பிரபந்த தனியன்கள்

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

   பாசுரங்கள்


    திருக்கண்டேன்*  பொன்மேனி கண்டேன்,*  திகழும்
    அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* - செருக்கிளரும்

    பொன்ஆழி கண்டேன்*  புரி சங்கம் கைக்கண்டேன்,* 
    என்ஆழி வண்ணன்பால் இன்று  (2)


    இன்றே கழல்கண்டேன்*  ஏழ்பிறப்பும் யான்அறுத்தேன் 
    பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்,* - அன்று

    திருக்கண்டு கொண்ட*  திருமாலே,*  உன்னை
    மருக்கண்டு கொண்டுஎன் மனம்


    மனத்துஉள்ளான்*  மாகடல் நீர்உள்ளான்,*  மலராள்
    தனத்துஉள்ளான்*  தண்துழாய் மார்பன்,* - சினத்துச்

    செருநர்உகச் செற்றுஉகந்த*  தேங்குஓத வண்ணன்,* 
    வருநரகம் தீர்க்கும் மருந்து  


    மருந்தும் பொருளும்*  அமுதமும் தானே,* 
    திருந்திய செங்கண்மால் ஆங்கே,* - பொருந்தியும்

    நின்றுஉலகம் உண்டுஉமிழ்ந்து*  நீர்ஏற்று மூவடியால்,*
    அன்றுஉலகம் தாயோன் அடி 


    அடிவண்ணம் தாமரை*  அன்று உலகம் தாயோன்,*
    படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம்,* - முடிவண்ணம்

    ஓர்ஆழி வெய்யோன்*  ஒளியும் அஃதுஅன்றே* 
    ஆர்ஆழி கொண்டாற்கு அழகு?  


    அழகுஅன்றே ஆழியாற்கு*  ஆழிநீர் வண்ணம்,*
    அழகுஅன்றே அண்டம் கடத்தல்,* -அழகுஅன்றே

    அங்கைநீர் ஏற்றாற்கு*  அலர்மேலோன் கால்கழுவ,* 
    கங்கைநீர் கான்ற கழல்?


    கழல்தொழுதும் வாநெஞ்சே!*  கார்க்கடல்நீர் வேலை,*
    பொழில்அளந்த புள்ஊர்திச் செல்வன்,* - எழில்அளந்துஅங்கு

    எண்ணற்குஅரியானை*  எப்பொருட்கும் சேயானை,* 
    நண்ணற்கு அரியானை நாம்    


    நாமம் பலசொல்லி*  நாராயணாஎன்று,* 
    நாம் கையால் தொழுதும் நல்நெஞ்சே! வா*  மருவி 

    மண்ணுலகம் உண்டுஉமிழ்ந்த*  வண்டுஅறையும் தண்துழாய்,* 
    கண்ணனையே காண்க நம்கண். 


    கண்ணும் கமலம்*  கமலமே கைத்தலமும்,* 
    மண்அளந்த பாதமும் மற்றுஅவையே,*  எண்ணில்

    கருமா முகில்வண்ணன்*  கார்க்கடல் நீர்வண்ணன்,* 
    திருமா மணிவண்ணன் தேசு   


    தேசும் திறலும்*  திருவும் உருவமும்,* 
    மாசுஇல் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்*

    வலம் புரிந்த வான்சங்கம்*  கொண்டான் பேர்ஓத,* 
    நலம்புரிந்து சென்றுஅடையும் நன்கு


    நன்குஓதும்*  நால் வேதத்துஉள்ளான்*  நறவுஇரியும்
    பொங்குஓ தருவிப் புனல்வண்ணன்,* - சங்குஓதப்

    பாற்கடலான்*  பாம்புஅணையின் மேலான்,*  பயின்றுஉரைப்பார்
    நூல்கடலான் நுண்அறிவினான்  


    அறிவுஎன்னும் தாள்கொளுவி*  ஐம்புலனும் தம்மில்,*
    செறிவுஎன்னும் திண்கதவம் செம்மி,* - மறைஎன்றும்

    நன்குஓதி*  நன்குஉணர்வார் காண்பரே,*  நாள்தோறும்
    பைங்கோத வண்ணன் படி.      


