திருவண்பரிசாரம்

தலபுராணம்:- திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். திருவாகிய இலக்குமியை தனது பதியாகிய திருமாலை இவ்விடத்தில் சார்ந்ததால் இவ்வூர் 'திருப்பதிசாரம்' என அழைக்கப்படுகிறது.இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. இறைவன்:திருவாழ்மார்பன். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம். விமானம்:இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனையப் பட்டுள்ளதால்) இவருக்கு திருமஞ்சனம்(அபிசேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.

அமைவிடம்

நாடு: இந்தியா மாநிலம்: தமிழ்நாடு மாவட்டம்: கன்னியாகுமரி அமைவு: திருப்பதிசாரம்,

தாயார் : ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ திருக்குறளப்பன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கன்னியாகுமரி
கடவுளர்கள்: திருவண்பரிசாரம்,ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    3591.   
    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  

        விளக்கம்  


    • இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே, இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார். வருவார் செல்வார் – ஆழ்வார் திருப்புளியடியிலே யெழுந்தருளி யிருந்தன்றோ இப்பாசுரமருளிச் செய்கிறார், திருநகரத் திருவீதியிலே போவாரும் வருவாருமான வழிப்போக்கர்களுண்டே, அவர்கள் ஸம்ஸாரிகளாய்த் தங்கள் காரியங்களுக்காகப் போவதும் வருவருமா யிருந்தாலும் ஆழ்வாருடைய நினைவு அப்படியன்று, திருவண்பரிசாரம் ஸேவிக்கப்போகிறார்கள், திருவண்பரிசாரம் ஸேவித்து மீளுகிறார்கள் என்றே இவர் நினைத்திருப்பது, இங்கே ஆறாயிரப்படி – “ஸ்வகார்யார்த்தமாகப் போகிறோம் வருகிறாரும் திருப்பாரிசாரத்தேறப்போகிறாராகவும் வருகிறாராகவும் நிச்சயித்து“ என்று. இனிஈட்டு ஸ்ரீஸூக்தி, -ஸ்வகார்யத்தாலே த்வரித்துப் போவாரை தம் தசையை யறிவிக்கப் போகிறார்களென்றும், அங்கு நின்றும் வருவாரை தம்மையழைக்க வருகிறார்களென்றுமிருப்பர்.“ தம்மை யழைக்க வருகிறார்களென்று இவர் நினைத்திருந்தபடி ஒருவரும் தம்மருகே வரக்காணாமையாலே இவர்கள் திருப்பரிசாரத் தெம்பெருமா னிடத்திலே நம்மைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும், அதனால்தான் அப்பெருமான் நியமிக்கவில்லை போலும் என்று அறுதியிட்டு “திருவாழ்மார்பர்க்கு என்திறம் சொல்லார் செய்வதென்?“ என்கிறார். என்னவென்று சொல்ல விருப்பமென்னில், பின்னடிகள் முழுவதும் அந்தச் சொல்லின் அநுவாதம். “பரிவர் ஒருவருமில்லாதிருக்கிற இந்த ஸம்ஸார மண்டலத்திலே சங்குசக்கரங்களைச் சுமந்து கொண்டு உம்மோடே ஒரு பக்கத்திலே கூடவே திரியுமடியா னொருவன் திருநகரியிலே திருப்புளியடியிலேயுளன்“ என்று சொல்லவேணுமாம். ஒருபாடுழல்வானென்கிறாரே, ஒருபக்கத்திற்கு ஆழ்வாரானால் மற்றொரு பக்கத்திற்கு ஆர்? என்று கேள்வி பிறக்குமே. இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “ஒரு பார்ச்வத்துக்கு இளைய பெருமாளுண்டிறே“ என்று. ஓரடியா வென்றது – அநந்ய ப்ரயோ ஜநனான தாஸன் என்றபடி. * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப என்றெண்ணி யிருக்கிற எம்பெருமான் பக்கலிலே சென்று, இப்படிப்பட்ட மஹாத்மா துந்லப ரல்லர், ஸுலபரேயாயினர், திருப்புளியடியிலேயுளர் என்று சொல்லவேணுமாம்.