- முகப்பு
- திவ்ய தேசம்
- திருவிண்ணகர்,
திருவிண்ணகர்,
ஒரு முறை வைகுண்டத்தில் பூமாதேவி பெருமளிடம் தனக்கு அவரின் ஹிருதய கமலத்தில் அமரும் பாக்கியம் கிட்டாதது பற்றி குறைபட்டுக்கொண்டார். தாயாருக்கு சமமான பெருங்குனங்கள் இருப்பினும் தான் தாயாருக்கு நிகரான மதிப்பு கிடைக்கபெறாதது பற்றி மனம் வருந்தினார். கனிவுள்ளங்கொண்ட பெருமான், மார்கண்டேய மகரிஷியின் மகளாக பூமாதேவி அவதரிக்கும் சமயம் அப்பாக்கியம் கிடைக்க பெரும் என்றும் வரமளித்தார். அவ்வாரே பூமாதேவி மார்கண்டேய மகரிஷியினால் துளசி செடியினருகில் கண்டெடுக்கபட்டு துளசி செடியின் பவித்திர குணங்களுடன் வளர்த்து வரும் சமயம், மணவயதில் அவரை ஒரு வயோதிகர் பெண் கேட்டு வர மகரிஷியோ தன் மகளுக்கு தளிகை செய்ய தெரியாது பற்றியும், பண்டங்களில் உப்பின் அளவு கூட சரிவர சேர்த்து பக்குவபடுத்த தெரியாதது பற்றி விளக்கம் அளித்து மறுதலித்தார் ஆனால் வயோதிகரோ, விடாபிடியாக இருந்ததோடு மட்டும் இல்லாமல், தான் இனி உப்பே சேர்த்து கொள்ளாமல் உண்ணுவதாகவும் வாக்கு கொடுக்க, வந்தவர் யார் என்பதை மகரிஷி கண்டுகொள்கிறார், கண்டுகொண்ட கணம் தன் பாச மகளை மணம் முடிக்கவும் சம்மதிக்கிறார். அவ்வாறாக பூமாதேவியும் துளசிசெடியாக பெறுமாளின் திருமார்பை அலங்கரிப்பதாக வரவாறு. இந்த வரலாற்றை நினைவு கொள்ளும் விதமாக இத்திருதலத்தில் பெருமாளிற்க்கு உப்பில்லாமல் நிவேதனம் செய்வதாக ஐதீகம் ! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் – ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார். உப்பிலியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அமைவிடம்
6,
7வது குறுக்கு தெரு,
அண்ணா நகர்,
பம்மல்,
சென்னை-75. போன்- 044 22632633 35 ஆண்டுகள் ... ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்) சோழ நாடு,
...,
தாயார் : ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: உப்பிளியப்பன்,பூமிதேவி
திவ்யதேச பாசுரங்கள்
-
1448.
இவ்வுலகமெல்லாம் பிறர் வசப்பட்டிருக்கையில் தன் திருவடிகளைப் பரப்பி இலச்சினைபட நடந்து அவற்றை ஆட்படுத்திக்கொண்டது போலவே அடியேனையும் ஆட்படுத்திக்கொள்ளவேணும்; உனது ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் அடியேன் ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி அருள்புரியவேணும்; இவ்வளவே அடியேன்; இப்பாழும் ஸம்ஸாரத்தில் அடியேனுக்கு இனி வாழ்வுவேண்டா; திருவிண்ணகரிலே வந்து நித்ய ஸந்நிதி பண்ணியிருப்பது ஸபலமாகும்படி இத்தனை யருள் செய்யவேணும் என்றாராயிற்று.
கடலில் புறவமுது, உள்ளமுது என இரண்டு அமுதுண்டாயின; புறவமுதாகிய உப்புச்சாறு தேவர்கட்கு அளிக்கப்பட்டது; “சீதக்கடல் உள்ளமுது” எனப்பட்ட பிராட்டியாகிய உள்ளமுது தன்னால் ஸ்வீகரிக்கப்பட்டது என ரஸோக்தியாக அருளிச்செய்வது இரண்டாமடி. அண்ணல் செய்து தன்னடைய ஸ்வாமித்வத்தைப் பிரகாசிப்பித்துக்கொண்டு என்றாவது, தன்னுடைய ஔதார்யத்தைக் காட்டிக்கொண்டு என்றாவது, பொருள் பெற்றுக்கொள்ளலாம். சிவனுக்கு நெற்றியில் மூன்றாவது கண் உள்ளதனால் ‘நுதற்கண்‘ எனப்படுவான்.
கலைகருகுழவி ‘கலா’ என்னும் வடசொல் ‘பதினாறில் ஒரு பங்கு’ என்று பொருள்படும் முகத்தால் மிகச் சிறுமையை உணர்த்திற்றாகும்; இளங்குழந்தை என்றபடி. இனி, உலகத்திலுள்ள குழந்தைகள் போலன்றியே அறிவுமிக்க குழந்தை என்னவுமாம்; அப்போது சாஸ்த்ரமென்னும் பொருளதான ‘கலா’ சப்தம் இலக்கணையால் அறிவுக்கு வாசகமாகும்
எம்பெருமானுடைய அகடிதகடநா ஸாமர்த்தியத்தையே மீண்டு மருளிச்செய்கிறார். பாரெழு கடலெழு மலையெழுமாய் = “நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின் தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே, ஏழ்பெருந்தீவிற்கு மேழ்பொழிலெனப்படும்” என்ற திவாகர நிகண்டின்படி எழுவகைப்பட்ட தீவுகளையுடைத்தான பூமி என்று பொருள்படப் ‘பாரெழும்’ எனப்பட்டது. கடலெழும் = “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல், மாகடலேழென வகுத்தனர் புலவர்” என்னப்பட்ட ஸப்தஸாகரங்களும். மலையெழும் = “இமயமந்தரம் கைலை வடவிந்தம், நிடதமேமகூடம் நீலகிரி யெனக், குலவரை யேழுங் கூறுமென்ப” என்னப்பட்ட ஸப்தகுலபர்வதங்களும். ஆய் என்றது இவற்றுக்கெல்லாம் எம்பெருமானே நிர்வாகனென்கை. இவற்றின் ஸ்திதியெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீகமென்றபடி.
