திரு தொலைவில்லிமங்கலம்

திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.[1] தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்

பெயர்: திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் ஊர்: திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) மாவட்டம்: தூத்துக்குடி மாநிலம்: தமிழ்நாடு phone:+91-435 - 247 0480.,

தாயார் : ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன்
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : திருநெல்வேலி
கடவுளர்கள்: தேவபிரான் ,ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    3387.   
    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 
    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      

        விளக்கம்  


    • (துவளில் மாமணிமாடம்) ஸ்ரீ ஜநகராஜன் திருமகள் பிறந்தபோது சோதிடர்களை வரவழைத்து ‘இவளுடைய அத்ருஷ்ட பாகங்கள் எப்படியிருக்கிறது சொல்லுங்கோள்‘ என்று கேட்கையில், சோதிடர்கள் பார்த்து “இவளுடைய பாக்கியம் மிக நன்றாகயிருக்கிறது. ஒரு குறையுமில்லை. ஸார்வபௌமனாயிருப்பா னொருவனைக் கைப்பிடிப்பாள், ஆனால் வநவாஸம் அநுபவிக்கநேரும்“ என்றார்களாம். அப்படியே இப்பராங்குசநாயகி பிறந்தபோதும் இவளது திருத்தாயார் முதலானார் சோதிடர்களை அழைத்து பாக்ய விசேஷங்கள் விசாரிக்கையில் “எல்லாம் நன்றாகவே யிருக்கிறது. இவள் உயர்வறவுயர் நலமுடையனான அயர்வறும்மார்களதிபதியால் மயர்வறமதிநலமருளப்பெறுவள், உலகம் நிறைந்த புகழ்பெறுவள், தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுவள்“ என்று பலவும் சொல்லிவிட்டு, ‘ஆனால் இவளுக்கு ஓர்அபம்ருத்யுவுண்டு, அது என்னென்னில், இவளைத் தூலைவில்லிமங்கலத்திலே நீங்கள் கொண்டு சென்றீர்களாகில் இவளை இழக்க நேரும், ஆகவே அங்குக்கொண்டு போகாமலிருந்தீர்களாகில் இவளோடே கூடி நிங்கள் நெடுங்காலம் வாழலாம், இந்த வொரு கண்டத்துக்கு தப்பிப்பழைப்பது கஷ்டமே, என்று சோதிடர்கள் சொல்லியிருந்தார்களாம். ஆகிலும் இவளைத் துலைவில்லிமங்கலத்தில் கொண்டுபோகாதிருக்கும்படியான குடியன்றே. இவளைப்பெறுவோமானாலும் சரி, இழப்போமானாலும் சரி, அங்கு அழைத்துக்கொண்டுபோய் ஸேவை பண்ணிவைத்தே தீருவது என்றிருக்கும் குடியாகையாலே அப்படியேசெய்து போரநேர்ந்தது. அதனால் விளைந்த அநர்தத்தைத் தோழி எடுத்துரைக்கிறேன்.


    3388.   
    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 
    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.

        விளக்கம்  


    • (குமிறுமேசை) ஸாதாரணமாகத் துலைவில்லித் திருப்பதியின் ஸந்நிவேசந்தானே ஆகர்ஷகமாயிருகும், அதுதன்னிலும் உத்ஸவகாகலங்களில் சென்றாலோ “வேதவொலியும் விழாவொலியும்“ என்றாற்போலே பலவகையான த்வனிகள் செவியமுதமாகக் கேட்டகப்பெற்று அங்கு நின்றும் கால்பேரவொண்ணாதபடி யிருக்கும். அப்படிப்பட்ட உத்ஸவகாலகங்களிலும் தாய்மார் இப்பெண்பிள்ளையை அங்கு அழைத்துக்கொண்டு செல்லுகையாலே ஈடுபாடு அதிகமாயிற்றென்கிறான் தோழி. குமிறுமோசைவிழவொலி என்ற விடத்துப் பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி-•••••தேஷாம் புண்யாஹகோஷோத கம்பீரமதுரஸ்வந, அயோத்யாம் பூரயாமாஸ தூர்யநாதாநுநாதிக, * என்று, ஒத்துச் சொல்லுவார் ஸங்கீர்த்தாம் பண்ணுவார் பாடுவார் இயல்விண்ணப்பஞ் செய்வாராய் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகிற த்வநியையுடைய திருநாளிலாரவாரம். பாவியேன்! இத் த்வநி செவிப்பட்டால் கொண்டு மீளவன்றோவெடுப்பது, இவ்விடம் பிள்ளைகொல்லி‘ என்று கூப்பிடுமாபோலே காணும் த்வநியிருப்பது. அவ்வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக் கொண்டு புகுவாருண்டோ?


