திரு பார்த்தன் பள்ளி

தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார்.ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார். பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது. அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று

அமைவிடம்

வேறு பெயர்(கள்): தாமரையாள் கேள்வன் கோயில் பெயர்: திருப்பார்த்தன் பள்ளி மாவட்டம்: நாகப்பட்டினம் அமைவு: பார்த்தன்பள்ளி,
திருநாங்கூருக்கு அருகில்,

தாயார் : ஸ்ரீ தாமரை நாயகி
மூலவர் : ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
உட்சவர்: ஸ்ரீ பார்த்தசாரதி
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: தாமரையாள் கேள்வன் பெருமாள்,தாமரை நாயகி


திவ்யதேச பாசுரங்கள்

    1318.   
    கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
    குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*
    தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
    பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

        விளக்கம்  


    • திருமங்கை யாழ்வாராகிற பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், பார்த்தன்பள்ளிப் பெருமானிடத்தில் தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியை வெளியிட வேண்டி மகளுடைய வாய்மொழிகள் இருக்கும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள். என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்கட்குத் தெரியுமா? கம்ஸன் தனது மதயானையைக் கொழுப்பேற்றி என் கணவனைக் கொல்லுமாறு அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்தான்; இவனோ சேற்றிலிருந்து கொடியை இழுப்பவன்போல அதன் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அதனை உயிர் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரன் காண்மின் என் கணவன் - என்கிறாள். அதற்குமேல் திருமேனி நிறத்தைப்பற்றிச் சொல்லத்தொடங்கி, குவளைப் பூப்போலும் காளமேகம்போலும் கறுத்துக் குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறமன்றோ என் கணவனது நிறம் - என்கிறாள். யானையை எத்தனை தடைவைப் பார்த்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அபூர்வ வஸ்துவாகியே ஆநந்தாவஹமாயிருப்பதுபோல, அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பன் என் கணவன் - என்கிறாள். அவனெழுந்தருளியிருக்கும் ராஜதானியின் சிறப்பும் பெயரும் உங்கட்குத் தெரியுமோ? வெள்ளிய சாந்திட்டுப் பளபளவென்று விளங்குகின்ற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரிலே ஸ்ரீமானாய் விளங்குமவன் காண்மின் அவன் - என்கிறாள். இவ்வளவும் சொல்லிவிட்டுப் பார்த்தன்பள்ளித் திருப்பதியின் திருநாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டான் - என்று திருத்தாயார் கூறினளாயிற்று.


    1319.   
    கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
    வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*
    செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
    பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

        விளக்கம்  


    • பஞ்சைப்போல் மென்மையான பாதம் கொண்டவள் "கஞ்சன் ஏவிய சினம் கொண்ட யானையைக் கொன்றவனே" ; "பூதனை உயிரையுண்ட வல்லவன்"; நன்மைப் பேச்சுடைய அந்தணர் வாழும் திருநாங்கூரில் உள்ளவனே" என்று பலவாறாகப் பாடுகிறாள்


    1320.   
    அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
    செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
    வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
    பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      

        விளக்கம்  


    • ‘அன்டர்’ என்று தேவர்களுக்கும் இடையர்க்கும் பெயர். அண்டத்துக்குட்பட்டா ரெல்லாரையுஞ் சொல்லும். இரட்டுற மொழிதலால் - இடையர்கட்குத்தலைவன், தேவர் கட்குத்தலைவன் என்ற இரண்டு பொருளையுங்கொண்டு, ஸௌலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை காணமுடியாதவன் என்பதாகக் கொள்ளலாம். ஆயர் மாதர் கொங்கைபுல்கு செண்டன் - அவனிடத்தில் நான் இவ்வளவு காதல் கொண்டிருக்கச் செய்தேயும் இடைச்சிகளோடு புணருவதிலேயே அவனுக்கு நோக்கமென்று பிரணய ரோஷந்தோற்றச் சொல்லுகின்றாளென்க. ‘செண்டு’ என்று ஸ்வபரவத்துக்கும்பெயர். நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன் - வேதங்களெல்லாம் அவனுடைய பெருமைகளை எல்லை கண்டு சொல்லி முடித்துவிடவேணுமென்று முயன்றும் “யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்யமநஸா ஸஹ” என்கிறபடியே அவனைப் பின்தொடர்ந்தோடி இளைத்து மீள்வனவாதலால் அவற்றுக்குப் பிடிகொடாமல் அபரிச்சிந்ந் வைபவனாயிருப்பவன்.


