திருவ‌ல்லிக்கேணி

பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.

அமைவிடம்

பெயர்: பார்த்தசாரதி திருக்கோயில் அமைவு: திருவல்லிக்கேணி,
சென்னை,
தமிழ்நாடு,

தாயார் : ஸ்ரீ ருக்மிணித் தாயார்
மூலவர் : ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
உட்சவர்: ஸ்ரீ பார்த்தசாரதி
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : சென்னை
கடவுளர்கள்: ஸ்ரீ பார்த்தசாரதி ,ஸ்ரீ ருக்மிணித் தாயார்


திவ்யதேச பாசுரங்கள்

    1068.   
    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
    சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   

        விளக்கம்  


    • இத்தலத்திலே ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் பார்ததஸாரதியாகையால், அப்பெருமானுடைய சிறுச்சேவகங்களைச் சொல்லியேத்துகிறார். விற்பெருவிழவு = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று. வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு. கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் திருவவதரித்து அக்காலத்து மஹான்களை வாழ்வித்தருளின எம்பெருமான், பிற்பட்டவர்களையும் வாழ்விக்கத் திருவல்லிக்கேணியிலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை அடியேன் ஸேவிக்கப்பெற்றே னென்றாராயிற்று.


    1069.   
    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 
    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

        விளக்கம்  


    • எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது-வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல், வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல். உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால் அவரவர்களுடைய விருப்பத்திற் கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேதமூலமாகக் காட்டிக் கொடுத்திருக்கின்றமைபற்றி வேதத்தின் சுவைப்பயனை எனப்பட்டது. வ்யாஸர் பராசரர் வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே மிகவும் போக்யனாயிருப்பதுபற்றி விழுமிய முனிவர் விழுங்குந் கோதிலின் கனியை எனப்பட்டது.


    1070.   
    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 
    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*

        விளக்கம்  


    • (விஞ்சைவானவர் இத்யாதி.) திருமால் தேவர்களுக்காகச் கடல்கடைந்த காலத்து தந்வந்தரியென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீர ஸமுத்ரத்தினின்றும் தோன்றியபொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள அந்த எம்பெருமான் ஜகந்மோஹநகரமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமரர்கட்கு ப்ரஸாதித்தனன். இந்த அற்புத சக்தியைக்கண்டு தேவ வாக்கத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டுத் துதிசெய்தனர்; இதனைப் பின்னடிகளில் அநுஸந்தித்தாராயிற்று. விஞ்சை-வித்யா; வித்யாதரர், சாரணர், ஸித்தர் என்பவர்கள் தேவதைகளின் வகுப்பிற் சேர்ந்தவர்கள. “வியந்து துதி செய்ய” என்ற சொற்கள் வியந்துதிசெய்ய எனப் புணர்ந்தன. ‘சங்கு கதை’ சங்கதை போல. “வியந்து துதி செயப் பெண்ணுருவாகி” என்றும் பாடமுண்டு.


    1071.   
    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*
    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*

        விளக்கம்  


    • திருவாய்ப்படியில் வருஷந்தோறும் இந்திரனுடைய பூஜை பெரிய திருவிழாவாக நடத்தப் பட்டு வந்தமையால் எழில்விழவு எனப்பட்டது. மந்திரவிதி = வேதத்துக்கு அநதிகாரிகளான இடையர்களுக்கு மந்திர விதியுண்டோ வென்னில்; இங்கு மந்த்ரமாவது ஆலோசனை; அதாவது ஸங்கேதம்.


    1072.   
    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
    பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
    எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    

        விளக்கம்  


    • ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்கிற திவ்ய மஹிஷிகள் மூவர்க்கும், 1. “தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்” 2. “பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத்துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடியே மற்றும் பல தேவிமார்களுக்கும் நாயகனென்கிறது முன்னடிகளில். பத்மம் என்ற வடசொல் பதுமமெனத் திரிந்தது. பதுமத்தலர்-தாமரைப்பூ; அதன் மகள்-ஸ்ரீமஹாலக்ஷ்மி. எம்பெருமான் தேவசரீரத்தையோ மநுஷ்யசரீரத்தையோ மற்றும் எந்த சரீரத்தைப் பரிகரஹிக்கிறானோ அந்தந்த சரீரங்களுக்குத் தகுதியாகப் பிராட்டிதானும் உடலெடுத்து உடன்கூடுகிறா ளென்று சாஸ்த்ரமாதலால் ‘இன் துணை’ என்று பிராட்டிக்கு விசேஷணமிடப்பட்டது.


