இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்


வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:

வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.

வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.

கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.

நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.