திருக்கண்ணபுரம்

தலபுராணம்:- மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

அமைவிடம்

முகவரி:- ஸ்ரீ சௌரிராஜா பெருமாள் கோவில்,
திருக்கண்ணபுரம் -609 704. நாகப்பட்டினம் (மாவட்டம்). தொலைபேசி : +91- 4366 - 270 557,
270 718,
99426 - 56580.,

தாயார் : ஸ்ரீ கண்ணபுர நாயகி
மூலவர் : நீல மேகப் பெருமாள்
உட்சவர்: சௌரிராஜ பெருமாள்
மண்டலம் : சோழ நாடு
இடம் : நாகப்பட்டினம்
கடவுளர்கள்: கஜேந்திரவரதர்,ஸ்ரீதேவி


திவ்யதேச பாசுரங்கள்

    719.   
    மன்னு புகழ்க் கௌசலைதன்*  மணிவயிறு வாய்த்தவனே* 
    தென் இலங்கைக் கோன் முடிகள்*  சிந்துவித்தாய் செம்பொன் சேர்* 
    கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் கருமணியே* 
    என்னுடைய இன்னமுதே*  இராகவனே தாலேலோ (2)      

        விளக்கம்  


    • இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க. கணபுரம் - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் இது. தாலேலோ - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால் - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் இத்தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.


    720.   
    புண்டரிக மலரதன்மேல்*  புவனி எல்லாம் படைத்தவனே* 
    திண் திறலாள் தாடகைதன்*  உரம் உருவச் சிலை வளைத்தாய்* 
    கண்டவர்தம் மனம் வழங்கும்*  கணபுரத்து என் கருமணியே* 
    எண் திசையும் ஆளுடையாய்*  இராகவனே தாலேலோ  

        விளக்கம்  



    721.   
    கொங்கு மலி கருங்குழலாள்*  கௌசலைதன் குல மதலாய்* 
    தங்கு பெரும் புகழ்ச்சனகன்*  திரு மருகா தாசரதீ* 
    கங்கையிலும் தீர்த்த மலி*  கணபுரத்து என் கருமணியே* 
    எங்கள் குலத்து இன்னமுதே*  இராகவனே தாலேலோ

        விளக்கம்  


    • எங்கள் குலத்து இன்னமுதே - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.


    722.   
    தாமரை மேல் அயனவனைப்*  படைத்தவனே*  தயரதன்தன்- 
    மா மதலாய்*  மைதிலிதன் மணவாளா*  வண்டினங்கள்- 
    காமரங்கள் இசைபாடும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஏமருவும் சிலை வலவா*  இராகவனே தாலேலோ

        விளக்கம்  


    • “தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி “தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது - ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு ‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம். “ஏமருவுஞ்சிலை” = ஏ - எய்கையிலே, மருவும் - மூட்டாநின்ற, சிலை - வில் என்றும் பொருளாகலாம். ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து. வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் - என்றவாறு இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.


    723.   
    பார் ஆளும் படர் செல்வம்*  பரத நம்பிக்கே அருளி* 
    ஆரா அன்பு இளையவனோடு*  அருங்கானம் அடைந்தவனே* 
    சீர் ஆளும் வரை மார்பா*  திருக் கண்ணபுரத்து அரசே* 
    தார் ஆரும் நீண் முடி*  என் தாசரதீ தாலேலோ     

        விளக்கம்  


    • வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளையபெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன். நீ இங்கேயிருப்பாயாக என்றபோது, அவர் தமது கைங்கரியருசியையும் பிரியில் தரியாமையையும் பரக்கப்பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார். (அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.


    726.   
    மலையதனால் அணை கட்டி*  மதில்-இலங்கை அழித்தவனே* 
    அலை கடலைக் கடைந்து*  அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே* 
    கலை வலவர்தாம் வாழும்*  கணபுரத்து என் கருமணியே* 
    சிலை வலவா சேவகனே*  சீராமா தாலேலோ

        விளக்கம்  


    • மலையால் அணை கட்டி இலங்கையை வென்றவனே, கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்தவனே, பலவேறு கலைகளில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்துப் பெருமானே, வில் திறமையுள்ளவனே, உலகத்தைக் காப்பவனே, இராமனே, தாலேலோ.


    727.   
    தளை அவிழும் நறுங் குஞ்சித்*  தயரதன்தன் குல மதலாய்* 
    வளைய ஒரு சிலையதனால்*  மதில்-இலங்கை அழித்தவனே* 
    களை கழுநீர் மருங்கு அலரும்*  கணபுரத்து என் கருமணியே* 
    இளையவர்கட்கு அருள் உடையாய்*  இராகவனே தாலேலோ

        விளக்கம்  


    • இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள்புரிந்தான்; இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள்புரிந்தான் என்றிறே பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.


    729.   
    கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் காகுத்தன்-
    தன் அடிமேல்*  தாலேலோ என்று உரைத்த*  தமிழ்மாலை* 
    கொல் நவிலும் வேல் வலவன்*  குடைக் குலசேகரன் சொன்ன* 
    பன்னிய நூல் பத்தும் வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)

        விளக்கம்  


    • பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத்தாயாராயிருந்து அநுபவித்தாற்போலவும், இவ்வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற்போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.


    1648.   
    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

        விளக்கம்  



    1649.   
    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)

        விளக்கம்  



    1650.   
    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*
    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 

        விளக்கம்  



    1651.   
    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

        விளக்கம்  



    1652.   
    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

        விளக்கம்  



    1653.   
    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*
    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!

        விளக்கம்  



    1654.   
    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

        விளக்கம்  



    1655.   
    கொற்றப்புள் ஒன்றுஏறி*  மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்* 
    வெற்றிப்போர் இந்திரற்கும்*  இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
    பெற்றக்கால் அவன்ஆகம்*  பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
    கற்றநூல் மறையாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

        விளக்கம்  


    • “வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித் தாமரைக்கண்ண னென்னெஞ்சினூடே, புள்ளைக்கடாகின்ற ஆற்றைக்காணீர்” என்ற பராங்குச நாயகிக்கு நெஞ்சினுள்ளே கருடவாஹந ஸேவை ஸாதித்தான் எம்பெருமான்; அங்ஙனன்றிக்கே இப் பரகால நாயகிக்காகத் திருவீதியூடே கருடவாஹந ஸேவை ஸாதித்தான் போலும். ஆகவே ‘கொற்றப்புள் ஒன்றேறி மன்றூடே வருகின்றான்’ என்கிறாள்; தாஹித்தவர்கள் இருந்த விடங்களிலே சாய்கரகத்தைக் கொண்டுவந்து சாய்ப்பாரைப்போலே என்னொருத்திக்கே யல்லாமல் மற்றும் என்னைப்போன்ற அன்புடையார்க்கும் ஸேவைஸாதிக்கப் பெரிய திருவடியின் மீதேறி வீதியூடே வந்து உலாவுகின்றான் காண்மின் என்கிறாள். ஒருவர்க்குந் தெரியாமல் வந்து என் கண்ணுள்ளே யிருக்க வேண்டியவன் மஹோத்ஸவமாகத் தெருவோடே வருகிறானே, யாரேனுங்கொள்ளைகொண்டு ஸ்வாநுபவ மாத்திரத்திலே நிறுத்திக்கொள்ளப் போகிறார்களே! என் செய்வேன் என்கிறாள் போலும். அப்படி யாரேனும் தன்னைக் கொள்ளை கொண்டாலும் அவர்களுக்குப் பிடிகொடாதே உத்தேசித்தவிடத்தே வந்து சேர்தற்கு உரிய பராக்ரமத்தில் குறையுடையனல்லன்; வீர்யத்தில் மஹேந்த்ரனை ஒத்திருப்பனென்கிறாள். ‘வெற்றிப்போர்’ என்பது வழங்கி வரும் பாடம்; ‘வெற்றிப் போர்’ என்னும் பாடமே வியாக்கியானத்திற்குப் பொருந்தும். “வெறும் போரில்” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீஸூக்தி. (பெற்றக்கால் இத்யாதி.) பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அணைந்து வாழ்வதற்கென்றன்றோ அவன் திருமார்பு படைத்தது; ஒருத்தியைத் திருமார்பிலேயே வாழ வைத்திருக்கின்றானல்லனோ? அங்ஙனே நமக்கும் அத்திருமார்பைப் பெறுவித்தால் பெண்பிறந்த நாமும் வாழ்ந்து போகமாட்டோமோ வென்கிறாள். இத்தனை அபிநிவேசம் இவளுக்குண்டானமை காண்கையாலே இவள் வைதிக வித்வான்கள் வாழும் திருக்கண்ணபுரத்து எம்பெருமானைக் காணப்பெற்றாளாக வேணும்.


    1656.   
    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

        விளக்கம்  


    • “பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற மூன்றாமடியின் விசேஷப்பொருள் குறிக்கொள்ளத் தக்கது; - இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியக்கியான வாக்கியங் காண்மின் – முதல் நாள் கண்டால் ஸவாபாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலுமாக ‘முன்பே கண்டறியும் முகமாயிருந்ததீ! எவ்வூரில்தான் கண்டது?’ என்னும்படி யிருக்கும்; பிறந்தால் பின்பு’ முன் போரிடத்திலும் இவரைக் கண்டறியோம்’ என்னும்படியாயிருக்கும்; நித்யாபூர்வமான விஷயமென்றபடி. சொன்ன இரண்டர்த்தத்தையும் அது காட்டுமோவென்ன, பயில்கின்றளால் என்றது கண்டாயே; எற்றைக்கும் வார்த்தை இதுவேயன்றோ : இப்படியாக வேண்டாவோ?’ என்று ஜீயர்.” என்று. இதனை விவரிப்போமிங்கு; - பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில்’ என்பதற்கு இரண்டு வகையான பொருள் சொல்ல இடமுண்டு; ‘முன்பு இவரை எவ்விடத்திலோ பார்த்திருக்கிறோம் போல இருக்கின்றதே, எவ்விடத்தில் பார்த்திருப்போம்!’ என்று விமர்சிப்பதாக ஒரு பொருள் : பண்டு இவரை எவ்வூரில் கண்டறிவது – எவ்வூரிலும் கண்டறிந்ததில்லை; இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறொம் என்பதாக மற்றொரு பொருள். ஒரு தடவை பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வாக்கியம் இவ்விரண்டு பொருளையும் ஏககாலத்தில் எங்ஙனே தருமென்னில்; மூலத்தில் “என்றே பயில்கின்றாளால்” என்றிருப்பதால் ‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்’ என்னும் வார்த்தையைப் பலகாலும் உருப்போடுகிறாள் என விளங்குதலால், அந்த வார்த்தையை முதல் தடவை சொல்லும்போது முதற்பொருளும் அடுத்த தடவைகளிலெல்லாம் இரண்டாவது பொருளும் சொல்லப்படக் குறையில்லையென்க. இவ்விரண்டு பொருள்களின் ஸ்வாரஸ்ய மென்னவெனில் :– எம்பெருமானை முதன் முதலாகக் காணும்போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக்கொண்டு ‘இவரை முன்பு எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்; அதன்பிறகு எவ்வளவு நெருங்கிப்பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழிதொறும், அப்பொழுதைக் கப்பொழுதென்னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங்கண்டறியாதது போலவும் அப்பொழுதே புதிதாகக் கண்டு அநுபவிப்பதுபோலவுந் தோன்றிக்கொண்டே யிருக்கும்.


    1657.   
    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)

        விளக்கம்  



    1658.   
    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!
    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)

        விளக்கம்  


    • என் பெண் பிள்ளை திருக்கண்ணபுரத்தைத் தொழுதாளென்பதையே வியாஜமாகக் கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் என்று சௌரிப்பெருமாளை மடிபிடிக்கிறாள் திருத்தாய். இவளுடைய கைவளைகளை அவர் கொள்வதாவது என்னவெனில், பிரிவாற்றாமையினால் இவள் உடம்பு இளைத்துக் கைவளைகள் கழன்று விழும்படியாவதாம். இவளை நீர் இப்படி ஈர்க்கும்போல் இளைத்துப்போம்படி செய்தீரே, இது தகுதிதானோ? நித்ய ஸம்ச்லேஷத்தைக் கொடுத்து இவளுடம்பைப் புஷ்டியாக்குவதன்றோ தகுதி என்றாளென்க.


    1661.   
    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*
    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!

        விளக்கம்  



    1662.   
    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*
    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 

        விளக்கம்  


    • வண்ணமும் பொன்னிறமாவதொழியுமே = பெண்டிர்க்குப் பிரிவாற்றாமையினால் தோன்றும் பசலைநிறம் பொன்னிறமெனப்படும்; அது வ்யஸநத்திற்கு ஸூசகம்; அந்த நிறம் ஒழிந்த தென்றல் ஸந்தோஷமுண்டாயிற் றென்றபடியாம். அவனுடைய திருக்குணங்களைப் பிறர் ஏச்சாகச் சொன்னால் ‘கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியமாகப்பெற்றான், பற்றியுரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ?’ என்னும் மெய்யன்புடையளாதலால் அந்த திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்திரத்திலும் அவனோடு தனக்குக் கலவி நேர்ந்ததாகவே கொண்டு வைவர்ணியம் மாறப்பெற்றாளென்க.


    1663.   
    வடவரை நின்றும் வந்து*  இன்று கணபுரம்,- 
    இடவகை கொள்வது*  யாம்என்று பேசினாள்,*
    மடவரல் மாதர் என் பேதை*  இவர்க்குஇவள்- 
    கடவதுஎன்,?*  கண்துயில் இன்று இவர் கொள்ளவே.

