பிரபந்த தனியன்கள்

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,
மன்னு மடலூர்வன் வந்து.

மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
தாள் என்றி மற்று μர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே

   பாசுரங்கள்


    மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,*
    சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,*
    மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலைபோல்,*

    மின்னும்மணி மகர குண்டலங்கள் வில்வீச,*
    துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,*
    என்னும் விதானத்தின் கீழால்,* (2)  -இருசுடரை-


    மன்னும் விளக்காக ஏற்றி, *  மறிகடலும்-

    பன்னு திரைக்கவரி வீச* , - நிலமங்கை-



    தன்னை முன நாள் அளவிட்ட தாமரைபோல்,*
    மன்னிய சேவடியை வான்இயங்கு தாரகைமீன்,*

    என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த,*   -மழைக்கூந்தல்- 



    தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்,*
    என்னும் இவையே முலையா வடிவமைந்த,*

    அன்ன நடைய அணங்கே,*  -அடியிணையைத்- 



    தன்னுடைய அங்கைகளால் தான்தடவ தான்கிடந்து,*  ஓர்-
    உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட-
    பின்னை,*  தன் நாபி வலயத்துப் பேரொளிசேர்,*

    மன்னிய தாமரை மாமலர்பூத்து,*  அம்மலர்மேல்-
    முன்னம் திசைமுகனைத் தான்படைக்க,*  மற்றவனும்-
    முன்னம் படைத்தனன் நான்மறைகள்,*  -அம்மறைதான்-   


    மன்னும் அறம்பொருள் இன்பம் வீடு என்றுலகில்,*

    நன்னெறி மேம்பட்டன நான்கன்றே,*  -நான்கினிலும்-  



    பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது,*  ஓர்-
    தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,*

    என்னும் இவையே நுகர்ந்துஉடலம் தாம்வருந்தி,*
    துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும்,*  -வெஞ்சுடரோன்-


    மன்னும் அழல்நுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,*
    இன்னதோர் தன்மையராய் ஈங்குஉடலம் விட்டெழுந்து,*
    தொன்னெறிக்கண் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,*

    இன்னதோர் காலத்து இனையார் இதுபெற்றார்,*
    என்னவும் கேட்டறிவதில்லை*  -உளதென்னில்-


    மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,* 

    அன்னதோர் இல்லியின் ஊடுபோய்,*  -வீடென்னும்- 



    தொன்நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,*
    அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,*  ஆங்கு-

    அன்னவரைக் கற்பிப்போம் யாமே?,*  -அதுநிற்க -



    முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,*
    அன்னவர்தாம் கண்டீர்கள் ஆயிரக்கண் வானவர்கோன்,*

    பொன்னகரம் புக்குஅமரர் போற்றிசைப்ப,*  -பொங்கொளிசேர்-  



    கொன்னவிலும் கோளரிமாத் தான்சுமந்த கோலம்சேர்,*

    மன்னிய சிங்காசனத்தின்மேல்,*  -வாள்நெடுங்கண் - 



    கன்னியரால் இட்ட கவரிப் பொதியவிழ்ந்து,*  ஆங்கு

    இன்னளம் பூந்தென்றல் இயங்க,*  -மருங்குகிருந்த-  



    மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,*
    முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,*
    அன்னவர்தம் மான்னொக்க முன்டாங் கணிமலர்சேர்,*
    பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,*

    மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,*
    இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,*
    மன்னிய மாமயில்போல் கூந்தல்,*  -மழைத்தடங்கண்-


    மின்னிடையாரோடும் விளையாடி வேண்டிடத்து,*
    மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,*
    மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,*

    மன்னும் பவளக்கால் செம்பொன்செய் மண்டபத்துள்,*
    அன்ன நடைய அரம்பயர்த்தம் கைவளர்த்த*
    இன்னிசையாழ் பாடல் கேட்டு இன்புற்று,*  -இருவிசும்பில்-


    மன்னும் மழைதவழும் வாள் நிலா நீள் மதி தோய்
    மின்னின் ஒளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,*

    மன்னும் மணிவிளக்கை மாட்டி,*  -மழைக்கண்ணார்- 



    பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,*
    துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,*

    அன்னம் உழக்க நெரிந்துக்க வாள்நீலச்,*
    சின்ன நறுந்தாது சூடி,*  -ஓர் மந்தாரம்-  


    துன்னு நறுமலரால் தோள்கொட்டி,*  கற்பகத்தின்-
    மன்னு மலர்வாய் மணிவண்டு பின்தொடர*

