அர்த்த விசேஷங்களை பின்புள்ள ஆசார்யர்களால் அருளிச்செய்ய முடிந்தது.
நஞ்சீயரானவர் சில திவ்ய பிரபந்தங்களுக்கு மட்டுமே வ்யாக்யானங்கள் அருளிச்செய்தார். உயர்ந்த கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், பிள்ளை லோகாசார்யருடைய திருத் தம்பியாராகவும் திகழ்ந்த அழகிய மணவாள பெருமாள் நாயனாரும், வாதிகேஸரி அழகிய மணவாள சீயரும் சில அருளிச்செயல்களுக்கே வியாக்யானம் இட்டருளியிருக்கிறார்கள் . பின் குறிப்பு: நஞ்சீயர் கண்ணிநுண் சிருத்தாம்புக்கும் பெரிய திருமொழிக்கும் படி வ்யாக்யானம் சாதித்தருளினார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருப்பாவைக்கும், கண்ணிநுண் சிருத்தாம்புக்கும் வ்யாக்யானங்கள் அருளிச்செய்தார். வாதிகேசரி ஜீயர் திருவிருத்தம் ப்ரபந்தத்துக்கு ஸ்வாபதேச அர்த்தமும், திருவாய்மொழிக்கு பன்னீராயிரப்படி வ்யாக்யாநமும் அருளிச் செய்தார்.
வைபவமுடைய வடக்குத் திருவீதிப்பிள்ளை, தன்னுடைய ஆசார்யர் நம்பிள்ளையின் அனுக்ரஹத்தினாலே, விலக்ஷனம் பொருந்திய திருவாய்மொழியின் ஈடு என்னும் முப்பத்து ஆறாயிரப்படி வியாக்யானத்தை அருளிச்செய்து நம்பிள்ளையின் சந்நிதியிலே முன்பொரு காலம் சமர்ப்பித்தார். இந்த ஈட்டை நம்பிள்ளை திருக்கண் சாற்றி திருவீதிப்பிள்ளையிடம் "நமது காலத்தில் நம்முடைய அனுமதி இன்றி எழுதிய நம்முடைய க்ரந்தத்தை தாரும்" என்று வாங்கிக்கொண்டார். பின்பு, தம்முடைய திருவடியில் ஆச்ரயித்திருந்த ஈயுண்ணி மாதவர் என்கிற திருநாமம் உடையவருக்கு இந்த ஈட்டு வியாக்யானத்தை அநுஸந்திக்குமாறு கொடுத்தருளினார்.
ஈயுண்ணி மாதவப்பெருமாளுக்கு ப்ராப்யமான ஈடானது, தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை யளவும் சம்பிரதாயமாக வந்த படியை மாமுநிகள் இந்த பாட்டில் அருளிச்செய்கிறார்.
அவரவர்களின் வைபவ அதிசயத்தால் நம்பெருமாள், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை என்கின்ற அன்புடையவர்களுக்கு மேற்படி சொல்லப்பட்ட திருநாமங்கள் சாற்றப்பட்டது. என் நல்ல மனசே! நீ அந்த வைபவங்களை இப்போது எடுத்துச்சொல்லி துதிப்பாயாக!
பொருந்திய வைபவத்துடைய கந்தாடை தோழப்பர் தம்முடைய ஆசையினாலே "நீர் என்ன லோகாசார்யரோ?" என்று நம்பிள்ளையை நோக்கி கேட்டதினால், பிற்பட்ட காலத்தில் லோகாசார்யர் என்னும் திருநாமமானது நம்பிள்ளைக்கு வ்ருத்தி அடைந்து நீங்காமல் நிலைபெற்றது.
பிற்பாடு, நம்பிள்ளையின் சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளை, தமது ஆசார்யர் மீது கொண்டிருந்த அதீத ப்ரீத்தியாலே, அவரது "லோகாசார்யர்" என்கிற திருநாமத்தை விரும்பி, நிலைபெற்ற வைபவத்துடையவராய் திகழும் தம்முடைய ஆசார்யரின் பெயரை தமது திருக்குமாரர்க்கு சாற்றியபடியாலே, இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் க்ரமமாக வந்து இவ்வுலகத்தில் எவ்விடத்திலும் பரவியது.