        விளக்கம்  


    • அநுகாரத்தாலே தரிப்பது என்று ஒன்றுண்டு. பண்டு திருவாய்ப்பாடியிற் பெண்கள் கண்ணபிரானைப் பிரிந்து ஆற்றமாட்டாமல் மாமியார் மாமனார் முதலானாருடைய காவலையுங் கடந்து யமுனையாற்றின் கரையிலே அப்பிரானை அநுபவிப்பதாக வந்தவளவிலே அங்கு அவனைக் காணாமல் முன்னிலும் ஆற்றாமை விஞ்சி, ஏதேனு மொருபடியாலே தரிக்கப்பார்த்து =துஷ்ட காளிய! திஷ்டாத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா” இத்யாதிப்படியே, அடா காளியனே! நில்; நான் கண்ணன்; உன் மேலேறித் துவைத்து நர்த்தனம் செய்யப்போகிறேன்’ என்றும் மற்றும் பலவிதமாகவும் கண்ணபிரான் போலவே தங்களை அநுகாரஞ் செய்துகொண்டு பேசித் தரித்தார்கள்; நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “கடல் ஞாலஞ் செய்தேனும் யானே யென்னும்” என்று தொடங்கிப் பத்துப் பாசுரங்களாலே தம்மை எம்பெருமானாகப் பேசித் தரித்தார். அந்த நிலைமை பரகாலநாயகிக்கும் நிகழ்கின்றமை இப்பாசுரத்தில் விளங்கும். மற்றை ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது. வடக்குத்திருமலையாகிய திருவேங்கடமலையில் வாஸத்தை விட்டுக் கீழை வீடாகிய திருக்கண்ணபுரத்திலெ நித்யவாஸம் பண்ண இன்று இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் யாம் என்று தன்னைச் சௌரிப்பெருமாளாகவே சொல்லிக்கொள்ளுகிறாள் என்பதைத் திருத்தாய் விளம்புகின்றாள். இச்சிறுமியை இப்பாடு படுத்துதல் ஈச்வரனக்குத் தகாது என்கிறாள் பின்னடிகளில். இதற்கு முந்தின க்ஷணம் வரையில் பந்துவர்க்கங்களில் சொல்தவறாது நடந்துகொண்டிருந்தவளும் மிகச் சிறிய பருவமுள்ளவளும் அழகிற் சிறந்தவளுமான இவளை இங்ஙனே கண்ணுறக்கங் கெட்டு வருந்தவைப்பது அவர்க்கு ப்ராப்தமோ? என்கிறாள்.


    1665.   
    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*
    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?

        விளக்கம்  


    • தொண்டு எல்லாம் – தொண்டர் எல்லாரும் என்றபடி. பக்தர்களாயிருப்பவர்கள் எல்லாரும் திருக்கண்ணபுரத் தெம்பெருமானை அடிபணிந்து உஜ்ஜீவித்துப் போகிறார்களென்பதை யுணர்ந்து தானம் அப்படி உஜ்ஜீவித்துப் போக ஆசைகொண்டு திருக்கண்ணபுரம் தொழுதாள் இவள்; இப்படி அநர்த்தப்படப்போகிறோமென்று அறிந்திருந்தாளாகில் திருக்கண்ணபுரமுள்ள திக்கையும் நோக்கியிருக்கமாட்டாள்; உஜ்ஜீவிக்க வென்று வந்து தொழுதவளை இப்படி மேனி நிறமழியச் செய்து அநீதியானவற்றைச் செய்வது ஸர்வேச்வரனென்று பெயர் சுமந்திருப்பார்க்குத் தகுமோ? என்கிறாள் திருத்தாய். (மணிநிறங்கொண்டு தான்) *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்கையன்றோ முறைமை; தான் நன்மணி வண்ணானயிருக்க, இவளுடைய மணிநிறத்தைக் கொள்ளைகொள்ளத் தகுதியுண்டோ? (கோயின்மை செய்வது தக்கதே) ராஜநீதியில்லாதார் செய்வதை நீர் செய்யப்கடவீரோ? இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை யன்றோ அரசர்கட்கு முறைமை; ராஜாக்களே வழிபறிக்கை நீதியோ? என்கிறாள்.


    1666.   
    முள்எயிறு ஏய்ந்தில,*  கூழை முடிகொடா,* 
    தெள்ளியள் என்பதுஓர்*  தேசுஇலள் என்செய்கேன்,*
    கள்அவிழ் சோலைக்*  கணபுரம் கைதொழும்- 
    பிள்ளையைப்,*  பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 

        விளக்கம்  


    • “முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடியிருக்கின்றாளால்” என்று சொன்ன திருத்தாய்தானே இப்போது “முள்ளெயிறேய்ந்தில கூழை முடிகொடா, தெள்ளியளென்பதோர் தேகிலள்” என்றால், இஃது என்? ; பரகாலநாயகி யௌவன பருவத்தை யடைந்திருப்பதாகப் பல பாசுரங்களால் விளங்கா நிற்க, இன்னம் பற்களும் முளைக்கவில்லை யென்றும், மயிரும் சேர்த்து முடிக்கலாம்படி கூடினவில்லை யென்றும் இங்கே சொல்வது பொருந்துமாறு எங்ஙனே? எனின்; உண்மையில் இவள் யௌவன பருத்தை யடைந்தவளே; ஆயினும் தாய்க்கு அன்பு மிகுதியால் இவளது மிக்க இளமையாலே தோற்றுவதென்க. இப்படி இளம்பருவமுடையளான விவளை நான் எப்படி நியமிப்பேன் என்கிறாள் என் செய்கேன் என்று இவளை நான் நியமிப்பேனோ, அன்றி அநுவர்த்திப்பேனோ என்கிறாள். இத்தனை சிறு பிராயத்தில் உனக்கு இவ்வளவு ப்ராவண்யம் கூடாது என்று இவளை அடக்குவேனோ, அன்றி, இத்தனை சிறு பிராயத்திலேயே பகவத் விஷயத்தில் அவகாஹிக்கப் பெற்றவிவள் ஸாமாந்யமானவளல்லள், விண்ணுளாரிலும் சீரியள் என்று கொண்டு இவளைக் கைகூப்பி வணங்குவேனோ என்கிறாள். இங்ஙனே அலைபாயந்த நெஞ்சு ஒரு முடிவுக்கு வந்தமையைப் பின்னடிகளில் வெளியிடுகிறாள். திருக்கண்ணபுரத்தைக் கைதொழும் பிள்ளை நம் வயிற்றில் பிறந்த சிறு பிள்ளையேயாகிலும் ஈடுபட்ட விஷயத்தின் பெருமையன்றோ நோக்கவேணும்; இவளது சிறுமையால் வருங்குற்றமேது? சிறுமையில்தானே இப்படி பகவத் விஷய ப்ராவண்யமும், உகந்தருளின நிலத்தில் ஊற்றமும் உண்டாகப்பெற்றதே! ; ஆகையாலே இவளை நியமிக்கப் பாராமல் அநுவர்த்திப்பதே நன்று என்றாளாயிற்று. “விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப்பாடக்கேட்டு, வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கனாளே” என்றது திருநெடுந்தாண்டகத்தில்.


    1667.   
    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*
    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)

        விளக்கம்  


    • This garland of excellent Tamil songs on the Lord of rain-abundant kannpuram is by the world-famous Mangai king parakalan. Those who master it will live long on Earth.


    1668.   
    கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
    திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
    வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)

        விளக்கம்  



    1669.   
    அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
    தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
    கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 

        விளக்கம்  



    1670.   
    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*
    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.

        விளக்கம்  



    1671.   
    கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
    திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 
    மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
    புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.

        விளக்கம்  



    1672.   
    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*
    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.

        விளக்கம்  


    • வேதமந்திரங்களைக் கொண்டு அந்தணர்கள் அக்நி காரியங்கள் செய்து வேதமரியாதையை நடத்திப் போரும்படியான திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனும், க்ருஷ்ணாவதாரத்தில் தான் செய்த தீம்புகட்குச் சீற்றங்கொண்ட யசோதைப்பிராட்டி அடிப்பதாகக் கையிற் கோலை யெடுக்க, அதற்கு அஞ்சி ஓடுமளவிலே எதிர்ப்படுமவர்கள் வாயில் தயிருண்ட சுவடு இருப்பதைக் காட்டி, ‘நீ தயிர் களவு கண்டாயன்றோ’ என்பர்களே யென்று அதை மறைக்க வேண்டி அத் தயிர்ச் சுவடு தன்னைத் துடைக்கப் புகுந்து தயிரை முகம் முழுவதும் தடவிக்கொண்டு பரமமுக்த்தனுமான பெருமானுடைய அக்குணத்திலேயீடுபட்டு வளையிழந்தே னென்கிறாள்.


    1673.   
    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.

        விளக்கம்  



    1674.   
    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.

        விளக்கம்  


    • மூன்றாமடியில் “எழுசுடரும்” என்ற பாடமே எங்கும் வழங்கி வருகின்றது. இப்பாடம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் பாடாந்திரமாகக் கொள்ளப்பட்டுள்ளது; ‘எழுகடலும்’ என்ற பாடமே முந்துறக் கொள்ளப்பட்டது.


    1675.   
    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.

        விளக்கம்  



    1676.   
    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*
    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.

        விளக்கம்  



    1677.   
    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*
    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)

        விளக்கம்  


    • சோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே!. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, "ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்" என்று சொல் என்கிறார்.


    1678.   
    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*
    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)

        விளக்கம்  


    • ‘தும்பி’ என்பது வண்டுகளில் ஒருவகைச் சாதி; கருவண்டு என்றுங் கூறுவர். மரக்கொம்புளிலே மதுவுக்காகத் திரியுமியல்வுடைமைபற்றக் ‘கோல்தும்பீ!’ என விளக்கப்பட்டது. ஸத்தையற்றுக் கிடக்கின்ற என்னிடத்திலே இப்போது நீ வந்து சுழலமிடுவதால் என்ன பயனுண்டு? முன்போல் நான் ||தளிரும் முறியுமாய்க் கிடக்கிறேனென்றிருக்கிறாயோ? பாராய் நான் வாடி வதங்கிக்கிடக்கும்படியை; என் தலையிலே பூத்தங்கினாலன்றோ மது இருக்கும்; மது இருந்தாலன்றோ நீ இங்கே வந்த சுழலமிடுவதற்கு ஒரு பயனுண்டாகும்; உனக்கு இங்கே மதுவுண்ண விருப்பமுண்டாகில் எனக்கு ஸத்தையை யுண்டாக்கப்பார்; என்ன செய்தால் ஸத்தையுண்டாகு மென்று கேட்கிறாயோ? கேளாய் கோல் தும்பீ! ; - நித்ய ஸூரிகளுக்கெல்லாம் நிர்வாஹகனாயிருக்கிற பெருமான் உனக்குத் தெரியுமே; அவனிடத்தில் நாம் அணுக முடியுமோ வென்று நினையாதே; அவன் திருமார்வன்; புருஷகார பூதையாய் காருண்ய ரூபையான பிராட்டியைத் திருமார்பிலே கொண்டவனாதலால் கூசாதே சென்று புகலாம்; விண்ணவர் தங்கள் பெருமானித்தே நான் சென்றால் மீண்டுவர முடியாதே யென்கிறாயோ? அங்குச் செல்லவேண்டா; லீலாவிபூதியிலுள்ளா ரெல்லாரும் எளிதாக வணங்கும்படி நிற்பவன்; ‘பரத்வ நிலைமையை விட்டு இப்படி ஸுலபனாவதே!’ என்ற அனைவராலும் கொண்டாடப்பட்டு நிரம்பிய புகழ்பெற்றிருப்பவன்; திருக்கண்ணபுரத்திலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறான்; அன்னவனுடைய திருவபிஷேகத்திற் சாத்தியுள்ள திருத்துழாயின் பரிமளத்தை முகந்துகொண்டு இங்கே வந்து ஊது; இது செய்வையாகில் ஸத்தை பெறுவேன்; உனக்கு ஏராளமாக மதுவுண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகாலநாயகி.


    1679.   
    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*
    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  


    • “கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.


    1680.   
    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*
    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  


    • வழக்கப்படி பரகால நாயகியின் தலையில் மதுவுண்ண வந்த தும்பி இங்குப் பூவுமில்லை மதுவுமில்லை என்றறிந்தவாறே வேறு சில மலர்களிலே மதுவுண்ணப் புக, அதனைக் கண்ட பரகாலநாயகி கூறுகின்றாள்;- திறந்து கிடந்த வாசலெல்லாம் நுழைந்து திரியுமவை போலே விண்டமலர்கள் தோறும் நீ ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப்போகிறாய்? அல்பமாயும் அஸ்திரமாயுமுள்ள மதுவையுடைய இம்மலர்களிலே ஊதித்திரிவது தவிர்ந்து, அண்டாதிபதியாயும் நித்யஸூரிகளெல்லாரும் திரண்டு வந்து கண்டு வணங்கும்படியாகத் திருக்கண்ணபுரத்தில் நித்ய ஸந்நிதிபண்ணி யிருப்பவனாயுமுள்ள பெருமானுடைய திருத்துழாய் மாலையிலே உனது ஸஹோத்ரிகளோடே கூடித் தங்கியிருந்து அங்குள்ள பரிமளத்தை இங்குக் கொணர்ந்து ஊதுவாயாகில் அநல்பமும் ஸ்திரமுமான மதுவைப் பருகலா மென்றாளாயிற்று.


    1681.   
    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*
    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1682.   
    ஏர்ஆர் மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?*
    பார்ஆர் உலகம்*  பரவ பெருங்கடலுள்,*
    கார்ஆமை ஆன*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்ஆர் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1683.   
    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*
    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1684.   
    வாமனன் கற்கி*  மதுசூதன் மாதவன்* 
    தார்மன்னு*  தாசரதிஆய தடமார்வன்,*
    காமன்தன் தாதை*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாம நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1685.   
    நீல மலர்கள்*  நெடுநீர் வயல் மருங்கில்,* 
    சால மலர்எல்லாம்*  ஊதாதே,*  வாள்அரக்கர்-
    காலன்*  கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,* 
    கோல நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1686.   
    நந்தன் மதலை*  நிலமங்கை நல்துணைவன்,* 
    அந்தம் முதல்வன்*  அமரர்கள் தம்பெருமான்,*
    கந்தம் கமழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    கொந்து நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!

        விளக்கம்  



    1687.   
    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*
    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)

        விளக்கம்  


    • நிகமநப் பாசுரங்களில் “பூவளருங் கற்பகஞ்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே” “நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே” “நாமருவியிவைபாட வினையாய நண்ணாவே” என்று பயனுரைப்பதுபோல இப்பதிகத்திற்குப் பயனுரைக்கப் படவில்லை; தொண்டர் கட்கு இத்திருமொழியைப் பாடுதல் ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டப்பட்ட தாயிற்று. “தொண்டர்கள் பாட” என்று படர்க்கையாகச் சொல்ல வேண்டுமிடத்துத் ‘தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை. ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறபடி.


    1688.   
    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)

        விளக்கம்  


    • தனிக்கிடை கிடந்து வருந்துகின்ற என்னுடைய நெஞ்சானது கண்ணபிரானைப் பின்பற்றிச் சென்றொழிந்தது; நெஞ்சு கைவிட்ட இந்த ஸமயத்திலே அப்பெருமானுடைய அருளாவது கிடைக்குமோ வென்று பார்த்திருக்கு மெனக்கு அவ்வருள் கிடையாதது மன்றிக்கே உலகத்தில் மற்றுள்ளவர்கட்குத் தாபத்தைத் தணித்துக் குளிர்ச்சியைப் பண்ணவல்ல நிலாத் தென்றல் முதவியனவும் என் திறத்திலே விபரீதங்களா யிருக்கின்றனவே; அந்தோ! என்கிறாள்.