    1073.   
    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
    'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*
    சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           

        விளக்கம்  


    • சந்தம் அல்குழலாள் =‘சந்தம்’ என்று அழகுக்குப் பெயர்; அல் என்று இருளுக்குப் பெயர்; அழகிய இருண்ட கூந்தலையுடைய த்ரௌபதி யென்க. அலக்கண்-மனவருத்தம். த்ரௌபதியின் வயிற்றெரிச்சலெல்லாம் சத்துரு பத்தினிகளுக்குப் போய்ச் சேருமாறு கண்ணபிரான் காரியஞ் செய்தனனென்று சமத்காரமாக அருளிச் செய்தபடி. அழுதவர்கள் சிரிக்கும்படியும், சிரித்தவர்கள் அழும்படியும் காரியஞ் செய்தானென்க.


    1074.   
    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*
    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.

        விளக்கம்  



    1075.   
    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 
    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)

        விளக்கம்  


    • இப்பாட்டில் தெள்ளியசிங்கம் என்று ஆழ்வாரருளிச்செய்தது கொண்டே திருவல்லிக்கேணியி லெழுந்தருளியுள்ள அழகிய சிங்கப்பெருமாளுக்குத் தெளிசிங்கப்பெருமாள் என்று திருநாமம் வழங்கலாயிற்று; ‘துள சிங்கப்பெருமாள்’ என்று பலரும் வழங்குவது பிழையென றுணர்க. சீறிவெகுண்டு = ஒரு பொருட்பன் மொழி; மிகவும் கோபங்கொண்டு என்றபடியாம்.


    1076.   
    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 
    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      

        விளக்கம்  


    • இங்கு “ஆனையின் துயரம்” என்றது உயிர்போகிறதேயென்ற துயரத்தை யன்று; வருந்திப் பறித்த இத்தாமரை மலர்களைச் செவ்வியழியாமல் எம்பெருமானது திருவடியிற் சாத்தப் பெறுகின்றிலோமே என்ற துயரத்தையாம். “ஆழி விட்டானை” என்னாது “ஆழி தொட்டானை” என்றது காரியத்தின் லாகவத்தைத் தெரிவித்தவாறு.


    1077.   
    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
    தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*
    கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
    சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)

        விளக்கம்  


    • மலயத்வஜனென்கிற பாண்டிய ராஜனுக்குத் தென்னன் என்று பெயர்; “கொன்னவில் கூர்வேல்கோன் நெடுமாறன் தென்கூடல்கோன், தென்னன்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் காண்க. தொண்டைமான் சக்ரவர்த்தி அத்தென்னனுடைய வம்சத்தில் தோன்றினமைபற்றித் தென்னன் தொண்டையர்கோன் என்றருளிச் செய்யப்பட்ட்தென்று சொல்லக் கேட்டிருக்கை. அழகிற் சிறந்த மாதர்கள் வாழுமிடமாயிருந்தாலும் “ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலை” என்று ஆழ்வார் தாமும் அருளிச் செய்திருக்கையாலும் மஹிளாபுரீ என்ற வடமொழியிலும் மயிலை என்று தென்மொழியிலும் வழங்கப்பட்டு வந்ததே மயிலாப்பூரென்பதாம். அதன் ஸமீபத்திலுள்ள காரணம்பற்றி மயிலைத் திருவல்லிக்கேணி எனப்பட்டது. மஹிளா என்ற வடசொல்-சிறந்த மாதர் என்று பொருள்படும் “மயூரபுரீ” என்றும் சிலர் வழங்குவர்.


    2297.   
    வந்துஉதைத்த வெண்திரைகள்*  செம்பவள வெண்முத்தம்*
    அந்தி விளக்கும் அணிவிளக்காம்,* - எந்தை
    ஒருஅல்லித் தாமரையாள்*  ஒன்றியசீர் மார்வன்,* 
    திருவல்லிக்கேணியான் சென்று  (2)

