திருத்தெற்றி அம்பலம்

திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது.[1] திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்

அமைவிடம்

நாடு : இந்தியா மாநிலம் : தமிழ்நாடு மாவட்டம் : நாகப்பட்டினம் அமைவு : திருநாங்கூருக்கு அருகில்,

தாயார் : ஸ்ரீ செங்கமல வல்லி
மூலவர் : செங்கண் மால்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: செங்கண்மால் ரங்கநாத பெருமாள் ,ஸ்ரீ செங்கமல வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  1278.   
  மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
  தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
  நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
  சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)

      விளக்கம்  


  • (நூற்றிதழ்கொள் இத்யாதி.) வடமொழியில் தாமரைக்கு ‘சதபத்ரம்’ என்றொரு பெயர் உண்டாதலால் அதற்கு இணங்கிய விசேஷணமாம் இது. நண்டுகள் உணவுக்காகத் தாமரைப் பூவிலே சென்று புகுவதுண்டு; அங்ஙனம் போயிருக்கும் போது அந்த நண்டின் வளையில் பாக்குப் பாளைகளினின்று வெண்முத்துக்கள் இறைக்கப்பட்டு வளை மூடப்படுகின்றதாம் திருநாங்கூரில்.


  1279.   
  பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*  பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி* 
  பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*  ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
  நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*  இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்* 
  சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.

      விளக்கம்  


  • (அன்புடையவள் போலக் கண்ணனது வாயில்) வைத்திட, ஆரும் பேணாநஞ்சு உண்டு உகந்த பிள்ளைகண்டீர் – ஒருவரும் விரும்பமாட்டாத விஷத்தை (முலைப்பாலுடனே) பருகி ஸந்தோஷமடைந்தசிறுவன் காண்மின்.


  1280.   
  படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
  அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
  மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
  திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 

      விளக்கம்  


  • குரம்பை – குடிசை, பசுவெண்ணெய் - பசுமைமாறாத வெண்ணெய்; அப்போது தான் கடைந்து திரட்டினவெண்ணெய். புதமார - ‘பதம’; என்னுஞ்சொல்லுக்கு உள்ள பலபொருள்களில் உண்பதும் ஒரு பொருள். தோக்கை – முன்தானை. ‘அலந்தலை’ என்னுஞ் சொல்லின் மேல் பண்புப் பெயர்விகுதி ஏறிக்கிடக்கிறது; துன்பம் என்பதுபொருள். வியாமோஹம் என்ற பொருளுமுண்டு. (மடலெடுத்த இத்யாதி.) திருநாங்கூரெங்கும் தென்னைமரங்களும் மாமரங்களும் மலிந்து கிடக்கின்றன; ஓங்கியிருக்கின்ற தெங்குகளினின்று தேங்காய்கள் மாமரங்களின் மீது விழவே, அந்த அதிர்ச்சியினால் மாம்பாங்கள் உதிர்ந்து வீழ்கின்றன; அவற்றையெல்லாம் திரட்டியுருட்டிக் கொண்டும் மற்றும் பலவகையான புஷ்பங்களை யடித்துக்கொண்டும் பெருவெள்ளமாகப் பிரவஹிக்கின்ற காவிரியாற்றுக்கால்களையுடையது திருநாங்கூர். திடலெடுத்து – திடல்-திடர்; எழுத்துப்போலி. திடராவது மேட்டுநிலம்; பெருவெள்ளம் பெருகும்போது மேடுகளெல்லாம் கரைந்து ஸமநிலமாதல் இயல்பு


  1281.   
  வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
  கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
  ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
  சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

      விளக்கம்    1282.   
  கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*  கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி* 
  முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*  மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 
  மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*  ஆடவரை மட மொழியார் முகத்து*  இரண்டு 
  சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.   

