பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
    கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*

    வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
    செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*  குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்* 
    எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*  இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*

    உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*  உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள* 
    செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*  பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா* 
    செவ்வி மாதிரம் எட்டும் தோளா*  அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*

    கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்* 
    தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.  


    பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி*  பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி* 
    அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*  அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*

    வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த* 
    செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    அன்று உலகம் மூன்றினையும் அளந்து*  வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு* 
    வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*  விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து* 

    பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*  புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
    தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*  தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்* 
    தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்* 

    மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட* 
    தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*

    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*  மன் எல்லாம் முன் அவியச் சென்று*  வென்றிச் 
    செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*  சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*

    இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட* 
    திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
    பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*

    பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
    தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
    பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*

    அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
    வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.


    மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,* 
    நீலக் கருநிற*  மேக நியாயற்கு,* 

    கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*
    என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.


    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,* 
    செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,* 

    கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என் 
    மங்கை இழந்தது*  மாமை நிறமே. 


    நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
    திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 

    கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
    பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.


    பீடு உடை நான்முகனைப்*  படைத்தானுக்கு,* 
    மாடு உடை வையம் அளந்த*  மணாளற்கு,* 

    நாடு உடை மன்னர்க்குத்*  தூதுசெல் நம்பிக்கு,*  என் 
    பாடு உடை அல்குல்*  இழந்தது பண்பே.


    பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
    மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 

    தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
    கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    


    கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
    பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 

    நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
    வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  


    மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
    பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 

    கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
    தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.


    சாயக் குருந்தம் ஒசித்த*  தமியற்கு,* 
    மாயச் சகடம் உதைத்த*  மணாளற்கு,* 

    பேயைப் பிணம்படப்*  பால் உண் பிரானுக்கு,*  என் 
    வாசக் குழலி*  இழந்தது மாண்பே . 


    மாண்பு அமை கோலத்து*  எம் மாயக் குறளற்கு,* 
    சேண் சுடர்க் குன்று அன்ன*  செஞ்சுடர் மூர்த்திக்கு,* 

    காண் பெரும் தோற்றத்து*  எம் காகுத்த நம்பிக்கு,*  என் 
    பூண் புனை மென்முலை*  தோற்றது பொற்பே.       


    பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
    மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 

    நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
    கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 


    கட்டு எழில் சோலை*  நல் வேங்கடவாணனைக்,* 
    கட்டு எழில் தென் குருகூர்ச்*  சடகோபன் சொல்,* 

    கட்டு எழில் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்,* 
    கட்டு எழில் வானவர்*  போகம் உண்பாரே.