மேகங்கள் நீர்கொண்டெழுவதற்காகப் படியும் கடல்களையும் மலைகளையும் ஸ்வஸங்கல்பத்தால் நிலைநிறிகச் செய்தருள்பவனே!, ஸகலசராசரங்களையும் சரீரமாகக் கொண்டுள்ளவனே!, பிரமன் சிவனிந்திரனென்று பெருமதிப்பாகச் சொல்லப்படுகின்ற தேவர்களாலும் ‘இப்பாப்பட்டது இவ்வளவுடையது’ என்று அளவிட்டறிய முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையவனே! நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுமவனே! நீ இப்படிப்பட்டவனா யிருக்கிறயென்பதை நான் ஏட்டிலே கேட்டுப்போவதல்லாமல் உன்னுடைய அஸாதாரணாகாரத்தை நான ஸாக்ஷாத்கரிக்கும்படி என் பக்கலிலே அருள்செய்வாயாகில் நானும் மெய்யே இந்த ஸம்ஸார வாழ்க்கையை அருவருத்தேனாவேன் என்றாராயிற்று.
வேதமோதியுணர்ந்த அந்தணர்கள் ஸந்த்யாகாலந்தோறும் உருக்கின நெய்யைக் கொண்டு அக்நியில் ஹோமம் செய்வதற்கு மந்திரமாகிய யாதொரு வேதமுண்டு, அதன் உறுப்பாகிய பிரணவத்தினால் ப்ரதிபாத்யனா யுள்ளவனெ!. இருக்கு = வடசொல்லிகாரம்; இச்சொல் வேதங்களுக்குப் பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்குச் சிறப்புப் பெயருமாக வழங்கும் சந்தி – ஸந்த்யா. இன்னிசையானவனே = ‘இசை’ என்னுஞ் சொல் லக்ஷிதலக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும்; எங்ஙனேயெனில், இசையாவது ஸ்வரம்; ஸ்வரமென்பது பிரணவத்திற்கும் வாசகம்; “யத்வேதாதௌஸ்வர: ப்ரோக்த:” என்றது காண்.
நான் செய்த தீவினைகளை நினைக்கப் புகுந்தால் எனக்கு உடல் நடுங்குகின்றது; அநர்த்தங்களிலே கொண்டு மூட்டும்படியான விஷயாந்தர போகங்களுக்குக் காரணமான தீவினைகள் பல்லாயிரம் நான் செய்துளே னாதலால் அத்தீவினைகளின் பலனாக இன்னமும் நாம் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்க நேருமோவென்று மிகவும் அஞ்சா நின்றேன்; திருவிண்ணகர் மேயவனே! உனது திருவடிகள் அஞ்சினார்க்குப் புகலிடமாதலாலும், நீ தானும் ஆச்ரிதாக்ஷணம் பண்ணக்கடவேனென்று வளையம் குடியிருக்கிறாயாதலாலும் என் அச்சந்தீர உன் திருவடிகளை வந்து பணிந்தேன்; உன்னையொழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம்படி என்மீது அருள்புரிவாயாகில் நன்று என்றாராயிற்று.
“சாமாறுங் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து, ஏமாறிக் கிடந்தலற்றுமிவை யென்னவுலகியற்கை” என்று ஞானிகள் வெறுக்கும்படியான இந்த ஸம்ஸார ஸ்வபாவத்தை என் சொல்வோம்!; மரண ஸமயத்திலே படும் கஷ்டங்களையும் பின்பு நரகங்களிற் படுங்கஷ்டங்களையும் மறுபடியும் கருக்குழியிலே வந்து புகுந்து படும் கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வெறுத்து ‘இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்’ என்று இந்நிலத்திற் பிறவியைக் காறி யுமிழ்ந்து, நித்ய விபூதிப்ராபகமான உன் திருவடிகளைப் பணிந்தேன்; அருள்புரியவேணும் திருவிண்ணகர் மேயவனே! என்கிறார். ஓதல்செய் நான்மறையாகி ஏட்டில் எழுதப்படுகையின்றியே பரம்பரயா அதயயநம் பண்ணியே வருகின்ற நான்கு வேதங்களுக்கும் ப்ரவசந கர்த்தாவா யிருப்பவரென்கை.
புன் சொல் நெஞ்சில் பொறுத்தேன் = இதற்கு இரண்டு படியாகப் பொருளுரைக்கலாம்; ஆபாஸ பந்துக்கள் பேரும்படியான இழிவான சொற்களையெல்லாம் தாங்கிக்கொண்டிருந்தேன் என்னுதல்; ஸமஸ்த கல்யாண குணநிதியாய்ச் செந்தாமரைக் கண்ணணாயிருக்கிற ஸர்வேச்வரனை ஸ்துதிக்க வேண்டடிய பாசுரங்களைக் கொண்டு நீசர்கள் ‘பனியிருங் குழலாளன்’ ‘சுந்தரத் தோள் படைத்தான்’ என்றிப்படி புகழ்ந்து கவிபாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக்கொண்டிருந்தேன் என்னுதல். முதற்சொன்ன பொருளின் கருத்து யாதெனில் – விபீஷணாழ்வான் ராவணனுக்கு ஹிதமான வார்த்தைகள் சொல்லச்செய்தேயும் அவன் அவற்றை மதியாமல் ‘த்வாம் துதிக் குலபாம்ஸநம்’ (இக்குலத்திற்கு இழுக்கான நீ ஒழிந்து போ) என்று திரஸ்கரித்து வார்த்தை சொல்ல, அதனால் நெஞ்சு புண்பட்ட விபீஷணன் ‘இனி நாம் இந்த பிராகிருதரோடு தான்; அப்படியே நானம் ஆபாஸபந்துக்களின் நீசபாஷணங்கள் செவியில் விழும்போதே அவர்களை வெறுத்தொழிந்து சடக்கென வந்து உன் திருவடிகளிலே விழ வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அது செய்யாதே நெடுநாள் வரையில் அந்த பிராகிருதர்களின் புன் சொற்களையெல்லாம் ஜுகுப்ஸையின்றி நெஞ்சிலே தாங்கிக் கொண்டிருந்தேனே! என்று பூர்வவ்ருத்தத்திற்கு அநுதாபப்படுகிறபடி.