      விளக்கம்  


  • ஆண்களை எளிதில் வசப்படுத்தும் வல்லமைவாய்ந்த பெண்கள் மலிந்திருப்பதை வருணிப்பதும் நகர்ச்சிறப்பை வருனித்தலாதலால் அதனை வருணிக்கிறார் பின்னடிகளில். திருநாங்கூரில் வீதிகள்தோறும் மலைமலையான மாடங்கள் வரிசை வரிசையாக இடைவிடாது ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்றன; அப்படிப்பட்ட வீதிகளில், மதுரமான பேச்சையுடைய பெண்கள் தங்களுடைய புருவநெறிப்பினால் ஆண்பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந்துகொள்ளுகின்றனராம்; இப்படிப்பட்ட அழகிற்சிறந்த மாதர் வாழப்பெற்ற திருநாங்கூரிலுள்ளது திருத்தெற்றியம்பலம். குலையிலங்கும் - ‘மேகலை’ என்ற சொல் முதற்குறையாகிக் கலை என்று கிடக்கிறது என்று கொள்ளலாம். குலை – வஸ்த்ரமுமாம். “முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப” என்பதனால் அப்பிராட்டிமாருடைய கலவி சொல்லப்பட்டதென்க. முகத்து இரண்டு சிலை – விற்போன்ற புருவங்கள் என்னவேண்டுமிடத்து, வில் என்றே கூறினது ரூபகாதிசயோக்தியாம்.


  1283.   
  தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
  கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
  மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
  தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

      விளக்கம்  


  • இப்பாட்டின் முன்னடிகட்குப் பொருள் சொல்லுவது ஸூக்ஷம புத்திசாலிகளுக்கன்றி மற்றையோர்க்கு இயலாது. முற்காலத்தில், ஆப்பான் திருவழுந்தூரரையர் என்கிற ஒருஸ்வாமியும் இன்னுஞ்சில முதலிகளுமாக இதற்குப் பொருள் என்னவென்று ஆராயத் தொடங்கினர்; அவர்கட்குப் பொருள் தோன்றவில்லை; அப்போது பட்டர் மிகச் சிறுபிராயத்தவராயிருந்தார்; அப்போது அருளிச்செயல் மூலம் ஓதியிந்தாரல்லர் பட்டர்; ஆனாலும், பட்டர் சிறுபிராயமே தொடங்கி எல்லாவழிகளிலும் தமது ஸூக்ஷமபுத்தியைச்செலவிட்டுப் பலவகையான அர்த்த விசேஷங்களை வெளியிட்டுக்கொண்டு ஆச்சரியமாக விளங்கி வந்தமையால் பல பெரியோர்களும் பட்டரைப் பணிந்து அர்த்தங்கள் கேட்பதுண்டு; அப்படியே கீழ்ச்சொன்ன அரையர் மதலானாரும் பட்டரிடம் சென்று ‘ இப்பாட்டுக்குப் பொருள் என்ன?’ என்று கேட்டனர்; அப்போதே பட்டர் ‘பாசுரத்தை விளங்கச்சொல்லுங்கள்’ என்று சொல்லி ஒருகால் பாசுரத்தைக் கேட்டவாறே, “தான்போலும் என்றெழுந்தான் தரணியாளன் அதுகண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள் கோன்போலும்” என்கிற வரையில் இராவணன் வார்த்தையின் அநுவாதம் - என்று சொல்லிப் பொருளை விளக்கிக்காட்டினர். இங்கே வியாக்கியான வாக்கியம் வருமாறு :- “ஆப்பான் திருவழுந்தூரரையரும் மற்றுமுள்ள முதலிகளுமாக ‘இப்பாட்டிற் சொல்லுகிறதென்?’ என்று பட்டருக்கு விண்ணப்பஞ்செய்ய, ஒருகால் இயலைக் கேளா, ‘ராவணன் வார்த்தைகாண்’ என்றருளிச் செய்தார். (தான்போலுமித்யாதி) ஒரு க்ஷத்ரியன்போலே எதிரியென்று வந்தான்; அதுகண்டு தரித்திருப்பான் ராக்ஷஸராஜனாம் - என்று கிளர்ந்தெழுந்த ராவணனுடைய மலைபோலேயிருக்கிற இருபது தோளையும் துணித்த தனிவீரன்கிடீர்” என்று.


