பிரபந்த தனியன்கள்
ஆபாத சூட மநுபூய ஹரிம் ஷயானம் நம் *
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா *
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தரானாம் *
யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹனம் தம் *
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே*
பாசுரங்கள்
அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்-
கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்*
சிவந்த ஆடையின் மேல்* சென்றதுஆம் என சிந்தனையே (2)
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்*
உந்தி மேலதுஅன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர ஓட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,* திருவயிற்று-
உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
பாரமாய* பழவினை பற்றுஅறுத்து,* என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்* வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,* திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே*
துண்ட வெண்பிறையன்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை,* முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய்யக் கொண்டதே.
கையினார்* சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
ஐயனார்,* அணிஅரங்கனார்* அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரிஓடி* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே!
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ!* நிறை கொண்டது என் நெஞ்சினையே! (2)
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்* மற்றுஒன்றினைக்* காணாவே. (2)