பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
    பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*

    விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
    நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கொங்கு உண் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  நீர் 
    இங்கு என் இருமி*  எம்பால் வந்தது? என்று இகழாதமுன்* 

    திங்கள் எரி கால்*  செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*  
    நங்கள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொங்கு ஆர் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  எம்மை 
    எம் கோலம் ஐயா!*  என் இனிக் காண்பது? என்னாதமுன்*

    செங்கோல் வலவன்*  தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
    நம் கோன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொம்பும் அரவமும்*  வல்லியும் வென்ற நுண் ஏர் இடை* 
    வம்பு உண் குழலார்*  வாசல் அடைத்து இகழாதமுன்*

    செம் பொன் கமுகு இனம் தான்*  கனியும் செழும் சோலை சூழ்* 
    நம்பன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    விலங்கும் கயலும்*  வேலும் ஒண் காவியும் வென்ற கண்* 
    சலம் கொண்ட சொல்லார்*  தாங்கள் சிரித்து இகழாத முன்*

    மலங்கும் வராலும்*  வாளையும் பாய் வயல் சூழ்தரு* 
    நலம் கொள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    மின் நேர் இடையார்*  வேட்கையை மாற்றியிருந்து* 
    என் நீர் இருமி*  எம்பால் வந்தது என்று இகழாதமுன்*

    தொல் நீர் இலங்கை மலங்க*  விலங்கு எரி ஊட்டினான்* 
    நல் நீர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    வில் ஏர் நுதலார்*  வேட்கையை மாற்றி சிரித்து*  இவன் 
    பொல்லான் திரைந்தான் என்னும்*  புறன் உரை கேட்பதன்முன்*

    சொல் ஆர் மறை நான்கு ஓதி*  உலகில் நிலாயவர்* 
    நல்லார் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்*  மதனன் என்றார்தம்மைக்* 
    கேள்மின்கள் ஈளையோடு*  ஏங்கு கிழவன் என்னாதமுன்*

    வேள்வும் விழவும்*  வீதியில் என்றும் அறாத ஊர்* 
    நாளும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்*  காதன்மை விட்டிட* 
    குனி சேர்ந்து உடலம்*  கோலில் தளர்ந்து இளையாதமுன்*

    பனி சேர் விசும்பில்*  பால்மதி கோள் விடுத்தான் இடம்* 
    நனி சேர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.      


    பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
    நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*

    கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
    மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         


    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 

    அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
    இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        


    கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்*  கெண்டை ஒண்கண்* 
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்*  மணந்ததும் மற்றும்பல,* 

    மாயக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    நேயத்தோடு கழிந்த போது*  எனக்கு எவ் உலகம் நிகரே?      


    நிகர் இல் மல்லரைச் செற்றதும்*  நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,* 
    சிகர மா களிறு அட்டதும்*  இவை போல்வனவும் பிறவும்,* 

    புகர்கொள் சோதிப் பிரான்தன்*  செய்கை நினைந்து புலம்பி என்றும்* 
    நுகர வைகல் வைகப்பெற்றேன்*  எனக்கு என் இனி நோவதுவே?    


    நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*  இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்* 
    சாவப் பால் உண்டதும்*  ஊர் சகடம் இறச் சாடியதும்,* 

    தேவக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    மேவக் காலங்கள் கூடினேன்*  எனக்கு என் இனி வேண்டுவதே?  


    வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்*  வீங்கு இருள்வாய்- 
    பூண்டு*  அன்று அன்னைப் புலம்ப போய்*  அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்* 

    காண்டல் இன்றி வளர்ந்து*  கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,* 
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்*  எனக்கு என்ன இகல் உளதே?    


    இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்*  இமில் ஏறுகள் செற்றதுவும்,* 
    உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    அகல் கொள் வையம் அளந்த மாயன்*  என்னப்பன் தன் மாயங்களே,* 
    பகல் இராப் பரவப் பெற்றேன்*  எனக்கு என்ன மனப் பரிப்பே?         


    மனப் பரிப்போடு அழுக்கு*  மானிட சாதியில் தான்பிறந்து,* 
    தனக்கு வேண்டு உருக்கொண்டு*  தான் தன சீற்றத்தினை முடிக்கும்,* 

    புனத் துழாய் முடி மாலை மார்பன்*  என் அப்பன் தன் மாயங்களே,* 
    நினைக்கும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?


    நீள் நிலத்தொடு வான் வியப்ப*  நிறை பெரும் போர்கள் செய்து* 
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்*  என் அப்பன் தன் மாயங்களே* 
    காணும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?


    கலக்க ஏழ் கடல் ஏழ்*  மலை உலகு ஏழும் கழியக் கடாய்* 
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்*  உட்பட மற்றும் பல,* 

    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்*  இவை உடை மால்வண்ணனை,* 
    மலக்கும் நா உடையேற்கு*  மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?


    மண்மிசைப் பெரும் பாரம் நீங்க*  ஓர் பாரத மா பெரும் போர் 
    பண்ணி,*  மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட*  நூற்றிட்டுப் போய்,* 

    விண்மிசைத் தன தாமமேபுக*  மேவிய சோதிதன்தாள்,* 
    நண்ணி நான் வணங்கப்பெற்றேன்*  எனக்கு ஆர்பிறர் நாயகரே?       


    நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்*  முழு ஏழ் உலகும்,*  தன் 
    வாயகம் புக வைத்து உமிழ்ந்து*  அவை ஆய் அவை அல்லனும் ஆம்,* 

    கேசவன் அடி இணைமிசைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆவர் துவள் இன்றியே.