    படிவட்டத் தாமரை*  பண்டுஉலகம் நீர்ஏற்று,* 
    அடிவட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம்,*

    ஆகாயம் ஊடறுத்து*  அண்டம்போய் நீண்டதே,* 
    மாகாயமாய் நின்ற மாற்கு.


    மால்பால் மனம்சுழிப்ப*  மங்கையர்தோள் கைவிட்டு,* 
    நூல்பால் மனம்வைக்க நொய்விதுஆம்,*  நால்பால

    வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடிதோயும்,*
    பாதத்தான் பாதம் பணிந்து. 


    பணிந்துஉயர்ந்த பௌவப்*  படுதிரைகள் மோத,* 
    பணிந்த பணமணிகளாலே அணிந்து,*  அங்கு

    அனந்தன்அணைக்*  கிடக்கும் அம்மான்,*  அடியேன்
    மனம்தன்அணைக் கிடக்கும் வந்து.  


    வந்துஉதைத்த வெண்திரைகள்*  செம்பவள வெண்முத்தம்*
    அந்தி விளக்கும் அணிவிளக்காம்,* - எந்தை

    ஒருஅல்லித் தாமரையாள்*  ஒன்றியசீர் மார்வன்,* 
    திருவல்லிக்கேணியான் சென்று  (2)


    சென்றநாள் செல்லாத*  செங்கண்மால் எங்கள்மால்,*
    என்ற நாள்எந்நாளும் நாள்ஆகும்,* - என்றும்

    இறவாத எந்தை*  இணைஅடிக்கே ஆளாய்,* 
    மறவாது வாழ்த்துக என்வாய்.


    வாய்மொழிந்து வாமனனாய்*  மாவலிபால்,*  மூவடிமண்
    நீஅளந்து கொண்ட நெடுமாலே,* - தாவியநின்

    எஞ்சா இணைஅடிக்கே*  ஏழ்பிறப்பும் ஆளாகி,* 
    அஞ்சாது இருக்க அருள். 


    அருளாது ஒழியுமே*  ஆல்இலைமேல்,*  அன்று
    தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்,*  இருளாத

    சிந்தையராய் சேவடிக்கே*  செம்மலர்தூய் கைதொழுது,* 
    முந்தையராய் நிற்பார்க்கு முன்? 


    முன்னுலகம்*  உண்டுமிழ்ந்தாய்க்கு,*  அவ்வுலகம் ஈரடியால்*
    பின்னளந்து கோடல் பெரிதொன்றே?*  - என்னே

    திருமாலே!* . செங்கண் நெடியானே,* எங்கள்
    பெருமானே!. நீயிதனைப் பேசு.


    பேசுவார்*  எவ்வளவு பேசுவர்,*  அவ்வளவே 
    வாச மலர்த்துழாய் மாலையான்,* - தேசுஉடைய

    சக்கரத்தான்*  சங்கினான் சார்ங்கத்தான்,*  பொங்குஅரவ
    வக்கரனைக் கொன்றான் வடிவு.


    வடிவுஆர் முடிகோட்டி*  வானவர்கள்,*  நாளும்
    கடிஆர் மலர்தூவி*  காணும் - படியானை,*

    செம்மையால் உள்உருகி*  செவ்வனே நெஞ்சமே,* 
    மெய்ம்மையே காண விரும்பு.  


    விரும்பி விண் மண்அளந்த*  அஞ்சிறைய வண்டுஆர்*
    சுரும்பு தொளையில் சென்றுஊத,*  அரும்பும்

    புனந்துழாய் மாலையான்*  பொன்அம் கழற்கே,*
    மனம்துழாய் மாலாய் வரும்.  


    வருங்கால் இருநிலனும்*  மால்விசும்பும் காற்றும்,* 
    நெருங்கு தீ*  நீர்உருவும் ஆனான்,* - பொருந்தும்

    சுடர்ஆழி ஒன்றுஉடையான்*  சூழ்கழலே,*  நாளும் 
    தொடர்ஆழி*  நெஞ்சே! தொழுது.


