திருக்கூடலூர்

இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங்காத்த பெருமாள்' எனப்படுகிறார்.

அமைவிடம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்,
திருநாகேஸ்வரம்,
கும்பகோணம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.,

தாயார் : ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
மூலவர் : வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: ராமானுஜர்,ஆண்டாள்


திவ்யதேச பாசுரங்கள்

    1358.   
    தாம்*  தம் பெருமை அறியார்*  
    தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*
    காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
    கூந்தல் கமழும்*  கூடலூரே.

        விளக்கம்  


    • எம்பெருமான் தான் ஸர்வஜ்ஞனென்றும் ஸர்வசக்தனென்றும் வேத வேதாந்தங்களினால் ஓதப்பட்டாலும் அவன் தன் பெருமையைத் தானறியவல்லனல்லன்; ‘உனக்கு இவ்வளவு பெருமையுண்டு’ என்று பிறர் சொல்லக்கேட்பவனேயன்றி, தன்பெருமை தானறியானவன். அவனக்குப் பெருமையாவது பரத்வம்பொலிய நிற்குமதன்று; ஏவிக் காரியங் கொள்ளலாம்படி தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கு மிருப்பு இங்குப் பெருமை யெனப்படுகிறது. இப்பெருமையை மூதலிக்கிறார் “தூது வேந்தர்க்காய வேந்தர்” என்பதனால். பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்ற பாண்டவதூதனென்று பேர்பெற்றான்; இப்படி இவன் இழிதொழில் செய்தாலும் ‘பராத்பரனா யிருப்பவன் இப்படி இழிதொழில் செய்யப்பெறுவதே!’ என்று அறிவித்திறந்தோர் ஈடுபடும்படி யிருக்குமத்தனையன்றி இழிவகக்கருத இடமில்லையே; ராஜாதிராஜன் என்கிற பெருமையும் மிக்குத்தோன்றுமென்கிறார் – “வேந்தர்க்குத் தூ தாய வேந்தர்” என்பதனால். இப்படி பரத்வஸௌலப்யங்கள் விகல்பிக்கலாம்படியுள்ள எம்பெருமான் திருக்கூடலூரிலுள்ளான். அவ்வூர் எத்தகையதென்னில்; செங்காந்தள் மலர்போன்ற விரல்களையுடையரும் மெல்லிய அழகிய ஆடைகளை அணிந்தவர்களுமான நன்மடவார்களின் கூந்தல் மணம் கமழப்பெற்றதாம்.


    1359.   
    செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
    பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*
    நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
    குறிஞ்சி பாடும்*  கூடலூரே.

        விளக்கம்  


    • ஏறு உடைய பின்னை = ரிஷபங்களை யுடையளான நப்பின்னை என்றதாகக் கொண்டு, ரிஷபங்களின் வலியடக்குதலைத் தனக்கு சுல்கமாகவுடைய நப்பின்னை என்னவுமாம். கோலம் - அழகுக்கும் உடம்புக்கும் பெயர். மூன்றாமடியில் ‘தண்டீன்’ என்று பலரும் ஓதுவது பொருந்தாது. ‘தண்டீம்’ என்றே ஓதுக. தண் + தீம், தண்டீம். தீம் - இனிமை


    1360.   
    பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
    உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*
    கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
    கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.

        விளக்கம்  


    • ஸர்வேச்வரனாயிருந்துகொண்டு தயிருண்ணப் பார்த்தால் அவ்விருப்பம் நிறைவேறாதென்று அதற்காகப் பிள்ளை வடிவுகொண்டு தயிரமுது செய்து, இப்படி ஆச்ரிதருடைய ஹஸ்தஸ்பர்சம் பெற்ற த்வவ்யத்தாலன்றி வேறொன்றாலும் செல்லாத நீர்மையைக் காட்டி என்னெஞ்சை வசப்படுத்திக்கொண்ட விலக்ஷணபுருஷன் விரும்பியுறையுமிடம் திருக்கூடலூர். (கள்ளநாரை யித்யாதி.) நாரைகள் நீர்நிலைகளிற் சென்று உட்கார்ந்திருக்கும்; அவற்றின் காலிலே சிறுமீன்கள் வந்து குத்தும்; குத்தினாலும் “உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு” என்றாப்போலே அவற்றை அநாதரித்திருந்து தாம் விரும்பி உட்கொள்ளும் பெருமீன்கள் வந்து கிட்டினவாறே மேல்விழுந்து கொள்ளைகொள்ளும்.


    1361.   
    கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
    ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*
    சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
    கோல் தேன் முரலும்*  கூடலூரே.

