திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தைம் மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பின் அற்புதம்:- பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை.இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.