பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு
கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
பாசுரங்கள்
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* இவ்
வையம்தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என்தன் மாலுக்கே (2)
நூலின் நேர்-இடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று*
மால் எழுந்தொழிந்தேன்* என்தன் மாலுக்கே
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே
உண்டியே உடையே* உகந்து ஓடும்,* இம்
மண்டலத்தொடும்* கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்* அரங்கன் வன் பேய்-முலை*
உண்ட வாயன்தன்* உன்மத்தன் காண்மினே
தீதில் நன்னெறி நிற்க* அல்லாது செய்*
நீதியாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்* அரங்கன் அந் தாமரைப்*
பேதை மா மணவாளன்* தன் பித்தனே
எம் பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே
எத் திறத்திலும்* யாரொடும் கூடும்* அச்
சித்தந்தன்னைத்* தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே
பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்
பேயனே* எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே
அங்கை-ஆழி* அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்* தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்* குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே (2)