திருக்கோழி

தலபுராணம்:- திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், திருச்சி அருகேயுள்ள உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. மாசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதை இங்கு கண்டு மகிழலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்.

அமைவிடம்

முகவரி: அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில்,
உறையூர்-620 003,
திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 2762 446,
94431 88716.,

தாயார் : ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ அழகிய மணவாளன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : திருச்சி
கடவுளர்கள்: விஷ்னு,லக்ஷ்மி


திவ்யதேச பாசுரங்கள்

    667.   
    அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
    எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 
    கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*
    சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)

        விளக்கம்  


    • எல்லையி லடிமைத்திறமாவது- “அடியா ரடியார்தம் மடியா ரடியார்தமக்கடியார் தம் அடியா ரடியோங்களே” என்கிற சேஷத்வகாஷ்டை. அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய். ஸாம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி, அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார்.


    1762.   
    கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
    பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   

        விளக்கம்  


    • தோழீ! இப்பெரியவர் உறையூரிலும் தென் மதுரையிலும் கோயில்கொண்டிருந்து காட்சிதந்த பெரியவர்போலே யிருக்கின்றார்; மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை யுடையரா யிருக்கின்றார்; திருமேனி நிறத்தில் கருங்கடலை யொத்திருக்கின்றார்; தீருக்கைகளில் திருவாழியும் திருச்சங்குமாய்த் திகழ்கின்றார்; இப்பெரியவரை இதற்கு முன் எங்குங் கண்டதாக நினைவில்லை; இவரது சிற்சில அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனத்தனை யொழிய அவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்றுகாண் – எனகிறாள். கோழி யென்று உறையூர்க்குப் பெயர்; கூடல் என்று தென்மதுரைக்குப் பெயர். கோவலர் = கோபால; என்னும் வடசொல்லின் விகாரமாகக் கொண்டால் கோபாலக்ருஷ்ணனென்றதாகும்; அன்றி, கோ,வலர் என்று இரண்டு தமிழ்ச் சொற்களாகக் கொண்டால் கோ – அரசர்களுக்குள்ளே, வலர் – வல்லர், (வல்லவர்) ராஜாதிராஜர் என்றபடியாம். இவரைப் பார்த்தால் ஸாமாந்ய புருஷராகத் தோன்றவில்லை; உறையூரையும் மதுரையையும் அரசாட்சி புரிகின்ற அரசர்களோ இவர்! என்னும்படி யிருக்கின்றார் என்பதாம். இவர் தம்மைப் பண்டுங் கண்டறியோம் = எம்பெருமானை முதன் முதலாகக்காணும் போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக் கொண்டு ‘இவரை முன் எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்; அதன் பிறகு எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங் கண்டறியாததுபோலவும் அப்பொழுதே அபூர்வமாகக் கண்டு அநுபவிப்பது போலவுந் தோன்றிக்கொண்டேயிருக்கும். மற்ற விஷயங்களிற் காட்டில் பகவத்விஷயத்திற்குள்ள வைலக்ஷண்யம் இது என்க. இந் நிலவுலகத்துக்குத் தகாத இவ்வழகுக்குக் கண்ணெச்சில் வாராமைக்காக இடையில் வாழியரோ என்கிறாள். ‘வாழி அரோ’ என்று பிரித்து ‘அரோ’ என்பதை அசைச்சொல்லாகக் கொள்க. வாழிய என்னும் வியங்கோள் ஈற்றுயிர் மெய்கெட்டு வாழி என நின்றது. இனி வாழியர் ஓ என்று பிரித்து, வாழியர் என்பதை ரகரமெய்யீற்று வியங்கோள் எனக்கொண்டு ஒகாரத்தை அசையென்றலுமாம்.