    3389.   
    கரை கொள் பைம் பொழில் தண்பணைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    உரை கொள் இன் மொழியாளை*  நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*
    திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்*  திசை ஞாலம் தாவி அளந்ததும்,* 
    நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி*  நெடும் கண் நீர் மல்க நிற்குமே. 

        விளக்கம்  


    • (கரைகொள்) இப் பெண்பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ? தாமிரபர்ணியின் கரையை விளாக்குலைகொண்டிருக்கின்ற இவள் அத்திருப்பதிதன்னிலேயே யீடுபட்டு உங்களோடு உறவு அறும்படியானாள், க்ஷீரஸாகர சயனத்தையும் த்ரிவிக்கரமாபதானத்தையும் ஆநிரைமேய்த்தபடியையுமே பிதற்றிக்கொண்டு கிடக்கிறவளை இனி நீங்கள் உங்கள் மகளென்று அபிமானிக்க ப்ராப்தியுண்டோ வென்று அன்னையர்க்குத் தோழிமார் உரைக்கின்றார்கள். “கரைகொள்பைம்பொழில்“ என்றவிடத்திற்குத் தாத்பர்யார்த்த மருளிச்செய்கிறார் நம்பிள்ளை –“அத்திருச் சோலைய உங்களுடைய ஹிதவசனத்தாலே பேர்த்துக்கொடுப்போமன்று அன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது“ என்று. ஆற்றங்கரையிலே சோலைகளையும் அத்தலத்தலே பொருந்திவிட்டாள், அச்சோலைகளைக்குறித்து ஹிதவசனம் எப்படிப் பயன்படாதோ அப்படியே இவளைக்குறித்தும் இனி ஹிதவசனம் பயன்படாது என்றவாறு.


    3390.   
    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 
    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            

        விளக்கம்  


    • (நிற்கும் நான்மறை) துலைவில்லித் திருப்பதிக்கு இவளை அழைத்துச் சென்றவர்கள் அங்கே வேதபாராயண வைபவங்களையும் கேட்பிக்கவேணுமோ? நான்கு வேதங்களிலும் பாரங்கதரானவர்கள் அங்கே வேதாத்யயனங்கள் செய்யுமழகைக்கண்டாள், இந்த வேதங்கலையெல்லாம் ஆதியிலே நான்முகனுக்கு உபதேசித்தவனன்றோ நம்பெருமான் என்று அவ்வழியாலே அவனிடத்துக் காதல் மிகப்பெற்றாள், அவனது கட்டளையான நான்மறைகளையும் ஓதுகின்ற பரமபாகவதர்களன்றோ இவர்களென்று ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பக்திப்பெருங்காதல் கொள்ளப்பெற்றாள், இப்படி பகவத்பாகவத பக்தியே வடிவெடுத்தவளான இவளை ஸம்ஸாரிகளான நீங்கள் இனி உறவுகொண்டாடி விரும்பத் தகுதியுண்டோ வென்கிறாள் தோழி. அற்கமொன்றும் அறவுறாள் – ஸ்த்ரீகளுக்கு முக்கிய லக்ஷணமான அடக்கம் அடியோடேபோயிற்று. மலிந்தாள்கண்டீர் – இருக்கவேண்டிய மரியாதையை மீறிநின்றாள். திருமங்கையாழ்வார் * என்சிறகின்கீழடங்காப் பெண்ணைப்பெற்றேன் * என்று தாய்சொல்லாலே பேசின அர்த்தம் இங்குத் தோழி பேச்சாலே வெளிவந்த்தாயிற்று.