    1689.   
    மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!

        விளக்கம்  


    • ‘தாரினாசையிற்போயின் நெஞ்சமும் தாழ்ந்தது’ என்றது – என்னுடைய நெஞ்சானது அப்பெருமான் திருமார்பிலணிந்த திருத்துழாய்மாலையைப் பெறுதற்கே பேராசை கொண்டிருக்கின்றது என்றவாறு. இப்படிப்பட்ட ஆசையுடையார் மற்று எவருமில்லாமையாலும், வேறுவகையான ஆசையுடையாரோடு தனக்குச் சேர்த்தி யில்லாமையாலும் ‘ஓர் துணை காணேன்’ என்றது. ‘ஊருந்துஞ்சிற்று உலகமும் துயின்றது’ என்றதற்கு ஸ்வாபதேசப்பொருள் கூறலாம்; ஆசார்ய ஹ்ருதயத்தில் “ஊரார் நாட்டார் உலகர் கேவலைச்வர்யகாம ஸ்வதந்த்ரர்” என்றருளிச் செய்திருக்கையாலே, கைவல்யார்த்திகளும் ஐச்வர்யார்த்திகளுமாய் ப்ரயோஜநாந்தரபாரா யிருக்கின்ற இவ்வுலகத்தவர்கள் செத்தபிணம் போன்றிருக்கின்றனர்; அவர்களைக் கொண்டு நமக்கொரு காரியமில்லை என்றவாறு. முற்காலத்தில் எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயித்த பிள்ளையுறங்கா வில்லிதாஸர் திருநாட்டுக் கெழுந்தருள’ அவரை ப்ரஹ்மரதத்திலே யெழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்ல, அவருடைய தேவியாரான பொன்னாச்சி பிரிவாற்றாமைப் பாசுரமாகிய இத்திருமொழியை அநுஸந்திக்கத் தொடங்கி. முதற்பாசுர மநுஸந்தித்து இரண்டாவதான இப்பாசுர மநுஸந்திக்குமளவிலே முன்னே ப்ரஹ்மரத மெழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்பவர்கள் விரைந்து செல்லுகையாலே திருத்தேர் மறைய, அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சியின் அநுஸந்தானம் “தேரும் போயிற்றுது் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே” என்றாக, அப்போதே பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கப்போயிற்று என்ற ஐதிஹ்யம் இங்கு அறியத்தக்கது.


    1690.   
    ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
    பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
    தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!

        விளக்கம்  



    1691.   
    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*
    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!

        விளக்கம்  


    • “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார்களிற்றுக் கழன்மன்னர் கலங்கச் சங்கம்வாய்வைத்தான்” என்கிறபடியே என்னைப்போல் பெண்ணாய்ப்பிறந்த வொருத்தியான த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிப்பதற்காகப் பாரதப் போரில் வியாபரித்து *மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியத் திருப்பவளத்திலே ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை வைத்து ஊதித் தன்னுடைய பக்ஷபாதத்தைக் காட்டியருளின மஹாநுபாவன் இன்று என் விஷயத்திலே அருள் செய்கின்றிலனே! ; படாத பாடுகள் பட்டு த்ரௌபதியின் மநோரதத்தைத் தலைகட்டினாப்போலே எனக்காக ஏதேனும் படாதபாடுகள் படச்சொல்லுகிறேனோ? இங்கு வரவேணுமென்றித்தனையே யன்றோ நான் வேண்டுவது. அவன்படி அப்படியிருக்கட்டும்; (எம்பெருமானுக்கு அஞ்சிக்கொண்டு காற்று வீசுகின்றது) என்று உபநிஷத்திற் கூறியபடியே அப்பெருமானுக்கு அஞ்சி நடக்கின்ற காற்றும் அவன் கருத்தையே பின்சென்று என் ஆவியைக் கொள்ளை கொள்ளப் பார்க்கின்றது : எல்லார்க்கும் ஆவியைத் தளிர்ப்பிக்கின்ற மந்த மாருதமானது இப்போது என் ஆவியைமாய்க்கின்ற படியாலே இஃது எப்போது தணியப் போகின்ற தென்று எதிர்ப்பார்க்கவேண்டிற்றாயிற்று; ஒருகால் தணியப்பெறில் என்னுடைய ஆவி என்னுடையதுதானென்று நினைத்துக்கொள்ள இடமுண்டாகு மென்றாளாயிற்று.


    1692.   
    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*
    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     

        விளக்கம்  


    • அன்பர்கட்கு அருந்தொழில்கள் செய்யுமவன் என்று புகழ்பெற்ற பெருமான் இதுவரையில் நமக்குச் செய்திருந்த அருளும் போயிற்று, பகற்பொழுதும் போயிற்று; எம்பெருமானருள் மறுத்தாலும் பகற்பொழுதாகிலுமிருந்தால் ஒருவாறு உலகப்பொருள்களையாவது கண்டுகொண்டு ஆற்றலாம்; அவனருளோடு கூடவே பகற்போதும் போயிற்றே; தோழீ! இதற்கு நாம் என் செய்யக்கடவோம்; நமக்கு ஆரும் துணையில்லையே; ஸூர்யன் தான் தோன்றின ஸமுத்ரத்திலேயே சென்று அஸ்தமிக்க, இன்னம் சிறிது நாளைக்கு ஜீவித்திருக்கவல்ல பிராணனை இன்றே முடிப்பதாக மாலைப்பொழுது வந்து சேர்ந்து விட்டதே! அந்தோ! என்கிறாள்.


    1693.   
    முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*
    எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
    கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  

        விளக்கம்  


    • ஸூர்யனும் அஸ்தமித்து விட்டான்; இரவிலே உறக்கம் வரவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாவியேனுடைய கண்கள் உறங்குகின்றில; 1.“நீளிரவும், ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” என்னுமாபோலே பிரளயராத்ரியினும் நெடுகிச் செல்கின்ற இவ்விராப்பொழுது எங்ஙனங் கழியப்போகின்றதோ அறிகின்றிலேன் என்கிறார் பின்னடிகளில். கரிய நாழிகை = இராப்பொழுதானது இருண்டு கறுத்திருப்பதனால் நாழிகையிலும் அக்கருமை ஏற்றிக் கூறப்பட்டது. கரிய நாழிகை – கொடிதான நாழிகை என்னவுமாம்.


    1694.   
    கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து*  இலங்கையர் கோனது வரைஆகம்,- 
    மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த*  எம் அடிகளும் வாரானால்,*
    இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்*  விடைமணி அடும்,*  ஆயன்- 
    விலங்கல் வேயினது ஓசையும்ஆய்*  இனி விளைவது ஒன்றுஅறியேனே!  

        விளக்கம்  


    • தேவர்களுக்கு அமுதமெடுத்துக் கொடுக்கிற வியாஜத்தினால் சிறந்த அமுதமாகிய பிராட்டியைத் தான் பெறுதற்குக் கடலைக் கடைந்தான்; அவளைப்பெறுதற்கே மற்றொரு ஸமயத்தில் கடலையடைத்தான்; இலங்கையிற் புகுந்து எதிரிகள் விட்ட அம்புமாரிகளையெல்லாம் மேலேற்றுப் போர்புரிந்து இராவணனைக் கொன்றான்; இவ்வரிய பெரிய காரியங்களை யெல்லாம் நோக்குங்கால் அப்பெருமானுக்கு ஸ்த்ரீ வ்யக்தியில் அளவற்ற காதலுள்ளமை நன்கு விளங்கும். ஒரு ஸ்த்ரீவ்யக்தி கிடைப்பதாயிருந்தால் பொறுக்கொணாத ஆயாஸங்களையும் பொறுத்துப் படாதன படுதற்கு ஸித்தனாயிருக்குமப்பெருமான் நான் எளிதிற் கிடைக்கிறேனென்றோ என்னை உபேக்ஷித்திருப்பது! என்கிறாள் போலும். அவன்றான் வாராதொழியினும் என்னைக் கொலைசெய்வதற்கும் வழிதேடவேணுமோ? ஒரு புறத்திலே சந்திர கிரணங்களை ஏவி நலிகின்றான்; மற்றொரு புறத்திலே மாட்டுக் கழுத்து மணியோசையை உண்டாக்கி நலிகின்றான்; பிறரையிட்டு நலிவது பேராதென்று தானே நேரில் நலியக்கருதி வேய்ங்குழலை வாயில் வைத்து ஊதி அவ்வோசையை யிட்டு நலிகின்றான்; இன்னமும் எவ்வெவ்விதமான நலிவுகள் நேரப்போகின்றனவோ அறிகின்றிலே னென்றாளாயிற்று. விடைமணி அடும் = மாலைப்பொழுதில் மாடுகள் மேய்த்துவிட்டுத் திரும்பும்போ கழுத்திற் கட்டியுள்ள மணிகளை ஓசைப்படுத்திக்கொண்டே வரும்; அவ்வோசை செவிப்பட்டவாறே மாலைப்பொழுது நெருங்கினமை யறிந்து “மாலையும் வந்தது மாயன்வாரான்’ என்று நாயகிவரந்துவளென்க. “மாலைவாய்த் தன்னுடைய நாவொழியாதாடுந் தனி மணியின், இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும்” என்றார் பெரிய திருமடலிலும். விலங்கல் வேய் = கண்ணபிரான் ஊதும் குழல் மூங்கிலினால் செய்யப்பட்டது; அந்த மூங்கில் மலையில் விளைந்தது என்பதுபற்றி ‘விலங்கல்வேய்’ எனப்பட்டது. விலங்கலென்று மலைக்குப்பெயர். ‘வேய்’ என்ற மூங்கிலின் பெயர் அதனாற் செய்யப்பட்ட குழலுக்கு வாசகமானது ஆகுபெயர்.


    1695.   
    முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
    மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*
    ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
    தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!

        விளக்கம்  


    • உலகத்தில் எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத் திரிந்து கொடுமை யியற்றிவந்த க்ஷத்ரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற் பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நி முனிவரது மனைவியான ரேணுகையிடம் இராமனாய்த் திருவவதரித்துப் பரசு என்னுங் கோடாலிப்படையை ஆயுதமாகக் கொண்டு அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்று வருகையில், ஒருநாள் கார்த்தவீர்யார்ஜுநனும் அவனது குமாரர்களும் ஜமதக்நியின் ஆச்ரமத்தில் இளைப்பாறப்புகுந்த காலத்து அங்கே அம்முனிவனது ஹோமதேநுவானது வேண்டின வஸ்துக்களை யெல்லாம் யதேஷ்டமாக அளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட இவர்கள் அப்பசுவைக் கொள்ளைகொள்ள விரும்பி அதனைக் கவர்ந்து அம்முனிவனையுங் கொன்றிட்டது காரணமாக (ப் பரசுராமன்) அந்தக் காரத்த வீர்யார்ஜுநனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அதனாலேயே க்ஷத்ரிய வம்சம் முழுவதன் மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டானென்ற வரலாறு இங்கு உணரத்தக்கது. பறவையினங்களும் குளிர்க்கு அஞ்சி ஒடுங்கிக்கிடக்கும் பேடையைச் சிறகினால் அணைத்து ஒன்றிக்கிடக்கும்படியான இந்த நள்ளிருட்போதிலே நாயகனைப் பிரிந்து பரிதபியா நின்ற என்னைப்போலவே பாவஞ்செய்தாரு முலகிலுண்டோ என்கிறாள் பின்னடிகளில். நாயகனைப் பிரிந்து தனிக்கிடை கிடப்பதற்கு மேற்பட்ட பாபமில்லை யென்கிறாள்.


    1696.   
    கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
    மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*
    சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
    அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   

        விளக்கம்  


    • இங்ஙனே துடிக்கின்ற பரகால நாயகிக்கு ஒருவகையான தேறுதலுண்டாகும்படி எம்பெருமான் மாநஸிகமான அநுபவத்தைத் தந்து இன்பமு் விளைவிக்க, தரித்ரனாயிருப்பானொருவன் பெருஞ்செல்வம் பெற்றதாகக் கனாக்கண்டு கண்விழித்தவாறே ஒன்ற மில்லாமை கண்டு முன்னிலும் விஞ்சிய வருத்தத்தை யடையுமாபோலே இப்பரகாலநாயகியும் ஸ்வப்நகல்பமான அவ்வநுபவத்தினால் பின்னையுந் தளர்ந்திருக்குமளவில் விடைமணியோசையும் அன்றிற் பறவையின் கூக்குரலும் செவிப்பட்டு இன்னமும் நலிகிறபடி பேசிற்றாயிற்று.


    1697.   
    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*
    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)

        விளக்கம்  



    1698.   
    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*
    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)

        விளக்கம்  


    • பாசுரந் தொடங்கும்பொதே “தொண்டீர்! உய்யும் வகை கண்டேன்” என்று தொடங்குகிற ஆழ்வாருடைய களிப்பை உன் சொல்வோம்! கீழ்த்திருமொழியில் “வலிசெய்வ தொழியாதே” என்றும் “செய்வதொன்றறியேனே” என்றும் “அஞ்சேலென்பாரில்லையே” என்றும் “என்னாவியை எனக்கெனப் பெறலாமே” என்றும் “பாவியேனாவியை அடுகின்றதே” என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக்கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்றத் தொண்டீருய்யும் வகைகண்டேன் என்று களித்துப் பேசுகிறார். இது ‘கண்ணபுரம் நாம் தொழுதுமே’ என்பதில் அந்வயிக்கும். திருக்கண்ணபுரம் தொழும்படியான பாக்கியம் பெற்றதுதானே தாம் கண்ட உய்யும்வகை என்றவாறு. “ஒழிவில் காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்றாற் போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே! நாம் ஸத்தை பெறுவதற்கு ஒரு நல்விரகுகண்டேன்; (அதாவது) திருக்கண்ணபுரம் தொழுவோம், வாருங்கோள் என்கிறார்.


    1699.   
    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

        விளக்கம்  



    1700.   
    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)

        விளக்கம்  


    • கல்விச்சிலையால் காத்தான் = ஸீதா விவாஹத்திற்குப் பிறகு பரசுராமனை வென்று கைப்பற்றிக்கொண்ட தன்னதான வில்லினால் விச்வாமித்ர யாகத்தைக் காத்தானல்லன்; பயிற்சிக்குப் பிடித்ததொரு வில்லைக்கொண்டு காத்தானத்தனை.