    தொழுதால் பழுதுஉண்டே*  தூநீர் உலகம்,*
    முழுதுஉண்டு மொய்குழலாள் ஆய்ச்சி,* - விழுதுஉண்ட-

    வாயானை*  மால்விடைஏழ் செற்றானை,*  வானவர்க்கும்
    சேயானை*  நெஞ்சே! சிறந்து?


    சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,* 
    நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,

    வேங்கடமும் வெஃகாவும்*  வேளுக்கைப் பாடியுமே* 
    தாம்கடவார் தண் துழாயார்.


    ஆரே துயர் உழந்தார்*  துன்புஉற்றார் ஆண்டையார்,* 
    காரே மலிந்த கருங்கடலை,*  நேரே

    கடைந்தானை*  காரணனை, நீர்அணைமேல்*  பள்ளி
    அடைந்தானை நாளும் அடைந்து?     


    அடைந்தது அரவுஅணைமேல்*  ஐவர்க்குஆய் அன்று
    மிடைந்தது*  பாரத வெம்போர்,* - உடைந்ததுவும்

    ஆய்ச்சிபால் மத்துக்கே*  அம்மனே, வாள்எயிற்றுப்*
    பேய்ச்சிபால் உண்ட பிரான்   


    பேய்ச்சிபால் உண்ட*  பெருமானைப் பேர்ந்துஎடுத்து,* 
    ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே,*  வாய்த்த

    இருள்ஆர் திருமேனி*  இன்பவளச் செவ்வாய்த்,*
    தெருளா மொழியானைச் சேர்ந்து.  


    சேர்ந்த திருமால்*  கடல்குடந்தை வேங்கடம்* 
    நேர்ந்தஎன் சிந்தை நிறைவிசும்பு,* - வாய்ந்த

    மறைபாடகம் அனந்தன்*  வண்துழாய்க் கண்ணி,*
    இறைபாடி ஆய இவை. 


    இவைஅவன் கோயில்*  இரணியனது ஆகம்,*
    அவைசெய்து அரிஉருவம் ஆனான்,* - செவிதெரியா

    நாகத்தான்*  நால் வேதத்துஉள்ளான்,*  நறவுஏற்றான்-
    பாகத்தான் பாற்கடல்உளான்.


    பாற்கடலும் வேங்கடமும்*  பாம்பும் பனிவிசும்பும்,* 
    நூல்கடலும் நுண்நூல தாமரைமேல்,* - பாற்பட்டு

    இருந்தார் மனமும்*  இடமாகக் கொண்டான்,* 
    குருந்து ஒசித்த கோபாலகன்.  


    பாலகனாய்*  ஆல்இலைமேல் பைய,*  உலகுஎல்லாம்
    மேல்ஒருநாள்*  உண்டவனே மெய்ம்மையே,* - மாலவனே-

    மந்தரத்தால்*  மாநீர்க் கடல்கடைந்து,*  வான்அமுதம்
    அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.


    அன்று இவ்உலகம்*  அளந்த அசைவேகொல்,*
    நின்றுஇருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று

    கிடந்தானை*  கேடுஇல்சீரானை,*  முன் கஞ்சைக்
    கடந்தானை*  நெஞ்சமே! காண்.   


    காண்காண் என*  விரும்பும் கண்கள்,*  கதிர்இலகு
    பூண்தார் அகலத்தான் பொன்மேனி,* - பாண்கண்

    தொழில்பாடி*  வண்டுஅறையும் தொங்கலான்,*  செம்பொன்
    கழல்பாடி*  யாம்தொழுதும் கை.        


    கைய கனல்ஆழி*  கார்க்கடல்வாய் வெண்சங்கம்,* 
    வெய்ய கதைசார்ங்கம் வெம்சுடர்வாள்,*  செய்ய

    படைபரவை பாழி*  பனிநீர் உலகம்,*
    அடிஅளந்த மாயன் அவற்கு   


    அவற்குஅடிமைப் பட்டேன்*  அகத்தான் புறத்தான்,* 
    உவர்க்கும் கருங்கடல் உள்ளான்,*  துவர்க்கும்

    பவளவாய்ப் பூமகளும்*  பல்மணிப் பூண்ஆரம்,* 
    திகழும் திருமார்பன் தான். 