முழுக்ஷீவுக்கு அர்த்த பஞ்சகஜ்ஞாநம் முக்கியமானது; எம்பெருமானை உணர்தல் தன்னையுணர்தல், உபாயத்தையணர்தல், பேற்றையுணர்தல், பேற்றின் விரோதியையுணர்தல், ஆகிய இவை அர்த்த பஞ்சகஜ்ஞாநமெனப்படும். இதில் முதலதான பரஸ்வரூபஜ்ஞாநம் தமக்கு இல்லாமையை அருளிச்செய்கிறார் மறந்தேனுன்னை முன்னம் என்று. முதல் முதலாக உன்னையன்றோ நான் மறந்தொழிந்தே னென்கிறார். முன்னம் என்பதற்கு அநாதிகாலமாக என்றும் பொருள் கொள்ளலாம். கீழ்ப்பாட்டிற்சொன்னபடி பொருளின்பங்களைஆதரித்ததுபோல ஒரு மூலையில் உன்னையும் நான் ஆதரித்திருக்கலாமே, அந்தோ! அது செய்யப் பெற்றிலேன்!, உன்னை மறந்தே போனேன். ஒரு காலும் நெஞ்சிலும் நினைக்கக் கூடாதவற்றை (அர்த்தகாமங்களை) இடைவிடாது சிந்தித்தேன்; ஒரு நொடிப் பொழுதும் மறக்க வொண்ணாத உன்னை இறைப்பொழுதும் நினையாதொழிந்தேனந்தோ!. “த்யேயோ நாராயணன்ஸ் ஸதா” என்று சாஸ்த்ரங்கள் முறையிடாநிற்க, பாவியேன் விபரீதனானேனென்கிறார்.
இந்த உடல் எப்படிப்பட்டது? ஸ்த்ரீகளின் கர்ப்பப்பையிலே கிடந்து படாதபாடுகளும் பட்டு “தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு முடல்” என்கிறபடியே மாம்ஸாதிகள் மலிந்து கிடப்பது; இப்படிப்பட்ட உடற்பிறவி நமக்குத் தகாதென்று நன்குணர்ந்தேன்; அது தொலைவதற்காக உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; திருவிண்ணகர் மேயவனே!. இரண்டாமடியில், “ஊனேயாக்கை”, “ஊனேராக்கை” என்பன பாடபேதங்கள். வானே! என்பதனால் நித்யவிபூதிநாதத்வமும், மாநிலமே! என்பதனால் லீலாவிபூதிநாதத்வமும் ஆக உபயவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டது.
அறிவுடையார், மக்களென்றும் மனைவியரென்றும் சில பந்துக்களை ஆதரித்துப் போருவது ஏதுக்காகவென்னில், உடல் இளைத்தவாறே அருகில் இருந்துகொண்டு கர்ணாமிர்தமாக எம்பெருமான் திருநாமங்களைச் செவியிலே ஓதுவார்களென்பதற்காக; அந்தப் பந்துக்கள்தாம் செய்வதென்னென்னில், ஸமயங்களிலே ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டும் மரணஸமயத்திலும் விடாதே 1.“சோர்வினாற் பொருள்வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லென்றுசுற்றுமிருந்து” என்கிறபடியே ‘எந்த சந்து பொந்துகளில் என்ன பொருள் புதைத்து வைத்திருக்கிறாய், சொல்லு’ என்று பிச்சிக் கொண்டிருப்பார்களேயன்றி, பகவந் நாமமாகிற அமுதத்தை லவலேசமும் செவியிலே ஊட்டமாட்டார்கள்; ஆகவே இந்த ஆபாஸ பந்துக்களெல்லாம் “துணையும் சார்வுமாகுவார்போல்........ அட்டைகள் போல் சுவைப்பரே” யன்றி நல்வழிக்குச் சிறிது முதவார்கள் என்பதை நன்கறிந்து கொண்டு அவர்களிடத்து நசையை விட்டுத்தொலைத்தேன் என்கிறார் முதலடியால். ஆபாஸ பந்துக்களை விட்டு, ஆப்த பந்துவான நீ திருவாய்மலர்ந்தருளிய சரமச்லோகத்தைப் பற்றினேனென்கிறார் மேல்.
ப்ராக்ருதமான செல்வம் நிலைநிற்கமாட்டாதாகையாலும், கைங்கர்யமாகிற அப்ராக்ருத செல்வமே நிலைநிற்பதாகையாலும் இம்மைச் செல்வத்தை வெறுத்து மறுமைச்செல்வத்தை விரும்பி உன்னடி பணிந்தேனென்கிறார். “கண்டார்வணங்கக் களியானைமீதே கடல் சூழுலகுக்கொரு காவலராய் விண்டோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரிநீருலகாண்ட” என்றாப்போல நிலமுழுது மாளுமரசர்களைச் சுற்றி வண்டார் பூங்குழல்மாதர் பலரிருந்து ‘இச்செல்வம் மாறாதே நிலை நிற்கவேணும்’ என்று பல்லாண்டுபாடுவார்களாம், அதனைச் சொல்லுகிறது முதலடி.
விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந்! ஹஸ்த பாதாதிஸம்யுதா” என்று செவி வாய் கண் மூக்கு முதலிய கரணங்கள் உன்னுடைய திருப்புகழ்களைக் கேட்பது மொழிவது முதலிய கார்யங்களுக்காக ஏற்பட்டவை; அப்படிப்பட்ட அவை அவ்வழியில் நில்லாதே அல்வழியிற் செல்லுகின்றனவே பாவியேனுக்கு; அவை இழுத்துக்கொண்டு போகிறவழியே நான் செல்வதென்றால் இது என்னாலாகுமோ? “பூணாரமார்பனைப் புள்ளுறும் பொன்மலையைக் காணாதார் கண்ணென்றுங் கண்ணல்லகண்டாமே” என்றும், “தொண்டர்க்கினியானைக் கேளாச்செவிகள் செவியல்ல கேட்டாமே” என்றும் உறுதிகொண்டிருக்கிற நான் விஷயாந்த்ரங்களில் மண்டித்திரிகிற நெஞ்சை அநுசரித்து நடக்கவுரியவனோ? என்கிறார் முதலடியால். மற்போராவது ஆயுதங்களின் உதவியின்றியே தேஹ வலிமையையேகொண்டு நடத்தும் யுத்தம்.
வேறா யானிரந்தேன் = உலகத்தில் வேண்டுகோள் இரண்டுவகைப்படும்; வேண்டினவுடனே பெறவேண்டிய நிர்ப்பந்தமின்றிக் காலக்ரமத்தில் பெறாலம்படியான பொருள்களைப் பற்றின வேண்டுகோள் ஒன்று; வேண்டினவுடனே கிடைத்தாலன்றி உயிர்தரிக்கமுடியாமல் அப்போதே பெறவவேண்டின பொருளைப்பற்றின வேண்டுகோள் மற்றொன்று. இவ் விரண்டுவகையான வேண்டுகோளில் இரண்டாவது வகையான வேண்டுகோளை இப்போது அடியேன் செய்கின்றேனென்றவாறு. ‘வேறா’ என்பதன் கருத்து இது. பஞ்சேந்திரியங்களாகிற படுகொலைக்காரர் கையில் இனி நான் ஒரு நொடிப்பொழுதும் நலிவுபடமுடியாதாதலால் இந்த க்ஷணத்திலே அடியேனை உனதருளால் வாங்கிவிடவேணுமென்று பிரார்த்திக்கின்றேனென்கை.
இப்பாசுரத்தில் இரண்டாமடியில் நெடுநாளாகவே ஒரு பாடப்பிழை நேர்ந்துள்ளது; “மேவா வெந்நரகத்து இடருற்று என்றே பலரும் ஓதுவர்; இப்பாடம் பொருளற்றது; “இடவுற்று என்பது “இடருற்று“ எனப் பிழைபட்டது. (அடியேனை) மேவா வெம் நரகத்துஇட (நரகத்திலே தள்ள) உற்று விரைந்து வந்தார் என்கை. கீழ்ப்பாட்டில் “ஆறாவெந்நரகத்தடியேனை இடக்கருதி“ என்றாப்போலே. கீழ்ப்பாட்டில் ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) எழுவாய்; இப்பாட்டில் வல்வினையார் (பாபராசிகள்) எழுவாய். வல் என்ற அடைமொழி – அப்பாவங்கள் அவசியம் அநுபவித்தேதீரவேண்டுமவை என்பதைக் காட்டும். தீவாய் என்னும் அடைமொழி அவற்றின் கொடுமையைக் காட்டும். பலவகைத் துன்பங்கள் யுண்டுபண்ணுகின்றன வென்றபடி. சிறந்தவர் என்றது – உடன்பிறந்தோர் மக்கள் மனைவியர் முதலான உறவினரைச் சொன்னபடி. அவர்கள் ஒருகாலும் விட்டு நீங்காதவாறுபோல் இக்கொடிய பாவங்களும் எப்போதும் விட்டுப்பிரியாமலிருந்து கொண்டு என்னை நரகத்திலே தள்ளப்பார்க்கின்றனவென்றாராயிற்று
பிராட்டிமாரும் நித்யஸூரிகளும் புருஷகாரமாகச் சரணம்புகுகிறாரிதில். போதார் தாமரையாள் தன்கோதா!, புலவிதன்கோதா!, குலவானவர்தம் கோதா! என்று யோஜிக்கலாம். ‘கௌதுகம்’ என்னும் வடசொல் விகாரமடியாப் பிறந்த விளியாம் கோதா! என்பது. ‘ப்ரியனே’ என்றபடி. செவ்வித் தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு அன்பனே! பூமிப்பிராட்டிக்கு அன்பனே! நித்யஸூரிகட்கு அன்பனே! என்கை. பூமிப்பெயரான புலம் என்னும் சொல்லடியாயப் பிறந்த பெண்காற்பெயர் புலவி என்பது. அன்றியே, ‘புலவி’ என்று பிரிவுக்கும் பெயருண்டு; போதார் தாமரையாளுடைய புலவியில் – (பிராட்டியைப் பிரணயவசத்தால் பிரிந்திருக்குங் காலத்தில்) அப்பிரிவினாலுண்டான் ஊடலைத் தீர்த்துத்தேறுதல் செய்விக்கும் நித்யஸூரிகளுக்கு அன்பனே! என்னவுமாம்.
இத்திருமொழிகற்றார்க்குப் பயனரைத்துத் தலைக்கட்டினாராயி்ற்று. இங்குநின்றும் பரமபதத்துக்கு எழுந்தருளுமவர்களை அங்குள்ள நித்யஸூரிகள் “ஆண்மின்கள் வாகனம் ஆழியான தமரென்று“ என்கிறபடியே ‘நீங்கள் பரமபதத்தை ஆளுங்கோள்‘ என்பாராதலால் ‘கோனாய்‘ எனப்பட்டது. இத்திருமொழிகற்றா ரிட்டவழக்காயிருக்குமாம் திருநாடு.
சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி, தேவரீருடைய அநுபவமாகிற பேரின்பத்தை ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்கமுடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன்; வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன்; இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னைமுன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம் மறவாதேயிருக்கப் பாரித்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர்நீக்கி நித்யானந்த மநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று. கீழ்த்திருமொழியில் “மறந்தேனுன்னை முன்னம் – அதனாலிடும்பைக்குழியிற் பிறந்தே யெய்த்தொழிந்தேன்” என்று மறதிக்குப் பலனாகப் பிறவித்துன்பம் பெற்றமை சொன்னார்; இதில் மறவாமைக்குப் பிறவாமைபெற்றமை சொன்னாரென்க.
ப்ராக்ருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவும் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலைநிற்க மாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச்செய்து, ‘தேவரீர்திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன்’ என்கிறார். “பரித்யக்தா மயா லங்கா” (விட்டொழிந்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போலே அருளிச்செய்கிறார் காண்மின். அறம் தானாய்த்திரிவாய் “கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந்துண்போ மறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப் பிறவி பெறுத்தனை புண்ணியம் யாமுடையோம்” என்றாப்போலே ஸாக்ஷாத் தர்மமே வடிவெடுத்தது போன்றுள்ள தேவரீர் பலன்கொடுக்கைக்கு அவஸரம்பார்த்துத் திரியாநிற்க அடியேனிடத்தில் வேறுசில தர்மங்கள் வேணுமோ? என்றவாறு.
கீழ்நாட்களெல்லாம் அநியாயமாய்க் கெட்டுப்போனேன்; பாழாய்ப்போனேன்; சிற்றின்பநுகர்ச்சியிலேயே ஆழ்ந்து நரகத்திலே அழுந்தி நசிக்கப்பார்த்தேன்; தைவாதீனமாய் மீண்டேன், உன் திருவடிகளைச் சேர்ந்து உய்யும்வழி கண்டேன் பிரானே! என்கிறார். விஷயபோகங்களைக் காறியுமிழ்ந்து பகவத்விஷயத்திலே வந்துசேர்ந்த ஆழ்வார் ஹேயமான அவ்விஷயங்களைப் பற்றிச் சாந்தேந்து மென்முலையார் என்றும் தடந்தோள்புணரின்ப வெள்ளமென்றும் விரக்தர்க்கும் காமம் பிறக்கும்படியாக ஏதுக்கு வருணித்துப் பேசுகிறார்? என்று சிலர் பட்டரைக் கேட்டார்களாம்; அதற்கு அவர் அருளிச்செய்ததாவது – உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பல வகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவார்கள்; சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத்தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடப் பேசுவார்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப் பேசுவார்கள்; இப்படிப் பேச்சில் பல வகைகளுண்டு.
ஒருவராலும் அழிக்கவொண்ணாத அரணையுடைத்தான இலங்கையை நீறுபடுத்தி இராவணனையும் வேரோடே களைந்தொழித்தாப்போலே அடியேனுடைய பிரதிபந்தகங்களையெல்லாம் தொலைத்தருளின பெருமானே! நான் ஆச்ரயிக்கத்தகுந்த தெய்வம் வேறொன்று இருப்பதாக நெஞ்சிலும் நினையேன்; ஸர்வஸ்மாத்பரனானவுன்னையே நெஞ்சில் தாங்கி அலப்யலாபம் பெற்றேன்; என்ன பேறுபெற்றேனென்னில், தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதற்கு ஒருகால் காரணமாகக்கூடிய ஜன்மமும் தொலையப்பெற்றேன்; திருவிண்ணகரிற் கண்ட காட்சியிலே பெற்ற பேறுகாண் இது.
கீழ்ப்பாட்டில் “மற்றோர் தெய்வமெண்ணேன்” என்றதை ஹேதுவோடே உபபாதிக்கிறரிதில். திருவிண்ணகர்ப்பெருமானே!, ஸப்தஸாகரங்கள், அவற்றால் சூழப்பட்ட பூமி, அதற்கு ஆணியடித்தாற்போலே யிருக்கிற குலாசலங்கள், சந்திரன் ஸூர்யன் முதலிய சுடர்ப்பொருள்கள் ஆகிய இவையெல்லாம் நீயே; உன் உருவமே இவையெல்லாம் என்று நான் நன்குணரப்பெற்றேனாதலால் ஸர்வசரீரியான உன்னைவிட்டு உனது சரீரமான தேவதாந்திரங்களைத் தெய்வமாக நெஞ்சில் தான் நினைப்பேனோ? இதுவரையில் நான் அழிந்துபோனதுபோலல்லாமல் இனி உஜ்ஜீவிக்க ப்ராப்தனாயினேனாதலால் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்றாராயிற்று.
அடியேன் வேறே கூறுவதுண்டு = தோற்றினபடி கும்பலில் சொல்லுகிற வார்த்தை போலல்லாமல் இவ்வார்த்தையை ரஹஸ்யமாய் மிக முக்கியமாக விண்ணப்பஞ்செய்கிறேனென்றபடி. விரித்துரைக்குமாறே பணியாது = தேவரீர்க்கும் அடியேனுக்கும் நடக்கிற ஸம்வாதம் கீதா சாஸ்த்ரம் போலே விரிந்திருக்கவொண்ணாது; அதாவது – கீதையிலே முடிவாக அருளிச்செய்த சரமச்லோகத்தை முதலிலேயே அருளிச்செய்திருந்தால் அவ்வளவு நூல்விரிவு விளைந்திராது; தேவரீர் ஒன்று சொல்ல, அதற்கு அர்ஜுநன் கலங்கிப் பல கேள்விகள் கேட்க, அவற்றுக்கு தேவரீர் உத்தரமருளிச் செய்ய, அதற்குமேலும் பலபல சங்கைகள் தோன்றி அர்ஜுநன் கேள்விகள் கேட்க, இப்படியே கீதா சாஸ்த்ரம் விரிந்ததாயிற்று; அப்படியல்லாமல் இப்போது தேவரீர் ஸாரமாகத் திருவுள்ளம் பற்றவேணும்; அதற்குமேல் அடியேன் ஒன்றும் வாய்திறக்கும்படி யிருக்கவொண்ணாது; “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ” (சஞ்சலமற்று நிலைபெற்றேன், ஸந்தேகங்கள் தீர்ந்தேன், தேவரீர் சொன்னபடியே செய்கிறேன்) என்று கையெழுத்திடும்படி அருளிச்செய்யவேணுமென்கை. ‘ஆழ்வீர்! உம்மைத் திருவடி சேர்த்துக்கொண்டேன்’ என்றருளிச் செய்யவேணுமென்பதை தேர்ந்த பொருள்.
