பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
    இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி

    அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
    வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    


    மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
    இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*

    பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே


    மான் ஏய் நோக்கியர்தம்*  வயிற்றுக் குழியில் உழைக்கும்* 
    ஊன் ஏய் ஆக்கை தன்னை*  உதவாமை உணர்ந்து உணர்ந்து*

    வானே! மா நிலமே!*  வந்து வந்து என் மனத்து இருந்த 
    தேனே*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.      


    பிறிந்தேன் பெற்ற மக்கள்*  பெண்டிர் என்று இவர் பின் உதவாது 
    அறிந்தேன்*  நீ பணித்த அருள் என்னும்*  ஒள் வாள் உருவி

    எறிந்தேன்*  ஐம்புலன்கள் இடர் தீர*  எறிந்து வந்து 
    செறிந்தேன்*  நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே.   


    பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்*  பல்லாண்டு இசைப்ப* 
    ஆண்டார் வையம் எல்லாம்*  அரசு ஆகி*  முன் ஆண்டவரே-

    மாண்டார் என்று வந்தார்*  அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை* 
    வேண்டேன் நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    கல்லா ஐம்புலன்கள் அவை*  கண்டவாறு செய்யகில்லேன்* 
    மல்லா! மல் அமருள் மல்லர் மாள*  மல் அடர்த்த!*

    மல்லா மல்லல் அம் சீர்*  மதிள் நீர் இலங்கை அழித்த 
    வில்லா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.


    வேறா யான் இரந்தேன்*  வெகுளாது மனக்கொள் எந்தாய்!* 
    ஆறா வெம் நரகத்து*  அடியேனை இடக் கருதி* 

    கூற ஐவர் வந்து குமைக்கக்*  குடிவிட்டவரைத்* 
    தேறாது உன் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    தீ வாய் வல் வினையார்*  உடன் நின்று சிறந்தவர்போல்* 
    மேவா வெம் நரகத்து இட*  உற்று விரைந்து வந்தார்*

    மூவா வானவர்தம் முதல்வா!*  மதி கோள் விடுத்த 
    தேவா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே 


    போது ஆர் தாமரையாள்*  புலவி குல வானவர்தம் 
    கோதா*  கோது இல் செங்கோல்*  குடை மன்னர் இடை நடந்த

    தூதாதூ*  மொழியாய் சுடர்போல்*  என் மனத்து இருந்த 
    வேதா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே


    தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
    வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*

    ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
    கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      


    மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
    மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 

    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
    என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 


    போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்*  செவ்வாய் முறுவலும்* 
    ஆகுலங்கள் செய்ய*  அழிதற்கே நோற்றோமேயாம்?* 

    தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்*  செவி ஓசை வைத்து எழ*
    ஆகள் போகவிட்டு*  குழல் ஊது போயிருந்தே*.          


    போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!*  நின்செய்ய- 
    வாய் இருங் கனியும் கண்களும்*  விபரீதம் இந் நாள்* 

    வேய் இரும் தடம் தோளினார்*  இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*  
    மா இரும் கடலைக் கடைந்த*  பெருமானாலே?*         


    ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு*  அன்று நீ கிடந்தாய்*  உன் மாயங்கள்- 
    மேலை வானவரும் அறியார்*  இனி எம் பரமே?* 

    வேலின் நேர் தடம் கண்ணினார்*  விளையாடு சூழலைச் சூழவே நின்று* 
    காலி மேய்க்க வல்லாய்!*  எம்மை நீ கழறேலே*.


    கழறேல் நம்பீ!*  உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்*  திண் சக்கர- 
    நிழறு தொல் படையாய்!*  உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்* 

    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
    குழறு பூவையொடும்*  கிளியோடும் குழகேலே*.  


    குழகி எங்கள் குழமணன்கொண்டு*  கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை* 
    பழகி யாம் இருப்போம்*  பரமே இத் திரு அருள்கள்?*

    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்*  தேவிமை ஈதகுவார் பலர் உளர்* 
    கழகம் ஏறேல் நம்பீ!*  உனக்கும் இளைதே கன்மமே*.


    கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது*  கடல் ஞாலம் உண்டிட்ட* 
    நின்மலா! நெடியாய்!*  உனக்கேலும் பிழை பிழையே* 

    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி*  அது கேட்கில் என் ஐம்மார்* 
    தன்ம பாவம் என்னார்*  ஒரு நான்று தடி பிணக்கே*.


    பிணக்கி யாவையும் யாவரும்*  பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்* 
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்*  கதிர் ஞான மூர்த்தியினாய், 

    இணக்கி எம்மை எம் தோழிமார்*  விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை* 
    உணக்கி நீ வளைத்தால்*  என் சொல்லார் உகவாதவரே?* 


    உகவையால் நெஞ்சம் உள் உருகி*  உன் தாமரைத் தடம் கண் விழிகளின்* 
    அக வலைப் படுப்பான்*  அழித்தாய் உன் திருவடியால்* 

    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்*  யாம் அடு சிறு சோறும் கண்டு*  நின்- 
    முக ஒளி திகழ*  முறுவல் செய்து நின்றிலையே*.


    நின்று இலங்கு முடியினாய்!*  இருபத்தோர் கால் அரசு களைகட்ட* 
    வென்றி நீள்மழுவா!*  வியன் ஞாலம் முன் படைத்தாய்!* 

    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய*  கருமாணிக்கச் சுடர்* 
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்*  ஆய்ச்சியோமே*.       


    ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
    கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 

    ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)