இந்த பாட்டின் தொடர்ச்சியாக பிள்ளை லோகாசார்யருடைய வைபவத்தையும், அவராலே அருளிச்செய்யப்பட்ட "வகுளபூஷண சாஸ்திரசாரம்" என்று விளங்காநிற்கும், திருவாய்மொழியையும், மற்ற அருளிச்செயல்களினுடைய தாத்பர்ய அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக திகழும் ஸ்ரீவசந பூஷணத்தின் வைபவத்தை மாமுநிகள் அருளிச்செய்கிறார். முடும்பை என்னும் நகரத்துக்கு நிர்வாஹராய் விளங்கும் வைபவத்துடைய புருஷச்ரேஷ்டரான பிள்ளை லோகாசார்யர் தம்முடைய இனிமையான கிருபையாலே நமக்காக அருளிச்செய்த சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்தால், ஸ்ரீவசந பூஷண சாஸ்திரத்தின் வைபவத்துக்கு ஈடாக வேறொரு சாஸ்திரம் இல்லை. இவ்வாறு நான் (மாமுநிகள்) சொல்லும் வார்த்தை புகழ்ந்து சொல்லப்படுவதல்ல. இது சத்தியம்.
முற்காலத்தில், பிள்ளை லோகாசார்யர், பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த வசநங்களை விசேஷமாக ரத்னம் போலே சேர்த்து, அவ்வர்த்த விசேஷங்களை ஆசார்யரின் சன்னதியிலே சகலார்த்தங்களையும் கேட்டிருக்கிறவர்களுடைய ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக அமையும்படி செய்து வைத்தார். பிற்காலத்தில், அவரே வைபவமுடைய இந்த மஹா சாஸ்திரத்துக்கு, ஸ்ரீவசந பூஷணம் என்னும் திருநாமத்தை இட்டருளினார்.
என் மனமே! ஸ்ரீ வசநபூஷண மகாசாஸ்திரத்தின் கம்பீரமான அர்த்த விசேஷங்களை எல்லாம் அறிந்துக்கொள்ளுமவர்கள் யார் இருக்கிறார்கள்? அந்த சாஸ்திரம் சொல்லும் கிரமத்திலே அநுஷ்டிக்குமவர்கள் யார் இருக்கிறார்கள்? அதன் பொருளை அறிந்து அவ்வாறே அநுஷ்டிக்குமொருவர் எங்கேயும் இருப்பாரானால் இப்புவியில் மொத்தம் அவ்வளவு அதிகாரிகளே உள்ளார்கள் என்று அறிந்துகொள்! இவ்வாறு இருக்க ஸ்ரீவசன பூஷணத்தின் பொருளைத் தெளிவுற அறிந்து அநுஷ்டித்தல் எல்லாருக்கும் சாத்தியமாகுமோ? (இல்லை என்றபடி).
உஜ்ஜீவிக்கும்படியாக எண்ணமுடையவர்களே! உங்களுக்கு சொல்லுகின்றேன் கேளீர்! முற்காலத்தில் பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த செவ்வையான சாஸ்திரமான ஸ்ரீவசந பூஷணத்தின் கம்பீரமான அர்த்த விசேஷங்களை அப்யஸித்து, அப்படி கற்றதற்கு தகுந்ததான அநுஷ்டானத்திலே தெளிவுடனே நிற்பீர்களாக!
ஆசார்யர்களிடத்தில் கேட்ட செழுமையான அர்த்த விசேஷங்களை மனதில் தோஷம் நீங்கும்படி ஸ்திரப்படுத்தி, சிந்தை செய்து, பின்பதனை அநுஷ்டிக்க வல்லர்களான நீங்கள் ஸ்ரீவசந பூஷணத்தை அவஸ்யமாக கற்காதது ஏன்?
ஸத்ஸம்ப்ரதாயத்தில் சம்பந்தம் உடையவர்கள், ஸ்ரீவசந பூஷணத்துக்கு யாவரும் புகழும் வியாக்கியானம் ஒன்றிருந்து அதை ஈடுபட்டு கேட்டிருப்பார்களானால் அந்த வியாக்கியானத்தின் அர்த்த விசேஷங்களையும், ஸ்ரீவசந பூஷணம் கற்ற அறிவு உடையவர்களான நீங்கள் நடுநிலைமை கொண்ட மத்யஸ்தராய் அறிந்துகொள்வீர்களாக!
