பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பெடை அடர்த்த மட அன்னம்*  பிரியாது*  மலர்க் கமல 
    மடல் எடுத்து மது நுகரும்*  வயல் உடுத்த திருநறையூர்*

    முடை அடர்த்த சிரம் ஏந்தி*  மூவுலகும் பலி திரிவோன்* 
    இடர் கெடுத்த திருவாளன்*  இணைஅடியே அடை நெஞ்சே! 


    கழி ஆரும் கன சங்கம்*  கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
    வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*

    பழி ஆரும் விறல் அரக்கன்*  பரு முடிகள்அவை சிதற* 
    அழல் ஆரும் சரம் துரந்தான்*  அடிஇணையே அடை நெஞ்சே!     


    சுளை கொண்ட பலங்கனிகள்*  தேன் பாய*  கதலிகளின் 
    திளை கொண்ட பழம் கெழுமித்*  திகழ் சோலைத் திருநறையூர்*

    வளை கொண்ட வண்ணத்தன்*  பின் தோன்றல்*  மூவுலகோடு 
    அளை வெண்ணெய் உண்டான் தன்*  அடிஇணையே அடை நெஞ்சே!


    துன்று ஒளித் துகில் படலம்*  துன்னி எங்கும் மாளிகைமேல்* 
    நின்று ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்*

    மன்று ஆரக் குடம் ஆடி*  வரை எடுத்து மழை தடுத்த* 
    குன்று ஆரும் திரள் தோளன்*  குரை கழலே அடை நெஞ்சே!    


    அகில் குறடும் சந்தனமும்*  அம் பொன்னும் அணி முத்தும்* 
    மிகக் கொணர்ந்து திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்*

    பகல் கரந்த சுடர் ஆழிப்*  படையான் இவ் உலகு ஏழும்* 
    புகக் கரந்த திரு வயிற்றன்*  பொன்அடியே அடை நெஞ்சே !            


    பொன் முத்தும் அரி உகிரும்*  புழைக் கை மா கரிக் கோடும்* 
    மின்னத் தண் திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்* 

    மின் ஒத்த நுண் மருங்குல்*  மெல்இயலைத்*  திரு மார்வில் 
    மன்ன தான் வைத்து உகந்தான்*  மலர் அடியே அடை நெஞ்சே!    


    சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்*  செங் கமலத்து இடை இடையில்*
    பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்*  பயன் விளைக்கும் திருநறையூர்*

    கார் தழைத்த திரு உருவன்*  கண்ணபிரான் விண்ணவர்கோன்* 
    தார் தழைத்த துழாய் முடியன்*  தளிர் அடியே அடை நெஞ்சே!      


    குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
    தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*

    மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
    நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         


    மறை ஆரும் பெரு வேள்விக்*  கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்* 
    நிறை ஆர வான் மூடும்*  நீள் செல்வத் திருநறையூர்* 

    பிறை ஆரும் சடையானும்*  பிரமனும் முன் தொழுது ஏத்த* 
    இறை ஆகி நின்றான் தன்*  இணைஅடியே அடை நெஞ்சே!         


    திண் களக மதிள் புடை சூழ்*  திருநறையூர் நின்றானை* 
    வண் களகம் நிலவு எறிக்கும்*  வயல் மங்கை நகராளன்*

    பண்கள் அகம் பயின்ற சீர்ப்*  பாடல்இவை பத்தும் வல்லார்* 
    விண்கள் அகத்து இமையவர் ஆய்*  வீற்றிருந்து வாழ்வாரே.      


    நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
    சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 

    கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
    வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 


    மண்ணும் விண்ணும் மகிழ*  குறள் ஆய் வலம் காட்டி,* 
    மண்ணும் விண்ணும் கொண்ட*  மாய அம்மானே,* 

    நண்ணி உனை நான்*  கண்டு உகந்து கூத்தாட,* 
    நண்ணி ஒருநாள்*  ஞாலத்தூடே நடவாயே.    


    ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 
    சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

    கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 
    சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   


    தளர்ந்தும் முறிந்தும்*  சகட அசுரர் உடல் வேறாப்,* 
    பிளந்து வீய*  திருக்கால் ஆண்ட பெருமானே,* 

    கிளர்ந்து பிரமன் சிவன்*  இந்திரன் விண்ணவர் சூழ,* 
    விளங்க ஒருநாள்*  காண வாராய் விண்மீதே.      


    விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!*  கடல் சேர்ப்பாய்,* 
    மண்மீது உழல்வாய்!*  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,* 

    எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!*  எனது ஆவி,* 
    உண் மீது ஆடி*  உருக் காட்டாதே ஒளிப்பாயோ?    


    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்*  பரவை நிலம் எல்லாம்- 
    தாயோர்,*  ஓர் அடியால்*  எல்லா உலகும் தடவந்த- 

    மாயோன்,*  உன்னைக் காண்பான்*  வருந்தி எனைநாளும்,* 
    தீயோடு உடன்சேர் மெழுகாய்*  உலகில் திரிவேனோ?    


    உலகில் திரியும் கரும கதி ஆய்*  உலகம் ஆய்,* 
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்*  புற அண்டத்து,* 

    அலகில் பொலிந்த*  திசை பத்து ஆய அருவேயோ,* 
    அலகில் பொலிந்த*  அறிவிலேனுக்கு அருளாயே.


    அறிவிலேனுக்கு அருளாய்*  அறிவார் உயிர் ஆனாய்,* 
    வெறி கொள் சோதி மூர்த்தி!*  அடியேன் நெடுமாலே,* 

    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு*  இன்னம் கெடுப்பாயோ,* 
    பிறிது ஒன்று அறியா அடியேன்*  ஆவி திகைக்கவே?


    ஆவி திகைக்க*  ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,* 
    பாவியேனைப்*  பல நீ காட்டிப் படுப்பாயோ,*

    தாவி வையம் கொண்ட*  தடம் தாமரை கட்கே,* 
    கூவிக் கொள்ளும் காலம்*  இன்னம் குறுகாதோ?


    குறுகா நீளா*  இறுதிகூடா எனை ஊழி,* 
    சிறுகா பெருகா*  அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,* 

    மறு கால் இன்றி மாயோன்*  உனக்கே ஆளாகும்,* 
    சிறு காலத்தை உறுமோ*  அந்தோ தெரியிலே?


    தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
    உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 

    தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.