    இன்னிளம் பூந்தென்றல் புகுந்து, ஈங்கிளமுலைமேல்*
    நன்னறுஞ் சந்தனச் சேறு அலர்த்த,*  -தாங்கருஞ்சீர்- 


    மின்னிடைமேல் கைவைத்து இருந்து ஏந்திளமுலைமேல்,*

    பொன்னரும் பாரம் புலம்ப,*  -அகங்குழைந்தாங்கு-  



    இன்ன உருவின் இமையாத் தடங்கண்ணார்,*
    அன்னவர்தம் மானோக்கம் உண்டு ஆங்கு அணிமுறுவல்,*

    இன்னமுதம் மாந்தி இருப்பர்,*   -இதுவ‌ன்றே-    



    அன்ன அறத்தின் பயனாவது?,*  ஒண்பொருளும்-

    அன்ன திறத்ததே ஆதலால்,*  -காமத்தின்- 



    மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மான்நோக்கின்*
    அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,*

    மன்னும் மடலுரார்' என்பதோர் வாசகமும்,*
    தென்னுரையில் கேட்டறிவதுண்டு,*  -அதனையாம்தெளியோம்;-  


    மன்னும் வடநெறியே வேண்டினோம்*  -வேண்டாதார்-
    தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின்,*

    அன்னதோர் தன்மை அறியாதார்,*  -ஆயன்வேய்-



    இன்னிசை ஓசைக்கு இரங்காதார்,*  மால்விடையின்-

    மன்னும் மணிபுலம்ப வாடாதார்,*  -பெண்ணைமேல்-



    பின்னும் அவ் அன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,*

    உன்னி உடலுருகி நையாதார்,*  -உம்பர்வாய்த்-



    துன்னு மதியுகுத்த தூநிலா நீள்நெருப்பில்,*

    தம்முடலம் வேவத் தளராதார்,*  -காமவேள்-



    மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,*

    பொன்னொடு வீதி புகாதார்,*  -தம் பூவ‌ணைமேல்-



    சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,*
    இன்னிள வாடை தடவதாம் கண்துயிலும்,*

    பொன்னனையார் பின்னும் திருவுறுக*  -போர்வேந்தன்-



    தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,*
    பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,*

    மன்னும் வளநாடு கைவிட்டு,*  -மாதிரங்கள்-



    மின்னுருவில் விண்தேர் திரிந்து வெளிப்பட்டு*
    கல்நிரைந்து தீய்ந்து கழையுடைந்து கால்சுழன்று,*

    பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,*
    கொன்னவிலும் வெங்கானத்தூடு,*  -கொடுங்கதிரோன்-


    துன்னு வெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால்,*
    மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,*

    அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,*



    பின்னும் கருநெடுங்கண் செவ்வாய் பிணைநோக்கின்,*
    மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்-
    கன்னி,*  தன் இன்னுயிராம் காதலனைக் காணாது,*

    தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகதாஞ்ன்று,*  ஆங்கு-
    அன்னவனை நோக்காது அழித்துரப்பி,*  -வாளமருள்-


    கல்நவில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,*

    பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?,*  -பூங்கங்கை- 



    முன்னம் புனல்பரக்கும் நன்னாடன் மின்னாடும்*
    கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,*

    தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனை,*
    பன்னாகராயன் மடப்பாவை,*  -பாவைதன்-


    மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகல,*

    தன்னுடைய கொங்கை முகம் நெரிய,*  -தான் அவன்தன்- 



    பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,*  தனது-
    நல்நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்,*

    முன்னுரையில் கேட்டறிவது இல்லையே?,*  -சூழ்கடலுள்-



    பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஏரொக்கும்,*
    மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,*

    தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,*
    கன்னியரை இல்லாத காட்சியாள்,*  -தன்னுடைய- 


    இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்,*

    மன்னு மணி வரைத் தோள் மாயவன்,*  -பாவியேன்-



    என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,*
    மன்னவன்தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,*

    கன்னிதன்பால் வைக்க மற்றவனோடு எத்தனையோ,*
    மன்னிய பேரின்பம் எய்தினாள்,*  -மற்றிவைதான்- 


    என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,*

    மன்னும் மலைய‌ரையன் பொற்பாவை,*  -வாணிலா- 



    மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,*
    அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,*
    பொன்னுடம்பு வாட புலனைந்தும் நொந்தகல,*

    தன்னுடைய கூழைச் சடாபாரம் தான்தரித்து,*  ஆங்கு-
    அன்ன அருந்தவத்தின் ஊடுபோய்,*  -ஆயிரந்தோள்- 


