திருச்செங்குன்றூர்

தலபுராணம்: திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காகத் தருமன் பொய் சொன்னதை எண்ணி, மனம் வருந்தி போர்முடிந்த பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததாகவும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தருமன் புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே நிர்மாணம் செய்தாரெனவும் கருதப்படுகிறது. இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது.

அமைவிடம்

மாநிலம்: கேரளம் மாவட்டம்: ஆலப்புழா அமைவு: செங்குன்றனூர்,

தாயார் : (திருசிற்றாறு) ஸ்ரீ செங்கமல வல்லி
மூலவர் : இமயவரப்பன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: இமயவரப்பன் பெருமாள்,ஸ்ரீ செங்கமல வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  3596.   
  வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
  ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
  போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
  சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  

      விளக்கம்  


  • குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார். வில்விழவென்கிற வியாஜத்தினால் அக்ரூரணையிட்டுக் கம்ஸனால் திருவாய்ப்பாடியினின்று மதுரைக்கு வரவழைக்கப்பட்ட பலராமஸமேதனான கண்ணபிரான் குவலயாபீட ஸம்ஹாரம் தொடங்கிக் கம்ஸவதமளவாகச் செய்த பராக்ரமச் செயல் மூன்றடிகளால் கம்பீரமாகப் பேசப்படுகிறது. எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டின வீரம் பாசுரத்திலும் ஏறிப் பாய்ந்துவிட்டதுபோலும். குவலயாபீடயானை கண்ணனை முடிப்பதற்காக அரண்மனைவாசலில் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்தது, அதனை அநாயாஸேந முடித்துப் பாகனையும் உயிர்மாய்த்தான் கண்ணபிரான். அந்த யானையை ஒரு மலையாக ரூபிக்கிறாராழ்வார், மலைக்கு அருவிப் பெருக்கு இருக்குமே, அப்படியே யானைக்கு மதநீர்ப்பெருக்கு உள்ளதென்கிறார், மலைக்குக் குவடுகளிருப்பதுபோல யானைக்கு மருப்பிணையுள்ளதென்கிறார். உருட்டியென்று அவ்யானையை முடித்தமை சொன்னபின்பும் “ஊர் கொள் திண்பாகன்“ என்று அந்த யானையைப் பாகன நடத்துகிறானாகச் சொன்னவது கூடுமாவென்ன, இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் “உயிருள்ள பதார்த்தத்தை நடத்துமாபோலே நடத்த வல்லனாயிற்று சிக்ஷாபலத்தாலே“ என்று. அந்தப் பாகனையும் முடித்து, சாணூரமுஷ்டிகரென்னும் மல்லர்களையும் கொன்று, அதன்பிறகு மஞ்சத்தின்மீது கம்ஸனுக்குக் காவலாக இருந்த அரசர்களையும் முதுகுகாட்டி யோடப் புடைத்து, உயர்ந்த மாடத்திலே யிருந்த கம்ஸனையும் முடிசிதற மயிரைப்பிடித்துக் கீழேவிழ விட்டு மேலேபாய்ந்து அவனை முடித்திட்ட வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளி யிருக்குமிடமான திருச்செங்குன்னூர்த் திருச்சிற்றாறு நாங்கள் அச்சங்கெட்டு ஆச்ரயிக்குமிடம்.


  3597.   
  எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்* 
  பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*
  செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு- 
  அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?  

      விளக்கம்  


  • வெறும் வீர ஸ்ரீயைக் காட்டினபடியேயன்று, தன்னுடைய பரமபோக்யத்தை காட்டிக் கொடுத்தானென்கிறார்யாமுடையமுதம் என்று. எங்கள் என்றும் யாமுடை கூட்டி யென்க. “* கேசவன் தமர்க்குப் பின்பு தனியரல்லரே“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. “இமையவரப்பன்“ என்பது அத்தலத் தெம்பெருமானுக்கு இற்றைக்கும் வழங்குந் திருநாமம். இமையவரப்பனென்று சொல்லி உடனே என்னப்ப னென்கையாலே நித்ய ஸூரிகளை அடிமை கொண்டாப்போலே தம்மையுமடிமை கொண்டவன் என்பது காட்டப்பட்டதாம். “குறைவற்றார்க்கும் ஸத்தா ஹேதுவாய் குறைவுக்கெல்லையான வெனக்கும் ஸத்தா ஹேதுவானவன்“ என்பது ஈடு. நான்முகனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டியை நடத்தியும், தானான தன்மையில் ரக்ஷணத்தை நடத்தியும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் இப்படி மூவுருவாயிருக்குமவன் என்னுடைய பயத்தைப்போக்கி எனக்கும் தாரகனாயிராநின்றானென்கிறது இரண்டாமடி. இப்படிப்பட்ட வெம்பெருமான் நீர்வளம் பொருந்திய திருச்சிற்றாற்றுப்பதிலே, விபவாவதாரங்கள் போலே தீர்த்தப் ப்ரஸாதித்துத் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளாமே நித்யஸந்நிதி பண்ணி யிராநின்றான், அவனை யொழிய எனக்கு உற்ற துணையில்லை, அவனே நமக்கு நற்றுணைவன் என்றாராயிற்று.


