திருச்சேறை

தலபுராணம்:- உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை". சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்தஅமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.[3] திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.

அமைவிடம்

முகவரி:- ஸ்ரீ சரநாத பெருமாள் கோவில் ,
திருச்சேறை,
தஞ்சாவூர்(மாவட்டம்). தொலைபேசி : +91 0435-2468078,
435-2468001.9444104374,
,

தாயார் : ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
மூலவர் : ஸ்ரீ சாரநாதன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: விஷ்னு,நீலதேவி,பூமாதேவி,


திவ்யதேச பாசுரங்கள்

    1578.   
    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*
    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*

        விளக்கம்  


    • சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாட மாளிகைகள் நிறைந்த திருச் சேறையி லெழுந்தருளி யிருக்கும் எம்பெருமானை நோக்கி ‘பூதனையை முடித்த சிறுகுழந்தாய்!’ என்றும் ‘நித்யஸூரிகட்குத் தலைவனே!’ என்றும் சொல்லி அவனுடைய பரத்வஸௌலப்யங்களைப் போற்றி உருகுகின்ற பாகவதர்கள் எவரோ, அவர்கள் என்தலைமேல் வீற்றிருக்கவுரியார் என்கிறார். மாமதலாய்! = பிள்ளைத்தனத்தில் குறையற்றவனே! என்றபடி. ‘மதலை’ என்பதன் விளி ‘மதலாய்’ என்றாம். இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ப்ரவேசத்தில் – “பிள்ளை யழகிய மணவாளரரையர் கரையே போகாநிற்க, ‘உள்ளே மாமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?’ என்ன; ‘ஆர்தான் திருமங்கையாழ்வாருடைய பசைந்த 1. வளையத்திலே கால்வைக்கவல்லார்?’ என்றருளிச் செய்தார்” என்றுள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கவை. இவ்வாக்கியத்தின் கருத்து யாதெனில்; பிள்ளையழகிய மணவாளரரையர் என்பவர் காரியவிசேஷமாய்த் திருச்சேறைவழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுமட் புகாமல் வயல்வழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுட் புகாமல் வயல்வழியே போய்க்கொண்டிருந்தார்; அங்கு அவரைக்கண்ட வொருவர் ‘வயல்வழியே போவானேன்? திருப்பதியினுள்ளே புகுந்து ஸாரநாதப்பெருமாளை ஸேவித்துப் போகாலாகாதோ?’ என்று கேட்க; அதற்கு அரையர் சமத்காரமாக ஒரு உத்தரமுரைத்தார்; (யாதெனில்;) இத்திருப்பதி விஷயமாகப் பாசுரமுரைத்த திருமங்கையாழ்வார் “தண்சேறையெம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே” என்றார்; அப்பாசுரத்தின்படி, திருச்சோறை யெம்பெருமானை ஸேவிப்பவர்கள் ஆழ்வாருடைய திருமுடியின்மே லேறவேண்டியதாகுமே; அது நமக்குப் பெருத்த அபசாரமாகுமே; அதற்கு அஞ்சியே உள்ளுப்புகாமல் கரையோரமே போய்விடுகிறேன் என்றாராம். இது ரஸோக்தியேயன்றி வேறில்லை, திருச்சேறை யெம்பெருமான ஸேவிப்பவர்கள் பக்கலில் ஆழ்வார் வஹித்திருக்கும் ப்ரதிபத்தியை விளங்கக்காட்டினபடி.


    1579.   
    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 
    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  

        விளக்கம்  


    • அழகிய திருப்புருவங்களோடும் நீண்ட திருக்கண்களோடுங் கூடின பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்துக் கொண்டிருப்பவனும், முள்ளைக்கொண்டே முள்ளைக் களைவதுபோல, கன்றினுருவங் கொண்டுவந்த ஒரு அஸுரனைக் கொண்டு விளாமரமாய் நின்ற மற்றோரஸுரன்மேல் வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும், அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருச்சேறையில் ஆகாசத்தளவும் ஓங்கியுள்ள ஸந்நிதியில் நித்யவாஸஞ்செய்தருள்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிப்பவர்கள் ஒருநொடிப் பொழுதும் எனது நெஞ்சைவிட்டுப் பிரியாதிருக்கின்றனர் என்றாராயிற்று.