ஆரியர்களே! வைபவத்துடைய ஸ்ரீவசந பூஷண மகாசாஸ்திரத்தின் செவ்வையான அர்த்த விசேஷங்களை அறிந்தாலும், வாய் கொண்டு சொன்னாலும், எனக்கு எப்போதும் இனிமை விளைவிப்பதாக உள்ளது. ஐயோ! உங்களுக்கு எவ்வித இன்பம் உடையதாயிருக்கும்!
தன் ஆசார்யனுடைய திருவடிகள் இரண்டில் ப்ரீத்தி சிறிதும் இல்லாதவர்கள் கமலவாசினியான பெரிய பிராட்டிக்கு நாயகனாக திகழும் எம்பெருமானிடம் பக்தி செய்தாலும் மிகுதியான இன்பம் அளிக்கவல்ல பரமபதத்தை கொடுக்க எம்பெருமானுக்கு இச்சை இருக்காது. ஆதலால், ஆசார்ய ப்ரேமம் இல்லாதவர்கள் பரமபதத்தை அடைய மாட்டார்கள்.
இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! நமக்காக உபாயானுஷ்டானம் பண்ணி ரக்ஷிக்கவல்ல மகாபாகவதனான ஆசார்யனை ஆச்ரயித்தால், தேன் பொருந்திய தாமரைப் புஷ்பத்திலிருக்கும் பெரிய பிராட்டியின் நாயகனான எம்பெருமான் தானே ஸ்ரீவைகுண்டத்தை கொடுப்பான். இந்தப் பாசுரத்தில் “ஞானம்-அனுட்டானம்” என்பது ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் (பொருத்தமாய்) இருக்கும் உபாய-உபேய அறிவையும், அவ்வறிவுக்கு பொருந்தும் அனுஷ்டானத்தையும் குறிக்கும். "ஆசார்யனை அடைவது" என்பது தனக்கு பேறும், அப்பேற்றைப் பெற்றுத் தரும் ப்ராபகனும் அந்த ஆசார்யனே என்று தெளிந்து அவன் திருவடிகளில் சரணாகதி அனுஷ்டித்தலைக் குறிக்கும்
இந்த மகா ப்ருத்வியில் உள்ளவர்களே! ஒரு உண்மையை சொல்லுகிறேன் கேளீர்! உங்களுக்கு உஜ்ஜீவிக்க வேண்டும் என்கிற இச்சை உண்டாயிருக்குமானால் உங்கள் ஆசார்யர்களுடைய திருவடிகளில் அதிகப்படியான ச்நேஹத்தை செலுத்துங்கள். அவ்வாறு செய்தீர்களானால் படத்தையுடைய திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்த எம்பெருமானுடைய வைகுந்தமானது உங்களுக்கு கையிலே விளங்கும் நெல்லிக்கனிபோலே எளிதாகக் கிடைக்கும்.
தன்னுடைய ஆசார்யர் செய்த உபகாரமானது மனதில் தோன்றுமானால், அந்த உபகார ச்ம்ருதியாலே ஆசார்ய சஹவாசம் சித்திக்கும். அவ்வாறு ஒரு நிலை வந்த பின்பு அப்படி ஆசார்ய சேவைக்கு அசலான வேறு தேசத்தில் இருப்பது என்ன காரணமோ என்று நாம் அறிந்தோமில்லை.
சிஷ்யனானவன் தன்னுடைய ஆசார்யனுக்கு கைங்கர்யங்களை அவ்வாசார்யன் இவ்வுலகத்தில் இருக்கும் காலம் வரையில் செய்யக் கடமைப்பட்டவன். சாஸ்திர வசனங்களாலும், சதாசார உபதேசங்களாலும் அறிந்துக் கொண்ட இந்த நேர்ப்பாட்டை விருப்பமில்லாமல் விட்டுவிடுபவர்கள் யாரோ! என் மனமே, நீ இதை அறிந்து சொல்வாயாக!
ஆசார்யனானவன் தன் சிஷ்யனுடைய ஆத்ம வஸ்துவை ரக்ஷிப்பவன் ஆவான். தேஜஸ் பொருந்திய சிஷ்யனானவன் ஆசார்யனுடைய சிறப்புடைய திருமேனியை ப்ரீதியுடன் காப்பாற்றுமவன் ஆவான். இந்த சூக்ஷ்ம அறிவை (ஞானத்தை) கேட்டுவைத்தும், தெரிந்துவைத்தும் அந்த நேர்ப்பாட்டில் நிலைத்திருப்பது யாவருக்குமே அருமையேயாகும்.