    1701.   
    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*
    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

        விளக்கம்  



    1702.   
    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*
    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 

        விளக்கம்  


    • ‘ஹோமம் :’ என்னும் வடசொல் ஓம மெனத் திரிந்தது; லக்ஷணையால், யாகங்களிலிடும் ஹவிஸஸுக்களைக் கொள்பவன் என்றவாறு. ‘உலகு சூழ்ந்த நெடும் புணரி’ என்று பெரும் பாலும் வழங்கி வரும் பாடம் வியாக்கியானத்தில் பாடாந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது. “உவரி சூழ்ந்த நெடும்புணரி” என்றோதுக. புணரி – அலைக்கும் கடலுக்கும் பெயர்; இங்கு அலையைச் சொல்லக்கடவது. ‘நெடும்புணரி உவரி சூழ்ந்த சேமமதிள் சூழிலங்கை’ என்று அந்வயிப்பது. உவரி – கடல் சேமம் – க்ஷேமம். சிரம், கரம் – வடசொற்கள்.


    1703.   
    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

        விளக்கம்  



    1704.   
    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*
    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   

        விளக்கம்  



    1705.   
    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 
    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 

        விளக்கம்  



    1706.   
    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*
    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

        விளக்கம்  



    1707.   
    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*
    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 

        விளக்கம்  


    • இருமா நிலத்துக்கு அரசாகி = இரண்டு மாநிலத்துக்கும் (பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும்) அரசாகி – என்று பொருள் கொள்வதன்றியே, இருமை – பெருமையாய், பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி என்று கொள்ளவுமாம்.


    1708.   
    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*
    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)

        விளக்கம்  


    • முன்னடிகளில் திருக்கண்ணபுரத் தெம்பெருமானுடைய பெருமையும் பின்னடிகளில் திருக்கண்ணபுரத்தின் சிறப்பும் சொல்லப்படுகின்றன. அன்னப் பறவைகள் இளமகளிரது அழகிய நடையை அநுகரித்து நடைபயிலப் பெற்றதும் பலவகைத் தடாகங்கள் நெருங்கியிருக்கப் பெற்றதுமான திருக்கண்ணபுரம் – ஏழ்விடைகளைச் செற்று நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களைத் திருமார்பாரத் தழுவிய பெருமான் உறையுமிடம் என்பதாம். வியமுடை விடையினம் = ‘வியம்’ என்னுஞ் சொல்லுக்குப் பல பொருள்களுண்டு; வலிமை யென்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. வேறுபாடு என்னும் பொருளுங் கொள்ளலாம்; கறுக்கொண்ட கஞ்சனால் ஏவப்பட்ட வந்தவையாகையாலே எங்குங் கண்டறியாத வேறுபட்ட வடிவையுடைய விடையினம் என்றவாறு. இனி ‘வியம்’ என்று ஏவலுக்கும் பெயராதலால் (கம்ஸனுடைய) ப்ரேரணையையுடைய விடையினம் என்னவுமாம். உடைதர – உடைய; தா – துணைவினை. உடைதல் – அழிதல். என்னும் வடசொல் குய மெனத் திரிந்தது. மிடைதல் – நெருங்குதல். “குயமுடை தடவரை” என்றும் வியாக்யானத்திற் பாடம் கொள்ளப்பட்டது. அப்பாடத்தில் “குயமுடைத் தடவரை” எனத் தகரவொற்று மிக்கிருக்க வேண்டுவது இல்லாமை – ஓசையின்பம் பற்றி வேண்டுழிக் கொண்ட விகாரமெனக் கொள்க. மூன்றாமடியில், ‘அன்னம்’ அனமெனத் தொக்கி யிருக்கிறது.


    1709.   
    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*
    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.

        விளக்கம்  


    • நித்யோத்ஸவ பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவங்களென்று சொல்லப்படுகிற மஹோத்ஸவங்கள்தோறும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாங்கூடி அநுபவிக்கப் பெற்ற திருக்கண்ணபுரம் – இரட்டை மருத மரங்களைத் தவழ் நடைப் போக்கிலே முறித்தொழித்தவனும், ஏழ்விடை செற்று நப்பின்னைப் பிராட்டியின் கலவியை அநுபவித்தவனுமான பெருமான் உறையுமிடம் என்பதாம். இகல் – பகையும், யுத்தமும், கலவியுள் – கலவிக்காக, எருதினோடு இகல் செய்து, அந்தவிடாய் தீர உளையுமிடம் திருக்கண்ணபுரம் என்னவுமாம்.


    1710.   
    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*
    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.

        விளக்கம்  


    • களைபறிக்கிறவர்கள் களைக்கொட்டுகளைக் கொண்டு வியாபரிக்கு மளவிலே சிறுதூறுகளில் நின்றும் புறப்பட்ட முயல்கள் அவர்களது முகத்திலே துள்ளவும், செழிப்பு மிக்க வயல்களிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல் மீன்கள் துள்ளவும் பெற்ற திருக்கண்ணபுரம் – பண்டு இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழுநாள் கல்மழை பெய்வித்த காலத்துக் கோ நிரைகள் கலங்கிநிற்க அக்கலக்கந் தீருமாறு கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப்பிடித்த பெருமானுறையுமிடம் என்பதாம்.


    1711.   
    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-
    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)

        விளக்கம்  


    • “விரைமலர் கோதிய மதுகரம் குலவிய” என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும ஆகலாம்; மலர்க்கு ஆகும் பக்ஷத்தில், வண்டுகள் வந்து மொய்கும்படியான செவ்விவாய்ந்த தாமரைமலரில் தோன்றிய பெரிய பிராட்டியார் விரும்பும்படி ஸ்ரீமத்தான திருக்கண்ணபுரம் என்றதாகும். கணபுரத்துக்கு விசேஷணமாகும் பக்ஷத்தில் எங்கும் வண்டுகள் மொய்க்கும்படியான மதுவெள்ளம் பொருந்திய திருக்கண்ணபுரம் என்றதாகும். விரைமலர் கோதிய மதுகரம் குலவியதும், மலர்மகள் காதல் செய்வதுமான கணபுரம் என்றவாறு. செய – செய்ய. வெணெய் – வெண்ணெய். தொகுத்தல்கள். போது செய்தல் – த்ருப்தியாக வுண்ணுதல். புனிதர் - பரிசுத்தர்; நவநீதக்களவு முதலிய சேஷ்டிதங்களை அநுஸந்தித்த மாத்திரத்தி்ல் நாமெல்லாரும் பாவங்கள் தொலையப்பெற்றுப் புண்ணியம் பெறுவோமாதலின் இவ்வகையாலே நம்மைப் பரிசுத்தராக்கவல்ல பெருமாள் என்றுங்கொள்க.


    1712.   
    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*
    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.

        விளக்கம்  



    1713.   
    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*
    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  

        விளக்கம்  


    • ‘திருமகள் மருவிய’ என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும் ஆகலாம். கணபுரத்துக்காகில் செல்வம் மல்கியவூர் என்றவாறாம். மலர்க்கு ஆகில், எம்பெருமானார் கத்யத்தில் “பத்மவங லயாம்” என்று அருளிச்செய்தபடியே தாமரை மலர்தோறும் பெரிய பிராட்டியார் உறைகின்றமை உணரத்தக்கது.


    1714.   
    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*
    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      

        விளக்கம்  


    • ‘ஊர் கோள்’ எனப்படும் பரிவேஷத்தைச் சொல்லுவதாயினும், அவ்வட சொல்லின் திரிபாகிய ‘பரிதி’ என்னுந் தமிழ்ச்சொல் ஸூர்யவாசமாக வழங்கும். ‘பனிவரை’ என்று இமயமலை யொன்றைச் சொன்னது மற்றுமுள்ள குலபர்வதங்களுக்கும் உபலக்ஷணமென்ப. இரண்டாமடியில் தீ என்னுஞ் சொல் ‘தி’ எனக் குறுகிநிற்பது செய்யுள் விகாரம்.


    1715.   
    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*
    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே

        விளக்கம்  


    • கழனிகளில் நடுகைக்காக எங்கும் பரம்பிக்கிடக்கிற நாற்று முடிகள் மூன்றாமடியிலுள்ள ‘முடி’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவை நிரம்பிய பெரிய வயல்களிலே உழவர்கள் கலப்பையைக்கொண்டு புகுந்து நடத்துவர்கள்; காலாலே ஒருகால் குழப்புவர்கள்; அவ்வளவிலே இடையிலே தப்பிக்கிடந்த தாமரைப்பூவானது பரிமளத்தைப் புறப்படவிடுமாம். “படைநின்ற பைந்தாமரையோடு அணிநீலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா” (11-8-6) என்றபாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.- வயல்களிலெங்கும் தாமரை முதலிய மலர்கள் மணங்கமழப் பெற்ற திருக்கண்ணபுரம் *அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறைமார்பனுடைய திவ்ய தேசம் என்றதாயிற்று. படிபுல்குமடியிணை பலர்தொழ = முன்பு உலகமளந்த திருவடிகளைத் திருக்கண்ணபுரத்திலே பலரும் வணங்கும்படியாக என்றுமாம். படி – பூமி. மலர்வைகுகொடி – பெரியபிராட்டியார். ‘கொடி’ என்பது ஸ்த்ரீஜாதிக்கு உவமையாகு பெயர்.


    1716.   
    புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
    நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*
    வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
    கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 

        விளக்கம்  


    • திருக்கண்ணபுரம் ஸமுத்ரத்திற்கு ஸமீபத்திலுள்ளதாதலால் ‘நிதி’ குவைக்கலமனு கணபுரம், எனப்பட்டது. த்வீபாந்தரங்களி லிருந்து சிறந்த சரக்குகளை ஏற்றிக்கொண்டு வருகின்ற கப்பல்கள் கடலில் பெரும்பான்மையாகக் காணப்படுதல் இயல்பு. கீழ், திருக்கடல் மல்லைத் திருப்பதிகத்தில் “புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைம்மா களிற்றினமும், நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்தெங்கும் நான்றொசிந்து, கலங்களியங்கும் மல்லை” என்றருளிச் செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. ‘நிதி’ என்னும் பல பொருளொருசொல் இங்கு பொன் என்ற பொருளில் வந்தது. இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வாக்கியம்;- “பொற்குவை மரக்கலங்களையுடைய திருக்கண்ணபுரம். கடலொருபுறமாயிருக்கும் போலேகாணும்” என்பதாம். “கலங்கல் முந்நீர்க்கண்ணபுரத்து” என்று மேல் திருமொழியிலுங் காண்க. திருமடந்தை மண்மடந்தை யிருபாலுந் திகழநிற்கும் பெருமானுடைய உறைவிடம் திருக்கண்ணபுரம் என்றதாயிற்று. புலமனுமலர் – கண் முதலிய இந்திரியங்களை ஆகர்ஷித்துத் தன்னிடத்திலேயே நிலைநிற்கச் செய்யவல்ல (மிக அழகிய) மலர் என்றவாறு. “புலமனு மலர்மிசை மகள்” என்னுமளவே போதுமாயிருக்க, மீண்டும் ‘மலர்மகள்’ என்றதில் புநருக்தி சங்கிக்க வேண்டா; ‘மலர்மகள்’ என்றது ஸம்ஜ்ஞையாகக் கொள்ளத்தக்கது.


    1717.   
    மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
    வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*
    கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
    ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)

        விளக்கம்  



    1718.   
    வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
    மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*
    ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
    கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)

        விளக்கம்  


    • வலியுருவின் மீனாய் = வந்து இவ்விடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்; - “கடல் வெள்ளத்தைத் தன்னுடைய ஒரு செலுவிலே அடக்கவல்ல மத்ஸ்யமாய் வந்து” என்பதாம். செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும் படும். அன்றி, செலுவாவது – மீன்செட்டை. யெனப்படும் மீன் சிறகு என்றுஞ் சொல்லுவர். “மான யோசனை யளவொழி மெய்யுருவாய்ந்த, மீனமாயினனெடுங்கடற் பரவையின் வீழ்ந்து, கானவெண்டிரைக் கருங்கடலளறெழக் கலக்கிப், போன வாளெயிற் றசுரனைத் தடவுறும் புகுந்து” (கந்த புராணம் – உபதேச காண்டம்) என்றபடி எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பல யோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது அந்த மத்ஸ்யத்தின் ஒரு செலுவினகத்தே கடல் வெள்ளம் முழுவதும் ஒடுங்கும்படி யிருந்த தென அதன் பெருமை தோன்ற ‘வலியுருவின் மீனாய்’ என்றது. ஆனாவுருவின் = “ஸதைகரூபரூபாய” “அவிகாராய சுத்தாய” என்கிறபடியே என்றும் ஒரு படிப்பட நின்று விகாரமற்ற வுருவையுடையவன் என்கை. அப்படியாகில், மத்ஸ்யகூர்மாதி ரூபமான விகாரவுருக்களைக் கொண்டது என்னோவெனின்; கருமமடியாகக் கொண்டிலன்; க்ருபையடியாகக் கொண்டவத்தனை. விகாரமற்றவனென்று பிரமாணங்கள் சொல்லுவ தெல்லாம் கருமநிபந்தனமான விகாரமில்லாமையையே யென்றுணர்க.


    1719.   
    மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
    இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
    விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
    கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

        விளக்கம்  


    • ஆழத்துக்கு அவதியில்லாத விடத்திலே மந்தரமலையைக் கொண்டுபோய் நிறுத்து மளவிலே அப்போதுண்டான குழப்பத்தைச் சொல்லுகிறது ‘மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக’ என்று. மலங்கு – மீன்களில் ஒருவகைச்சாதி. அமுத மென்பது – போன வுயிரை மீட்குந் தன்மையதான புகர் பெற்றிருத்தல் பற்றி ‘இலங்கு சோதி யாரமுதம்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. விலங்கல் திரிய = “மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால், மின்னுமிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும், தன்னினுடனே சுழல மலை திரித்து” என்ற பெரிய திருமடல் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.


    1720.   
    பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
    ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*
    கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
    கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

        விளக்கம்  



    1721.   
    உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
    விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
    பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
    களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 

        விளக்கம்  


    • செந்நெற்குலை தடித்து களஞ்செய் புறவிற் கண்ணபுரத்து = ‘களம்’ என்பதற்கு உள்ள பல பொருள்களில் ‘இருள்’ என்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. நெற்கதிர்கள் செழிப்பாக முற்றி எங்கும் இரண்டுகிடக்கின்றபடி. இனி, ‘களம்’ என்பதற்கு நெற்களம் என்றே பொருள் கொள்ளவுமாம். நெற்களத்தின் செய்கை எங்கும் என்றும் மாறாதிருக்கும்படியைக் கூறினவாறு.