    3391.   
    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 
    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.

        விளக்கம்  


    • உரை:1

      (குழையும் வாண்முகத்து) ஏற்கனவே இவளுடைய ப்ரக்ருதி உங்களுக்குத் தெரிந்திருந்தும் இவளைத் துலைவில்லிமங்கலத்தேறக் கொண்டு சென்று தேவபிரானுடைய வடிவழகைக்காட்டிக்கொடுத்தீர்கள் நீங்களே யென்கிறாள் தோழி. குழையும் என்பதம் வாண்முகத்து என்பதும் தலைவிக்குத் தனித்தின விசேஷணங்கள். பகவத்விஷயமென்றால் ஊன்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பவளாயும், •••• என்கிறாப்போலே அகத்திலுள்ள வைலக்ஷண்யமெல்லாம் முகத்திலே தெரியும்படி யிருப்பவவாயுமுள்ள இவ்வேழையை என்றபடி. ஏழையை என்பதற்கு “கிடையாதென்றாலும் மீளமாட்டாத சாபலத்தையுடையவளை“ என்பது ஈடு. ஏழை யென்பதற்கு அறிவில்லாதவளென்று பொருளாய் அதிலிருந்து கிடைத்த தாற்பரியாத்தாம் இது. “நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை, பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம்“ என்பவாதலால் ஏழையென்ற சொல் அறிவிலியென்று பொருள்படக் குறையில்லை.

      உரை:2

      குழையும் மென்மையான ஒளி கூடிய முகமும் உடையவள் ; இவளைத் தொலைவில்லி மங்கலத்துக்குக் கொண்டு அவன் இருப்பைக் காட்டினீர்கள். மீளாத சபலம் உடைய இவள் பெருமானின் சுய ஒளி வீசும் தாமரைக் கண்களின் அழகில் ஈடுபட்டாள். அவன் வடிவழகு கண்டதிலிருந்து மழை நீர் போலக் கண்ணீர் வடிக்கிறாள். தேவபிரான் இருக்கும் திசையையே பார்க்கிறாள்.


    3392.   
    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 
    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        

        விளக்கம்  


    • நோக்கும்பக்கமெல்லாம்) இப்பெண்பிள்ளை பெரும்பாலும் மோஹித்திருக்குமிருப்பேயல்லது கண்ணைத்திறந்து பார்ப்பதென்கிற கதையேயில்லை, ஒருகால் பார்த்தாளாகில் அத்திருப்பதியுள்ள விடமொழிய மற்றோரிடமும் பார்ப்பதில்லை யென்கிறாள் தோழி. எந்தவிடம் பார்த்தாலும் கருப்பஞ்சோலையும் செந்நெற் பயிர்களும் தாமரைக் காடுமாகவே திகழாநின்ற தாமிரபர்ணியின் வடகரையிலே விளங்குமதான துலைவில்லித் திருப்பதியையன்றி மற்றொருதிக்கைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை, வாய்கொண்டு பேசப்புகுந்தாலோ வாயில்வரும் பேச்செல்லாம் மணிவண்ணனான அப்பெருமானுடைய திருநாமமாயிருக்குமே யல்லது வேறொன்றும் இவளது வாயில் வாராது என்றவாறு. கரும்பு செந்நெல் செந்தாமரை என்னுமிவை ஸ்வாபதேசப் பொருளில் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் விலக்ஷணப்ரக்ருதியைத் தெரிவிப்பனவாம். கரும்பு என்றது மதுர ப்ரக்ருதிகள் என்கை. செந்நெல் என்றது * வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே * என்று பெரியாழ்வாரருளிச்செய்தபடி, வித்யைகள் நிரம்பப்பெற்று விநயமே வடிவெடுத்திருக்கும்படி சொன்னவாறு. செந்தாமரை யென்றது – ஸாரக்ராஹிகளால் ஸேவிக்கப்படுந்தன்மை சொன்னபடி. ஆக, மதுரப்ரக்ருதிகளாய், வித்யாவிநய ஸம்பந்நர்கவாய், மதுகாவ்ருத்திகளால் ஆச்ரயிக்கப்பட்டவர்களான ஸ்ரீவைஷ்ணவ சிகாமணிகள் நிரம்பிய தலம் என்றதாயிற்று.