  1284.   
  பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
  மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
  கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
  செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

      விளக்கம்    1285.   
  சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
  நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 
  இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
  சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.

      விளக்கம்  


  • அண்டபித்தியிற் சார்ந்து கிடந்த பூமிப்பிராட்டியை அதனின்று ஒட்டுவிடு வித்தெடுக்கும்போது மேருமலையானது (வராஹமூர்த்தியின்) குளம்பில் ஒடுங்கிக் கிடக்கும்படி மிகப்பெரிய வராஹத் திருவுருவெடுத்ததாகப் புராணங்கள் கூறுவதை உட்கொண்டு இப்பாசுரமருளிச் செய்யப்பட்டது. “தீதறு திங்கள் பொங்கு சுடரும் பரும்பருலகேழினோடுமுடனே, மாதிரமண்சுமந்த வடகுன்று நின்ற மலையாறு மேழுகடலும், பாதமர்சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒருபாலொடுங்க வளர்சேர், ஆதிமுனேனமாகி அரணாய மூர்த்தியது” என விரிவாக அருளிச்செய்வது காண்க. வேதாந்த தேசிகனும் வரதராஜ பஞ்சாசத்ஸ்தோத்ரத்தில் “பாலாக்ருதேர்வடபலாசமி தஸ்ய யஸ்ய ப்ரூம்மாண்டமண்டலமபூது தரைகதேசே தஸ்யைவதத்வரத ஹந்தகதம் ப்ரபூதம் வாராஹமாஸ் திதவதோவபுரத்புதம் தே” என்று வராஹாவதாரத்தின் பெருமையில் ஈடுபட்டு பேசின ச்லோகமுணர்க. (சிறுபால் சிலம்பினிடைப் போல் பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்ப) என்ற புராண ச்லோகத்தை யடியொற்றி அருளிச்செய்கிறபடி. ஒரு தண்டைச் சிலம்பிலே மிகச்சிறிய பருக்காங்கல்லை யிட்டுவைத்தால், அது எப்படி கணகணவென்று ஒலிக்குமோ அப்படியே பெரிய மேருமலையானது வராஹநாயனாருடைய திருக்குளம்பிலே கணகணத்த தென்றவிதனால் மிகப்பெரிய மேருமலையும் ஒருகுளம்பின் ஏகதேசத்திலே ஒடுங்கும்படியாக வராஹ நாயனார் அத்தனைபெரிய வடிவுகொண்டாரென்பது விளக்கப்பட்டதாம். திருவாகாரம் குலுங்க – ‘அகலகில்லேனிறையும்’ என்று பிராட்டியிருக்கு மிருப்புக் குலுங்கும்படியாக.


  1286.   
  ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
  அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
  ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
  சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.

      விளக்கம்  


  • “பாதா:ப்ரத்யந்தபர்வதா:” என்ற அமா நிகண்டின்படி, பெரியமலைக்கு அடுத்துள்ள சிறுமலைகள் பாதங்களாகச் சொல்லப்படுதலால், இங்கே ‘தாள்வரையும்’ என்றதற்கு ‘பக்கத்துச்சிறு மலைகளையுடைய பெரிய மலைகளும்’ என்று பொருள் கூறப்பட்டது. மோழையெழுந்து - கீழ் வெள்ளம் மேற்கிளர்தல் மோழையெழுச்சியெனப்படும். மோழை – கீழாறு. அகடு – கீழ்வயிறு. மூர்த்தி - ஸ்வாமி.


  1287.   
  சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
  கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
  பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
  சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*

      விளக்கம்