பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
    தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*  அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!* 
    விண்ணவர் அமுது உண அமுதில் வரும்*  பெண் அமுது உண்ட எம் பெருமானே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல் 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்*  உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்* 
    கலை தரு குழவியின் உருவினை ஆய்*  அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.        


    பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்*  சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்* 
    ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று*  அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல், 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   


    கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்*  ஏர் கெழும் உலகமும் ஆகி*   முத
    லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்*  சீர் கெழு நான்மறை ஆனவனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     


    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*  இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்* 
    பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்*  இருக்கினில் இன் இசை ஆனவனே!*

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    காதல் செய்து இளையவர் கலவி தரும்*  வேதனை வினை அது வெருவுதல் ஆம்* 
    ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!*  போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*

    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.    


    சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்*  காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்* 
    ஓதல் செய் நான்மறை ஆகி*  உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!* 

    ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே!       


    பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
    காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 

    பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
    வாமனன் அடி*  இணை மருவுவரே* 


    வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
    செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   


    காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
    வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
    பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.


    திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
    சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 

    கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*


    இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
    விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*


    உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
    திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 

    புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
    புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  


    போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
    சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
    மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*


    ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
    செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 

    கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
    செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  


    திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
    செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*

    பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
    கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  


    அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
    விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*


    வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
    தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 

    மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
    ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  


    மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
    வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
    இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)