பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
    இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*

    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
    நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    விடம்தான் உடைய அரவம் வெருவ*  செருவில் முன நாள்*  முன் 
    தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு*  மிக்க தாள் ஆளன்*

    இடந்தான் வையம் கேழல் ஆகி*  உலகை ஈர் அடியால்* 
    நடந்தானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே. 


    பூணாது அனலும்*  தறுகண் வேழம் மறுக*  வளை மருப்பைப் 
    பேணான் வாங்கி*  அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*

    பாணா வண்டு முரலும் கூந்தல்*  ஆய்ச்சி தயிர் வெண்ணெய்* 
    நாணாது உண்டான் நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    கல் ஆர் மதிள் சூழ்*  கச்சி நகருள் நச்சி*  பாடகத்துள் 
    எல்லா உலகும் வணங்க*  இருந்த அம்மான்*  இலங்கைக்கோன்

    வல் ஆள் ஆகம் வில்லால்*  முனிந்த எந்தை*  விபீடணற்கு 
    நல்லானுடைய நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  


    குடையா வரையால்*  நிரை முன் காத்த பெருமான்*  மருவாத 
    விடைதான் ஏழும் வென்றான்*  கோவல் நின்றான்*  தென் இலங்கை

    அடையா அரக்கர் வீயப்*  பொருது மேவி வெம் கூற்றம்* 
    நடையா உண்ணக் கண்டான் நாமம்*  நமோ நாராயணமே.


    கான எண்கும் குரங்கும்*  முசுவும் படையா*  அடல் அரக்கர் 
    மானம் அழித்து நின்ற*  வென்றி அம்மான்*  எனக்கு என்றும்

    தேனும் பாலும் அமுதும் ஆய*  திருமால் திருநாமம்*
    நானும் சொன்னேன் நமரும் உரைமின்*  நமோ நாராயணமே.   


    நின்ற வரையும் கிடந்த கடலும்*  திசையும் இரு நிலனும்* 
    ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி*  நின்ற அம்மானார்*

    குன்று குடையா எடுத்த*  அடிகளுடைய திருநாமம்* 
    நன்று காண்மின் தொண்டீர்! சொன்னேன்*  நமோ நாராயணமே.


    கடுங் கால் மாரி கல்லே பொழிய*  அல்லே எமக்கு என்று 
    படுங்கால்*  நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்*

    நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி*  நிரையைச் சிரமத்தால்* 
    நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்*  நமோ நாராயணமே.       


    பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை*  நில மா மகள் மலர் மா 
    மங்கை*  பிரமன் சிவன் இந்திரன்*  வானவர் நாயகர் ஆய*

    எங்கள் அடிகள் இமையோர்*  தலைவருடைய திருநாமம்*
    நங்கள் வினைகள் தவிர உரைமின்*  நமோ நாராயணமே.        


    வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று*  நறையூர் நெடுமாலை* 
    நாவில் பரவி நெஞ்சில் கொண்டு*  நம்பி நாமத்தை*

    காவித் தடங் கண் மடவார் கேள்வன்*  கலியன் ஒலி மாலை* 
    மேவிச் சொல்ல வல்லார் பாவம்*  நில்லா வீயுமே.        


    உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
    நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 

    திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.


    கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
    சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 

    சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
    ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.


    வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 

    தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
    அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   


    ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
    தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-

    தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  


    புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
    புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*

    திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
    திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   


    ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
    எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*

    மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
    மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


    அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 

    செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே


    நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
    நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 

    சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         


    வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
    செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 

    சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
    அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.


    அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
    நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

    நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        


    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
    படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 

    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.