என் நல்ல மனசே! பின்பழகராம் பெருமாள் ஜீயர், பெரிதாகிய பரமபதத்தில் ப்ரீதி இல்லாமல், விசேஷித்த பிரேமத்துடனே தம்முடைய ஆசார்யரான நம்பிள்ளைக்கு ஏற்ற கைங்கர்யங்களை செய்த அந்த நிஷ்டையை குறைவில்லாமல் எந்தக் காலத்திலும் நீ அறிந்துக்கொள்.
என் மனமே! பூர்வாசார்யர்கள் எல்லாரும் முற்காலத்திலே அனுஷ்டித்துக்காட்டின அனுஷ்டானங்களை அறிந்து கொள்ளாதவர்கள் சொல்லுகின்ற வார்த்தைகளைக் கேட்டு சலனமடையாமல் பூர்வாசார்யர்களுடைய ச்ரேஷ்டமான நிஷ்டையை அடைவாயாக!
மனமே! நாஸ்திகரும், நல்ல சாஸ்திரங்களில் சொல்லப்படும் நல்லதான மார்கத்திலே சேர்ந்திருக்கும் ஆஸ்திகரும், ஆஸ்திக-நாஸ்திகருமான இவர்களை நீ ஆராய்ந்து, முன்னே சொன்ன நாஸ்திகரையும், பின்னே சொன்ன ஆஸ்திக-நாஸ்திகரையும் மூரக்கத்தனம் உடையவர்கள் என்று நீக்கி, இடையில் சொன்ன ஆஸ்திகரை எப்பொழுதும் பின்பற்றுவாயாக.
நல்ல வாசனையுள்ள ஒரு பொருளை சேர்ந்திருப்பதொரு பொருளுக்கு நல்ல வாசனை உண்டாவதைப் போல், நல்ல குணம் உடையவர்களுடனே சேர்த்திகொண்டு இருப்போருக்கு அந்த சம்பந்தத்தினாலே அந்த நல்ல குணமே உண்டாகும்.
துர்கந்தம் உள்ள ஒரு பொருளை சேர்ந்திருப்பதொரு பொருளில் துர்கந்தம் வ்யாபிப்பதைப்போல், தீய குணமுடையவர்களுடனே சேர்ந்திருக்குமவர்களுக்கு சம்பந்தத்தினால் அந்த துர்குணமே உண்டாகும்.
பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த கிரமங்களை தவறாமல் பெரியோரிடத்தில் கேட்டு, பிற்பாடு ஆராய்ந்து பார்த்து, அந்தக் கிரமத்தை பிறர்க்குச் சொல்லாமல் தன்னுடைய மனசில் தோன்றியவற்றையே பிறர்க்குச் சொல்லி இப்படி சொன்னது சுத்தமான உபதேச வார்த்தை என்று சொல்லுபவர்கள் மூர்க்கத்தனம் உடையவர்கள் ஆவர்.
நல்ல ஞானத்தை உபதேசிக்கும் பெருமை பொருந்திய ஆசார்யனை நீங்கள் ஆச்ரயித்து, பூர்வாசார்யர்களுடைய ஞானத்தையும் அனுஷ்டானத்தையும் உள்ளபடியே சொல்லுமவர்களுடைய வார்த்தைகளை ஒப்புக்கொண்டு, அந்த ஞானத்தைக் கொண்டு இந்த பெரிய பூமியிலே இன்பத்தை அடைந்து வாழ்வீர்களாக!
இந்த உபதேச ரத்தினமாலையை தங்கள் மனதில் எப்பொழுதும் மனனம் பண்ணுமவர்கள், எமக்கு ஸ்வாமியான எம்பெருமானாருடைய இனிமையான க்ருபைக்கு எக்காலத்திலும் பாத்ரபூதராய் சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள்.
நிலைபெற்ற சேதனர்களே! இவ்வுலகத்திலே ஸ்ரீ மணவாள மாமுநிகளுடைய அழகிய திருவடிகளாகிய செந்தாமரை மலர்களைச் சிந்தித்து, அவை நமது தலைமேல் தீண்டப்பெற்றால், அமாநவ புருஷரும் நம்மை தமது ஸ்ரீஹஸ்தத்தாலே தீண்டுதல் வெறும் கடமையே ஆகும்.
1.
எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
விளக்கம் 