    தானே தனக்கு உவமன்*  தன்உருவே எவ்உருவும்,* 
    தானே தவ உருவும் தாரகையும்,* - தானே

    எரிசுடரும் மால்வரையும்*  எண்திசையும்,*  அண்டத்து
    இருசுடரும் ஆய இறை.    


    இறையாய்  நிலன்ஆகி*  எண்திசையும் தான்ஆய்,* 
    மறையாய்  மறைப்பொருள்ஆய் வான்ஆய்* - பிறைவாய்ந்த

    வெள்ளத்து அருவி*  விளங்குஒலிநீர் வேங்கடத்தான்,*
    உள்ளத்தின்உள்ளே உளன்.  


    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன்என்றும்
    உளன்கண்டாய்,*  உள்ளுவார்உள்ளத்து உளன்கண்டாய்,*

    விண்ஒடுங்கக் கோடுஉயரும்*  வீங்குஅருவி வேங்கடத்தான்,*
    மண்ஒடுங்க தான்அளந்த மன்.    


    மன்னு மணிமுடிநீண்டு*  அண்டம்போய் எண்திசையும்,* 
    துன்னு பொழில்அனைத்தும் சூழ்கழலே,* - மின்னை

    உடையாகக் கொண்டு*  அன்றுஉலகுஅளந்தான்,*  குன்றம்
    குடையாக ஆகாத்த கோ.


    கோவலனாய்*  ஆநிரைகள் மேய்த்து குழல்ஊதி,* 
    மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,*  மேவி

    அரிஉருவம்ஆகி*  இரணியனது ஆகம்,* 
    தெரிஉகிரால் கீண்டான் சினம்.


    சினமா மதகளிற்றின்*  திண்மருப்பைச் சாய்த்து,* 
    புனம்மேய பூமி அதனைத்,* - தனமாக

    பேர்அகலத்து உள்ஒடுக்கும்*  பேர்ஆர மார்வனார்,*
    ஓர்அகலத்துஉள்ளது உலகு.   


    உலகமும்*  ஊழியும் ஆழியும்,* ஒண்கேழ்
    அலர்கதிரும்*  செந்தீயும் ஆவான்,* - பலகதிர்கள்

    பாரித்த*  பைம்பொன் முடியான் அடிஇணைக்கே,*
    பூரித்துஎன் நெஞ்சே புரி.


    புரிந்து மதவேழம்*  மாப்பிடியோடு ஊடி,* 
    திரிந்து சினத்தால் பொருது,* - விரிந்தசீர்

    வெண்கோட்டு முத்து உதிர்க்கும்*  வேங்கடமே,*  மேல்ஒருநாள் 
    மண்கோட்டுக் கொண்டான் மலை.    


    மலைமுகடுமேல் வைத்து*  வாசுகியைச் சுற்றி,* 
    தலைமுகடு தான்ஒருகை பற்றி,*- அலைமுகட்டு  

    அண்டம்போய் நீர்தெறிப்ப*  அன்று கடல்கடைந்தான்,* 
    பிண்டமாய் நின்ற பிரான்.


    நின்ற பெருமானே!*  நீர்ஏற்று,*  உலகுஎல்லாம்
    சென்ற பெருமானே!*  செங்கண்ணா,* - அன்று

    துரகவாய் கீண்ட*  துழாய்முடியாய்,*  நங்கள்
    நரகவாய் கீண்டாயும் நீ. 


    நீஅன்றே நீர்ஏற்று*  உலகம் அடிஅளந்தாய்,*
    நீஅன்றே நின்று நிரைமேய்த்தாய்* - நீஅன்றே

    மாவாய்உரம் பிளந்து*  மாமருதின்ஊடுபோய்,* 
    தேவாசுரம் பொருதாய் செற்று?