தீக்ஷணமான மருகாந்தாரத்திலே வலிதான ஒரு யானையாலே தள்ளப்பட்டு உருமாய்ந்துபோகிற பெரிய மரங்கள் போலே இவ்வுலகில் எத்தனையோ பலசாலிகள் கருமங்களாலே முடிக்கப்பட்டு முடிந்து போகிறார்களாதலால் இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தை ஒரு பொருளாக மதியாமல் பரம தயாளுவான தேவரீர் பக்கலிலே நெஞ்சைச் செலுத்தியிருக்கும் அடியேனக்குப் பரமபதம் கிடைக்கும் நாள் எதுவோ அந்நாளை யருளிச் செய்யவேணும் திருவிண்ணகரப்பனே! – என்கிறார். முளிந்து + தீந்த, முளிந்தீந்த; விளிந்த + தீந்த, விளிந்தீந்த. (சங்கு + கதை, சங்கதை என்றாவது போல.) வெம் கடம் – கடூரமான பாலைநிலம். ஸம்ஸாரமே முள்நிதீந்த வெங்கடமாகவும், கருமங்களே மூரி்ப்பெருங்களிறாகவும், மாண்டொழிந்த அரசர்கள் விளிந்தீந்த மாமரமாகவும் கொள்க.
அடியேனுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பிராட்டி இணைபிரியாதிருக்கும்போது அடியேனுக்கு என்னகுறை? திருமாலே! மிடுக்குடையவனே! மிடுக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினவனே! பரிபூரணனே! மதுவைக் கொன்றவனே! கேலாவிலக்ஷணமான புகழையுடைய திருவிண்ணகரப்பனே! சோதிவாய்திறந்து ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்; தேவரீருக்கே அடிமைப்பட்டிருக்கையாகிற நன்மையையுடைய அடியேனைக் கருமங்கள் நெருக்காதபடி ஆதரித்தருளவேணுமென்கிறார்.
அடிவரவு – துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்தீந்த சொல்லாய் தாரார் கண்ணும். திருவிண்ணகர்த்திருப்பதி விஷயமான ஓர் ஆராய்ச்சி:- இத்தலம் உப்பிலியப்பன் ஸண்ணிதியென்று வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இத்தலத் தெம்பெருமானுக்கு நிவேதனமாகும் ப்ரஸாத மொன்னிறலும் அடியொடு உப்பு சேர்ப்பது கிடையாது. உப்பு என்கிற பதார்த்தம் இந்த ஸன்னிதிக்குள் புகவே கூடாதென்று கடுமையான கட்டளை நெடுநாளகவேயுள்ளது. ஸ்தல புராணமும் இதற்கிணங்க அமைந்துள்ளது. ஆனால், ஆழ்வாரருளிச் செயலே நோக்குமிடத்து ‘ஒப்பிலியப்பன்‘ என்பதே எம்பெருமானது திருநாமமென்று விளங்காநின்றது. * தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதான் நிழலே * என்று திருவாய்மொழியில் (6-3-9) இத்தலத்துட் பதிகத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்துளர்.
பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.
உரை:1
(நல்குரவுஞ்செல்வும்) ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேரவிட்டுக்கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காணநின்றே னென்கிறார். நல்குரவு – ஏழைமை, அதற்கு எதிரானது ஐச்வரியம், இவையிரண்டுமா யிருக்கையாவது – இவை யிரண்டையும் அவரவர்களுக்கு உண்டுபண்ணவல்லவனாயிருக்கை. குசேல முனிவனை தரித்ரனாக்கினதும் தானே, செல்வனாக்கினதும் தானே, பின்னையும் தரித்ரனாக்கியதும் தானே. நரகும் சுவர்க்கமுமாய் – துக்கமே வடிவெடுத்த நரகத்திலே தள்ளுவதும் தானே, சுகமே வடிவெடுத்த சுவர்க்கத்திலே நிறுவுவதும் தானே. வெல்பகையும் நட்பும் –த்வேஷத்தை விளைப்பதும் தானே, ஸ்நேகத்தை விளைப்பதும் தானே. தன் பக்கலில் த்வேஷமுடையவர்களை ஸ்நேஹிகளாக்கிக்கொள்ளவும் வல்லன், ஸ்நேஹமுடையவர்களை த்வேஷிகளாக்கிக் கொள்ளவும் வல்லன் என்றுமாம். மஹாத்வேஷியாயிருந்த கண்டாகர்ணனை ஸ்நேஹியாக்கிக் கொண்டான், மஹாஸ்நேஹியாயிருந்த மாலிகனை த்வேஷியாக்கிக்கொண்டான், சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் * என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க. வெல்பகை – ‘ஸமாதானத்தாலே மீளுமதன்றியிலே வென்றேவிடவேண்டும் பகை‘ என்பது ஈடு.
உரை:2
வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களையுடைய திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
(கண்டவின்பம்) * ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.