    1580.   
    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*
    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     

        விளக்கம்  


    • எவ்வகையான இடையூறுக்கும் நிலமன்றியே நலமந்த மில்லதோர் நாடாகிய பரமபதத்திலே யிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதில் அருமையொன்றுமில்லை; இருள் தருமா ஞாலமாகிய இந்நிலத்திலிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதே அரிதாதலால் அங்ஙனஞ் செய்பவர்கள் நித்தியஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்டவர்களேயாகக் குறையில்லை யென்க. பாற்கடல் பாம்பணைமேல் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே” என்ற திருவிருத்தமும் நோக்கத்தக்கது.


    1581.   
    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்
    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.

        விளக்கம்  


    • எம்பெருமானைப் பிரிந்து நெடுநாள் தரித்திருப்பினு மிருப்பேன்; பாகவதர்களைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்ககில்லே னென்கிறார். தேர்வீரனான இராவணனுடைய படைவீடான இலங்காபுரியைப் பொடிபடுத்தின பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை யெம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப்பாடும் பெருமையுடையார் எவரோ, அவரை ஒருகாலும் பிரியமாட்டே னென்றாராயிற்று. கீதையில் “ஸ மஹாத்மா” என்றும் “மஹாத்மாந” என்றும் அவன்றானே சொல்லிப் போந்தவர்களையாயிற்று இவர் ‘பெரியோர்’ என்கிறது.


    1582.   
    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.

        விளக்கம்  


    • தமக்கு பாகவத பக்தி மிக்கிருக்கக் காண்கையாலே அது காரணமாகப் பகவத்பக்தி குறையற்றிருக்கு மென்கிறாரிதில். ப்ரஹ்லாதாழ்வானைக் காத்தருளவேண்டி நரசிங்கமூர்த்தியாய்த் தூணில் தோன்றி ஹிரண்யாஸுரனுடைய மிடுக்கை யொழித்த முழுமுதற்கடவுளான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதனாயிருப்பே னத்தனையன்றி இப்படியிருக்ககில்லாத ஜைநர் பௌத்தர் முதலானாருடைய திரளிலே சேரக்கடவேனல்லேன் என்றார் முன்னடிகளில். இங்ஙனே உம்மால் தி்ண்ணிதாகச் சொல்லக்கூடுமோ? எது கொண்டு இங்ஙனே நீர் சொல்லுகிறீர்? என்று கேட்பார்க்கு உத்தரமாகப் பின்னடிகளருளிச் செய்கிறார்;- பரமபோக்கியமான திருச்சேறையிலெழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப்பெருமாளுடைய திருவடிகளைத் தினந்தோறும் சிந்திக்கின்ற பாகவதர்களை நினைத்த மாத்திரத்தில் என்னுள்ளமானது தேனூறித் தித்திக்கின்றதே, இஃது ஒன்றே போராதோ? ஜைந பௌத்தாதிகளின் திரளிலே புகுதற்குரிய விதி எனக்கு இருக்குமானால் இப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவ ப்ராவண்யம் எனக்கு உண்டாகக்கூடுமோ? பாக்ய விசேஷத்தால் இஃது உண்டாகக் காண்கையினால் முன்னடிகளிற் சொன்னபொருள் கல்வெட்டுக் காண்மின் என்கை.


    1583.   
    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*
    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.