    செற்றதுவும்*  சேரா இரணியனை*  சென்றுஏற்றுப்
    பெற்றதுவும்*  மாநிலம், பின்னைக்குஆய்* - முற்றல்

    முரிஏற்றின்*  முன்நின்று மொய்ம்புஒழித்தாய்,*  மூரிச்
    சுரிஏறு*  சங்கினாய்! சூழ்ந்து    


    சூழ்ந்த துழாய்அலங்கல்*  சோதி மணிமுடிமால்,*
    தாழ்ந்த அருவித் தடவரைவாய்,* - ஆழ்ந்த

    மணிநீர்ச்சுனை வளர்ந்த*  மாமுதலை கொன்றான்,* 
    அணிநீல வண்ணத் தவன்.


    அவனே அருவரையால்*  ஆநிரைகள் காத்தான்,* 
    அவனே அணிமருதம் சாய்த்தான்,* - அவனே

    கலங்காப் பெருநகரம்*  காட்டுவான் கண்டீர்,* 
    இலங்கா புரம்எரித்தான் எய்து. 


    எய்தான் மராமரம்*  ஏழும் இராமனாய்,* 
    எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்குஆய்,* - எய்ததுவும்

    தென்இலங்கைக்கோன் வீழ*  சென்று குறள்உருஆய்*
    முன்நிலம் கைக்கொண்டான் முயன்று.   


    முயன்று தொழுநெஞ்சே!*  மூரிநீர் வேலை,*
    இயன்றமரத்துஆல்இலையின் மேலால்,* - பயின்றுஅங்குஓர்

    மண்நலம்கொள் வெள்ளத்து*  மாயக் குழவியாய்,* 
    தண்அலங்கல் மாலையான் தாள்.


    தாளால் சகடம்*  உதைத்து பகடுஉந்தி,* 
    கீளா மருதுஇடைபோய் கேழல்ஆய்,* - மீளாது

    மண்அகலம் கீண்டு*  அங்குஓர் மாதுஉகந்த மார்வற்குப்,*
    பெண்அகலம் காதல் பெரிது.     


    பெரியவரைமார்பில்*  பேர்ஆரம் பூண்டு,* 
    கரிய முகிலிடைமின் போல,* - தெரியுங்கால்

    பாண்ஒடுங்க வண்டுஅறையும் பங்கயமே,*  மற்றுஅவன்தன்
    நீள் நெடுங்கண் காட்டும் நிறம். 


    நிறம்வெளிது செய்து*  பசிது கரிதுஎன்று,*
    இறைஉருவம் யாம்அறியோம் எண்ணில்,* - நிறைவுஉடைய

    நாமங்கை தானும்*  நலம்புகழ் வல்லளே,* 
    பூமங்கை கேள்வன் பொலிவு? 


    பொலிந்துஇருண்ட கார்வானில்*  மின்னேபோல் தோன்றி,* 
    மலிந்து திருஇருந்த மார்வன்,* - பொலிந்த 

    கருடன்மேல் கொண்ட*  கரியான் கழலே,* 
    தெருள்தன்மேல் கண்டாய் தெளி.


    தெளிந்த சிலாதலத்தின்*  மேல்இருந்த மந்தி,* 
    அளிந்த கடுவனையே நோக்கி,* - விளங்கிய

    வெண்மதியம் தாஎன்னும்*  வேங்கடமே,*  மேல்ஒருநாள் 
    மண்மதியில்*  கொண்டுஉகந்தான் வாழ்வு.


    வாழும் வகைஅறிந்தேன்*  மைபோல் நெடுவரைவாய்த்,* 
    தாழும் அருவிபோல் தார்கிடப்ப,* - சூழும்

    திருமா மணிவண்ணன்*  செங்கண்மால்,*  எங்கள் 
    பெருமான்*  அடிசேரப் பெற்று.


    பெற்றம் பிணைமருதம்*  பேய்முலை மாச்சகடம்,* 
    முற்றக்காத்துஊடு போய்உண்டுஉதைத்து,* - கற்றுக்

    குணிலை*  விளங்கனிக்குக் கொண்டுஎறிந்தான்,*  வெற்றிப் 
    பணிலம்வாய் வைத்துஉகந்தான் பண்டு.