(கைதவம் செம்மை) சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார். ‘பெருந்தேவுடை மூவுலகும் அவன் பெய்த காவு‘ என்றது ப்ரஹ்மா முதல் பிபீலிகையளவாகவுள்ள ஸமஸ்த ப்ராணிவர்க்கமும் அவனுடைய ரக்ஷ்யகோடி என்கை. கைதவமாவது வக்ரத்வம். செம்மையாவது ருஜுவாயிருத்தல். சிலரிடத்தில் கோணல் தவிர வேறுகிடையாது, சிலரிடத்தில் செம்மை தவிர வேறுகிடையாது, இவை யிரண்டும் அவனிட்ட வழக்கு. கைதவமும் செம்மையுமாகிற இரண்டும் எம்பெருமானிடத்திலேயே உண்டு என்றும் கொள்ளலாம். கண்ணன் அயல் வீட்டிலே புகுந்து வெண்ணெய்த்தாழியிலே கையிட்டவாறே ••• அம்மா! ஒரு கன்றுகுட்டி சிதறி ஓடிப்போயிற்று, அது இங்கே இருக்கிறதோ வென்று தேடுவதற்காகக் கையிட்டேன்“ என்றுரைப்பது போன்றவை கைதவம். பஞ்சவடியிலே சூர்பணகைவந்து நீர் ஆர்? ராக்ஷஸபூயிஷ்டமான இந்த இடத்திற்கு நீர் வந்த்தேன்? என்றபோது •••• (இராமன் செம்மையான புத்தியை யுடையவனாதாலால் எல்லாம் உள்ளபடியே உரைக்கத் தொடங்கினான்) என்னும்படியாக அமைந்தது செம்மை.
(மூவுலகங்களுமாய்) படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வரஜ ஸ்தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது. உகப்பாய் முனிவாய் – ஒரு வஸ்துவை ஒருவர் உகந்திருப்பதும், அதுதன்னையே மற்றொருவர் வெறுத்திருப்பதுமான உகப்பும் முனிவும் அவனிட்டவழக்கு ஒருவனுக்கு ஒன்றில் ஒருகால் உகப்பும் அவனுக்கே அதுதன்னிலேயே மற்றொரு கால் வெறுப்புமாதலால் அவையு மிங்குக் கொள்ளலாம். பூவில்வாழ்மகளாய்த் தௌவையாய் – லக்ஷ்மீகடாக்ஷம் பெறுவானொருத்தன், மூதேவிபிடித்துத் திரிவானொருத்தன், இவை யிரண்டும் அவனதீனம். * நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர்ருள்தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவாகன்னும்நிற்கச் சேட்டைதம்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே, * என்கிற திருமாலையின்படியே சிலர் திருமாலைத்தொழுது உய்வதும் சிலர் தேவதாந்தர பஜனம்பண்ணி அநர்த்தப்பட்டுப் போவதும் அவனிட்ட மாயை என்றவாறு.
(பரஞ்சுடர்) எம்பெருமானுக்கு இரண்டு வகையான சரீரங்களுண்டு அப்ராக்ருதமாய் சுத்தஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹம் ஒன்று, - ஜகத் ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்கு சரீரமாகையாலேஇந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று. கரந்தும் தோன்றியும் - * இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் * என்றும், * கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றதபடி நின்று * என்றும் (பிள்ளைலோகாசாரயர்) அருளிச்செய்கிறபடியே மறைந்திருப்பதும், * காணவாராயென்றென்ற்று கண்ணும்வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி ராமக்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்வதும் விவக்ஷிதம். நின்றும் –நூறாண்டு பதினோராயிரமாண்டு நின்றும். கைதவம் – வடசொல், க்ருத்ரிமம் என்றபடி. “அவதரித்து நிற்கச் செய்தே தன்படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும் ஆச்ரிதர்க்குத் தோற்றும்படி பண்ணியும்“ என்பது ஈடு.
(வன்சரண்) தேவர்களுக்கு எந்த ஆபத்துவந்தாலும் ஓடிவந்து திருவடிகளிலே விழ * முப்பத்துமூவரமரர்க்கு முன் சென்று கப்பந்தவிர்க்கும் கலியெ * என்கிறபடியே அவர்களுக்காகத் தன்னை அம்புக்கிலக்காக்கி அவர்களைக் காப்பாற்றும் வலிய ரக்ஷ்கன், இப்படிப்பட்டவன் அஸுரராக்ஷஸ கோஷ்டியில் வந்தாலோ அவர்களுக்குக் கொடிய யம்னாயிருப்பன். ப்ரஸித்தனாயிருக்கிற எம்பெருமான் தேவர்களுக்கு வன் சரணாயும் அசுரர்களுக்கு வெங்கூற்றமாயும் இருந்தால் அவனுக்கு இது குறையாகாதோ? என்னில், ஆகாது. தேவர்களுக்கு நன்மை செய்யவேணும், அசுரர்களுக்குத் தீமைசெய்யவேணும் என்று எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு ஆக்ரஹமில்லை, ஒருங்கே எல்லார்க்கும் நன்மை செய்யவேணுமென்பதே அவனுடைய திருவுள்ளம். எல்லாரும் உபயோகங்கொள்ளக் கல்லின ஏரியிலே கழுத்தலே கல்லைக்கட்டிக் கொண்டு விழுந்து சாவார் போலவும், விளக்கிலே விட்டில்கள் தாமேவந்து விழுந்து மடிந்து போமாபோலவும் எம்பெருமானிடத்திலும் அவரவர்களே வந்து விழுந்து மடிந்தால் இது இவனது குற்றமாகுமோ?