    மன்னு கரதலங்கள் மட்டித்து,*  மாதிரங்கள்-
    மின்னி எரி வீச மேலெடுத்த சூழ்கழற்கால்*
    பொனுலகம் ஏழும் கடந்து உம்பர்மேல் சிலும்ப*
    மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,*

    தன்னினுடனே சுழல சுழன்றாடும்,*
    கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,*
    அன்னவன்தன் பொன்னகலம் சென்றங்கு அணைந்திலளே?,*
    பன்னி உரைக்குங்கால் பாரதமாம்*  -பாவியேற்கு- 


    என்னுறு நோய் யானுரைப்பக் கேள்மின்,*  இரும்பொழில்சூழ்-
    மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,*

    பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,*
    என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,*  -நோக்குதலும்- 


    மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும்,*

    பன்னு கரதலமும் கண்களும்,*  -பங்கயத்தின்-



    பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,*
    மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,*
    மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,*

    துன்னு வெயில்விரித்த சூளா மணி இமைப்ப,*
    மன்னு மரகதக் குன்றின் மருங்கே,*  -ஓர்-


    இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,*
    அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,*
    மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,*
    முன்னாய தொண்டையாய் கெண்டைக் குலமிரண்டாய்,*

    அன்ன திருவுருவம் நின்றது அறியாதே,*
    என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,*
    பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு*
    மன்னும் மறிகடலும் ஆர்க்கும்,*  -மதியுகுத்த- 


    இன்னிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்.*
    தன்னுடைய தன்மை தவிரத்தான் என்கொலோ?*
    தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,*
    மன்னி இவ்வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,*
    இன்னிளம் பூந்தென்றலும் வீசும் எரியெனக்கே,* 
    முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,*

    பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,*
    என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர்வாளாம் என்செய்கேன்*
    கல்நவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,*
    கொல்நவிலும் பூங்கணைகள் கோத்து பொதவணைந்து,* 
    தன்னுடைய தோள்கழிய வாங்கி,*  -தமியேன்மேல்-


    என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்,*

    பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,*  -பேதையேன்-



    கல்நவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,*
    நல்நறு வாசம் மற்றுரானும் எய்தாமே,*
    மன்னும் வறுநிலத்து வாளாங்கு குத்ததுபோல்,*

    என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,*
    மன்னு மலர்மங்கை மைந்தன்,*  -கணபுரத்து-


    பொன்மலைபோல் நின்றவன்தன் பொன்னகலம் தோயாவேல்*
    என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி

    முன்னிருந்து மூக்கின்று, மூவாமைக் காப்பதோர்
    மன்னும் மருந்தறிவீர் இல்லையே?*  -மால்விடையின்-


    துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்*

    கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு,*  -மாலைவாய்த்-



    மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன்*  -மாமதிகோள்-

    முன்னம் விடுத்த முகில் வண்ணன்,*  -காயாவின்-



    தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்,*
    இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே,*

    கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்,*
    என் இதனைக் காக்குமா? சொல்லீர்,*  -இது விளைத்த-


    சின்ன நறும் பூந் திகழ் வண்ணன்*  -வண்ணம்போல்-
    அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி,*
    மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்,*

    பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து*
    தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை,*  -ஆயிரக்கண்-


    மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்,*
    தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை*

    பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து,*
    கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே,*  -வல்லாளன்-


    மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து,*

    தன்னுடைய தாள்மேல் கிடாத்தி,*  -அவனுடைய- 



    பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த*
    மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை,*
    மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க,*
    பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்,*
    கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை,*

    மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்,*
    மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்,*
    தன்னினுடனே சுழல மலை திரித்து,*  ஆங்கு-
    இன் அமுதம் வானவரை ஊட்டி,*  அவருடைய-
    மன்னும் துயர் கடிந்த வள்ளலை,*  மற்று அன்றியும்.- 


    தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கோர்,*

    மன்னும் குரளுருவின் மாணியாய்,*  -மாவலிதன்-



    பொன்இயலும் வேள்விக்கண் புக்குஇருந்து,* போர்வேந்தர்-
    மன்னை மனம்கொள்ள வஞ்சித்து நெஞ்சுஉருக்கி,*

    'என்னுடைய பாதத்தால் யான்அளப்ப மூவடிமண்,*
    மன்னா! தருக' என்று வாய்திறப்ப,*  -மற்றுஅவனும்-


    'என்னால் தரப்பட்டது' என்றலுமே,*  அத்துணைக்கண்-

    மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேல்எடுத்த- 



    பொன்னார் கனைகழல்கால் ஏழ்உலகும் போய்க்கடந்து,*  அங்கு-
    ஒன்றா அசுரர் துளங்க செலநீட்டி,*