    3393.   
    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 
    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   

        விளக்கம்  


    • (அன்னைமீரணிமாமயில்) சில வஸ்துக்கள் ஆச்ரயபலத்தாலே மேன்மைபெறுவது என்றுண்டு, •••• தந்யாநி ஸ்தலவைபவோகதிசித் வஸ்தூநி * என்றார்கள் கவிகளும். எம்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும் இப்பெண்பிள்ளைவாயில் நுழைந்து புறப்படுகையாலே போலும் அழகுபெற்றன என்கிறாள் தோழி. அணிமாமயில் சிறுமானிவள் – மயில் தோகை போன்ற கூந்தலையுடையையாலே வளா யிராநின்ற இப்பெண்பிள்ளை * என் சிறகின்கீழடங்காப் பெண்ணைப்பெற்றேன். * என்னுமாபோலே நம் கை கடந்து அந்தோ! தோழியான என்னுடைய வார்த்தையிலும் ஆதரமற்றவளானாள், துலைவில்லித் திருப்பதியைப்பற்றி நான் பேசப்புகுந்தால் அப்போது என் வார்த்தைக்குக் காதுகொடுக்கிறாளே யல்லது வேறு எந்த வார்த்தைக்கும் செவிதாழ்க்கிறாவல்லள் என்கிறாள் முன்னடிகளால். ஆழ்வாருடைய பெருமை ஆர்க்கும் நிலமன்று என்று காட்டுகிறது மூன்றாமடி. முன்னம் நோற்ற விதிகொலோ? இந்த ஜன்மத்திலே இவள் ஒரு ஸுக்ருதம் பண்ணினதாகத் தெரிந்ததில்லை, ஜந்மாந்தர ஸஹஸ்ர ஸஞ்சிதமான ஸுக்ருத விசேஷங்கள் திரண்டு இங்ஙனே பலித்தபடியோ! அல்லது, முகில் வண்ணன் மாயங்கொலோ? எம்பெருமானுடைய விலக்ஷண ஸங்கல்பத்தினாலே இப்படி திருந்தினபடியோ? என்கை. ஒரு சேதநன் தன் முயற்சியினாலே ஸாதிக்கிற அசேதந க்ரயைக்கு இவ்வளவு பலன் பெறுவிக்க சக்தியில்லாமையாலே ‘முன்னம் நேரற்ற விதிகொலோ‘ என்று ஸந்தேஹிக்கலாயிற்று. எம்பெருமானுடைய ஸங்கல்பம் இதற்கு முன்பு இப்படி ஒரு வ்யக்தியிலும் பலிக்கக் காணாமையாலே ‘முகில்வண்ணன் மாயங்கொலோ‘ என்று இதுதன்னிலும் ஸந்தேஹிக்கலாயிற்று.