    1321.   
    கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*
    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
    பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   

        விளக்கம்  


    • நேற்றுவரையில் ஒருவரம்பிலே கிடந்தவிவள் இன்று வரம்பு கடந்தவளாயினள்; பெண்மைக்கு உரிய நாண் மடம் அச்சம் முதலிய குணங்களைக் கைவிட்டாள்; வேற்று மனிசரைக் கண்டால் நாணி வாய்மூடிக் கிடந்த விவள் பல பெண்டிர்களின் எதிரே தன் தலைமகனுடைய வீரச்செயல்களைச் சொல்லத் தொடங்கி, கடலிலே அணைகட்டினவன் என்றும் இலங்கை பாழ்படுத்த பெருமிடுக்கன் என்றும் சொல்லுகின்றாள். (ஒருபிராட்டிக்காகப் படாதனபட்டு அரும்பெருங் காரியங்கள் செய்தவன் என் விஷயத்திலே உபேகஷையாயிருக்கின்றான் என்பதாகச் சொல்லுகிறாளாகவுமாம்.) பல்வளையாள் – பல வளைகளை யிட்டு அலங்கரித்து வைத்தால் இவள் இப்படி பகவத் விஷயத்தி லீடுபட்டு உருகி உடம்பு மெலிந்து வளை கழலப்பெற்றாள் காண்மின் என்ற குறிப்பு.


    1322.   
    அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
    குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*
    நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
    பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 

        விளக்கம்  


    • பரக்கழித்தாள் - ‘பரக்கு அழிந்தாள்’ என்று பிரித்து, பரக்கு என்பதற்கு அடக்கமென்று பொருள் கூறி, ‘அடக்கங்கெட்டாள்’ என்றுரைப்பர் சிலர். அதுநிற்க : கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்து வாலிவதைப் படலத்தில் -(79) “அரக்கரோ ரழிவுசெய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தரசைக் கொல்ல மனநெறி கூறிற்றுண்டோ? இரக்கமெங்குகுத்தாயென்பால் எப்பிழை கொண்டாயப்பா, பரக்கழி யிதுநீ பூண்டாற் புகழையார் பரிக்கற்பாலார்?” என்ற செய்யுளில் ‘பரக்கழி’ என்றும் பதத்தின் பிரயோகம் காண்கிறது; அவ்விடத்துரையில் “பரக்கழி – பெருநிந்தை; பெருந்தீங்குமாம்” என்றிருக்கக் காண்கிறோம். ஆகவே இங்கே பரக்கழிந்தாள் என்பதற்கு – ‘பெரும்பழி விளையப்பெற்றாள்’ எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். பெரிய வாச்சான்பிள்ளையும் பலவிடங்களில் இங்ஙனமேவி யாக்கியான மருளிச்செய்யக் காண்கிறோம். நாச்சியார் திருமொழியில் (12-3) “கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற” என்றவிடத்தில், ‘பரக்கழிக்கை – பழிவிளைக்கை’ என்பது வியாக்கியானம்.


    1323.   
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
    வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*
    மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
    பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            

        விளக்கம்  



    1324.   
    நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
    தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*
    சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.

        விளக்கம்  


    • “பாதகடகம்” என்னும் வடசொல் பாடகம் எனச் சிதைந்தது; காலணிக்குப் பெயர்


    1325.   
    உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
    நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்
    திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.