2.
கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னில் ஆசையுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தென் நெஞ்சே இகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு
விளக்கம் 

3.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து
விளக்கம் 

4.
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு
விளக்கம் 

5.
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோமி யாம்.

6.
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்

7.
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து

8.
பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண்

9.
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து

10.
கார்த்திகையில் ரோகினி நாள் காண்மினின்று காசினியீர்
வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதர்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்

11.
மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்

12.
தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்

13.
மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்
தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்

14.
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்

15.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்

16.
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்

17.
மாநிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும் - ஞானியருக்கு
ஒப்பொருவர் இல்லை இவ்வுலகுதனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்திரு

18.
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்
பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்

19.
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்களம் ஆதலால்

20.
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

21.
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசர் ஆமிவர்கள் - வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்

22.
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்

23.
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு

24.
அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து

25.
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்

26.
வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து

27.
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்
என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள்

28.
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை

29.
எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்

30.
எண்ண அரும் சீர் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை - மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணன் ஊர்

31.
தொண்டரடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மண்டங்குடி என்பார் மண்ணுலகில் - எண்டிசையும்
ஏத்தும் குலசேகரன் ஊர் என்று உரைப்பர்
வாய்த்த திருவஞ்சிக்களம்

32.
மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் - நன்னெறியோர்
ஏந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்துதித்த ஊர்கள் வகை

33.
சீர் ஆறும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
ஏரார் பெரும்புதூர் என்னும் இவை - பாரில்
மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு

34.
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றியவை தாம்வளர்த்தோர் - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் செய் வ்யாக்கியைகள் உள்ளதெல்லாம்
வையம் அறிய பகர்வோம் வாய்ந்து

35.
ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் - வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால்
சென்றணுகக் கூசித் திரி

36.
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் - அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே உண்டோ பேசு

37.
ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று
பேசி வரம்பறுத்தார் பின்

38.
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் - அம் புவியோர்
இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா

39.
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாளயோகி திருவாய்மொழியை காத்த
குணவாளரென்று நெஞ்சே கூறு

40.
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வ்யாக்கியைகள் அன்றாகில் - அந்தோ
திருவாய்மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவார் இக்காலம் நெஞ்சே கூறு

41.
தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறாயிரம்

42.
தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் - எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை ஆய்ந்துரைத்ததே
ஒன்பதினாயிரம்

43.
நம்பிள்ளை தம்முடைய நல்லருளாலே வியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இன்ப
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருபத்தி நாலாயிரம்

44.
தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை
வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தி ஆறாயிரம்

45.
அன்போடு அழகிய மனவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத் - தம்பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருளை உரைத்த
தேதமில் பன்னீராயிரம்

46.
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வ்யாக்கியைகள் செய்வால் - அரிய
அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய் தறிந்து

47.
நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே - தஞ்சீரால்
வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுநி
செய்யுமவை தாமும் சில

48.
சீரார் வடக்குத் திருவீதிப்பிள்ளை யெழு
தேரார் தமிழ் வேதத் தீடுதன்னைத் - தாருமெனவாங்கி
முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாங் கொடுத்தார் பின்னதனைத் தான்