  3598.   
  என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
  முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*
  தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
  நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.

      விளக்கம்  


  • “என்னமர் பெருமானிமையவர் பெருமா“ வென்ற விதனை “இமையவர் பெருமான் என்னமர் பெருமான்“ என மாற்றியந்வயிப்பது. * அயர்வது ம்மார்களதி பதியாயிருக்குமவன் எனக்கு அமர்ந்த ஸ்வாமியாயுள்ளான். அந்த பரத்வமெஙகே, இந்த ஸௌலப்ய மெங்கே! என்று வியப்புத் தோற்ற வருளிச் செய்கிறபடி இரு நிலமிடந்த எம்பெருமான் – பிரளயாபத்தைப் போக்கின தன் வல்லமையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனென்றபடி. முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள என்னையாள்கின்ற வெம்பெருமான் – கீழே தமக்குப் பிறந்த அச்சத்தைப் போக்கினபடியைச் சொல்லுவது இங்கு விவக்ஷிதம். நான் காமடியில் “சரண்நிலைப்பிலும்“ “சரணம் நினைப்பிலும்“ என்பன பாட பேதங்கள். “சரணம்“ என்று பாடமாம்போது “அடியல்லால்“ என்பது “அடியலால்“ என்று தொகுதுதலாகக் கொள்க.


  3599.   
  பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
  குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*
  செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
  அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  

      விளக்கம்  


  • மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத் தொலைத்துத் திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார். பெரிய மூவுலகும் நிறையப் பேரூரூவமாய் நிமிர்ந்த – மூவுலகின் பெருமைக்குத் தக்கபடி தன்னுருவத்திலும் பெருமை கொண்டானென்க. திருவுருவம் பெருமை கொண்டது மூவுலகங்களையும் ஆக்ரமிக்கைக்காகவேயன்று, அகடிதகடநாஸமர்த்தனான அவன் சிறிய திருவுருவத்தாலும் மூவுலகையும் ஆக்ரமிக்க முடியாமையில்லையே, பின்னை எதற்காகப் பேருருவமான தென்னில், தொடங்கின கார்யம்வென்ற ப்ரீதிப்கர்ஷத்தாலே வளர்ந்தபடி“ என்பர் நம்பிள்ளை. உலகில் ஒருவனுக்கு அபீஷ்டம் நிறைவேறப் பெற்றால் உடல் பூரிக்குமன்றோ, அப்படி இங்கும் தன் பக்கலிலே பல்லைக்காட்டிப் பரிதாபம் தோன்ற நின்ற இந்திரனுக்குக் காரியம் செய்யப் புகுந்து அது நிறைவேறப் பெறுகையாலே உடல் பூரித்தாயிற்று. குறியமாண் எம்மான் –“கொண்டகோலக் குறளுருவாய்“ ஐயோ! இப்படி பரம ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டா கடலைக் கடைவது, தேவருமசுர்ருமான முரட்டான்கள் பலகோடி நூறாயிரவர் இல்லையோ? அவர்கள் * நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூர்ரென் செய்தார்? * என்னும்படியாகச் சோர்ந்து துவண்டுநின்றால் நீ கடையவேணுமென்று என்ன தலைவிதியோ? கோலமாணிக்க மென்னும்படியான திருமேனியின் ஸௌகுமார்யத்தைச் சிறிதும் பராதே இப்படியும் ஒரு அதிப்வருத்தியுண்டோ? என்று நெஞ்சிளகிச் சொல்லுகிறபடி. இப்படிப்பட்ட. வெம்பெருமான் பரம போக்யமான திருச்சிற்றாற்றிலே யுள்ளாரடங்களும் இவன் ஸர்வேச்வரனென்ற்றியும்படியாக, தன்னுடைய பெருமையை மறைத்துக் கொள்ளாதே நிஜஸ்வரூபத்தோடே நின்றருளினான், அவனது திருவடியிணையல்லது எனக்கு வேறொரு ரக்ஷகமில்லை.