    பண்டுஎல்லாம் வேங்கடம்*  பாற்கடல் வைகுந்தம்,* 
    கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு

    வளம்கிளரும் நீள்சோலை*  வண்பூங் கடிகை,* 
    இளங்குமரன் தன் விண்ணகர்.  (2)


    விண்ணகரம் வெஃகா*  விரிதிரைநீர் வேங்கடம்,* 
    மண்நகரம் மாமாட வேளுக்கை,* - மண்ணகத்த

    தென்குடந்தை*  தேன்ஆர் திருவரங்கம் தென்கோட்டி,* 
    தன்குடங்கை நீர்ஏற்றான் தாழ்வு.


    தாழ்சடையும் நீள்முடியும்*  ஒண்மழுவும் சக்கரமும்,* 
    சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால்,*- சூழும்

    திரண்டு அருவி பாயும்*  திருமலைமேல் எந்தைக்கு,* 
    இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.


    இசைந்த அரவமும்*  வெற்பும் கடலும்,* 
    பசைந்துஅங்கு அமுது படுப்ப,* - அசைந்து

    கடைந்த வருத்தமோ*  கச்சி வெஃகாவில்,* 
    கிடந்துஇருந்து நின்றதுவும் அங்கு?


    அங்கற்கு இடர்இன்றி*  அந்திப் பொழுதத்து,* 
    மங்க இரணியனது ஆகத்தை,* - பொங்கி

    அரிஉருவமாய்ப் பிளந்த*  அம்மான் அவனே,* 
    கரிஉருவம் கொம்புஒசித்தான் காய்ந்து.


    காய்ந்துஇருளை மாற்றி*  கதிர்இலகு மாமணிகள்,* 
    ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப,* - வாய்ந்த

    மதுகைடபரும்*  வயிறுஉருகி மாண்டார்,* 
    அது கேடுஅவர்க்குஇறுதி ஆங்கு.


    ஆங்கு மலரும்*  குவியுமால் உந்திவாய்,* 
    ஓங்கு கமலத்தின் ஒண்போது,* - ஆம்கைத்

    திகிரி சுடர்என்றும்*  வெண்சங்கம்,*  வானில் 
    பகரும்மதி என்றும் பார்த்து.


    பார்த்த கடுவன்*  சுனைநீர் நிழல்கண்டு,* 
    பேர்த்துஓர் கடுவன்எனப் பேர்ந்து,* - கார்த்த

    களங்கனிக்குக்*  கைநீட்டும் வேங்கடமே,*  மேல்நாள் 
    விளங்கனிக்குக்*  கன்றுஎறிந்தான் வெற்பு.


    வெற்புஎன்று*  வேங்கடம் பாடும்,*  வியன்துழாய் 
    கற்புஎன்று சூடும் கருங்குழல் மேல்,*  மல்பொன்ற

    நீண்டதோள் மால்கிடந்த*  நீள்கடல் நீர்ஆடுவான்,* 
    பூண்டநாள் எல்லாம் புகும்


    புகுமதத்தால்*  வாய்பூசி கீழ்தாழ்ந்து,*  அருவி 
    உகுமதத்தால் கால்கழுவி கையால்,*- மிகுமதத்தேன்

    விண்டமலர் கொண்டு*  விறல் வேங்கடவனையே,* 
    கண்டு வணங்கும் களிறு. 


    களிறு முகில்குத்த*  கைஎடுத்துஓடி,* 
    ஒளிறு மருப்புஒசிகை*  யாளி பிளிறி-

    விழ,*  கொன்று நின்றுஅதிரும்*  வேங்கடமே,*  மேல்நாள் 
    குழக்கன்று*  கொண்டுஎறிந்தான் குன்று.


    குன்றுஒன்றின்ஆய*  குறமகளிர் கோல்வளைக்கை,* 
    சென்று விளையாடும் தீம்கழைபோய்,* - வென்று

    விளங்குமதி கோள்விடுக்கும்*  வேங்கடமே,*  மேலை 
    இளங்குமரர் கோமான் இடம்.