    1722.   
    தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
    முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*
    உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
    கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

        விளக்கம்  


    • மூவாவுருவினம்மானை = இரவும் பகலும் லோகரக்ஷணமே செய்யாநிற்கச் செய்தேயும் ஒன்றுஞ் செய்யாதானைப் போன்று இன்னமும் இளகிவரும் உருவத்தையுடையவன்; ஜகத் ரக்ஷண குதூஹலத்தில் கிழத்தன மடையாதே கீழ்நோக்கிப் பிராயம் புகுமவன் என்க. திருக்கண்ணபுரத்தின் வயல்வளமும் தோட்டவளமும் பின்னடிகளிற் சொல்லப்படுகின்றன. வயலுள் பொன் விளைவதாகச் சொன்னது உபசாரம்; “இராமழை பெய்த வீர வீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே” என்றதிற்போல. பொன்போன்ற நெற்களின் விளைவைச் சொன்னவாறு.


    1723.   
    வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
    படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*
    குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
    கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  

        விளக்கம்  


    • க்ஷேத்ரத்தின் போக்கியதை பின்னடிகளிற் கூறப்பட்டது. மூன்றாமடிக்கு இருவகையாகப் பொருள்கூறலாம்; வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் மதுவைப் பெருக்குகின்றனவாக உரைத்தல் ஒன்று. வண்டுகள் மதுவை யதேஷ்டமாக உண்டபின்னும் மலர்கள் மதுவை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே யிருக்கின்றனவாக உரைத்தல் மற்றொன்று. இரண்டாவது நிர்வாஹமே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம் பற்றியது. “கடலிலே ஒரு சிறாங்கையைப் புஜிக்குங் காட்டில் கடல்வற்றாதிறே” என்ற ஸ்ரீஸூக்திகாண்க.


    1724.   
    வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
    வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
    செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
    கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 

        விளக்கம்  


    • அநுகூலர்களோடு பிரதிகூலர்களோடு வாசியற எல்லாரும் இராமபிரானை வணங்கும்படி யிருக்குமேயன்றி, அப்பெருமான் வணங்குதற்குரிய பிறரொருவர் இலராதலால் “வையமெல்லா முடன்வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி” எனப்பட்டது. (இதுபிளவாகப் பிளந்து இருபக்கங்களிலும் இருதுண்டமாக விழுந்தாலும் விழுவனேயன்றி ஒருவர்காலில் தலைசாய விழமாட்டேன்) என்று வணங்காமுடி மன்னனாய் இறுமாந்திருந்தவன் இராவணனொருவனே போலும். அவனைக் குடும்பத்தோடு களைந்தொழித்தமை இரண்டரையடிகளிற் கூறப்பட்டது.


    1725.   
    ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
    வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*
    செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
    கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

        விளக்கம்  


    • “ஒற்றைக்குழையும் - ஒருகாது என்றது கலப்பையை ஒரு தோளிற் சுற்றிக்கொண்டு புறப்படுகையாலே ஒருகாதுக்குழையே புறம்புள்ளார்க்குத் தோன்று மென்னுங் கருத்தாலே என்று கொள்வது” என்றுரைத்துள்ளார். மற்றும் பிரமாணகதிக்குப் பொருந்திய நிர்வாஹமுண்டேல் கண்டு கொள்வது. கண்ணபிரானால் பல வேல்வேந்தர்கள் அமர்க்களத்தில் வீரஸ்வர்க்கத்திற்குச் செலுத்தப்பட்டபோது அதற்குப் பலராமன் துணையாயிருந்தது பற்றியும், கம்ஸனுடைய தம்பியாகிய ஸுநாமாமுதலிய பலமன்னர்களைத் தானே கொன்றிட்டதுபற்றியும் “ வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்துச் செற்ற கொற்றத்தொழிலானை” என்றது. செந்தீமூன்றுமில்லிருப்பக் கற்றமறையோர் கண்ணபுரம் = நித்தியாக்நிஹோத்ரிகளும் வித்வான்களுமான ஞானானுட்டான ஸம்பந்நர்கள் திரண்டுவாழுமிடம் திருக்கண்ணபுரம் என்க.


    1726.   
    துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
    இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*
    உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
    கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  

        விளக்கம்  


    • மண்ணாகக் காணப்படுகிற பூமிக்கு அதிஷ்டாந தேவதையாகிய பிராட்டிக்கு விசேஷணம் துவரிக்கனிவாய் என்பது. இவரித்தரசர் தடுமாற = இவரித்தல் – எதிர்த்தல். இவரித்த + அரசர் – இவரித்தவரசர் எனச் சந்தியாக வேண்டுவது அங்ஙனம் ஆகாதது தொகுத்தல் விகாரம். “அரசர் தடுமாற இவரித்து இருள் நாள் பிறந்த அம்மானை” என்றும் அந்வயிக்கலாம்; அப்போது ‘இவரித்து’ என்பதை எச்சத்திரிபாகக் கொண்டு இவரிக்க என்றுரைத்துக் கொள்க. அன்றியே, உருபு பிரித்துக் கூட்டி ‘இருள்நாள் பிறந்து பாரதத்துளரசர் தடுமாற இவரித்த அம்மானை’ என்னவுமாம். க்ருஷ்ணபக்ஷத்தில் நடுநிசியில் அவதரித்ததுபற்றி ‘இருள் நாள் பிறந்த’ எனப்பட்டது. ஒரு பக்கத்தில் கடலலைகள் வந்து முத்துக்களைக் கொழித்துத்தள்ளவும் மற்றொருபக்கத்தில் செந்நெற் பயிர்கள் கதிர்களை வணங்கிச் சாமரம் வீசுவதுபோல் அசையவும் அழகு மிக்கதாம் திருக்கண்ணபுரம். இங்கே ஒரு சங்கை :– திருக்கண்ணபுரத்திற்கு ஏறக்குறைய யோஜனை தூரத்திற்கப்பால் கடலுள்ளது; அப்படியிருக்க, கடல் அணித்தாயிருப்பது போல் கீழ்த்திருமொழியிலும் இத்திருமொழியிலும் அருளிச்செய்தது என்கொண்டு? என்று; இந்த சங்கைக்கு நாம் என்னபரிகாரம் சொல்வோம்; நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் (9-10-1) “வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்” என்றருளிச் செய்யக் காண்கிறோம்; முற்கால நிலைமையில் கடல் மிக அணித்தா யிருந்ததென்னலாம் போலும்.


    1727.   
    மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
    தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்
    ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
    தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)

        விளக்கம்  


    • தசாவதாரங்களையும் அடைவே அநுஸந்திக்கத் தொடங்கிய ஆழ்வார் கீழ்ப்பாட்டில் க்ருஷ்ணாவதாரத்தோடு நிறுத்தி இந்த நிகமநப் பாசுரமருளிச் செய்கிறாராயினும், பத்தாவது அவதாரமும் இனி நடக்கப்போகிறதுமான கல்கியவதாரம் இப்பாட்டில் சுருக்கமாக அநுஸந்திக்கபடுகிற தென்று கொள்க. இப்பாசுரத்தில் ஸ்ரீராமாவதாரத்தை “தானாய்” என்ற சொல்லால் குறிப்பிட்டதனால் மற்ற அவதாரங்களிற் காட்டிலும் ஸ்ரீராமாவதாரத்திற்குள்ள ஏற்றம் விளங்கும். ஆக, தசாவதாரங்கள் செய்தருளின பெருமான் விஷயமாகப் பாடின இத்திருமொழியைக் கற்போர் நித்ய நிஷ்கல்மஷராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.


    1728.   
    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 
    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)

        விளக்கம்  


    • அணி கொள் மரதகத்தை = பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரதகப்பச்சையையும் உவமை கூறுவதுண்டு “பச்ச மாமாலை போல் மேனி” என்ற திருமாலையுங்காண்க; காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் இவ்வுவமையினால் தொனிக்கும்.


    1729.   
    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*
    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 

        விளக்கம்  


    • “தருமான மழை முகிலை” என்றது – ‘தருவை, மாமழை முகிலை’ என்றபடி. தரு என்னும் வடசொல் விருக்ஷமென்று பொதுப் பொருள்படுமாயினும் இங்கே கல்பவிருக்ஷமென்று சிறப்புப் பொருள் படும். வேண்டுவார் வேண்டின பலன்களைக் கொடுப்பதில் கல்பவிருக்ஷத்தை நிகர்த்தவன் என்க. “எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்று கல்பவ்ருக்ஷத்திற்காட்டிலும் தன் பக்கலிலுள்ளவற்றைக் கொடுக்குமே யன்றித் தன்னைக் கொடுக்க மாட்டாது; எம்பெருமான் அங்ஙனன்றியே, பல்னகளையுங் கொடுத்துத் தன்னையுங் கொடுத்தருள்வன் என்று. இருந்தவிடத்திலிருந்து கொண்டே உதவுகின்ற கல்பவ்ருக்ஷத்தை உவமை கூறின வளவால் த்ருப்திபெறாதவராய்ப் பெரிய காளமேகத்தை உவமை கூறுகின்றார் மான மழை முகிலை என்று. “உயிரளிப்பான் மாகங்களெல்லாந் திரிந்து நன்னீர்கள் சுனந்து” என்றாற் போலே நீரைச்சுமந்து கொண்டு நாடெங்குஞ் சென்று ஆங்காங்கு வர்ஷிக்கும் மேகமே “விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய், மண்மீதுழல்வாய்” என்னப்படுகிற எம்பெருமானுக்குப் பொருத்தமான உவமையாகும். அடியாருள்ள விடந்தேடிச் சென்று உதவுமவனிறே. பிரியாது தன்னடைந்தார் வருமானந்தவிர்க்கும் = அடியார்கட்கு ஏதேனும் அவமான முண்டானால் ஆனைத்தொழில்களுஞ் செய்து அதைப் போக்கியருள்பவன் எம்பெருமான்.


    1730.   
    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*
    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    

        விளக்கம்  


    • விலங்கலுறப் படையாலாழிதட்ட பரமன் = ஆழி விலங்கலுறப் படையால் தட்ட பரமன் என்றும் அந்வயித்து உரைப்பார். ஆழி ஸ்ரீ ஸூர்யனானவன், விலங்கல் உற – (அஸ்தமன) பர்வதத்தில் சேர்ந்து விட்டானென்னும்படி, படையால் – சக்கரப்படையினால், தட்ட – மறைத்த – என்று பொருள் காண்க.


    1733.   
    எஞ்சா வெம்நரகத்து*  அழுந்தி நடுங்குகின்றேற்கு*
    அஞ்சேல்என்று அடியேனை*  ஆட்கொள்ள வல்லானை*
    நெஞ்சே! நீநினையாது*  இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
    மஞ்சுஆர் மாளிகைசூழ்*  வயல்ஆலி மைந்தனையே.

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “உன்னை யென்றும் மறவாமைப் பெற்றேனே” என்றருளிச் செய்தவர்தாமே இப்போது “நெஞ்சே! நீ இறைப்பொழுதும் நினையாது இருத்திகண்டாய்” என்கிறார்; கருத்தெ? ; எம்பெருமான் செய்தருளின பேருதவிக்குத் தம்முடைய மறவாமை ஈடல்ல; அந்த உபகாரத்தின் கனத்தையும் தம்முடைய நினைவையும் ஒத்திட்டுப் பார்க்குமளவில் தம்முடைய மறவாமை அஸத்கல்பமாய்த் தோன்றிற்றுப் போலும்; அதனால் அருளிச் செய்கிறபடி. பலவகைகளாலும் கனக்கப் பாவங்களைப் பண்ணி அவற்றின் பலன்களை யநுபவிக்கக் கொடிய நரகங்களிலே சென்று நோவுபடுங்கால் ‘தான் பண்ணின பாவங்களின் பலனைத் தான் அநுபவிக்கட்டும்; நமக்கு வந்ததென்ன? என்றிராமல் அங்கே யெழுந்தருளி ‘நாம் இருக்க, நீ பாவங்களின் பலனை அநுபவிக்க ப்ராப்தியுண்டோ? அஞ்சாதே’ என்று அபயப்ரதானம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பிரான் என்பன முன்னடிகள். நரகத்திலே அழுந்தி நடுங்கும்போது அஞ்சேலென்று ஆட்கொள்வதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து என்? எனில்; *தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின்முன்னாக இழுப்பதாகிற யமதண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் அங்கே வந்து அபயமளித்துக் காத்தருள்கின்றான் என்கிறதன்று; ‘ஐயோ! நாம் எல்லையில்லாத பாவங்களைப் பண்ணிவிட்டோமே! வெவ்விய நரகங்களிலே சென்று கொடிய துன்பங்களை யநுபவிக்க நேருமே, என்செய்வோம்?’ என்று கவலைப்பட்டு வருந்தியிருக்குமிருப்பிலே அபயப்ரதானம் பண்ணும்படியைச் சொன்னவாறு என்க. இங்கு வெந்நரகமென்றது ஸம்ஸாரத்தை என்று கொள்ளும் பக்ஷத்தில் எளிதாகவே பொருளாகும். இப்பொருளே வியாக்கியானத்திற் கிணங்கியது.


    1734.   
    பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
    உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*
    முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
    எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!

        விளக்கம்  


    • சரீரபிண்டத்தை மாத்திரமே உற்பத்தி பண்ணுமவர்களான மாதாபிதாக்கள் என்னைப் பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்; ஞானபக்தி முதலிய குணங்கள் எனக்கு வளர்தற்குரிய வழிகளில் ஒரு முயற்சியும் அவர்கள் செய்தார்களில்லை. இப்படி அவர்கள் கைவிட்டகாலத்தில் எனக்கு எல்லாவுறவுமுறையாய் நின்று என்னை வளரச்செய்து வருகின்ற எம்பெருமானை நெஞ்சே! என்ன காரணம் பற்றி மறந்தொழிய முடியும்? சொல்லாய் என்று தம் திருவுள்ளத்தோடு உலாவுகிறார். எத்தால் யான் மறக்கேன் = எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்யவில்லையென்கிற காரத்தினால் மறக்கவோ? அல்லர், அற்பமான உபகாரமே நமக்குப் பண்ணியிருக்கிறானென்று கொண்டு மறக்கவோ? நம்மை ரக்ஷிக்கவல்லார் பிறருளரென்று கொண்டு அவனை மறக்கவோ?


    1735.   
    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*
    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.