  3600.   
  அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை 
  அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*
  நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்* 
  நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.

      விளக்கம்  


  • மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில். அல்லதோரணும் அவனில் வேறில்லை அது பொருள் –திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற புகலிடமான அர்ச்சரஸ்தலங்களும் திருச்சிற்றாற்றுப் பெருமானுகந்தவையே, இதுபரமார்த்தம் இதில் எனக்கு இறையேனும் ஸந்தேஹமில்லை, எல்லாத் திருப்பதிகளும் ஒன்றுதான், அத்திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்க ளெல்லாரும் ஒருவரேதான் என்கிறதத்துவம் நானறியாததன்று என்றபடி. அப்படியாகில் திருச்சிற்றாற்றுப் பெருமாளையல்லது அறியேனென்று இந்த நிர்ப்பந்தம் எதற்காக? என்கிறீர்களோ? ஆகிலும் அவனை யல்லது என்னாவி அமர்ந்தணைகில்லாது பெருமானை என் மனம் சேர்ந்தணையாது. சிறிய திருவடி * ஸ்நேஹோ மே பரமோ ராஜந்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித, பக்திச் ச நியதா வீர! பாவோ நாந்யத்ர கச்சதி * என்று பரம பதநாதனையும் வேண்டேனென்றான், பரமபதநாதன் ஈச்வரனல்லனோ? ப்ராப்த சேஷியல்லனோ? எதற்காக விஷயத்திலும் கொள்ளுங்கோ ளென்கிறார். அமர்ந்து அணைகை –உள்வெதுப்பற்றுப் பொருந்றெனக்கு நல்லரணே என்ற விடத்து அந்வயம். “திருச்சிற்றாறே எனக்கு நல்லரண்“ என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. அத்தலத்தின் வைதிக ஸம்ருத்தி சொல்லுகிறது மூன்றாமடி. நல்ல நான் மறையோ ரென்றது – காம்யகருமங்களைச் செய்பவரல்லர், பகவத் கைங்கர்ய மென்னும் ப்ரதிபத்தியோடே செய்பவர்களென்றபடி. காம்யமாகச் செய்தாலும் குற்றமில்லை யென்கிற திருவுள்ளமும் நம்பிள்ளைக்கு உள்ளது. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி, “அநந்யப்ரயோஜந ராகில் இவர்கள் நுஷ்டானத்துக்கு ப்ரயோஜநமென்னென்னில் ஸ்வயம் ப்ரயோஜநமாதல். பகவத் ப்ரதிபக்ஷங்களையழியச் செய்யும் அபிசாரம் பலமாதல், எம்பெருமானாரைப் போலேயாயிற்று அவ்வூரில் ப்ராஹ்மணரும்“ என்று. இங்கு அறிவேண்டிய இதிஹாஸமாவது – கொடுங்கோன்மை கொண்ட சோழனுக்காக மேல்நாட்டுக் கெழுந்தருளின எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் பதினொருஸம்வத்ஸர மெழுந்தருளியிருந்தும் அவனுடைய வாழ்நாள் மாளக் காணாமையலே அவன் முடியும்படி, திருவேங்கட முடையானை அதிதேவதையாகப் பண்ணிக்கொண்டு அபிசாரகரும்மொன்று அநுஷ்டித்து மநோரதம் தலைக்கட்டப் பெற்றாரென்பது.


  3601.   
  எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை* 
  தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*
  மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்* 
  கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே. 

      விளக்கம்  


  • பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று. அவர்களை வண்சிவனு மயனுந்தானு மொப்பார் என்றது –ஆளவந்தார் ஸ்தோத்ரத்னத்தில் * த்வதாச்ரிதாநாம் ஜகதுத்பவஸ்திதி ப்ரணாச ஸம்ஸார விமோசநாதய பவந்தி லீலா, * என்றருளிச் செய்தபடி ஸ்ருஷ்டிஸ்திதி ஸம் ஹாராதிகளை இவர்களே நிரவஹிக்க வல்லார யிருக்கையைச் சொன்னபடியாம். இங்கே நம்பிள்ளையீடு – ஸ்ரீபரத்வாஜமஹாமுனியோடொக்கு மவர்கள், தன்னைப் பிரிந்தவன்றுமுதல் ராவணவதம் பண்ணி மீளுமளவுஞ் செல்ல “இவர்களுக்கு என் வருகிறதோ“ என்று இத்தையே நினைத்திருந்தவனிறே ஸ்ரீ பரத்வாஜபகவான்“ என்று.


