பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


  ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்*  எனைப் பலர் உள்ள இவ் ஊரில்*  உன்தன்
  மார்வு தழுவுதற்கு*  ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*

  கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்*  கூசி நடுங்கி யமுனை யாற்றில்* 
  வார் மணற் குன்றிற் புலர நின்றேன்*  வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)


  கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி*  கீழை அகத்துத் தயிர் கடையக்
  கண்டு*  ஒல்லை நானும் கடைவன் என்று*  கள்ள-விழியை விழித்துப் புக்கு*

  வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ*  வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
  தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்*  தாமோதரா மெய் அறிவன் நானே   


  கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் கடைக்கணித்து*  ஆங்கே ஒருத்திதன்பால்
  மருவி மனம் வைத்து*  மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து*

  புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி*  அவளுக்கும் மெய்யன் அல்லை*
  மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே*  வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.


  தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்*  தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று*
  பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு*  பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்*

  ஆய்மிகு காதலோடு யான் இருப்ப*  யான் விட வந்த என் தூதியோடே* 
  நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்*  அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.


  மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு*  வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே* 
  பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்*  போகின்ற போது நான் கண்டு நின்றேன்*

  கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்*  கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்*
  என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?*  இன்னம் அங்கே நட நம்பி நீயே.  


  மற் பொரு தோள் உடை வாசுதேவா*  வல்வினையேன் துயில் கொண்டவாறே*
  இற்றை இரவிடை ஏமத்து என்னை*  இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்*

  அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்*  அரிவையரோடும் அணைந்து வந்தாய்* 
  எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?*  எம்பெருமான் நீ எழுந்தருளே


  பையரவின் அணைப் பள்ளியினாய்*  பண்டையோம் அல்லோம் நாம்*  நீ உகக்கும் 
  மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்*  வைகி எம் சேரி வரவு ஒழி நீ*

  செய்ய உடையும் திருமுகமும்*  செங்கனிவாயும் குழலும் கண்டு* 
  பொய் ஒரு நாள் பட்டதே அமையும்*  புள்ளுவம் பேசாதே போகு நம்பீ


  என்னை வருக எனக் குறித்திட்டு*  இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்* 
  மன்னி அவளைப் புணரப் புக்கு*  மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்* 

  பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்*  பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்*
  இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்*  வருதியேல் என் சினம் தீர்வன் நானே    


  மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க*  மயில்-தழைப் பீலி சூடி*
  பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி*  பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து*

  கொங்கு நறுங் குழலார்களோடு*  குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்*
  எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத*  உன் குழலின் இசை போதராதே?


  அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து*  இள ஆய்ச்சிமார்கள்* 
  எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி*  எள்கி உரைத்த உரையதனைக்*

  கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்*  குலசேகரன் இன்னிசையில் மேவிச்* 
  சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்*  சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)