        விளக்கம்  


    • தன்னை மறக்கமுடியாதபடி எம்பெருமான் உமக்குப் பண்ணித்தந்த உபகாரந்தான் ஏதென்ன, தன்னுடைய அநுபவத்துக்கு இடையூறு வராதபடி பண்ணித்தந்த மஹோபகாரகனன்றோ வென்கிறார். “பிறவாமைப் பெற்றேனே” என்பதற்குப் பலபடி பொருளருளிச் செய்வர்; பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானங் காண்மின் – “இப்பேற்றுக்கு விச்சேதத்தைப் பண்ணக்கடவ ஜன்மம் மறுவலிடாதபடி பெற்றேனென்னுதல்; அன்றிக்கே இப்பேற்றுக்கடியாக என்பக்கல் ஒரு நன்மை பிறவாதிருக்கச் செய்தே பெற்றேனென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, பெற்றேனென்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாதபடி பெற்றேனென்னுதல். உபகாரஸ்ம்ருதி அநுவர்த்தித்தவன்று ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்பட வேண்டும்படி யிருக்குமிறே; அது வேண்டாதே ‘ப்ராப்தம் இது’ என்றிருக்கும்படி உபகரித்தானாயிற்று.” என்று. இனிப் பிறப்பில்லாமையைப் பெற்றேன் என்பது முதல் அர்த்தம்; (என்னிடத்தில் ஒரு ஹேதுவும்) பிறவாமல் பேறுபெற்றேன் என்பது இரண்டாவது அர்த்தம்; நன்றியறிவும் பிறவாமலே பேறுபெற்றேன் என்பது மூன்றாவது அர்த்தம்.


    1737.   
    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*
    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)

        விளக்கம்  


    • கவத்பக்திமிகுந்து தொண்டர்களென்று பெயர் பெற்றவர்களை விளி்த்து, நீங்கள் இத்திருமொழியைப் பாடியாடுங்கோள்; உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும் – என்றாராயிற்று. வருநீர்வையம் – கடல் சூழ்ந்த பூமியிலே, உய்ய – நீங்கள் உஜ்ஜீவிக்கும்படி, இவைபாடி யாடுமின் என்னவுமாம்.


    1738.   
    வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
    உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே
    தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
    கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

        விளக்கம்  


    • கீழ்த்திருமொழியில் “கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங்கென்று கெலோ” என்றார்; அது எம்பெருமான் திருவுள்ளப்படியே ஆகவேண்டியதாதலால் ‘பிரானே! உன் திருவுள்ளம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லவேணும்’ என்கிறார். ‘என்செய்கின்றாய் சொல்லு’ என்ற கேள்வியினால் ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளை வெளியிடுகிறாராழ்வார் என்று குறிக்கொண்மின்; சேதநனுடைய க்ரியா கலாபமொன்றும் பேற்றுக்கு ஸாதநமன்று; பரமபுருஷனுடைய திருவுள்ளத்திலிரக்கமே பலனைப் பெறுவிக்கவல்லது என்க. பெரியபிராட்டியார் புருஷகாரமாயிருந்து எம்பெருமான் திருவுள்ளத்திலிரக்கத்தை வளரச் செய்வளென்பது தோன்ற ‘வண்டார் பூமாமலர்மங்கை மணநோக்க முண்டானே!’ என்கிறார். ‘பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை’ என்கிற சாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறாராகவுமாம்; “உன்றனக்கே தொண்டானேற்கு” என்றிறே அடுத்துள்ளது. பிராட்டியின் கடைக்கண் நோக்கத்தை எம்பெருமான் பரம போக்யமாகக் கொண்டு அதையே தனக்கு ஜீவநாதாரமாகவுங் கொள்வனாதலால் ‘மலர்மங்கை மணநோக்கம் உண்டானே!’ என்றார்; பிராட்டியின் கடாக்ஷவீக்ஷணத்தை உணவாகக்கொள்வனாம். தொண்டானேற்கு தொண்டுசெய்ய விருப்பங்கொண்டிருக்கிற எனக்கு என்றபடி பகவத்கீதையில் “தேஷாம் ஸததயுக்தாநாம்” என்றவிடத்தில்,ஸததயுக்தாநாம் – ஸததயோகத்தை விரும்புகின்றவர்களுக்கு என்று பொருள் கொள்வதுபோல. நால்வேதங்கண்டானே! இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான வருளிச் செயல்;....“பட்டர் அருளிச் செய்தாராகச் சிறியாத்தான் பணிக்கும்படி... இது கர்த்தரி அன்று, கர்மணி கிடாய், என்று.” என்பதாம். இதனை விவரிப்போம்; - ‘கண்டான்’ என்பதற்கு கண்டவன் என்றும் காணப்பட்டவன் என்றும் பொருள் படுவது தமிழ்மரபு. இப்பொருள்கள் வடமொழியில் முறையேயென்றும், யென்றும் வழங்கப்படும். இங்கு, நால் வேதங்களையும் கண்டவனே! எனப் பொருள்கொள்வது கர்த்தரிப் பொருளாகும்; நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! எனப் பொருள் கொள்ளுதல் கர்மணிப்பொருளாகும். கர்மணிப்பொருள் கொள்ளவெணுமென்பது பட்டர் திருவுள்ளம். நால்வேதங்களையுங் கண்டவனே! என்பதில் விசேஷமில்லை; நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! என்பதில் ஸ்வாரஸ்யமுண்டு. உபாயமும் உபேயமும் தானேயாக நால்வேதங்களாலும் நிஷ்கர்ஷிக்கப்பட்டவனே! என்றவாறு. ‘நான் கண்ட பொருள்’ என்றால் ‘என்னாலே காணப்பட்ட பொருள்’ என்று பொருள்படுவது போல ‘நால் வேதங்கண்டானே!’ என்றதற்கு நால் வேதங்களாலும் காணப்பட்டவனே! எனப் பொருள்படுதல் எளிதே யென்றுணர்க.


    1739.   
    பெருநீரும் விண்ணும்*  மலையும் உலகுஏழும்* 
    ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய*  நின்னை அல்லால்*
    வருதேவர் மற்றுஉளர் என்று*  என்மனத்து இறையும்-
    கருதேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

        விளக்கம்  


    • “அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பு அகன்றதோ” என்றபடி கைலாஸ கிரியுமுட்பட எல்லாவற்றையும் பிரளயகாலத்தில் திருவயிற்றில் கொண்டிருந்த உன்னைத் தெய்வமாக நினைப்பேனோ, அன்றி, உன்திருவயிற்றில் ஒடுங்கியிருந்து பின்பு வெளிவந்த எச்சில்களைத் தெய்வமாக நினைப்பேனோ என்கிறார்ப்பாட்டால்.


    1740.   
    மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
    உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*
    மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
    கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)

        விளக்கம்  


    • வேறு சிலரைத் தெய்வமாக நெஞ்சிலும் நினைக்கமாட்டே னென்றார் கீழ்ப்பாட்டில்; அவ்வளவேயோ? தாமஸபுருஷர்களோடு சேர்க்கையுமில்லை, ஸாத்விகபுருஷர்களை யொழியக் காலம் செலுத்தவும் மாட்டேனென்கிறார் இதில். திருவஷ்டாக்ஷரமென்னும் பெரிய திருமந்திரத்தில் தாம் ஸாரமாக ப்ரதிபத்திபண்ணின அர்த்த விசேஷம் பாகவத சேஷத்வமே என்பதை இப்பாட்டில் வெளியிட்டருளுகிறார். வேதங்களும் வேதாங்கங்களு மெல்லாம் ஐந்து அர்த்தங்களையே முக்கியமாகப் பிரதி பாதிக்கின்றன; அவையாவன :– ப்ராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூபம், ப்ராப்தாவான சேதநனுடைய ஸ்வரூபம், எம்பெருமானை யடைதற் குறுப்பான உபாயத்தின் ஸ்வரூபம், அடைந்து பெறவேண்டிய பேற்றின் ஸ்வரூபம், அப்பேற்றைப் பெறவொட்டாத பிரதிபந்தகத்தின் ஸ்வரூபம் என்பனவாம். இவையே அர்த்தபஞ்சகம் எனப்படும். “மிக்க இறைநிலையும் மெய்யா முயிர்நிலையும், தக்க நெறியும் தடையாகித் தொக்கியலு மூழ்வினையும் வாழ்வினையுமோதுங் குருகையர்கோன், யாழினிசை வேதத்தியல்.” என்கிறபடியே திருவாய் மொழி ஆயிரத்தினுள்ளும் இவ்வார்த்தபஞ்சகமே விவரிக்கப்பட்டுள்ளதென்பதும் இங்கு உணரத்தக்கது. திருவஷ்டாக்ஷத்தில், ப்ரணவத்தாலே சேதநஸ்வரூபத்தையும், நமஸ்ஸாலே விரோதியினுடையவும் உபாயத்தினுடையவும் ஸ்வரூபங்களையும், நாராயண பதத்தாலே பரமபுருஷனது ஸ்வரூபத்தையும், அதில் சதுர்த்தியாலே புரஷார்த்தஸ்வரூபத்தையும் பிரதிபாதிக்கையாலும், அறியவேண்டிய ஸகலார்த்தங்களும் இவையே யாகையாலும் ‘மற்றெல்லாம் பேசிலும்’ எனப்பட்டது. பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த முழுக்ஷுப்படியில் “மற்றெல்லாம் பேசிலு மென்கிறபடியே அறியவேண்டுமர்த்தமெல்லாம் இதுக்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்.” என்றருளிச்செய்ததுங் காண்க. இப்படி திருமந்திரத்தில் அநேக அர்த்தங்கள் கிடந்தாலும் அவற்றில் தமக்கு ஊற்றமில்லை யென்பதை ‘பேசிலும்’ என்ற உம்மையினால் வெளியிடுகிறார். பின்னை எவ்வர்த்தத்தில் ஊற்றமென்ன, “உற்றதுமுன்னடியார்க்கடிமை என்கிறார். திருமந்திரத்தில் எந்த சொல்லின் பாகவத சேஷத்வம் காணக்கிடக்கின்றது? என்னில், கேண்மின் :– அஹங்காரமும் மமகாரமும் நீங்கப்பெற்று பகவத் சேஷத்வம் உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவத்சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத சேஷத்வம் அநுஸந்திக்கப் படவேணுமென்பது ஆழ்வார் திருவுள்ளம். இந்த பாகவத சேஷத்வம் திருமந்திரத்தினுள் ப்ரணவத்தின் உள்ளீடான அகாரத்திலே தோற்றுமென்று சிலரும் உகாரத்திலே தோற்றுமென்று சிலரும் சொல்வதுமுண்டு. எங்ஙனேயெனில், அகாரத்தின்மேல் ஏறிக்கிடந்து லோபமடைந்துள்ள சதுர்த்தியாலே ஆத்மாவினுடைய பகவத் சேஷத்வம் சொல்லப்படுகையாலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லையான பாகவத சேஷத்வத்தை அகாரத்திலே அநுஸந்திக்கலாமென்பர் சிலர். அநந்யார்ஹசேஷத்வத்துக்கு எல்லை பாகவத சேஷத்வமாகையாலே அந்த அநந்யார்ஹத்வத்தைச் சொல்லுகிற உகாரத்திலே அதன் எல்லையான பாகவத சேஷத்வத்தை அநுஸந்திக்கலாமென்பர் சிலர். அர்த்தாத் ஸித்தமாக அநுஸந்திக்க வேண்டுவதை எந்த இடத்தில் அநுஸந்தித்தாலும் குறையில்லையாகிலும் அஹங்கார மமகாரங்கள் கழிவதைக் காட்டுகின்ற நமஸ்ஸிலே அதனை அநுஸந்திப்பது மிகப் பொருந்துமென்பது நம் ஆசார்யர்களின் திருவுள்ளம். இப்பாட்டின் ஈற்றடி “கற்று நான்வல்லது கண்ணபுரத்தானே” என்றும் ஓதப்பட்டு வந்ததாக வியாக்யானத்தில் தெரிகிறது. அது இப்போது எங்கும் வழங்காதபாடம்.


    1741.   
    பெண்ஆனாள்*  பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை*  உகந்தேன்நான்*
    மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி*  மதுமலராள்-
    கண்ணாளா*  கண்ணபுரத்து உறை அம்மானே!

        விளக்கம்  


    • அடியேன், கைக்கொள்வதற்குரிய சிறந்த வஸ்து அல்லேனாயினும், பேய்ச்சியாகிய பூதனை உன்னைக் கொல்வதற்காகத் தன்முலையில் தடவிக்கிடந்த விஷமே உனக்கு விரும்பத்தக்கதானபோது அடியேன்தானோ விரும்பத்தகாதவனாகப் போகிறேன்; அந்த விஷத்திற் காட்டிலும் கொடியவனோ நான்? அப்படி கொடியவனேயாயினும், புருஷகாரம் பண்ணிச் சேர்ப்பிக்கவல்ல பிராட்டிமார் இணைபிரியாதிருக்க நான் இழக்க வேண்டுவதுண்டோ? என்கிற கருத்தையடக்கி இப்பாசுர மருளிச் செய்கிறார்.


    1742.   
    பெற்றாரும் சுற்றமும்*  என்று இவை பேணேன்நான்* 
    மற்றுஆரும் பற்றுஇலேன்*  ஆதலால் நின்அடைந்தேன்*
    உற்றான்என்று உள்ளத்து வைத்து*  அருள் செய்கண்டாய்,*
    கற்றார்சேர்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

        விளக்கம்  


    • காமத்தாலே பெற்றுவிட்டுப் போட்டுப்போகிற தாய்தந்தையரையும், “பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் போற்றியென்றேற்றெழுவர், இருள்கொள் துன்பத்தின்மை காணில் என்னே யென்பாருமில்லை” என்கிறபடியே கையில் துட்டுகாசு நடையாடுங் காலங்களில் உறவு கொண்டாடியும் அஃதில்லாத வறுமையில் விட்டொழிந்தும் போருகிற ஆபாஸபந்துக்களையும், புகலாக நெஞ்சிலும் நினைக்கின்றிலேன். விவேகமில்லாமல் வேண்டியபடி வரங்களையளித்துத் தடுமாறியும், ஆபத்காலத்தில் முதுகுகாட்டிஓடியும் போருகிற தேவதாந்தரங்களிடத்திலும் ஒரு பற்றாசு உடையேனல்லேன் ஆக, பரிபூரணமான அநந்யகதித்வத்தையுடையேனான நான் “களைவாய்துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே உன்னைவந்து பணிந்தேன். ‘எங்கும் புகலற்று நம்மையே பற்றி வந்தானிவன்’ என்று திருவுள்ளம் பற்றி அடியேன்பால் அருள்புரியவேணும். இல்லை யாகில், பரமபதம் திருப்பாற்கடல் முதலிய இடங்களைவிட்டுத் திருக்கண்ணபுரத்தே கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பது பயனற்றதாகுங்காண். நீ வர்த்திக்கிற ஊரிலே உள்ளவர்கள் ஸாமாந்யரல்லர்; கலையறக்கற்றுணர்ந்த மாஞானிகள்; வேறு புகலற்று வந்தவனைக் கைக்கொள்வது தகுதியோ? கைவிடுவது தகுதியோ? என்று அவர்களைக் கேட்டாகிலும் நி உணரப்பெறலாம் – என்கிறார்போலும். ‘உற்றானென்று’ என்பதற்கு ‘படாதபாடுகளும் பட்டானென்று’ என்றும் பொருளுரைப்பர். அதாவது – இக்கலியன் நம்மைவிட்டுப் புறம்பேபுக்குப் படவேண்டியதெல்லாம் பட்டுவந்தான்; எங்குமுழன்றலைந்து வருந்தி வந்து சேர்ந்த விவனை இனி நாம் பரீக்ஷிக்கத் தேவையில்லை என்று கடுகக் கிருபைசெய்தருளவேணும் என்கை. உற்றான் – அநர்த்தப்பட்டான் என்றபடி. இச் சொல்லுக்கு இப்பொருள்படுதலை “மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள், உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர்” என்ற திருமாலைப் பாசுரத்திலுங் காண்க.


