பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
    மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்

    பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
    திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 


    துறந்தேன் ஆர்வச் செற்றச்*  சுற்றம் துறந்தமையால்* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  அடிமை திருமாலே*

    அறம்தான் ஆய்த் திரிவாய்*  உன்னை என் மனத்து அகத்தே* 
    திறம்பாமல் கொண்டேன்*  திருவிண்ணகரானே.  


    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*

    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      


    சாந்து ஏந்து மென் முலையார்*  தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து 
    ஆழ்ந்தேன்*  அரு நரகத்து அழுந்தும்*  பயன் படைத்தேன்* 

    போந்தேன் புண்ணியனே!*  உன்னை எய்தி என் தீவினைகள் 
    தீர்ந்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகரானே      


    மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*  உன்னை என் மனத்து வைத்துப் 
    பெற்றேன்*  பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*

    வற்றா நீள் கடல் சூழ்*  இலங்கை இராவணனைச் 
    செற்றாய்*  கொற்றவனே!*  திருவிண்ணகரானே. 


    மை ஒண் கருங் கடலும்*  நிலனும் மணி வரையும்* 
    செய்ய சுடர் இரண்டும்*  இவை ஆய நின்னை*  நெஞ்சில்

    உய்யும் வகை உணர்ந்தேன்*  உண்மையால் இனி *  யாதும் மற்று ஓர் 
    தெய்வம் பிறிது அறியேன்*  திருவிண்ணகரானே.    


    வேறே கூறுவது உண்டு*  அடியேன் விரித்து உரைக்கும் 
    ஆறே*  நீ பணியாது அடை*  நின் திருமனத்து* 

    கூறேன் நெஞ்சு தன்னால்*  குணம் கொண்டு*  மற்று ஓர் தெய்வம் 
    தேறேன் உன்னை அல்லால்*  திருவிண்ணகரானே.


    முளிந்தீந்த வெம் கடத்து*  மூரிப் பெருங் களிற்றால்* 
    விளிந்தீந்த மா மரம்போல்*  வீழ்ந்தாரை நினையாதே* 

    அளிந்து ஓர்ந்த சிந்தை*  நின்பால் அடியேற்கு*  வான் உலகம் 
    தெளிந்தே என்று எய்துவது?*  திருவிண்ணகரானே.     


    சொல்லாய் திரு மார்வா!*  உனக்கு ஆகித் தொண்டு பட்ட 
    நல்லேனை*  வினைகள் நலியாமை*  நம்புநம்பீ*

    மல்லா! குடம் ஆடீ!*  மதுசூதனே*  உலகில் 
    செல்லா நல் இசையாய்!*  திருவிண்ணகரானே.


    தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
    சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 

    கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
    ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.


    நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
    வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 

    பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
    செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 


    கண்ட இன்பம் துன்பம்*  கலக்கங்களும் தேற்றமும் ஆய்* 
    தண்டமும் தண்மையும்*  தழலும் நிழலும் ஆய்* 

    கண்டுகோடற்கு அரிய*  பெருமான் என்னை ஆள்வான் ஊர்* 
    தெண் திரைப் புனல்சூழ்*  திருவிண்ணகர் நல் நகரே* 


    நகரமும் நாடுகளும்*  ஞானமும் மூடமும் ஆய்* 
    நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்*  நிலன் ஆய் விசும்பு ஆய்* 

    சிகர மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை*  யாவர்க்கும் புண்ணியமே*.   


    புண்ணியம் பாவம்*  புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்* 
    எண்ணம் ஆய் மறப்பு ஆய்*  உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 

    திண்ண மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    கண்ணன் இன் அருளே*  கண்டுகொள்மின்கள் கைதவமே* 


    கைதவம் செம்மை*  கருமை வெளுமையும் ஆய்* 
    மெய் பொய் இளமை*  முதுமை புதுமை பழமையும் ஆய்* 

    செய்த திண் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பெய்த காவு கண்டீர்*  பெரும் தேவு உடை மூவுலகே*    


    மூவுலகங்களும் ஆய்*  அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்* 
    பூவில் வாழ் மகள் ஆய்*  தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்* 

    தேவர் மேவித் தொழும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பாவியேன் மனத்தே*  உறைகின்ற பரஞ்சுடரே*.


    பரம் சுடர் உடம்பு ஆய்*  அழுக்குப் பதித்த உடம்பு ஆய்* 
    கரந்தும் தோன்றியும் நின்றும்*  கைதவங்கள் செய்தும்*  விண்ணோர்- 

    சிரங்களால் வணங்கும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை*  யாவர்க்கும் வன் சரணே*. 


    வன்சரண் சுரர்க்கு ஆய்*  அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்* 
    தன்சரண் நிழற்கீழ்*  உலகம் வைத்தும் வையாதும் 

    தென்சரண் திசைக்குத்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    என்சரண் என் கண்ணன்*  என்னை ஆளுடை என் அப்பனே*


    என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
    பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*

    மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
    தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 


    நிழல் வெய்யில் சிறுமை பெருமை*  குறுமை நெடுமையும் ஆய்* 
    சுழல்வன நிற்பன*  மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 

    மழலை வாய் வண்டு வாழ்*  திருவிண்ணகர் மன்னு பிரான்* 
    கழல்கள் அன்றி*  மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*


    காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த* 
    தாள் இணையன் தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    ஆணை ஆயிரத்துத்*  திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்* 
    கோணை இன்றி விண்ணோர்க்கு*  என்றும் ஆவர் குரவர்களே*. (2)