    இடம்வலம் ஏழ்பூண்ட*  இரவித் தேர்ஓட்டி,* 
    வடமுக வேங்கடத்து மன்னும்,* - குடம்நயந்த

    கூத்தனாய் நின்றான்*  குரைகழலே கூறுவதே,* 
    நாத்தன்னால் உள்ள நலம்.


    நலமே வலிதுகொல்*  நஞ்சுஊட்டு வன்பேய்,* 
    நிலமே புரண்டுபோய் வீழ,* - சலமேதான்

    வெம்கொங்கை உண்டானை*  மீட்டுஆய்ச்சி ஊட்டுவான்,* 
    தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.


    சார்ந்துஅகடு தேய்ப்பத்*  தடாவிய கோட்டுஉச்சிவாய்* 
    ஊர்ந்துஇயங்கும் வெண்மதியின்*  ஒண்முயலைச்,* - சேர்ந்து

    சினவேங்கை பார்க்கும்*  திருமலையே,*  ஆயன்
    புனவேங்கை நாறும் பொருப்பு.


    பொருப்பிடையே நின்றும்*  புனல்குளித்தும்,*  ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புஉடைய

    வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,* 
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.


    ஆய்ந்த அருமறையோன்*  நான்முகத்தோன் நன்குறங்கில்
    வாய்ந்த குழவியாய் வாள்அரக்கன்,* - ஏய்ந்த

    முடிப்போது*  மூன்றுஏழ்என்றுஎண்ணினான்,*  ஆர்ந்த
    அடிப்போது நங்கட்கு அரண்.


    அரண்ஆம் நமக்குஎன்றும்*  ஆழி வலவன் 
    முரன்நாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,* - சரண்ஆமேல்

    ஏதுகதி ஏதுநிலை*  ஏதுபிறப்பு என்னாதே,* 
    ஓதுகதி மாயனையே ஓர்த்து.


    ஓர்த்த மனத்தராய்*  ஐந்துஅடக்கி ஆராய்ந்து,* 
    பேர்த்தால் பிறப்புஏழும் பேர்க்கலாம்,* - கார்த்த

    விரைஆர் நறும்துழாய்*  வீங்குஓத மேனி,*
    நிரைஆர மார்வனையே நின்று.


    நின்று எதிராய*  நிரைமணித்தேர் வாணன்தோள்,* 
    ஒன்றிய ஈர்ஐஞ்ஞூறுஉடன் துணிய,* - வென்றுஇலங்கும்

    ஆர்படுவான் நேமி*  அரவுஅணையான் சேவடிக்கே,*
    நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.


    நெஞ்சால்*  நினைப்புஅரியனேலும்*  நிலைப்பெற்று என்
    நெஞ்சமே! பேசாய்*  நினைக்குங்கால்,*- நெஞ்சத்துப்

    பேராது நிற்கும்*  பெருமானை என்கொலோ,* 
    ஓராது நிற்பது உணர்வு?


    உணரில் உணர்வுஅரியன்*  உள்ளம் புகுந்து*
    புணரிலும் காண்புஅரியன் உண்மை,* - இணர்அணைய

    கொங்குஅணைந்து வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
    எங்குஅணைந்து காண்டும் இனி?


    இனிஅவன் மாயன் என உரைப்பரேலும்,* 
    இனிஅவன் காண்புஅரியனேலும்,* - இனியவன்

    கள்ளத்தால் மண்கொண்டு*  விண்கடந்த பைங்கழலான்,* 
    உள்ளத்தின் உள்ளே உளன்.


    உளனாய*  நான்மறையின் உட்பொருளை,*  உள்ளத்து-
    உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்,* - உளனாய

    வண்தாமரை நெடுங்கண்*  மாயவனை யாவரே,*
    கண்டார் உகப்பர் கவி?


    கவியினார் கைபுனைந்து*  கண்ஆர் கழல்போய்,* 
    செவியின்ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* - புவியினார்

    போற்றி உரைக்க*  பொலியுமே,*  பின்னைக்குஆய்
    ஏற்றுஉயிரை அட்டான் எழில்?