        விளக்கம்  


    • திருப்பாற்கடலில் நின்றும் தம் திருவுள்ளத்துக்கு வரும்போது திருவல்லிக்கேணியில் தங்கி வந்தானென்கிறார் போலும். முதலிரண்டடிகள் திருவல்லிக்கேணிக்கு விசேஷணம், அருகிலுள்ள கடலில் அலைகள் மோதும்போது சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன, அவை ஸாயம்ஸந்தியா காலத்தில் ஏற்றப்படுகின்ற மங்கள தீபமோ என்னலாம்படி யிருக்கின்றனவாம். சில விளக்குகள் செந்நிறமான ஒளியை யுடையனவாயும். சில விளக்குகள் வெண்ணிறமான வொளியை யுடையனவாயும் இருப்பதுண்டாகையாலே செந்நிறப் பவழங்களும் வெண்ணிற முத்துக்களும் திருவிளக்காகச் சொல்லப்பட்டன. திருவல்லிக்கேணியில் எப்போது பார்த்தாலும் திருவிளக்கேற்றப்பெற்ற மாலப்பொழுதாகவே காணப்படுமென்று கருத்து. இப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கின்ற திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமி – என்றாராயிற்று. ‘ப்ரவாளம்‘ என்னும் வடசொல் பவள மெனவும், ‘முக்தா‘ என்னும் வடசொல் முத்து எனவும் ‘ஸந்த்யா‘ என்னும் வடசொல் அந்தி யெனவும் திரிந்தன.


    2416.   
    தாளால் உலகம்*  அளந்த அசைவேகொல்*
    வாளாகிடந்தருளும்*  வாய்திறவான்*  நீள்ஓதம்
    வந்துஅலைக்கும் மாமயிலை*  மாஅல்லிக்கேணியான்* 
    ஐந்தலைவாய் நாகத்துஅணை? (2)

        விளக்கம்  


    • திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாளாக நின்ற திருக்கோலமாய் ஸேவைஸாதிப்பது தவிர, நாகத்தணைக்கிடந்த பெருமானாக ஸேவைஸாதிக்கிற திருக்கோலமும் உண்டாகையாலே அந்த திவ்யமங்கள விக்ரஹத்தி லீடுபட்டுப் பேசுகிறபாசுரம் இது. அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான்கள் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஒருபடிப்பட்டே யிருக்குமேயன்றி ஒருநாளும் மாறமாட்டாதென்பதும் ஒருநாளும் சோதிவாய் திறந்து பேசியருள்வதில்லை யென்பதும் ஆழ்வார்கட்குத் தெரிந்திருக்கச் செய்தேயும் கரைபுரண்ட ப்ரேமத்தின் கனத்தினால் அர்ச்சாவதார ஸமாதியையும் குலைத்துப் பரிமாறப் பார்ப்பர்கள், நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கொடியார்மாடக் கோளுரகத்தும் புளிங்குடியும், மடியாதின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேல் இப்படிதான் நீண்டுதாவிய அச்வோ பணியாயே“ (8-3-5) என்றும் “கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசையத், தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவருந் தொண்டரோக்கருளித், தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயெழுந்துன் தாமரை மங்கையும் நீயும், இடங்கொள் மூவுலகுந் தொழவிருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே!“ (9-2-3) என்றும் அழகாகப் பேசினார். இவ்வாழ்வாழ்வார் தாமும் திருச்சந்த விருத்தத்தில் “நடந்தகால்கள் நொந்தவோ?... காவிரிக்கரைக் குடந்தையுள், கிடந்தவாறெழுந்திருந்து பேசுவாழி கேசனே!“ என்றார். அப்படியே இப்பாசுரத்திலும் – சோதிவாய் திறந்து ஒரு வார்த்தையும் அருளிச்செய்ய மாட்டாமல் நெடுங்காலமாகவே அரவணையின்மேல் ஏகரீதியாக எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கிறானே! காடும் மேடும் கல்லும் காடுமான பூமியை முன்பொருகால் அடியிட்டு அளந்தருளின தாலுண்டான ச்ரமம் இன்னுமு ஆறவில்லைபோலும், என்கிறார். பேசாதே வாளாகிடந்தருள்வதும் நீர்க்கரையைப் பற்றிக் கண்வளர்ந்தருள்வதும் ஆயாஸத்தின் மிகுதியினால் என்றிருக்கிறார் போலும். “அயர்வு“ என்பது “அசவு“ என மருவிற்றென்ப. “அசைவு“ என்பாருமுளர். திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத் தனது குடும்பத்தோடு ஸேவைஸாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால் கைரவிணியென்று வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும். இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரை இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க. இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி“ எனப்பட்டது.