பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


  வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த*  மன்னன் ஆவான்-
  நின்றாயை*  அரியணை மேல் இருந்தாயை*  நெடுங் கானம் படரப் போகு- 

  என்றாள் எம் இராமாவோ*  உனைப் பயந்த*  கைகேசி தன் சொற் கேட்டு* 
  நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)  வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு*  இருநிலத்தை வேண்டாதே, விரைந்து*  வென்றி- 
  மைவாய களிறொழிந்து தேரொழிந்து*  மாவொழிந்து வனமே மேவி* 

  நெய்வாய வேல் நெடுங்கண்*  நேரிழையும் இளங்கோவும் பின்பு போக* 
  எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ*  எம்பெருமான் என் செய்கேனே   


  கொல் அணை வேல் வரி நெடுங் கண்*  கௌசலைதன் குல மதலாய் குனி வில் ஏந்தும்* 
  மல் அணைந்த வரைத் தோளா*  வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்* 

  மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்*  வியன் கான மரத்தின் நீழற்*
  கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ*  காகுத்தா கரிய கோவே


  வா போகு வா இன்னம் வந்து*  ஒருகாற் கண்டுபோ மலராள் கூந்தல்* 
  வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா*  விடையோன்தன் வில்லைச் செற்றாய்*

  மா போகு நெடுங் கானம்*  வல்வினையேன் மனம் உருக்கும் மகனே*  இன்று- 
  நீ போக என் நெஞ்சம்*  இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே  


  பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய*  மெல்லடிகள் குருதி சோர* 
  விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப*  வெம் பசிநோய் கூர*  இன்று- 

  பெரும்பாவியேன் மகனே போகின்றாய்*  கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற* 
  அரும்பாவி சொற் கேட்ட*  அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே


  அம்மா என்று உகந்து அழைக்கும்*  ஆர்வச்சொல் கேளாதே அணி சேர் மார்வம்* 
  என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே*  முழுசாதே மோவாது உச்சி* 

  கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்*  கமலம் போல் முகமும் காணாது* 
  எம்மானை என் மகனை இழந்திட்ட*  இழிதகையேன் இருக்கின்றேனே


  பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து*  பூந் துகில் சேர் அல்குற்* 
  காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது*  அங்கங்கள் அழகு மாறி*

  ஏமரு தோள் என் புதல்வன்*  யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல்* 
  தூ மறையீர் இது தகவோ*  சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே             
   


  பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்*  தம்பியையும் பூவை போலும்* 
  மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்*  மருகியையும் வனத்திற் போக்கி* 

  நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு*  என்னையும் நீள் வானில் போக்க* 
  என் பெற்றாய்? கைகேசி*  இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே    


  முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி*  அவன்தவத்தை முற்றும் செற்றாய்* 
  உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும்*  ஒன்றாகக் கொள்ளாது* 

  என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டு*  வனம் புக்க எந்தாய்* 
  நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்*  ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! 


  தேன் நகு மா மலர்க் கூந்தற்*  கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ* 
  கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட*  கொடியவள்தன் சொற்கொண்டு இன்று* 

  கானகமே மிக விரும்பி நீ துறந்த* வளநகரைத் துறந்து*  நானும்- 
  வானகமே மிக விரும்பிப் போகின்றேன்*  மனு-குலத்தார் தங்கள் கோவே 


  ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்*  வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்* 
  தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய* அப் புலம்பல்தன்னை* 

  கூர் ஆர்ந்த வேல் வலவன்*  கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த* 
  சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்*  தீ நெறிக்கண் செல்லார் தாமே (2)