    3394.   
    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 
    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      

        விளக்கம்  


    • (திருந்து வேதமும்) துலைவில்லித் திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற அந்நாள் தொடங்கி இப்பெண்பிள்ளை அத்தலத்து எம்பெருமானது கண்ணழகிலேயே யீடுபட்டுத் தளராநின்றாளென்கிறது. வேதபாராயணங்களும் யஜஞயாகங்களும் ஸம்ருத்தமாய் ஸ்ரீதேவி பூதேவிகளோடே எழுந்தருளியிருக்கப்பெற்ற திருப்பதியென்று தலத்தின் மகிமை கூறுவன முன்னடிகள். திருந்து வேதம் – ஸ்வரவர்ணக்ரமங்கள் ஒன்றும் பிறழாமே எப்போதும் எவ்விடத்தும் ஒழுங்குபட விளங்கப்பெற்ற வேதம் என்றபடி. வேள்வி – அந்த வேதங்களில் ஓதப்பட்ட பகவதாராதந க்ரியா கலாபங்கள். திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழ், திருமாமகளிரும் தாமும் இருந்துவாழ் என்று யோஜித்துக்கொள்ளலாம். கருந்தடங்கண்ணி – வெளிக்கண்ணின் அழகுசொன்னவிது ஸ்வாபதேசத்தில் உட்கண்ணின் அழகு சொன்னபடி. கரியகோலப்பிரானை விஷயீகரிக்கின்ற விசாலமான ஞானக்கண் படைத்தவர் ஆழ்வார் என்றபடி. இருந்திருந்து அரவிந்தலோசன வென்றென்றே – இங்கே ஈடு – “ஒருகால் அரவிந்தலோசன! என்னும்போது நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்“ என்று. அதாவது – திருநாமத்தைச் சொல்லவேணுமென்று தொடங்கும் போதே நைந்து உள்கரைந்து உருகுகிறபடியாலே நெடுகச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்கின்றமை சொன்னவாறு.


    3395.   
    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 
    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     

        விளக்கம்  


    • (இரங்கிநாடொறும்) இவளைத் துலைவில்லித் திருப்பதியிலே கொண்டுபுக்கு அவ்வூர்த்திருநாமத்தை நீங்கள் கற்பிக்க இவள் கற்றதற்பின் அநவரதமும் அவன் திருநாமத்தையே வெருவி அஃறிணைப் பொருள்களுங்கூடக் கரையும்படி மஹத்தான ஆர்த்தியோடே ஓமணிவண்ணாவென்று கூப்பிட்டழைத்துத் துலைவில்லிமங்கலமென்று சொல்லித் தன் கைகளைக் கூப்பித் தொழுகின்றாள், அன்னைமீர்! இதெல்லாம் உங்களாலே வந்ததத்தனை என்கிறாள் தோழி. மரங்களுமிரங்கும்வகை என்றது – பகவத்விஷயத்தில் ஈடுபாடில்லாமையாலே அசேதந ப்ராயர்களான அறிவிலிகளுங்கூட ஈடுபடும்படியாயிற்று என்கை. மரங்களும் இரங்கக்கூடுமோவென்று எம்பாரைச் சிலர் கேட்டார்களாம். அதற்கு அவர் அருளிச்செய்த உத்தரம் – இத்திருவாய்மொழி அவதரித்தவன்று தொடங்கி பாவசுத்தியில்லாத எத்தனைபேர்களுடைய வாயிலே இது புகுந்த்தென்று தெரியாது, இங்ஙனேயிருக்கச்செய்தே, யமநியமாதிக்ரமத்தாலே இன்று அழிகிறபடிகண்டால் மைகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்றாம். கண்ணபிரான் புல்லாங் குழலூதும்போது * மரங்கள் நின்று மதுதாரைகள்பாயும் மலர்கள் விழும் வளர் கொம்புகள் தாழும் * என்னும்படியானதெல்லாம் ஆழ்வாருடைய ஆர்த்தநாதத்திலும் ஆகச்சொல்லவேணுமோ?