        விளக்கம்  


    • ‘இப்படியும் விலக்ஷணமானதொரு வாமநவேஷம் உலகிலுண்டோ’ என்று கண்டாரடங்கலுங் கொண்டாடத் தகுந்த வாமந மூர்த்தியாய் மாவலிபக்கலிற் சென்று பூமிதாநம் வாங்கின பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். (சேற்றேழுவர் இத்யாதி.) அவ்விடத்து ஏர்பிடித்து உழுகின்றவர்களும் முடியிற் பூவணிந்திருப்பர்களென்று காட்டியவாறு. க்ஷேத்ர வைபவங்களில் இதுவுமொன்றாம். “கோதைப்போதுண்” என்ற பாடத்தில், உண் - உண்கிற’ என்று பொருளாம். ‘போதூண்’ என்றபாடத்தில், ஊண் முதனிலை திரிந்து தொழிற்பெயர். கோல் தேன் - மரக்கொம்புகளிலே தட்டித்திரியும் வண்டுகள் என்கை. இவை தமக்கு வாய்த்த இடங்களை விட்டிட்டு, சேற்றேருழுவர்களது தலைப்பூக்களிலே மதுவில் நசையாலே திரிகின்றனவாம்


    1362.   
    தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
    அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*
    வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
    கொண்டல் அதிரும்*  கூடலூரே. 

        விளக்கம்  


    • ‘தொண்டர்பால்’ என்றது உலகளக்குங் காலத்தில் ஆங்காங்குள்ள தொண்டர்கள் ஏத்தினபடியைச் சொன்னவாறு. ‘சுடர் சென்றணவ’ என்றது மேலே ஜ்யோதிர்மண்டலத்தளவும் ஓங்கினபடியைச் சொன்னவாறு. ஆகவிப்படி ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் திருக்கூடலூர். (வண்டலலையுள் இத்யாதி.) வண்டலிட்டிருக்கும் நீர்நிலங்களிலே கெண்டை மீன்கள் செருக்காலே துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல் மின்னினாற்போலேயிருக்கும் ; அதனைக்கண்ட மேகங்கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னலின் ஒளியே யென்று நினைத்து மின்னலுக்கு அடுத்தபடியாக வுண்டாகவேண்டிய கர்ஜனையைச் செய்கின்றனவாம்.


    1363.   
    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*
    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.

        விளக்கம்  


    • சங்கரன் கொண்ட சாபத்தைத் தீர்த்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். (எக்கல் இத்யாதி.) வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கிறபடியைப் பார்த்தால் பழுக்கைக்குப் பதித்துவைத்தாற் போன்றுள்ள தென்னலாம்.


    1364.   
    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*
    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.

        விளக்கம்  


    • கடல்கள் மலைகள் முதலானவற்றோடு கூடிய லோகங்களை யெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸர்வேச்வரன் வாழுமிடம் திருக்கூடலூர். முல்லைக்கொடிகள் குருந்த மருத்தை முட்டாக்கிட்டுப் படர்ந்திருக்கின்றனவாம் அங்கு.


    1365.   
    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*
    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.

        விளக்கம்  


    • (இலைதாழ் இத்யாதி.) படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டான இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிற போது, குளங்களை இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்துவைத்தாற்போலே யிருக்குமாயிற்று. நின்ற + இளநீர், நின்றிளநீர்; தொகுத்தல்.


    1366.   
    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 
    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    

        விளக்கம்  


    • நாட் செல்ல நாட் செல்ல ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள காதலைக் கொண்ட அடியேனுடைய ஹ்ருதயம் உருகும்ப்டியாக உட்புகுந்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். அங்கே வாய்க்காற் கரைகளில் தாழம்பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள் குருகுகள் நம்மை இரை கொள்வதற்காக வந்து ஸ்தப்தமாய் நிற்கின்றன போலும்’ என்றெண்ணி அஞ்சி யொளிக்கின்றனவாம். கைதை – ‘கேதகீ’ என்னும் வடசொல்விகாரம். குருகு – கொக்கு.


    1367.   
    காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
    மேவித் திகழும்*  கூடலூர்மேல்*
    கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
    பாவைப் பாட*  பாவம் போமே.

        விளக்கம்  


    • காவி – நீலோற்பலம். காவிப் பெருநீர் – உம்மைத்தொகை. கோவைத் தமிழ் - ஒழுங்கான தமிழ். கோக்கப்பட்ட மாலைக்கும் கோவை யென்று பெயராதலால், மாலைபோல் போக்கியமான தமிழ் என்னவுமாம்.