    மன்னிவ் அகல்இடத்தை மாவலியை வஞ்சித்து,*
    தன்உலகம் ஆக்குவித்த தாளனை,*  -தாமரைமேல்-


    மின்இடையாள் நாயகனை விண்நகருள் பொன்மலையை,*
    பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*

    தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
    மன்னிய தண்சேறை வள்ளலை, -மாமலர்மேல்-


    அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
    என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
    கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*

    மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
    பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
    மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்- 


    பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,*
    தொல்நீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,*

    என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,*
    மன்னும் கடல்மல்லை மாயவனை,*  -வானவர்தம்-


    சென்னி மணிச்சுடரை தண்கால் திறல்வலியை,*
    தன்னைப் பிறர்அறியாத் தத்துவத்தை முத்தினை,*

    அன்னத்தை மீனை அரியை அருமறையை,*
    முன்னிவ் உலகுஉண்ட மூர்த்தியை,*  -கோவலூர்- 


    மன்னும் இடைகழி எம் மாயவனை,*  பேய்அலறப்,-

    பின்னும் முலைஉண்ட பிள்ளையை,* -அள்ளல்வாய்-



    அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,*

    தென்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை,*



    மின்னி மழைதவழும் வேங்கடத்து எம் வித்தகனை,*
    மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,*

    கொல்நவிலும் ஆழிப் படையானை,* -கோட்டியூர்-



    மன்னு மதிள்கச்சி வேளுக்கை ஆள்அரியை,*

    மன்னிய பாடகத்து எம் மைந்தனை* -வெஃகாவில்-



    உன்னிய யோகத்து உறக்கத்தை,*  ஊரகத்துள்-
    அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*

    என்னை மனம்கவர்ந்த ஈசனை,* -வானவர்தம்-



    முன்னவனை மூழிக்களத்து விளக்கினை,*
    அன்னவனை ஆதனூர் ஆண்டுஅளக்கும் ஐயனை,*

    நென்னலை இன்றினை நாளையை,* -நீர்மலைமேல்-



    மன்னும் மறைநான்கும் ஆனானை,* புல்லாணித்-
    தென்னன் தமிழை வடமொழியை,*  நாங்கூரில்-

    மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
    நல்நீர் தலைச்சங்க நாள்மதியை,* -நான்வணங்கும்-


    கண்ணனை கண்ண புரத்தானை,* தென்னறையூர்-
    மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
    கல்நவில்தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது*

    என்நிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,*
    தன்அருளும் ஆகமும் தாரானேல்,*  - தன்னைநான்- 


    மின்இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,*
    தன்அடியார் முன்பும் தரணி முழுதுஆளும்,*

    கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்*
    தன்நிலைமை எல்லாம் அறிவிப்பன்,*  -தான்முனநாள்- 


    மின்இடை ஆய்ச்சியர்தம் சேரிக் களவின்கண்,*

    துன்னு படல்திறந்து புக்கு,* -தயிர்வெண்ணெய்- 



    தன்வயிறுஆர விழுங்க,* கொழுங்கயல்கண்-
    மன்னு மடவோர்கள் பற்றிஓர் வான்கயிற்றால்*
    பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,*
    அன்னதுஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்*
    துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,*
    முன்இருந்து முற்றதான் துற்றிய தெற்றெனவும்*
    மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்த்,*

    தன்னை இகழ்ந்துஉரைப்ப தான்முனநாள் சென்றதுவும்,*
    மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,*
    கொல்நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம்ஆடி,*
    என்இவன் என்னப்படுகின்ற ஈடறவும்,*
    தென்இலங்கை ஆட்டி அரக்கர் குலப்பாவை,*
    மன்னன் இராவணன்தன் நல்தங்கை,*  -வாள்எயிற்றுத்-


    துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வுஎய்தி,*
    பொன்நிறம் கொண்டு புலர்ந்துஎழுந்த காமத்தால்,*
    தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கு அரிந்து,*

    மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலைபோலும்,*
    தன்னிகர் ஒன்றுஇல்லாத தாடகையை* (2 ) மாமுனிக்கா-


    தென்உலகம் ஏற்றுவித்த திண்திறலும்* -மற்றுஇவைதான்-
    உன்னி உலவா உலகுஅறிய ஊர்வனநான்,*

    முன்னி முளைத்துஎழுந்து ஓங்கி ஒளிபரந்த,*
    மன்னியபூம் பெண்ணை மடல்