  3602.   
  திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
  திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
  திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
  திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  

      விளக்கம்  


  • திருச்சிற்றாற்றெம்பெருமானுடைய வடிவழகை வாயரப் பேசுகிறாரிதில் அழகு பொருந்திச் சிவந்தவையாய், விகாஸம் செவ்வி முதலானவற்றால் தாமரையையொத்திருப்பவையான திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்காலே பிறந்தவுறவை ஸ்வாபித்துக் கொள்ளும் புன்முறுவல் பொலிந்த திருப்பவளமும், அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றவர்கள் விழுந்து வணங்கத் தக்க திருவடிகளும், திருவடிகளில் விழுந்தவர்களை யெடுத்தணைக்கும் திருக்கைகளும், அப்படி அணைக்கப்பெற்றவர்களும் நித்யமும் அநுபவிக்கத் தக்கதாய் அழகுக் கெல்லையாய் ஸர்வோத்பத்திஸ்தானமென்று தோற்றும்படியிருக்கிற திருநாபியும், பகவத்ஸம் பந்தமில்லாதவர்களுக்கும் பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமாய்க் கொண்டு சிவந்திருக்கின்ற திருமார்வும், திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரமும், அச்சம் தீரும்படி ரக்ஷகத்வ ஸூசகமாயிருந்துள்ள திருவபிஷேகமும் திவ்யாயுதங்களும் விளங்க என்றும் என்சிந்தையிலே வர்த்திக்கையாலே அச்சம் தலைகாட்ட வழியில்லை யென்றாராயிற்று.


  3603.   
  திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்* 
  திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*
  புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை* 
  புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!

      விளக்கம்  


  • இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார். செழுநிலத்தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி யேத்தும் –நாலு வகைப்பட்ட வேதங்களையோதி நிபுணர்களாய் நிலத் தேவர்களாயிருக்குமவர்கள் திக்குக்கள்தோறும் நின்று கைகூப்பியேத்தும்படியான திருச்சிற்றாற்றிலே வர்த்திக்கிறவனை யென்றது –உகவாதார்க்குக் கிட்டவொண்ணாதபடியாய் உகந்தவர்களே புடைசூழவிருக்கிறபடியைச் சொன்னவாறு. புகர்கொள்வானவர்கள் புகலிடந்தன்னை –வானவர்க்குப் புகராவது-தங்களை வந்து பணிகின்றவர்களுக்குத் தாங்கள் புகலாயிருக்கையாம், அப்படிப்பட்டவர்களுக்கும் ஆபத்து வந்தால் அவர்களுக்குப் புகலிடமாயிருப்பவனெம்பெருமான். * வேதாபஹாரகுருபாதகதைத்ய பீடாத்யாபத் விமோசநம் பண்ணிக் கொடுப்பார் இவனை யொழிய வேறொருவருகளுக்கு மிருத்யுவாயிருப்பவன் எம்பெருமான். கூற்றை என்றால் போராதோ? “வெங்கூற்றை“ யென்னவேணுமோ? யமன் வெவ்வியனாகவல்லாமல் ஸாதுவாகமிருப்பனோவென்று சங்கை தோன்றும், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர் –“அந்தகன் தண்ணீரென்னும்படி வெவ்விய கூற்றமாயுள்ளவனை“ என்று. அசுரர்களை யழிக்கும் விஷயத்தில் யமனுடைய வெம்மையிற் காட்டில் பன் மடங்கு அதிகமான வெம்மையை யுடையவன் என்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழுமாற்றியேன் – நான் புகழ்ந்து அப்பெருமானுக்கு ஆகவேண்டுவதொன்றுமில்லை, என் குறை தீரப் புகழவேண்டுவதுண்டே அங்ஙனே புகழும் பரிசு அறிகின்றிலேன், புகழாதொழியவும் மாட்டுகிறிலேன், பின்னை என் செய்வதென்ன, பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே – தனக்கு விதேயமான ஸகல லோகங்கைளினுடையவும் ஸ்ருஷ்டி முதலானவற்றைப் பண்ணுமவனென்று திரறச் சொல்லுமத்தனை, பிரித்து வகையிட்டுச் சொல்லப்புகுந்தால் சொல்லிமுடிக்கப் போகாதென்றப்படி.