    3396.   
    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 
    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        

        விளக்கம்  


    • (பின்னைகொல்) பராங்குசநாயகியின் ப்ராவண்யமிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கீக்கின்றமை கூறுகிறது இப்பாட்டில், ஆழ்வார் க்ருஷ்ணாவதாரத்திலே யீடுபட்டிருக்குந் தன்மையை நோக்குங்கால்,ஸாக்ஷாத் நம்பின்னைப்பிராட்டிதானோ! என்னவேணும். வராஹப்பெருமான் திறத்தில் ஈடுபட்டிற்குந் தன்மையை நோக்கக்கக்கு மளவில் ஸாக்ஷாத் பூமிப்பிராட்டிதானோ! என்னாலாகும். ஸ்ரீராமவதாரத வீடுபட்டை நோக்கினால் ஸாக்ஷாத் ஸீதாபிராட்டிதானோ! ப்ராப்தம். பின்னைகொல் * எருதேழ்தழீஇக் கோளியார் கோவலனார் குடக்கூத்தனால் தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளுநாள் நைகின்றது * என்று, ஏறுதழுவுகை முதலான செயல்களையுடைய கண்ணபிரான் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்பட்டு நாள்தோறும் சைதில்யத்தை யடைவது, * கறையினார் துவருடுக்கை கடையாவின்கழிகோல்கைச் சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே * என்று கண்ணபிரான் விரும்பாத நிறம் எனக்கு வேண்டாவென்பதாய்ப் பேசின பாசுரங்களில் நப்பின்னைப் பிராட்டியின் ஸாம்யம்தோன்றும்.


    3397.   
    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 
    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே

        விளக்கம்  


    • (சிந்தையாலும்) இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. மநோவாக்காயங்களென்கிற மூன்று உறுப்புக்களாலும் தேவபிரானையே ஸகலவித பந்துவுமாகக்கொண்ட ஆழ்வார் அருளிய ஆயிரத்தினுள் துலைவில்லித் திருப்பத விஷயமான இத்திருவாய்மொழியை அதிகிக்க வல்லவர்கள் பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமைசெய்யப்பெறுவர்கள் என்றதாயிற்று. முந்தையாயிரம் அநாதியான ஆயிரம் என்றபடி. ஆழ்வார் திருவாக்கில் நின்றும் அவதரித்தான் இத்திவ்வியப் பிரபந்தம் அநாதியானதென்று எங்ஙனம் சொல்லக்கூடுமென்று சிலர் சங்கிக்கலாம், இதற்கு ஆசார்யஹ்ருதயத்தில் விரிவான ஸமாதானமருளிச்செய்யப்பட்டுள்ளது. அதில், “வேதநூல் இருத்தமிழ்நூல் ஆஜ்ஞை ஆணை வசையில் ஏதமில் சுதி செவிக்கினிய ஒதுகின்றதுண்மை பொய்யில்பாடல் பண்டைநிற்கும் முந்தையழிவில்லா வென்னும் லக்ஷணங்களொக்கும்“ என்ற சூர்ணையினால் ஸம்ஸ்க்ருதவேத ஸாம்யத்தை நிர்வஹித்தருளி, “சொல்லப்பட்ட வென்ற விதி கர்த்துத்வம் ஸ்ம்ருதி அத்தை ஜ்வம்ப்படைத்தா னென்றது போலே“ என்ற மேல் சூர்ணையினால் ப்ரக்ருத சஙகாபரிஹாரம் செய்யப்பட்டது. ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு எப்படி கர்த்தா இன்னாரென்று தெரியாமலிக்கிறதோ அப்படியே இத்திவ்யப்பிரபந்தத்திற்கும் கர்த்தா தெரியாமலிக்கவேண்டாவோ? அப்படியன்றிக்கே “குருகூர்ச்சடகோபன் சொல்லப்பட்ட வாயிரம்“ என்று இதில் ஆழ்வார்க்கு கர்த்ருத்வம் ஸ்பஷ்டமாகத் தெரிகின்றதே! இது எங்ஙனே பொருந்தும்படி? என்று சங்கித்துக்கொண்டு, ••• ஸ்ருதியானது அந்த வேதத்தை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தானென்று சொல்லியிருப்பதை நிர்வஹிக்குமாபோலே இதையும் நிர்வஹிக்கக் குறையில்லையென்று ஸமாதானம் காட்டப்பட்டது. மேலும் விரிவு காண்க.