49.
ஆங்கவர்பால்பெற்ற சிரியாழ்வானப்பிள்ளை
தாங்கொடுத்தார் தம்மகனார் தங்கையில் - பாங்குடனே
நாலூர்பிள்ளைக்கவர் தாம் நல்லமகனார்க்கவர் தாம்
மேலோர்க்கீந்தா ரவரே மிக்கு

50.
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் - அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று

51.
தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் - பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல்

52.
பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து - மன்னுபுகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு

53.
அன்னபுகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்தகலை யாவையிலும் - உன்னில்
திகழ் வசநபூடணத்தின் சீர்மை யொன்றுகில்லை
புகழலவிவ் வார்த்தை மெய்யிப்போது

54.
முன்னங்குரவோர் மொழிந்த வசநங்கள்
தன்னைமிகக் கொண்டுகற்றோர் தம்முயிர்க்கு - மின்னணியாச்
சேரச்சமைத்தவரே சீர் வசநபூடணமென்
பேரிக்கலைக்கிட்டார் பின்

55.
ஆர்வசந பூடணத்தி னாழ்பொரு ளெல்லாமறிவார்
ஆரதுசொன்னேரி லநுட்டிப்பார் - ஓரொருவர்
உண்டாகி லத்தனைகா ணுள்ளமே யெல்லார்க்கும்
அண்டாத தன்றோ வது

56.
உய்ய நினைவுடையீ ருங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையகுரு முன்னம்வாய்மொழிந்த - செய்யகலை
யாம்வசந பூடணத்தி னாழ்பொருளைக் கற்றதனுக்
காம்நிலையில் நில்லுமறிந்து

57.
தேசிகர்பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தைதன்னில்
மாசறவே யூன்றிமனனஞ்செய் - தாசரிக்க
வல்லார்கள் தாம்வசந பூடணத்தின் வான்பொருளைக்
கல்லாத தென்னோ கவர்ந்து

58.
சச்சம்பிரதாயந் தாமுடையோர் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியைதா னுண்டாகில் - நச்சி
அதிகரியு நீர் வசந பூடணத்துக் கற்ற
மதியுடையீர் மத்தியத்தராய்

59.
சீர்வசநபூடணத்தின் செம்பொருளைச் சிந்தைதன்னால்
தேறிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம் - ஆரியர்காள்
என்றனக்கு நாளு மினிதாகா நின்றதையோ
உந்தமக்கெவ்வின்ப முளதாம்.

60.
தம் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதார்
அன்பு தன் பால் செய்தாலும் அம்புயை கோன் இன்ப மிகு
விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்
நண்ணாரவர்கள் திருநாடு

61.
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்

62.
உய்ய நினையுண்டாகில் உன் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்புதன்னை இந்த மாநிலத்தீர்! மெய் உரைக்கேன்
பை அரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக்கனி

63.
ஆசாரியன் செய்த உபகாரம் ஆனவது
தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்தமாட்டாது
இருத்தல் இனி ஏதறியோம் யாம்

64.
தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர் மனமே! பேசு

65.
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணும் அவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன்
நோக்கும் அவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்

66.
பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பதுவும் அற்று மிக்க வாசையினால் நம்பிள்ளைக்
கான அடிமைகள் செய் அந்நிலையை நல் நெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்

67.
ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரந் தன்னை அறியாதார் பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தநிலை தன்னை நெஞ்சே! சேர்

68.
நாத்திகரும் நல் கலையின் நன் நெறிசேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே!
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என் விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்

69.
நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் உண்டாம் நயமது போல் நல்ல
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் சேர்த்தி கொண்டு

70.
தீய கந்தம் உள்ளததொன்றைச் சேர்ந்திருப்பதொன்றுக்கு
தீய கந்தம் ஏறும் திறமது போல் தீய
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் செறிவு கொண்டு

71.
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இதுசுத்த உபதேசவர
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்

72.
பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து

73.
இந்த உபதேச ரத்தினமாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன் அருளுக்கென்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவார் தாம்

74.
[ மணவாளமாமுனிகள் பெருமை ]
மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங் கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமான் அவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்