  3604.   
  படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே* 
  இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*
  கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்* 
  நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.

      விளக்கம்  


  • பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான் திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார். படைப்போடு கெடுப்புக்காப்பவன் – படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய இவையெல்லாம் தன் அதீனமாம்படியிருக்குமவன். பிரமபரன்பரன் – மநுஷ்யர் முதலானவர்களிற்காட்டிலும் இந்திரனுக்கு எவ்வளவு ஏற்றமுண்டோ, அவ்வளவு ஏற்றம் இந்திரனிற்காட்டில் பிரமனுக்குண்டு, அவனிற்காட்டில் எம்பெருமானுக்கு அத்தனை யேற்ற முண்டு என்பது இங்கு அறியத்தக்கது. “பிரமனும் அவனே, சிவனும் அவனே“ என்ற கான தேஹத்தை தேஹமே ஆத்மா என்பதுபோல. இடைப்புக்கு ஓருருவு மொழிவில்லை –மில்லை, மற்றுள்ள ஸகல பதார்த்தங்களும் அவனிட்ட வழக்கே யென்கை. புகழ்வில்லையென்றது –அதிசயோக்தியன்று என்றபடி. இப்படி அர்த்தவாதமன்றிக்கே யதார்த்தமான புகழையுடைய எம்பெருமான் திருச்சிற்றாறமர்ந்த நாதன் என்கிறார். அத்தலம் எப்படிப்பட்ட தென்ன, அத்தலத்திலுள்ளாரது பெருமையைச் சொல்லும் முகத்தால் அத்தலத்தின் பெருமை சொல்லுகிறன பின்னடிகள். (கொடைப்பெரும்புகழார் இத்யாதி) அவ்வூரிலுள்ளார் ஔதார்யத்தில் பெரும்புகழ் பெற்றவர்கள், எதிரிகளையும் பண்ணிப் படைத்த புகழ். இனையர் –இன்னாரின்னாரென்று ப்ரஸித்தி பெற்றிருக்குமவர்கள். “எனையர்“ என்னும் பாடமும் வியாக்கியானங்களில் காட்டப்பட்டுள்ளது, இப்படியிருப்பார் பலரென்றபடி தன்னானார் – எம்பெருமானைப் போன்று தட்டுத் தடங்கலில்லாத சக்தியையுடையவர்கள். “அவன்றன்னைப் போலே அதிகரித்த காரியத்தில் வெற்றிகொண்டல்லது மீளாதவர்கள்“ என்பது ஈடு. கூரிய விச்சையோடொழுக்கம் நடைப்பலியியற்கை – “வித்யா“ என்னும் வடசொல் விச்சையென விகாரப்பட்டது, ஞானத்தைச் சொன்னபடி. கூர்மையான ஞானமும் அதற்கேற்ற அனுட்டானமும், அனுட்டானங்களில தலையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றவர்கள். இப்படிப்பட்ட பரம பாகவதர்கள் மலிந்த திருச்சிற்றாற்றுப்பதியில் அமர்ந்த நாதன் முன்னிரண்டடிகளிற் சொன்ன பெருமை பொலிந்தவன்.


  3605.   
  அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை* 
  அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*
  அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு* 
  அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே. 