        விளக்கம்  


    • முன்பு வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹாவராஹ மூர்த்தியாய், அண்டபித்தியிலே சேர்ந்திருந்த பூமியை அதில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்துக் கொணர்ந்த நீர்மையை யுடையவனே! என்று இடையறாதே சொல்லிக்கொண்டு அந்நீர்மையிலே தோற்று உனது திருவடிகளே எனக்குத் தஞ்சம்; வேறொரு புகலை உடையேனல்லேன்; இங்ஙனே ஆணையிட்டுச் சொல்லக்கடவேன். இப்படி திண்ணிதாக அடியேன் விண்ணப்பஞ்செய்வது எது கொண்டென்னில்; வண்டுகள் மாறாத பசுமலரையுடைத்தான சோலைகளாற் சூழப்படட் திருச்சேறையிலெழுந்தருளியுள்ள பெருமாளுடைய அடியார்களை ஸேவித்த மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சும் கண்களும் களித்கிறபடியைக் காணுங்கோள்; இவ்வளவு பரிபாசம் பெற்றேனான பின்பு அந்த அத்யவஸாயம் திடமாயிருக்கத்தட்டுண்டோ வென்கிறார்.


    1584.   
    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.

        விளக்கம்  


    • தாம் எம்பெருமானை விட்டு பாகவதர்களையே பற்றுவதாக அநுஸந்திக்குமித்திரு மொழியில் ‘தண்சேறை யெம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு’ என்று சொல்லிக் கொள்ளுதல் தகுமோவென்று சிலர் சங்கிப்பர்கள்; எம்பெருமானுடைய அடியார்களென்னுங் காரணத்தினால் பாகவதர்கள் உத்தேச்யர்களாக ஆகிறாப்போலே ‘பாகவதர்கள் ப்றறுந் தெய்வம்’ என்னுங்காரணத்தினால் எம்பெருமானும் உத்தேச்யனாதல் கூடுமென்க. “திரிதந்தாகிலுந் தேவபிரானுடைக்கரிய கோலத் திருவுருக்காண்பன் நான், பெரியவண் குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே” என்ற கண்ணிநுண் சிறுத்தாம்பும் அறிக. “சிந்தித் தேற்கு என்” என்ற விடத்து, வடமொழியில் ஆர்ஷ ப்ரயோகங்களிற்போல உபபத்தி கூறவேண்டும் ‘சிந்தித்தேற்கு’ என்பது ‘சிந்தித்த எனக்கு’ என்று பொருள்பட நின்றாலும், இங்கு அங்ஙனம் பொருள்படாது ‘சிந்தித்த’ என்று விசேஷண மாத்ரமாக நிற்கும்; திருமாலையில் “மழைக்கன்று வரை முனேந்தும்” என்ற பாசுரத்தில் “உழைக்கின்றேற்கு என்னை” என்ற பிரயோகமும் பிறவும் காணத்தக்கன.


    1585.   
    உண்ணாது வெம் கூற்றம்*  ஓவாதபாவங்கள் சேரா*  மேலை- 
    விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*  மென் தளிர்போல் அடியினானை*
    பண் ஆர வண்டு இயம்பும்*  பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை* 
    கண் ஆரக் கண்டு உருகி*  கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.

        விளக்கம்  


    • உண்ணாது வெங்கூற்றம் = ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சிந்திக்கின்றவர்களை யமன் உண்ண மாட்டான் என்றால் ‘அவர்களுக்கு ஒருநாளும் சாவு இல்லை’ என்று பொருளா? என்று சிலர் சங்கிப்பார்கள்; அது பொருளன்று; யமதண்டனைக்கு அவர்கள் ஆளாகமாட்டார்கள் என்று பொருள் காண்க, அன்றியே, பாகவத பக்தர்கள் மரணத்தைப் பற்றின வருத்தத்தினால் கரையமாட்டார்கள் என்பதாகவும் கருத்துக்கொள்ள இடமுண்டு. ப்ராயொ ஹ்ருக்ருதக்ருத்யத்வாத் ம்ருத்யோருத்விஜதே ஜந :– க்ருதக்ருத்யா : ப்ரதிக்ஷந்தே ம்ருத்யும ப்ரியமிவாதிதிம்.” என்கிற ச்லோகம் இங்கு உணரத்தக்கது.


