பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
    துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*

    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
    நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    


    முனை ஆர் சீயம் ஆகி*  அவுணன் முரண் மார்வம்* 
    புனை வாள் உகிரால்*  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*

    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்*  குயில் கூவும்* 
    நனை ஆர் சோலை சூழ்ந்து*  அழகு ஆய நறையூரே.   


    ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட* 
    சேனைத் தொகையைச் சாடி*  இலங்கை செற்றான் ஊர்*

    மீனைத் தழுவி வீழ்ந்து எழும்*  மள்ளர்க்கு அலமந்து* 
    நானப் புதலில்*  ஆமை ஒளிக்கும்நறையூரே.             


    உறி ஆர் வெண்ணெய் உண்டு*  உரலோடும் கட்டுண்டு* 
    வெறி ஆர் கூந்தல்*  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*

    பொறி ஆர் மஞ்ஞை*  பூம் பொழில்தோறும் நடம் ஆட* 
    நறு நாள்மலர்மேல்*  வண்டு இசை பாடும் நறையூரே.  


    விடை ஏழ் வென்று*  மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்* 
    நடையால் நின்ற*  மருதம் சாய்த்த நாதன் ஊர்* 

    பெடையோடு அன்னம்*  பெய்வளையார் தம்பின்சென்று* 
    நடையோடு இயலி*  நாணி ஒளிக்கும் நறையூரே.


    பகு வாய் வன் பேய்*  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு* 
    புகு வாய் நின்ற*  போதகம் வீழப் பொருதான் ஊர்*

    நெகு வாய் நெய்தல்*  பூ மது மாந்தி கமலத்தின்* 
    நகு வாய் மலர்மேல்*  அன்னம் உறங்கும் நறையூரே*    


    முந்து நூலும் முப்புரி நூலும்*  முன் ஈந்த* 
    அந்தணாளன் பிள்ளையை*  அஞ்ஞான்று அளித்தான் ஊர்*

    பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி*  புள் ஓடி* 
    நந்து வாரும்*  பைம் புனல் வாவி நறையூரே.     


    வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்*  விறல் வியூகம்* 
    விள்ள சிந்துக்கோன் விழ*  ஊர்ந்த விமலன் ஊர்*

    கொள்ளைக் கொழு மீன்*  உண் குருகு ஓடி பெடையோடும்* 
    நள்ளக் கமலத்*  தேறல் உகுக்கும் நறையூரே.


    பாரை ஊரும் பாரம் தீரப்*  பார்த்தன்தன்* 
    தேரை ஊரும்*  தேவதேவன் சேறும் ஊர்*

    தாரை ஊரும்*  தண் தளிர் வேலி புடை சூழ* 
    நாரை ஊரும்*  நல் வயல் சூழ்ந்த*  நறையூரே. 


    தாமத் துளப*  நீள் முடி மாயன் தான் நின்ற* 
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த*  நறையூர்மேல்* 

    காமக் கதிர் வேல் வல்லான்*  கலியன் ஒலி மாலை* 
    சேமத் துணை ஆம்*  செப்பும் அவர்க்கு திருமாலே.      


    துவள் இல் மா மணி மாடம் ஓங்கு*  தொலைவில்லிமங்கலம் தொழும் 
    இவளை நீர் இனி அன்னைமீர்!*  உமக்கு ஆசை இல்லை விடுமினோ,* 

    தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்*  தாமரைத் தடம் கண் என்றும்,* 
    குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க*  நின்று நின்று குமுறுமே.      


    குமுறும் ஓசை விழவு ஒலித்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    அமுத மென் மொழியாளை*  நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,* 

    திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்*  மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,* 
    நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க*  நெக்கு ஒசிந்து கரையுமே.


    கரை கொள் பைம் பொழில் தண்பணைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    உரை கொள் இன் மொழியாளை*  நீர் உமக்கு  ஆசை இன்றி அகற்றினீர்,*

    திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்*  திசை ஞாலம் தாவி அளந்ததும்,* 
    நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி*  நெடும் கண் நீர் மல்க நிற்குமே. 


    நிற்கும் நால்மறைவாணர் வாழ்*  தொலைவில்லிமங்கலம் கண்டபின்,* 
    அற்கம் ஒன்றும் அற உறாள்*  மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,* 

    கற்கும் கல்வி எல்லாம்*  கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,* 
    ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து*  உள் மகிழ்ந்து குழையுமே.            


    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 

    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.


    நோக்கும் பக்கம் எல்லாம்*  கரும்பொடு  செந்நெல்ஓங்கு செந்தாமரை,* 
    வாய்க்கும் தண் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    நோக்குமேல் அத்திசை அல்லால்*  மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,* 
    வாய்க்கொள் வாசகமும்*  மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!        


    அன்னைமீர்! அணிமாமயில்*  சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து* 
    என்ன வார்த்தையும் கேட்குறாள்*  தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,* 

    முன்னம் நோற்ற விதிகொலோ*  முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன் 
    சின்னமும் திருநாமமும்*  இவள் வாயனகள் திருந்தவே.   


    திருந்து வேதமும் வேள்வியும்*  திருமா மகளிரும் தாம்,*  மலிந்து 
    இருந்து வாழ் பொருநல்*  வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,* 

    கருந் தடம் கண்ணி கைதொழுத*  அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்* 
    இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'*  என்று என்றே நைந்து இரங்குமே.      


    இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ*  இவள் கண்ண நீர்கள் அலமர,* 
    மரங்களும் இரங்கும் வகை*  'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,* 

    துரங்கம் வாய் பிளந்தான் உறை*  தொலைவில்லிமங்கலம் என்று,*  தன் 
    கரங்கள் கூப்பித் தொழும்*  அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.     


    பின்னைகொல் நிலமாமகள்கொல்?*  திருமகள்கொல் பிறந்திட்டாள்,* 
    என்ன மாயம்கொலோ?*  இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,* 

    முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்*  தொலைவில்லிமங்கலம்- 
    சென்னியால் வணங்கும்*  அவ் ஊர்த் திருநாமம்*  கேட்பது சிந்தையே.        


    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்*  தேவ பிரானையே,* 
    தந்தை தாய் என்று அடைந்த*  வண் குருகூரவர் சடகோபன்,* 

    முந்தை ஆயிரத்துள் இவை*  தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,* 
    செந்தமிழ்ப் பத்தும் வல்லார்*  அடிமைசெய்வார் திருமாலுக்கே