        விளக்கம்  


    • (ஒண்சுடரோடு இத்யாதி.) ஸூர்யன் முதலான சுடுர்ப் பொருள்களின் சோதியையும் வென்று விளங்குஞ் சுடரமைந்த திருவாழியாழ்வானைத் திவ்யாயுதமாக வுடையவன் என்கை. “ஒண்சுடரோடு உம்பரெய்தா” என்கிறவிசேஷணம் ஆழிப்படையில் அந்வயிக்கவுமாம், ஆழிப்படையனான எம்பெருமானிடத்து அந்நயிக்கவுமாம். ஸூர்ய சந்த்ராதி தேவர்களால் திருவாழியாழிவானும் அணுக முடியாதவன், எம்பெருமானும் அணுக முடியாதவன். நேசன் - அடியவர்கள் திறத்தில் அன்புதானே ஒருவடிவு கொண்டவன். ‘ஸ்நேஹ’ மென்னும் வடசொல் நேசமெனத் திரியும். “தென்திசைக்குத் திலதமன்ன”; என்கிற விசேஷணம் மறையோரிடத்தும் நாங்கையிடத்தும் அந்வயிக்கும். பலருமேச – உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளிடையே எம்பெருமால் உகந்தருளின நிலத்தைப் பாடுவது ஏசுகைக்கு இடமாகுமன்றோ. கூறைவேணும், சோறுவேணுமென்று பாடினாலன்றோ பலரும் உகப்பர்கள்? பார்த்தன்பள்ளி பாடவேபலரும் ஏசும் படியாயிற்று, ஸம்ஸாரிகளுடைய காரியங்களெல்லாம் பகவத் பக்தர்கட்குப் பரிஹாஸகரமாய் இருப்பதுபோல, பகவத் பக்தர்களுடைய காரியங்களும் ஸம்ஸாரிகளுக்குப் பரிஹாஸசரமாயிருக்குமே.


    1326.   
    கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
    எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
    திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    

        விளக்கம்  



    1327.   
    பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
    வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*
    கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)

        விளக்கம்  


    • இத்திருமொழியின் போக்யதை விலக்ஷணமாயிருக்கும். இதனிற் பாசுரங்களைச் சொன்னாலும் செவியுற்றாலும் நெஞ்சு நீர்ப்பண்டமாயுருகும். திருவிந்தளுர்ப் பரிமளரங்கப் பெருமானைக் கண்ணாரக் காணவேணுமென்றும் கையாரத்தொழவேணுமென்றும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யப் பெறவேணுமென்றும் எவ்வளவோ பாரித்துக் கொண்டு வந்தார் ஆழ்வார். அப்பெருமானோ வென்னில், திருக்கண்களாலே குளிரநோக்குதல் வாரியணைத்தல் வினவுதல் அத்தாணிச் சேவகத்திலே ஏவுதல் ஒன்றுஞ் செய்திலன்; நிரங்குச ஸ்வதந்த்ரனான அவனது திருவுள்ளத்தை அறியவல்லாரார்? ஆழ்வாருடைய உருக்கமான பாசுரங்களைக் கேட்கவேணுமென்று பிச்சேறினான்போலும்; கோபுர வாசற் கதவையுமடைத்துக் கொண்டு கிடந்தான்போலும். ஆழ்வார் துடிக்கிற துடிப்பை என்சொல்ல வல்லோம்!. பெண்ணுடையுடுத்துப் பாசுரமிட்டுக் காட்டுகிற துடிப்பை ஆணுடையிலேயே காட்டுந் திருமொழியன்றோ இது. திருமேனி நிறத்தையும் காட்டாதே ஒளிப்பாயோ பிரானே!; என்னை இப்படி பட்டினியடித்து நீயே வயிறுவளர்க்கக் கருதினாயே!; “உலகுதன்னை வாழநின்ற நம்பீ!” என்கிறபடியே உலகத்தை வாழ்வித்து நீ ஸத்தைபெற வேண்டியிருக்க, உலகத்தைப் படுகொலையடிப்பதே உனக்கு வாழ்ச்சியாய்விட்டது; நீயே வாழ்ந்துபோ என்று திருவுள்ளம் நொந்து பேசுகிறார் திருவிந்தளுர்த் திருமாலை நோக்கி.