    1586.   
    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       

        விளக்கம்  


    • பாகவதர்களை ஸேவிக்கப் பெற்றதனால் தமக்குண்டான எல்லை கடந்த ஆனந்தத்தைப் பேசி, அயோக்யனான எனக்க இப்படிப்பட்ட ஆனந்தத்தை யநுபவிக்கும்படியான பாக்கியம் எங்ஙனே வாய்த்ததோ, தெரியவில்லையே! என்று தம்மில் தாம் விஸமயப்படுகிறார். நெற்பயிர்கள்விளையங் கழனிகளிலே இடையிடையே கருநெய்தல்கள் முளைத்திருக்கும்; களைபிடுங்கித்திரியும் உழவர்கள் அவற்றைப் பிடுங்கியெறிய, அவற்றின்றும் ஒழுகாநின்றதேனின் மணம் ஊரெங்கும் வீசுகின்றதாம்; இப்படிப்பட்ட போக்யதைபொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப் பெருமாளுடைய திருவடிகளில் அன்புடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே என் உள்ளம் நீர்ப்பண்டமாக உருகுகின்றதே! ; இப்படிப்பட்ட ஹ்ருதயபரிபாகத்திற்கு நான் உரியேனோ? நானோ ஆத்மாபஹாரக்கள்வன்; *வஞ்சக்கள்வன் மாமாயனான எம்பெருமானையும் வஞ்சிப்பவனாயிருக்கின்றேன்; இப்படியிருக்கையாலே மேன்மேலும் துக்கங்களையே அநுபவிக்கவுரியேன் நான்; அப்படியிருந்தும் ஒரு துக்கத்துக்கும் ஆட்படாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை ஸேவிப்பதும் அதனால் நெஞ்சு உருப்பெறுவதுமாய்ச் சதிர்த்தேனே!, இஃது என் கொல்! என்கிறார்.


    1587.   
    பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
    தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*
    வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
    தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.

        விளக்கம்  


    • கீழ் ஒன்பது பாசுரங்களிலம் பாகவத நிஷ்டையைப் பேசியிருந்தும், பயனுரைக்குமிப் பாசுரத்தில் “தண்சேறையம்மான் தன்னை” என்று எம்பெருமான் விஷயமாக இத்திருமொழி அருளிச்செய்யப்பட்ட தென்று தலைக்கட்டுகிறார் – பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்கிற முறைமையால் எம்பெருமானும் தமக்கு உத்தேச்யன் என்கிற திருவள்ளத்தைக் காட்டுதற்கு. இத்திருமொழியைத் திருச்சேறைப் பெருமானுடைய திருவடிகளிலே உங்களுடைய கைகளால் கொண்டு சூட்டுங்கள் என்று தொண்டர்களை நோக்கிச் சொல்லுகிறார் – இத்திருமொழிகற்கைக்கு வேறொருபயன் வேண்டா; எம்பெமானுடைய திருவடிகட்கத் தாமரைப்பூப்போல அலங்காரமாயிருக்கத்தக்க இத்திருமொழி ஸ்வயம் போக்யம் என்று காட்டினபடி. திருச்சேறைப் பெருமானை ஸேவிக்கப்போமவர்கள் *செண்பகமல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி யென்னப்டுகிற புஷ்பங்களை ஸமர்ப்பிக்கத் தேடவேண்டா; இத்திருமொழியை அநுஸந்தித்துக் கொண்டு செல்லுமளவிலே பூவிட்டதற்கும் மேலான எம்பெருமானுடைய திருவுள்ளம் உவக்கும் என்பதை உய்த்துணர்க. மூன்றாமடியில், வாம் – வாவும் என்றபடி; வாவுதல் - தாவுதல்; திருமங்கையாழ்வாருடைய குதிரைக்கு இட்ட விசேஷணம் : செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய்சேறலும்” என்ற நன்னூற் சூத்திரத்தால் எச்சத்து உயிர்மெய்கெட்டது. மான் – குதிரைக்கும் பெயர்