    1743.   
    ஏத்திஉன் சேவடி*  எண்ணி இருப்பாரைப்*
    பார்த்திருந்து அங்கு*  நமன்தமர் பற்றாது*
    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று*  தொடாமைநீ,-
    காத்திபோல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

        விளக்கம்  


    • பிரானே! நீ என் குற்றங்களைப் பாராதே என்னைக் கைக்கொண்டருள்வது மாத்திரம் போராது; செய்த குற்றங்களை ஆராய்வதற்கென்று நீ நியமித்துள்ள யமன் முதலானாரும் என்னருகுவராதபடி நோக்கியருளவேணுமென்று பிரார்த்தித்தல் இப்பாட்டின் உள்ளுறை.


    1745.   
    மாண்ஆகி*  வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
    பூண்ஆகம் கீண்டதுவும்*  ஈண்டு நினைந்துஇருந்தேன்*
    பேணாத வல்வினையேன்*  இடர் எத்தனையும்-
    காணேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!        

        விளக்கம்  


    • பேணாத தேஹத்திற் காட்டில் வேறுபட்டவனான ஆத்மா ஒருவன் உண்டென்று நினைத்து அவனுக்கு உரிய நன்மைகளை நாடாதவனாயிருந்தவன் நான் என்றபடி.


    1746.   
    நாட்டினாய் என்னை*  உனக்குமுன் தொண்டுஆக* 
    மாட்டினேன் அத்தனையே கொண்டு*  என் வல்வினையை*
    பாட்டினால் உன்னை*  என் நெஞ்சத்து இருந்தமை-
    காட்டினாய்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

        விளக்கம்  


    • இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான முடிவில் “இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி” என்றொரு வாக்யமுள்ளது. அதன் கருத்தாவது – மலையாளத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடமாம்; அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நில மிதியால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம். (இதுமுற்கால வழக்கம் போலும்.) திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடி.


    1747.   
    கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
    கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*
    பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
    அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)

        விளக்கம்  


    • திருக்கண்ணபுரத் தெம்பெருமான் விஷயமாகக் கலியன் சொன்ன இப்பாமாலையை நிதியாகக் கொண்டு பாடும் அடியவர்கட்குத் திருநாட்டுச் செல்வத்தை ஆளப்பெறுவதே பேறாகும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று. கண்டசீர்க்கண்ணபுரம் – பரமபதத்தின் சிறப்பை ஸ்ரீ வைகுண்டகத்யம் முதலான ஏட்டுப்புறங்களிலே காணலாமத்தனை யொழியக் கண்கொண்டு காண வொண்ணாது; அங்ஙனன்றியே திருக்கண்ணபுரத்தின் சிறப்பு ப்ரத்யக்ஷலக்ஷ்யமென்கை.


    2078.   
    செங் கால மட நாராய் இன்றே சென்று* திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு* 
    என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்* இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை* நாளும்- 
    பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்* பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* தந்தால்- 
    இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்* இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (2)  

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும் தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள். “திக்ஷுஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும் வாநரமுதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள். ராமாவதாரத்திலே வாநரஜாதி வீறுபெற்றதுபோலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர். செங்காலமடநாராய் = பரகாலநாயகி தான் எம்பெருமானோடு ஸம்ச்லேஷித்திருந்த காலத்திலே அவன் தனது காலை நோக்கி ‘இதொரு காலும் சிவப்பும் இருந்தபடி என்!‘ என்று கொண்டாடக் கண்டவளாதலால் நாரையின் மற்ற அவயங்களை விட்டுக் காலைக் கொண்டாடத் தொடங்குகிறாள். இனிதாகச் சூடவேண்டிய ஸுகுமாரமான கருமுகை மாலையைச் சும்மாடு கொள்வது போல, கண்கொண்டு காணவேண்டிய உனதுகாலைக் கொண்டு தூதுபோக விடுகை மிகையாயிருக்கின்றதே! என்செய்வேன்? உன்காலைப்பற்றியே என்காரியம் தலைக்கட்ட வேண்டியிருக்கின்றதே என்கிறாள் ‘நாராய்!‘ என்னும் விளி அம்மே! என்னுமாபோலேயிருக்கின்றது. வழிபறியுண்கிறவளவிலே தாய்முகத்திலே விழித்தாற்போலே யாயிற்று தலைவனைப் பிரிந்து நோவுபடுகிறவளவிலே இந்த நாரையின் காட்சியுண்டாயிற்று. பிராட்டியைப் பிரிந்து நோவுபட்டுத் தடுமாறி நின்றவளவிலே பம்பைக்கலையில் அனுமான் வந்து தோன்றினபோது பெருமாளுக்குண்டான அத்தனை ஹர்ஷம் இப்போது பரகால நாயகிக்கு உண்டாயிற்றுப்போலும். “செங்காலமடநாராய்!“ என்று மிக்க இரக்கந்தோற்றக் கூவினவாறே நாரை ‘என்னை இவ்வளவு போற்றிப்புகழ்ந்து அழைக்கவேணுமோ? திருவுள்ளம் பற்றின காரியத்தைச் சொல்லலாகாதோ?“ என்று கேட்கிறாப்போலே இசைவு தோற்ற அருகேவந்து நிற்க இன்றேசென்று என்று தொடங்கிச் சொல்லுகிறாள். நாளை பார்த்துக் கொள்ளுவோ மென்று இருந்துவிடலாகாது; இப்போதே செய்ய வேண்டிய காரியங் காண். “ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணம்“ (அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர்படியைப் பார்த்தாலும் காலதாமதம் செய்யலாகாது; “ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – மஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ.“ என்னத்தக்க என்படியைப் பார்த்தாலும் காலதாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும். எவ்விடத்திற்கு? என்ன ; திருக்கண்ணபுரம் புக்கு என்கிறாள். கீழ்ப்பாட்டில் “அணியழுந்தூர் நின்றனுக்கின்றே சென்று“ என்று திருவழுந்தூறே வண்டைத் தூதுவிட்ட இத்தலைமகள் இப்பாட்டில் இத்திருப்பதியை விட்டுத் திருக்கண்ணபுரத்திலே தூது விடுவானேன்? என்னில்; முற்பாட்டில் தூதுவிட்ட வண்டை அவன் திருவழுந்தூரிலே கண்டிருப்பன்; அங்குத் தரித்திருக்க மாட்டாமல் அந்த வண்டோடு கூடவே அரைகுலையத் தலைகுலைய எதிரேவந்து ஒருபயணம் புகுந்து திருக்கண்ணபுரத்தேற வந்திருக்கிற ஸமயமாயிருக்கும் இப்போது; அங்குச் செல்லலாம் என்கிறாள்போலும். பொதுவாக எம்பெருமானை நோக்கித் தூது விடுகிறாளத்தனையாதலால் எந்தத்திருப்பதியை நோக்கித் தூதுவிடினுங் குறையொன்றுமில்லையென்க. திருக்கண்ணபுரத்தில் அவரைக் கண்டுபிடிக்கும் வகை ஏதென்ன; என்செங்கண் மாலுக்கு என்கிறாள். அவர் என்னிடத்தில் கொண்டிருக்கிற வியாமோஹமெல்லாம் திருக்கண்களிலே காணலாம்படியிருக்குங் காண்; “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வதியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“ என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட்சொல்லித் தருமே என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்; அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டுபிடித்துக்கொள்ளலா மென்கிறாளாயிற்று. (என் துணைவர்க்கு) எந்த நிலைமையிலும் எனக்குத் துணையாயிருப்பவர் அவர்; கலந்து பிரிந்தபோதும் ஸத்தை குலையாதபடி குணாநுபத்தாலே தரிப்பிக்கவல்ல துணைவர் என்றபடி. இப்போதுண்டான ஆற்றாமையைப் பரிஹரிப்பதற்க அவரே துணைவர்; “எருத்துக் கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“. அவரைக் கண்டு கூறவேண்டியவார்த்தை என்னென்ன; என்காதல் உரைத்தியாகில் என்கிறாள் நீ அவர்க்கு வேறொன்றுஞ் சொல்லவேண்டா, ‘இங்ஙனே ஆசைப்பட்டுக் கிடக்கிறாளொருத்தி‘ என்று இவ்வளவு சொன்னால் போதும். மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரமவிலக்ஷணம் என்பது தோன்ற ‘என்காதல்‘ என்கிறாள். “சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை, நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. (என்காதல்) என்னுடைய காதல் மற்றுள்ள முமுக்ஷிக்களின் காதல்கோலுமன்று; அயர்வறு மமரர்களின் காதல்போலன்று, அயர்வறுமமரர்களதிபதியின் காதல் போலுமன்று; என்னுடைய காதல்‘ என்றே சொல்லுமித்தனை. ‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே. உரைத்தியாகில் = அங்குச் சென்றவாறே அவருடைய வடிவழகிலே கால்தாழ்ந்து போன காரியத்தை மறக்கவுங்கூடுமே; தன்னையும் மறக்கும்படியாயன்றோ அவ்விடத்து இனிமைதானிருப்பது. அப்படிப்பட்டவதில் கால்தாழாமல் தரித்து நின்று என்காதலை அவர் பக்கலில் உரைக்கவல்லையாகில் என்கிறான். நீ வாய்படைத்ததற்கு இதுவன்றோ பிரயோஜனம்; பலவார்த்தைகளையும் சொல்லிப்போருகிற உன்வாயிலே என்விஷயமாக இந்த ஒருவார்த்தை வந்தாலாகாதோ? நான் சொன்ன மாத்திரத்தால் அவர் வந்திருவாரோவென்ன; உரைத்தியாகில் இது வொப்பதேமக்கின்பமில்லை யென்கிறாள். அவர் வரட்டும், வராமற்போகட்டும்; நீ அவரிடம் சென்று என்காதலைச் சொல்லுமதுவே எனக்குப் பரமாநந்த மென்கிறாள். அவர் பரமசேத நரன்றோ; தூதுரை செவிப்பட்டால் வராதொழிவரோ? வந்தே தீருவர் என்றிருக்கிறான். எனக்காகச் சென்று தூதுரைத்தல்மாத்திரம் போதாது; அவ்வுபகாரஸ்மிகுதியாலே நான் உனக்குப் பண்ணும் கிஞ்சித்காரத்தையும் அங்கீகரிக்கவேணுமென்கிறாள். (நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்) பிரிந்தாரிரங்கு மிடம் நெய்தலாகையாலே கடற்கரையிலே தானிருக்கிறாளாய், ‘பரப்புடைத்தான கடற்கரைச்சோலை யெல்லாம் எந்நாளும் உன் அதீனமாம்படி பண்ணிவைப்பேன்; ஆனைக் கன்றுபோலேயிருக்கிற மீன்களை நீ மேல்விழுந்து புஜிக்கும்படியாக சேகரித்துத் தருவேன்‘ என்கிறாள். இத்தால் புருஷகாரக்ருத்யம் பண்ணி பகவத்விஷயத்திலே சேர்ப்பிக்கும் ஆசார்யனுக்கு “பொனனுலகாளீரோ“ என்னுமாபோலே உபயவிபூதியுமளித்தாலும் தகும் என்றதாயிற்று. ஆசார்யன் ஒருகால் உபகரித்துவிடுமித்தனை; சிஷ்யன் வாழ்நாளுள்ள வளவும் அநுவர்த்திக்கக் கடவன் என்கிற சாஸ்த்ரார்த்தமும் இதில் விளங்கக் காண்க. “பழனமீன் கவர்ந்து உண்ணத்தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது – நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம். தந்தால் இங்கேவந்து இனிதிருந்து உன்பெடையும் நீயும் இருநிலத்திலினிதின்பமெய்த லாம் = நான் பண்ணின கிஞ்சித்காரத்தை ஸ்வீகரித்து நானிருந்தவிடத்தே வந்து புஜிக்க வேணும்; ஏகாகியாய் வந்திருக்கவொண்ணாது. அபிமத விஷயத்தோடேகூட வந்திருக்க வேணும். நான் தனியிருந்து படுகிற வருத்தந்தீர உன்னையாவது கூடியிருக்குமிருப்பிலே காணப்பெறவேணும். இங்ஙனே நானும் வாழ்ந்து நீயும் இனிது வாழ்ந்து நோக்கவேணுமென்றளாயிற்று.


    3772.   
    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*
    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)

        விளக்கம்  


    • வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார். மாலை நண்ணி யென்றதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர்; மாலென்று திருமாலைச் சொன்னபடியாய் அப்பெருமானை கிட்டியாச்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கள் என்றும் ; மால் என்று அன்புக்குப்பேராய், அன்பையுற்று–பக்தியுக்தராகி என்றும், வினைகெட என்றதற்கும் இருவகைப் பொருள்; பகவத்ப்ராப்தி விரோதி வர்க்கமெல்லாம் கெடும்படி யென்றும், கீழ் மல்லிகைகமழ் தென்றலில் நான்பட்ட கிலேசம் உங்களுக்கும் நேராதபடி யென்றும், காலை மாலை கமலமலரிட்டுத் தொழுதெழுமின்=காலை யொருமுறையும் மாலையொரு முறையும் தொழுதெழுமின் என்கிறதன்று; பகலுமிரவும் என்றபடி. ஆச்ரபணத்திற்குக் கால நியதியில்லை யென்கை. கமல மலரிட்டு என்று ஒரு புஷ்பவிசேஷத்தை நிர்ப்பந்திக்கிறபடியன்று; அவனுக்கு ஆகாத புஷ்பமில்லை. "கள்ளார் துழாயும் கணவலரும் கூபினையும் முள்ளார் முவரியும் ஆம்பலுமுன் கண்டக்கால் புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதாருள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே" என்ற திருமங்கையார் பாசுரம் இங்கே அநுஸந்திக்கவுரியது. "எண்டிசையுமுள்ள பூக்கொண்டு" என்றாரே இவ்வாழ்வார்தாமே. ஆக, கமலமலரென்றவிது அல்லாத புஷ்பங்களுக்கும் பலசூண மென்றதாயிற்று. வேலை மோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்= திருக்கண்ணபுரத்துத் திருமதிளிலே கடலலை மோதுவதாகச் சொல்லுகிறவிது இப்போது கண்டதில்லையாகிலும் முற்காலத்திருந்திருக்கக் கூடும்; நாளடைவில் ஸமுத்ரம் ஒதுங்கிப் போயிருக்கக் கூடும் என்பர் பெரியார் "ஸமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள் மதினாலே சூழப்பட்டிருந்துள்ள திருக்கண்ணபுரத்திலே" என்பது ஈடு. "கலங்கல் முந்நீர்க்கண்ணபுரம்" என்றார் திருமங்கையாழ்வாரும்.


