பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


  இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
  பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை ணையை மேவி*

  திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
  கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)


  வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
  வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*

  காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! 


  எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
  எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-

  அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே


  மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
  ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்

  பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே


  இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
  துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*

  மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே 


  அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
  தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*

  களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
  ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே


  மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
  துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*

  அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


  கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
  கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*

  சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே


  தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித்*  திருப்புகழ்கள் பலவும் பாடி* 
  ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்*  மழை சோர நினைந்து உருகி ஏத்தி*  நாளும்

  சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*  பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!


  வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
  துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *

  அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
  இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)


  திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*

  குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
  நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)