    எழில்கொண்ட*  மின்னுக் கொடிஎடுத்து,*  வேகத்-
    தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்,* - எழில் கொண்ட

    நீர்மேகம் அன்ன*  நெடுமால் நிறம்போல,* 
    கார்வானம் காட்டும் கலந்து.


    கலந்து மணிஇமைக்கும் கண்ணா,*  நின் மேனி
    மலர்ந்து*  மரகதமே காட்டும்,* - நலம்திகழும்

    கொந்தின்வாய் வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
    அந்திவான் காட்டும் அது.


    அது நன்று இது தீதுஎன்று*  ஐயப்படாதே,* 
    மதுநின்ற தண்துழாய் மார்வன்,* - பொதுநின்ற*

    பொன்அம் கழலே தொழுமின்,*  முழுவினைகள்
    முன்னம் கழலும் முடிந்து.


    முடிந்த பொழுதில்*  குறவாணர்,*  ஏனம்
    படிந்துஉழுசால்*  பைந்தினைகள் வித்த,* - தடிந்துஎழுந்த

    வேய்ங்கழைபோய்*  விண்திறக்கும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்
    தீம்குழல்*   வாய் வைத்தான் சிலம்பு.


    சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,*  விண்ஆறு 
    அலம்பிய சேவடிபோய்,*  அண்டம் - புலம்பியதோள்*

    எண்திசையும் சூழ*  இடம்போதாது என்கொலோ,*
    வண்துழாய் மால்அளந்த மண்?


    மண்உண்டும்*  பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,* 
    வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*  ஆய்ச்சி - கண்ணிக்

    கயிற்றினால் கட்ட*  தான் கட்டுண்டு இருந்தான்,* 
    வயிற்றினோடு ஆற்றா மகன். 


    மகன்ஒருவர்க்கு அல்லாத*  மாமேனி மாயன்,*
    மகன்ஆம் அவன்மகன் தன்*  காதல் மகனைச்*

    சிறைசெய்த வாணன்தோள்*  செற்றான் கழலே* 
    நிறைசெய்து என் நெஞ்சே! நினை.


    நினைத்துஉலகில் ஆர்தெளிவார்*  நீண்ட திருமால்,*
    அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு

    வெள்ளத்துஓர் பிள்ளையாய்*  மெள்ளத் துயின்றானை,*
    உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.


    உய்த்துஉணர்வு என்னும்*  ஒளிகொள் விளக்குஏற்றி,* 
    வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே

    நின்றான் இருந்தான்*  கிடந்தான் என் நெஞ்சத்து,* 
    பொன்றாமை மாயன் புகுந்து.  


    புகுந்துஇலங்கும்*  அந்திப் பொழுதத்து,* அரியாய் 
    இகழ்ந்த*  இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும் 

    சிந்தப் பிளந்த*  திருமால் திருவடியே* 
    வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.


    வாழ்த்திய வாயராய்*  வானோர் மணிமகுடம்* 
    தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த

    அடித்தாமரை*  மலர்மேல் மங்கை மணாளன்,* 
    அடித்தாமரைஆம் அலர்.   


    அலர்எடுத்த உந்தியான்*  ஆங்குஎழிலஆய,* 
    மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த

    வண்ணத்தான் மாமலரான்*  வார்சடையான்*  என்றுஇவர்கட்கு 
    எண்ணத்தான்ஆமோ இமை? 


    இமம்சூழ் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    அமம்சூழ்ந்துஅற விளங்கித் தோன்றும்,* - நமன்சூழ்

    நரகத்து*  நம்மை நணுகாமல் காப்பான்,* 
    துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.   


    தொட்ட படைஎட்டும்*  தோலாத வென்றியான்,* 
    அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்

    கோள்முதலை துஞ்ச*  குறித்துஎறிந்த சக்கரத்தான்* 
    தாள்முதலே நங்கட்குச் சார்வு  (2)


    சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
    தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த

    வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
    தேன்அமரும் பூமேல் திரு.  (2)