      விளக்கம்  


  • திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார். அமர்ந்த நாதனை –எம்பெருமானைத் தவிர்த்துப் பிறர்களை இவ்வுலகுக்கு நாதரென்றால் “ஐயோ? இது தகாத பேச்சாயிருந்தது“ என்று பரிதபிக்கவேண்டியிருக்கும், எம்பெருமானை நாதனென்று சொன்னால் தகும் தகும் என்னும்படியாயிருக்குமாம், “அமர்ந்த நாதனை“ என்றதற்கு இதுவே கருத்து. *த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகம் இவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானது. “ஆனைப் பிணங்களைக் குதிரை சுமக்கவற்றே என்னாதபடி உபய விபூதிக்கும் நாதனென்றால் தக்கிருக்கும்மவனை“ என்று இருபத்தினாலாயிரம். அவரவராகி –இதற்குக் கீழே “நாதனை“ என்று வந்தபடியாலே அதற்குச் சேர இதற்குப் பொருள் கொள்ளவேண்டும், நாதன் என்பதற்கு –அர்த்திக்கப்படுமவன் என்று பொருளாகையாலே அர்த்திகள் நினைவுக்கு வரக்கூடியவர்கள், மேலே “அவர்க்கருளருளும்மானை“ என்றிருக்கையாலே அதற்குச் சேரவும் பொருள் கொள்ளவேணும், ஆகவே, அவரவராகி யென்றது – அந்தந்த அர்த்திகளாகியென்று பொருள்படும். இதற்கு இரண்டு வகையாகக் கருத்தருளிச் செய்வர். அவர்கள் “இது நமக்கு வேணும்“ என்றிருப்பதுபோல எம்பெருமான் “இவர்களுக்கு இது வேணும்“ என்றிருப்பனாம் –அதைச் சொல்லுகிறதென்று முதற் கருத்து. அவர்கள் அர்த்திகளாயிருக்குமாபோலே இவனும் அர்த்தியாயிருக்கும், கொடுக்கவேணுமென்று அவர்கள் அர்த்தித்தால் கொள்ள வேணுமென்று இவன் அர்த்திப்பனென்பது இரண்டாங்குகருத்து. அவரவர்களது அபேக்ஷதங்களைத் தன்பேறாகக் கொடுக்குவனென்றதாயிற்று. கீழ் ஆறாம்பாட்டில் * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்றருளிச் செய்த்துபோல இங்கும் * அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்றருளிச் செய்கிறார். “முக்கணம்மானை நான்முகனை“ என்றது –முக்கண்ணனுக்கும் நான் முகனுக்கும் உயிரானவனை யென்றபடி.


  3606.   
  தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
  வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*
  கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
  வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)

      விளக்கம்  


  • இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார். ஆழ்வார்க்கு எம்பெருமான் விஷயத்திலுண்டான அச்சத்தைத் தீர்ப்பது இத்திருவாய்மொழியிலேயாதலால், அச்சமுண்டாவதற்குக் காரணமும் இங்கே ஒருவாறு தெரிவிக்கப்படுகின்றது –தேனை நன்பலைக் கன்னலை யமுதை யென்று. இப்படி ஸர்வவித போக்யவஸ்துவாயிருக்கையாலே இதற்கென வருகிறதோவென்று அச்சமுண்டாகக் கூடுமென்றோ. அவ்வச்சம் கெட்டதற்கான ஹேதுவும் அடுத்தபடியாகச் சொல்லுகிறது திருந்துலகுண்டம்மானை யென்று. ஜகத்தைப் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கி அச்சங்கெடுத்த பெருமான் திறத்திலேயோ நாம் அச்சங்கொள்வது! என்று அச்சந்தவிர்ந்தபடி. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகமானது தன்னைக் கற்கவல்லவர்களை முந்துறமுன்னம் ஸம்ஸாரத்தை யறுத்துப் பின்னை திருநாட்டிலே யேற்றுமென்று சொல்லவேண்டுவது முறைமையாயிருக்க இங்ஙனே சொன்னதன் சுவையை நம்பிள்ளை வெளியிடுகிறார்காண்மின் –“நாடு அராஜகமானால் முன்னம ராஜபுத்ரன் தலையிலே முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாபோலே“ என்று. அதாவது, ராஜகுமாரன் ஏதோ குற்றங்கள் செய்திருந்தற்காகச் சிறையிலடைக்கப்பட்டு விலங்கிடப் பெற்றிருந்தான், திடீரென்று அரசன் முடிந்துபோக, சிறையில் கிடக்கும் ராஜபுத்திரன் தலையிலே முடிவைக்க வேண்டியதாயிற்று, அப்போத, ஒரு நொடிப்பொழுதும் நாடு அராஜகமாயிருக்கக் கூடாதாகையாலே முன்னம் அவன் தலையிலே முடியை வைத்து பின்னை சிறை விடுவிப்பர்களாம். அதுபோலவென்க. ஸ்தநந்தயப்ரஜைக்கு சிகித்ஸைபண்ணவேண்டி வந்தால், முலையை வாயிலேகொடுத்துச் சிகித்ஸை பண்ணுமாபோலேயென்கிற த்ருஷ்டாந்தமும் இங்குப் பொருந்தும்.