(என்னப்பனெனக்காய்) •••• என்றார்கள் மஹர்ஷிகள். எம்பெருமானாகிறன் வ்ருக்ஷத்தின் நிழலானது மிகவும் அநுகூலமானது, நரகம் தவிர்ப்பது, அதுவே அடையத்தக்கது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து, அப்படிப்பட்ட நிழலைத் தாமக அடையத்தக்கது என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. அப்படிப்பட்ட நிழலைத் தாமாக அடையப்பார்க்கவேண்டாதே எம்பெருமான் தானே தனது நிர்ஹேதுக கிருபையினால் (தன் திருவடிநிழலைத்) தமக்குக் கொடுத்தருளின மஹோபகாரத்தைப் பேசி மகிழ்கிறார். திருவடிநிழலைக்கொடுப்பதாவது திருவடிகளின் கீழேயிருந்து அத்தாணிச் சேவகஞ்செய்து ஆனந்திக்கும்படி செய்தருள்வதேயாம். •• என்கிற ஸுதர்சந சதக ஸூக்தியும் இங்கு நினைக்கத்தகும். உலகத்தில் பிதாவாயிருப்பவன் தாயாயிருக்க முடியாது, தாயாயிருப்பவள் தோழியாயிருக்க முடியாது, இப்படிப்பட்ட விருத்த தர்மங்களெல்லாம் எம்பெருமான் திறந்தே குடிகொண்டிருக்கின்ற வென்கிறார் முதலடியில். இகுளாய் என்கிறவிடத்தில் இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி, - “(இருளாய்) தோழியாய். இது தமிழர் நிர்வாஹம். நம்முடையவர்கள், செவிலித்தாய் என்று நிர்வஹிப்பர்கள், தாய்க்குத் தோழியா யிருக்குமிறே செவிலித்தாய், அத்தைச் சொல்லுகிறது.“ என்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி (“இருளாய்) இகுளையென்று தோழிக்குப்பேராய் அத்தைக்குறைத்து இகுளென்று கிடக்கிறது.“ என்று.
(நிழல் வெய்யில்) “பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும்போலே நூற்றுக்கு உபதேசப்பத்து“ என்கிற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படி ஒவ்வொரு நூறுபாசுரங்களினுள்ளும் ஒவ்வொரு பதிகம் உபதேசபரமா யிருக்குமாதலால் இந்த ஆறாம்பத்துக்கு இத்திருவாய்மொழியே உபதேசபரமாகக் கொள்ளத்தக்கது. இது உபதேச ரூபமென்பது மற்ற பாசுரங்களில் வ்யக்தமாகக் காணாமல் இப்பாசுரத்தில் வ்யக்தமாகக் காண்கிறது. “மற்றோர்களைகணிலம் காண்மின்களே“ என்றது காண்க. பன்னீராயிரப்படியிலும் இப்பாட்டின் உரையவதாரிகையில் “உபதேசித்து முடிக்கிறார்“ என்றருளிச் செய்திருப்பதுங் குறிக்கொள்க. தாபசாந்தியைத் தருமதான நிழலும் தாபகரமான வெய்யிலும், சிறுமைக்கு எல்லையான அணுத்வமும் பெருமைக்கு எல்லையான மஹதத்வமும், மத்யம் பரிமாணங்களிலுண்டான ஹ்ரஸ்வத்வ தீர்க்கத்வங்களும், ஜங்கமஸ்தாவரங்களான மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய், இப்படி ஸர்வ சரீரியாகா நிற்கச்செய்தே அவற்றினுடைய ஸ்வபாவத்தை உடையனல்லாதவனுமாய்க் கொண்டு, வண்டுகள் தென்னாதெனாவென்று முரலப்பெற்ற திருவிண்ணகரிலே உறைகின்ற பெருமானது திருவடிகளை யொழிய வேறொரு சாணமுடையோ மல்லோம் நாம், இதை நீங்களும் நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்றாராயிற்று.
(காண்மின்கள்) இத் திருவாய்மொழியை அதிகரிக்கவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். இப் பதிகமானது * காண்மின்களாலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்தன்னைக் குறித்து அருளிச்செய்ததாகத் தகும், ஏனெனில், மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினதுபோல இருக்கும் மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால். ஆணையாயிரம் – •••• ஸ்ம்ஸ்க்ருத வேதமானது எப்படி பகவதாஜ்ஞாரூபமமோ அப்படியே இத் தமிழ்வேதமும் என்க. விண்ணோர்க்கு என்றும் குரவர்களாவர் – இத் திருவாய்மொழியை ஓதுமவர்கள் நித்ய ஸூரிகளுக்குக் குரவர்களாகையாவது என்னென்னில், - * பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ என்னும்படியான இருள்தருமாஞலத்தில் இருந்துகொண்டே இவர்கள் இப்படி பகவத் குணாநுபவம் பண்ணப் பெறுகின்றார்களே! இதுவன்றோ ஆச்சரியம்! நாம் * நலமந்தமில்லை தோர்நாட்டிலே யிருந்துக்கொண்டு குணுநுபவம் பண்ணுவதில் என்ன விசேஷம்? நம்மிற்காட்டில் இவர்களேயன்றோ சீரியர்கள்! என்று கொண்டாடப்பெறுதலாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஸம்ஸாரத்தேயிந்துவைத்தே நம்படி ஒருவனுக்கு உண்டாவதே! என்று (நித்யஸூரிகள்) கொண்டாடியிருப்பர்கள்.“
விளக்கம்
1449.
விளக்கம்
1451.
விளக்கம்
1452.
விளக்கம்
1453.
விளக்கம்
1454.
விளக்கம்
1455.
விளக்கம்
1456.
விளக்கம்
1457.
விளக்கம்
1458.
விளக்கம்
1459.
விளக்கம்
1460.
விளக்கம்
1461.
விளக்கம்
1462.
விளக்கம்
1463.
விளக்கம்
1464.
விளக்கம்
1465.
விளக்கம்
1466.
விளக்கம்
1467.
விளக்கம்
1468.
விளக்கம்
1469.
விளக்கம்
1471.
விளக்கம்
1472.
விளக்கம்
1473.
விளக்கம்
1474.
விளக்கம்
1475.
விளக்கம்
1476.
விளக்கம்
1477.
விளக்கம்
2709.
விளக்கம்
3365.
விளக்கம்
3366.
விளக்கம்
3367.
விளக்கம்
3368.
விளக்கம்
3369.
விளக்கம்
3370.
விளக்கம்
3371.
விளக்கம்
3372.
விளக்கம்
3373.
விளக்கம்
3374.
விளக்கம்
3375.