    3773.   
    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*
    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   

        விளக்கம்  


    • "கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் "என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் "கமல மலரிட்டு " என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று. வாடிவதங்கிப் போன மலரன்றிக்கே அப்போதலர்ந்த மலரென்கிறது கள்ளவிழும் என்ற அடைமொழியினால். "அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ; ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத ; த்யாநம் புஷ்பம் தப ; புஷ்பம் ஜ்ஞாநம் புஷ்பம் தவைத ச, ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்னோ ; ப்ரீதிகரம் பவேத் " என்று பகவச்சரஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட அஷ்டவித புஷ்பங்களைச் சொன்னபடியாகவுமாம். (வெள்ளியேய்ந்த மதிள்சூழ்) இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர் (1) வெள்ளியென்று சுக்ரனுக்குப் பேராகையாலே சுக்ரனைச் சொன்னது நக்ஷத்ரஸாமான்யத்தைச் சொன்னபடியாய் நக்ஷத்ரமண்டலத்தளவும் ஒங்கின மதிளையுடைத்தான திருக்கண்ணபுரம் (2) வெள்ளியாலே (ரஜதத்தாலே) சமைந்த மதிள் என்றுபாம் (3) வெள்ளிபோலே சுப்ரமாயிருக்கின்ற மதிள் என்றுமாம். நக்ஷத்ரபதத்தளவுமோங்கின மதிளென்றோ, வெள்ளியாலே சமைக்கப்பட்ட மதிளென்றோ சொல்லும் பக்ஷத்தில் இது பொய்யுரையாகாதோவென்று சிலர் சங்கிக்கக் கூடும். இத்தகைய ப்ராசாரஸம்ருத்தியுண்டாக வேணுமென்று ஆசம் ஸித்தருளிச் செய்கிதாகையாலே குறையொன்றுமில்லை யென்க.


    3774.   
    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*
    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       

        விளக்கம்  


    • திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார் தொண்டர்=இது அண்மைவிளி; தொண்டர்களே! என்றபடி. இளைய பெருமாளைப்போலே ஸகலவித கைங்கரியங்களையுஞ் செய்யப் பாரித்திருக்குமலர்களே யென்கை. நுந்தம் துயர்போக=துயர் ல்லார்க்கும் ஒரே வகையாயிராது; "ஸம்ஸாரிகளுக்கு விரோதி சத்ருபீடாதிகள்; முமுக்ஷீக்களுக்கு விரோதி தேஹஸம்பந்தம்; முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்யஹானி " என்று முமுக்ஷீப்படியிலருளிச் செய்த கட்டளையிலே தந்தாமுடைய விரோதிகள் தொலையும்படியாக வென்கை. நீர் ஏகமாய்=நீங்களெல்லாரும் லகீபவித்தவர்களாய்க் கொண்டு; (அல்லது) நீங்கள் பலவகைப் பலன்களைக் கணிசியாதே பகவத் கைங்கரியமொன்றையே கணிசித்தவர்களாய்க் கொண்டு என்றுமாம். விண்டுவாடாமலரிட்டு இறைஞ்சுமின்=செவ்விப் பூவைக் கொண்டு ஆச்சயியுங்கோள். நீர் என்பது முதலடியிலும் இரண்டாமடியிலுமுள்ளது; இரட்டிப்பு–உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணுமென்று ஞாபம் செய்கிறபடி. வண்டுபாடும் போழில்சூழ் = வண்டுகளைப் போலே ஸாரக்ராஹிகளான வர்த்திக்கிற தேசமென்றபடி. அண்டவாணன் அமரர்பெருமான்=உபயவிபூதிநாதனென்கிறது. அண்டவாணன் என்பதனால் லீலாவிபூதி நிர்வாஹகத்வம் சொல்லுகிறது.


    3775.   
    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*
    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.

        விளக்கம்  


    • ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார். மானைநோக்கி= மான்நை நோக்கி என்று பதம் பிரித்து மானானது நையும் படியான (தோற்கும்படியான) நோக்கையுடைய நப்பின்னைப் பிராட்டியென்று பொருளுரைப்பர். தேனைவாடா மலரிட்டு= தேனை என்று தனியே பிரித்து தடுத்து, தேன் போன்ற (பரம போல் நானான) எம்பெருமானை என்று பொருளுரைப்பர்கள். ஆசார்ய ஹருதயத்தில் "அதில் துர்ப்பல புத்திகளுக்கு மல்லாண்ணி காலை மலையிண்டு தேனை வாடா மலரிட்டு நுண்பாரம் ஸாங்கபக்தி" என்றருளிச் செய்திருக்கையாலே தேனை வாடா மலரென்று ஒருசொல்லாகக் கொள்ளுகிற யோருகையும் உண்டென்று தெரிய வருகின்றது, தேனையுடைத்தாய் வாடாத மலரையிட்டு என்று கொள்க.


    3776.   
    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 

        விளக்கம்  


    • இப்பதிகத்திற்கு இப்பாட்டே உயிராயிருக்கும்; "ஆழ்வீர்! உமக்கு மரணமாகும் வைகுந்தம் கொடுக்கடவேன்" என்று எம்பெருமானருளிச் செய்ததையே "மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்" என்கிற சொல்நயத்தாலே வெளியிட்டருளுகிறார் இவ்வுடன் முடியுந்தனையும் பொறுத்திரும் ; முடிந்தவுடன் ப்ராப்த மருமங்கள் முடிந்தளனமாக கொண்டு, ஸஞ்சிதாருமங்களை க்ஷமைக்கு விஷயமாக்கி இவ்வளவோடே ஜன்ம பரம்பரையை முடித்து விட்டு பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை என்று நீர் முலடியிலே பிரார்த்தித்தபடியே செய்து தலைக்கட்டுவேன் என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமானருளிச் செய்தது இங்கு அநுபாஷிக்கப்பட்டதாயிற்று. "மரணமாக்கி வைகுந்தங் கொடுக்கும் பிரான்" என்று ஆழ்வாரருளிச் செய்திருந்தாரென்றும், அது அச்லீலமாயிருக்கிறதென்று கருதிய ஸ்ரீமந்நாதமுனிகள் போல்லார் அப்பாடத்தைமாற்றி "மரணமானால்" என்று ப்ரவசனம் செய்தருளின ரென்றும் சிலர் சொல்லிவருவது ஆதாரமற்ற அஸம்பத்தமான ஐதிஹயம். வியாக்கியான ரீதிக்கு அது நெஞ்சாலும் நினைக்கத்தக்கதன்று "மரணமாக்கி" என்று பாடமிருந்தால் அது "அருளுடையவன் தாளணைவிக்கும் முடித்தே" என்ற பாசுரத்தோடொக்குமாதலால் அறை மாற்ற வேண்டிய அவச்யமேயில்லையா மென்று தெளிக. "அரண் அமைந்த மதிள்சூழ்" என்ற விசேஷணத்தினால் ஆழ்வார் தம்முடைய அச்சத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார்; நித்யஸுரிகள் பரியவிருக்கின்றவன் இங்கே நின்றானே ! இவனுக்கு என் வருகிறதோவென்று அஞ்சவேண்டாதிருக்கை. தரணியாளன்–தரணியென்று பூமிக்குப்பெயராய், பூமியிலுள்ள ஸம்ஸாரிகளை ஆட்கொள்ளுபவன் என்றதாம். தனதன்பர்க்கு அன்பாகும்= 'தம்மையுகப்பாரைத் தாமுகப்பர்' என்றபடி. 'அன்பர்க்கு அன்பனாகும்' என்ன வேண்டுமிடத்து அன்பாகும் என் கையாலே எம்பெருமான் அன்பையிட்டே நிரூபிக்க வேண்டும்படி யாவன் என்பது பெறப்படும்.


    3777.   
    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  
    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  

        விளக்கம்  


    • தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= "அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!" என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான். ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் *ய: சக்கி தேவ யதி சிஞ்சந ஹந்த ஜந்து பவ்யோ பஜேத பகவந்த மநந்யசேதா, தம் ஸோயமீத்ருச இயாநிதி வாப்யஜாநந் ஹை வைநதேயஸமமபி உரரீகரோஷி* என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம். செம்பொனாகத்தவுணனுடல் கீணடவன்=ப்ரஹலாதாழ்வான் அஸுரயோனியிலே பிறந்திருக்கச் செய்தேயும் அவனது அன்பையே கணிசித்து அவனை விரோதி நிரஸக புர்வகமாக அநுக்ரஹித்தவன்; அவ்வண்ணமாக எல்லோரையும் அநுக்ரஹிக்க வல்லவன் என்று காட்டினபடி. அப்படிப்பட்ட மஹாகுணம் விளங்கத் திருக்கண்ண புரத்திலே வர்த்திக்கின்ற பெருமான், தன மெய்யர்க்கு நாளும் மெய்யன்=தன் பக்கவில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியுடையார்க்குத் தானும் அவர்கள் பக்கலிலே பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியையுடையனாயிருப்பன். ஆகவே அப்பெருமான் பக்கலில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோ ளென்றாராயிற்று.


    3778.   
    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*
    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.

        விளக்கம்  


    • விரும்பித் தொழுவார்க்கு மெய்யனாகும்= ப்ரயோஜநாந்தரங்களான க்ஷுத்ர பலன்களைக் கணிசியாதே தன்னையே பரமப்ரயோஜநமாகப் பற்றினார் ஆரேனாமாகிலுமாம்; அவர்களெல்லார்க்கும் [மெய்யனாகும்] தன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளை உள்ளது உள்ளபடியே காட்டிக் கொடுப்பன் என்றபடி. புறமே தொழுவார்க்கெல்லாம் பொய்யனாகும்=புறம்பே சில க்ஷுத்ர ப்ரயோஜனங்களைக் கணிசித்து அதற்காக ஆச்ரயிப்பார்க்கு அந்த அற்பபலன்களைக் கொடுத்துத் தன்னை மறையாநிற்பனென்கை. இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான், ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன். *இமேளஸ்ம முநிசார்தூல சிகரௌ ஸமுபஸ்திதொள, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் க்ரவாவ கிம்* என்று விச்வாமித்ரமுனிவனை நோக்கிச் சொன்னதை அநுஷ்டாந பர்யந்தமாக்குவனென்கை.


    3779.   
    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*
    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே

        விளக்கம்  


    • தனதாளடைந்தார்க்கு எல்லாம் அணியனாம்=எம்பெருமான் திருவடிகளையடைவது இரண்டுவிதம்; வேறொரு பலனை யுத்தேசித்து அதற்கு ஸாதனமாக இவன் திருவடிகளை யாச்ரயிருத்தல் ஒருவிதம் ; அப்படியன்றிக்கே, பலனும் இதுவே, அதற்கு உபாயமும் இதுவே என்று கொண்டு ஆச்ரயித்தல் மற்றொரு விதம். இவ்விதமான ஆச்ரயிப்பவர்களே இங்குத் தனதாளடைந்தார் என்பதனால் விவக்ஷிக்கப்படுகிறார்ள். "தன் திருவடிகளையே ப்ராப்யம் என்று பற்றினாரெல்லாருடையவும்" என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். அன்னவர்கட்கு [அணியனாகும்] ஸுலபனாவன் என்றபடி. ஸுலபனாகிச் செய்வது என்னவெனில்; பிணியும் சாரா பிறவிகெடுத்தாளும்= துக்கங்களையும் துக்கஹேதுவான ஸம்ஸாரத்தையும் போக்கி அடிமைகொள்வான். ஆகவே, மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று.


    3780.   
    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*
    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  

        விளக்கம்  


    • பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார். அவனது திருவடிகளை யாச்ரயிக்கவே அநாதி காலமாகத் திரட்டின பாவங்களெல்லாம் தொலையும் ; இனிமேல் பாவம் வந்து புகாது. இது என்னுடைய அநுபவத்தாலே; நான் குறை தீர்ந்தேனாகையாலே நீங்களும் குறை தீரப்பெ வேணுமென்று சொல்லுகிறேன். வேதமறிந்த வைதிகர்கள் திரும்பி வர்த்திக்கிற திருக்கண்ணபுரத்திலே, ஸந்நிதி பண்ணியிருக்கிற ஜகத்காரண பூதனையடைந்தார்க்கு அல்லல் இருக்குமோ? தாய்மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசமில்லை யென்னுமிடம் சொல்லவேணமோ?


    3781.   
    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*
    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   

        விளக்கம்  


    • பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார். "எனக்கேலினி யென் குறை" என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்திருக்கச் செய்தேயும் உகப்பின் மிகுதியாலே மீண்டுனருளிச் செய்கிறார். எம்பெருமானை யநுபவிப்பதற்கு இடையூறானவை யெல்லாம் தொலைந்தபின்பு இனியொரு தேசவிசேஷம் தேடிப்போக வேண்டியருந்ததோவென்கை. பெரியபிராட்டியார் நித்யவாஸம் பண்ணுகிற திருமார்பை யுடையவனாகையாலே ஆச்ரயகைக்கு ருசியே வேண்டுவது, காலம் பார்க்க வேண்டா. அப்படிப்பட்டவன் வர்த்திக்கிற திருக்கண்ணபுரமென்று வாயாலே சொல்லவே துக்கங்களென்று பேர்பெற்றவையெல்லாம் தாதவழி யகலும்.


    3782.   
    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்
    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)

        விளக்கம்  


    • பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் "இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே" என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும். இப்பத்தும் பாடியாடுவார்க்கு அவன் தாள்களையே பணிதலாகிற பேறு ஸித்திக்குமென்பதே பரமதாற்பரியம். வினைகள் உங்களருகிலும் வந்து கிட்டாதபடி அவற்றை வேர்ப்பற்றோடே போக்க வேண்டியருந்திகோளாகில், குருகூர்ச் சடகோபன் இசையோடே கூடப்பாடின தமிழாயிரத்துள் சௌரிப் பெருமான் விஷயமான இப்பதிகத்தை ப்ரீதியோடே பாடி இருந்த விடத்திவியதேயாடி அவன் திருவடிகளிலே விழுங்கோன் என்றுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.